TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 23rd & 24th March 2024

1. SAKHI என்ற செயலியுடன் தொடர்புடைய திட்டம் எது?

அ. சந்திரயான் – 2 திட்டம்

. ககன்யான் திட்டம்

இ. சந்திரயான் – 3 திட்டம்

ஈ. ஆதித்யா L1 திட்டம்

  • Space-borne Assistant and Knowledge Hub for Crew Interaction (SAKHI) என்பது விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் ISRO ஆகியவற்றால் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு பன்னோக்கு செயலியாகும். இது ககன்யான் விண்வெளிப் பயணத்தின் குழுவினருக்கு பணிகள், சுகாதார கண்காணிப்பு மற்றும் தகவல்தொடர்புக்கு உதவும். இந்தச் செயலி ஒரு டிஜிட்டல் உதவியாளராகவும் அறிவின் மையமாகவும் செயல்படுகிறது.

2. 2024 அக்டோபரில் வியாழனின் நிலவுகளில் ஒன்றான யூரோபாவுக்கு, ‘message in a bottle’ என்ற செய்தியைக் கொண்டுசெல்ல திட்டமிட்டுள்ள விண்வெளி அமைப்பு எது?

அ. NASA

ஆ. ISRO

இ. JAXA

ஈ. ESA

  • 2024 அக்டோபரில், NASAஇன் யூரோபா கிளிப்பர் மிஷன் வியாழனின் நிலவான யூரோபாவிற்கு பயணித்து அதில் உயிர்கள் வாழ்வதற்கேற்ற சூழல் உள்ளதா என்பதை கண்டறியவுள்ளது. பனிக்கட்டியால் மூடியுள்ள அதன் மேற் பரப்பிற்கு கீழே அடியில் ஓர் உப்பு ஏரி இருப்பதாக ஊகிக்கப்படுகிறது. இந்த விண்கலம் அமெரிக்கக் கவிஞர் அடா லிமோனின் கவிதையைக் கொண்ட தகடு மற்றும் சிலிக்கான் நுண்சில்லில் பொறிக்கப்பட்ட 2.6 மில்லியனுக்கும் அதிகமான பெயர்களைத் தாங்கிச்செல்லும். இந்தியத் தொடர்பைக் காட்டும் இந்தி உட்பட பல்வேறு மொழிகளில், ‘நீர்’ என்ற சொல்லைக் குறிக்கும் 103 அலைவடிவங்களும் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

3. அண்மையில், 2024ஆம் ஆண்டுக்கான, ‘நிருத்ய கலாநிதி விருது’ யாருக்கு வழங்கப்பட்டது?

அ. வசந்தலட்சுமி நரசிம்மாச்சாரி

ஆ. ஜெயஸ்ரீ

இ. நீனா பிரசாத்

ஈ. வித் பிராகா பெஸ்ஸல்

  • மோகினியாட்டத்தின் சிறந்த விரிவுரையாளரான Dr நீனா பிரசாத், 2024ஆம் ஆண்டுக்கான, ‘நிருத்ய கலாநிதி விருது’ பெற்றுள்ளார். அவர் பரதநாட்டியம், குச்சிப்புடி மற்றும் கதகளி உட்பட பல பாரம்பரிய நடன வடிவங்களில் பயிற்சிபெற்றவராவார். அவர் ரவீந்திர பாரதி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் சர்ரே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். நீனா பிரசாத் சென்னை மற்றும் திருவனந்தபுரத்தில் பரதாஞ்சலி அகாடமி ஆஃப் இந்தியன் டான்ஸ் உட்பட மியூசிக் அகாடமிகளை நடத்தி வருகிறார்.

4. ஆண்டுதோறும், ‘உலக மகிழ்ச்சி நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 18 மார்ச்

ஆ. 19 மார்ச்

இ. 20 மார்ச்

ஈ. 21 மார்ச்

  • மகிழ்ச்சி, மனநலம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.20ஆம் தேதியன்று உலக மகிழ்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது. ஐநா பொதுச்சபை 2012 ஜூன்.28 அன்று இந்த நாளை நிறுவியது; அது முதல் ஆண்டுதோறும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது சீரான பொருளாதார வளர்ச்சி, நிலையான வளர்ச்சி மற்றும் வறுமைக்குறைப்பு ஆகியவற்றை ஊக்குவிக்கிறது. இந்த நாள் மனித உயிர் வாழ்வதற்கு மகிழ்ச்சியின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துகிறது. நடப்பு 2024ஆம் ஆண்டில், மகிழ்ச்சியைப் பரப்பவும் நல்வாழ்வுக்கு முன்னுரிமை அளிக்கவும் ஐநா எண்ணம் கொண்டுள்ளது.

5. அண்மையில், தேசிய பெண்கள் ஆணையமானது ஆட்கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்காக கீழ்காணும் எந்தப் பாதுகாப்பு படையுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?

அ. மத்திய ஆயுதமேந்திய காவலர் படை

ஆ. மத்திய சேமக் காவல்படை

இ ரெயில்வே பாதுகாப்புப் படை

ஈ. மத்திய தொழிற்துறை பாதுகாப்புப் படை

  • இந்தியாவில் ஆட்கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்காக தேசிய பெண்கள் ஆணையம் 2024 மார்ச் மாதத்தில் புது தில்லியில் ரெயில்வே பாதுகாப்புப் படையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கங்களில் ஆட்கடத்தலைத் தடுப்பது மற்றும் கடத்தப்பட்ட பெண்களை மீட்பது ஆகியவை அடங்கும்.

6. 2024 – உலக மகிழ்ச்சி அறிக்கையில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?

அ. 125ஆவது

ஆ. 126ஆவது

இ. 127ஆவது

ஈ. 128ஆவது

  • மார்ச்.20 அன்று ஐநா அவையால் வெளியிடப்பட்ட 2024 – உலக மகிழ்ச்சி அறிக்கையில், பின்லாந்து தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, ‘மகிழ்ச்சியான நாடு’ என அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 – உலக மகிழ்ச்சி அறிக்கையின்படி, 146 நாடுகளில் இந்தியா 126ஆவது இடத்தில் உள்ளது. இந்தியாவின் அண்டைநாடுகளான சீனா 60ஆவது இடத்திலும் நேபாளம் 93ஆவது இடத்திலும் பாகிஸ்தான் 108ஆவது இடத்திலும் மியான்மர் 118ஆவது இடத்திலும் இலங்கை 128ஆவது இடத்திலும் வங்காளதேசம் 129ஆவது இடத்திலும் உள்ளது.

7. உலகளாவிய தட்பவெப்பநிலையின் நிலைகுறித்த அறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ. உலக சுகாதார அமைப்பு

ஆ. உலக வானிலையியல் அமைப்பு

இ. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்

ஈ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

  • உலக வானிலை அமைப்பு, ஐநா காலநிலை நிறுவனம் ஆகியவை இணைந்து உலகளாவிய தட்பவெப்பநிலையின் நிலைகுறித்த அறிக்கையை வெளியிடுகின்றன. 2023ஆம் ஆண்டு அறிக்கையானது, 2023ஆம் ஆண்டுதான் பதிவு செய்யப்பட்டதிலேயே வெப்பமான ஆண்டாக இருப்பதை உறுதிப்படுத்துகிறது. உலக சராசரி வெப்பநிலை 1.45° செல்சியஸ் (± 0.12 டிகிரி செல்சியஸ் நிச்சயமற்ற தன்மையுடன்) கூடுதலாக தொழிற்துறை புரட்சிக்கு முந்தைய காலத்தின் அடிப்படையைவிட அதிகமாக உள்ளது.

