Tnpsc Current Affairs in Tamil – 23rd April 2024
1. 2024 – உலக புவி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Invest in our Planet
ஆ. Planet vs Plastics
இ. Climate Action
ஈ. Restore Our Earth
- சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் ஏப்.22 அன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது., 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Planet vs Plastics – கோள் எதிர் நெகிழிகள்” என்பதாகும். இந்தக் கருப்பொருளானது நெகிழி மாசுபாட்டிற்கு உடனடித் தீர்வுகாண்பதில் தனது கவனத்தைச் செலுத்துகிறது. earthday. org ஆனது புவியின் நலத்திற்காக 2040ஆம் ஆண்டுக்குள் நெகிழி உற்பத்தியை 60% வரை குறைக்க அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 1970இல் செனட்டர் கெய்லார்ட் நெல்சன் மற்றும் ஹார்வர்ட் மாணவர் டெனிஸ் ஹேய்ஸ் ஆகியோரால் உருவாக்கப்பட்ட புவி நாள், கடந்த 1969-சாண்டா பார்பரா எண்ணெய் கசிவால் நிகழ்ந்த சுற்றுச்சூழல் சீரழிவை நினைவுகூருகிறது.
2. அண்மையில், உலக கைவினை கவுன்சிலால் மதிப்புமிக்க, ‘உலக கைவினை நகரம் (Craft City)’ பட்டத்திற்காக பரிசீலிக்கப்பட்டுள்ள இந்திய நகரம் எது?
அ. கும்பகோணம்
ஆ. ஸ்ரீநகர்
இ. காஞ்சிபுரம்
ஈ. உதய்பூர்
- உலக கைவினை கவுன்சிலால் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து, ‘உலக கைவினை நகரம்‘ பட்டத்திற்காக ஸ்ரீநகர் அடையாளம் காணப்பட்டுள்ளது. உலக கைவினை கவுன்சில் என்பது குவைத்தைச் சார்ந்த ஒரு இலாப நோக்கற்ற அமைப்பாகும். இது கூட்டுறவு, பொருளாதார மேம்பாடு மற்றும் கலாசார பரிமாற்ற திட்டங்களை ஊக்குவிக்கிறது. இதற்காக பஷ்மினா சால்வைகள், தரைவிரிப்புகள் போன்ற உள்ளூர் கைவினைப்பொருட்களை உற்பத்தி செய்யும் பல தொகுதிகளை உலக கைவினை கவுன்சில் ஆய்வுசெய்துள்ளது.
3. அண்மையில், அசுந்தா லக்ரா விருது பெற்றவர் யார்?
அ. தீபிகா சோரெங்
ஆ. நிக்கி பிரதான்
இ. நவ்நீத் கௌர்
ஈ. ஷர்மிளா தேவி
- ‘2023இல் வரவிருக்கும் வீராங்கனைக்கான ஹாக்கி இந்தியா அசுந்தா லக்ரா’ விருதை தீபிகா சோரெங் பெற்றார். பெண்கள் ஜூனியர் ஆசியக் கோப்பையில் அறிமுகமான அவர், 6 போட்டிகளில் 7 கோல்கள் அடித்து, இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தைப் பெற்றுத்தந்தார். FIH ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை உட்பட சர்வதேச போட்டிகளில் தீபிகா சோரெங்கின் இருப்பு குறிப்பிடத்தக்க வெற்றிகளுக்குப் பங்களித்தது. FIH மகளிர் ஹாக்கி 5s உலகக்கோப்பை ஓமன் – 2024இல் இந்தியா வெள்ளி வென்றதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்; 9 கோல்கள் அடித்து அப்போட்டியின் இளம் வீராங்கனை பட்டத்தையும் அவர் பெற்றார்.
4. சமீபத்தில், மக்களவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட அழியாத மை என்பது கீழ்காணும் எந்த வேதிப்பொருளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது?
