Tnpsc Current Affairs in Tamil – 21st February 2024
1. முதல், ‘சிறார் தோழமையான காவல் நிலையம்’ திறக்கப்பட்டுள்ள இடம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. மகாராஷ்டிரா
இ. புதுச்சேரி
ஈ. ஆந்திர பிரதேசம்
- மகாராஷ்டிர மாநிலத்தின் துலே மாவட்டத்தின் ஆசாத்நகர் காவல் நிலையத்தில், ‘சிறார் தோழமையான காவல் நிலையம்’ திறக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அபினவ் கோயல் மற்றும் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அதிகாரி இராஜேந்திர பிராரி ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த முயற்சி குழந்தைகளுக்குப் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான இடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. தி சார்ஸ் என்பது கீழ்காணும் எந்த ஆறுடன் தொடர்புடைய ஆற்றங்கரையோரப் பகுதிகள்?
அ. கங்கையாறு
ஆ. பிரம்மபுத்திரா ஆறு
இ. காவேரியாறு
ஈ. கோதாவரியாறு
- சுற்றுச்சூழல் ஒருமைப்பாட்டை பாதுகாப்பதற்காக பிரம்மபுத்திரா ஆற்றின் கரையோரத் தீவுகளை மீட்கும் திட்டத்தை அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் அறிவித்துள்ளார். ‘தி சார்ஸ்’ என்ற அழைக்கப்படும் இவை அடிக்கடி இடம்பெயர்வை எதிர்கொள்கின்றன; வெள்ளத்தின்போது அதன் மேற்புறத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் படிவு ஆகியவை அவற்றின் வடிவவியலைப் பாதிக்கின்றன. சார் பகுதிகள் வளர்ச்சியைத் தடுக்கின்ற மோசமான தகவல்தொடர்பு, போக்குவரவு மற்றும் உட்கட்டமைப்புபோன்ற சவால்களை எதிர்கொள்கின்றன. வெள்ள அபாயங்கள் மற்றும் சாலைகள், நீர்ப் பாசனம், மின்சாரம் மற்றும் கல்விக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் ஆகிய சிக்கல்களும் இந்தத் தனித்துவமான, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளில் அடங்கும்.
3. இந்திய துறைமுக செயல்திறன் குறியீட்டிற்கான, ‘சாகர் ஆங்கலன்’ வழிகாட்டுதல்களை வெளியிட்ட அமைச்சகம் எது?
அ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து & நீர்வழிப் போக்குவரத்து அமைச்சகம்
ஆ. பாதுகாப்பு அமைச்சகம்
இ. உள்துறை அமைச்சகம்
ஈ. பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம்
- இந்திய துறைமுகங்களின் செயல்திறனை மேம்படுத்தவும், வரைபடமாக்கவும், தரப்படுத்தல் மற்றும் உலகளாவிய தரநிலைகளை சீரமைப்பதில் கவனம் செலுத்தவுமாக, ‘சாகர் ஆங்கலன்’ வழிகாட்டுதல்களை மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் வெளியிட்டார். 2023 – GMIS கடல்சார் உச்சிமாநாட்டின் வெற்றியிலிருந்து உருவான இந்த முயற்சி, கடல்சார் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இது `10 லட்சம் கோடி முதலீட்டு நிதியை ஈர்க்க உறுதிப்பாடு கொண்டுள்ளது.
4. நாகி பறவை திருவிழாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. குஜராத்
ஆ. ஆந்திர பிரதேசம்
இ. பீகார்
ஈ. ஒடிசா
- நாகி பறவை திருவிழா பீகார் மாநிலத்துடன் தொடர்புடையதாகும். மூன்று நாள் நடைபெறும் இந்தத் திருவிழாவை பீகார் அரசாங்கத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையானது நாகி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள ஜமூய் மாவட்டத்தில் நடத்துகிறது. வலசை வந்த பறவைகள் மற்றும் அவற்றின் வாழ்விடங்கள் குறித்து மக்களுக்குக் கல்வி கற்பிப்பதும், பறவைகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதும் இந்தத் திருவிழாவின் முதன்மை நோக்கமாகும்.
5. ‘அனுவாதினி’ என்றால் என்ன?
அ. செயற்கைக்கோள்
ஆ. பழங்குடியினரது மொழி
இ. AI கருவி
ஈ. பழங்குடியினர் திருவிழா
- ‘அனுவாதினி’ என்பது செயற்கை நுண்ணறிவைத் துணையாகக் கொண்டு இயங்கும் பன்மொழி மொழிபெயர்ப்பு கருவியாகும். உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இது, ஆங்கில உள்ளடக்கத்தை எந்திரகற்றல்மூலம் பல்வேறு மொழிகளில் விரைவாக மொழிமாற்றம் செய்ய உதவுகிறது. கடந்த ஈராண்டுகளில், இணைவழி கற்றல் தளமான ‘Ekumbh’-க்கு ஏராளமான பாடநூல்களை இது மொழிபெயர்த்து தந்துள்ளது. இந்த முயற்சியானது தேசிய நுழைவுத் தேர்வுகளுக்கு பன்னிரண்டு பிராந்திய மொழித்தேர்வுகளையும் வழங்குகிறது.
6. பின்வருவனவற்றில், ‘ரோடமைன்-B’ பற்றி சிறப்பாக விவரிப்பது எது?
அ. சாயமிடுவதற்கும் வண்ணந்தீட்டுவதற்கும் பயன்படுத்தப்படும் புற்றுநோய் ஏற்படுத்தும் வேதி
ஆ. மூட்டுவலிக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிற ரோடோடென்ட்ரான் பூவில் காணப்படும் புரதம்
இ. கீல்வாதத்திற்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசி
ஈ. சிறுகோள்களின் மேற்பரப்பில் உள்ள நீர் மூலக்கூறுகள்
- சாயமிடுவதற்கும், வண்ணந்தீட்டுவதற்கும் பல்வேறு தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும், ‘ரோடமைன் B’ என்ற வேதி கலந்திருப்பதால், இளஞ்சிவப்புநிறப் பஞ்சு மிட்டாய் விற்பனை மற்றும் உற்பத்திக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. தூள் வடிவில் இருக்கும்போது பச்சை நிறத்தில் தோன்றினாலும், தண்ணீரில் சேர்க்கப்படும்போது இது இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது. ரோடமைன் B, தூபம் மற்றும் தீப்பெட்டி குச்சிகளிலும் பயன்படுத்தப்படுகிறது. மிகுந்த நச்சுத்தன்மையுடைய இது, சிறு அளவில் உட்கொண்டால்கூட புற்றுநோயை உண்டாக்கும் ஆபத்துடையது. இந்திய உணவுப் பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையம் (FSSAI) உணவுப்பொருட்களில் இதைப் பயன்படுத்துவதைத் தடைசெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
7. PM விஸ்வகர்மா யோஜனாவைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
அ. உள்துறை அமைச்சகம்
ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ. குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறைகள் அமைச்சகம்
ஈ. சுற்றுலா அமைச்சகம்
- குறு, சிறு & நடுத்தர தொழிற்துறை அமைச்சகத்தின், ‘PM விஸ்வகர்மா யோஜனா’ கைவினைஞர்களை கடன்கள், திறன் பயிற்சி, நவீன உபகரணங்கள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை வழங்கி ஊக்குவிக்கிறது. `13,000 கோடி மதிப்பிலான நிதி ஒதுக்கீட்டிலான இந்தத்திட்டம் 18 விதமான வணிகங்களை உள்ளடக்கியுள்ளது. 2027-28 நிதியாண்டு வரை ஐந்தாண்டுகளுக்கு இதனை இயக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறைகளின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. anமையில், பாட்மிண்டன் ஆசிய அணி சாம்பியன்ஷிப் போட்டியில், கீழ்காணும் எந்த நாட்டின் பெண்கள் அணி தங்கப்பதக்கம் வென்றது?
அ. தாய்லாந்து
ஆ. இந்தியா
இ. மலேசியா
ஈ. சீனா
- மலேசியாவின் ஷா ஆலமில் நடைபெற்று வரும் ஆசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் பாட்மிண்டன் அணி முதன்முறையாக தங்கப்பதக்கம் வென்றது. அந்த அணி இறுதிப்போட்டியில் தாய்லாந்தை 3-2 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது.
9. அண்மையில், பன்னாட்டு நீதிமன்றத்தின் (ICJ) புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
அ. நவாப் சலாம்
ஆ. தல்வீர் பண்டாரி
இ. ஜோன் டோனோகு
ஈ. ரோனி ஆபிரகாம்
- முதல் லெபனானியரும் இரண்டாவது அரேபியருமான நவாப் சலாம், ஹேக்கில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தின் (ICJ) தலைவராகப் பதவியேற்றார். இவருக்கு முன்பு அமெரிக்க நீதிபதி ஜோன் டோனோகு இந்தப் பதவியிலிருந்தார். 2024இல் தொடங்கும் நவாப் சலாமின் பதவிக்காலம் மூன்றாண்டு காலத்திற்கு நீளும். மிகவுயர்ந்த உலகளாவிய நீதித்துறை அதிகாரமான ICJ, அரசுகளுக்கிடையேயான சட்ட மோதல்களைத் தீர்க்கிறது. மேலும் ஐநா தொடர்பான சட்டபூர்வ விஷயங்களில் ஆலோசனைக் கருத்துக்களை வழங்குகிறது.
10. 60ஆவது முனிச் பாதுகாப்பு மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. ஜெர்மனி
ஆ. ரஷ்யா
இ. சீனா
ஈ. பிரான்ஸ்
- வெளியுறவுத்துறை அமைச்சர் Dr S ஜெய்சங்கர் ஜெர்மனியில் நடைபெறும் 60ஆவது முனிச் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துகொள்கிறார். உலக தலைவர்கள் பங்கேற்கும் இருதரப்பு ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய சிக்கல்களுக்குத் தீர்வுகாணும் கலந்துரையாடலில் அவர் பங்கேற்பார். மூன்று நாள் நடைபெறும் இம்மாநாடு பாதுகாப்பு சவால்களில் ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்த உயர்மட்ட விவாதங்களுக்கான தளமாகச் செயல்படுகிறது.
11. பொன்முடி மலை அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. குஜராத்
ஈ. மகாராஷ்டிரா
- கேரள மாநிலத்தின் பொன்முடி மலைப்பகுதியில் ‘Cliffside Bambootail’ (Phylloneura rupestris) எனப் பெயரிடப்பட்ட புதிய ஊசித்தட்டான் (damselfly) இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேற்குத்தொடர்ச்சிமலையின் ஒருபகுதியான பொன்முடி 1100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 160 ஆண்டுகளாக ‘Myristica Bambootail’ என்ற ஒரேயொரு உயிரினத்துடன் ஒரே மாதிரி தோற்றத்தில் காணப்பட்ட, ‘Phylloneura’ இனமானது இக்கண்டுபிடிப்பின் மூலம் வேறு தோற்றத்திலும் உள்ளதென தெளிவுபடுத்தியுள்ளது.
12. PM உச்சதர் சிக்ஷா அபியான் (PM-USHA) திட்டத்தின்கீழ், `740 கோடி நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற மாநிலம் எது?
அ. உத்தர பிரதேசம்
ஆ. மத்திய பிரதேசம்
இ. பீகார்
ஈ. ஒடிசா
- இராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியானின் (RUSA) புதுப்பிக்கப்பட்ட வடிவமான PM-உச்சதர் சிக்ஷா அபியானின் (PM-USHA) கீழ் நாட்டிலேயே அதிகபட்சமாக `740 கோடி நிதியை உத்தர பிரதேச மாநிலம் பெற்றுள்ளது. தேசிய கல்விக் கொள்கை-2020க்கு இணங்க மாநில உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய அரசின் நிதியுதவிபெற்ற இத்திட்டம், பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகள், தரநிலைகள் மற்றும் உயர்கல்வியில் தர உத்தரவாதத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்துகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு அரசு தடை!
பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை உண்டாக்கும் வேதிகள் இருப்பது உறுதிசெய்யப்பட்டதை அடுத்து தமிழ்நாட்டில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006இன்படி, ‘ரோடமைன்-B’ எனப்படும் செயற்கை நிறமூட்டியைக் கொண்டு உணவுப்பொருள்களை தயாரித்தல், பொட்டலம் செய்து விற்றல், இறக்குமதி செய்தல், விற்பனை செய்தல், மணவிழாக்கள் மற்றும் பொது நிகழ்வுகள் ஆகியவற்றில் பரிமாறுதல் ஆகியவை உணவுப் பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம்-2006இன்படி தண்டனைக்குரிய குற்றமாகும். இருப்பினும், வண்ணங்கலக்கப்பட்ட இளஞ்சிவப்புநிற பஞ்சுமிட்டாய்க்கு மட்டுமே இத்தடைபொருந்தும், வெண்ணிற பஞ்சு மிட்டாய் விற்க தடையேதும் விதிக்கப்படவில்லை.
2. மஞ்சப்பை விருது.
தமிழ்நாடு முழுவதும் ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டத்தின் பிரசாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப்பைகளுக்கு மாற்றாக, சுற்றுச்சூழலுக்குகந்த பாரம்பரியமான மஞ்சப்பையின் பயன்பாட்டை ஊக்குவித்து சிறப்பாக செயல்படுத்தும் மூன்று சிறந்த பள்ளிகள், மூன்று சிறந்த கல்லூரிகள் மற்றும் மூன்று சிறந்த வணிக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால், ‘மஞ்சப்பை விருதுகள்’ வழங்கப்படவுள்ளது. ‘மஞ்சப்பை விருது’ பெறுவோர்களுக்கு, முதல் பரிசாக `10 இலட்சமும், இரண்டாம் பரிசாக `5 இலட்சமும், மூன்றாம் பரிசாக `3 இலட்சமும் வழங்கப்படும்.
3. ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ திட்டம் தொடக்கம்.
தமிழ்நாட்டில் 6-9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கான, ‘நான் முதல்வன் ஒலிம்பியாட்’ திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஒலிம்பியாட் தேர்வை பொருத்தவரை 6-9ஆம் வகுப்புவரை பயிலும் மாணவ, மாணவியரின் திறனைப் பரிசோதிக்கும் நோக்கத்தில் நடத்தப்படுகிறது.
4. பண்ருட்டியில் `16 கோடியில் பலா மதிப்புக் கூட்டுதல் மையம்.
பண்ருட்டியில் `16 கோடியில் பலா மதிப்புக் கூட்டுதலுக்கான மையமும் பெரம்பலூர் மாவட்டத்தில் மக்காச்சோளம், சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையமும் (`4 கோடி மதிப்பீட்டில்) அமைக்கப்படும் என வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
5. பத்துப்பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை.
2024-2025இல் சத்தியமங்கலம் செவ்வாழை (ஈரோடு), கொல்லிமலை மிளகு (நாமக்கல்), மீனம்பூர் சீரக சம்பா (இராணிப்பேட்டை), ஐயம்பாளையம் நெட்டைத் தென்னை (திண்டுக்கல்), உரிகம்புளி (கிருஷ்ணகிரி), புவனகிரி மிதிபாகற்காய் (கடலூர்), செஞ்சோளம் (சேலம், கரூர்), திருநெல்வேலி அவுரி இலை (திருநெல்வேலி), ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை (தேனி), செங்காந்தள் (கண்வலி) விதை (கரூர், திண்டுக்கல் மற்றும் திருப்பூர்) ஆகிய 10 பொருள்களுக்கு புவிசார் குறியீடு `30 இலட்சம் மதிப்பீட்டில் பெறப்படவுள்ளது.