TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 22nd 23rd and 24th June 2024

1. 2024 – பன்னாட்டு யோகா நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Yoga for Self and Society

ஆ. Yoga is way of life

இ. Yoga for humanity

ஈ. Yoga for Wellness

  • 2024 – பன்னாட்டு யோகா நாளுக்கானக்கருப்பொருள், “Yoga for Self and Society” என்பதாகும். இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான அதன் முழுமையான நன்மைகளை விளக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் ஆலோசனையின் பேரில், 2014ஆம் ஆண்டு ஐநா அவையால் நிறுவப்பட்ட சர்வதேச யோகா நாள் ஆண்டுதோறும் ஜூன்.21ஆம் தேதியன்று கோடைகால சங்கிராந்தியுடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தனிநபர்கள் மற்றும் சமூகங்களில் சமநிலை மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் யோகாவின் மாற்றும் ஆற்றல் மற்றும் அதன் பங்கை இந்த நாள் எடுத்துக்காட்டுகிறது.

2. சுவாமி விவேகானந்தர் நிஷக்த் ஸ்வவலம்பன் புரோட்சகான் திட்டம் என்பது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்?

அ. ஜார்கண்ட்

ஆ. ஒடிசா

இ. பீகார்

ஈ. ஹரியானா

  • ஜார்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தில், அரிவாள் செல் இரத்தசோகை உள்ள நபர்களுக்கு சுவாமி விவேகானந்தர் நிஷக்த் ஸ்வவலம்பன் புரோட்சகான் திட்டத்தின்கீழ் மாதந்தோறும் `1,000 உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதன் தொடக்கமாக, மாவட்ட நிர்வாகம் பல்வேறு தொகுதிகளில் இருந்து ஒன்பது பயனாளிகளை அடையாளம் கண்டுள்ளது. உதவித்தொகை தகுதியானது மாற்றுத்திறனாளிச் சான்றிதழை அடிப்படையாகக்கொண்டதாகும். அரிவாள் செல் இரத்தசோகையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது பயனளிக்கிறது.

3. அண்மையில், லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்திற்கான `2869.65 கோடி மதிப்பிலான மேம்பாட்டுத் திட்டத்துக்கு நடுவண் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இது எந்த நகரத்தில் அமைந்துள்ளது?

அ. வாரணாசி

ஆ. அயோத்தி

இ. இந்தூர்

ஈ. போபால்

  • பிரதமர் தலைமையில் நடைபெற்ற நடுவண் அமைச்சரவைக்கூட்டத்தில், வாரணாசியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன் மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 39 லட்சத்திலிருந்து 99 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு `2869.65 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவைக்கொண்ட புதிய முனையக் கட்டடம் ஒரே நேரத்தில் 5000 பயணிகளைக் கையாளும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.
  • இந்தத் திட்டத்தில் ஓடுபாதையை நீட்டிப்பது உள்ளிட்ட பணிகளும் அடங்கும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதிசெய்யும் முதன்மை நோக்கத்துடன் வாரணாசி விமான நிலையம் பசுமை விமான நிலையமாக கட்டப்படும்.

4. அண்மையில், இந்தியாவின் சுகாதார அமைப்பின் தயார்நிலையை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) எவ்வளவு நிதியுதவி அளித்துள்ளது?

அ. $140 மில்லியன்

ஆ. $150 மில்லியன்

இ. $160 மில்லியன்

ஈ. $170 மில்லியன்

  • இந்தியாவின் சுகாதார அமைப்பின் தயார்நிலை மற்றும் எதிர்கால தொற்றுநோய்களுக்கான அதன் உடனடி செயல் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவிற்கு கணிசமாக $170 மில்லியன் அமெரிக்க டாலர்களை (தோராயமாக `1,418 கோடி) வழங்கியுள்ளது. இந்தியாவின் தேசிய சுகாதாரக் கொள்கை – 2017உடன் இணைந்து, கொள்கை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள இந்த நிதியுதவி, உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பை அடைவதற்கு அத்தியாவசியமான நிர்வாகத்தையும் கொள்கை கட்டமைப்பையும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நகரங்கள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தொற்றுநோய் அச்சுறுத்தல்களுக்கு விரைவான பதிலளிப்புகளைச் செயல்படுத்துவது, ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட ஆய்வகங்கள்மூலம் நாடு முழுவதும் நோய் கண்காணிப்பு வலையமைப்புகளை வலுப்படுத்துவது ஆகியவை முக்கிய முயற்சிகளில் அடங்கும்.

5. “Indiconema” என்றால் என்ன?

அ. Gomphonemoid diatom இன் புதிய இனம்

ஆ. புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிலந்தி இனம்

இ. அணுவாற்றல் திறனுடைய நீர்மூழ்கிக்கப்பல்

ஈ. பண்டைய நீர்ப்பாசன நுட்பம்

  • இந்தியாவின் கிழக்குத்தொடர்ச்சி மலைகளின் தூயநீர் ஆறுகளில், ‘Indiconema’ என்ற புதிய ‘Gomphonemoid diatom’ இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.‘Gomphonemoid diatom’கள் ஒளிச்சேர்க்கை, நீர்வாழ் உணவுச் சங்கிலி மற்றும் நீர்நலத்தின் உணர்திறன் குறிகாட்டிகளுக்கு அவசியமான ஓர் ஒற்றைச் செல் உயிரினங்களாகும். ‘Indiconema’, இருதுருவங்களிலும் துளைப்புலங்களைக் கொண்டிருப்பதன்மூலம் மற்றவற்றிலிருந்து வேறுபட்டு உள்ளது; இவை மேற்குத்தொடர்ச்சி மலைகளிலும் காணப்படுகிறது. இது கிழக்கு ஆப்பிரிக்க இனமான Afrocymbella உடன் உருவவியல் ரீதியாக தொடர்புடையது.

6. AIமூலம் சாலைப்பாதுகாப்பை மேம்படுத்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் எது?

அ. IIT, கான்பூர்

ஆ. IIIT, தில்லி

இ. IIM, ஆமதாபாத்

ஈ. IIT, பம்பாய்

  • இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) இந்திரபிரஸ்தா தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துடனான (IIIT தில்லி) புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இத்திட்டம் தோராயமாக 25,000 கிமீ நெடுஞ்சாலைகளில் செயல்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலைகளில் சாலைக்குறியீடுகளின் கிடைப்பை மேம்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையிலான தீர்வுகளைப் பயன்படுத்துவது மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். தேர்ந்தெடுக்கப்பட்ட நெடுஞ்சாலைகளில் சாலை அடையாள நிலைமைகள்பற்றிய படங்கள் மற்றும் தரவுகளை சேகரிக்க ஐஐஐடி தில்லி ஆய்வுகளை மேற்கொள்ளும்.

7. முட்கல் கோட்டை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

  • கர்நாடக மாநிலத்தில் உள்ள முட்கல் கோட்டை இந்தியாவின் வளமான வரலாற்று மற்றும் கலாசார பாரம்பரியத்தை காட்சிப்படுத்துகிறது. சாளுக்கியர், ராஷ்டிரகூடர், பாமினி சுல்தான்கள் மற்றும் விஜயநகரப்பேரரசு ஆகியவற்றுடன் தொடர்புடைய இந்தக் கோட்டை 1000 ஆண்டுகால வரலாற்றைக்கொண்டுள்ளது. துங்கபத்ரை மற்றும் கிருஷ்ணா ஆறுகளுக்கு இடையே வளமான, கனிமவளம் மிக்க ரெய்ச்சூர் ஆற்றிடை பகுதியில் அமைந்திருந்ததால், விஜயநகரப் பேரரசுக்கும் அடில் ஷாஹி சுல்தானகத்துக்கும் இடையே இது ஓர் உத்திசார் போர்க்களமாக விளங்கியது.

8. அண்மையில், புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயான மனித-ஆப்பிரிக்க உறக்கநோயின் (African trypanosomiasis) காம்பியன்ஸ் வடிவத்தை அகற்றுவதில் நடப்பு 2024ஆம் ஆண்டில் முதலாவதாகவும் மொத்தத்தில் 51ஆவதாகவும் ஆன நாடு எது?

அ. நைஜீரியா

ஆ. சாட்

இ. கென்யா

ஈ. தான்சானியா

  • 2024ஆம் ஆண்டில், ‘உறக்க நோய்’ என்றும் அழைக்கப்படும் புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயை மனித ஆப்பிரிக்க உறக்க நோயின் காம்பியன் வடிவத்தை முற்றாக ஒழித்த முதல் நாடு மற்றும் உலகளவில் 51ஆவது நாடு என சாட் ஆனது. செட்ஸீ ஈக்களால் பரவும் புரோட்டோசோவான் ஒட்டுண்ணிகளால் இந்நோய் ஏற்படுகிறது. இது துணை-சஹாரா ஆப்பிரிக்காவில் முதன்மையாகப் பரவுகிறது. 24 மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் காம்பியன் வடிவம் நாள்பட்ட நோயை ஏற்படுத்துகிறது. அதேசமயம் 13 கிழக்கு மற்றும் தென்னாப்பிரிக்க நாடுகளில் காணப்படும் ரோடீசியன் வடிவம் கடுமையான நோயை ஏற்படுத்துகிறது.

9. அண்மையில், கள்ளச்சாராய துயரச்சம்பவம் நிகழ்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. பீகார்

இ. குஜராத்

ஈ. இராஜஸ்தான்

  • தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயத்தை உட்கொண்டதால் குறைந்தது 34 பேர் இறந்தனர்; சுமார் 100 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலாஸ்கன் ஹூச்சினோ பழங்குடியினரிடமிருந்து பெறப்பட்ட ஹூச் ஆனது தரக்கட்டுப்பாடு ஏதுமில்லாமல் கச்சா அமைப்புகளில் தயாரிக்கப்படுகிறது. நொதித்தல் மற்றும் வடிகட்டுதல்மூலம் தயாரிக்கப்படுகிற இதில், பெரும்பாலும் நச்சுநிறை மெத்தனால் உள்ளது. முறையற்ற வடிகட்டுதல் காரணமாக மெத்தனால் செறிவூட்டப்பெற்று இது மிகவும் ஆபத்தானதாக மாறுகிறது. சட்டவிரோத மது அருந்துவதால் ஏற்படும் உயிரிழப்பு அபாயத்தை இந்தச் சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

10. கோலார் தங்க வயல் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. ஒடிசா

ஆ. அஸ்ஸாம்

இ. பஞ்சாப்

ஈ. கர்நாடகா

  • கோலார் தங்க வயல்களில் (KGF) தங்கச்சுரங்கத்தை புதுப்பிக்கும் நடுவண் அரசின் திட்டத்திற்கு கர்நாடக மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கோலார் மாவட்டத்தில் பெங்களூரில் இருந்து 100 கிமீ தொலைவில் அமைந்துள்ள KGF சுரங்கங்கள், 1972ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பொதுத்துறை நிறுவனமான பாரத் கோல்ட் மைன்ஸ் லிமிடெட் (BGML) மூலம் இயக்கப்படும் உலகின் மிக ஆழமான சுரங்கங்களில் ஒன்றாகும்.

11. பர்தா வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. இராஜஸ்தான்

ஆ. குஜராத்

இ. மத்திய பிரதேசம்

ஈ. ஒடிசா

  • அண்மையில் கிர் காட்டிலிருந்து ஆறு ஆசிய சிங்கங்கள் பர்தா வனவிலங்கு சரணாலயத்திற்கு இடம்பெயர்ந்தன. அழிவின் விலிம்பிலுள்ள இந்தச் சிங்கங்கள், ஆப்பிரிக்க சிங்கங்களைவிட சற்று சிறியவை. IUCNஇன் அழிந்துவரும் உயிரின பட்டியலில் உள்ள இவை, CITESஇன் பின்னிணைப்பு-I மற்றும் இந்தியாவின் வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டம், 1972 ஆகியவற்றின்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் உள்ள கிர் காடுகள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட பகுதிகள் அவற்றின் பிரத்யேக வாழ்விடங்களாகும்.

12. 2024 – ‘உலக முதலீட்டு அறிக்கை’யை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNCTAD

ஆ. UNDP

இ. UNEP

ஈ. UNICEF

  • UNCTADஇன் 2024 – உலக முதலீட்டு அறிக்கையானது 2023ஆம் ஆண்டில் அயல்நாட்டு நேரடி முதலீட்டில் (FDI) 2% உலகளாவிய சரிவை வெளிப்படுத்துகிறது. இந்தியாவிலும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. நிலையான நிதி தயாரிப்புகள்மூலம் நிலையான வளர்ச்சி இலக்கு முதலீடுகளுக்கான நிதியும் சரிவு கண்டுள்ளது. 1964இல் நிறுவப்பட்ட UNCTAD ஆனது வளரும் நாடுகளுக்கு உலகளாவிய பொருளாதாரத்தின் நன்மைகளை சமமாக அணுக உதவுகிறது.

13. 2003-2024-க்கு இடையில், ‘ஹிந்து குஷ் ஹிமாலயா’ என்ற பனி அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. UNEP

ஆ. ஒருங்கிணைந்த மலை வளர்ச்சிக்கான சர்வதேச மையம் (ICIMOD)

இ. கிரீன்பீஸ் இந்தியா

ஈ. உலக வங்கி

  • ICIMODஇன் 2024 – ஹிந்து குஷ் ஹிமாலயா ஸ்னோ அப்டேட் அறிக்கையானது இந்தியாவின் கங்கையாற்றுப் படுகை, பிரம்மபுத்திரா மற்றும் சிந்துநதிப் படுகையில் குறைந்த பனிப்பொழிவு பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது. HKH பகுதி 8 நாடுகளில் பரவியுள்ளது மற்றும் ஆசியாவின் முதன்மையான ஆறு அமைப்புகளுக்கு முக்கியமானதான இது, 1.9 பில்லியன் மக்களை ஆதரிக்கிறது. இது பரந்த பனி மற்றும் பனிப்பாறை வளங்களைக் கொண்டுள்ளது. இது சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் நீரோட்டத்தின் கீழுள்ள சமூகங்களுக்கு மிகவும் அவசியமானதாக விளங்குகிறது. இது தெற்கு மற்றும் கிழக்காசியா முழுவதும் நீர் விநியோகத்திற்கு மிக முக்கிய பங்கு வகிக்கிறது.

14. அண்மையில், 2027-க்குள் மாநிலத்தில் இருந்து மலேரியாவை ஒழிக்க தீவிர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ள மாநில அரசு எது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. ஹரியானா

ஈ. பீகார்

  • 2027ஆம் ஆண்டிற்குள் மலேரியாவை ஒழிப்பதற்கான பிரச்சாரத்தை உத்தர பிரதேச மாநிலம் தொடங்கியுள்ளது. தேசிய ஏந்திகள்வழி பரவும் நோய்கள் கட்டுப்பாட்டுத் திட்டத்தின்கீழ் முயற்சிகளை தீவிரப்படுத்துகிறது. இந்த ஆண்டு 771 பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், இந்த முயற்சியானது முழுமையான விசாரணை, சிகிச்சை மற்றும் சமூகக் கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. பருவமழைக்கு முன்னதாக மேம்படுத்தப்பட்ட ஏந்திகள்வழி பரவும் நோய்கள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
  • பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் மலேரியா, உடல்நலத்திற்கு அச்சுறுத்தல் விளைவிக்கிறது. ஐந்து ஒட்டுண்ணி இனங்களில் P. ஃபால்சிபாரம் மற்றும் P. வைவாக்ஸ் ஆகியவை அதிக இடர்களை ஏற்படுத்துகின்றன.

