TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 25th & 26th January 2024

1. பரம்பிக்குளம் புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. இராஜஸ்தான்

ஈ. கர்நாடகா

  • பரம்பிக்குளம் புலிகள் காப்பகத்தில் அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், மூன்று பறவைகள், நான்கு பட்டாம்பூச்சிகள் மற்றும் நான்கு தட்டான்கள் அடங்கிய பதினொரு புதிய இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது கேரள மாநிலத்தின் பாலக்காடு மற்றும் திருச்சூர் மாவட்டங்களில் உள்ள மேற்குத் தொடர்ச்சிமலைகளில் பரவி அமைந்துள்ளது. 643.66 சதுர கிமீ பரப்பளவுடன் பரந்து விருந்துள்ள இந்தப் புலிகள் காப்பகம், பசுமை மற்றும் இலையுதிர் காடுகள் உட்பட பல்வேறு விதமான வாழிடங்களைக் கொண்டுள்ளது. நீலகிரி வரையாடுபோன்ற தனித்துவமான உயிரினங்களின் தாயகமாகவும், உலகின் மிகப்பழைமையான தேக்குமர இனங்களையும் இது கொண்டுள்ளது.

2. Andrographis theniensis’ என்றால் என்ன?

அ. தாவரம்

ஆ. விலங்கு

இ. பாக்டீரியா

ஈ. பூஞ்சை

  • தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சிமலையில், ‘Andrographis theniensis’ என்ற புதிய தாவர இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கண்டறிந்த தலமான தேனியின் பெயரால் அழைக்கப்படும் இது, ‘Andrographis megamalayana’ஐ ஒத்துள்ளது. இதில் அழுத்தமான இலைகள் மற்றும் தண்டுகள், ஒன்பது நரம்புகள்கொண்ட கீழிதழ், நடுத்தர மடலில் வெளிர்மஞ்சள் கலந்த சூல்முடி மற்றும் மஞ்சள் மகரந்தம் ஆகியவை உள்ளன. ஆசியாவில் வளரும் வெப்பமண்டல தாவர இனமான ‘Andrographis’, பாரம்பரிய மருத்துவ முறைகளில் பல்வேறு தீராநோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

3. ஆண்டுதோறும், ‘பராக்கிரம நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. 22 ஜனவரி

ஆ. 21 ஜனவரி

இ. 23 ஜனவரி

ஈ. 25 ஜனவரி

  • சுபாஷ் சந்திரபோஸின் 127ஆவது பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக ஜனவரி.23 அன்று இந்தியப்பிரதமர் பராக்கிரம (வீரம்) நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். சுதந்திரப் போராட்டவீரரான, ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸ், பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக்கு எதிரான இந்தியாவின் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தார்.
  • பராக்கிரம நாளானது இளையோரிடையே அச்சமின்மை மற்றும் தேசப்பற்றைத் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 1897 ஜனவரி.23இல், ஒரிசாவின் கட்டாக்கில் பிறந்த, ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து, அதன் தலைவராகப் பணியாற்றினார்; ஆனால், ‘மகாத்மா’ காந்தியுடனான கருத்தியல் மோதல்களால் பதவி விலகினார். கடந்த 1939இல், அவர் இந்தியாவில் பிரிட்டிஷ் எதிர்ப்பு சக்திகளை ஒன்றிணைத்து, ‘பார்வர்ட் பிளாக்’ என்ற கட்சியை உருவாக்கினார்.

4. அண்மையில், இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையில் (InvIT) முதன்மை முதலீட்டாளராக ஆன நிறுவனம் எது?

அ. ஐரோப்பிய முதலீட்டு வங்கி

ஆ. உலக வங்கி

இ. பன்னாட்டு செலாவணி நிதியம் (IMF)

ஈ. ஆசிய உட்கட்டமைப்பு & முதலீட்டு வங்கி (AIIB)

  • ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கியானது (AIIB) சமீபத்தில் இந்தியாவின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உட்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளையில் (InvIT) முதன்மை முதலீட்டாளராக ஆனது. Sustainable Energy Infra Trust (SEIT) என அழைக்கப்படுகிற InvIT, 8 செயல்பாட்டு சூரிய சக்தி உற்பத்தி சொத்துக்களைக் கொண்டுள்ளது. AIIB ஆனது SEITஇல் `4.86 பில்லியன் (சுமார் $58.4 மில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளது.

5. ‘ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்’ என்ற இயக்கத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்

ஆ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்

  • இந்தியக்குடியரசின் 75ஆவது ஆண்டினை நினைவுகூரும் வகையில், நாடு தழுவிய, ‘நமது அரசியல்சாசனம், நமது கௌரவம்’ என்ற ஓராண்டுகால இயக்கத்தை குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் Dr அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தொடக்கிவைத்தார்.
  • இந்திய அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைகளுக்கான நமது கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதையும், நமது தேசத்தைப் பிணைக்கும் பகிரப்பட்ட மதிப்புகளைக் கொண்டாடுவதையும் இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடுதழுவிய இம்முன்முயற்சி, அரசியலமைப்புக் கட்டமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள குறிக்கோள்களை நிலைநிறுத்துவதற்கான பெருமை மற்றும் பொறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு குடிமகனும் பல்வேறு வழிகளில் பங்கேற்கவும், நமது ஜனநாயகப் பயணத்தில் அர்த்தமுள்ள வகையில் பங்களிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கவும் இது வாய்ப்பளிக்கும்.

6. நிறுவனங்கள் பிரிவில், 2024ஆம் ஆண்டுகான, ‘சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருது’க்குத் தெரிவான நிறுவனம் எது?

அ. பாராசூட் கள மருத்துவமனை – 60, உத்தர பிரதேசம்

ஆ. பாராசூட் கள மருத்துவமனை – 30, உத்தர பிரதேசம்

இ. KGMU, லக்னோ

ஈ. AIIMS, தில்லி

  • 2024ஆம் ஆண்டிற்கான, ‘சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை விருதுக்கு’ – நிறுவனப்பிரிவில், பேரிடர் மேலாண்மையில் சிறப்பாகப்பணியாற்றிய, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பாராசூட் கள மருத்துவமனை-60 தெரிவு செய்யப்பட்டுள்ளது. பேரிடர் மேலாண்மைத் துறையில் இந்தியாவில் தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் ஆற்றிவரும் உயரிய பங்களிப்பு மற்றும் தன்னலமற்ற சேவையை அங்கீகரித்து, கௌரவிப்பதற்காக பிரதமர் தலைமையில் உள்ள மத்திய அரசு, ‘சுபாஷ் சந்திரபோஸ் பேரிடர் மேலாண்மை’ விருதினை நிறுவியுள்ளது. இந்த விருது ஒவ்வோர் ஆண்டும், ‘நேதாஜி’ சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளான ஜனவரி.23 அன்று அறிவிக்கப்படுகிறது.
  • இந்த விருது நிறுவனமாக இருந்தால் `51 லட்சம் ரொக்கப்பரிசும், சான்றிதழும், தனிநபராக இருந்தால் `5 லட்சமும், சான்றிதழும் கொண்டதாகும்.

7. பிராந்திய மொழிகளில் கல்விக்குத் தேவையான உள்ளடக்கங்களை வழங்குவதற்காக அண்மையில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட AI-அடிப்படையிலான செயலியின் பெயர் என்ன?

அ. அனுவாதினி செயலி

ஆ. பாஷினி செயலி

இ. தீக்ஷா செயலி

ஈ. பாஷா சங்கம் செயலி

  • கல்வியில் பன்மொழித்திறனை ஊக்குவிக்கும் வகையில் AI அடிப்படையிலான, ‘அனுவாதினி’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய கல்விக்கொள்கை-2020கக்கு ஏற்ப அமைந்த இது, அரசியலமைப்பின் 8ஆவது அட்டவணையில் உள்ள அனைத்து இந்திய மொழிகளிலும் அனைத்துப் படிப்புகளுக்கும் டிஜிட்டல் வழியில் கல்விக்குத் தேவையான உள்ளடக்கங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. கல்வியமைச்சகத்தின் ஆணைகள் அனைத்தும் UGC, AICTE, மற்றும் பள்ளிக்கல்வித்துறை ஆகியவை பிராந்திய மொழிகளில் உள்ளடக்கம் கிடைப்பதை உறுதிசெய்ய அறிவுறுத்துகிறது.

