Tnpsc Current Affairs in Tamil – 24th January 2024
1. 19ஆவது அணிசேரா இயக்க உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. பிரேசில்
ஆ. தில்லி
இ. கம்பாலா
ஈ. கானா
- உகாண்டாவில் நடைபெறும் 19ஆவது அணிசேரா நாடுகளின் உச்சிமாநாட்டில் வெளியுறவுத்துறை அமைச்சர் S ஜெய்சங்கர் இந்தியாவின் கருத்துக்களை முன்வைத்தார். “Deepening Cooperation for Shared Global Affluence” என்ற கருப்பொருளின் கீழ், 120 வளரும் நாடுகளை அணிசேரா நாடுகளின் இயக்கம் ஒன்றிணைக்கிறது. இந்த இயக்கத்தின் ஒரு முதன்மை உறுப்பினராக, இந்தியா இந்தக் கருப்பொருளுக்கு ஆதரவாக உள்ளது.
2. எந்த அமைச்சகத்தின் கீழ், காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணியகம் செயல்படுகிறது?
அ. உள்துறை அமைச்சகம்
ஆ. பாதுகாப்பு அமைச்சகம்
இ. நிதி அமைச்சகம்
ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
- காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணியகமானது வாட்ஸ்அப் மோசடிகள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. உள்துறை அமைச்சகத்தின்கீழ், கடந்த 1970ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட காவல்துறை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பணியகம், காவல்துறையின் தேவைகள் மற்றும் சவால்களை பூர்த்திசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஆய்வு நடத்துகிறது, தீர்வுகளைப் பரிந்துரைக்கிறது மற்றும் அறிவியல் & தொழில்நுட்பத்தில் மேம்பட்டு உள்ளது. கூடுதலாக, இது மாநிலக் காவல்படைகளை நவீனமயமாக்க உதவுகிறது.
3. பின்வருவனவற்றில் ஆரவல்லி மலைத்தொடரின் மிகவுயரமான சிகரம் எது?
அ. குருசிகார்
ஆ. ஜரோல்
இ. அச்சல்கர்
ஈ. கோகுண்டா
- சுற்றுச்சூழல் உணர்திறன் மிகுந்த ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கம் தோண்டுவதற்கு இராஜஸ்தான் மாநில அரசு தடைவிதிக்கலாம் என இந்திய உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. வடமேற்கு இந்தியாவில் 670 கிமீ நீளமுள்ள ஆரவல்லி மலைத்தொடர், பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட உலகின் மிகப் பழைமையான மடிப்பு மலைகளுள் ஒன்றாகும். 5,650 அடி உயரமுள்ள குருசிகார், பிரபலமான மலை வாசஸ்தலமான அபு மலையையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கிழக்கு இராஜஸ்தானிலிருந்து தார் பாலைவனத்தை பிரிக்கும் புவியியல் எல்லையாக இம்மலைத்தொடர் விளங்குகிறது. கனிமங்கள் நிறைந்த இந்த மலைத்தொடர் சரிஸ்காபோன்ற தேசியப்பூங்காக்கள் மற்றும் வனவிலங்கு சரணாலயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
4. அரிச்சல்முனை அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. ஒடிஸா
இ. சத்தீஸ்கர்
ஈ. பஞ்சாப்
- பிரதமர் நரேந்திர மோதி, தமிழ்நாட்டின் அரிச்சல்முனையில் உள்ள இராமர் பாலத்தின் தொடக்கப்புள்ளியில் வழிபாடு செய்தார். மேலும் இராமாயணத்துடன் தொடர்புடைய ஆந்திர பிரதேச மற்றும் கேரளத்தில் உள்ள கோவில்களுக்கும் சென்றார். தென்னிந்திய பயணத்தை முடித்துக்கொண்டு இராமேசுவரத்தில் அமைந்துள்ள கோதண்டராமசுவாமி திருக்கோவிலில் வழிபாடு செய்தார். இந்தச் சுற்றுப்பயணமானது கலாச்சார மற்றும் வரலாற்று முக்கியத்துவத்துடன் இணைந்த குறிப்பிடத்தக்க புனிதத்தலங்களை உள்ளடக்கியுள்ளது.