அ. சோடியம் நைட்ரேட் (NaNO3)
ஆ. சில்வர் நைட்ரேட் (AgNO3)
இ. பொட்டாசியம் நைட்ரேட் (KNO3)
ஈ. சோடியம் குளோரைடு (NaCl)
- மக்களவைத் தேர்தல் நெருங்கும்போது, இந்திய தேர்தல்களின் தனித்துவமான செயல்முறையான இடது ஆள்காட்டி விரலில் அழியாத ஊதா-கருப்பு மை வைப்பது குறித்து பரவலாகப் பேசப்படுகிறது. சில்வர் நைட்ரேட் கொண்ட அந்த அழியாத மை, புறவூதா ஒளியின்கீழ் தெளிவாகத் தெரியும். வழலை நுரை மற்றும் நீர்மங்களை 72 மணிநேரம் வரை எதிர்க்கும் திறனுடையது இந்த மை. CSIRஆல் தயாரிக்கப்பட்ட இந்த மைக்கு கடந்த 1962இல் மைசூர் பெயின்ட்ஸ் & வார்னிஷ் லிட் நிறுவனம் உரிமம் பெற்றது. இவ்வகை மை 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தால் இடது ஆள்காட்டி விரலில் மையிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
5. செங் கிலாங் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
அ. மேகாலயா
ஆ. சிக்கிம்
இ. மிசோரம்
ஈ. நாகாலாந்து
- மேகாலய மாநிலத்தின் வஹியாஜரில் 34ஆவது செங் கிலாங் திருவிழா அண்மையில் நிறைவடைந்தது. செங் காசி செய்ன் ரைஜால் நடத்தப்பட்ட இவ்விழா, காசி பூர்வீக நம்பிக்கையாளர்களை ஒருங்கிணைக்கிறது. ஒற்றுமையைக் குறிக்கும் ஒற்றைக்கூறை பரிமாறிக் கொள்வது இதன் சிறப்பம்சமாகும். இந்த ஆண்டு, வஹியாஜர் அந்த ஒற்றைக் கூறை செங் காசி ஷாயித் ஷேயிடமிருந்து பெற்றார். மேகாலயா மற்றும் அஸ்ஸாம் மற்றும் வங்காளதேசத்தின் சில பகுதிகளை பூர்வீகமாகக்கொண்ட காசி மக்கள், செங் கிலாங்கின்போது தங்கள் கலாசாரத்தையும் நம்பிக்கையையும் கொண்டாடுகிறார்கள்.
6. அண்மையில், FIDE கேண்டிடேட் செஸ் போட்டியை வென்ற இளம் வீரர் யார்?
அ. டிங் லிரன்
ஆ. D குகேஷ்
இ. அர்ஜுன் எரிகைசி
ஈ. நிஹால் சரின்
- இந்தியாவின் D குகேஷ் (17), ஹிகார நகமுராவுடனான போட்டியில் டிராவான பிறகு, கனடாவின் டொரண்டோவில் நடந்த 2024 – FIDE கேண்டிடேட் போட்டியை வென்ற இளம் செஸ் வீரரானார். பெண்கள் பிரிவில் சீனாவின் டான் சோங்கி வெற்றிபெற்றார். D குகேஷ், ஒன்பது புள்ளிகளுடன், 2024 – FIDE உலக செஸ் சாம்பியன்ஷிப்பிற்காக டிங் லிரனை எதிர்கொண்டு வெற்றியைப் பெற்றார். விஸ்வநாதன் ஆனந்துக்குப் பிறகு FIDE கேண்டிடேட் போட்டியில் வெற்றிபெற்ற இரண்டாவது இந்தியரும் இளம் வீரரும் இவராவார். காஸ்பரோவ் மற்றும் கார்ல்சன் முறையே 21 மற்றும் 22 வயதில் வெற்றிபெற்றனர்.
7. அண்மையில், கிழக்குக் கடற்கரையில், ‘பூர்வி லெஹர்’ என்ற பயிற்சியை நடத்திய ஆயுதப்படை எது?
அ. இந்தியக் கடற்படை
ஆ. இந்திய வான்படை
இ. இந்திய இராணுவம்
ஈ. தேசிய பாதுகாப்புப் படை
- இந்திய கடற்படை, ‘பூர்வி லெஹர்’ என்ற பயிற்சியை கிழக்குக் கடற்கரையில் நடத்தியது. பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்வதற்காக இந்தியக் கடற்படையின் தயார்நிலையை மதிப்பிடுவதற்கான நடை -முறைகளை சரிபார்ப்பதை இந்தப் பயிற்சி நோக்கமாகக் கொண்டது. யதார்த்தமான சூழ்நிலையில் போர் பயிற்சி மற்றும் ஆயுத கட்டத்தின்போது பல்வேறு துப்பாக்கிச்சூடுகளை வெற்றிகரமாக நடத்துவது, போர் சூழலில் வியூகம் வகுப்பது உட்பட பல கட்டங்களாக இப்பயிற்சி நடத்தப்பட்டது. இந்தப்பயிற்சி மதிப்புமிக்க படிப்பினைகளை வழங்கியது, இதன்மூலம் பிராந்தியத்தில் கடல்சார் சவால்களுக்கான தயார்நிலை மேம்படுத்தப்பட்டது.
8. திருச்சூர் பூரம் திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. TN (தமிழ்நாடு)
ஆ. KA (கர்நாடகா)
இ. MH (மகாராஷ்டிரா)
ஈ. KL (கேரளா)
- உலகளவில் கொண்டாடப்படும் ஒரு மிகப்பெரிய கோவில் திருவிழாவான திருச்சூர் பூரம் திருவிழா, கேரளத்தின் வளமான கலாசாரம் மற்றும் பன்முகத்தன்மையை உள்ளடக்கிய ஒரு விழாவாகும். பாரம்பரியத்தில் வேரூன்றிய இவ்விழா, இசை, ஊர்வலம், கண்காட்சிகள் மற்றும் வாணவேடிக்கைகளுடன் அனைத்து பின்னணி மக்களையும் ஒன்றிணைக்கிறது. ஏழு நாட்கள் நீடிக்கும் இவ்விழாவின் சிறப்பம்சமானது மலையாள மாதமான மேசத்தின் ஆறாம் நாள், பூரம் நட்சத்திரத்துடன் ஒத்துப்போகிறது. 1796ஆம் ஆண்டு ஷக்தன் தம்புரானால் இவ்விழா உருவாக்கப்பட்டது. இந்த ஆண்டு, ஏப்ரல்.20 அன்று திருச்சூர் பூரம் கொண்டாடப்பட்டது.
9. அண்மையில், கீழ்காணும் எவ்விடத்தில் வைத்து இந்தியப்பிரதமரால் பகவான் மகாவீர் நிர்வாண மகோத்சவம் தொடங்கி வைக்கப்பட்டது?
அ. புது தில்லி
ஆ. சென்னை
இ. ஹைதராபாத்
ஈ. புனே
- மகாவீர் ஜெயந்தி அன்று புது தில்லியில், 2550ஆவது பகவான் மகாவீர் நிர்வாண மகோத்சவை பிரதமர் நரேந்திர மோதி தொடக்கி வைத்தார். பகவான் மகாவீருக்கு மரியாதை செலுத்திய அவர், பள்ளி மாணாக்கரின் நடன நிகழ்வைக் கண்டுகளித்ததோடு, நினைவு அஞ்சல்தலை மற்றும் நாணயத்தை அப்போது வெளியிட்டார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், மகாவீரின் மதிப்புகளை நோக்கிய இளைஞர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டியதோடு சமண சமூகத்திற்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.
10. அண்மையில், சுழிய நிழல் நாள் (Zero Shadow Day) காணப்பட்ட இந்திய நிலப்பகுதி எது?
