TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 22nd May 2024

1. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக அகதிகள் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.20

ஆ. மே.21

இ. மே.22

ஈ. மே.23

  • போர், துன்புறுத்தல் மற்றும் பொருளாதார காரணிகளால் புலம்பெயர்ந்த அகதிகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் மே.20 அன்று உலக அகதிகள் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. கடந்த 1975ஆம் ஆண்டு உருவான ஆப்பிரிக்க அகதிகள் நாளை தோற்றுவாயாகக் கொண்டு உருவான இந்த நாளை, 2000ஆம் ஆண்டில் ஐநா ஏற்றுக்கொண்டது. முதல் உலக அகதிகள் நாளானது 2001ஆம் ஆண்டில், 1951 அகதிகள் தீர்மானம் மற்றும் 1967 நெறிமுறையின் 50ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி கடைப்பிடிக்கப்பட்டது. நடப்பு 2024இல் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Hope Away from Home” என்பதாகும்.

2. Lunar Polar Exploration Mission (LUPEX) என்பது கீழ்க்காணும் எந்த இரண்டு விண்வெளி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டுப்பணியாகும்?

அ. ISRO மற்றும் JAXA

ஆ. NASA மற்றும் ISRO

இ. ESA மற்றும் ISRO

ஈ. ISRO மற்றும் CNSA

  • இந்தியா-ஜப்பான் கூட்டாண்மையில் தயாராகி வருகிற Lunar Polar Exploration Mission (LUPEX), ஜப்பானின் H3 ஏவுகலத்தின்மூலம் எதிர்வரும் 2025இல் ஏவப்படவுள்ளது. ISRO மற்றும் JAXAமூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இப் பணி, நிலவின் தென் துருவப்பகுதியை குறிப்பாக நீர் இருப்பு குறித்து ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அதிநவீன மேற்பரப்பு ஆய்வு தொழில்நுட்பத்தைக் கொண்டு நீர் இருப்பை ஆராயும் மற்றும் மண்ணை மாதிரி போன்றவற்றைச் சேகரிக்கும்.

3. அண்மையில் அதன் புதுப்பிக்கப்பட்ட, 2024ஆம் ஆண்டுக்கான, பாக்டீரியா முன்னுரிமை நோய்க்கிருமிகளின் பட்டியலை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக சுகாதார நிறுவனம்

ஆ. நாள்பட்ட நோய்களுக்கான உலகளாவிய கூட்டணி

இ. ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நிதியம்

ஈ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

  • உலக சுகாதார அமைப்பானது (WHO) அதன் 2024 – புதுப்பிக்கப்பட்ட பாக்டீரியா முன்னுரிமை நோய்க்கிருமிகளின் பட்டியலை வெளியிட்டது; இது நுண்ணுயிர் எதிர்ப்பிற்கு எதிரான போராட்டத்திற்கு உதவுகிறது. முதலில் 2017இல் 13 நோய்க்கிருமிகளுடன் வெளியிடப்பட்ட இது, தற்போது 2024 பட்டியலில் 24ஆக அதிகரித்துள்ளது. இது முதன்மை, உயர்நிலை மற்றும் நடுத்தர நிலை என வகைப்படுத்தப்பட்டுள்ளது. Multi-Criteria Decision Analysis (MCDA) என்ற முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இது, நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனுடைய பாக்டீரியா நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுநடவடிக்கைகளில் முதலீடு செய்ய வழிகாட்டுகிறது.

4. அண்மையில், அருணாச்சல பிரதேசத்தின் எந்த வனவிலங்கு சரணாலயத்தில் அழிந்து வரும் உயிரினமான சிவப்புப் பாண்டா தென்பட்டது?

அ. டாலே பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம்

ஆ. ஈகிள்னெஸ்ட் வனவிலங்கு சரணாலயம்

இ. கம்லாங் வனவிலங்கு சரணாலயம்

ஈ. திபாங் வனவிலங்கு சரணாலயம்

  • அருணாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள ஈகிள்னெஸ்ட் வனவிலங்கு சரணாலயத்தில் அண்மையில் சிவப்புப் பாண்டா ஒன்று தென்பட்டது. இந்தத் தாவர உண்ணி இனமானது அதன் மயிர்கள் நிறைந்த வாலை சமநிலைக்கும் உடல் வெப்பத்திற்கும் பயன்படுத்துகிறது. பிற உயிரிகளைக் கண்டால் நாணும் இது, மரங்களிலேயே பெரும்பாலும் வாழ்கிறது. வீட்டுப் பூனையைப் போலவே காணப்படும் இது, பூடான், சீனா, இந்தியா, மியான்மர் மற்றும் நேபாளம் முழுவதும் உள்ள மலைக்காடுகளில் வாழ்கிறது. வாழ்விட இழப்பால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இது, IUCNஆல் அழிந்துவரும் உயிரினம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது; CITES இணைப்பு-Iஇல் பட்டியலிடப்பட்டுள்ள இது, இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டம், 1972இன்கீழ் பாதுகாக்கப்படுகிறது.

5. 2024 – தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் ஆடவர் இரட்டையர் பட்டத்தை வென்ற இரண்டு இந்தியர்கள் யார்?

அ. HS பிரணாய் மற்றும் லக்ஷ்யா சென்

. சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி

இ. சாய் பிரனீத் மற்றும் சமீர் வர்மா

ஈ. நிகில் கனேட்கர் மற்றும் துருவ் கபிலா

  • 2024 – தாய்லாந்து ஓபன் ஆடவர் இரட்டையர் பிரிவில் உலகின் மூன்றாவது இடத்தில் உள்ள சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி இணை சென் போ யாங் மற்றும் லியு யியை வீழ்த்தி பட்டத்தைக் கைப்பற்றியது. பாங்காக்கின் நிமிபுத்ர் அரங்கில் 46 நிமிடங்கள் நடந்த போட்டியில், இந்திய இணை 21-15, 21-15 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பிரெஞ்சு ஓபனில் அவர்கள் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 2024ஆம் ஆண்டின் அவர்கள் வெல்லும் இரண்டாவது பட்டம் இதுவாகும். இது அவர்கள் வெல்லும் இரண்டாவது தாய்லாந்து ஓபன் பட்டமாகும்.

6. அண்மையில், மகளிர் பிரிவில் 2024 – இத்தாலிய ஓபன் பட்டத்தை வென்றவர் யார்?

அ. Y புடின்ட்சேவா

ஆ. இகா ஸ்வியாடெக்

இ. C காஃப்

ஈ. அரினா சபலெங்கா

  • அலெக்சாண்டர் சுவெரெவ் தனது இரண்டாவது இத்தாலிய ஓபன் ஒற்றையர் பட்டத்தை வென்ற அதே வேளையில், உலகின் முதல் நிலை வீராங்கனையான இகா ஸ்விடெக் தனது மூன்றாவது இத்தாலிய ஓபன் பட்டத்தை வென்றார். இகா ஸ்வியாடெக் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அரினா சபலெங்காவை தோற்கடித்து தனது 21ஆவது பட்டத்தை வென்றார். இது, கடந்த நான்கு ஆண்டுகளில் இகா ஸ்வியாடெக் வெல்லும் மூன்றாவது இத்தாலிய ஓபன் பட்டமாகும்.

7. ஆண்டுதோறும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.20

ஆ. மே.21

இ. மே.22

ஈ. மே.23

  • கடந்த 1991 மே.21ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் திருப்பெரும்புதூரில், விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தியின் படுகொலையை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நாள் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் அமைதி, ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்குமான இந்திய தேசத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இது பிரிவினை மற்றும் வன்முறை சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்க நாட்டு மக்களை ஊக்குவிக்கிறது.

8. அண்மையில், இந்திய விண்வெளி சுற்றுலாப் பயணியாகி வரலாறு படைத்த முதல் இந்தியர் யார்?

அ. அசுதோஷ் சர்மா

ஆ. கோபி தோட்டக்குரா

இ. அகிலேஷ் குப்தா

ஈ. பல்ராம் பார்கவா

  • புளூ ஆர்ஜினின் NS-25 பயணத்திட்டத்தில் பயணித்ததன்மூலம் வெளிநாடு வாழ் இந்தியரான கோபி தோட்டக்குரா முதல் இந்திய விண்வெளி சுற்றுலாப் பயணி என்றும் விண்வெளிக்குச் சென்ற இரண்டாவது இந்தியர் என்றும் ஆனார். நியூ ஷெப்பர்டின் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ஏழாவது பயணத் திட்டமானது, ஆறு பயணிகளை உள்ளடக்கியதாகும்; அதில் ஒருவர்தான் கோபி தோட்டக்குரா. முன்னாள் அதிபர் கென்னடியால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கறுப்பின விண்வெளி வீரரான எட் டுவைட்டையும் அக்குழுவில் இடம்பெற்றிருந்தார்.

9. R21/Matrix-M தடுப்பூசியுடன் தொடர்புடைய நோய் எது?

அ. டெங்கு

ஆ. சின்னம்மை

இ. மலேரியா

ஈ. பொன்னுக்கு வீங்கி

  • இந்தியாவின் சீரம் நிறுவனம் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்காக, ‘R21/Matrix-M’ மலேரியா தடுப்பூசியை ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யத்தொடங்கியுள்ளது. WHOஆல் பரிந்துரைக்கப்பட்ட இப்புதிய தடுப்பூசி, RTS,S/AS01 தடுப்பூசி வரிசையில் இணைந்துள்ளது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் நிறுவனம் மற்றும் SIIஆல் உருவாக்கப்பட்ட இது EDCTP, Wellcome Trust மற்றும் EIB ஆகியவற்றின் ஆதரவைப்பெற்றதாகும். மலிவு மற்றும் திறம் மிகுந்த இது, குழந்தைகளுக்கு வழங்க அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

10. ஜப்பானின் கோபியில் நடந்து வரும் 2024 – பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 400 மீட்டர் T20 பிரிவில் 55.06 வினாடிகளில் ஓடி உலக சாதனை படைத்த இந்திய பாரா தடகள வீராங்கனை யார்?

அ. தீப்தி ஜீவன்ஜி

ஆ. பாலக் கோஹ்லி

இ. ஏக்தா பயான்

ஈ. தீபா மாலிக்

  • ஜப்பானின் கோபியில் நடைபெற்ற 2024 – பாரா தடகள உலக சாம்பியன்ஷிப்பில் மகளிருக்கான 400 மீட்டர் T20 பிரிவில் இந்திய பாரா தடகள வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி 55.06 வினாடிகளில் ஓடி தங்கப்பதக்கம் வென்று உலக சாதனை படைத்தார். முன்னதாக தகுதிச்சுற்றில் 56.18 வினாடிகளில் ஓடி ஆசிய அளவில் புதிய சாதனை படைத்தார். 2023 – ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியிலும் தீப்தி ஜீவன்ஜி தங்கம் வென்றார். கூடுதலாக, ஆடவருக்கான F56 பிரிவு வட்டெறிதலில் யோகேஷ் கதுனியா 41.80 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளி வென்றார்.

11. கோபர்நிகஸ் அவசரகால மேலாண்மை சேவை திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. வேளாண் ஆராய்ச்சி

ஆ. பேரிடர் மேலாண்மை

இ. வனவிலங்கு பாதுகாப்பு

ஈ. நகர்ப்புற திட்டமிடல்

  • கிழக்கு அஜர்பைஜானில் ஈரானிய அதிபர் இப்ராகிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கு பதிலளிக்கும் விதமாக, ஐரோப்பிய ஒன்றியம் அதன் கோப்பர்நிகஸ் அவசரகால மேலாண்மை சேவையின் வரைபடமாக்கல் சேவையைச் செயல்படுத்தியது. நிக்கோலஸ் கோப்பர்நிகஸின் பெயரால் வழங்கப்படும் இத்திட்டம், கடந்த 1998இல் தொடங்கப்பட்டதிலிருந்து புவி கண்காணிப்புத் தரவுகளை வழங்கி வருகிறது. இயற்கைப் பேரிடர்கள், மனிதனால் உருவாக்கப்பட்ட அவசரநிலைகளின்போது உதவுவதற்காக, கோப்பர்நிகஸ் அவசர மேலாண்மை சேவை (EMS) திட்டம் துல்லியமான புவிசார் தகவல்களை வழங்குகிறது.

12. அண்மையில், ‘Water for Shared Prosperity’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. WHO

ஆ. UNEP

இ. உலக வங்கி

ஈ. IMF

  • இந்தோனேசியாவின் பாலியில் நடந்த 10ஆவது உலக நீர் மன்றத்தில் உலக வங்கி, “பகிரப்பட்ட செழுமைக்கான நீர்” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்டது. பகிரப்பட்ட செழிப்பு என்பது சமமான வளர்ச்சியாக (குறிப்பாக ஏழைகளுக்கு) வரையறுக்கப்படுகிறது. இது மனிதம், சமூகம் மற்றும் இயற்கை மூலதனம் மற்றும் பொருளாதார வாய்ப்புகள் என்ற நான்கு முக்கிய தூண்களை அடையாளம் காட்டுகிறது. மக்கள்தொகை வளர்ச்சி, நகரமயமாக்கல் மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக நீர் அணுகலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை இது எடுத்துக்காட்டுகிறது. 2022 இல், 197 மில்லியன் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை, 211 மில்லியன் பேருக்கு அடிப்படை சுகாதாரம் கிடைக்கவில்லை, 450 மில்லியன் பேர் உலகளவில் அதிக வறுமை, குறைந்த நீர் அணுகல் பகுதிகளில் உள்ளனர்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. தமிழ்நாட்டின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்.

ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில், உயரம் தாண்டுதலில் தமிழ்நாட்டின் D மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஈட்டியெறிதலில் சுமித் அன்டில் தனது சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டார்.

2. விண்வெளி கருந்துளையில் உயர் ஆற்றல் X-ரே சீரற்ற நிலையில் வெளியேற்றம்: ஆய்வில் கண்டுபிடிப்பு.

விண்வெளியின் கருந்துளையிலிருந்து உயராற்றலுடன் கூடிய ஊடு-கதிர் சீரற்ற நிலையில் வெளியேறுவதை ஆஸ்ட்ரோசாட் விண்கலன் துணையுடன் இந்திய வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 2015ஆம் ஆண்டு விண்வெளி ஆய்வுக்காக PSLV C30 ஏவுகலம்மூலம் ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. புற-ஊதாக் கதிர்கள், X-ரே கதிர்கள் உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ய அது அனுப்பப்பட்டது.

கருந்துளையைப் பொருத்தவரை அனைத்தையும் உள்வாங்கிக் கொள்ளும் தீவிர ஈர்ப்பு விசையைக் கொண்டதாக அறியப்படுகிறது. அந்த வகையில், ஏதேனும் பெருவெடிப்பு அதனுள் நிகழும்போது போட்டான் கூறுகள் வெளியேறி ஊடு கதிர்கள் உருவாகும். அதன்படி, கடந்த ஆண்டு செப்.08-13 வரையிலான ஒரு வார காலகட்டத்துக்குள் 1.4 Hz முதல் 2.4 Hz வரையிலான சீரற்ற ஊடு கதிர் போட்டான் வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்தத் தகவலை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

3. வங்கக்கடலில் உருவானது ‘ரிமால்’ புயல்.

வங்கக்கடலில், ‘ரிமால்’ எனப்படும் புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் 2024 மே.26 அன்று வங்களாதேசத்தைத் தாக்கும். இப்புயலின் தாக்கத்தால் நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘ரிமால்’ என்ற சொல் அரபு மொழியாகும். இதன் பொருள், ‘மணல்’ என்பதாகும். 2018இல் ஓமன் உலக வானிலையியல் அமைப்பில் வரவிருக்கும் சூறாவளிப் பெயர்களின் பட்டியலில் இப்பெயரை முன்மொழிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!