5. இந்தியா மற்றும் கியூபா இடையே அண்மையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கம் என்ன?
அ. பயிர் மேம்பாட்டிற்கான விவசாய கூட்டிணைவு
ஆ. பொதுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பு
இ. பரஸ்பர புரிதலுக்கான கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள்
ஈ. காலநிலை மாற்றத்தை எதிர்ப்பதில் கூட்டு முயற்சிகள்
- மக்கள்தொகை அடிப்படையிலான டிஜிட்டல் உருமாற்றத்திற்கான வெற்றியார்ந்த எண்ணிம தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ள கியூபாவின் தகவல் தொடர்பு அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவில் மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கையெழுத்திட்டது. டிஜிட்டல் மாற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக்கொண்ட இந்த ஒப்பந்தத்தில், திறன்-வளர்ப்பு திட்டங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளின் பரிமாற்றம் ஆகியவை அடங்கும். இருநாடுகளின் டிஜிட்டல் சூழலமைப்புகளுக்கும் பரஸ்பர நன்மைகளை ஊக்குவிக்கும் வகையில், பொதுவான டிஜிட்டல் உட்கட்டமைப்பை ஏற்றுக்கொள்வதை மேம்படுத்த, கியூபாவுடன் இந்தியா இணைந்து செயல்படும்.
6. கேரளத்தின் கூக்கனத்தில் வாழும் எந்தச் சமூகத்தினர், ‘மாதிகா’ மொழியைப் பேசுகின்றனர்?
அ. சக்கலியர்
ஆ. கோரகர்
இ. குரும்பர்
ஈ. செஞ்சு
- கேரள மாநிலம் கூக்கனத்தில் சக்கலியர் இன மக்கள் பேசும் மொழியான, ‘மாதிகா’ அழியும் தருவாயில் உள்ளது. ஒருகாலத்தில் நாடோடிகளாக இருந்த சக்கலியர்கள் கர்நாடக மாநிலத்திலிருந்து வடமலபாருக்கு குடிபெயர்ந்தனர். ஆரம்பத்தில் பட்டியல் பழங்குடியினராக அங்கீகரிக்கப்பட்ட அவர்கள் தற்போது கேரளாவில் பட்டியலினத்தோருள் ஒருபகுதியாக உள்ளனர். அந்தச் சமூகத்தைச் சார்ந்த இளம் தலைமுறையினர் மலையாளத்தை தேர்வுசெய்வதால் கன்னடத்தை ஒத்த, ‘மாதிகா’ மொழி, அழிவை எதிர்கொண்டு வருகிறது. இரண்டே இரண்டு நபர்கள் மட்டுமே இம்மொழியை பேசிவரும் நிலையில், ‘மாதிகா’ அழிந்துபோகாமல் பாதுகாக்க அரசின், “இந்தியாவின் அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான திட்டம்” உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் நடந்து வருகின்றன.
7. பாலைவனத்திருவிழா என அழைக்கப்படும், ‘மரு மகோத்சவம்’ கொண்டாடப்படுகிற இடம் எது?
அ. ஜெய்ப்பூர்
ஆ. ஜெய்சால்மர்
இ. கட்ச்
ஈ. பிகானேர்
- ஜெய்சால்மர் பாலைவனத்திருவிழா, ‘மரு மகோத்சவம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இது ராஜஸ்தான் மாநிலத்தின் பாலைவன நகரமான ஜெய்சால்மரின் மையத்தில் நடத்தப்படும் கலாச்சார களியாட்டமாகும். இசை, நடனம், கலை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றின் தனித்துவ கலவையான இந்தத் திருவிழா இராஜஸ்தான் மாநிலத்தின் வளமான பாரம்பரியத்தை காட்சிபடுத்துகிறது. “Back to The Desert” என்ற கருப்பொருளின்கீழ், 2024 பிப்.22-24 வரை இந்தத் திருவிழா நடைபெறும்.
8. 2024 – ஆடவர் ஒற்றையர் இந்திய ஓபன் பட்டத்தை வென்ற வீரர் யார்?
அ. ஷி யு கி
ஆ. லீ செயுக் யியூ
இ. சிராக் ஷெட்டி
ஈ. சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி
- 2024 ஜன.21 அன்று நடந்த 2024-இந்திய ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை சீனாவின் ஷி யு குய் வென்றார். அவர், 23-21, 21-17 என்ற நேர்செட் கணக்கில் ஹாங்காங்கின் லீ செயுக் யியூவை வீழ்த்தினார். சுமார் $850,000 அமெரிக்க டாலர் பரிசுத்தொகைகொண்ட 2024 – இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியானது ஜனவரி.16-21 வரை புது தில்லியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் வென்ற பிற வெற்றியாளர்கள்: மகளிர் ஒற்றையர்: தை சூ யிங் (சீன தைபே); ஆடவர் இரட்டையர்: காங் மின் ஹியூக்-சியோ சியுங் ஜே (தென் கொரியா); கலப்பு இரட்டையர்: மயூ மாட்சுமோட்டோ-வகானா நாகஹாரா (ஜப்பான்).
9. நலவாழ்வில், பெரிய பன்-முகட்டு மாதிரிகளின் (Large Multi-Modal Models) நெறிமுறை அடிப்படையிலான பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைப்பு எது?
அ. WHO
ஆ. UNICEF
இ. UNESCO
ஈ. உலகளாவிய நலவாழ்வுக் குழுமம்
- நலவாழ்வுப் பாதுகாப்பில் பெரிய பன்-முகட்டு மாதிரிகளின் (Large Multi-Modal Models – LMM) நெறிமுறைசார்ந்த பயன்பாடு குறித்த வழிகாட்டுதல்களை உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்டுள்ளது. LMM-கள், பலதரப்பட்ட தரவுகளைச் செயலாக்கும் திறன்கொண்ட ஆற்றல்மிகுந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் ஆகும். இது நலவாழ்வு சார்ந்த ஆய்வுகளை முற்றிலும் மாற்றியமைக்கிறது. LMMஇன் மேம்பாட்டில் அரசாங்கங்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள், சுகாதார வழங்குநர்கள் மற்றும் சிவில் சமூகத்தை உள்ளடக்கிய ஒரு கூட்டு அணுகுமுறை இருக்க வேண்டும் என WHO வலியுறுத்துகிறது. தன்னாட்சியைப் பாதுகாத்தல், வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்தல் மற்றும் செயற்கை நுண்ணறிவு மேம்பாடு மற்றும் வரிசைப்படுத்தலில் உள்ளடங்கிய தன்மையை ஊக்குவித்தல் உள்ளிட்ட ஆறு முக்கியக் கொள்கைகளை WHO அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
10. அயோத்தி இராமர் திருக்கோவிலின் தலைமை கட்டடக் கலைஞர் யார்?
அ. பிரமுக் சுவாமி மகாரா
ஆ. அருண் யோகிராஜ்
இ. சுபாஷ் பாய்ட்
ஈ. சந்திரகாந்த் சோம்புரா
- அயோத்தி இராமர் திருக்கோவிலின் தலைமை கட்டடக் கலைஞரான சந்திரகாந்த் சோம்புரா, ஆமதாபாத்தில் உள்ள புகழ்பெற்ற திருக்கோவில் கட்டடக் கலைஞர்கள் வம்சாவளியைச் சார்ந்தவராவார். பரம்பரை பரம்பரையாக, சோம்புரர்கள் இருநூற்றுக்கும் மேற்பட்ட கோவில்களை வடிவமைத்துள்ளனர். அதில் சோமநாதர் திருக்கோவில், சுவாமிநாராயணன் திருக்கோவில், அக்ஷர்தாம் வளாகம் மற்றும் பிர்லா கோவில் போன்றவை அடங்கும்.
- அயோத்தி இராமர் திருக்கோவிலானது இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை சிறப்பிக்கும் வகையில், தனித்துவமான சிற்பங்கள், கம்பீரமான கோபுரங்கள் மற்றும் புனிதமான கருவறைகளைக் காட்சிப்படுத்தும் நாகரா கட்டடக்கலையைச் சார்ந்துள்ளது.
11. ‘கோலே மேளா’ கொண்டாடப்படுகிற மாநிலம் அல்லது யூனியன் பிரதேசம் எது?
அ. ஜம்மு & காஷ்மீர்
ஆ ஹரியானா
இ. ஹிமாச்சல பிரதேசம்
ஈ. பஞ்சாப்
- ஜம்மு-காஷ்மீரின் உதம்பூரில் உள்ள ஜெகந்நாதர் திருக்கோவிலில் ஆண்டுக்கிருமுறை, ‘கோலே மேளா’ திருவிழா நடைபெறுகிறது. இந்தத் திருவிழா, உதம்பூர் மாவட்டத்தையும் அதைச்சுற்றியுள்ள பக்தர்களையும் ஒன்றிணைக்கும் கலாச்சார மற்றும் மதம்சார் கொண்டாட்டமாகும். இந்தத் திருவிழா பக்தர்களிடையே சமூக உணர்வை வளர்க்கும் ஓர் ஆன்மீக குழுமுமிடமாக உள்ளது.
12. இந்தியாவின் எந்த நகரத்தில் வில்லிங்டன் தீவு அமைந்துள்ளது?
அ. பம்பாய்
ஆ. கொச்சி
இ. கட்ச்
ஈ. சென்னை
- கொச்சி துறைமுக கூட்டு தொழிற்சங்க மன்றமானது அண்மையில் இந்தியப் பிரதமரிடம் வில்லிங்டன் தீவின் பழம் பெருமையை மீட்டெடுக்க வேண்டுகோள்விடுத்தது. பிரிட்டன் அரசப்பிரதிநிதி வில்லிங்டன் பெயரால் வழங்கப்படும் இந்தத் தீவு, மனிதனால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய தீவுகளுள் ஒன்றாகும். மேலும், கொச்சியில் ஒரு முக்கிய வணிகமையமாகவும் இது செயல்படுகிறது. சிறந்த உணவகங்களைக் கொண்டுள்ள இந்தத் தீவு, கொச்சி கடற்படைத்தளம், மத்திய மீன்வளத் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் கொச்சி துறைமுகம் ஆகியவற்றையும் தன் அகத்தே கொண்டுள்ளது.
13. NASAஇன், ‘இன்ஜெஞூட்டி’ என்ற செவ்வாய்க்கோளுக்கான ஹெலிகாப்டரின் முதன்மை நோக்கம் என்ன?
அ. செவ்வாய்க்கோளில் புவியியல் ஆய்வுகளை நடத்துதல்
ஆ. செவ்வாய்க்கோளில் பறப்புச் சோதனைகளை மேற்கொள்வது
இ. பகுப்பாய்விற்காக மண் மாதிரிகளைச் சேகரித்தல்
ஈ. செவ்வாய்க்கோளில் பழங்கால வாழ்வின் அடையாளங்களைத் தேடுவது
- NASA செவ்வாய்க்கோளில் உள்ள அதன் ‘இன்ஜெஞூட்டி’ ஹெலிகாப்டருடன் மீண்டும் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. பெர்ஸிவெரன்ஸ் தரையூர்தியில் ஏவப்பட்ட, ‘இன்ஜெஞூட்டி’ 2021 ஏப்.19 அன்று புவியைத் தவிர பிறிதொரு கோளில் இயங்கும், பறப்பூர்தி என்ற வரலாற்றுச் சாதனையை உருவாக்கியது. தானே இயங்கும் ஆற்றல்கொண்ட இந்த ஹெலிகாப்டர், பத்தடி உயரத்திற்குப் பறந்து, முப்பது வினாடிகள் வட்டமிட்டு, 39.1 வினாடிகளில் தரையிறங்கியது. செவ்வாய்க்கோளின் சவாலான வளிமண்டலத்தில் பறக்கவியலும் என்பதை இது உறுதிப்படுத்தியது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. வாங்கல் இரயில் நிலையம் மூடல்.
சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சேலம்-கரூர் இடையிலான வழித்தடத்தில் மோகனூர்-கரூர் இடையில் உள்ள வாங்கல் இரயில் நிலையம் ஜன.25 முதல் மூடப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. பயணிகள் இடையே போதிய வரவேற்பில்லாமை இதற்குக் காராணமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. குனோ தேசியப்பூங்காவில் பிறந்த மூன்று சிவிங்கிப்புலிக் குட்டிகள்.
மத்திய பிரதேச மாநிலம் குனோ தேசியப்பூங்காவில் பராமரிக்கப்படும், ‘ஜுவாலா’ என்னும் பெண் சிவிங்கிப்புலி 3 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தப்பூங்காவில் உள்ள மற்றொரு பெண் சிவிங்கிப்புலியான ‘ஆஷா’, அண்மையில் 3 மூன்று குட்டிகளை ஈன்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அழிந்துபோன இனமான சிவிங்கிப்புலிகளை மீண்டும் அறிமுகப்படுத்தும் பிரதமரின் லட்சியத்திட்டத்தின்கீழ், நமீபியாவில் இருந்து 8 சிவிங்கிப்புலிகள் (5 பெண், 3 ஆண்) கடந்த 2022 செப்டம்பர் மாதமும், தென்னாப்பிரிக்காவில் இருந்து 12 சிவிங்கிப்புலிகள் (7 ஆண், 5 பெண்) கடந்த ஆண்டு பிப்ரவரியிலும் கொண்டுவரப்பட்டு, குனோ தேசியப்பூங்காவில் விடப்பட்டன.
3. ஆஸ்கர் விருது பரிந்துரைப் பட்டியலில் இந்திய தந்தையின் கதை, ‘டூ கில் எ டைகர்’.
நடப்பாண்டு ஆஸ்கர் விருதின் சிறந்த ஆவணப்பட பிரிவுக்கான பரிந்துரைப்பட்டியலில், இந்திய கிராமத்தில் பாலியல் வன்கொடுமைக்குள்ளான மகளுக்காக தந்தையின் நீதிப்போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, ‘டூ கில் எ டைகர்’ ஆவணப்படம் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஆண்டு (2023) சிறந்த ஆவணப்பட பிரிவில், தமிழ்நாட்டின் முதுமலையைச் சேர்ந்த பொம்மன்-பெள்ளி யானைக்காப்பாளர் தம்பதியை மையப்படுத்தி எடுக்கப்பட்ட, ‘தி எலிஃபென்ட் விஸ்பெரர்ஸ்’ ஆஸ்கர் விருதுவென்றது.
ஓபன்ஹெய்மர் 13 பிரிவுகளில் தேர்வு:
ஹாலிவுட் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில், ‘அணுகுண்டுகளின் தந்தை’ என்றழைக்கப்படும் ஜெ இராபர்ட் ஓபன்ஹெய்மரின் வாழ்க்கை வரலாற்றுப்படமான, ‘ஓபன்ஹெய்மர்’, சிறந்த படம், சிறந்த இயக்குநர் உட்பட 13 பிரிவுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிந்துரைப் பட்டியலில் முன்னிலை வகிக்கிறது.
தமிழ்நாட்டில் சூரியவொளி மூலம் 7372 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
4. 30 வயதைக்கடந்த 5.1% பெண்களுக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அறிகுறி!
தமிழ்நாட்டின் நான்கு (ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி) மாவட்டங்களில் 30 வயதைக்கடந்த பெண்களுக்கு பொது சுகாதாரத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் 5.1 சதவீதம் பேருக்கு கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
5. 300 திருநங்கைகளுக்கு திறன் பயிற்சி திட்டம் தொடக்கம்.
சென்னையில் 300 திருநங்கைகளுக்கு வாழ்வாதார மேம்பாட்டு திறன்பயிற்சி திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தொடங்கியது. சகோதரன் அமைப்பு மற்றும் CGI அமைப்பு சார்பில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்கீழ் திருநங்கைகளுக்கு தகவல்-தொழில்நுட்பம், கணினிசார் திறன் பயிற்சிகள், தொழில்முனைவதற்கான வழிகாட்டுதல்கள், வேலைவாய்ப்புகள் உள்ளிட்டவை வழங்கப்படவுள்ளன.
6. மூன்று தமிழறிஞர்களுக்கு சிலை – மணிமண்டபம்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
‘தமிழ் அகராதியின் தந்தை’ எனப்போற்றப்படும் வீரமாமுனிவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் தூத்துக்குடி மாவட்டம் காமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள புனித பரலோக மாதா ஆலய வளாகத்தில் `1 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டதுடன், திருக்குறளுக்கு உரை, பாடல்கள், கவிதைகள் என எழுதி தமிழர்களை வீறுகொண்டு எழச்செய்த நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார் நினைவாக நாமக்கல் நகரிலேயே `20 இலட்சம் மார்பளவுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகந்தழுவி நேசம்பாராட்டிய புலவர் கணியன் பூங்குன்றனாருக்கு, சிவகங்கை மாவட்டம் மகிபாலன்பட்டியில் நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய இம்மூன்றையும் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அடிக்கல் நாட்டுதல்: சுதந்திரப் போராட்டத்தில் தீரத்துடன் ஈடுபட்ட, ‘வீரத்தாய்’ குயிலிக்கு சிவகங்கை மாவட்டம் இராகினிப்பட்டியில் சிலையும், சுதந்திரப் போராட்ட வீரர் வாளுக்குவேலி அம்பலத்துக்கு சிவகங்கை நகரம்பட்டியில் சிலையும், மற்றொரு சுதந்திரப் போராட்ட வீரர் வெண்ணி காலாடிக்கு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் கிராமத்தில் சிலையும் அமைக்கப்படவுள்ளது. இத்துடன், அண்ணல் காந்தியடிகள், பொதுவுடைமை சிந்தனையாளர் ஜீவா ஆகியோர் சிவகங்கை மாவட்டம் சிராவயல் கிராமத்தில் சந்தித்துப்பேசினர். அந்தச்சந்திப்பின் நினைவாக, `3 கோடியில் அரங்கம் அமைக்கப்படவுள்ளது. இவற்றுக்கு தலைமைச் செயலகத்தில் இருந்தே காணொலி வழியாக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
7. பிகார் மாநில முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்குருக்கு இந்திய மாமணி (பாரத இரத்னா).
மறைந்த பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் பொதுவுடைமைவாத தலைவருமான கர்பூரி தாக்குருக்கு பாரத இரத்னா விருது வழங்கப்படவுள்ளதாக குடியரசுத்தலைவர் மாளிகை அறிவித்தது.
காங்கிரஸ் அல்லாத முதல் பொதுவுடைமைவாத தலைவராக அறியப்படுபவரும் மக்கள் தலைவர் (ஜனநாயக்) எனப் போற்றப்படுபவருமான கர்பூரி தாக்குர் 1924 ஜன.24இல் பிறந்தார். 1942 முதல் 1945 வரை நடைபெற்ற சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அவர் சிறையிலடைக்கப்பட்டார். 1970 டிசம்பர் முதல் 1971 ஜூன் வரையிலும் 1977 டிசம்பர் முதல் 1979 ஏப்ரல் வரையிலும் பிகார் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த இவர், பிகார் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட முங்கேரி லால் ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தினார். 1988 பிப்.17ஆம் தேதி கர்பூரி தாக்குர் காலமானார்.