TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 22nd December 2023

1. எந்த நாட்டின் ஆயுதப்படைக்கு அவற்றின் சிறந்த செயல்திறனுக்காக, ‘தங்க ஆந்தை’ விருது வழங்கப்பட்டுள்ளது?

அ. சீனா

ஆ. இலங்கை

இ. சிங்கப்பூர்

ஈ. இந்தியா

  • இந்திய ஆயுதப்படைகளின் சிறந்த செயல்திறனுக்காக, ‘தங்க ஆந்தை’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது இலங்கையில் உள்ள பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியால் (DSCSC) இந்திய ஆயுதப்படையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகளுக்கு அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக வழங்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட இவ்விருது, பகுப்பாய்வுத்திறன், உத்திசார் சிந்தனை மற்றும் எதிர்கால தலைமைத்துவத்திற்கான அவர்களின் திறனை அங்கீகரிக்கிறது.

2. அண்மையில், தேசிய புவி அறிவியல் தரவுக் களஞ்சிய இணையதளத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?

அ. புவி அறிவியல் அமைச்சகம்

ஆ. சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம்

இ. சுரங்க அமைச்சகம்

ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

  • மத்திய சுரங்க அமைச்சகமானது 2023 டிச.19 அன்று புது தில்லியில் நடந்த விழாவில் தேசிய புவி அறிவியல் தரவுக் களஞ்சியத்துக்கான இணையதளத்தைத் தொடங்கியது. தேசிய புவி அறிவியல் தரவுக் களஞ்சியம் என்பது நாடு முழுவதும் உள்ள புவிசார் தகவல்களை அணுகுவதற்கும், பகிர்வதற்கும், பகுப்பாய்வு செய்வதற்கும் ஒரு விரிவான இணையவழி தளத்தை வழங்குகிறது. இம்முன்னெடுப்பை இந்திய புவியியல் ஆய்வுமையம் & பாஸ்கராச்சார்யா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவித்தகவலியல் நிறுவனம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் முதன்மையான புவி அறிவியல் தரவுகளை மக்களிடம்கொண்டு சேர்ப்பத்தில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கும்.

3. தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டு திட்டத்தின்கீழ் எத்தனை வழித்தடங்கள் உருவாக்கப்படுகின்றன?

அ. 11

ஆ. 12

இ. 13

ஈ. 14

  • இந்திய அரசும் ஆசிய வளர்ச்சி வங்கியும் (ADB) 2023 டிசம்பர்.15 அன்று $250 மில்லியன் மதிப்பிலான கொள்கை அடிப்படையிலான கடனொப்பந்தத்தில் கையெழுத்திட்டன. தேசிய தொழிற்துறை வழித்தட மேம்பாட்டுத்திட்டமானது (NICP) உலகத்தரம்வாய்ந்த உற்பத்தி வசதிகளை மேம்படுத்தவும், இந்தியாவில் எதிர்காலத்தில் உருவாகப்போகும் தொழில் நகரங்களை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டது. இந்தத்திட்டத்தின்கீழ் 11 தொழிற்துறை வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இது மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளது.

4. காக்ரபார் அணுமின் திட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. கர்நாடகா

ஆ. இராஜஸ்தான்

இ உத்தர பிரதேசம்

ஈ. குஜராத்

  • குஜராத்தில் உள்ள காக்ரார் அணுமின் திட்டத்தின் (KAPP-4) நான்காவது அலகு, 700 Mwe திறன்கொண்டதாகும். இது கட்டுப்படுத்தப்பட்ட பிளவு சங்கிலி எதிர்வினையின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் அண்மையில் முக்கியமான நிலையை எட்டியது. காக்ரபார் அணுமின் திட்டமானது இந்திய அணுவாற்றல் கழகத்தால் கட்டப்பட்ட மிகப்பெரிய உள்நாட்டு அணுவாற்றல் உலைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் இயற்கையான யுரேனியத்தை எரிபொருளாகவும், கனநீரைக் குளிரூட்டியாகவும் பயன்படுத்துகின்றன.

5. அறிவியலாளர்கள், என்செலடஸில் உயிர்கள் உருவாவதற்கு ஒரு முக்கிய மூலக்கூறாக விளங்கும் ஹைட்ரஜன் சயனைடை அண்மையில் அடையாளம் கண்டுள்ளனர். என்செலடஸ் என்பது எதன் நிலவாகும்?

அ. வியாழன்

ஆ. சனி

இ. செவ்வாய்

ஈ. வெள்ளி

  • NASAஇன் காசினி விண்கலத்தின் தரவுகளைப் பயன்படுத்தி அறிவியலாளர்கள் சனியின் பனிக்கட்டி நிலவான என்செலடஸின் பெருங்கடல்களில் உயிர் உருவாக்கத்திற்கான ஒரு முக்கியமான மூலக்கூறான ஹைட்ரஜன் சயனைடைக் கண்டுபிடித்துள்ளனர். நேச்சர் ஆஸ்டரானமி என்ற இதழில் இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ளது. 2004 மற்றும் 2017ஆம் ஆண்டுக்கு இடையில் சேகரிக்கப்பட்ட காசினியின் தரவுகளை அடிப்படையாகக்கொண்ட இந்த ஆராய்ச்சி, என்செலடஸின் மேற்பரப்பில் இருந்து வெளிப்படும் நீராவியில் மெத்தனால், ஈத்தேன் மற்றும் உயிர்வளி ஆகியவற்றுடன் ஹைட்ரஜன் சயனைடையும் அடையாளம் கண்டுள்ளது.

6. உலக சுகாதார அமைப்பின் (WHO) புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் NOMA சமீபத்தில் சேர்க்கப்பட்டது. இந்த நோய் கீழ்காணும் எந்த உடல் உறுப்புகளைப் பாதிக்கிறது?

அ. மூளை

ஆ. முகம் மற்றும் வாய்

இ. குடல்

ஈ. சிறுநீரகம்

  • உலக சுகாதார நிறுவனம் (WHO) அண்மையில் அதன் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் வாய் மற்றும் முகத்தை பாதிக்கும் கடுமையான குடலிறக்க நோயான NOMAஐ சேர்த்துள்ளது. கேன்க்ரம் ஓரிஸ் என்றும் அறியப்படும், ‘NOMA’இன் இறப்பு விகிதம் ஏறக்குறைய 90%ஆக உள்ளது. இது தீவிர வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சுகாதாரம் மற்றும் வாய்வழி சுகாதாரத்திற்கான போதுமான அணுகல் ஆகியவற்றுடன் மிக நெருக்கமாக தொடர்புடையது. வறிய நிலையிலுள்ள 2-6 வயதுடைய குழந்தைகளை முதன்மையாக பாதிக்கிறது.
  • வரலாற்று ரீதியாக, ‘வறுமையின் முகம்’ என்று அழைக்கப்படும் NOMA, மேற்கத்திய உலகில் பரவலாக இருந்து வந்தது. புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்கள் என்பது ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்காவின் வளரும் பகுதிகளில் குறைந்த வருமானம்கொண்ட மக்களில் பரவலாகக் காணப்படும் நோய்த்தொற்றுகளின் தொகுப்பாகும். வைரஸ்கள், பாக்டீரியாக்கள், புரோட்டோசோவா மற்றும் ஒட்டுண்ணிப்புழுக்கள் (ஹெல்மின்ஸ்) உள்ளிட்ட பல்வேறு நோய்க்கிருமிகளால் இந்த நோய்கள் ஏற்படுகின்றன.

7. கேலோ இந்தியா பாரா விளையாட்டுக்களின் தொடக்கப்பதிப்பில், ‘சிறந்த செயல்திறன் கொண்ட’ மாநிலமாக உருவெடுத்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஹரியானா

இ. கேரளா

ஈ. உத்தரபிரதேசம்

  • தில்லியில் நடந்த கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளின் தொடக்கப்பதிப்பை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்து வைத்தார். ஹரியானா 40 தங்கம் உட்பட 105 பதக்கங்களைப் பெற்று, ‘சிறந்த செயல்திறன்’கொண்ட மாநிலமாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் உள்ளன. கேலோ இந்தியா பாரா விளையாட்டுக்கள் என்பது இந்தியாவில் உள்ள பாரா-தடகள வீரர்/வீராங்கனைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்ட ஒரு முன்னெடுப்பாகும்.

8. அல் நஜா, ஈஸ்டர்ன் பிரிட்ஜ் மற்றும் நசீம் அல் பஹர் ஆகிய இராணுவப்பயிற்சிகளை, இந்தியா, கீழ்காணும் எந்த அரபு நாட்டுடன் நடத்துகிறது?

அ. ஐக்கிய அரபு அமீரகம்

ஆ. ஓமன்

இ. சவூதி அரேபியா

ஈ. ஈராக்

  • அண்மையில், இந்தியாவும் ஓமனும் எதிர்காலத்திற்கான இந்தியா-ஓமன் கூட்டாண்மையை ஏற்றுக்கொண்டன. இந்த ஆவணம் 8 முதல் 10 பகுதிகளில் கூட்டாண்மைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இணைப்பு, ஆற்றல் பாதுகாப்பு, விண்வெளி, டிஜிட்டல் பணம் செலுத்துதல், சுகாதாரம், சுற்றுலா, விருந்தோம்பல், விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கும். கூட்டு ராணுவ ஒத்துழைப்புக் குழு என்பது பாதுகாப்புத் துறையில் இந்தியாவுக்கும் ஓமனுக்கும் இடையேயான ஈடுபாட்டின் மீவுயர்ந்த மன்றமாகும். இராணுவப் பயிற்சிகள்: தரைப்படைப் பயிற்சி: அல் நஜா; வான்படைப் பயிற்சி: ஈஸ்டர்ன் பிரிட்ஜ்; கடற்படைப் பயிற்சி: நசீம் அல் பஹ்ர்.

9. தில்லியில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் மற்றும் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப் ஆகியவை கீழ்காணும் எந்தச் சீக்கிய குருவுடன் தொடர்புடையவை?

அ. குரு தேக் பகதூர்

ஆ. குரு நானக்

இ. குரு அர்ஜுன் தேவ்

ஈ. குரு ராம் தாஸ்

  • குரு தேக் பகதூரின் தியாக நாளை முன்னிட்டு பிரதமர் மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தினார். அவர் சீக்கிய மதத்தின் பத்துக் குருக்களில் ஒன்பதாவது குரு ஆவார். மேலும் குரு ஹர்கோவிந்தின் இளைய மகனும் ஆவார். முகலாயர்களுக்கு எதிராக இராணுவத்தை எழுப்பி, ‘போர்வீரர் புனிதர்கள்’ என்ற கருத்தை அறிமுகப்படுத்திய ஆறாவது சீக்கிய குருவான குரு ஹர்கோபிந்த் மற்றும் மாதா நான்கி ஆகியோருக்கு அவர் பிறந்தார். அவரது எழுத்துக்கள் புனித நூலான, ‘குரு கிரந்த சாகிபில்’ 116 கவிதைப்பாடல்கள் வடிவில் இடம்பெற்றுள்ளன.
  • முகலாய ஆட்சியாளர்களை எதிர்த்து கிளர்ச்சியில் ஈடுபட்டதற்காக தில்லியில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் ஆணையின் பேரில் அவர் 1675இல் கொல்லப்பட்டார். தில்லியில் உள்ள குருத்வாரா சிஸ் கஞ்ச் சாஹிப் மற்றும் குருத்வாரா ரகாப் கஞ்ச் சாஹிப் ஆகியவை அவருக்குத் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்ட இடத்தையும் தகனம் செய்த இடத்தையும் குறிக்கின்றன.

10. சமீபத்தில் கொடியசைத்துத் தொடக்கிவைக்கப்பட்ட காசி தமிழ்ச் சங்கமம் விரைவு இரயிலானது வாரணாசியை தென்னிந்தியாவில் உள்ள எந்த நகரத்துடன் இணைக்கும் புதிய இரயில் சேவையாகும்?

அ. சென்னை

ஆ. சேலம்

இ. மதுரை

ஈ. கன்னியாகுமரி

  • சீர்மேவும் தமிழ்நாட்டில் அமைந்துள்ள இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியிலிருந்து வடக்கே அமைந்துள்ள புனித நகரமான வாரணாசியை இணைக்கும் புதிய வழமை ரயில்சேவையான காசி தமிழ்ச்சங்கமம் விரைவு இரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். ‘காசி தமிழ்ச் சங்கமம்’ கலாச்சார ஒருங்கிணைப்பு நிகழ்வுக்காக வாரணாசிக்கு வருகைதந்த அவர் இரயிலின் தொடக்க ஓட்டத்தை கொடியசைத்துத் தொடக்கிவைத்தார். தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயுள்ள பண்டைய பிணைப்பை எடுத்துரைக்கும் வகையில் இந்த இரயில் தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்கள் வழியாக 32 மணிநேரத்திற்கும் மேல் பயணிக்கும்.

11. அண்மைச்செய்திகளில் இடம்பெற்ற பாரம்பரிய குமேரி சாகுபடியை மேற்கொள்ளும் பழங்குடியின மக்கள் வாழும் பகுதி எது?

அ. வடகிழக்கு இந்தியா

ஆ. மேற்குத்தொடர்ச்சி மலைகள்

இ. தென்னிந்தியா

ஈ. கிழக்குத்தொடர்ச்சி மலைகள்

  • கோவா மாநிலம் சத்தாரி மாவட்டத்தின் புய்பால் கிராமத்தில் டெரகோட்டா கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன; அவை வரலாற்று ரீதியாக அப்பிராந்தியத்தில் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய குமேரி விவசாய நடைமுறைகள் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது. குமேரி என்பது நாட்டுப்புற தெய்வங்களுக்கு அளிக்கப்படும் காணிக்கைகளை உள்ளடக்கிய வெட்டு மற்றும் எரிப்பு வேளாண்மையைக் குறிக்கிறது. குமேரி சாகுபடி பெரும்பாலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் குறிப்பாக கோவாவில் உள்ள பழங்குடியின மக்களால் மேற்கொள்ளப்படுகிறது.

12. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, உலகின் மிகப்பெரிய வைரங்களை உற்பத்தி செய்யும் நாடு எது?

அ. இந்தியா

ஆ. ரஷ்யா

இ. பெல்ஜியம்

ஈ. அமெரிக்கா

  • ரஷ்யா உலகின் மிகப்பெரிய தீட்டப்படாத வைரங்களை உற்பத்தி செய்யும் நாடாக உள்ளது. G7 நாடுகள் ஜன.1 முதல் ரஷ்யாவிடமிருந்து தீட்டப்படாத வைரங்களை இறக்குமதி செய்ய தடைவிதிப்பதாக அறிவித்துள்ளன. இது உக்ரைன் மீதான படையெடுப்பிற்கு உதவும் மாஸ்கோவின் வருவாயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் ஒருபகுதியாகும். தடையை மீறுவதைத் தடுப்பதற்காக, செப்டம்பர் மாதத்துக்குள் வைரங்களின் மூலத்தைக் கண்டறியும் முறையை அறிமுகப்படுத்த G7 திட்டமிட்டுள்ளது.

13. 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவில் எஃகு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கற்கரியாக்கக்கரியின் (coking coal) முதன்மை மூலமாக விளங்கும் நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. சீனா

இ. ஆஸ்திரேலியா

ஈ. ஜெர்மனி

  • 2023 ஏப்ரல்-ஆகஸ்ட் வரை இறக்குமதி செய்யப்பட்ட 25.6 மில்லியன் டன்களில் 13 மில்லியன் டன்களுக்கு மேல் இந்தியாவிற்கு எஃகு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் கற்கரியாக்கக்கரியை வழங்குவதில் ஆஸ்திரேலியா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இறக்குமதி சார்ந்திருப்பைக் குறைப்பதற்காக உள்நாட்டு நிலக்கரி எடுப்புத்திறனை அதிகரிக்க முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பத்திரிகை பதிவு நடைமுறையை எளிதாக்கும் மசோதா நிறைவேற்றம்.

பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச்சட்டம், 1867க்கு மாற்றாக இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கு நடைமுறையிலிருந்த சட்டத்தில் எட்டுப்படிநிலைகள் இருந்தன. தற்போது அந்த முறை ஒற்றைப்படிநிலையாக மாற்றப்பட்டுள்ளது.

2. சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்: சாம்பியன் குகேஷ்.

சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் 2023 செஸ் போட்டியில் இந்தியாவின் இளம்வீரர் டி. குகேஷ் சாம்பியனானார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சென்னையில் கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி நடந்து வந்தது. வரும் 2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் மாஸ்டர்ஸ் போட்டிக்கான தகுதி ஆட்டமாக இது நடைபெற்றது. ஏற்கெனவே இந்தியாவில் இருந்து பிரக்ஞானந்தா, விதித் குஜராத்தி, மகளிர் பிரிவில் வைஷாலி ஆகியோர் கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளனர்.

3. தாயகத்துக்குப் பணமனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம்!

வெளிநாடுகளில் பணியாற்றி ஈட்டிய தொகையை தங்களது சொந்த நாட்டுக்கு அனுப்புவதில் இந்தியர்கள் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகத்துக்குப் பணம் அனுப்புவது கடந்த 2022ஆம் ஆண்டில் 24.4%ஆக இருந்தது. நடப்பாண்டில் இவ்வளர்ச்சி 12.4 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வெளிநாடுவாழ் இந்தியர்கள் 2023ஆம் ஆண்டில் தாயகத்துக்கு அனுப்பும் தொகை $1,400 கோடி அதிகரித்து $12,500 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக மெக்ஸிகோ 2ஆவது இடத்தை வகிக்கிறது.

4. ஷமி, வைஷாலிக்கு அர்ஜுனா விருது.

2023ஆம் ஆண்டுக்கான அர்ஜுனா, கேல் இரத்னா, துரோணாச்சார்யா விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி, கிரிக்கெட் வீரர் முகமது ஷமி, தமிழ்நாட்டின் செஸ் வீராங்கனை வைஷாலி உள்ளிட்டோருக்கு அர்ஜுனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் பயிற்சியாளரான கிராண்ட் மாஸ்டர் ஆர். பி. இரமேசுக்கு துரோணாச்சார்யா விருதும், தமிழ்நாட்டைச் சேர்ந்த கபடி வீராங்கனை கவிதா செல்வராசுக்கு வாழ்நாள் சாதனைக்கான தயான் சந்த் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin