TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 21st May 2024

1. 2024 – தேசிய அழிந்துவரும் உயிரினங்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Wildlife Without Borders

. Celebrate Saving Species

இ. Recovering key species for ecosystem restoration

ஈ. Sustaining all life on Earth

  • 2024 மே.17 அன்று அனுசரிக்கப்படும் தேசிய அழிந்துவரும் உயிரினங்கள் நாள், அழிந்துவரும் உயிரினங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் 3ஆவது வெள்ளியன்று, அழிந்து வரும் உயிரினங்களின் அவலநிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அழிந்துவரும் உயிரினங்கள் கூட்டமைப்பின் பணியாளர் உறுப்பினரான டேவிட் இராபின்சனால் உருவாக்கப்பட்ட இந்த நாளுக்கான, நடப்பு 2024ஆம் ஆண்டின் கருப்பொருள், “Celebrate Saving Species” என்பதாகும்.

2. அண்மையில், வழிகாட்டப்பட்ட பல்முனை ஏவுதல் திறன்மிகு ஏவுகல அமைப்பான, ‘ஃபதா-II’இன் பயிற்சி ஏவுதலை வெற்றிகரமாக நடத்திய நாடு எது?

அ. பாகிஸ்தான்

ஆ. சீனா

இ. ஜப்பான்

ஈ. ஈரான்

  • 400 கிமீட்டர் தொலைவு வரை செல்லக்கூடிய தனது உள்நாட்டு வழிகாட்டப்பட்ட பல்முனை ஏவுதல் திறன்மிக்க ஏவுகல அமைப்பான, ‘ஃபதா-II’ஐ பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதனை செய்தது. மேம்பட்ட பறப்பு மின்னணுவியல் மற்றும் வழிசெலுத்தல் திறன் பொருத்தப்பட்டுள்ள இது, அதிக துல்லியத்தில் இலக்கைத் தாக்கும். Inter-Services Public Relations (ISPR) அமைப்பு இதன் திறன்கள் குறித்து வெளிப்படுத்தியுள்ளது. ‘Fatah-II’ என்பது பாகிஸ்தானின் பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் ஏற்படுவதைக் குறிக்கிறது.

3. 2024 – உலக தேனீக்கள் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Bee engaged – Build Back Better for Bees

ஆ. Bee Engaged: Celebrating the diversity of bees

இ. Bee Engaged with Youth

ஈ. Bee Engaged in Pollinator-Friendly Agricultural Production

  • தேனீ வளர்ப்பில் முன்னோடியான ஆன்டன் ஜான்சாவின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் உலக தேனீக்கள் நாள் மே.20ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்பட்டது. 2017இல் ஐநாஆல் நிறுவப்பட்ட இந்த நாள் உணவுப் பாதுகாப்பு, பல்லுயிர் மற்றும் நிலையான விவசாயம் ஆகியவற்றில் தேனீக்களின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது. 2024 ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Bee Engaged with Youth” என்பதாகும். இந்த அத்தியாவசிய மகரந்தச் சேர்ப்பிகளைப் பாதுகாப்பதற்கு, தேனீ பாதுகாப்பு முயற்சிகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதில் இந்நாள் கவனம் செலுத்துகிறது.

4. அண்மையில், ஹெலிகாப்டர் விபத்தில் காலமான இப்ராஹிம் ரைசி, எந்த நாட்டின் அதிபராக இருந்தார்?

அ. வியட்நாம்

ஆ. எகிப்து

இ. ஈராக்

ஈ. ஈரான்

  • 2024 மே.19ஆம் தேதியன்று, ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசி, வடமேற்கு ஈரானில் நிகழ்ந்த ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் பரிதாபமாக இறந்தார். ஒரு குறிப்பிடத்தக்க அரசியல்வாதியும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்தவருமான இப்ராஹிம் ரைசி, ஈரானின் தலைமைத்துவத்தில் முக்கியமானவராக கருதப்பட்டார்.

5. அண்மையில், 2024 – எலோர்டா கோப்பைக்கானப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஜரீன் சார்ந்த விளையாட்டு எது?

அ. மல்யுத்தம்

. குத்துச்சண்டை

இ. செஸ்

ஈ. பூப்பந்து

  • கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்ற 3ஆவது எலோர்டா கோப்பைக்கானப் போட்டியில் நிகத் ஜரீன் மற்றும் மீனாக்ஷி ஆகியோர் இந்தியாவிற்காக தங்கப்பதக்கங்களை வென்றனர். நிகத் ஜரீன் 52 கிகி பிரிவில் கஜகஸ்தானின் ஜாசிரா உரக்பயேவாவை வீழ்த்தினார்; மேலும் மீனாக்ஷி 48 கிலோ பிரிவில் உஸ்பெகிஸ்தானின் சைடகோன் ரக்மோனோவாவை வீழ்த்தினார். இந்தியாவின் 21 பேர்கொண்ட குத்துச்சண்டை அணி 2 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கலம் என மொத்தம் 12 பதக்கங்களை வென்றுள்ளது.

6. ஸ்பிட்டி பள்ளத்தாக்கு அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. நாகாலாந்து

ஈ. சிக்கிம்

  • அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக, இமாச்சல பிரதேச மாநிலத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில், 3,400 மீட்டர் உயரத்தில் ஆப்பிள் சாகுபடி செய்வதற்கேற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக விவசாயிகள் பார்லி மற்றும் உருளைக்கிழங்கு பயிர் செய்வதிலிருந்து பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த ஆப்பிள்களுக்கு மாறி வருகின்றனர். 2023-24இல் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு `34 கோடி மதிப்பிலான ஆப்பிள்களை உற்பத்தி செய்தது. மிதவெப்பமண்டலத்திய பழமான ஆப்பிள், சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய கிழக்கில் தோன்றியது. உலக அளவில் ஆப்பிள் உற்பத்தியில் சீனா முதலிடத்தில் உள்ளது.

7. அண்மையில், இந்தியா-ஆஸ்திரேலியா-இந்தோனேசியா முத்தரப்பு கடல்சார் பாதுகாப்புப் பயிலரங்கத்தின் 2ஆவது பதிப்பு நடத்தப்பட்ட இடம் எது?

அ. கொச்சி

ஆ. சென்னை

இ. வாரணாசி

ஈ. பெங்களூரு

  • இந்தியா–ஆஸ்திரேலியா–இந்தோனேசியா இடையேயான 2ஆவது முத்தரப்பு கடல்சார் பாதுகாப்புப் பயிலரங்கம் 2024 மே.15-17ஆம் தேதி வரை கொச்சியில் உள்ள INS துரோணாச்சார்யா தளத்தில் நடைபெற்றது. “இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகள்” என்ற கருப்பொருளில் இந்தப்பயிலரங்கம் நடைபெற்றது. இந்தப் பிராந்தியத்தில் உள்ள 3 கடல்சார் நாடுகளுக்கிடையேயான கடல்சார் பாதுகாப்பு சவால்கள் மற்றும் கடல்சார் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் குறித்து இதில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இப்பயிலரங்கின்போது, தகவல் பரிமாற்ற வழிமுறைகள், கடல்சார் கள விழிப்புணர்வு, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு, கடல்சார் சட்ட அமலாக்கம், திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் நடைபெற்றன.

8. ‘SPECULOOS-3 b’ என்றால் என்ன?

அ. பூமிபோன்ற புறக்கோள்

ஆ. நீர்மூழ்கிக்கப்பல்

இ. விமானம் தாங்கி

ஈ. ஆக்கிரமிப்பு தாவரம்

  • பூமியிலிருந்து 55 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள ஓர் அதி-குளிர்ச்சியான சிவப்பு குள்ள விண்மீனைச் சுற்றி வரும், ‘SPECULOOS-3b’ என்ற பூமிபோன்ற புறக்கோளை வானியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த விண்மீன் கிட்டத்தட்ட பாதி வெப்பநிலையுடன் நமது சூரியனைவிட நூறு மடங்கு மங்கலான ஒளியை வெளியிடுகிறது. இதுபோன்று கண்டறியப்பட்டதில், அத்தகைய விண்மீனைச் சுற்றிவரும் இரண்டாவது கோளாக, ‘SPECULOOS-3b’ உள்ளது. பூமியைவிட 16 மடங்கு அதிக ஆற்றலைப் பெறும் காரணத்தால் அக்கோளுக்கு வளிமண்டலம் இல்லை எனக் கருதப்படுகிறது. இது தனது சுற்றுப்பாதையை ஒருமுறை நிறைவு செய்ய 17 மணிநேரம் எடுத்துக்கொள்கிறது. மேலும் இதன் ஒரு பக்கம் நிரந்தரமான பகலாகவும் மறுபுறம் நிரந்தரமான இரவாகவும் உள்ளது.

9. அண்மையில், SFO டெக்னாலஜிஸின் கார்பன் குறைப்பு முன்னெடுப்பை வெளியிட்ட அமைப்பு எது?

அ. DRDO

ஆ. BHEL

இ. ISRO

ஈ. CSIR

  • ISRO தலைவர் S சோம்நாத் SFO டெக்னாலஜிஸின் கார்பன் குறைப்பு முன்னெடுப்பு குறித்து அறிவித்தார். இந்த முன்னெடுப்பு, 2035ஆம் ஆண்டளவில் 50%உம் 2040ஆம் ஆண்டுக்குள் சுழிய உமிழ்வை அடைவைதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. NeST HiTek பூங்காவில், ஒரு மரக்கன்று நட்டு, சந்திரயான் மாதிரியை ISRO தலைவர் வெளியிட்டு, SFOஇன் ஒத்துழைப்பை சிறப்பித்துக் கூறினார்.

10. 2024 – பன்னாட்டு அருங்காட்சியக நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Future of Museums: Recover and Reimagine

ஆ. The Power of Museums

இ. Museums for Education and Research

ஈ. Sustainability and Well-being

  • பன்னாட்டு அருங்காட்சியக நாளானது ஆண்டுதோறும் மே.18ஆம் தேதி அன்று அருங்காட்சியகங்களின் சமூகப் பங்களிப்புகளை முன்னிலைப்படுத்தும் நோக்கோடு கொண்டாடப்படுகிறது. 1977இல் பன்னாட்டு அருங்காட்சியக குழுமத்தால் நிறுவப்பட்ட இந்நாளுக்கான முதல் கருப்பொருள் 1992இல் அறிமுகப்படுத்தப்பட்டது. 2024இல் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Museums for Education and Research” என்பதாகும்.

11. ஃபாங்புய் தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. அஸ்ஸாம்

இ. மிசோரம்

ஈ. மணிப்பூர்

  • மிசோரம் மாநிலத்தில் அமைந்துள்ள ஃபாங்புய் தேசியப்பூங்காவில், ‘Phtheirospermum lushaiorum’ என்ற புதிய அரை -ஒட்டுண்ணி நிலத்தாவரம் கண்டுபிடிக்கப்பட்டது. முழு வளர்ச்சியடைந்த வேர் அமைப்பு இல்லாததால், இது நீர் மற்றும் தாதுக்களுக்காக ஓம்புயிரிகளை நம்பியுள்ளது; ஆனால் ஒளிச்சேர்க்கை செய்து ஓரளவுக்கு தன்னிச்சையாக வளர்கிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரை பூக்கும் காலத்தையும், ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை பழங்கள் உற்பத்தி காலத்தையும் இது கொண்டுள்ளது. மிசோரம் மாநிலத்தின் லுஷாய் பழங்குடியினரின் நினைவாக இந்தப் புதிய இனத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

12. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக அளவியல் நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?

அ. மே.18

ஆ. மே.19

இ. மே.20

ஈ. மே.21

  • உலகளவில் ஒரே அளவீட்டு முறையை நிறுவுவதற்காக 1875ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட மீட்டர் ஒப்பந்தத்தை நினைவுகூரும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் மே.20 அன்று உலக அளவியல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Sustainability” என்பதாகும். இந்தக்கருப்பொருள், நிலையான பொருளாதாரம் மற்றும் சூழலை வளர்ப்பதில் அளவீடுகளின் பங்கை வலியுறுத்துகிறது.
  • முதன்மை பயன்பாடுகளில் ஆற்றல் பயன்பாட்டைக் கண்காணித்தல், வேளாண்மை வளங்களை நிர்வகித்தல், மாசு மூலங்களைக் கண்டறிதல் மற்றும் வாகன உமிழ்வை ஒழுங்குபடுத்துதல் ஆகியவை இதிலடங்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

ஒரு சட்டை-பேண்ட் இஸ்திரி செய்யப்படும்போது பயன்படுத்தப்படும் மின்சாரத்தால் 200 கிராம் அளவுக்கு கரியமில வாயு வெளியேற்றம் ஏற்படுகிறது. கரியமில வாயு புவியை வெப்பமயமாக்குவதில் பெரும் பங்கு வகிக்கிறது. அண்மையில், ‘கசங்கிய ஆடை நல்லது’ என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ‘சோலார் மேன் ஆஃப் இந்தியா’ என்று அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) பேராசிரியர் சேத்தன் சிங் சோலங்கி இந்த ‘கசங்கிய ஆடை நல்லது’ என்ற பிரசாரத்தை தீவிரமாக முன்னெடுத்துள்ளார்.

2. உலக சாதனையுடன் தங்கம்: தீப்தி ஜீவன்ஜி அசத்தல்.

ஜப்பானில் நடைபெறும் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீப்தி ஜீவன்ஜி, மகளிருக்கான 400 மீ ஓட்டத்தில் உலக சாதனையுடன் தங்கம் வென்று அசத்தியுள்ளார். இதனிடையே, இந்தப் போட்டியில் ஆடவருக்கான வட்டெறிதலில் (F56) இந்தியாவின் யோகேஷ் கதுனியா சிறந்த முயற்சியாக 41.80 மீட்டருக்கு எறிந்து வெள்ளி வென்றார். அதேபோல், மகளிருக்கான குண்டெறிதலில் (F34) பாக்யஸ்ரீ மஹவ்ராவ் ஜாதவ் 7.56 மீ எட்டி வெள்ளி வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!