Tnpsc Current Affairs in Tamil – 21st December 2023
1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற கெலெபு சிறப்பு நிர்வாகப் பகுதி அமைந்துள்ள நாடு எது?
அ. நேபாளம்
ஆ. சீனா
இ. பூட்டான்
ஈ. இந்தியா (சிக்கிம்)
- இந்திய எல்லைக்கு அருகில் 1,000 சதுர கிமீ பரப்பளவில் நிறுவப்படவுள்ள பெருநகரத்திட்டமான கெலேபு சிறப்பு நிர்வாகப் பகுதிக்கான திட்டங்களை பூட்டானின் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக் சமீபத்தில் தெரிவித்தார். $4.5 பில்லியன் மதிப்பிலான இந்தத் திட்டமானது தெற்கு எல்லை நகரமான கெலெபுவை பொருளாதார மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தெற்காசியாவிற்கும் தென்கிழக்காசியாவிற்கும் இடையிலான நுழைவு வாயிலாக நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தச் சிறப்பு நிர்வாகப் பகுதி ஆனது அந்நிய முதலீடுகளை ஈர்ப்பதற்கென அதன் சொந்த சட்ட திட்டங்களையும் கொண்டுள்ளது.
2. சமீப செய்திகளில் இடம்பெற்ற, ‘JN.1’ மற்றும் ‘Pirola’ ஆகிய சொற்கள், பின்வரும் எதனுடன் தொடர்புடையவை?
அ. செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி
ஆ. காலநிலை மாற்ற முன்னெடுப்புகள்
இ. COVID-19
ஈ. மலேரியா
- கேரளாவைச் சேர்ந்த ஒருவருக்கு, COVID-19 தொற்றுநோயின் புதிய துணை வகையான JN.1 இருப்பதை இந்திய அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். ஒமிக்ரான் மாறுபாட்டின் மரபுசார் வகையான இது, JN.1 துணை மாறுபாடான BA.2.86 திரிபுடன் நெருக்கமாக தொடர்புடையது; இது, ‘பைரோலா’ என்றும் அழைக்கப்படுகிறது. JN.1 திரிபானது ஆரம்பத்தில் 2023 ஜனவரியில் அமெரிக்கா மற்றும் சீனாவின் மரபணு கண்காணிப்பு தரவுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டது. SARS-CoV-2 வைரஸ் எவ்வாறு நிலையான பிறழ்வுகள்மூலம் புதிய துணை மாறுபாடுகளாக தொடர்ந்து உருவாகிறது என்பதை அதன் தோற்றம் எடுத்துக்காட்டுகிறது.
3. உலகின் மிகப்பெரிய தியான மையமான, ‘ஸ்வர்வேத மகாமந்திர்’ அமைந்துள்ள நகரம் எது?
அ. புது தில்லி
ஆ. வாரணாசி
இ. உஜ்ஜயினி
ஈ. ஜெய்ப்பூர்
- உலகின் மிகப்பெரிய தியான மண்டபமாகக் கருதப்படும் வாரணாசியில் உள்ள, ‘ஸ்வர்வேத மகாமந்திரை’ பிரதமர் மோடி திறந்து வைத்தார். 7 மாடிகளைக் கொண்ட இந்தப் பிரமாண்டமான கட்டுமானத்தில் ஒரே நேரத்தில் 20,000 பேர் அமர்ந்து தியானம் செய்ய முடியும். அதன் உட்புறச் சுவர்கள், தூண்கள் மற்றும் கூரைகளில் ஸ்வர்வேத மேற்கோள்கள் அழகுற செதுக்கப்பட்டுள்ளன.
4. தமிழ்நாட்டை விஞ்சியதோடு மகாராஷ்டிராவுக்கு அடுத்து இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்த மாநிலம் எது?
அ. கர்நாடகா
ஆ. இராஜஸ்தான்
இ உத்தர பிரதேசம்
ஈ. குஜராத்
- உத்தரபிரதேச மாநிலம் சமீபத்தில் மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக இந்திய மாநிலங்களில் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறியது. சமீபத்திய தரவுகளின்படி, தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மகாராஷ்டிராவின் பங்கு 15.7%ஆகவும் உத்தர பிரதேச மாநிலத்தின் பங்கு ஏறக்குறைய 9.2%ஆகவும் உள்ளது. யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசாங்கத்தின் தொழிற்துறைக்கு உகந்த கொள்கைகள் அதிக முதலீடுகளை ஈட்டியதால் இந்த நிலைக்கு உபி முன்னேறியுள்ளது.
5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற சிர்பூர் ஈரநிலம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. குஜராத்
ஆ. மத்திய பிரதேசம்
இ. ஒடிசா
ஈ. மேற்கு வங்காளம்
- சிர்பூர் ஈரநிலம் என்பது இந்தூரில் உள்ள இராம்சார் தளமாகும். இங்கு அமையவுள்ள விளக்கமளிக்கும் மையத்திற்கு `6 கோடி நிதி உதவி கிடைத்துள்ளதாக அண்மைச் செய்திகளில் வெளியானது. பயன்படுத்தப்படாத அரசு நிலத்தை விற்பனைசெய்து அம்மாவட்ட நிர்வாகம் நிதியினைத் திரட்டியுள்ளது. அதில் 25% நிதி சிர்பூரின் வளர்ச்சிக்குப் (`6 கோடி செலவில் விளக்கமையம் கட்டுவது உள்ளிட்ட) பயன்படுத்தப்படும்.
6. தற்போது (2023 டிசம்பர்) இந்தியாவின் மொத்த மேற்கூரை சூரிய மின்னுற்பத்தி நிறுவும் திறனில், கீழ்காணும் எந்த மாநிலம் அதிக பங்கினைக் கொண்டுள்ளது?
அ. தமிழ்நாடு
ஆ. குஜராத்
இ. மகாராஷ்டிரா
ஈ. இராஜஸ்தான்
- இந்தியாவின் மொத்த மேற்கூரை சூரிய மின்னுற்பத்தி நிறுவல் திறனில் 31%த்தை குஜராத் கொண்டுள்ளது. மக்களவையில் பகிரப்பட்ட தரவுகளின்படி, குஜராத் மாநிலத்தில் 3,174 மெகாவாட் மேற்கூரை சூரிய மின்னுற்பத்தி நிறுவல்கள் நிறுவப்பட்டுள்ளன. இது 2023ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் மொத்த 10,406 மெகாவாட்டில் 31% ஆகும்.
7. ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகா பகுதிகளுக்கான இந்திய அறிவியல் பயணங்கள் திட்டத்தின் பெயர் என்ன?
அ. PACER
ஆ. POLARIS
இ. ICECAP
ஈ. ARCTICA
- பூமியின் துருவப் பகுதிகளாக விளங்கும் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிகாவுக்கான இந்திய அறிவியல் பணிகள் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் Polar மற்றும் Cryosphere (PACER) திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகின்றன். இந்திய ஆய்வு நிறுவனங்களில் உள்ள அறிவியலாளர்களை உள்ளடக்கிய PACER திட்டம், இந்த அறிவியல் பயணங்களின்மூலம் மற்ற பகுதிகளில் காலநிலை மாற்றம், விண்வெளி வானிலை மற்றும் கிரையோஸ்பியர் இயக்கவியல் பற்றிய புரிதலை விரிவுபடுத்தும் திட்டங்களை மேற்கொள்ள ஊக்குவிக்கின்றது.
8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற யோகமாயா கோவில் அமைந்துள்ள நகரம் எது?
அ. வாரணாசி
ஆ. உஜ்ஜயினி
இ. தில்லி
ஈ. குண்டூர்
- ஜோகமாயா கோவில் என்றும் அழைக்கப்படும் யோகமாயா கோவில், கிருஷ்ணனின் சகோதரியான யோகமாயா தேவிக்கென அர்ப்பணிக்கப்பட்ட 19ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஓர் ஹிந்துக் கோவிலாகும். புது தில்லியில் உள்ள மெஹ்ராலியில், குதுப் வளாகத்திற்கு அருகில் அமைந்துள்ள இக்கோவில் ஒரு தனித்துவமான ஹிந்து கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது.
9. மறைந்த முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவாக, ‘டேர் டு டிரீம்’ திட்டத்தை சமீபத்தில் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
அ. கல்வி அமைச்சகம்
ஆ. பாதுகாப்பு அமைச்சகம்
இ. வெளியுறவு அமைச்சகம்
ஈ. விளையாட்டு அமைச்சகம்
- ‘டேர் டூ டிரீம் – D2D’ திட்டம் என்பது இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகத்தால், குறிப்பாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு போட்டியாகும். தனிப்பட்ட புத்தாக்குநர்கள் மற்றும் துளிர் நிறுவல்கள் இடையே புத்தாக்கம் மற்றும் படைப்பாற்றலை ஊக்குவிப்பதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் நினைவாக, ‘டேர் டூ டிரீம்’ போட்டி தொடங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் போட்டியானது, புதிய தொழில்நுட்பங்களில் உள்ள முக்கிய சவால்களை எதிர்கொள்ள துளிர் நிறுவல்கள், புத்தாக்குநர்கள், தொழில்முனைவோர் மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட எந்தவொரு தனிநபருக்கும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.
10. சமீபத்தில், இந்தியாவின் சொந்த AI மற்றும் பன்மொழி பெருமொழி மாதிரி என விளம்பரப்படுத்தப்பட்ட, ‘Krutrim’ என்பதை உருவாக்கிய நிறுவனம் எது?
அ. ஓயோ
ஆ. ஓலா
இ. PayTM
ஈ. ChatGPT
- ஓலா, சாட்ஜிபிடி போன்ற பெருமொழி மாதிரியான ‘Krutrim’ஐ வெளியிட்டது. இந்தச் சுயாதீன AI அமைப்பு, 10 இந்திய மொழிகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ஓலாவின் போக்குவரத்துப் பிரிவு மற்றும் EV முன்னெடுப்புகளில் இருந்து இது முற்றிலும் வேறுபட்ட பிரிவாக உள்ளது. தனியுரிம தரவுத்தொகுப்புகளின்கீழ் பயிற்சியளிக்கப்பட்ட இது, இந்தியாவின் மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார சூழலை கருத்தில்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
11. அண்மைய மிக்ஜம் புயலின்போது, எந்த இந்திய மாநிலத்தில் உள்ள பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் எண்ணூர் கடற்கழியில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. ஆந்திர பிரதேசம்
- மிக்ஜம் புயலின்போது, சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் இருந்து பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் எண்ணூர் கடற்கழியில் எண்ணெய்க்கசிவு ஏற்பட்டது. சென்னையில் சோழமண்டலக் கடற்கரையில் அமைந்துள்ள எண்ணூர் கடற்கழியானது ஆரணியாற்று-கொசஸ்தலையாற்றுப் படுகையில் உள்ள நீர்நிலைகளில் கடல் நீர் புகுவதிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பேரிடர்கள் பெருவெள்ளங்கள் ஏற்படக்கூடிய கடற்கரையோரத்தில் அமைந்துள்ள சென்னையின் இயற்கையான வெள்ளநீர் உறிஞ்சிகளாக எண்ணூர் கடற்கழிகள் அமைந்துள்ளன.
12. சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாள் மற்றும் சிறுபான்மையினர் உரிமைகள் நாளானது ஒவ்வோர் ஆண்டும் எந்தத் தேதியில் கடைப்பிடிக்கப்படுகிறது?
அ. டிசம்பர் 17
ஆ. டிசம்பர் 18
இ. டிசம்பர் 19
ஈ. டிசம்பர் 20
- சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாள் ஆண்டுதோறும் டிசம்பர்.18 அன்று கொண்டாடப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் சவால்களை இந்த நாள் அங்கீகரிக்கிறது. 2023ஆம் ஆண்டில் வரும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் நாளுக்கானக் கருப்பொருள், “Promoting Safe Migration” என்பதாகும். தேசிய சிறுபான்மையினர் உரிமைகள் நாளான டிசம்பர்.18 இந்தியாவில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்த நாள் இந்திய தேசத்தில் உள்ள மத, இன, மொழி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நினைவூட்டலாக செயல்படுகிறது.
13. LEADS – 2023 என்ற அறிக்கையை வெளியிடுகிற அமைச்சகம் எது?
அ. கல்வி அமைச்சகம்
ஆ. பாதுகாப்பு அமைச்சகம்
இ. NITI ஆயோக்
ஈ. வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
- மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம், “பல்வேறு மாநிலங்களில் எளிதான சரக்குப்போக்குவரத்து – Logistics Ease Across Different State – LEADS – 2023” என்ற அறிக்கையை வெளியிட்டது. LEADSஇன் 5ஆவது பதிப்பு அறிக்கை, மாநில, யூனியன் பிரதேச அளவில் சரக்குப் போக்குவரத்து செயல்திறனை மேம்படுத்துவதற்கான நுண்ணறிவுகளை வழங்குகிறது. இந்த அறிக்கை 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2023 மே மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் நடத்தப்பட்ட நாடு தழுவிய ஆய்வை அடிப்படையாகக் கொண்டது.
- குறிப்பிடத்தக்க சிறப்பம்சங்களில் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, சண்டிகர் மற்றும் குஜராத் ஆகிய பதிமூன்று மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள் 2023ஆம் ஆண்டிற்கான சரக்குப் போக்குவரத்து குறியீட்டு அட்டவணையில் “சாதனையாளர்களாக” அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை முன்பு 15ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிப்பு.
நடப்பாண்டுக்கான (2023) சாகித்திய அகாதெமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்மொழிப்பிரிவில் “நீர்வழிப்படூஉம்” என்னும் புதினத்துக்காக திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இராஜசேகரனுக்கு (தேவி பாரதி) சாகித்திய அகாதெமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த “நீர்வழிப்படூஉம்” நாவலானது குடிநாவிதர்களின் மூதாதையர் வாழ்க்கை முறையை எடுத்துரைப்பதாகும்.
இலக்கிய உலகின் உயரிய விருதாக சாகித்திய அகாதெமி விருது கருதப்படுகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு இந்த விருது ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுக்கு 9 கவிதை நூல்கள், 6 நாவல்கள், 5 சிறுகதை நூல்கள், 3 கட்டுரைகள், 1 இலக்கிய ஆய்வு நூல் ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. சாகித்திய அகாதெமி 70ஆவது ஆண்டை வரும் மார்ச்.12ஆம் தேதி நிறைவுசெய்யவுள்ளது.
திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், நத்தக்காடையூர் அருகே உள்ள புதுவெங்கரையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் எழுத்தாளர் தேவிபாரதி என்ற என். இராஜசேகரன். இவர், நிழலின் தனிமை, நட்ராஜ் மகராஜ், நொய்யல் ஆகிய நாவல்களையும், ஏராளமான சிறுகதைகளையும் எழுதியுள்ளார்.
2. `77,000 கோடியில் 15 இடங்களில் நீர்த்தேக்கங்கள்மூலம் மின்னுற்பத்தி: தமிழ்நாடு அரசு ஒப்புதல்.
தமிழ்நாட்டில் 15 இடங்களில் `77,000 கோடியில் தனியார் பங்களிப்புடன் நீர்த்தேக்கங்கள்மூலம் மின்னுற்பத்தி செய்யும் நிலையங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மான நிறுவனம்மூலம் (TANGEDCO) செயல்படுத்தப்படும் இத்திட்டம்மூலம், சுமார் 14,500 மெகாவாட் (MW) மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
3. மூன்று புதிய குற்றவியல் மசோதாக்கள்: குடியரசுத்தலைவர் ஒப்புதல்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்தார். ஆங்கிலேயர் காலத்தில் இயற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம்-1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம்-1898, இந்திய சாட்சியச் சட்டம்-1872 ஆகியவற்றுக்கு மாற்றாக ‘பாரதிய நியாய சம்ஹிதா’, ‘பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதா’, ‘பாரதிய சாட்சிய அதினியம்’ ஆகிய மூன்று சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள குற்றவியல் நீதி அமைப்பில் முழுமையான மாற்றத்தை ஏற்படுத்துவதை இந்தச் சட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன.