Tnpsc Current Affairs in Tamil – 23rd & 24th October 2023
1. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள இளையோரிடையே தொடர்புகளை மேம்படுத்த தொடங்கப்பட்ட திட்டத்தின் பெயர் என்ன?
அ. ஹமாரா பாரத்
ஆ. யுவ சங்கம் 🗹
இ. PM யுவா
ஈ. ஆத்மநிர்பர் பாரத்
- யுவ சங்கம் என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களைச்சேர்ந்த இளையோரிடையே தனிப்பட்ட தொடர்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு திட்டமாகும். சமீபத்தில், ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம் திட்டத்தின் ஒரு பகுதியான யுவ சங்கத்தின் மூன்றாம் கட்ட பதிவுக்கான வலைத்தளம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
2. சமீப செய்திகளில் இடம்பெற்ற வெப்பமண்டல ஆழ்கடல் நியூட்ரினோ தொலைநோக்கியுடன் (Trident) தொடர்புள்ள நாடு எது?
அ. அமெரிக்கா
ஆ. ஆஸ்திரேலியா
இ. சீனா 🗹
ஈ. ஜப்பான்
- ஒரு சீன ஆராய்ச்சிக்குழுவானது தென்சீனக்கடலில் வெப்பமண்டல ஆழ்கடல் நியூட்ரினோ தொலைநோக்கி (Tropical Deep-sea Neutrino Telescope – Trident) எனப்படும் மிகப்பெரிய நியூட்ரினோ தொலைநோக்கியை உருவாக்கத் தொடங்கியுள்ளது; இது சீன மொழியில் ஹைலிங் (ஓஷன் பெல்) என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தொலைநோக்கி உலகின் மிக விரிவான “மர்ம துகள்” கண்டறியும் கருவியாக மாறவுள்ளது. இது கடலின் மேற்பரப்பிற்கு அடியில் 3,500 மீட்டர் ஆழத்தில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
3. ‘ஓரியானிட் விண்கல் மழை’ என்றும் குறிப்பிடப்படுகிற வால் விண்மீன் எது?
அ. ஹாலி வால் விண்மீன் 🗹
ஆ. என்கே வால் விண்மீன்
இ. ஹைகுடேக் வால் விண்மீன்
ஈ. ஹேல்-பாப் வால் விண்மீன்
- ஹாலி வால் விண்மீன் முப்பத்தேழு ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக எரிகல் நிகழ்வுகளுடன் வானில் தோன்றவுள்ளது. இவ்விண்கற்கள் ஓரியன் விண்மீன் கூட்டத்திலிருந்து குறிப்பாக 3 பிரகாசமான விண்மீன்களைக் கொண்ட புகழ்பெற்ற ஓரியன் பட்டைக்குச் சற்று மேலே தோன்றுவதுபோல தோன்றும். இதன் விளைவாக, அவை ‘ஓரியானிட் விண்கல் மழை’ என்று குறிப்பிடப்படுகின்றன.
4. நம்தபா, பக்கே மற்றும் கம்லாங் ஆகியவை கீழ்காணும் எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள புலிகள் காப்பகங்கள்?
அ. கர்நாடகா
ஆ. அருணாச்சல பிரதேசம் 🗹
இ. அஸ்ஸாம்
ஈ. மத்திய பிரதேசம்
- அருணாச்சல பிரதேச மாநிலத்தின் தொழிற்துறை & முதலீட்டுக் கொள்கை – 2020ஐ திருத்துவதற்கு அருணாச்சல பிரதேச மாநில அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி நம்தாபா, பக்கே மற்றும் கம்லாங் ஆகிய மூன்று புலிகள் காப்பகங்களுக்கான சிறப்பு புலிகள் பாதுகாப்புப் படையின் அமைப்புக்கும் அமைச்சரவை ஒப்புதலளித்துள்ளது.
5. எந்த மாநில அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதாக அறிவித்துள்ளது?
அ. மகாராஷ்டிரா
ஆ. ஆந்திரப் பிரதேசம் 🗹
இ. குஜராத்
ஈ. கேரளா
- ஆந்திரப் பிரதேச மாநில அரசு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான சாதிவாரி கணக்கெடுப்பை நவம்பர்.15ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தப்பிரிவின்கீழ் வரும் 139 சமூகங்களுக்குச் சேவைகள் மற்றும் ஆதரவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்தக் கணக்கெடுப்பு.
6. உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் டிஜிட்டல் முறையிலான பயிர் கணக்கெடுப்பை எப்பொழுதிலிருந்து தொடங்குமாறு மாநிலங்களைக் கேட்டுக்கொண்டுள்ளது?
அ. ஜனவரி 2024
ஆ. ஏப்ரல் 2024
இ. ஜூலை 2024 🗹
ஈ. செப்டம்பர் 2024
- எதிர்வரும் 2024 ஜூலை முதல் டிஜிட்டல் பயிர் கணக்கெடுப்பு முறைக்கு மாறுமாறு மாநிலங்களையும் யூனியன் பிரதேசங்களையும் இந்திய அரசாங்கம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளது. விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் ஒருபகுதியான பொருளாதாரம், புள்ளியியல் மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு வழிகாட்டுதல்களை நிறைவு செய்துள்ளது. உழவு உற்பத்தி மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டு அவை மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒரு சில மாநிலங்களைத் தவிர, பிறவற்றில் பயிர் புள்ளிவிவரங்களின் சேகரிப்பு மற்றும் தொகுத்தல் கைமுறையாகவே உள்ளது; இதனால் தாமதம் மற்றும் கைமுறை பிழைகள் ஏற்படுகின்றன.
7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கார்த்திகேயன் முரளி சார்ந்த விளையாட்டு எது?
அ. செஸ் 🗹
ஆ. மட்டைப்பந்து
இ. ஸ்குவாஷ்
ஈ. பூப்பந்து
- 24 வயதான இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் கார்த்திகேயன் முரளி, உலகின் முதல் நிலை வீரரான மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வெற்றியைப் பதிவுசெய்தார். தற்போது நடைபெற்று வரும் கத்தார் மாஸ்டர்ஸ் போட்டியின்போது கிளாசிக்கல் செஸ் முறையில் இந்த வெற்றி பதிவானது. மேக்னஸ் கார்ல்சனுக்கு எதிராக இந்திய வீரர் ஒருவர் வெற்றி பெறுவது இது மூன்றாவது நிகழ்வாகும்.
8. இந்திய வான்படையைப் பொறுத்தவரை, ‘விருபாக்ஷா’ என்பது எதைக் குறிக்கின்றது?
அ. எறிகணை
ஆ. ரேடார் 🗹
இ. நீர்மூழ்கிக் கப்பல்
ஈ. ஜிபிஎஸ் தொகுதி
- இரஷ்யாவின் சு-30 MKI போர் விமானங்களை மேம்படுத்தும் முயற்சியாக, இந்திய விமானப்படை, ‘விருபாக்ஷா’ எனப்படும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மேம்பட்ட நவீன ரேடாரை அதில் நிறுவ தயாராகி வருகிறது. இந்த நடவடிக்கை, இராணுவத் துறையின் உள்நாட்டுமயமாக்கலை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிக்கிறது. இது தனது சொந்த பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டையும் பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.
9. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆபரேஷன் சக்ரா-2 என்பதுடன் தொடர்புடைய நிறுவனம் எது?
அ. மத்திய ஊழல் விழிப்புணர்வு ஆணையம்
ஆ. மத்திய புலனாய்வுப் பணியகம் 🗹
இ. இந்திய தேர்தல் ஆணையம்
ஈ. இந்திய உச்சநீதிமன்றம்
- ஆபரேஷன் சக்ரா-2 தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) இந்தியா முழுவதும் 76 இடங்களில் சோதனை நடத்தியது. இந்நடவடிக்கையானது இணைய அடிப்படையிலான நிதி மோசடிகள் தொடர்பான ஐந்து வெவ்வேறு வழக்குகளின் விசாரணையை உள்ளடக்கியதாகும். இதில் `100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடி சம்பந்தப்பட்ட ஒரு வழக்கும் அடங்கும். நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU), FBI, இன்டர்போல் மற்றும் பல்வேறு சர்வதேச முகமைகள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் CBI இந்த நடவடிக்கைகளைத் தொடங்கியது.
10. ஒடிஸா மாநிலத்தின் புதிய ஆளுநரான இரகுபர் தாஸ், கீழ்காணும் எந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சராக இருந்தார்?
அ. தமிழ்நாடு
ஆ. ஜார்கண்ட் 🗹
இ. குஜராத்
ஈ. பாண்டிச்சேரி
- ஒடிஸா மாநிலத்தின் புதிய ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் இரகுபர் தாஸை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நியமித்துள்ளார். ஹரியானா மாநில பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான கணேஷி லால் கடந்த 2018 மே மாதம் முதல் ஒடிஸா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றி வந்தார்.
11. இளஞ்சிவப்பு காய்ப்புழு தாக்கும் பயிர் எது?
அ. சணல்
ஆ. பருத்தி 🗹
இ. இரப்பர்
ஈ. காபி
- பஞ்சாப், ஹரியானா மற்றும் இராஜஸ்தான் போன்ற வட இந்திய மாநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள பருத்திப் பயிர்கள் தற்போது இளஞ்சிவப்பு காய்ப்புழுவின் (Pectinophora gossypiella) கடுமையான தாக்குதலுக்குட்பட்டுள்ளன. Bt பருத்தி (Bollgard II விதை) எனப்படும் மரபணு மாற்றப்பட்ட பூச்சி-எதிர்ப்பு இரகமும் கூட இதற்கு தப்பவில்லை.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 2030ஆம் ஆண்டுக்குள் 6 கிகாவாட் திறனுள்ள பசுமை மின் திட்டங்கள்: NLC.
NLC இந்தியா நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘NLC இந்தியா கிரீன் எனர்ஜி நிறுவனம்’ 2030ஆம் ஆண்டு அளவில் ஆறு கிகாவாட் (GW) திறனுள்ள பசுமை மின் திட்டங்களை நிறுவும் என மத்திய நிலக்கரி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் முதல்கட்டமாக 2 கிகாவாட் (GW) அளவிலான திட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உருவாக்கப்பட்டு வருகின்றன. மத்திய மின் அமைச்சகத்தின் ஆற்றல் கலவை அறிக்கை 2030இன்படி நமது மின் பகிர்மான அமைப்பானது மின்கலன் சேமிப்பு வகையில் சுமார் 41.65 கிகாவாட் அளவில் உள்ளது.
2. கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி ஆராய்ச்சி.
கணைய புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவும் உயிரிகுறிப்பான் (பயோ-மார்க்கர்) தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியை சென்னை ஐஐடியின் ஆற்றல்சார் மையம் மேற்கொண்டு வருகிறது. உயிரிழப்பை ஏற்படுத்தும் புற்றுநோய்களில் கணைய புற்றுநோய் நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில், அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் 2ஆவது இடத்துக்கு முன்னேறும் எனவும் மருத்துவ ஆராய்ச்சியாளர்களால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
இந்தியா சார்ந்த தரவுதளத்தை உருவாக்கி, அதனடிப்படையில் பாதிப்பை முன்கூட்டிய கண்டறிய உதவும் உயிரி குறியீட்டு தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் ஆராய்ச்சியை சென்னை ஐஐடியின் ஆற்றல்சார் மையம் மேற்கொண்டு வருகிறது. புற்றுநோய் மரபியல் மற்றும் மூலக்கூறு சிகிச்சைக்கான ஆற்றல்சார் மையத்தின் பகுப்பாய்வு தரவுகளின் உதவியுடன், இந்தியா சார்ந்த தரவுதளம் உருவாக்கப்படவுள்ளது.
3. நாட்டிலேயே முதன்முறையாக ஜிலேபி மீன்களை தாக்கும் திலபியா பர்வோ வைரஸ் தமிழ்நாட்டில் கண்டுபிடிப்பு
தமிழ்நாட்டில் இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜாவில் உள்ள குளங்களில், நன்னீர் மீன் இனமான பண்ணையில் வளர்க்கப்படும் ஜிலேபி மீன்களை திலபியா பர்வோவைரஸ் (TiPV) பாதித்துள்ளது. மீன்களில் அதிக இறப்பு விகிதத்தை ஏற்படுத்தும் இந்த வைரஸ் பாதிப்பு இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில் பதிவாகியுள்ளது. இந்த டிஎன்ஏ வைரஸ் பண்ணைகளைத் தாக்கினால் 30 முதல் 50 சதவீதம் மீன்கள் இறந்து போகும், ஆய்வகத்தில் என்றால் 100 சதவீதம் இறப்பு ஏற்படும்.
“ஏழைகளின் மீன்” என்று அழைக்கப்படும் இந்த ‘ஜிலேபிக்கெண்டை’யின் உண்மையான பெயர் திலேபியா. இது ஆப்பிரிக்க மீன் வகையாகும். 1952ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்டது. TiPV முதன்முதலில் 2019இல் சீனாவிலும், 2021இல் தாய்லாந்திலும் பதிவாகியது. தற்போது மூன்றாவது நாடாக இந்தியாவிலும் இந்தப் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
IMPORTANT LINKS
TNPSC Current Affairs
https://www.winmeen.com/tnpsc-tamil-current-affairs/
Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test
https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb
Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO