Tnpsc Current Affairs in Tamil – 22nd March 2024
1. மெட்ராஸ் இசை அகாதெமியால் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான, ‘சங்கீத கலாநிதி’ விருது பெற்றவர் யார்?
அ. அருணா சாய்ராம்
ஆ. N G கணேசன்
இ. T M கிருஷ்ணா
ஈ. ரீத்தா ராஜன்
- கர்நாடக இசைக்கலைஞர் T M கிருஷ்ணாவுக்கு மெட்ராஸ் இசை அகாதெமியின் 2024ஆம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது வழங்கப்பட்டுள்ளது. அவரின் ஆற்றல்வாய்ந்த குரல், பாரம்பரியத்தை கடைப்பிடித்தல், இசையில் ஆய்வு அணுகுமுறை, சமூக சீர்திருத்தத்திற்கான கருவியாக இசையைப்பயன்படுத்துதல் ஆகியவற்றை இவ்விருது அங்கீகரிக்கிறது.
2. எந்த மாநிலத்தின் கால்நடை பராமரிப்புத் துறையானது, ‘தென்மலைக் குள்ளன்’ என்ற குள்ள மாட்டினத்தை உள்நாட்டு இனமாக அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. கர்நாடகா
- ‘தென்மலைக்குள்ளன்’ என்ற குள்ளமாட்டினத்தை ஓர் உள்நாட்டு இனமாகப் பதிவுசெய்ய திட்டமிட்டுள்ளதாக கேரள மாநில கால்நடை பராமரிப்புத்துறை அறிவித்துள்ளது. அம்மாடு அதன் தனித்துவமான அம்சங்களுக்காகவும், உள்ளூர் வேளாண்-சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைத்து வாழ்வதற்காகவும் அறியப்படுகிறது. தென்மலைக் குள்ளன் மாடு பொதுவாக இப்பகுதியில் உள்ள பாரம்பரிய விவசாய நடைமுறைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. சிறிய திமிலுடைய இம்மாட்டினத்தை அரிப்பா மற்றும் தென்மலை பழங்குடியினர் மிகுதியாக வளர்க்கின்றனர்.
3. கல்கொத்தி-வாளையார் வழித்தடம் என்பது எந்த இருமாநிலங்களுக்கு இடையே அமைந்துள்ள முதன்மையான யானை வழித்தடமாகும்?
அ. தமிழ்நாடு மற்றும் கேரளா
ஆ. ஆந்திரா மற்றும் தெலுங்கானா
இ. மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா
ஈ. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா
- முன்மொழியப்பட்டுள்ள கல்கொத்தி-வாளையார் வழித்தடத்தில் ஏற்படும் இடையூறுகள் காரணமாக யானைகள் கிராமங்களுக்குள் படையெடுத்து வருகின்றன. கோயம்புத்தூர் மதுக்கரை சுற்றியுள்ள பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் அதிகரிக்க இது வழிவகுத்துள்ளது. கோயம்புத்தூர் வனப்பிரிவு கேரளத்தின் நிலம்பூர்-அமைதிப் பள்ளத் தாக்கு மற்றும் சத்தியமங்கலம், நீலகிரி மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே ஒரு முதன்மையான இணைப்பாக செயல்படுகிறது. தமிழ்நாடு-கேரள யானைகளின் போக்குவரவிற்கு இன்றியமையாத கல்கொத்தி-வாளையார் வழித்தடமானது, தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய இடம் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உட்பட பல்வேறு நில பயன்பாடுகள் மற்றும் கட்டுமான நடவடிக்கைகளால் இடையூறு சிக்கல்களை எதிர்கொள்கிறது.
4. ULLAS முன்னெடுப்புடன் தொடர்புடைய துறை எது?
அ. கல்வித்துறை
ஆ. சுகாதாரத் துறை
இ. வேளாண் துறை
ஈ. நிதித்துறை
- இந்தியாவின் கல்வியமைச்சகத்தின் கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை 2024 மார்ச்.17ஆம் தேதி அன்று 23 மாநிலங்களில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணியல் மதிப்பீட்டுத்தேர்வை (FLNAT) நடத்தியது. FLNAT என்பது ULLAS – நவபாரத் சாக்ஷர்தா காரியக்ரம் முன்னெடுப்பின் ஒருபகுதியாகும்; இது நாடு முழுவதும் கல்வியில் புரட்சியை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ULLAS (Understanding of Lifelong Learning for All in Society) தனிநபர்களுக்கான கற்றல் சூழலை உருவாக்குகிறது. அடிப்படைக்கல்வி, டிஜிட்டல் மற்றும் நிதியியல் கல்வியறிவு மற்றும் முக்கியமான வாழ்க்கைத் திறன்களை வழங்குகிறது; குறிப்பாக 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பள்ளி வாய்ப்புகள் இல்லாதவர்களுக்கு இது வாய்ப்புகளை வழங்குகிறது.
5. பெட்ரோலிய அமைச்சகத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, ‘எத்தனால்-100’ என்ற எரிபொருள், தற்போது எத்தனை மாநிலங்களில் கிடைக்கப்பெறுகிறது?
அ. 3
ஆ. 4
இ 5
ஈ. 6
- மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தில்லியில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையத்தில், ‘எத்தனால்-100’ என்ற புதிய வாகன எரிபொருளை அறிமுகம் செய்து வைத்தார். இந்த எத்தனால் அடிப்படையிலான எரிபொருள் மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தர பிரதேசம், புது தில்லி மற்றும் தமிழ்நாடு முழுவதும் 183 விற்பனை நிலையங்களில் தற்போது கிடைத்து வருகிறது.
6. ஆண்டுதோறும், ‘படைக்கருவிகள் தொழிற்சாலைகள் நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
அ. 17 மார்ச்
ஆ. 18 மார்ச்
இ. 19 மார்ச்
ஈ. 20 மார்ச்
- நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும், ‘படைக்கருவிகள் தொழிற்சாலைகள் நாளுக்கானக்’ கருப்பொருள், “Operational Efficiency, Readiness, and Mission Accomplishment in the Maritime Domain” என்பதாகும். திறன்மிகுந்த படைக் கருவிகள் உற்பத்தி மற்றும் விநியோக வலையமைப்புகள்மூலம் நாட்டின் கடற்படைத்திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தை இந்தக் கருப்பொருள் எடுத்துக்காட்டுகிறது. படைக்கருவிகள் தொழிற்சாலைகள் நாளானது ஆண்டுதோறும் மார்ச்.18 அன்று கொண்டாடப்படுகிறது. கொல்கத்தாவின் காஷிப்பூரில் முதல் படைக்கருவிகள் தொழிற்சாலை நிறுவப்பட்டதை இந்நாள் நினைவுகூருகிறது.
7. 2023 – உலக காற்று தர அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக சுகாதார அமைப்பு
ஆ. IQAir என்ற சுவிஸ் அமைப்பு
இ. ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம்
ஈ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்
- சுவிஸ் அமைப்பான IQAir, கடந்த 2023ஆம் ஆண்டுக்கான உலக காற்று தர அறிக்கையில் தில்லி உலகின் மிகவும் மாசுபட்ட தலைநகரம் எனக் குறிப்பிட்டுள்ளது. சராசரி ஆண்டு PM2.5 செறிவு 54.4 µg/m³உடன் காற்றின் தரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. வங்காளதேசமும் பாகிஸ்தானும் மோசமான நிலையில் உள்ளன. அதே நேரத்தில் பீகாரின் பெகுசராய் மிகவும் மாசுபட்ட பெருநகரப்பகுதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- லாகூர் தவிர பட்டியலின் முதல் 11 மாசுபட்ட நகரங்களில் 10 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் 96% மக்கள்தொகை WHO வழிகாட்டுதல்களைவிட PM2.5 என்ற செறிவு அளவை எதிர்கொள்கின்றன.
8. பயிர் உருவகப்படுத்துதல் மாதிரி அடிப்படையிலான சாதனமான ‘e-crop’ஐ உருவாக்கிய நிறுவனம் எது?
அ. மத்திய தோட்டப் பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், காசர்கோடு
ஆ. மத்திய கிழங்குப்பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனம், கேரளா
இ. மத்திய தீவு வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனம், போர்ட் பிளேர்
ஈ. தேசிய நெல்லாராய்ச்சி நிறுவனம், கட்டாக்
- ஒரு பயிர் உருவகப்படுத்துதல் மாதிரி அடிப்படையிலான சாதானமான ‘e-Crop’, நீர் மற்றும் ஊட்டச்சத்து தேவைகள் குறித்து விவசாயிகளுக்கு குறுந்தகவல் வழியாக ஆலோசனைகளை வழங்குகிறது. கேரள மாநிலத்தின் CTCRIஇன் சந்தோஷ் மித்ராவால் உருவாக்கப்பட்ட இது, 2014இலேயே இந்திய காப்புரிமை அலுவலகத்திலிருந்து காப்புரிமை பெற்றது. விவசாயிகள், ‘கிரிஹி கிருத்யா’ செயலியைப் பயன்படுத்தி மண்ணின் ஈரப்பதத் தரவைப் பதிவுசெய்து, பகுப்பாய்வுக்காக சேவையகத்திற்கு அனுப்புகிறார்கள். இப்புதுமையான சாதனம், மேம்பட்ட பயிர் விளைச்சலுக்கான நீர் மற்றும் ஊட்டச்சத்து மேலாண்மையை மேம்படுத்துவதற்கு விவசாயிகளுக்கு உதவுகிறது.
9. ‘டைகர் டிரையம்ப்’ என்ற பயிற்சியானது கீழ்காணும் எந்த இரு நாடுகளுக்கு இடையே நடத்தப்படுகிறது?
அ. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா
ஆ. இந்தியா மற்றும் சூடான்
இ. இந்தியா மற்றும் இங்கிலாந்து
ஈ. இந்தியா மற்றும் அமெரிக்கா
- இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே முப்படைகள் பங்கேற்கும் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண பயிற்சியான, ‘TIGER TRIUMPH–24’, கிழக்குக்கடற்பகுதியில் மார்ச்.18-31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அமெரிக்க இராணுவ வீரர்கள், அமெரிக்க கடற்படையினர் மற்றும் அந்த நாட்டுக் கடற்படைக் கப்பல்கள் அமெரிக்கா சார்பில் பங்கேற்கின்றனர். இந்தப் பயிற்சி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண செயல்பாடுகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதில் துறைமுக கட்டப் பயிற்சியை மார்ச்.18-25 வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இருநாடுகளின் கடற்படைப் பணியாளர்களும் இதில் பங்கேற்பார்கள். துறைமுகக் கட்டம் நிறைவடைந்ததும், கப்பல்களில் வீரர்கள் கடலுக்குச் சென்று மனிதாபிமான உதவி & பேரிடர் நிவாரணம் தொடர்பாக கடல்சார் நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
10. அண்மையில், நேபாளம் எந்த நகரத்தை அதன் சுற்றுலா தலைநகரமாக அறிவித்தது?
அ. பரத்பூர்
ஆ. பொக்காரா
இ. கைகாட்
ஈ. கோராஹி
- நேபாள அரசு, கந்தகி மாகாணத்தில் உள்ள பொக்காரா நகரத்தை, நாட்டின் சுற்றுலா தலைநகரமாக அறிவித்துள்ளது. ஃபெவா ஏரியின் கரையில் உள்ள பராகி காட் என்ற இடத்தில் நடந்த விழாவின்போது இந்த அறிவிப்பு செய்யப்பட்டது. இந்நடவடிக்கையானது பொக்காராவின் தகுதியை உயர்த்தவும், நேபாளத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், உலகளாவிய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
11. சமிக்ஞைகள் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் ஏற்புக்குழு (Signals Technology Evaluation and Adaptation Group – STEAG) என்பதுடன் தொடர்புடையது எது?
அ. CISF
ஆ. இந்திய இராணுவம்
இ. NSG
ஈ. இந்திய கடலோர காவல்படை
- சமிக்ஞைகள் தொழில்நுட்ப மதிப்பீடு மற்றும் ஏற்புக்குழு (STEAG) என்பது இந்திய இராணுவத்தின் ஒரு சிறப்புப் பிரிவாகும்; இது பாதுகாப்பு பயன்பாடுகளுக்கான அதிநவீன தகவல் தொடர்பு தொழில்நுட்பங்களை ஆய்வுசெய்து மதிப்பீடு செய்கிறது. STEAG என்பது இந்திய இராணுவத்தில் உள்ள முதல் சிறப்புப்பிரிவாகும். இது ஒரு கர்னல்-அளவிலான அதிகாரி தலைமையில் உள்ளது. தோராயமாக 280 பணியாளர்களைக் கொண்ட இந்தப் பிரிவு, இராணுவத்திற்குள் தகவல் தொடர்பு உட்கட்டமைப்பில் புரட்சியை ஏற்படுத்தவுள்ளது.
12. ‘கோவிந்த் குழுவுடன்’ தொடர்புடையது எது?
அ. ஆளுநர் நியமனம் குறித்தது
ஆ. ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்புடையது
இ. இட ஒதுக்கீடு
ஈ. தேர்தல் பத்திரம்
- முன்னாள் குடியரசுத்தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையிலான ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்த உயர்மட்டக் குழு, மக்களவை, மாநில சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி (நகராட்சிகள், பஞ்சாயத்துகள்) தேர்தல்களை ஒருங்கே நடத்துவதை முன்மொழிகிறது. இதைச் செயல்படுத்த, தேர்தல்களுக்கான நடைமுறைகள் உட்பட 15 அரசியலமைப்பு திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றங்களைச் செயல்படுத்த இரண்டு அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் முன்மொழியப்பட்டுள்ளன. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இந்தியா-பூடான் இடையே ரெயில் போக்குவரத்து: இருநாட்டு பிரதமர்கள் முன்னிலையில் ஒப்பந்தம்.
இருநாட்டு பிரதமர்களின் முன்னிலையில் இந்தியா-பூடான் இடையே ரெயில் போக்குவரத்து ஏற்படுத்துவது உள்பட பல்வேறு துறைசார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. எரிசக்தி, எண்ம இணைப்பு, விண்வெளி, வேளாண்மை, இளையோர் நலன் மற்றும் பிற துறைளில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. குறிப்பாக, இந்தியா-பூடான் இடையே கோக்ராஜ்கர்-கெலேபு, பனார்ஹட்-சம்சே ஆகிய வழித்தடங்களில் ரெயில் போக்குவரத்து ஏற்படுத்துவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து, முதன்முறையாக பூடான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதிக்கு, ‘ஆர்டர் ஆஃப் டுரூக் கியால்பூ’ என்ற விருதை வழங்கி அரசர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக் கௌரவித்தார்.