15. “ஒரு குடும்பம், ஓர் அடையாளம்” திட்டத்துடன் தொடர்புடைய மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. ஹரியானா

ஈ. பீகார்

  • உத்தர பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அரசின் சலுகைகள் மற்றும் வேலைவாய்ப்புகளைச் சீர் அமைக்கும் நோக்கில், ‘குடும்ப அடையாள அட்டைகளை’ விரைவாக செயல்படுத்த வலியுறுத்தினார். “ஒரு குடும்பம், ஓர் அடையாளம்” திட்டத்தின்கீழ், ஒவ்வொரு குடும்பமும் திட்ட நிர்வாகத்தை மேம்படுத்தவும் வெளிப்படையான செயல்பாடுகளை உறுதிப்படுத்தவும் ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணைப் பெறும். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் அணுகலுக்காக குடும்ப அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி சுமார் 15.07 கோடி மக்கள் இதனால் பயனடைகின்றனர்.

16. பாதுகாப்பின்போது ஏற்படும் கடும் தீக்காயங்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக அதன் வகையில் முதலாவதான தோல் வங்கியைத் தொடங்கியுள்ள ஆயுதப்படை எது?

அ. இந்திய விமானப்படை

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய இராணுவம்

ஈ. தேசிய பாதுகாப்புப் படை

  • இந்திய இராணுவம் ஜூன்.18 அன்று ராணுவ மருத்துவமனையில் (ஆராய்ச்சி மற்றும் பரிந்துரை) அதிநவீன தோல் வங்கியைத் திறந்து வைத்தது. ஆயுதப்படை மருத்துவ சேவைகளில் முதன்முதலாக தொடங்கப்பட்டுள்ள இந்த வசதி, ஆயுதப்படை வீரர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்படும் கடும் தீக்காயங்களுக்குச் சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இது தீவிபத்துகள் மற்றும் மின்விபத்துக்கள் ஆகியவற்றால் ஏற்படும் காயங்களை நிவர்த்திசெய்கிறது. தோல் வங்கியானது தோல் ஒட்டலைச் சேகரித்தல், பதப்படுத்துதல், சேமித்தல் மற்றும் விநியோகித்தல் ஆகியவற்றை மையப்படுத்துகிறது.

17. அண்மையில், கீழ்க்காணும் எந்தக் கோளில் ஆற்றல் சமநிலையின்மை கண்டறியப்பட்டது?

அ. வெள்ளி

ஆ. சனி

இ. செவ்வாய்

ஈ. வியாழன்

  • ஹூஸ்டன் பல்கலை ஆராய்ச்சியாளர்கள் காசினி ஆய்வின் தரவுகளைப் பயன்படுத்தி சனிக்கோளில் குறிப்பிடத்தக்க பருவகால ஆற்றல் சமாநிலையின்மையைக் கண்டறிந்தனர். இந்தக் கண்டுபிடிப்பு வாயுக்கோளான சனிக்கோளின் காலநிலை மற்றும் கோள் பரிணாம வளர்ச்சியின் தற்போதைய மாதிரிகளைச் சவால் செய்கிறது. சிஞூ வாங்கின் இந்தக் கண்டுபிடிப்பு சனியின் காலநிலையில் உள்வெப்பத்தின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது மற்றும் நமது சூரிய மண்டலத்தில் கோள் மற்றும் வளிமண்டல அறிவியல் பற்றிய புரிதலை மறுவடிவமைப்பு செய்கிறது.

18. செந்தலைக்கழுகுகளுக்கான (Asian King Vultures) உலகின் முதல் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையத்தை நிறுவியுள்ள மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. உத்தர பிரதேசம்

இ. ஹரியானா

ஈ. பீகார்

  • உத்தர பிரதேச மாநிலத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் செந்தலைக்கழுகுகளுக்கான உலகின் முதல் பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் நிறுவப்பட்டுள்ளது. ஜடாயு பாதுகாப்பு மற்றும் இனப்பெருக்க மையம் எனப் பெயர் சூட்டப்பட்ட இது, 2007ஆம் ஆண்டு முதல் அழிவின் விளிம்பிலுள்ள உயிரினங்களுக்கானப் பட்டியலில் உள்ள இவற்றை உயிர்ப்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்வகை கழுகுகள் வாழ்விட இழப்பு மற்றும் டிக்ளோ ஃபெனாக் நஞ்சு ஆகியவற்றால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. கழுகு இணைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அவற்றின் உயிர்வாழ்வை உறுதிப்படுத்தவும் இது நோக்கம் கொண்டுள்ளது.

19. அண்மையில், 2024 – ‘புளூ பிளானட்’ பரிசை வென்ற அரசுகளுக்கிடையேயான அமைப்பு எது?

அ. பல்லுயிர் & சுற்றுச்சூழல் அமைப்பு சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான தளம் (IPBES)

ஆ. தட்பவெப்பநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கிடையேயான குழு (IPCC)

இ. உடல்நலம் மற்றும் மாசுபாட்டிற்கான உலகளாவிய கூட்டணி (GAHP)

ஈ. மேற்கூறிய எதுவும் இல்லை

  • பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகள் மீதான அரசுகளுக்கிடையேயான தளம் (IPBES), பல்லுயிர், சுற்றுச்சூழல் சேவைகள் மற்றும் மக்களுக்கு இயற்கையின் பங்களிப்புகள் ஆகியவற்றில் உலகளாவிய அதிகாரமாக விளங்கும் அதன் பங்கிற்காக, 2024 – ‘நீலக்கோள்’ பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
  • ஜப்பானின் அசாகி கிளாஸ் அறக்கட்டளையால் கடந்த 1992இல் நிறுவப்பட்ட இந்த மதிப்புமிக்க விருது, உலகளாவிய சுற்றுச்சூழல் சவால்களைத் தீர்ப்பதில் அறிவியல் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது. IPBES, லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச்சேர்ந்த இராபர்ட் கோஸ்டான்சாவுடன் இவ்விருதை பகிர்ந்துகொள்கிறது.

20. அண்மையில் முதலாவது தேசிய கூட்டு உற்பத்தி கருத்தரங்கத்தை நடத்திய அமைச்சகம் ஏது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம்

இ. பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • மின்னணு & தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) முதல் தேசிய கூட்டு உற்பத்தி கருத்தரங்கத்தை (NAMS) நடத்தியது. இது அதிநவீன உற்பத்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் விதாமாக உள்ளது. MeitY செயலர் S கிருஷ்ணன் ஒரு கூட்டு உற்பத்தி அறிக்கையை வெளியிட்டார் மற்றும் உள்நாட்டு கூட்டு உற்பத்தி இயந்திரத்தை வெளியிட்டார். கடந்த 2022ஆம் ஆண்டின் கூட்டு உற்பத்திக்கான தேசிய உத்தியைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட, இந்தியாவின் கூட்டு உற்பத்தி சுற்றுச்சூழலமைப்பை இக்கருத்தரங்கம் முன்னிலைப்படுத்தியது.

21. அண்மையில், ‘ஹெமிஸ் திருவிழா’ நடைபெற்ற மாநிலம்/யூனியன் பிரதேசம் எது?

அ. லடாக்

ஆ. அஸ்ஸாம்

இ. மணிப்பூர்

ஈ. லட்சத்தீவு

  • திபெத்திய பௌத்தத்தைக் கொண்டாடும் ஹெமிஸ் திருவிழா, இந்தியாவில் லடாக்கில் ஆண்டுதோறும் நடைபெறும் ஒரு திருவிழாவாகும். 2024ஆம் ஆண்டில், இது ஜூன் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் கொண்டாடப்பட்டது. ஹெமிஸ் செச்சு என்று அழைக்கப்படும் இது குரு பத்மசாம்பவாவின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறது. 2 நாள் நடைபெறும் இந்நிகழ்வு, லடாக்கின் மிகப்பெரிய பௌத்த மடாலயமான ஹெமிஸ் மடாலயத்தை, கண்கவர் வண்ணங்கள், இசை மற்றும் ஆன்மீக ஆற்றலால் நிரப்புகிறது. இது ஒரு குறிப்பிடத்தக்க கலாச்சார கொண்டாட்டமாக பார்க்கப்படுகிறது.

22. ஃபயர் டிராகன் – 480 என்பது கீழ்க்காணும் எந்த நாட்டின் தந்திரோபாய எறிகணையாகும்?

அ. இந்தியா

ஆ. ஜப்பான்

இ. சீனா

ஈ. இஸ்ரேல்

  • சீனாவின் ஃபயர் டிராகன்-480 எறிகணையால் செங்கடலில் உள்ள ஓர் அமெரிக்க டிகோண்டெரோகா வகை கலத்தை மூழ்கடிக்க முடியும் என ஒரு PLA ஆய்வு கூறுகிறது. நோரின்கோ குழுமத்தால் தயாரிக்கப்பட்ட 750 மிமீ உடைய தந்திரோபாய எறிகணையான இது, துல்லியமான வழிகாட்டுதல் உணரிகள் மற்றும் அதிவேக ஏவுதளம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. 400 கிலோவுக்கும் அதிகமான வெடியுளை மற்றும் வினாடிக்கு 500 மீட்டருக்கும் அதிகமான தாக்கத்தின் வேகத்துடன், 10,000 டன் எடையுள்ள ஒரு கலத்தை வெறும் இரண்டே தாக்குகளில் இதால் அழிக்க முடியும். 2019இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட இதன் தாக்கும் வரம்பு 500 கிமீக்கு மேலாகும்.

23. 2024 – ‘உலகளாவிய காற்றின் நிலை’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. சுகாதார விளைவுகள் நிறுவனம் (HEI)

இ. உலக சுகாதார நிறுவனம் (WHO)

ஈ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP)

  • சுகாதார விளைவுகள் நிறுவனம் மற்றும் UNICEF ஆகியவற்றின் 2024 – உலகளாவிய காற்றின் நிலை’ (SoGA) அறிக்கையின்படி, வளிமாசு இறப்பிற்கான இரண்டாவது முன்னணி உலகளாவிய ஆபத்து காரணியாக உள்ளது. இது இருதய நோய் மற்றும் நுரையீரல் புற்றுநோய் போன்ற தொற்றாநோய்களை ஏற்படுத்துகிறது; 2021இல் 8.1 மில்லியன் இறப்புகளுக்கு இது காரணமாக அமைந்துள்ளது.
  • உலக வளிமாசு நோய் சுமையில் இந்தியாவும் சீனாவும் 54%த்தைக் கொண்டுள்ளன. 2021ஆம் ஆண்டில், வளிமாசு இந்தியாவில் 1,69,400 சிறார் இறப்பையும் 2,37,000 COPD (நாள்பட்ட நுரையீரல் தடை நோய்) இறப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

24. அண்மையில், தேசிய மனித உரிமைகள் ஆணையமானது வரிசையான காவல் மரணங்கள் தொடர்பாக எந்த மாநில அரசுக்கு குறிப்பாணை அனுப்பியது?

அ. கேரளா

ஆ. ஒடிஸா

இ. ஜார்கண்ட்

ஈ. சிக்கிம்

  • காவல் மரணங்களுக்கு இழப்பீடு வழங்காதது தொடர்பாக ஒடிஸா அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் குறிப்பாணை அனுப்பியுள்ளது. 2017 முதல் 2022 வரை, இந்தியாவில் 660 காவல் மரணங்கள் பதிவாகியுள்ளன; குஜராத்தில் அதிகபட்சமாக 80 பேர் இறந்துள்ளனர். அரசியலமைப்புச் சட்டப்பாதுகாப்புகளில் பிரிவுகள் 14 மற்றும் 21 மற்றும் சட்டப்பாதுகாப்புகளில் பிரிவுகள் 330, 331 IPC மற்றும் 176 Cr.P.C ஆகியவை காவலில் உள்ளோர்க்கு பாதுகாப்பு வழங்குகின்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் வழிகாட்டுதல்களும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளும் குற்றஞ்சாட்டப்பட்டோரை மேலும் பாதுகாப்பதோடு, சரியான கைது நடைமுறைகளை உறுதிசெய்கிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கள்ளச்சாராய உயிரிழப்பு: விசாரிக்க ஆணையம்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்துக்கு அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆராய, ஓய்வு பெற்ற நீதிபதி பி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். இந்த ஆணையம் தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும்.

2. 1,000 பெண்கள், திருநங்கை ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்க `1 லட்சம் மானியம்: தமிழ்நாடு அரசு.

தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்துள்ள 1,000 பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் புதியதாக ஆட்டோ வாங்கும் செலவினத்தில் தலா `1 லட்சம் மானியமாக வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

3. ஃபோமிபைசோல்.

மெத்தனால் நச்சு முறிவுக்கு ‘ஃபோமிபைசோல்’ பயன்படுத்தப்படுகிறது. மெத்தனால் குருதியில் கலந்தபின் குறிப்பிட்ட நேரத்துக்குள், ‘ஃபோமிபைசோல்’ மருந்து வழங்கப்பட்டால் அதன் வீரியம் குறையும் எனக் கூறப்பட்டாலும், அந்த மருந்தின் தரம் இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை, மெத்தனாலுக்கு மாற்றாக எத்தனால் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. இரண்டுமே ஆல்கஹால் என்றாலும் மெத்தனாலின் வீரியத்தை எத்தனால் குறைக்கும் என்பதால் பாதுகாப்பான இந்த சிகிச்சை முறை பின்பற்றப்படுகிறது.

4. மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சி கூடம் விரைவில் திறப்பு.

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மகளிருக்கான பிரத்யேக உடற்பயிற்சிக் கூடங்கள் அமைக்க குடும்புக்கு ஒரு உடற்பயிறச்சி கூடம் எனும் வீதத்தில் ‘எம்பவர் உடற்பயிற்சிக் கூடம்’ என்னும் பெயரில் அமைக்க முதல்கட்டமாக `10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

5. மறுபயன்பாட்டு ஏவுகலன் சோதனை வெற்றி: ISRO.

விண்ணில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தியபிறகு மீண்டும் பாதுகாப்பாக தரைக்குத் திரும்பிவரும் மறுபயன்பாட்டுக்கான ஏவுகலனை (RLV) கர்நாடக மாநிலம், சித்ரதுர்காவில் உள்ள வான்வெளி சோதனை தளத்தில் வைத்து வெற்றிகரமாக ISRO பரிசோதித்தது. தற்போது SSLV, PSLV, LVM-3 ஏவுகலங்கள் மூலமாக செயற்கைக் கோள்களையும், விண்கலன்களையும் ISRO விண்ணில் செலுத்தி வருகின்றது. இந்த நிலையில், விக்ரம் சாராபாய் விண்வெளி ஆய்வுமையம் உள்ளிட்ட ISRO ஆய்வமைப்புகளும், பாதுகாப்பு & வான்படை ஆராய்ச்சி அமைப்புகளும் இணைந்து மறுபயன்பாட்டுக்கான ஏவுகலனை வடிவமைக்கத் திட்டமிட்டன. அதன்படி, ‘புஷ்பக்’ எனும் பெயரிலான ஏவுகலன் வடிவமைக்கப்பட்டு கடந்த ஆண்டு வெற்றிகரமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!