8. அண்மையில், ரஷ்யாவுக்கான இந்திய தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. சௌரவ் குமார்

ஆ. வினய் குமார்

இ. அமல் குமார் கோஸ்வாமி

ஈ. DB வெங்கடேஷ் வர்மா

  • 1992ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியான வினய் குமார், ரஷ்யாவுக்கான இந்தியத்தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நீண்டகால உறவை வலுப்படுத்தும் வகையில் அவரது இந்தப்புதிய நியமனம் இருக்கும் என மத்திய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. ரஷ்யாவில் நடந்த சமீபத்திய தேர்தல்களுக்கு மத்தியில் இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் முக்கியத்துவத்தை இந்நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது.

9. சமீபத்தில், ‘ரௌத்ர சாத்விகம்’ என்ற அவரது பணிக்காக, ‘சரஸ்வதி சம்மன்-2023’ விருதை வென்றவர் யார்?

அ. விஜய் டெண்டுல்கர்

ஆ. வாஸ்தேவ் மோஹி

இ. பிரபா வர்மா

ஈ. பத்மா சச்தேவ்

  • மலையாளக்கவி பிரபா வர்மா தனது ‘ரௌத்ர சாத்விகம்’ பணிக்காக 2023ஆம் ஆண்டுக்கான ‘சரஸ்வதி சம்மான்’ விருதை வென்றார். KK பிர்லா அறக்கட்டளையால் வழங்கப்பெறும் இவ்விருது, இந்திய மொழியில் எழுதப்பட்ட சிறந்த இலக்கியப்படைப்புக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இவ்விருது `15 இலட்சம், பாராட்டுப்பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியது. ‘ரௌத்ர சாத்விகம்’ என்பது 2022ஆம் ஆண்டின் கவிதைப் படைப்பாகும்; இது அதிகாரத்திற்கும் அரசியலுக்கும், தனிமனிதனுக்கும் அரசுக்கும், கலைக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான மோதலை ஆராய்கிறது.
  • ‘சரஸ்வதி சம்மான்’ என்பது இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றாகும்; இது 1991இல் நிறுவப்பட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் வெளியிடப்பட்ட சிறந்த இலக்கியப் படைப்பிற்காக இந்திய குடிமகனு(ளு)க்கு இந்த விருது வழங்கப்படுகிறது.

10. சமீபத்தில், நிலைத்தன்மை மற்றும் சுழற்சிப்பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக பாக்சைட் மீதங்களிலிருந்து மதிப்புமிக்க கூறுகளைப் பிரித்தெடுக்கும் ஒரு முறையை உருவாக்கியுள்ள நிறுவனம் எது?

அ. ஐஐடி மெட்ராஸ்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி பம்பாய்

ஈ. ஐஐடி ரூர்க்கி

  • ஐஐடி மெட்ராஸ் நிறுவனத்தைச்சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பாக்சைட் மீதங்களை பதனப்படுத்துவதற்கு பாஸ்போரிக் அமிலத்தைப் பயன்படுத்தி ஒரு முறையை உருவாக்கியுள்ளனர்; இது பொதுவாக ரெட் மட் என அழைக்கப்படுகிறது. மின்னணுக்கூறுகள் மற்றும் ஆற்றல் சேமிப்பிற்கேற்ற, குறிப்பிடத்தக்க மின்கடத்தா மற்றும் ஒளியியல் பண்புகளைக் கொண்ட மட்பாண்டங்கள் உட்பட மதிப்புமிக்க பொருட்களை இந்தச் செயல்முறை பிரித்தெடுக்கிறது. அலுமினிய உற்பத்தியின் துணைப்பொருளான ரெட் மட், ஆர்சனிக், ஈயம் மற்றும் பாதரசம்போன்ற நச்சுத்தன்மைவாய்ந்த கன உலோகங்களைக் கொண்டுள்ளது. அதன் அரிக்கும் தன்மை மற்றும் அதிக காரத்தன்மை மண் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது.

11. ‘KKL (R) 3’ என்றால் என்ன?

அ. உப்பைத் தாங்கி வளரக்கூடிய நெல் இரகம்

ஆ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட தாவர நோய்

இ. சிறுகோள்

ஈ. கருந்துளை

  • பண்டிட் ஜவஹர்லால் நேரு வேளாண்மை மற்றும் ஆராய்ச்சிக்கல்லூரி (PAJANCOA & RI) அதன் மூன்றாவது நெல் இரகமான KKL (R) 3ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. குறுவை பருவத்தில் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்திசெய்ய உருவாக்கப்பட்டுள்ள இந்த KKL (R) 3 வகை நெல் இரகம் நீரிலுள்ள அதீத உப்பின் தன்மையைத் தாங்கக்கூடியது. உவர்நீர் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் டெல்டா பகுதிகளுக்கு இது உகந்ததாகும்.
  • இது 110-115 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். உவர்நிலப்பகுதிகளில் ஹெக்டேருக்கு 3,435-3,500 கிகிஉம் வழக்கமான நிலப்பகுதிகளில் 6,420 கிகிஉம் இது மகசூல் தரும்.

12. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக குருவிகள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. 20 மார்ச்

ஆ. 21 மார்ச்

இ. 22 மார்ச்

ஈ. 23 மார்ச்

  • உலக சிட்டுக்குருவி நாள் ஆண்டுதோறும் மார்ச்.20 அன்று கொண்டாடப்படுகிறது. நமது சுற்றுச்சூழலைப் பகிர்ந்து கொள்ளும் சிட்டுக்குருவிகள் மற்றும் பிற பறவைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டு உலக சிட்டுக்குருவி நாளுக்கானக் கருப்பொருள், “I Love Sparrows – நான் சிட்டுக்குருவிகளை நேசிக்கிறேன்” என்பதாகும். இந்தக் கருப்பொருள் மனிதர்களுக்கும் சிட்டுக் குருவிகளுக்கும் இடையே உள்ள சிறப்புத்தொடர்பை எடுத்துக்காட்டுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வாக்களிக்க வரையறுக்கப்பட்டுள்ள 13 அடையாள ஆவணங்கள் எவை?

வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க நிழற்பட வாக்காளர் அடையாள அட்டையுடன் சேர்த்து, மொத்தம் 13 வகையான ஆவணங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.

  1. வாக்காளர் அடையாள அட்டை.
  2. ஆதார் அட்டை.
  3. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை.
  4. நிழற்படத்துடன் கூடிய வங்கி /அஞ்சலக கணக்குப் புத்தகங்கள்.
  5. தொழிலாளர் நல அமைச்சகத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு அட்டை.
  6. ஓட்டுநர் உரிமம்.
  7. வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை.
  8. தேசிய மக்கள்தொகை பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை.
  9. இந்திய கடவுச்சீட்டு.
  10. நிழற்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்.
  11. மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிழற்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டை.
  12. மக்களவை, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை.
  13. மத்திய அரசின் சமூகநீதி & அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட தனித்துவம் மிக்க அடையாள அட்டை.

ஆகியவற்றின் அசல் ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து வந்து வாக்கினைச் செலுத்தலாம்.

பெயர் இருந்தால்தான் வாக்களிக்கலாம்:

அடையாள அட்டை இருப்பதால் மட்டும் வாக்கைச் செலுத்திவிட முடியாது. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்க வேண்டும். இருந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும். மாவட்ட தேர்தல் அலுவலரால் வாக்குப்பதிவு நாளுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகிக்கப்படும்.

2. பூடானில் இந்திய உதவியில் நவீன மருத்துவமனை: இருநாட்டு பிரதமர்கள் திறந்து வைத்தனர்.

பூடானில் இந்திய உதவியில் கட்டப்பட்ட தாய்-சேய் நல மருத்துவமனையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். தலைநகர் திம்புவில் திறக்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனை 150 படுக்கை வசதிகளைக் கொண்டதாகும். பூடானின் 12ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!