Tnpsc Current Affairs in Tamil – 24th & 25th December 2023
1. TEMPO (Tropospheric Emissions: Monitoring of Pollution sensor) என்ற செயற்கைக்கோளை ஏவிய நிறுவனம் எது?
அ. ISRO
ஆ. JAXA
இ. NASA
ஈ. ROSCOSMOS
- NASAஇன் TEMPO (Tropospheric Emissions: Monitoring of Pollution sensor) செயற்கைக்கோளானது புவிநிலைச் சுற்றுப்பாதையில் பூமியைக் கண்காணிக்கும் ஒரு செயற்கைக்கோள் ஆகும். இந்தச் செயற்கைக்கோள் வட அமெரிக்கா முழுவதும் மாசுபடுத்தும் பொருட்கள் குறித்த அளவீடுகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. TEMPO ஆனது கனடாவின் கரியெண்ணெய் மணல் பகுதியிலிருந்து யுகடான் தீபகற்பம் வரை பரந்த பகுதியை உள்ளடக்கி கண்காணிக்கும். இது காற்று மாசுபாட்டை முழுமையாக கண்காணிக்கும் திறனை மேம்படுத்தும்.
2. நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதாவின்கீழ், குற்றவியல் வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முன்மொழியப்பட்ட அதிகபட்ச காலக்கெடு என்ன?
அ. 270 நாட்கள்
ஆ. 180 நாட்கள்
இ. 270 நாட்கள்
ஈ. 365 நாட்கள்
- நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட புதிய பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, நீதி வழங்கலை விரைவுபடுத்துவதற்கான விதிகளின் ஒருபகுதியாக, குற்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதை 180 நாட்களுக்கு மேல் தாமதப்படுத்த முடியாது என்று முன்மொழிகிறது. கடுமையான குற்றங்களுக்கு தடயவியல் குழுவின் கட்டாய வருகை, அனைத்து வழக்கு ஆவணங்களையும் முப்பது நாட்களுக்குள் சமர்ப்பித்தல் மற்றும் 90 நாட்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் இல்லாத பட்சத்தில் விசாரணையை முடிக்கவும் இது விதிகொண்டுள்ளது.
3. 2023ஆம் ஆண்டுக்கான ஆங்கிலத்துக்கான சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றவர் யார்?
அ. அருந்ததி சுப்ரமணியம்
ஆ. ஜும்பா லஹிரி
இ. நீலம் சரண் கௌர்
ஈ. அமிதவ் கோஷ்
- 2023ஆம் ஆண்டுக்கான ஆங்கிலத்துக்கான சாகித்திய அகாதெமி விருதை தனது, ‘ரிக்விம் இன் ராக ஜான்கி’ என்ற புதினத்துக்காக நீலம் சரண் கௌர் பெற்றார். ஆங்கிலேயர் கால அலகாபாத்தில் நிகழ்வதாக எழுதப்பட்டுள்ள இந்த வரலாற்றுப் புனைவு, புகழ்பெற்ற பாடகி ஜான்கி பாய் இலாஹபாடியின் வாழ்க்கையை ஆராய்கிறது. அருந்ததி சுப்ரமணியம் தனது கவிதை நினைவேடான, ‘ஆதி சங்கராச்சாரியார்: இந்து மதத்தின் மிகச்சிறந்த சிந்தனையாளர்’ என்ற நூலுடன் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.
4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘Pantoea tagorei’ என்றால் என்ன?
அ. மீன்
ஆ. பாக்டீரியா
இ ஆமை
ஈ. குரங்கு
- இரவீந்திரநாத் தாகூரின் வேளாண்மை ஊக்குவிப்பு முயற்சிகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், விசுவபாரதி பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், தாவர வளர்ச்சியை ஊக்குவிக்கும், ‘Pantoea tagorei‘ என்ற ஒரு புதிய பாக்டீரிய இனத்தை கண்டறிந்தனர். இப்பாக்டீரியா மண்ணின் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்தும் தனித்துவமான பண்புநலன்களைக் கொண்டுள்ளது.
5. ‘பூமி இராசி’ என்ற வலைத்தளத்தைத் தொடங்கியுள்ள அமைச்சகம் எது?
அ. உழவு அமைச்சகம்
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ. சாலை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
ஈ. நிதி அமைச்சகம்
- அண்மையில், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் (NHAI) 1467 திட்டங்கள், ‘பூமி இராசி’ வலைத் தளத்தின்கீழ் கொண்டுவரப்பட்டன. இந்தியாவில் நெடுஞ்சாலை (NH) உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும், நிலம் கையகப்படுத்துதலுக்கான இழப்பீட்டுத் தொகையை வழங்குவதற்கும் நிலம் கையக -ப்படுத்துதல் அறிவிப்புகளை இணையவழியில் செயலாக்குவதற்கான ஒற்றைப்புள்ளி தளத்தை வழங்குவதே இந்த ‘பூமி இராசி’ வலைத்தளத்தின் நோக்கமாகும்.
6. சர்வதேச கீதை கருத்தரங்கு மற்றும் கீதை மகோத்சவ நிகழ்வின் முதன்மை பங்காளராக உள்ள மாநிலம் எது?
அ. ஹரியானா
ஆ. உத்தர பிரதேசம்
இ. அஸ்ஸாம்
ஈ. மத்திய பிரதேசம்
- 2023 டிச.17 அன்று, ஹரியானாவின் குருக்ஷேத்திரத்தில் உள்ள பிரம்ம சரோவரில் சர்வதேச கீதை கருத்தரங்கு மற்றும் கீதை மகோத்சவத்தை இந்தியத்துணைக்குடியரசுத்தலைவர் ஜக்தீப் தன்கர் தொடக்கிவைத்தார். இந்த ஆண்டின் கருப்பொருள் – “வசுதைவ குடும்பகம்: ஸ்ரீமத் பகவத்கீதை மற்றும் உலகளாவிய ஒற்றுமை” என்பதாகும். சர்வதேச கீதை மகோத்சவத்தின் நிகழ்வுகள் டிச.07 முதல் டிச.24 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் முக்கிய நிகழ்வு டிச.17 முதல் டிச.24 வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வின் முதன்மை பங்காளராக அஸ்ஸாம் மாநிலம் உள்ளது.
7. 2023 – மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை வென்ற பல்கலைக்கழகம் எது?
அ. கௌதம் புத்தர் பல்கலைக்கழகம்
ஆ. குருநானக் தேவ் பல்கலைக்கழகம்
இ. தில்லி பல்கலைக்கழகம்
ஈ. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம்
- அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழகம் 2023ஆம் ஆண்டுக்கான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை 25ஆவது முறையாக வென்றது. தேசிய, சர்வதேச மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் விளையாட்டுகளில் ஒட்டுமொத்தமாக சிறந்த செயல்திறன் கொண்ட பல்கலைக்கழகத்திற்கு இந்தியக் குடியரசுத்தலைவரால் ஆண்டுதோறும் இந்தக் கோப்பை வழங்கப்படுகிறது.
8. பின்வருவோருள் யாரின் நினைவாக டிச.21 அன்று முதல் உலக கூடைப்பந்து நாள் கொண்டாடப்பட்டது?
அ. டாக்டர் ஜேம்ஸ் நைஸ்மித்
ஆ. மைக்கேல் ஜோர்டன்
இ. கரீம் அப்துல்-ஜப்பார்
ஈ. மேஜிக் ஜான்சன்
- ஆக.23 அன்று FIBA உலகக்கோப்பையின்போது ஐநா அவையால் அறிவிக்கப்பட்ட உலக கூடைப்பந்து நாளை NBA நினைவுகூர்ந்துள்ளது. 1891ஆம் ஆண்டு ஸ்பிரிங்ஃபீல்ட் YMCAஇல் Dr. ஜேம்ஸ் நைஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை அறிமுகப்படுத்தியதன் ஆண்டு நிறைவைக்குறிக்கும் இந்நாள், ஆண்டுதோறும் டிச.21 அன்று கடைப்பிடிக்கப்படும்.
9. யாருக்கு 2023ஆம் ஆண்டுக்கான, ‘வீர் சக்ரா’ வழங்கப்பட்டது?
அ. தினேஷ் பிரபாகர்
ஆ. பெனாய் ராய் சௌத்ரி
இ. யோகேந்திர சிங் யாதவ்
ஈ. மேற்கூறிய எதுவுமில்லை
- அண்மையில் காலமான துணை அட்மிரல் பெனாய் ராய் சௌத்ரிக்கு, ‘வீர் சக்ரா’ விருது வழங்கப்பட்டது. 1971ஆம் ஆண்டு நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின் நாயகன் அவர். இந்தப் போரில், பெனாய் ராய் சௌத்ரி ஐஎன்எஸ் விக்ராந்தில் பொறியாளராக நியமிக்கப்பட்டிருந்தார். ‘வீர் சக்ரா’ விருது என்பது போர்க்கால வீரதீரச்செயலுக்காக வழங்கப்படும் விருதாகும். தற்போதைய துணை அட்மிரல் தினேஷ் பிரபாகர் இந்திய கடற்படை சார்பாக, ‘வீர் சக்ரா’ பெற்றுக்கொண்டார். கேப்டன் யோகேந்திர சிங் யாதவ், 2022ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க, ‘பரம்வீர் சக்ரா’ விருதைப் பெற்றுக்கொண்டார். கேப்டன் யோகேந்திர சிங், ‘பரம் வீர் சக்ரா’ விருதை வென்ற இளவயது வீரராவார்.
10. அண்மையில் எந்த அமைப்புக்கு, 2023ஆம் ஆண்டுக்கான, ‘லீஃப் எரிக்சன் லூனார் பரிசு’ வழங்கப்பட்டது?
அ. ISRO
ஆ. NASA
இ. JAXA
ஈ. ROSCOSMOS
- ஐஸ்லாந்தின் ஹுசாவிக்கில் உள்ள ஆய்வு அருங்காட்சியகம் ISROஇன் சந்திரயான்-3 திட்டத்திற்காக 2023ஆம் ஆண்டுக்கான லீஃப் எரிக்சன் லூனார் பரிசை ISROவுக்கு வழங்கியுள்ளது. நோர்ஸ் ஆய்வாளர் லீஃப் எரிக்சனின் நினைவாக ஐஸ்லாந்தின் ஹுசாவிக் நகரத்தில் உள்ள ஆய்வு அருங்காட்சியகம் இந்த விருதை வழங்கியது. இந்த விருது கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆகஸ்ட்.23 அன்று, நிலவில் வெற்றிகரமாக தடம்பதித்த நான்காவது நாடாக இந்தியா ஆனது. இஸ்ரோ சார்பில் இந்திய தூதர் பாலசுப்ரமணியன் ஷியாம் இந்த விருதை பெற்றுக்கொண்டார்.
11. 2023ஆம் ஆண்டுக்கான 11ஆவது FICCI நீர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட அமைப்பு எது?
அ. ஜல் சக்தி அமைச்சகம்
ஆ. NTPC கான்டி
இ. சுரங்க அமைச்சகம்
ஈ. மேற்கூறிய எதுவுமில்லை
- “தொழிற்துறை நீர் பயன்பாட்டுத் திறன்” பிரிவில் 2023ஆம் ஆண்டுக்கான 11ஆவது FICCI நீர் விருது வழங்கி NTPC கான்டி கௌரவிக்கப்பட்டுள்ளது. NTPC கான்டியின் வெற்றிக்கு பங்களிக்கும் ஒரு முக்கிய காரணி அதன் வலுவான கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்பாகும். இது கழிவுநீரை சுத்திகரிக்க அதிநவீன தொழினுட்பங்களைப் பயன்படுத்துகிறது.
12. 2023ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் பாசுகிநாத் ஜா சார்ந்த மொழி எது?
