TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 1st July 2024

1. அண்மையில், உத்தரபிரதேச மாநில அரசு அதன் எந்த மாவட்டத்தில் உயிரி-நெகிழிப் பூங்காவை அமைக்க முடிவு செய்துள்ளது?

அ. மதுரா

ஆ. ஆக்ரா

இ. லக்கிம்பூர் கெரி

ஈ. சஹாரன்பூர்

  • உத்தர பிரதேச மாநில அரசு நெகிழி மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் உள்ள கோலா கோகர்நாத் வட்டத்தில் உள்ள கும்பி கிராமத்தில் உயிரி-நெகிழிப் பூங்காவை நிறுவுகிறது. 1000 ஹெக்டேர் பரப்பளவில், `2000 கோடி மதிப்பீட்டில், UPEIDAஐ மைய முகமையாகக்கொண்டு, பல்ராம்பூர் சினி மில்மூலம் இந்தத் திட்டம் உருவாக்கப்படும். புதுப்பிக்கத்தக்க மூலங்களிலிருந்து தயாரிக்கப்படும் உயிரி-நெகிழிகள், பெட்ரோலியம் அடிப்படையிலான நெகிழிகளுக்கு மாற்றீடாகவும், சூழலுக்கு உகந்த விதத்தில் விரைவாகவும் சிதைவடைகிறது.

2. அண்மையில், “Migration and Development Brief” என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. IMF

இ. UNDP

ஈ. UNEP

  • உலகளவில் அதிகம் பணம் அனுப்பும் நாடான இந்தியா, 2024இல் $124 பில்லியனும் 2025இல் $129 பில்லியனும் பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது. 2023இல், 7.5% வளர்ச்சி விகிதத்துடன் இந்தியா $120 பில்லியன் பணம் பெற்றது. 2024இல் இது 3.7%ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் 2024 ஜூன் புலம்பெயர்வு மற்றும் மேம்பாடு குறித்த சுருக்க அறிக்கையானது (Migration and Development Brief) இப்போக்குகளை எடுத்துக்காட்டுகிறது. 18.7 மில்லியன் புலம்பெயர்ந்தோருடன், இந்தியா, முதன்மையான புலம்பெயர்ந்த நாடாக உள்ளது.

3. யாருக்கு 2024ஆம் ஆண்டுக்கான PEN பிண்டர் பரிசு வழங்கப்பட்டுள்ளது?

அ. விக்ரம் சேத்

ஆ. நீலம் சக்சேனா

இ. விக்ரம் சிங்

ஈ. அருந்ததி ராய்

  • புக்கர் பரிசு வென்ற அருந்ததி ராய்க்கு 2024ஆம் ஆண்டுக்கான PEN பிண்டர் இலக்கியப்பரிசு வழங்கப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குத் தொடர தில்லியின் துணை நிலை ஆளுநர் அனுமதி வழங்கிய சிறிது நேரத்திலேயே இந்தப்பரிசு அவருக்குக் கிடைத்துள்ளது. விருது வழங்கும் விழா அக்டோபர் மாதம் லண்டனில் நடைபெறவுள்ளது. இதற்கு முன் இப்பரிசினை பெற்றோருள் சல்மான் ருஷ்டி மற்றும் மார்கரெட் அட்வுட் ஆகியோர் அடங்குவர். 2009இல் நிறுவப்பட்ட இந்த PEN Pinter விருது, ஐக்கிய இராச்சியம் (UK), அயர்லாந்து அல்லது காமன்வெல்த் நாடுகளைச் சார்ந்த ஆங்கில மொழி எழுத்தாளர்களை அங்கீகரிக்கிறது.

4. பள்ளிக்கரணை சதுப்புநிலம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கர்நாடகா

இ. கேரளா

ஈ. ஆந்திர பிரதேசம்

  • சென்னைக்குத் தெற்கே 20 கிமீ தொலைவில் உள்ள நன்னீர் மற்றும் உவர்நீர் சதுப்பு நிலமான பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை பாதுகாப்பதற்காக உயர்மட்ட பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. சென்னையின் கடைசி இயற்கை ஈரநிலங்களில் ஒன்றான இது, ஒரு நீர்நிலை தாங்கலாக செயல்படுகிறது. ஒக்கியம் மடுவு மற்றும் கோவளம் சிற்றோடை வழியாக வங்காள விரிகுடா வரை சுமார் 250 சதுர கிமீ வரை இது பரவியுள்ளது. ராம்சார் தளமான இது 115 பறவை இனங்கள், கண்ணாடி விரியன் மற்றும் அன்றில் உள்ளிட்ட பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாகத் திகழ்ந்து வருகிறது.

5. அண்மையில், இந்தியக் கடற்படைக்கு Medium Range-Microwave Obscurant Chaff Rocket (MR-MOCR) என்ற ஏவுகணையை வழங்கிய அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. HAL

ஈ. CSIR

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO) Medium Range-Microwave Obscurant Chaff Rocket (MR-MOCR) என்ற ஏவுகணையை புது தில்லியில் வைத்து இந்தியக் கடற்படையிடம் ஒப்படைத்தது. ஜோத்பூரில் உள்ள DRDOஇன் பாதுகாப்பு ஆய்வகத்தால் உருவாக்கப்பட்ட இந்தத் தொழில்நுட்பம், ரேடார் சிக்னல்களை மறைத்து, ரேடார் இருப்பைக் குறைக்க நுண்ணலை கவசத்தை உருவாக்குகிறது. இந்த ஏவுகணை, ரேடார் ஏய்ப்புத் திறனை மேம்படுத்துவதற்காக ஒன்றிணைந்த, தனித்துவமான நுண்ணலை தெளிவின்மை பண்புகளுடன்கூடிய சிறப்பு இழைகளைப் பயன்படுத்துகிறது.

6. அண்மையில், நெகிழிக்கழிவுகளைப் பயன்படுத்தி சாலையை அமைத்த இந்தியாவின் இரண்டாவது இராணுவ நிலையம் எது?

அ. டேராடூன் இராணுவ நிலையம்

ஆ. ரூர்க்கி இராணுவ நிலையம்

இ. ஜெய்ப்பூர் இராணுவ நிலையம்

ஈ. மீரட் இராணுவ நிலையம்

  • ஜூன்.26 அன்று மேஜர் ஜெனரல் R S கோதாராவால் நெகிழிக்கழிவுகளால் ஆன சாலை திறந்து வைக்கப்பட்டது. இதன்மூலம், நெகிழிக்கழிவுகளைப் பயன்படுத்தி சாலையை அமைத்த இந்தியாவின் இரண்டாவது இராணுவ நிலையம் என்ற பெருமையை ஜெய்ப்பூர் இராணுவ நிலையம் பெற்றது. டீப் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் பிரைவேட் லிட்உடன் GE (தெற்கு) மற்றும் CE ஜெய்ப்பூர் மண்டலத்தின்கீழ் கட்டப்பட்ட இந்த 100 மீ சாலை, அஸ்ஸாமின் நரங்கி இராணுவ நிலையத்தால் நிறுவப்பட்ட முதல் நெகிழிச் சாலையின் அடியொற்றி போடப்பட்டுள்ளது. குறைந்த தேய்மானம், நீர் புகா தன்மை மற்றும் நீடித்த நிலைத்தன்மை ஆகியவற்றைக்கொண்ட இந்தச் சாலைகள் அதிக காலம் நீடிப்பவை.

7. அண்மையில், NATOஇன் புதிய பொதுச்செயலராக நியமிக்கப்பட்ட மார்க் ரூட்டே, எந்த நாட்டின் பிரதமராவார்?

அ. சிங்கப்பூர்

ஆ. இந்தோனேசியா

இ. நெதர்லாந்து

ஈ. ஆஸ்திரேலியா

  • NATOஇன் அடுத்த பொதுச்செயலாளராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார். ஜூன்.26 அன்று பிரஸ்ஸல்ஸில் NATOஇன் 32 உறுப்புநாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அவர், 2024 அக்.01ஆம் தேதியன்று ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கிற்குப் பிறகு பதவியேற்பார். ஹங்கேரி மற்றும் துருக்கியின் எதிர்ப்பையும், ருமேனிய அதிபர் கிளாஸ் அயோஹானிஸின் விலகலையும் தொடர்ந்து மார்க் ரூட்டேவின் நியமனம் வந்தது. கடந்த 2010 முதல் டச்சுப் பிரதமராக பணியாற்றிய அவர், மேற்கத்திய இராணுவக் கூட்டணியை வழிநடத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

8. கலிபர் சீர்வேக ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?

அ. சீனா

ஆ. ஜப்பான்

இ. இந்தியா

ஈ. ரஷ்யா

  • ரஷ்ய கருங்கடல் கடற்படையானது அண்மையில் உக்ரேனிய உள்கட்டமைப்பை குறிவைத்து கலிபர் சீர்வேக ஏவுகணைகளை ஏவியது. ரஷ்யாவின் அல்மாஸ்-ஆன்டேயால் உருவாக்கப்பட்ட கலிபர் ஏவுகணைகளை பல்வேறு தளங்களிலிருந்து ஏவ முடியும். இதனை கப்பல் எதிர்ப்புக் கருவி, நீர்மூழ்கிக்கப்பல் எதிர்ப்புக் கருவி மற்றும் தரையில் உள்ள இலக்கைத்தாக்கும் கருவியாகவும் பயன்படுத்த முடியும். 1,300 கிலோ முதல் 2,300 கிலோ வரையிலான எடையில் உள்ள இந்த ஏவுகணைகளின் தாக்குதல் தூரம் 200 கிமீ முதல் 2500 கிமீ வரையாக உள்ளது.

9. ‘தபஸ் BH-201 UAV’ஐ உருவாக்கிய அமைப்பு எது?

அ. JAXA

ஆ. DRDO

இ. ISRO

ஈ. HAL

  • இந்திய வான்படை 10 TAPAS (Tactical Airborne Platform for Aerial Surveillance Beyond Horizon-201 அல்லது Tapas BH-201) என்ற ஆளில்லா விமானங்களை (UAV) வாங்க முன்வந்துள்ளது. DRDOஇன் ஏரோநாட்டிக்கல் டெவலப்மென்ட் நிறுவனத்தின்மூலம் உருவாக்கப்பட்ட இந்த டிரோன்கள், முன்பு Rustom-II என்று அழைக்கப்பட்டது. இது முப்படைகளின் உளவுத்துறை, கண்காணிப்பு, இலக்கு கையகப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் உளவுத்துறை (ISTAR) தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. 24 மணி நேர நீடிக்கும் திறனுடன் 30,000 அடி உயரத்தில் இரவும் பகலும் செயல்படும் திறன் கொண்டவை இந்த டிரோன்கள்.

10. அண்மையில், ISROஇன் வணிகப்பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிட் (NSIL) உடனான் $18 மில்லியன் டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. ஜப்பான்

இ. ஜெர்மனி

ஈ. பிரான்ஸ்

  • அண்மையில், விண்வெளி மைத்திரி திட்டத்தின் ஒருபகுதியாக ISROஇன் வணிகப்பிரிவான நியூஸ்பேஸ் இந்தியா லிட் உடன் ஆஸ்திரேலிய அரசு $18 மில்லியன் டாலர் மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த முன்முயற்சியானது விண்வெளி ஆய்வில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதோடு குப்பை மேலாண்மை மற்றும் நிலைத்தன்மையில் கவனம் செலுத்துகிறது. NSIL ஆனது 2026ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ஸ்பேஸ் மெஷின்ஸ் நிறுவனத்தின் ஆப்டிமஸ் விண்கலத்தை ISROஇன் SSLVமூலமாக ஏவும். இது விண்வெளி தொழில் நுட்பத்தில் குறிப்பிடத்தக்க ஒத்துழைப்பைக் குறிக்கிறது மற்றும் இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையே பொறுப்பான விண்வெளி நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது.

11. காசநோய் தொற்று மற்றும் சிகிச்சையை ஆய்வுசெய்வதற்காக ஒரு புதிய 3D நீரேறிய களி வளர்ப்பு அமைப்பை வடிவமைத்துள்ள நிறுவனம் எது?

அ. இந்திய அறிவியல் கழகம் (IISc)

ஆ. ஆயுர்வேத ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

இ. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR)

ஈ. தேசிய காசநோய் நிறுவனம்

  • IIScஇன் உயிரி-பொறியியல் துறையின் ஆராய்ச்சியாளர்கள் பாலூட்டிகளின் நுரையீரல் சூழலைப்பிரதிபலிக்கும் 3D நீரேறிய களி வளர்ப்பு அமைப்பை (3D Hydrogel Culture System) உருவாக்கியுள்ளனர். இக்கண்டுபிடிப்பு நுரையீரல் செல்களில் காசநோய் பாக்டீரியா தொற்றுகுறித்த துல்லியமான கண்காணிப்பு மற்றும் ஆய்வுக்கு வழிவகுக்கிறது. காசநோய் சிகிச்சை முறைகளின் செயல்திறனைச்சோதிக்கும் ஒரு வலுவான தளமாக இவ்வமைப்பு செயல்படுகிறது.