அ. புதுச்சேரி
ஆ. கிரேட் நிக்கோபார்
இ. குமரி முனை
ஈ. கவரட்டி
- அண்மையில் புதுச்சேரியில் சுழிய நிழல் நாள் காணப்பட்டது. இது ஆண்டுக்கு இருமுறை கடக ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையில் நிகழ்கிறது; இது டிசம்பர் மற்றும் ஜூன் கதிர் திருப்பங்களுக்கு இடையில் நிகழ்கிறது. இந்த நிகழ்வு +23.5 மற்றும் -23.5 டிகிரிக்குள் உள்ள அட்சரேகைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த நாளில், சூரியன் நேரடியாக உச்சியில் தென்படும் காரணத்தால் உருவத்தின் நிழல் அவ்வுருவத்தின் கீழே விழுவதில்லை. சூரிய வொளி செங்குத்தாக மேற்பரப்பில் விழும்போது இது நிகழும், இதன் விளைவாக நிழல்கள் மறைக்கப்படுகின்றன.
11. ரேம்பேஜ் என்ற ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?
அ. ஈரான்
ஆ. ஈராக்
இ. இஸ்ரேல்
ஈ. இந்தோனேசியா
- அண்மையில் ஈரானிய இராணுவத் தளத்தின் மீதான தாக்குதலில் வான்வெளியில் இருந்து தரையைத் தாக்கும் அதிநவீன ஆயுதமான, ‘ரேம்பேஜ்’ ஏவுகணையை இஸ்ரேல் பயன்படுத்தியது. இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் நிறுவனம் மற்றும் இஸ்ரேலிய ராணுவ நிறுவனம் ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட, ‘ரேம்பேஜ்’ என்பது ஒரு நீண்டதொலைவு செல்லும் சூப்பர்சோனிக் ஏவுகணையாகும். இது வலுவூட்டப்பட்ட இலக்குகளுக்கு எதிராக மிகத்துல்லியமான தாக்குதலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
12. 2024 செப்.22–23 அன்று எதிர்கால உச்சிமாநாட்டை (Summit of the Future) நடத்தவுள்ள அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. ஐநா பொதுச்சபை
இ. சர்வதேச நாணய நிதியம்
ஈ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம்
- பலதரப்பு வளர்ச்சி வங்கிகளில் சீர்திருத்தம் மேற்கொள்வது நடப்பு 2024 – எதிர்கால உச்சிமாநாட்டின் கருப்பொருள் ஆக இருக்கும் என்று பொதுச்செயலாளர் அறிவித்தார். 2024 செப்டம்பர்.22-23 அன்று ஐநா பொதுச்சபை எதிர்கால உச்சிமாநாட்டை நடத்துகிறது. பலதரப்பு வளர்ச்சி வங்கிகள் என்பவை பல்வேறு உறுப்புநாடுகளுக்கு உதவி மற்றும் நிபுணத்துவத்தை வழங்கும் முக்கியமான சர்வதேச நிதிநிறுவனங்களாகும். பொருளாதார முன்னேற்றத்தை வளர்ப்பதற்கும், வறுமையைப் போக்குவதற்கும், நிலையான வளர்ச்சியை ஆதரிப்பதற்கும் அவை உலகளவில் பணியாற்றுகின்றன. உலக வங்கி குழுமம், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) போன்றவை முக்கிய பலதரப்பு வளர்ச்சி வங்கிகளுள் அடங்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 23-04-2024 – உலக புத்தக நாள்.
கருப்பொருள்: Read Your Way.
2. சூரத் மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு!
குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் போட்டியின்றி நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்திருந்த நீலேஷ் கும்பானியின் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
1951ஆம் ஆண்டு முதல் தற்போது வரை மக்களவைக்கு 35 பேர் மட்டுமே போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். கடந்த 12 ஆண்டுகளில் இப்போதுதான் முதன்முறையாக ஒருவர் போட்டியின்றி தேர்வாகியுள்ளார். பாஜக சார்பில் மக்களவைக்கு போட்டியின்றி தேர்வான முதல் வேட்பாளர் என்ற பெருமையை முகேஷ் தலால் பெற்றுள்ளார். சிக்கிம், ஸ்ரீநகரில் போட்டியின்றி தேர்வாவது அதிகம் நிகழ்ந்துள்ளது.