Tnpsc Current Affairs in Tamil – 25th June 2024
1. அண்மையில், ‘உழவு மற்றும் அதைச்சார்ந்த துறைகளின் உற்பத்தியின் மதிப்பு குறித்த புள்ளிவிவர அறிக்கையை (2011-12 முதல் 2022-23 வரை) வெளியிட்ட அமைப்பு எது?
அ. NABARD
ஆ. தேசிய புள்ளியியல் அலுவலகம்
இ. இந்திய உணவுக் கழகம்
ஈ. வேளாண் அமைச்சகம்
- தேசிய புள்ளியியல் அலுவலகம், “உழவு மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளின் (2011-12 முதல் 2022-23 வரை) உற்பத்தியின் மதிப்பு” குறித்த புள்ளிவிவர அறிக்கையை வெளியிட்டது. இதன் முக்கிய சிறப்பம்சம் 2022-23இல் வேளாண்மைத் துறையின் 18.2% GVA பங்காகும். வேளாண்சார்ந்த துறை பங்களிப்புகள்: பயிர் (54.3%), கால்நடைகள் (30.9%), வனவியல் (7.9%), மற்றும் மீன்பிடித்தல் (6.9%). 2011-12 முதல் 2022-23 வரை, பயிர்களின் பங்கு 62.4%இலிருந்து 54.3%ஆக குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் கால்நடைகள், வனவியல் மற்றும் மீன்பிடி உற்பத்தி கணிசமாக அதிகரித்துள்ளது.
2. உத்தர பிரதேச மாநிலத்தில் நேரடி நெல் விதைப்பு முறையை (DSR) ஊக்குவிப்பதற்காக குறைந்த மீத்தேன் அரிசி திட்டத்தில் (LMRP) அண்மையில் இணைந்த நிறுவனம் எது?
அ. கிசான் கிராஃப்ட் லிமிடெட்
ஆ. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இ. அம்ப்ரோசியா ஆர்கானிக் பண்ணை
ஈ. TATA குழுமம்
- உத்தர பிரதேச மாநிலத்தில் நேரடி நெல் விதைப்பு முறையை (DSR) ஊக்குவிப்பதற்காக UP-PRAGATI Accelerator திட்டங்களின் (UPPAP) கீழ் குறைந்த மீத்தேன் அரிசி திட்டத்தில் (LMRP) கிசான் கிராஃப்ட் லிமிடெட் சேர்ந்துள்ளது. உலக வங்கியின் 2030 நீர்வளக்குழுவின் முன்னெடுப்பான LMRP, வேளாண் நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் நீர் பயன்பாட்டுத் திறன் மற்றும் குறைந்த கார்பன் உமிழ்வு முறைகளை ஊக்குவிப்பதன்மூலம் வருவாயை அதிகரிப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது.
3. அண்மையில், எந்த அமைப்பால், ‘2024 – Global Gas Flaring Tracker Report’ வெளியிடப்பட்டது?
அ. IMF
ஆ. உலக வங்கி
இ. UNEP
ஈ. UNDP
- உலக வங்கியின், ‘Global Gas Flaring Tracker Report’இன்படி, 2023ஆம் ஆண்டில் எரிவாயு எரிப்பு 148 பில்லியன் கன மீட்டரை எட்டியது; இது 2019க்குப் பிறகு மிக அதிகமாகும். எரிவாயு எரிதல் என்பது எண்ணெய் பிரித்தெடுக்கும் போது இயற்கை எரிவாயு எரிக்கப்படும் செயலாகும். சந்தைக் கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் அரசியல் காரணிகள் காரணமாக இந்தச் செயல் நீடிக்கிறது. எரியும் வாயுவை பாதுகாப்பாக வெளியேற்றினாலும், அது மின்னுற்பத்தி அல்லது பாதுகாப்பிற்கு பயன்படுத்தக்கூடிய மதிப்புமிக்க வளத்தை வீணாக்கும் ஒரு செயலாகும்.
4. அண்மையில், ‘விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள் திட்டத்தைத்’ தொடக்கிய அமைச்சகம் எது?
அ. பாதுகாப்பு அமைச்சகம்
ஆ. உள்துறை அமைச்சகம்
இ. சுற்றுலா அமைச்சகம்
ஈ. குடும்பம் & சுகாதார நல அமைச்சகம்
- புது தில்லி இந்திராகாந்தி பன்னாட்டு விமான நிலையத்தின் மூன்றாவது முனையத்தில், ‘விரைவான இடப்பெயர்வு – நம்பகமான பயணிகள்’ (Fast Track Immigration – Trusted Traveller Programme- FTI-TTP) என்ற திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் தொடக்கி வைத்தார். இந்தத் திட்டம் பயணிகளுக்கு வேகமான, எளிமையான மற்றும் பாதுகாப்பான குடியேற்ற அனுமதிக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது FTI-TTP இணையதளம் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படும். நாட்டின் 21 முக்கிய விமான நிலையங்களில் FTI-TTP தொடங்கப்படும். முதற்கட்டமாக தில்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய முக்கிய விமான நிலையங்களில் இத்திட்டம் தொடங்கப்படும்.
5. ‘உலக நீரியல் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
அ. ஜூன்.20
ஆ. ஜூன்.21
இ. ஜூன்.22
ஈ. ஜூன்.23
- உலக நீரியல் நாளானது ஜூன்.21ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1921ஆம் ஆண்டு முதல் சர்வதேச நீரியல் அமைப்பின் வழிநடத்தலின் கீழ் இந்நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடல்கள், பெருங்கடல்கள் மற்றும் செல்லக் கூடிய நீர்நிலைகளை ஆய்வுசெய்து அட்டவணைப்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சிகளை சர்வதேச நீரியல் அமைப்பு ஒருங்கிணைக்கிறது.
- நூறு உறுப்புநாடுகளுடன், இது கடல்சார் அட்டவணைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளில் சீரான தன்மையை ஊக்குவிக்கிறது. கடந்த 1955ஆம் ஆண்டு முதல் உறுப்பினராக உள்ள இந்தியா, கொல்கத்தாவில் இந்திய கடற்படை நீரியல் துறையை இயக்கி வருகிறது; இது நவீன கடற்படையுடன் நீரியல் ஆய்வுகளுக்கு மையமாக உள்ளது.
6. அண்மையில், திறன்மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகம், வளர்ந்துவரும் திறன்களைக்கொண்டு இந்தியாவின் வேளாண் துறையை புத்துணர்வூட்டுவதற்காக கீழ்க்காணும் எந்த நாட்டுடன் ஒத்துழைத்தது?
அ. கனடா
ஆ. மெக்ஸிக்கோ
இ. ஆஸ்திரேலியா
ஈ. நியூசிலாந்து
- திறன்மேம்பாடு & தொழில்முனைவோர் அமைச்சகமும் ஆஸ்திரேலிய அரசாங்கமும் இணைந்து ஆஸ்திரேலியா-இந்தியா கிரிட்டிகல் அக்ரிகல்ச்சர் ஸ்கில்ஸ் பைலட் திட்டத்தை மதிப்பாய்வு செய்ய ஒரு வட்டமேசையை நடத்தியது. அதுல் குமார் திவாரி மற்றும் மேத்யூ ஜான்ஸ்டன் தலைமையில் நடந்த கலந்துரையாடல், முயற்சியை அளவிடுதல் மற்றும் நகலெடுப்பதில் கவனம் செலுத்தியது. NCVET, NSDC, ICAR, MoE, ASCI ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 64 நிறுவனங்களைச் சேர்ந்த 89 நிபுணர்களுடன் விரிவான ஆலோசனைகள்மூலம் ஐந்து முக்கியமான வேளாண் பணிகளை அடையாளம் கண்டுள்ளது.
7. அண்மையில், எந்த நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள் அகச்சிவப்பு ஒளியை புலப்படும் ஒளியாக மாற்ற ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்?
அ. அறிவியல் கழகம் (IISc)
ஆ. ஐஐடி, தில்லி
இ. ஐஐடி, கான்பூர்
ஈ. ஐஐடி, மெட்ராஸ்
- இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) ஆராய்ச்சியாளர்கள் அகச்சிவப்பு ஒளியை புலப்படும் ஒளியாக மாற்றும் ஒரு புதிய சாதனத்தை உருவாக்கியுள்ளனர்; இது பாதுகாப்பு மற்றும் ஒளியியல் தகவல்தொடர்புகளில் புரட்சியை ஏற்படுத்தும். 2D பொருளைப் பயன்படுத்தி, உயர்-மாற்றும் மற்றும் அகன்றபுல படமாக்கலுக்காக நேரியலல்லாத ஆப்டிகல் ஆடி அடுக்கை அவர்கள் உருவாக்கினர். இந்தத் தொழில்நுட்பம் சிலிக்கான் டை ஆக்சைடு அடுக்குடன் தங்க பிரதிபலிப்பு மேற்பரப்பில் பன்னடுக்கு காலியம் செலினைடைப் பயன்படுத்துகிறது. இது மிகச்சிக்கலான அகச்சிவப்பு படமாக்கல் நுட்பங்களை எளிதாக்குகிறது.
8. Space Variable Objects Monitor (SVOM) செயற்கைக்கோள் என்பது எந்த இருநாடுகளின் கூட்டுத்திட்டமாகும்?
அ. சீனா மற்றும் ரஷ்யா
ஆ. பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா
இ. பிரான்ஸ் மற்றும் சீனா
ஈ. அமெரிக்கா மற்றும் சீனா
- அண்மையில், லாங் மார்ச் 2C ஏவுகலத்தின்மூலம் சீனாவின் ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்திலிருந்து பிரெஞ்சு – சீன செயற்கைக்கோள் SVOM விண்ணில் செலுத்தப்பட்டது. 930 கிலோகிராம் எடையுள்ள SVOM, பூமிக்கு மேலே 600 கிமீட்டருக்கு மேலுள்ள சுற்றுப்பாதையில் இருந்து காமா-கதிர் வெடிப்புகளைக் கண்டறிந்து ஆய்வுசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருநாடுகளின் கருவிகளுடன் பொருத்தப்பட்ட இது 5 ஆண்டுகள் வடிவமைக்கப்பட்ட ஆயுளைக் கொண்டுள்ளது; ஆனால் 20 ஆண்டுகள் வரை இதால் செயல்பட முடியும். விண்மீன் வெடிப்புகளிலிருந்து உருவாகும் காமா-கதிர் வெடிப்புகளை ஆராய்வதன்மூலம் அண்ட பரிணாமத்தைப் பற்றிய நுண்ணறிவுகளை அறிந்துகொள்ள முடியும்.
9. அண்மையில், மனித-வனவிலங்கு மோதலைக் குறைப்பதற்காக, ‘Ele-fence’ என்ற முதல் AI-அடிப்படையிலான ஸ்மார்ட் வேலி திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள மாநில அரசு எது?
அ. தமிழ்நாடு
ஆ. மேகாலயா
இ. கேரளா
ஈ. அஸ்ஸாம்
- இந்தியாவின் முதல் AI-அடிப்படையிலான ஸ்மார்ட் வேலியான ‘Ele-fence’ திட்டம், முதன்மையாக யானைகள் சம்பந்தப்பட்ட மனித-வனவிலங்கு மோதலைத் தணிப்பதற்காக, கேரளாத்தின் வயநாட்டில் பயன்படுத்தப்படுகிறது. ஒயிட் எலிஃபண்ட் டெக்னாலஜிஸ் மற்றும் கேரள வனத்துறையால் செயல்படுத்தப்பட்ட இது, மனித வாழ்விடங்களை நோக்கிவரும் யானைகளால் ஏற்படும் பயிரிழப்பு மற்றும் உயிரிழப்புகளைத் தடுப்பதை நோக்கமாகக்கொண்டுள்ளது. ‘Ele-fence’ பாதிக்கப்பட்ட பகுதிகளில் வனவிலங்குகளையும் மனித வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க பார்க்கிறது.
10. அண்மையில், எந்த நாட்டின் குடிமக்களுக்கு மருத்துவ இ-விசா வசதியை இந்தியா அறிவித்தது?
அ. வங்காளதேசம்
ஆ. நேபாளம்
இ. பூட்டான்
ஈ. மியான்மர்
- வங்காளதேசத்தினருக்கு இ-மருத்துவ விசா வசதி மற்றும் வங்காளதேசத்தின் ரங்பூரில் புதிய தூதரகத்தை திறப்பதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார். வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் இரண்டு நாள் அரசுமுறை பயணத்தின்போது இந்த அறிவிப்பு செய்யப்பட்டது.
11. அண்மையில், ‘43ஆவது உலக மருத்துவ மற்றும் சுகாதார விளையாட்டுகள்’ நடைபெற்ற இடம் எது?
அ. சீனா
ஆ. பிரான்ஸ்
இ. இந்தியா
ஈ. ஜெர்மனி
- 2024 ஜூன் 16-23 வரை பிரான்சின் புனித டிரோப்ஸில் நடைபெற்ற 43ஆவது உலக மருத்துவ மற்றும் சுகாதார விளையாட்டுப்போட்டிகளில், ஆயுதப்படை மருத்துவ சேவையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் 32 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர். லெப்டினன்ட் கர்னல் சஞ்சீவ் மாலிக், மேஜர் அனிஷ் ஜார்ஜ், கேப்டன் ஸ்டீபன் செபாஸ்டியன், கேப்டன் டேனியா ஜேம்ஸ் ஆகியோர் கூட்டாக 19 தங்கம், 9 வெள்ளி மற்றும் 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர். ‘மெட்கேம்ஸ்’ என்பது மருத்துவ மற்றும் சுகாதார நிபுணர்களுக்கான உலகின் மிகப் பெரிய விளையாட்டு நிகழ்வாகும்; இது முதன்முதலில் 1978இல் நடைபெற்றது.
12. 2024 – வில்வித்தை உலகக்கோப்பையில் இந்தியாவுக்காக 2 வெண்கலப்பதக்கங்களை வென்றவர் யார்?
அ. பிரவின் ஜாதவ்
ஆ. அபிஷேக் வர்மா
இ. தீரஜ் பொம்மதேவரா
ஈ. லிம்பா ராம்
- நடப்பு 2024ஆம் ஆண்டில் துருக்கியின், அன்டலியாவில் நடைபெற்ற வில்வித்தை உலகக்கோப்பை 3ஆம் கட்டப் போட்டியில், 22 வயதான தீரஜ் பொம்மதேவரா, ரீகர்வ் போட்டிகளில் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்றார். இந்தியா ஒரு தங்கம், ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் நான்கு பதக்கங்களை வென்றது. அதிதி சுவாமி, ஜோதி சுரேகா வென்னம் மற்றும் பர்னீத் கௌர் ஆகியோரைக்கொண்ட இந்திய மகளிர் கூட்டு அணி, இந்த பருவத்தில் தொடர்ந்து மூன்றாவது வெற்றியைக் குறிக்கும் வகையில் ஹாட்ரிக் தங்கப்பதக்கங்களை வென்றது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. அடுத்த மாதத்துக்குள் 100 தானியங்கி வானிலை மையங்கள்: வருவாய்த்துறை தகவல்.
அடுத்த மாதத்துக்குள் 100 தானியங்கி வானிலை மையங்கள் அமைக்கப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது. வானிலையை மிகச்சரியாகக் கணித்து உரிய முன்னெச்சரிக்கையை வழங்கிட இராமநாதபுரம், ஏற்காடு பகுதியில் 2 ரேடார்கள் அமைக்க `56.03 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
2. அகல் விளக்கு திட்டம்.
அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகள் எந்தவித இடர்பாடுமின்றித் தொடர்ந்து பள்ளிக்கு வருகைபுரியும் பொருட்டு, அவர்களுக்கு உடல்ரீதியாகவும், மனரீதியாகவும், சமூகரீதியாகவும் ஏற்படும் இடையூறுகளிலிருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், இணையதள செயலிகளைப் பாதுகாப்பாகக் கையாள்வது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும் ஆசிரியைகளைக்கொண்ட குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. இவர்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கு, “அகல் விளக்கு” என்னும் திட்டம் `50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.