12. சமீபத்தில், லீட்ஸ் பல்கலைக்கழகத்துடனான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிறுவனம் எது?

அ. ஐஐடி கான்பூர்

ஆ. ஐஐடி தில்லி

இ. ஐஐடி மெட்ராஸ்

ஈ. ஐஐடி பம்பாய்

  • ஐஐடி மெட்ராஸும் இங்கிலாந்தில் அமைந்துள்ள லீட்ஸ் பல்கலைக்கழகமும் இணைந்து நிலையான வளர்ச்சிக்கான கூட்டு மெய்நிகர் மையத்தை அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் தாக்கம்மிக்க ஆராய்ச்சி மற்றும் புதுமைகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாடத்திட்டங்கள், கருத்தரங்குகள், ஆய்வரங்குகள், விரிவுரைகள்போன்ற கூட்டான கல்வி செயல்பாடுகளை ஏற்பாடு செய்யவும், கூட்டான ஆராய்ச்சித் திட்டங்களை உருவாக்கவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்கிறது. மேலும், இதன்மூலம் கல்வி அனுபவங்களை வளப்படுத்தி, சிக்கலான சவால்களைத் தீர்ப்பதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய நிபுணர்களின் உலகளாவிய வலையமைப்பு வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பசிபிக் பெருங்கடலை ஒட்டிய 29 நாடுகள் போர் பயிற்சி: இந்தியக்கடற்படை பங்கேற்பு.

உலகின் மிகப்பெரும் கடற்சார் போர் பயிற்சியான, ‘ரிம் ஆஃப் தி பசிபிக்’ (RIMPAC) பயிற்சியில் இந்தியக் கடற்படை பங்கேற்றது. ஹவாய் தீவில் நடைபெறும் இந்தப்பயிற்சியில் 29 நாடுகள், 40 கப்பல்கள், 3 போர்க்கப்பல்கள், 150க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் 25,000க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்கள் பங்கேற்கின்றனர்.

இந்தப் பயிற்சியில் பங்கேற்பதற்காக தென்சீனக்கடல் மற்றும் வட பசிபிக் பெருங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்தியாவின் பல்நோக்கு போார்க்கப்பலான ஷிவாலிக், பேர்ல் ஹார்பரைச் சென்றடைந்தது. நடப்பாண்டுக்கான RIMPAC பயிற்சியின் கருப்பொருள், “ஒருங்கிணைந்த & தயார்நிலையிலான கூட்டமைப்பு நாடுகள்” என்பதாகும்.

2. இராணுவ புதிய தலைமைத்தளபதியாக உபேந்திர துவிவேதி பொறுப்பேற்பு.

இந்தியாவின் 30ஆம் ராணுவ தலைமைத்தளபதியாக உபேந்திர துவிவேதி பொறுப்பேற்றார். ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேயின் பதவிக்காலம் ஜூன்.30ஆம் தேதியன்று நிறைவடைந்ததையடுத்து உபேந்திர துவிவேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

3. வெங்கையா குறித்த மூன்று நூல்கள்: பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார்.

முன்னாள் குடியரசுத்துணைத்தலைவர் வெங்கையாவின் வாழ்க்கை, அரசியல் பயணம் குறித்த மூன்று நூல்களை பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்டார். வெங்கையாவின் வாழ்க்கை வரலாறு, “வெங்கையா நாயுடு-லைஃப் இன் சர்வீஸ்” என்ற பெயரில் நூலாக வெளியிடப்பட்டுள்ளது. இதுதவிர, “செலிபிரேட் பாரத்”, 13ஆவது குடியரசுத்துணைத் தலைவராக வெங்கையாவின் இலக்கை நோக்கிய பயணம் மற்றும் செய்தி ஆகிய நிழற்படத்தொகுப்பு நூல்களும் வெளியிடப்பட்டன. ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, வெங்கையாவின் தாய்மொழியான தெலுங்கிலும் அவரது வாழ்க்கை வரலாற்று நூல் வெளியாகியுள்ளது.

4. SCO உச்சிமாநாடு.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் இடம்பெற்றுள்ளன. பெரும் சர்வதேச அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, செல்வாக்கு மிகுந்த பொருளாதார, பாதுகாப்பு அமைப்பாக விளங்குகிறது. இந்த அமைப்பின் 24ஆவது உச்சிமாநாடு கஜகஸ்தானின் தலைநகரம் அஸ்தானாவில் ஜூலை.03, 04 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!