அ. ஹிந்தி
ஆ. மைதிலி
இ. போஜ்புரி
ஈ. குஜராத்தி
- 2023 டிசம்பர்.21 அன்று, சாகித்திய அகாதெமி, 2023ஆம் ஆண்டிற்கான சாகித்திய அகாதெமி விருதை மைதிலி மொழி எழுத்தாளர் பாசுகிநாத் ஜா அவர்களுக்கு அவரது மைதிலி மொழி கட்டுரைத்தொகுப்பான, “போத்-சங்கேதன்” -க்காக வழங்குவதாக அறிவித்தது. மைதிலி இலக்கியவாதி பாசுகிநாத் ஜா, மைதிலி மொழியில், வித்யாபதி காவ்யா லோச்சன் (செவ்வியல் விமர்சனம்), அனுஷிலன்-அவபோத் (விமர்சன ஆய்வு மற்றும் கட்டுரைத்தொகுப்பு), பரிவாஹா (நவீன விமர்சனக் கட்டுரைத்தொகுப்பு), போத சங்கேதன் (நூல்கள் எழுதிய அறிமுகங்களின் தொகுப்பு) உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
13. 2023 – பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப் போக்குவரத்துக்கான (LEADS) தரவரிசையில் கடலோர மாநிலங்களில் முதலிடம் வகிக்கிற மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. குஜராத்
இ. மகாராஷ்டிரா
ஈ. ஆந்திர பிரதேசம்
- வர்த்தகம் & தொழிற்துறை அமைச்சகத்தின் 2023 – பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப்போக்குவரவுக்கான (LEADS) தரவரிசையில், கடலோர மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு தனது, “சாதனையாளர்” என்ற நிலையைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது. முதன்முதலில் கடந்த 2018ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட LEADS, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை உட்கட்டமைப்பு, சேவைகள், மற்றும் இயக்கம் & ஒழுங்குமுறை சூழல் ஆகிய மூன்று முக்கியமான பரிமாணங்களைக்கொண்டு மதிப்பீடு செய்கிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. நடப்பாண்டில் குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டிய இந்திய பாரம்பரிய மருத்துவம்: ஆயுஷ் அமைச்சகம்.
நடப்பாண்டில் ஆயுஷ் அமைச்சகத்தின் இரு நிகழ்வுகள் அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்றன. இவ்வமைச்சகத்தின் முதல் சிந்தனை முகாம் ஆண்டின் தொடக்கத்தில் அஸ்ஸாம் காசிரங்கா தேசிய பூங்காவில் நடைபெற்றது. அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடப்பு ஆண்டில் நடைபெற்றது. நடப்பு ஆண்டின் 9ஆவது சர்வதேச யோகா நாளை முன்னிட்டு, “யோகாவின் பெருங்கடல் வளையம் – Ocean Ring of Yoga” என்ற தனித்துவமான அம்சம் நடத்தப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம் பாரம்பரிய மருத்துவம் குறித்த முதல் உலகளாவிய உச்சிமாநாடு குஜராத் தலைநகரம் காந்தி நகரில் உலக சுகாதார அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம், அதைச் செயல்படுவதற்கான உலக சுகாதார அமைப்பின் உறுதிப்பாட்டை வலியுறுத்தி, ‘குஜராத் பிரகடனம்’ வெளியிடப்பட்டது.
ஆயுஷ் விசா: ஆயுஷ் விசா மத்திய அரசால் நிகழாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய மருத்துவ முறைகளின்கீழ் சிகிச்சைபெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு சிறப்பு விசா அளிக்கப்பட்டது. இந்த ஆயுஷ் விசா மருத்துவப் பயணம் இந்தியாவை ஒரு மருத்துவ மையமாக மாற்றியது.
ஆயுஷ் அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள், உள்கட்டமைப்பு மேம்பாடு, பல்வேறு உச்சிமாநாடு ஆகியவற்றில் ‘ஆயுஷ் பர்வ்’ கண்காட்சி வடகிழக்குப்பிராந்தியத்தின் சமூக-பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை விரைவுபடுத்து -வதில் கணிசமான பங்களிப்பை வழங்கியது.
2. உள்நாட்டில் கட்டப்பட்ட, ‘INS இம்பால்’ போர்க்கப்பல் நாளை கடற்படையில் சேர்ப்பு.
உள்நாட்டில் கட்டப்பட்ட, ‘INS இம்பால்’ பிரமோஸ் ஏவுகணைதாங்கி போர்க்கப்பல் கடற்படையில் சேர்க்கப்படவுள்ளது. இந்தப் போர்க்கப்பல் 164 மீட்டர் நீளம்கொண்டது. 7,400 டன் பாரத்தை சுமந்துசெல்லும் திறன்கொண்ட இந்தக் கப்பல், மணிக்கு 56 கிமீக்கும் அதிகமான வேகத்தில் செல்லக்கூடியது. அணு, உயிரி, இரசாயனம் என மூன்று வகையான தாக்குதல்களிலும் போரிடக்கூடிய வகையில், கப்பலில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் தலைநகர் இம்பால், இந்தக் கப்பலின் பெயராக சூட்டப்பட்டுள்ளது. முதன்முதலாக போர்க்கப்பலுக்கு நாட்டின் வடகிழக்குப் பகுதியில் உள்ள நகரத்தின் பெயர்சூட்டப்பட்டுள்ளது. வடகிழக்கில் உள்ள நகரின் பெயரில் மிகப்பெரிய, இலக்கைத் தாக்கி அழிக்கும் நவீன போா்க்கப்பல் என்ற தனித்துவத்தை, INS இம்பால் கொண்டிருக்கும். கடந்த 1891ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலோ-மணிப்பூர் போர், கடந்த 1944ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி மணிப்பூரின் மொய்ராங் நகரில் முதல்முறையாக இந்திய தேசிய இராணுவ கொடியை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஏற்றியது என இந்திய சுதந்திரப் போராட்டத்தில், மணிப்பூர் செய்த தியாகங்கள் & பங்களிப்புகளுக்கு தகுந்த மரியாதை அளிக்கும் வகையில், கப்பலுக்கு இம்பால் எனப் பெயர்சூட்டப்பட்டுள்ளது.
3. நல்லாட்சி தினம்: அரசு ஊழியர்களுக்கான பயிற்சித்திட்டங்கள் இன்று தொடக்கம்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளான டிச.25 ஆண்டுதோறும் நல்லாட்சி தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அரசு ஊழியர்களுக்கான 3 புதிய பயிற்சித்திட்டங்களை மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கவுள்ளார்.
இத்தினத்தில், ‘iGOT (ஒருங்கிணைந்த அரசு இணையதள பயிற்சி) ‘கர்மயோகி’ தளத்தில் ‘எனது iGOT’, ‘கூட்டுத் திட்டங்கள்’ மற்றும் ‘நிர்வகிக்கும் திட்டங்கள்’ ஆகிய மூன்று புதிய அம்சங்களை அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைக்கவுள்ளார்.
My iGOT: அரசு அதிகாரிகளின் திறனை மேம்படுத்தி அமைச்சகங்கள், துறைகளின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுப்பதற்காக அவர்களின் தனிப்பட்ட முகப்புப் பக்கத்தில் பிரத்யேகமான இணைய பயிற்சியை வழங்கும் நோக்கில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கூட்டுத்திட்டங்கள்: இது வகுப்பறைக்கு நேரில்சென்று கற்கும் முறையை இணையவழி கற்றல்முறையுடன் ஒருங்கிணைக்கிறது. அதாவது பயிற்சி வகுப்புகளை இணைய வழியிலும் அல்லது வகுப்பறைக்கு நேரில் சென்றும் கற்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நிர்வகிக்கும் திட்டங்கள்: ஒவ்வொரு அமைச்சகத்தையும் துறையையும் நிர்வகிப்பதற்கு வெவ்வேறு விதமான அணுகுமுறை தேவைப்படுகிறது. எனவே iGOT கர்மயோகி தளத்திலிருந்து அந்தந்த அமைச்சகத்துக்கு தேவையான காணொலிகள், பகுதிகளை மட்டும் கற்பிப்பதே இதன் நோக்கமாகும்.
விகாஸ் திட்டம்: மத்திய தலைமை செயலகத்தில் நடுத்தர நிர்வாக அரசூழியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக ‘விகாஸ்’ என்ற புதிய கூட்டுத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.