TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 25th & 26th April 2024

1. ‘என்செலடஸ்’ என்றால் என்ன?

அ. பண்டைய நீர்ப்பாசன முறை

ஆ. அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக்கப்பல்

இ. சனியின் பெருங்கடல் நிலவு

ஈ. ஆக்கிரமிப்பு தாவரம்

  • சனிக்கோளின் 146 நிலவுகளில் ஒன்றான என்செலடஸ், அதன் திரவ கடல், கார்பன் அடிப்படையிலான வேதியியல் மற்றும் அலைவெப்ப ஆற்றல் ஆகியவற்றால் உயிரினங்கள் இருப்பதற்கான சாத்தியத்தை வெளிப்படுத்துகிறது. 2004 முதல் 2017 வரையிலான NASAஇன் காசினி-ஹீஜென்ஸ் பணியானது, என்செலடஸிலிருந்து வெளிப்படும் நீர்க்குமிழ்களைக்கண்டுபிடித்தது; அதன் மேற்பரப்பு கடலின் கலவையைப் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கியது. பனித்துகள்களில் உயிராதரவு பாஸ்பேட் இருப்பது இதனை மேலும் உறுதிப்படுத்துகிறது. சனிக்கோளின் மற்ற நிலவுகளான மீமாஸ் மற்றும் டைட்டன் ஆகியவையும் உயிர்கள் இருப்புக்கான அறிகுறிகளைக் காட்டுகின்றன.

2. அண்மையில், தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில், ‘சித்திரை தேர் திருவிழா’ விமரிசையாகக் கொண்டாடப்பட்டது?

அ. மதுரை

ஆ. விருதுநகர்

இ. திருச்சிராப்பள்ளி

ஈ. திருநெல்வேலி

  • மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நடைபெறும் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாசி வீதிகளில் குவிந்தனர். தமிழ் மாதங்களான சித்திரை அல்லது பங்குனியின்போது கொண்டாடப்படும் இந்தத் திருவிழா, மீனாட்சியம்மை மற்றும் சொக்கநாதரின் தெய்வீகத் திருமணவிழாவைக் கொண்டாடுகிறது. இது சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் இடையிலான ஒற்றுமையைப் போற்றும் விதமாக, சிவபெருமான் மற்றும் திருமால் இருவரையும் மகிமைப்படுத்துகிறது. 700 ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியத்தில் வேரூன்றிய அழகர் மலையில் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்கி, கொண்டாட்டங்களில் முடிவடையும் இந்த திருவிழா பல்வேறு சடங்குகளை உள்ளடக்கியுள்ளது.

3. ‘கிரிஸ்டல் மேஸ் – 2’ என்றால் என்ன?

அ. எறிகணை

ஆ. சிறுகோள்

இ. புவி தகவல் தொடர்பு செயற்கைக்கோள்

ஈ. ஆக்கிரமிப்பு திட்டம்

  • இந்திய வான்படை அண்மையில் ROCKS எனப்படும் கிரிஸ்டல் மேஸ்-2 எறிகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இஸ்ரேலைப் பூர்வீகமாகக் கொண்ட இந்த வான்வழி ஏவப்படும் நடுத்தர தொலைவு செல்லும் எறிகணை, நீண்ட தொலைவு ரேடார்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகள் போன்ற உயர்மதிப்புகொண்ட நிலையான மற்றும் இடமாற்றக்கூடிய இலக்குகளை குறிவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதன் முன்னோடியான கிரிஸ்டல் மேஸ்-1உடன் ஒப்பிடும்போது, 250 கிமீ-க்கும் அதிகமான வரம்பினை இது கொண்டுள்ளது.

4. தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 22.ஏப்ரல்

ஆ. 23.ஏப்ரல்

இ. 24.ஏப்ரல்

ஈ. 25.ஏப்ரல்

  • ஒவ்வோர் ஆண்டும் ஏப்.24 அன்று பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தால் இந்தியாவில் தேசிய பஞ்சாயத்து ராஜ் நாள் கொண்டாடப்படுகிறது. உள்ளாட்சிகளை சட்டரீதியாக வலுப்படுத்த 1993ஆம் ஆண்டு இதேநாளில், அரசியலமைப்பு (73ஆவது சட்டதிருத்தம்) சட்டம்,1992 அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

5. 2024 – உலக நோய்த்தடுப்பு வாரத்துக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Long Life for All

ஆ. Humanly Possible: Immunization for All

இ. Vaccines bring us closer

ஈ. Vaccines Work for All

  • தடுப்பூசிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக ஆண்டுதோறும் ஏப்.24-30 வரை, ‘உலக நோய்த்தடுப்பு வாரம்’ கொண்டாடப்படுகிறது. 2012இல் உலக சுகாதார அவையால் நிறுவப்பட்ட இது, தற்போது 180 நாடுகளில் கடைப்பிடிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இவ்வாரத்திற்கான கருப்பொருள், “Humanly Possible: Immunization for All” என்பதாகும். இது, தடுப்பூசிகளுக்கான உலகளாவிய அணுகலை வலியுறுத்துகிறது. தடுப்பூசி குறித்த பரப்புரைகள் பெரியம்மையையும் இளம்பிள்ளைவாதத்தையும் முற்றிலுமாக ஒழித்துள்ளன.

6. மியாவாக்கி முறை என்றால் என்ன?

அ. உள்நாட்டுத் தாவரங்களைக்கொண்டு அடர்ந்த காடுகளை உருவாக்கும் நுட்பம்

ஆ. அயல்நாட்டு இனங்களைக் கொண்டு நகர்ப்புற தோட்டங்களை அமைத்தல்

இ. மரபணு மாற்றப்பட்ட தாவரங்களைப் பயன்படுத்தி தோட்டங்களை உருவாக்குதல்

ஈ. பாதி வறண்ட பகுதிகளில் வணிக வேளாண்மையை ஊக்குவித்தல்

  • இந்தியாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம், ‘மில்லியன் மியாவாக்கி’ என்ற திட்டத்திற்காக கூட்டிணைந்துள்ளது; இது நகர்ப்புறங்களில் பேரளவில் காடுவளர்ப்பதன்மூலம் இந்திய நகரங்களில் காற்றின்தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஜப்பானிய தாவரவியலாளர் அகிரா மியாவாக்கி உருவாக்கிய மியாவாக்கி முறையின் அடிப்படையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. குறைந்த இடைவெளிகளில் இயற்கையாக பல்லுயிர் பெருக்கம் செய்வதை இது ஊக்குவிக்கிறது. இயற்கைக் காடுகளின் மருத்துவ குணங்கள் மற்றும் மழை உற்பத்தி போன்ற சில குணங்கள் இல்லாவிட்டாலும், மியாவாக்கி காடுகள் சுரங்கம்போன்ற நடவடிக்கைகளின் சுற்றுச்சூழல் பாதிப்புகளைத் தணிக்கவும் மற்றும் கரியமில் வாயுவைக் கவரவும் உதவுகின்றன.

7. அண்மையில், ‘ASEAN எதிர்கால மன்றம்’ நடைபெற்ற இடம் எது?

அ. ஜகார்த்தா, இந்தோனேசியா

ஆ. புனோம் பென், கம்போடியா

இ. கோலாலம்பூர் மலேசியா

ஈ. ஹனோய், வியட்நாம்

  • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், வியட்நாமின் ஹனோய் நகரில் தொடங்கிய, ‘ASEAN எதிர்கால மன்றத்தில்’ மெய்நிகராக இணைந்தார். 10 உறுப்புநாடுகளை உள்ளடக்கிய ASEAN, பொருளாதார வளர்ச்சி மற்றும் பிராந்திய நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. 2023இல் 43ஆவது ASEAN உச்சிமாநாட்டில் முன்மொழியப்பட்ட இந்த மன்றம், உறுப்புநாடுகள் மற்றும் கூட்டாளர்களுக்கு யோசனைகள் மற்றும் கொள்கை பரிந்துரைகளை பரிமாறிக் கொள்வதற்கான ஒரு தளமாகச் செயல்படுகிறது.

8. அண்மையில், பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்கீழ் கடன்களை வழங்குவதற்கு டாடா பவர் சோலார் சிஸ்டம்சுடனான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கி எது?

அ. NABARD

ஆ. இந்தியன் வங்கி

இ. பாரத வங்கி

ஈ. கரூர் வைஸ்யா வங்கி

  • சென்னையைச் சார்ந்த இந்தியன் வங்கி, டாடா பவர் சோலார் சிஸ்டம்ஸ் உடன் இணைந்து பிரதம மந்திரி சூரிய வீடு இலவச மின்சார திட்டத்தின்கீழ் கடன்களை வழங்குகிறது. 2024 பிப்.13 அன்று பிரதமர் நரேந்திர மோதியால் தொடங்கப்பட்ட இந்த முயற்சி, இந்தியாவில் ஒரு கோடி வீடுகளுக்கு மேற்கூரை சூரிய அமைப்புமூலம் இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தகுதியுள்ள குடும்பங்கள், குறிப்பிட்ட அளவுகோல்களைப் பூர்த்தி செய்து, மாதந்தோறும் 300 அலகு வரை இலவச மின்சாரத்தைப் பெறலாம். இந்தத் திட்டத்திற்காக அரசு `75,021 கோடி நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

9. புவி நாள் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சிலால், இந்தியாவின் மிகப்பெரிய தட்பவெப்பநிலை கடிகாரம் நிறுவப்பட்ட இடம் எது?

அ. சென்னை

ஆ. புது தில்லி

இ. பிரயாக்ராஜ்

ஈ. உஜ்ஜயினி

  • புவி நாள் கொண்டாட்டங்களின் ஒருபகுதியாக புது தில்லி ரபி மார்கில் உள்ள தலைமையக கட்டிடத்தில் நாட்டின் மிகப்பெரிய தட்பவெப்பநிலை கடிகாரம் நிறுவப்பட்டு இயங்கச்செய்யப்பட்டது. தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் அதன் தீயவிளைவுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான அறிவியல் & தொழிற்துறை ஆராய்ச்சி குழுமத்தின் நோக்கத்தை இந்த நிகழ்வு குறிக்கிறது. ஐஐடி பாம்பேயைச் சேர்ந்த பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி, குடிமக்கள் மத்தியில் ஆற்றல் கல்வியறிவுக்கான தேவையை வலியுறுத்தி, ஆற்றல் நுகர்வைக் குறைக்குமாறு வலியுறுத்தினார்.

10. வாயேஜர் – 1 விண்கலம் என்பது கீழ்காணும் எந்த விண்வெளி அமைப்பால் ஏவப்பட்ட விண்வெளி ஆய்வு விண்கலமாகும்?

அ. ISRO

ஆ. NASA

இ. JAXA

ஈ. CNSA

  • கடந்த 1977ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட NASAஇன் வாயேஜர்-1 ஆய்வுக்கலம், செயலிழந்த காலத்திற்குப் பிறகும் முக்கியமான தகவல்களை அனுப்புகிறது என்று NASA அறிவித்துள்ளது. வெளிப்புற சூரிய குடும்பத்தையும் அதற்கு அப்பாலும் ஆராய்வதை நோக்கமாகக் கொண்ட வாயேஜர்-1 விண்கலத்தின் பணிகளுள் வியாழன் மற்றும் சனிக் கோளின் புதிய நிலவுகள் மற்றும் வளையங்களைக் கண்டறிதலும் அடங்கும். இது கடந்த 2012ஆம் ஆண்டில் சூரிய குடும்பத்திலிருந்து வெளியேறிய முதல் மனிதனால் உருவாக்கப்பட்ட பொருளாக மாறியது. குறைந்தபட்சம் 2025 ஆம் ஆண்டு வரை வாயேஜர்-1 செயல்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது; தற்போது சூரியனில் இருந்து 13.8 பில்லியன் மைல்கள் தொலைவில் அது அமைந்துள்ளது.

11. அண்மையில், “மீளுருவாக்க நீலப்பொருளாதாரத்தை நோக்கி – நீலப்பொருளாதாரத்தை வரைபடமாக்கல்” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (IUCN)

ஆ. இயற்கை வள பாதுகாப்பு கவுன்சில் (NRDC)

இ. உலக வனவிலங்கு நிதியம் (WWF)

ஈ. வனவிலங்கு பாதுகாப்பு சங்கம் (WCS)

  • IUCN ஆனது “Towards a Regenerative Blue Economy – Mapping the Blue Economy” என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இது நீலப்பொருளாதாரத்தை மீளுருவாக்கம் செய்வதற்கான வரையறை மற்றும் கொள்கைகளை முன்மொழிகிறது. நீலப்பொருளாதார மீளுருவாக்க மாதிரியானது, நிலையான பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் நியாயமான செழுமையின்மூலம், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகளின் பயனுள்ள மீள்- உருவாக்கம் மற்றும் பாதுகாப்பை நோக்கமாகக் கொண்டுள்ளது.

12. அண்மையில், பழவேற்காடு ஏரி பறவைகள் சரணாலயத்தின் கணிசமான பகுதியை மறுமதிப்பீடு செய்வதற்குத் திட்டமிட்டுள்ள மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஆந்திர பிரதேசம்

இ. கர்நாடகா

ஈ. ஒடிஸா

  • திருவள்ளூர் மாவட்டத்தின் பழவேற்காடு ஏரியின்கண் அமைந்துள்ள பறவைகள் சரணாலயத்தின் குறிப்பிடத்தக்க பரப்பை மறுமதிப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ளது. ஆந்திர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையே வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள பழவேற்காடு ஏரி, ஒடிஸாவின் சிலிகா ஏரிக்கு அடுத்து இந்தியாவின் 2ஆவது பெரிய உவர்நீர் ஏரியாகும். ஸ்ரீஹரிகோட்டா தீவு குளத்திற்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையில் ஒரு தடையாக இது செயல்படுகிறது. காலங்கி மற்றும் ஆரணி ஆறுகள்மூலம் உருவாக்கப்படும் இந்தச் சரணாலயம் நாரைகளின் வாழ்விடமாக புகழ்பெற்று விளங்குகிறது.

13. அண்மையில், கீழ்காணும் எந்த இந்தியக் கடற்படை பாய்மரக்கப்பலில், இந்தியக் கடற்படையின் இரண்டு பெண் அதிகாரிகள் கிட்டத்தட்ட இரண்டு மாதகால கடல்கடந்த பயணத்தை மேற்கொண்டனர்?

அ. INSV தாரிணி

ஆ. INSV சரயு

இ. INSV காவேரி

ஈ. INSV கிர்பான்

  • இந்தியக் கடற்படையின் பாய்மரக்கப்பல் (INSV) தாரிணி சுமார் இரண்டு மாத கால வரலாற்றுச் சிறப்புமிக்க கடல் கடந்த பயணத்திற்குப் பின் கோவாவில் உள்ள அதன் தளத் துறைமுகத்திற்கு வெற்றிகரமாக திரும்பியது. இந்தியக் கடற்படையின் பெண் அதிகாரிகளான Lt. கமாண்டர் K தில்னா, Lt. கமாண்டர் A ரூபா ஆகியோர் இந்தப்பயணத்தை மேற்கொண்டனர். இதன்மூலம் இந்தியாவிலிருந்து இதுபோன்ற சாதனையை முதன்முறையாக நிகழ்த்தியவர்கள் என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர். INSV தாரிணி கப்பலில் இந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கவுள்ள உலகைச்சுற்றிவரும் பயணத்திற்கு (சாகர் பரிக்கிரமா – 4) இரு பெண் அதிகாரிகளும் தயாராகி வருகின்றனர்.

14. அண்மையில், இந்தியாவின் முதல் பாதுகாப்பு ஆலோசகராக Col. எடிசன் நாப்யோவை நியமித்த நாடு எது?

அ. நியூசிலாந்து

ஆ. டோங்கா

இ. பிஜி

ஈ. பப்புவா நியூ கினியா

  • பப்புவா நியூ கினியா, இந்தியாவின் முதல் பாதுகாப்பு ஆலோசகராக Col. எடிசன் நாப்யோவை நியமித்துள்ளது. இது 2 நாடுகளுக்கும் இடையிலான ஆழமான ஒத்துழைப்பைக் குறிக்கிறது. பாதுகாப்புப்படையின் இடைக்கால தலைவர் கமடோர் பிலிப் பொலேவாரா, இந்தியாவில் உள்ள PNG அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் இடையே பாலமாகப் பணியாற்றவுள்ள எடிசன் நாப்யோ பங்கேற்ற பிரியாவிடை விழாவிற்கு தலைமைதாங்கினார். Col. எடிசன் நாப்யோ, இந்தப் பதவியை வகிக்கும் முதல் நபராவார்.

15. பசுமை நிதியளித்தலுக்கான இந்தியாவின் தேவையை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட அதன் காலநிலை உத்தி – 2030 ஆவணத்தை வெளியிட்ட வங்கி எது?

அ. NABARD

ஆ. SIDBI

இ. SBI

ஈ. PNB

  • புவி நாளன்று, விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுக்கான தேசிய வங்கி (NABARD) இந்தியாவின் பசுமை நிதி தேவைகளை இலக்காகக் கொண்டு, அதன் காலநிலை உத்தி – 2030 என்ற ஆவணத்தை வெளியிட்டது. பசுமைக் கடன்களை விரைவுபடுத்துதல், சந்தை உருவாக்கும் பாத்திரங்களை விரிவுபடுத்துதல், உள்ளக மாற்றம் மற்றும் வளங்களைத் திரட்டுதல் ஆகியவை அதன் உத்திகளுள் அடங்கும். 2030ஆம் ஆண்டுக்குள் மொத்தமாக 2.5 டிரில்லியன் டாலர்களை எட்டுவதற்கு இந்தியாவிற்கு ஆண்டுக்கு சுமார் $170 பில்லியன் தேவைப்படுகிறது, ஆனால் 2019-20 வரையில் $49 பில்லியன் மட்டுமே பசுமை நிதியாகப் பெறப்பட்டுள்ளது.

16. 2024 – உலக மலேரியா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Zero Malaria starts with me

ஆ. Accelerating the fight against malaria for a more equitable world

இ. Harness innovation to reduce the malaria disease burden

ஈ. Zero Malaria – Draw the line against Malaria

  • உலக மலேரியா நாளானது ஆண்டுதோறும் ஏப்ரல்.25 அன்று அனுசரிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Accelerating the fight against malaria for a more equitable world” என்பதாகும். கொசு கடித்தால் பரவும் மலேரியா, நடுக்கம் மற்றும் அதிக காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது. இது வெப்பமண்டல பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது; முன்னெச்சரிக்கைகள்மூலம் இது தாக்காமல் தடுக்கலாம். நோய்த்தடுப்பு முறைகள் மற்றும் நோயின் தாக்கத்தை எதிர்த்துப்போராடுவதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளினது நோக்கமாகும்.

17. அண்மையில், இந்த ஆண்டின் சிறந்த பொதுத்துறை நிறுவனத்திற்கான விருது பெற்ற அமைப்பு எது?

அ. BHEL

ஆ. ONGC

இ. HAL

ஈ. IOCL

  • ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் (HAL) ஆனது அகில இந்திய மேலாண்மை சங்கத்தின் (AIMA) நிர்வாக இந்திய விருதுகளில் ஆண்டின் சிறந்த பொதுத்துறை நிறுவனத்திற்கான விருதைப் பெற்றது. ஏப்ரல்.23 அன்று தில்லியில் நடந்த நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் இந்த விருதை வழங்கினார். 2024 மார்ச்.31இல் முடிவடைந்த நிதியாண்டில் HAL `29,810 கோடிக்கு மேல் ஈட்டி சாதனை படைத்துள்ளது; இது 11% வளர்ச்சியாகும். 1957இல் நிறுவப்பட்ட AIMA, இந்தியா முழுவதும் சிறந்த நிர்வாகங்களை ஊக்குவிக்கிறது.

18. ‘Stellaria mcclintockiae’ என்றால் என்ன?

அ. ஒரு புதிய தாவர இனம்

ஆ. பாரம்பரிய நீர்ப்பாசன நுட்பம்

இ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்

ஈ. கருந்துளை

  • ஸ்டெல்லாரியா (Caryophyllaceae இனங்கள்) குழுவைச் சேர்ந்த ‘Stellaria mcclintockiae’ என்ற புதிய தாவர இனம், நெல்லியம்பதி மலைப்பகுதியில் உள்ள ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. மரபியல் நிபுணர் பார்பரா மெக்ளின்டாக்கிற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்தப் பெயரிடப்பட்டுள்ளது; இது தென்னிந்தியாவில் இதுபோன்ற முதல் வகையாகும். காடுகளில் உள்ள பிற இனங்களுடன் ஒப்பிடும்போது இவ்வகைத் தாவர இனம் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்துகின்றது.

19. இராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதி (RAN) என்ற திட்டத்தை நிர்வகிக்கிற அமைச்சகம் எது?

அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்

ஈ. விவசாய அமைச்சகம்

  • தில்லி உயர்நீதிமன்றம் அண்மையில் இராஷ்ட்ரிய ஆரோக்கிய நிதி (RAN) திட்டத்திற்கான புதிய வருமான வரம்பு “மிகக்குறைவு” என்று கருதியது. திருத்தப்பட்ட RAN திட்டத்தின்கீழ், பயன்பெறுவதற்கான மாத வருமான வரம்பு கிராமப்புறங்களுக்கு `1,571ஆகவும், நகர்ப்புறங்களுக்கு `1,605 ஆகவும் உள்ளது. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் RAN ஆனது இதயம், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் புற்றுநோய்போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை நோயாளிகளுக்கு சிறப்பு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற ஒருமுறை நிதியுதவினை வழங்குகிறது.

20. நீலகிரி வரையாடு திட்டத்தின் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற இரவிகுளம் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. கோவா

  • தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகியவை ஏப்.29 முதல் நீலகிரி வரையாட்டின் முதல் ஒத்திசைக்கப்பட்ட கணக்கெடுப்பை நடத்தவுள்ளன. சுற்றுச்சூழல், தட்பவெப்பநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கான கூடுதல் தலைமைச்செயலாளர் சுப்ரியா சாஹு, இந்த முன்னெடுப்பிலிருந்து மதிப்புமிக்க நுண்ணறிவுகளை எதிர்பார்க்கிறார். இரவிகுளம் தேசியப் பூங்காவில் தென்மேற்குத்தொடர்ச்சி மலையை பூர்வீகமாகக்கொண்ட உள்ளூர் பறவையினங்களின் மிகப்பெரிய எண்ணிக்கை காணப்படுகிறது. தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடு அழிவின் விளிம்பிலிருக்கும் உயிரினம் என்று IUCN தெரிவித்துள்ளது.

21. அண்மையில், வெவ்வேறு உணவு வகைகளுக்கான உலகளாவிய சோடியம் வரையறைகளின் இரண்டாவது பதிப்பை வெளியிட்ட அமைப்பு எது?

அ. FAO

ஆ. WHO

இ. ILO

ஈ. WMO

  • உலக சுகாதார அமைப்பு (WHO) பல்வேறு உணவு வகைகளுக்கான உலகளாவிய சோடியம் வரையறைகளின் 2ஆம் பதிப்பை வெளியிட்டுள்ளது. சோடியம் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்தும் மற்றும் உயர் குருதியழுத்தம் மற்றும் உடற்பருமன் போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுவதற்கான அதன் முயற்சியின் ஒருபகுதியாகும் இது. இவ்வரையறைகள் சோடியம் நுகர்வைக் குறைப்பதில் முன்னேற்றத்தை அளவிடுவதற்கான குறிப்பு மதிப்புகளாக செயல்படுகின்றன. சிறந்த உடல்நலஞ்சார் விளைவுகளுக்காக பெரியவர்கள் 2000 மிகி/நாள் சோடியத்திற்குக் (5கி/நாள் உப்புக்குச் சமம்) குறைவாக உட்கொள்ளுமாறு WHO அறிவுறுத்துகிறது.

22. 2024 – சர்வதேச பிரதிநிதிகள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Make the World a better place

ஆ. Together, we challenge those in power

இ. People of the World

ஈ. Role of Delegates

  • ஐநா அவையில் தங்கள் நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.25ஆம் தேதி சர்வதேச பிரதிநிதிகள் நாள் கொண்டாடப்படுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Together, we challenge those in power” என்பதாகும். ஐநா பிரதிநிதிகள் தங்களது ஒப்பந்தங்கள் குறித்து காலந்துரையாடுகிறார்கள், தங்கள் சொந்த நாடுகளுடன் ஒருங்கிணைக்கிறார்கள், கூட்டணிகளை உருவாக்குகிறார்கள் அல்லது சமரசம் செய்கிறார்கள்.

23. கோங்ஜோம் நாளுடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. ஜார்கண்ட்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மணிப்பூர்

ஈ. ஹரியானா

  • ஆங்கிலேயர்களுக்கு எதிராக 1891இல் நடந்த கோங்ஜோம் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல்.23 அன்று மணிப்பூர் மாநிலம் கோங்ஜோம் நாளை அனுசரிக்கின்றது. தௌபல் மாவட்டத்தில் உள்ள கோங்ஜோம் போர் நினைவு வளாகத்தில் இந்த நிகழ்வு நடந்தது. மணிப்பூர் மாநில ஆளுநர் சுஸ்ரீ அனுசுயா உய்கே மற்றும் முதலமைச்சர் N பைரன் சிங் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து, தியாகிகளுக்கு மரியாதையும் இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தினர்.

24. அண்மையில், பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6ஆவது சர்வதேச மாநாடு நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி

ஆ. சென்னை

இ. ஹைதராபாத்

ஈ. பெங்களூரு

  • இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புது தில்லியில் பேரிடர் தாங்குதிறன் உள்கட்டமைப்பு குறித்த 6ஆவது சர்வதேச மாநாடு நடைபெற்றது. அப்போது, “நாளைய சிறந்த எதிர்காலத்திற்கான தாங்குதிறன்கொண்ட உள்கட்டமைப்பில் நாம் இன்று அவசியம் முதலீடு செய்ய வேண்டும்” என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.
  • “ஒவ்வொரு நாடும் தனித்தன்மையுடன் தாங்குதிறன் கொண்டதாக இருந்தால் மட்டுமே உலக நாடுகள் கூட்டாக தாங்குதிறனுடன் இருக்க முடியும்” என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார். பகிரப்பட்ட அபாயங்கள் காரணமாக பகிரப்படும் தாங்குதிறனின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், பேரிடர் மீட்புத்திறன் உள்கட்டமைப்பு குறித்த இந்த மாநாடு கூட்டு இயக்கத்திற்காக உலகநாடுகள் ஒன்றிணைய உதவும் என்று கூறினார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. லதா மங்கேஷ்கர் விருது.

பழம்பெரும் திரைப்பட பாடகியான லதா மங்கேஷ்கர் கடந்த 2022ஆம் ஆண்டு காலமானார். அவரின் நினைவாக ‘லதா தீனநாத் மங்கேஷ்கர்’ விருதை அவரது குடும்பத்தினர் மற்றும் அறக்கட்டளையினர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் இந்த விருது 2022ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோதிக்கும் 2023ஆம் ஆண்டு திரைப்பட பாடகி ஆஷா போஸ்லேவுக்கும் வழங்கப்பட்டது. இதையடுத்து 2024ஆம் ஆண்டுக்கான லதா மங்கேஷ்கர் விருது நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு பிரிவுகளின்கீழ் விருதுகள் வழங்கப்பட்ட இவ்விழாவில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு, ‘மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர்’ விருது வழங்கப்பட்டது. இசைத்துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

2. திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; `10 இலட்சம் அபராதம்!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், புகை பிஸ்கட் போன்ற உணவுப்பொருள்களை விற்பனை செய்தால் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், `10 இலட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரித்துள்ளது. மேலும், உலர்பனி (dry-ice) கலந்த பொருள்களையும் விற்கக்கூடாது என்றும், குழந்தைகளுக்கு உலர்பனி கொடுக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!