8. பிரதம மந்திரி சூர்யோதயா யோஜனாவுடன் தொடர்புடையது எது?

அ. மேற்கூரையில் சூரிய ஆற்றல் உற்பத்தித் தகடுகளை நிறுவுதல்

ஆ. சூரியகாந்தி சாகுபடி

இ. மின்னியற்றிகள்

ஈ. கிராமப்புற சுகாதாரம்

  • அயோத்தியில் வைத்து 1 கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய மின்னாற்றல் வசதி ஏற்படுத்தித்தரும், ‘பிரதமரின் சூர்யோதயா’ என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தார். இது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் மின் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமின்றி, மின்சாரத்துறையில் இந்தியாவைத் தன்னிறைவு அடையச்செய்யும்.

9. ‘சூறாவளி – Cyclone’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?

அ. இந்தியா மற்றும் எகிப்து

ஆ. இந்தியா மற்றும் ஜப்பான்

இ. இந்தியா மற்றும் சூடான்

ஈ. இந்தியா மற்றும் இஸ்ரேல்

  • இந்தியா-எகிப்து இடையேயான 2ஆவது கூட்டு சிறப்புப் படை பயிற்சியில் பங்கேற்க 25 வீரர்களைக் கொண்ட இந்திய இராணுவக் குழு எகிப்து சென்றடைந்தது. இந்தப் பயிற்சி எகிப்தின் அன்ஷாஸில் 2024 ஜன.22 முதல் பிப்.01 வரை நடத்தப்படும். இதன் முதலாவது பயிற்சி கடந்த ஆண்டு இந்தியாவில் நடத்தப்பட்டது. இந்தியப் படைப்பிரிவில் பாராசூட் ரெஜிமென்ட் (சிறப்புப்படைகள்) மற்றும் 25 வீரர்களைக் கொண்ட எகிப்திய கமாண்டோ குழு மற்றும் எகிப்திய வான்வழி படைப்பிரிவு இதில் பங்கேற்கின்றன.
  • ஐநா சாசனத்தின் ஏழாவது அத்தியாயத்தின்கீழ், பாலைவனம் / அரைநிலை பாலைவன நிலப்பரப்பில் சிறப்பு நடவடிக்கைகளின் பின்னணியில் இருதரப்பினரும் ஒருவருக்கொருவர் செயல்பாட்டு நடைமுறைகளை அறிந்து கொள்வதே இப்பயிற்சியின் நோக்கமாகும். இப்பயிற்சி இருதரப்பினருக்கும் தங்களின் பிணைப்பை வலுப்படுத்தவும், சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ளவும் ஒரு வாய்ப்பை வழங்கும். பகிரப்பட்டப் பாதுகாப்பு நோக்கங்களை அடைவதற்கும், நட்புநாடுகளுக்கு இடையே இருதரப்பு உறவுகளை வளர்ப்பதற்கும் இது ஒரு தளமாக செயல்படும்.

10. 2024 – மகளிர் ஒற்றையர் இந்திய ஓபன் பட்டத்தை வென்ற வீராங்கனை யார்?

அ. தை சூ யிங்

ஆ. சென் யூ ஃபெய்

இ. ஜியா மின்

ஈ. கொடை நரௌகா

  • 2024 – இந்திய ஓபனின் மகளிர் ஒற்றையர் பிரிவில் சீன தைபேயின் தை சூ யிங், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் சென் யூ ஃபெயை எதிர்த்து சாம்பியன் பட்டத்தை வென்றார். தை சூ யிங் 21-16, 21-12 என்ற நேர் செட்களில் வெற்றிபெற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிவென்ற தை சூ யிங், சிங்கப்பூரின் ஜியா மின்னையும் நேர் செட்களில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 2024-இந்தியா ஓபன் பாட்மிண்டன் போட்டி ஜன.16-21 வரை நடைபெற்றது. இதன் மொத்த பரிசுத்தொகை $850,000 ஆகும்.

11. மமானி பாரம்பரிய உணவுத் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?

