Tnpsc Current Affairs in Tamil – 23rd February 2024
1. ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ், கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டத்தினை (ஹர் கர் ஜல்) 100 சதவீதம் (%) நிறைவேற்றிய இந்தியாவின் முதல் வடகிழக்கு மாநிலம் எது?
அ. அஸ்ஸாம்
ஆ. மணிப்பூர்
இ. அருணாச்சல பிரதேசம்
ஈ. சிக்கிம்
- ஜல் ஜீவன் இயக்கத்தின்கீழ் கிராமப்புற வீட்டுக் குடிநீர் வழங்கும் திட்டத்தினை 100% எட்டிய வடகிழக்கிந்தியாவின் முதல் மாநிலமாகவும், நாட்டிலேயே 10ஆவது மாநிலமாகவும் அருணாச்சல பிரதேச மாநிலம் மாறியுள்ளது. அம்மாநில முதலமைச்சர் பேமா கந்து, இதற்குப் பாடுபட்ட அருணாச்சல அணியின் அர்ப்பணிப்பை பாராட்டியதோடு, வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கு பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்தார். 2019 ஆகஸ்ட்.15 அன்று தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், 2024ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் விநியோகத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. பன்னாட்டு இராணுவப் பயிற்சியான, ‘சாந்தி பிரயாஸ் – IV’ ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
அ. விசாகப்பட்டினம்
ஆ. டாக்கா
இ. காத்மாண்டு
ஈ. மியான்மர்
- பன்னாட்டு இராணுவப் பயிற்சியான, ‘சாந்தி பிரயாஸ் – IV’ ஆனது சமீபத்தில் காத்மாண்டுவில் நடத்தப்பட்டது. இது உலகளாவிய அமைதிகாக்கும் முன்னெடுப்புகளுக்கான ஒரு பயிற்சியாகப் பார்க்கப்படுகிறது. உலக அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான கூட்டு அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில், ஐநா அமைதிகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ள 19 நாடுகளின் இராணுவப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். நேபாள இராணுவம் மற்றும் அமெரிக்க இந்தோ-பசிபிக் படைப்பிரிவுகள் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சியானது நேபாளத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான இராணுவ ஒத்துழைப்பை எடுத்துக்காட்டுகிறது.
3. அண்மையில், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிட் ஆனது சுகோய் போர் விமானத்தை மேம்படுத்துவதற்காக கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடன் கூட்டிணைந்தது?
அ. DRDO
ஆ. ISRO
இ. UNESCO
ஈ. CSIR
- ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனமானது (HAL) DRDO உடன் இணைந்து Su-30 MKI போர்விமானத்தை மேம்படுத்துவதற்காக `60,000 கோடி மதிப்பிலான திட்டத்தைத் தொடங்கவுள்ளது. இந்த முயற்சியானது மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் உள்நாட்டு அமைப்புகளை ஒருங்கிணைப்பதன்மூலம் திறன்களை மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்துகிறது.
4. அண்மையில் யாருக்கு பிரான்ஸின் மிகவுயரிய குடிமக்கள் விருதான ‘செவாலியர் விருது’ வழங்கப்பட்டது?
அ. இராஜ்நாத் சிங்
ஆ. சசி தரூர்
இ. நீரஜ் சோப்ரா
ஈ. L K அத்வானி
- எழுத்தாளரும் அரசியல்வாதியுமான சசி தரூருக்கு, உலகப் புரிதல் மற்றும் இந்தியாவிற்கும் உலகிற்கும் கணிசமான சேவைகளை நல்க தனது வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்ததற்காக, பிரான்சின் உயரிய குடிமக்கள் விருதான ‘செவாலியர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த 1802இல் நெப்போலியன் போனபார்ட்டால் நிறுவப்பட்ட இந்த விருது, தேசியத்தை கணக்கில்கொள்ளாது, விதிவிலக்கான சாதனைகளைப் புரிந்தோருக்கு பிரெஞ்சு அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது.
5. ஃபைஸ் ஃபசல் என்பாருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
அ. மல்யுத்தம்
ஆ. பூப்பந்து
இ. கால்பந்து
ஈ. கிரிக்கெட்
- விதர்பா கிரிக்கெட் வீரர் ஃபைஸ் ஃபசல் (38) அனைத்து வகையான விளையாட்டுகளிலிருந்தும் ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். விதர்பா கிரிக்கெட் அணிக்கு மகத்தான பங்களிப்புகளை வழங்கியவர் ஃபைஸ் ஃபசல். கிழக்கு மகாராஷ்டிராவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் விதர்பா கிரிக்கெட் அணி, ரஞ்சிக்கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பை உள்ளிட்ட இந்தியாவின் உள்நாட்டுப் போட்டிகளில் பங்கேற்கிறது.
6. கல்வி மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகமானது அண்மையில் எந்த மாநிலத்தில் நாட்டின் முதல் திறன் இந்தியா மையத்தை தொடக்கியது?
அ. ஒடிஸா
ஆ. பீகார்
இ. மகாராஷ்டிரா
ஈ. கேரளா
- ஒடிஸா மாநிலம் சம்பல்பூரில் இந்தியாவின் முதல் திறன் இந்தியா மையத்தை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் திறந்து வைத்தார். ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளிப்பதன்மூலம், தேவை சார்ந்த தொழில்களில் திறன்களை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. தரமான கல்விக்கான அணுகலை மக்கள்மயப்படுத்த, குறைந்த செலவிலான படிப்புகளை இம்மையம் வழங்குகிறது.
7. உலக தாய்மொழி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?
அ. 21 பிப்ரவரி
ஆ. 22 பிப்ரவரி
இ. 23 பிப்ரவரி
ஈ. 25 பிப்ரவரி
- பிப்.21 அன்று மொழியியல் பன்முகத்தன்மையை அங்கீகரிக்கும் வகையில், உலக தாய்மொழி நாள் உலகளவில் கொண்டாடப்படுகிறது. முதன்முதலில் வங்கதேசத்தில் கொண்டாடப்பட்ட இந்நாள், மொழியியல் உரிமைகளுக்கான வரலாற்று இயக்கத்தை நினைவுகூருகிறது. 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Multilingual education – A pillar of Learning and Intergenerational Learning”. மொழியியல் கல்வியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் விதமாக இந்தக் கருப்பொருள் அமைந்துள்ளது.
8. ‘உலகின் மிகவுயரமான உறைந்த ஏரி தொடரோட்டம்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடம் எது?
அ. சிக்கிம்
ஆ. இமாச்சல பிரதேசம்
இ. அருணாச்சல பிரதேசம்
ஈ. லடாக்
- ‘உலகின் மிகவுயரமான உறைந்த ஏரி தொடரோட்டம்’ என அழைக்கப்படும் லடாக்கில் அமைந்துள்ள பாங்காங் ஏரி தொடரோட்டத்தின் 2ஆவது பதிப்பில் 7 நாடுகளைச்சேர்ந்த 120 ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்றனர். லடாக்கின் அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் அறக்கட்டளை, லடாக் யூனியன் பிரதேச நிர்வாகம் மற்றும் இந்திய இராணுவத்தின் 14 படைகள் ஆகியவற்றின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, இமயமலை பனிப்பாறைகள் உருகல் மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
9. கஜூராஹோ நடன விழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. உத்தரபிரதேசம்
ஆ. மத்திய பிரதேசம்
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. இராஜஸ்தான்
- 50ஆவது கஜூராஹோ நடன விழாவானது 2024 பிப்.20 அன்று தொடங்கியது. இதனை மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் மோகன் யாதவ் தொடங்கி வைத்தார். 26ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்ட இந்த விழாவில், 1500-க்கும் மேற்பட்ட கதக் கலைஞர்கள் நிகழ்த்தும் பல்வேறு பாரம்பரிய நடன பாணிகள் இடம்பெறும். 1975இல் தொடங்கப்பட்ட இவ்விழா, மத்திய பிரதேச மாநிலத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.
10. அண்மையில், ஜப்பான், இந்தியாவுக்கு எவ்வளவு வளர்ச்சி உதவிக் கடனைக் கொடுத்தது?
அ. 232.2 பில்லியன் ஜப்பானிய யென்
ஆ. 225.2 பில்லியன் ஜப்பானிய யென்
இ. 230.3 பில்லியன் ஜப்பானிய யென்
ஈ. 239.3 பில்லியன் ஜப்பானிய யென்
- ஜப்பான் அரசு பல்வேறு துறைகளில் ஒன்பது திட்டங்களுக்கு 232.209 பில்லியன் யென் அதிகாரப்பூர்வ அபிவிருத்தி உதவிக்கடனாக வழங்க உறுதியளித்துள்ளது. இந்திய அரசின் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் கூடுதல் செயலாளர் விகாஸ் ஷீல் மற்றும் இந்தியாவுக்கான ஜப்பான் தூதர் சுசுகி ஹிரோஷி இடையே இதற்கான முடிவுகள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.
- வடகிழக்குச் சாலை வலையமைப்பு இணைப்பு மேம்பாட்டுத் திட்டம்: துப்ரி-புல்பாரி பாலம்; தெலுங்கானாவில் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புதுமையை ஊக்குவிப்பதற்கான திட்டம்; சென்னை சுற்றுவட்டச் சாலை (2ஆவது கட்டம்) கட்டுமானத்திற்கான திட்டம் (49.85 பில்லியன் ஜப்பானிய யென்); ஹரியானாவில் நிலையான தோட்டக் கலையை மேம்படுத்துவதற்கான திட்டம்; உத்தரகண்டில் நகர்ப்புற நீர்வழங்கல் அமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டம் உள்ளிட்டவை இந்த 9 திட்டங்களில் அடங்கும்.
11. ‘TN கோதவர்மன் திருமால்பாட் எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்குடன் தொடர்புடையது எது?
அ. இட ஒதுக்கீடு
ஆ. வனப் பாதுகாப்பு
இ. LGBTQ உரிமைகள்
ஈ. தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு
- வனச் (பாதுகாப்பு) சட்டம், 1980ஐ வலியுறுத்தும் வகையில், காடுகளுக்கு, ‘பரந்த’ வரையறையை ஏற்குமாறு இந்திய உச்சநீதிமன்றம் அண்மையில் அரசாங்கங்களுக்கு ஆணையிட்டது. காடுகள் மற்றும் வளங்களைப்பாதுகாப்பதற்காக இயற்றப்பட்ட சட்டத்தின் பிரிவு 2, ஒதுக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட, உள்ளடக்கிய, ‘வனப்பரப்பை’ பரந்த அளவில் வரையறுக்கிறது. ‘காடு’ என்பதை அதன் மெய்யான அர்த்தத்திற்கு ஏற்ப விளக்கும், ‘TN கோதவர்மன் திருமால்பாட் எதிர் இந்திய ஒன்றியம் (1996)’ வழக்கு இதற்குக் கூடுதல் வலுசேர்த்தது.
12. அண்மையில், பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் இணைந்த 119ஆவது நாடு எது?
அ. மால்டா
ஆ. எகிப்து
இ. வியட்நாம்
ஈ. உக்ரைன்
- பன்னாட்டு சூரிய ஆற்றல் கூட்டணியில் (ISA) சேர்ந்த 119ஆவது நாடாக மால்டா ஆனது. மால்டாவின் வெளியுறவு அமைச்சகத்தின் நிரந்தர செயலாளர் கிறிஸ்டோபர் கட்ஜார், புது தில்லியில் வைத்து ISA கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். 2015இல் இந்தியாவின் குருகிராமில் தலைமையகத்துடன் நிறுவப்பட்ட ISA, உலகளவில் சூரிய ஆற்றலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டணியில் மால்டா பங்கேற்பதை இந்தியா பரிவுடன் வரவேற்றது; நீடித்த சூரிய ஆற்றல் மேம்பாட்டிற்கான சர்வதேச ஒத்துழைப்பை இது வலுப்படுத்துகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. ‘சென்னை பஸ்’ செயலி:
சென்னை மாநகரப் பேருந்துகளின் வருகை நேரம், வந்து கொண்டிருக்கும் இடம் ஆகியவற்றை பொதுமக்கள் தங்களின் திறன்பேசியில் தெரிந்துகொள்ளும் வகையில் கடந்த 2022 மே.04 அன்று, ‘சென்னை பஸ்’ என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டது.
2. 63 பேருக்கு தமிழ்வளர்ச்சித் துறை விருதுகள்:
தமிழ்த்தாய் விருது – திருப்பூர் தமிழ்ச்சங்கத்துக்கு வழங்கப்பட்டது. இத்துடன் விருதுத்தொகை `5 இலட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்பட்டன.
சி பா ஆதித்தனார் திங்களிதழ் விருது – முல்லைச்சரம் இதழ் (ஆசிரியர் கவிஞர் பொன்னடியான்). இத்துடன் விருதுத் தொகை `2 இலட்சம், கேடயம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவை வழங்கப்பட்டன.
கபிலர் விருது – முனைவர் அமிர்த கெளரி.
உ வே சா விருது – நாறும்பூநாதன்.
கம்பர் விருது – மா இராமலிங்கம்.
சொல்லின் செல்வர் விருது – முனைவர் தி இராசகோபாலன்.
உமறுப்புலவர் விருது – முனைவர் பீ மு அஜ்மல்கான்.
இளங்கோவடிகள் விருது – கூ வ எழிலரசு.
அம்மா இலக்கிய விருது – தி பவளசங்கரி.
சிங்காரவேலர் விருது – நா சு சிதம்பரம்.
அயோத்திதாசப் பண்டிதர் விருது – வை தேசிங்குராசன்.
மறைமலையடிகளார் விருது – மருத்துவர் சு நரேந்திரன்.
அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது – முனைவர் ப சரவணன்.
காரைக்கால் அம்மையார் விருது – முனைவர் த வசந்தாள்.
ஜி யு போப் விருது – முனைவர் அமுதன் அடிகள்.
விருதுபெற்ற இந்த 13 பேருக்கும் தகுதியுரை, பொன்னாடை, தலா `2 இலட்சம், தலா ஒரு பவுன் தங்கம் ஆகியவை வழங்கப்பட்டன.
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது: சுப்ரபாரதிமணியன் உள்ளிட்ட 10 பேருக்கு வழங்கப்பட்டது. இத்துடன் விருதுத் தொகை தலா `2 இலட்சம், தகுதியுரை, பொன்னாடை ஆகியவையும் வழங்கப்பட்டன.
தமிழ்ச்செம்மல் விருது: மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் மொத்தம் 38 பேருக்கு வழங்கப்பட்டன. இந்த விருதுடன் தகுதி உரை, விருதுத்தொகை தலா `25,000 ஆகியவை வழங்கப்பட்டன.