Tnpsc Current Affairs in Tamil – 24th April 2024
1. அண்மையில், 2024 – உலக பத்திரிகை அறக்கட்டளையின் நிழற்பட விருதை வென்றவர் யார்?
அ. ரொனால்ட் ஸ்கீமிட்
ஆ. முகமது சலேம்
இ. கயின் லூயிஸ்
ஈ. ரூபன் சோட்டோ
- காஸா துயரத்தைப் பிரதிபலிக்கும் நிழற்படம், உலக பத்திரிகை நிழற்பட அறக்கட்டளையால் இந்த ஆண்டுக்கான சிறந்த நிழற்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிழற்படக்கலைஞர் முகமது சலேம் கடந்த அக்.17இல் எடுத்துள்ளார். அந்தப்படத்தில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித்தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த குழந்தையின் உடலை அவரது உறவினர் சோகத்துடன் ஏந்தியுள்ள காட்சி இடம்பெற்றுள்ளது. அந்தப் படம், காஸா போரின் பாதிப்பை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதாக விருதுக்கான தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.
2. சமீபத்தில், “உலக இராணுவ செலவினங்களின் போக்குகள் – 2023” என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. நேட்டோ
ஆ. ஐக்கிய நாடுகள்
இ. ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம்
ஈ. உலக வங்கி
- 1966இல் நிறுவப்பட்ட SIPRIஇன், “உலக இராணுவ செலவினங்களின் போக்குகள், 2023” அறிக்கை, உலகளாவிய இராணுவ செலவினங்களை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக $83.6 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான இராணுவ செலவுடன் இந்தியா நான்காமிடத்தில் உள்ளது. நேட்டோ நாடுகளின் மொத்தம் இராணுவ செலவினம் $1341 பில்லியன் ஆகும்; இது உலக செலவில் 55% ஆகும். ரஷ்யாவின் உக்ரைன் படையெடுப்பு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு இடையே உலகின் மொத்த இராணுவ செலவு $2443 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. SIPRI மோதல் ஆராய்ச்சி, ஆயுதங்கள், ஆயுதக்கட்டுப்பாடு மற்றும் ஆயுதக்குறைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
3. அண்மையில், 2024 – பெருங்கடல் தசாப்த மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. பார்சிலோனா, ஸ்பெயின்
ஆ. பாரிஸ், பிரான்ஸ்
இ. புது தில்லி, இந்தியா
ஈ. மாஸ்கோ, ரஷ்யா
- பார்சிலோனாவில் நடைபெற்ற 2024 – பெருங்கடல் தசாப்த மாநாட்டில், ஆழ்கடல் சுற்றுச்சூழல் புரிதலுக்கான பிராந்திய அடிப்படையிலான கடல் கண்காணிப்பு மையம் குறித்து இந்தியா முன்மொழிந்தது. புவி அறிவியல் செயலர் M இரவிச்சந்திரன் தலைமையிலான குழுவினர், இதுகுறித்து வலியுறுத்தினர். ஏப்ரல் 10 முதல் 12 வரை நடைபெற்ற இந்த மாநாடு, ஐநா பெருங்கடல் அறிவியல் இலக்குகளை (2021-2030) நோக்கிய முன்னேற்றத்தை மதிப்பிடுவதை நோக்கமாகக்கொண்டது. ஸ்பெயின், UNESCOஉடன் இணைந்து, “Delivering the science we need for the ocean we want” என்ற கருப்பொருளின் கீழ் இந்நிகழ்வை நடத்தியது.
4. 2024 – உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Indigenous Languages
ஆ. Read Your Way
இ. To share a story
ஈ. Read, so you never feel low
- வாசிப்பு மற்றும் நூல் வெளியீட்டை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுதோறும் ஏப்ரல்.23 அன்று உலக நூல் மற்றும் பதிப்புரிமை நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாளுக்கான நிகழ்வுகளை UNESCO உலகம் முழுவதும் நடத்துகிறது. “Read Your Way” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். இக்கருப்பொருள் வாசிப்பின் மகிழ்வை எடுத்துக்காட்டுகிறது. 1995இல் நிறுவப்பட்ட இந்நாள், ஷேக்ஸ்பியர் மற்றும் செர்வாண்டஸ் போன்ற இலக்கிய ஜாம்பவான்களை கௌரவிக்கிறது. ஏப்.23 செர்வாண்டஸ் மற்றும் ஷேக்ஸ்பியரின் நினைவு நாளைக் குறிக்கிறது.
5. ஆசியாவின் காலநிலை – 2023 என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு
ஆ. உணவு மற்றும் உழவு அமைப்பு
இ. உலக வானிலை அமைப்பு
ஈ. உலக சுகாதார நிறுவனம்
- ஆசியாவின் காலநிலை-2023 என்ற அறிக்கையின் 4ஆவது பதிப்பை NMHS, RCCகள் மற்றும் ஐநா முகமைகள் உட்பட பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து உலக வானிலை அமைப்பு (WMO) வெளியிட்டுள்ளது. இது முக்கிய தட்பவெப்பநிலை குறிகாட்டிகள், தாக்கங்கள் மற்றும் இடர்கள், இயற்பியல் அறிவியல், சமூக-பொருளாதாரம் மற்றும் கொள்கை அம்சங்களை எடுத்துரைக்கிறது. 2023ஆம் ஆண்டில், ஆசியா அதன் இரண்டாவது மிகவுயர்ந்த சராசரி வெப்பநிலை, தீவிர வெப்ப நிகழ்வுகள் மற்றும் கடல்-மேற்பரப்பு வெப்பநிலை முரண்களை பதிவுசெய்தது. நீர் வானிலைசார் இடர்கள் ஈராயிரத்துக்கும் மேற்பட்ட இறப்புகளுக்கு வழிவகுத்துள்ளதாக இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
6. அண்மையில் ஓய்வு பெறுவதாக அறிவித்த சௌரவ் கோசல் என்பவருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
அ. ஸ்குவாஷ்
ஆ. டேபிள் டென்னிஸ்
இ. செஸ்
ஈ. பூப்பந்து
- இந்தியாவின் தலைசிறந்த ஸ்குவாஷ் வீரரான சௌரவ் கோசல், 21 ஆண்டுகால தொழிற்முறை வாழ்க்கைக்குப் பிறகு ஸ்குவாஷிலிருந்து ஓய்வுபெற்றார். 2003இல் தொடங்கிய அவரது ஸ்குவாஷ் வாழ்க்கை, 10 PSA பட்டங்களைப் பெற்று 18 இறுதிப்போட்டிகளை அவருக்கு பெற்றுத்தந்தது. அவரது கடைசி வெற்றி 2021 மலேசிய ஓபனில் நிகழ்ந்தது. 2019இல் உலகின் No:10ஆவது இடத்தைப்பிடித்த சௌரவ், இந்திய தரவரிசையில் மிகவுயர்ந்த இடத்தைப் பிடித்தார். 2004இல் ஜூனியர் பிரிவில் உலகின் No:1 இடத்தைப் பிடித்த முதல் இந்தியர் மற்றும் ஆடவர் ஒற்றையர் பிரிவில் முதல் பத்து இடங்களை எட்டிய ஒரே வீரர் இவராவார்.
7. முல்லைப்பெரியாறு அணை அமைந்துள்ள இடம் எது?
அ. கேரளா
ஆ. கர்நாடகா
இ. கோவா
ஈ. ஆந்திர பிரதேசம்
- முல்லைப்பெரியாறு நீர்ப்பிடிப்புப்பகுதி தொடர்பான கேரள மாநிலத்தின் சர்வே ஆப் இந்தியா அறிக்கைக்கு தமிழ்நாடு எதிர்ப்புத் தெரிவித்தது தொடர்பான சட்டப்பூர்வ வழக்குகளை ஜூலை.10ஆம் தேதி இறுதிசெய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. கேரளாவில் பிரம்மாண்ட மகிழுந்து நிறுத்துமிடம் கட்டியதில் தொடங்கிய இந்தச்சிக்கல், தமிழ்நாட்டை கேரளாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக நிரந்தரத் தடைவிதிக்கத் தூண்டியது. கடந்த 2023இல் பெரியாறு புலிகள் சரணாலயத்தில் கேரளத்தின் திட்டங்களுக்குத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அனுமதி கொடுத்ததை அடுத்து மோதல் தீவிரமடைந்தது. முல்லைப்பெரியாறு அணை என்பது கேரளாவில் பெரியாற்றின்மீது 1887 மற்றும் 1895க்கு இடையில் கட்டப்பட்ட அமைந்துள்ள ஓர் அணையாகும்.
8. விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் புதுமைகளை அதிகரிக்கும் நோக்கத்திற்காக ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் அண்மையில் எந்த நாட்டுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
அ. ரஷ்யா
ஆ. இஸ்ரேல்
இ. பிரான்ஸ்
ஈ. ஜப்பான்
- இந்தியாவின் காந்திநகரில் அமைந்துள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகம் மற்றும் பிரான்ஸின் ஸ்டார்பர்ஸ்ட் ஏரோஸ்பேஸ் ஆகியவை விண்வெளி, பாதுகாப்பு மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பில் புதுமைகளை அதிகரிப்பதற்காக ஒரு குறிப்பிடத்தக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இது இந்தியா-பிரான்ஸ் உத்திசார்ந்த கூட்டாண்மையுடன் இணைகிறது மற்றும் 100 மில்லியன் யூரோ துணிகர மூலதன நிதியத்தை உருவாக்குவதை உள்ளடக்கியது. இந்திய ஸ்டார்ட்அப்களும் ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆதரவைப் பெறும்.
9. அண்மையில், இந்திய விண்வெளி சங்கத்தின் (ASI) மதிப்புமிக்க ஆர்யபட்டா விருதைப் பெற்றவர் யார்?
அ. G சதீஷ் ரெட்டி
ஆ. ராம் நரேன் அகர்வால்
இ. S சோம்நாத்
ஈ. பவுலூரி சுப்பா ராவ்
- ஆனந்த் டெக்னாலஜிஸின் நிறுவனர், தளமைச் செயலதிகாரி மற்றும் தலைவர் பவுலூரி சுப்பா ராவ், இந்தியாவில் விண்வெளித்துறையில் அவர் செய்த சிறந்த பங்களிப்புகளுக்காக இந்தியாவின் ஏரோநாட்டிக்கல் சொசைட்டி (ASI) மூலம் மதிப்புமிக்க, ‘ஆர்யபட்டா விருது’ வழங்கி கௌரவிக்கப்பட்டார். கூடுதலாக, விண்வெளி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறைகளில் அவரின் குறிப்பிடத்தக்க தாக்கத்தை அங்கீகரித்து, ASIஆல், ‘பிரபலமான பங்காளர்’ எனவும் அறிவிக்கப்பட்டார்.
10. அண்மையில், எந்த நாட்டின் அறிவியலாளர்கள் நொடிகளில் மின்னேற்றம் செய்யக்கூடிய சோடியம்-அயன் மின்கலத்தை உருவாக்கியுள்ளனர்?
அ. சீனா
ஆ. தென் கொரியா
இ. இந்தியா
ஈ. ஜப்பான்
- தென்கொரிய ஆராய்ச்சியாளர்கள் உயராற்றல்கொண்ட ஒரு கலப்பின சோடியம்-அயன் மின்கலத்தை உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். தொழில்நுட்பத்திற்கான கனிம தேவையை மாற்றியமைக்கும் இந்த மின்கலம் நொடிகளில் மின்னேற்றம் பெறுகிறது. சோடியம், லித்தியத்தைவிட கிட்டத்தட்ட 1000 மடங்கு அதிகமாக கிடைக்கிறது. இது மலிவான, அணுகக்கூடிய ஆற்றல் சேமிப்பிற்கு உறுதியளிக்கிறது.
11. அண்மையில், அலிகார் இசுலாமிய பல்கலைக்கழகத்தின் முதல் பெண் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. நைமா கதூன்
ஆ. பாத்திமா ஷேக்
இ. ஃபர்ஹத் ஹாஷ்மி
ஈ. குஷ்பூ மிர்சா
- பேராசிரியர் நைமா கதூன் அலிகார் இசுலாமிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அந்தப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் இப்பதவியை வகிக்கும் முதல் பெண் இவராவார். கல்வி அமைச்சகத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த நியமனத்திற்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு அங்கீகாரம் வழங்கினார். தற்போது அலிகார் இசுலாமிய பல்கலையின் மகளிர் கல்லூரியின் முதல்வராக இருக்கும் நைமா கதூன், ஐந்தாண்டுகள் அல்லது அவருக்கு 70 வயது வரும்வரை அப்பதவியில் இருப்பார்.
12. 2024 – ACC பரகானோ ஆசிய சாம்பியன்ஷிப்பில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்ற பிராச்சி யாதவ் சார்ந்த மாநிலம் எது?
அ. ஜார்கண்ட்
ஆ. உத்தர பிரதேசம்
இ. மத்திய பிரதேசம்
ஈ. ஹரியானா
- மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரைச் சேர்ந்த முன்னணி பாரா படகோட்டியான பிராச்சி யாதவ், ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ACC பாராகானோ ஆசிய சாம்பியன்ஷிப் – 2024இல் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார். அவர் பெண்கள் KL2 மற்றும் பெண்கள் VL2 பிரிவுகளில் வெற்றி பெற்றார். பிராச்சி யாதவ், விளையாட்டில் தனது சிறந்த சாதனைகளுக்காக கடந்த 2023ஆம் ஆண்டில் மதிப்புமிக்க அர்ஜுனா விருதுடன் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு: ஏப்.29இல் தொடக்கம்.
தமிழ்நாட்டில் ஏப்.29 முதல் மே.01 வரை 3 நாள்கள் நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி நடைபெறும் என வனத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் மாநில விலங்காகவும், அழிந்துவரும் உயிரினங்களில் ஒன்றாகவும் உள்ள நீலகிரி வரையாடுகளை பாதுகாக்கும் பொருட்டு 2022ஆம் ஆண்டு, ‘நீலகிரி வரையாடு’ திட்டத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு, கேரள வனப்பகுதிகளில் நான்கு புலிகள் காப்பகங்கள், பதினான்கு வனக்கோட்டங்களில் அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றாக உள்ள நீலகிரி வரையாடு கணக்கெடுப்பு பணி நடைபெறவுள்ளது.