அ. லடாக்

ஆ ஹரியானா

இ. ஹிமாச்சல பிரதேசம்

ஈ. பஞ்சாப்

  • மமானி பாரம்பரிய உணவுத் திருவிழாவானது இந்தியாவின் லடாக்கில் கொண்டாடப்படுகிறது. இவ்விழா கார்கில் மாவட்டம் மற்றும் லே மாவட்டத்தில் வசிக்கும் பெரும்பான்மையான பௌத்த மற்றும் இசுலாமிய சமூகத்தினரால் கொண்டாடப்படும் ஒரு திருவிழாவாகும். இது கார்கில் மற்றும் லே நகரங்களிலும் கொண்டாடப்படுகிறது. லடாக் சமூகங்கள் தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கு இந்தத் திருவிழா ஒரு சான்றாகும். இது மரபுகளைக் கொண்டாடுகிறது மற்றும் மதநல்லிணக்கத்தை ஊக்குவிக்கிறது.

12. ‘கஞ்சார் – Khanjar’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?

அ. இந்தியா-கிர்கிஸ்தான்

ஆ. இந்தியா-ஆப்கானிஸ்தான்

இ. இந்தியா-தஜிகிஸ்தான்

ஈ. இந்தியா-துர்க்மெனிஸ்தான்

  • இந்தியா-கிர்கிஸ்தான் இடையே 11ஆவது கூட்டு சிறப்புப்படை பயிற்சியான, ‘கஞ்சார்’, இமாச்சல பிரதேச மாநிலத்தின் பக்லோவில் உள்ள சிறப்புப்படைப் பயிற்சிப்பள்ளியில் தொடங்கியது. இது இருநாடுகளிலும் மாறிமாறி நடத்தப்படும் வருடாந்திர நிகழ்வாகும். இந்திய ராணுவப்பிரிவில் பாராசூட் ரெஜிமென்ட் (சிறப்புப் படைகள்) மற்றும் கிர்கிஸ்தான் படைப்பிரிவில் ஸ்கார்பியன் பிரிகேட் பங்கேற்கின்றன.
  • சர்வதேச பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதம்குறித்த பொதுவான கவலைகளுக்குத் தீர்வுகாணும் அதே வேளையில், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த இருதரப்பினருக்கும் இப்பயிற்சி ஒரு வாய்ப்பை வழங்கும். பகிரப்பட்ட பாதுகாப்பு நோக்கங்களை அடைவதைத் தவிர, உள்நாட்டுப் பாதுகாப்பு உபகரணங்களின் திறன்களை வெளிப்படுத்தவும், இருதரப்பு உறவுகளை வளர்க்கவும் இந்தப்பயிற்சி வாய்ப்பளிக்கும்.

13. ‘Scrub Typhus – உண்ணிக்காய்ச்சல்’ என்பது பின்வருவனவற்றில் எதனால் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும்?

அ. பாக்டீரியா

ஆ. பூஞ்சை

இ. வைரஸ்

ஈ. புரோட்டோசோவா

  • அண்மையில் தமிழ்நாட்டின் வேலூரில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், ஓரளவு மழைப்பொழிவு அதிகரிக்கும் பட்சத்தில் உண்ணிக்காய்ச்சல் நோயின் தாக்கம் 0.5 முதல் 0.7% வரை அதிகரிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. Orientia tsutsugamushi என்ற பாக்டீரியாவால் ஏற்படும் இத்தொற்றுநோய், நோய்க்கிருமியால் பாதிக்கப்பட்ட பூச்சிகள்மூலம் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, உடல்வலி, மற்றும் கடுமையான சுவாசக்கோளாறு, மூளை வீக்கம் மற்றும் பல்- உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டு இறுதியில் மரணத்திற்கு வழிவகுப்பது இதன் அறிகுறிகளாகும். குளிர் மாதங்களில் உச்சத்தை அடையும் இந்த நோய் டாக்ஸிசைக்ளின்மூலம் குணப்படுத்தக்கூடியதாகும். ஆனால் இதற்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 2024 ஜன.25: தேசிய வாக்காளர் நாள்.

கருப்பொருள்: “Nothing Like Voting, I Vote for Sure”.

2. நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை ஊக்குவிக்க `8,500 கோடி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

இந்தியாவில் நிலக்கரி வாயுமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன்மூலம், இயற்கை எரிவாயு, மெத்தனல், அம்மோனியா உள்ளிட்ட பிற அத்தியாவசிய பொருள்களுக்கு நாடு இறக்குமதியை சார்ந்திருக்கும் நிலை வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2030ஆம் ஆண்டுக்குள் 10 கோடி டன் நிலக்கரியை வாயுமயமாக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

நிலக்கரியானது கரியமில வாயு, நீராவி ஆகியவற்றின் உதவியுடன் பகுதியாக ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்டு, திரவ எரிவாயு உற்பத்திசெய்யப்படும். மின்னுற்பத்தி மற்றும் மெத்தனல் தயாரிக்க இந்தத் திரவ எரிவாயு பயன்படுத்தப்படும்.

3. சென்னையில் குற்றங்களை கட்டுப்படுத்த 3 செயலிகள்:

காணமல்போன மற்றும் திருடப்பட்ட வாகனங்களை மீட்கும் அமைப்பு: Integrated Vehicle Monitoring System (IVMS).

பருந்து செயலி: சென்னையில் உள்ள சரித்திர பதிவேடு குற்றவாளிகளைக் கண்காணிக்கும் செயலி

பந்தம் செயலி: சென்னையில் வசிக்கும் எழுபத்தைந்து வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், வீட்டில் தனியாக உள்ள முதியவர் கள், வாரிசில்லாத முதியவர்கள், கைவிடப்பட்ட முதியோர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்களின் வயதான பெற்றோர்கள் ஆகியோரின் விவரம் சேகரிக்கப்பட்டு காவல்துறையின், ‘பந்தம்’ செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அந்தந்த பகுதி காவலர் கண்காணிப்பில் இருப்பார்கள். முதியோருக்குத் தேவையான மருத்துவ உதவியையும், அவசர உதவியையும் காவலர் செய்வார்கள்.

நிவாரணம் செயலி: சென்னை பெருநகர காவல்துறையில், காவல் நிலையங்கள், காவல் அதிகாரிகள், இணைய தளம்மூலம் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை ஒருங்கிணைத்து அவற்றை கண்காணிக்கவும், அந்த புகார்களுக்கு எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, எந்த அதிகாரி அந்தப் புகாரை விசாரணை செய்கிறார் ஆகியவற்றை உடனுக்குடன் தெரிந்துகொள்ளும் வகையில், ‘நிவாரணம்’ செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

4. 31 பேருக்கு 2023ஆம் ஆண்டிற்கான, ‘ஜீவன் ரக்ஷா’ பதக்கங்கள்.

ஒரு நபர் அல்லது பலரது உயிர்களைக்காப்பாற்றும் சிறந்த செயலுக்காக ஜீவன் ரக்ஷா பதக்க விருதுகள் 3 வகையாக வழங்கப்படுகிறது. இதில் 2023ஆம் ஆண்டிற்கு சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் 7 பேருக்கு வழங்கப்படுகிறது. இதில் பொதுமக்களும், எல்லை சாலை அமைப்பு, தேசிய பேரிடர் மேலாண் படை, தேசிய புலனாய்வு அமைப்பு போன்றவற்றைச் சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜீவன் ரக்ஷா’ பதக்கம் 21 பேருக்கும் வழங்கப்படுகிறது. இந்த, ’ஜீவன் ரக்ஷா’ பதக்கம் பெறுவோர் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீரா மைக்கேல், எஸ். விஜய்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

5. நீதிபதி பி. பி. வராலே பதவியேற்பு: முழு பலத்தை எட்டியது உச்சநீதிமன்றம்.

கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த பி பி வராலே, உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றார். இவருடைய பதவியேற்பின்மூலம் அனுமதிக்கப்பட்ட முப்பத்து நான்கு நீதிபதிகள் என்ற முழு நீதிபதிகள் பலத்தை இந்திய உச்சநீதிமன்றம் எட்டியுள்ளது.

3 பட்டியலின நீதிபதிகள்: இவருடைய பதவியேற்பின்மூலம், உச்சநீதிமன்றத்தில் முதன்முறையாக பட்டியலினப் பிரிவை (SC) சேர்ந்த நீதிபதிகளின் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே, உச்சநீதிமன்றத்தில் இந்த சமூகத்தைச் சேர்ந்த பி. ஆர். கவாய், சி. டி. இரவிக்குமார் ஆகியோர் நீதிபதிகளாகப் பணியாற்றி வருகின்றனர்.

6. இரு ஆண்டுகளுக்கான இலக்கிய மாமணி விருதுகள் அறிவிப்பு.

இரண்டு ஆண்டுகளுக்கான இலக்கிய மாமணி விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரங்க. ராமலிங்கம் உள்பட 9 தமிழறிஞர்கள் விருதுகளைப் பெறவுள்ளனர். விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் `5 இலட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை ஆகியன வழங்கப்படும்.

7. பாரம்பரிய கலைகளுக்கு முன்னோடி வள்ளி கும்மி.

கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள தாசம்பாளையத்தைச் சேர்ந்தவர் பத்ரப்பன் (87), ‘வள்ளி கும்மி’ ஆசிரியர். இவருக்கு, ‘பத்மஸ்ரீ’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ‘வள்ளி கும்மி’ ஆசிரியரான பத்ரப்பனுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருது கடந்த 2019ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆண்கள் மட்டுமே பங்கேற்று வந்த வள்ளி கும்மி ஆட்டத்தில், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் பயிற்சியளித்தவர் பத்ரப்பன்.

2024 ஜன.26: 75ஆவது குடியரசு நாள்.

8. 2024ஆம் ஆண்டுக்கான, ‘பத்ம’ விருதுகள்:

முன்னாள் குடியரசுத்துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு (74), பழம்பெரும் நடிகை வைஜெயந்தி மாலா (90), தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி (68), சென்னையைச் சேர்ந்த பரதநாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் (80), பிகாரைச் சேர்ந்த மறைந்த சமூக ஆர்வலர் பிந்தேஸ்வர் பதக் ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதும், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பத்ம பூஷண் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேருக்கு பத்மவிருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களில் பத்ம விபூஷண் இருவருக்கும், பத்ம பூஷண் ஒருவருக்கும், பத்மஸ்ரீ ஐந்து பேருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து பத்ம விபூஷண் விருது பெற்றவர்கள்:

வைஜெயந்திமாலா – கலை.

பத்மா சுப்ரமணியம் – கலை.

தமிழ்நாட்டிலிருந்து பத்ம பூஷண் விருது பெற்றவர்கள்:

விஜயகாந்த் – கலை.

தமிழ்நாட்டிலிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றவர்கள்:

பத்ரப்பன் – வள்ளி ஒயில் கும்மி நாட்டுப்புற நடனக்கலைஞர், கோயம்புத்தூர்.

ஜோஷ்னா சின்னப்பா – விளையாட்டு.

ஜோ டி குரூஸ் – இலக்கியம் மற்றும் கல்வி.

ஜி. நாச்சியார் – மருத்துவம்.

சேசம்பட்டி டி சிவலிங்கம் – கலை.

9. தமிழ்நாடு அரசின் நம்மாழ்வார் விருது அறிவிப்பு!

தமிழ்நாடு அரசின் சார்பில் 2023-2024ஆம் ஆண்டிற்கான சிறந்த அங்கக விவசாயிகளுக்கான, ‘நம்மாழ்வார் விருது’க்குத் தேர்வுசெய்யப்பட்டுள்ள 3 விவசாயிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், மகர்நோன்புச் சாவடியைச் சேர்ந்த கோ. சித்தர் முதல்பரிசாக `2.50 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும், திருப்பூர் மாவட்டம், பொங்கலூரைச்சேர்ந்த கே. வெ. பழனிசாமி இரண்டாம் பரிசாக `1.50 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கமும், காஞ்சிபுரம் மாவட்டம், அச்சுக்கட்டு கிராமத்தைச் சேர்ந்த கு. எழிலனுக்கு மூன்றாம் பரிசாக `1 இலட்சம் ரொக்கப்பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin