Tnpsc Current Affairs in Tamil – 1st February 2024
1. நான்காவது தேசிய சிலிகா பறவை திருவிழாவானது 2024 ஜனவரி 27–29 வரை நடைபெற்றது. சிலிகா ஏரி அமைந்துள்ள மாநிலம் எது?
அ. மத்திய பிரதேசம்
ஆ. ஒடிசா
இ. இராஜஸ்தான்
ஈ. கேரளா
- 4ஆவது தேசிய சிலிகா பறவை திருவிழாவானது 2024 ஜன.27-29 வரை நடைபெற்றது. குளிர்காலத்தில் மங்கள ஜோடிக்கு வருகைதரும் 200 இனங்களைச் சேர்ந்த 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட பறவைகளை இந்தத் திருவிழா வரவேற்கிறது. இந்த விழாவை ஒடிஸா மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் தொடக்கிவைத்தார். மூன்று நாள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 52 பறவை ஆர்வலர்கள் கலந்துகொண்டனர்.
2. அண்மையில் தனது ஓய்வை அறிவித்த டீப் கிரேஸ் எக்காவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?
அ. ஹாக்கி
ஆ. கிரிக்கெட்
இ. கால்பந்து
ஈ. டேபிள் டென்னிஸ்
- டீப் கிரேஸ் எக்கா ஒரு முன்னாள் இந்திய பெண் ஹாக்கி டிஃபெண்டரும் பெனால்டி கார்னர் நிபுணரும் ஆவார். அண்மையில், 29 வயதான அவர் சர்வதேச ஹாக்கியில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்காக இரண்டு ஒலிம்பிக் போட்டிகள் உட்பட 268 போட்டிகளில் எக்கா விளையாடியுள்ளார். அவர் 2016 ரியோ ஒலிம்பிக்கில் இந்தியா தகுதிபெறுவதில் முக்கிய நபராக செயல்பட்டார். மேலும் இந்தியா நான்காவது இடம்பிடித்த 2021 டோக்கியோ ஒலிம்பிக்கில் அவர் முக்கிய டிஃபெண்டராக செயல்பட்டார்.
3. கேரள மாநிலத்தின் எந்த மாவட்டம் சர்வதேச இலக்கிய விழாவை நடத்தவுள்ளது?
அ. திருச்சூர்
ஆ. கொல்லம்
இ. வயநாடு
ஈ. கண்ணூர்
- கேரள மாநிலத்தின் சர்வதேச இலக்கிய விழா திருச்சூரில் தொடங்கியது; அப்போது மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் மனிதநேயத்தை ஒன்றிணைப்பதில் இலக்கியத்தின் பங்கை வலியுறுத்தினார். “இலக்கியம், கலாச்சாரம் மற்றும் முன்னேற்றம்” என்ற கருப்பொருளின்கீழ் கேரள மாநில சாகித்திய அகாதெமி நடத்தும் இந்த 7 நாள் விழாவில் பாலஸ்தீனம் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த கவிகள் உட்பட உலகளாவிய, இந்திய மற்றும் பிராந்திய எழுத்தாளர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்வு கலாச்சார மறுமலர்ச்சியை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
4. அண்மையில் மஹ்தா, கைஹான்-2 மற்றும் ஹதேஃப்-1 ஆகிய செயற்கைக்கோள்களை ஏவிய மத்திய கிழக்கு நாடு எது?
அ. ஈரான்
ஆ. ஈராக்
இ. எகிப்து
ஈ. ஜோர்டான்
- சிமோர்க் என்ற ஏவுகணையைப் பயன்படுத்தி, ‘மஹ்தா’ என்ற 32 கிகி எடைகொண்ட செயற்கைக்கோளையும் ‘கைஹான்-2’ 10 கிகிராமுக்கும் குறைவான எடையுள்ள ஒரு நானோ செயற்கைக்கோளையும் ‘ஹதேஃப்-1’ என்ற 10 கிகிராமுக்கும் குறைவான எடையுள்ள மற்றொரு நானோ செயற்கைக்கோளையும் ஈரான் இமாமிலிருந்து ஏவியது. ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள கொமேனி விண்வெளி நிலையத்தில் இருந்து அவை ஏவப்பட்டன.
5. குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவாக வகைப்படுத்தப்பட்ட, ‘குடியா கோண்டு பழங்குடியினர்’ வசிக்கும் மாநிலம் எது?
அ. ஒடிசா
ஆ. ஜார்கண்ட்
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. சத்தீஸ்கர்
- புது தில்லியில் நடைபெற்ற குடியரசு நாள் அணிவகுப்புக்கு சிறப்பு விருந்தினராக ஒடிஸா மாநிலத்தில் வசிக்கும் குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினர் குழுவைச்சேர்ந்த இரு குடியா கோண்டு நபர்கள் அழைக்கப்பட்டனர். ஒவ்வோர் ஆண்டும், மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் குடியரசு நாள் நிகழ்வுகளுக்கு இதுபோன்ற குழுக்களைச் சார்ந்த பிரதிநிதிகளை அழைக்கின்றது.
6. அண்மையில், முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் அடித்து வரலாறு படைத்த வீரர் யார்?
அ. தன்மை அகர்வால்
ஆ. ஹர்திக் தாமோர்
இ. சிவம் துபே
ஈ. அபிஷேக் ரெட்டி
- தன்மை அகர்வால் 2024 ஜனவரியில் முதல்தர கிரிக்கெட்டில் அதிவேக முச்சதம் அடித்து சாதனைபடைத்தார். ரஞ்சி டிராபி பிளேட் குரூப் ஆட்டத்தில் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கு எதிராக தன்மை 160 பந்துகளில் 323 ரன்கள் எடுத்தார். தன்மை அகர்வாலின் இன்னிங்ஸில் 33 பவுண்டரிகள் மற்றும் 21 சிக்ஸர்கள் அடங்கும். இதன்மூலம் கடந்த 2017ஆம் ஆண்டு 191 பந்துகளில் முச்சதம் அடித்த மார்கோ மரைஸின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது.
7. எந்த ஆற்றின்மீது ரேட்டில் புனல்மின்னுற்பத்தித் திட்டம் கட்டப்பட்டுள்ளது?
அ. செனாப் ஆறு
ஆ. தாவி ஆறு
இ. சட்லஜ் ஆறு
ஈ. காவேரி ஆறு
- ஜம்மு & காஷ்மீரில் 850 மெகாவாட் (MW) மின்னுற்பத்தித் திறன்கொண்ட ரேட்டில் புனல்மின்னுற்பத்தித் திட்டத்தை விரைவுபடுத்துவதற்காக செனாப் ஆற்றின்போக்கை சுரங்கப்பாதைகள்மூலம் திசைதிருப்பிவிடுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கிஷ்த்வார் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தத் திட்டம், செனாப் ஆற்றின்மீது கட்டப்பட்டு வரும் நீர் நீர்மின்னுற்பத்தி முன்னெடுப்பாகும். ஜம்மு மாற்றும் காஷ்மீர் மாநில ஆற்றல் உற்பத்திக் கழகம் மற்றும் தேசிய புனல்மின்னாற்றல் கழகம் ஆகியவற்றின் கூட்டுமுயற்சியாக ரேட்டில் புனல்மின்னாற்றல் கழகம் உருவாக்கப்பட்டது.
8. ‘INS சுமித்ரா’ என்பது என்ன வகையான கப்பலாகும்?
அ. ரோந்துக்கப்பல்
ஆ. போர்க்கப்பல்
இ. தாக்கியழிக்கும் கப்பல்
ஈ. விமானந்தாங்கிக் கப்பல்
- சோமாலியாவின் கிழக்குக்கடற்கரையில் கடத்தப்பட்ட மீனவர்களை இந்தியக்கடற்படையின் INS சுமித்ரா என்ற சரயு வகை ரோந்துக்கப்பல் மீட்டது. 2014இல் பணியில் சேர்க்கப்பட்ட இந்தக் கப்பல், கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தால் கட்டப்பட்ட அதன் வகுப்பின் கடைசிக் கப்பலாகும். கிழக்குக்கடற்படைக் கட்டளையின்கீழ் சென்னையை மையமாகக் கொண்ட அந்தக் கப்பலின் முதன்மைப் பணிகளில் EEZ கண்காணிப்பு, கடற்கொள்ளை எதிர்ப்பு ரோந்து, கடற்படை ஆதரவு, கடல்சார் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்.
9. அண்மையில், வடகிழக்கு இந்தியாவின் முதல் இயற்கை மருத்துவ (Naturopathy) மருத்துவமனையின் அடிக்கல் எங்கு நாட்டப்பட்டது?
அ. அருணாச்சல பிரதேசம்
ஆ. மணிப்பூர்
இ. மிசோரம்
ஈ. அஸ்ஸாம்
- மத்திய ஆயுஷ் மற்றும் துறைமுகங்கள், கப்பல் & நீர்வழிப்போக்குவரத்துகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மற்றும் அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் திப்ருகாரில் மத்திய யோகா மற்றும் இயற்கை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 100 படுக்கைகள்கொண்ட யோகா மற்றும் இயற்கை மருத்துவ மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினர். `100 கோடி முதலீட்டில், 15 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்த நிறுவனம் பாரம்பரிய யோகா மற்றும் இயற்கை மருத்துவத்தை நவீன தொழினுட்பத்துடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. யோகா மற்றும் நலத்துறையில் உள்ள துளிர்நிறுவல்களுக்கான சான்றுகள் அடிப்படையிலான ஆராய்ச்சி, பன்னாட்டு ஒத்துழைப்பு மற்றும் அடைவகம் ஆகியவற்றில் இந்த நிறுவனம் கவனஞ்செலுத்தும்.
10. இந்தியக் கடற்படையில் 38 ஆண்டுகள் பணியாற்றியபிறகு அண்மையில் பணி ஓய்வுபெற்ற கப்பல் எது?
அ. INS சுவர்ணா
ஆ. INS நிரூபக்
இ. INS கப்ரா
ஈ. INS ஆதித்யா
- 1985ஆம் ஆண்டு பணியில் இணைக்கப்பட்ட INS நிரூபக் என்ற ஆய்வுக்கப்பல் தனது 38 ஆண்டுகால சேவைக்குப் பிறகு, அண்மையில் பணி ஓய்வுபெற்றது. கடந்த 1981 ஜூன்.4இல் அறிவிக்கப்பட்டதும் விசாகப்பட்டினத்தை தளமாகக் கொண்டதுமான இந்தக் கப்பல், நீரியல் ஆய்வில் முக்கிய பங்கு வகித்தது மாற்றும் சிறந்த விருதுகளைப் பெற்றது. இது, 2004 – சுனாமி நிவாரணம் உட்பட பல்வேறு மனிதாபிமான நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்றது.
11. அண்மையில், புதுச்சேரியின் புதிய தலைமைச்செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. இராஜீவ் வர்மா
ஆ அபிஜித் விஜய் சௌத்ரி
இ. சரத் சௌகான்
ஈ. ஆஷிஷ் மாதோராவ்
- புதுச்சேரியின் புதிய தலைமைச் செயலாளராக Dr ஷரத் சௌகான் நியமிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஷரத் சௌகான் AGMUT (அருணாச்சல பிரதேசம்-கோவா-மிசோரம் மற்றும் யூனியன் பிரதேசம்) பணிநிலைப்பிரிவில் உறுப்பினராக உள்ளார். இதற்கு முன்பு அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பணியாற்றினார்.
12. “ஏக் சமந்தர், மேரே அந்தர்” என்ற நூலை எழுதியவர் யார்?
அ. சஞ்சீவ் ஜோஷி
ஆ. விக்ரம் சேத்
இ. அரவிந்த் அடிகா
ஈ. வினீத் பாஜ்பாய்
- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் இராணுவத் தலைமைத்தளபதி ஜெனரல் அனில் சௌகான் ஆகியோர் பிரமோஸ் ஏரோஸ்பேஸின் துணை தலைமைச் செயல் அதிகாரி சஞ்சீவ் ஜோஷி எழுதிய, “ஏக் சமந்தர், மேரே அந்தர்” என்ற நூலை அறிமுகப்படுத்தினர். 75 கவிதைகள் அடங்கிய இந்நூல் இந்திய சர்வதேச மையத்தில் வெளியிடப்பட்டது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. நீர்வளம் காப்போம்.
இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு.21 மாசு இல்லாத சுற்றுச்சூழலைப் பெறுவது அனைவருக்கும், “அடிப்படை உரிமை” எனத்தெரிவித்துள்ளது. வேலூர் குடிமக்கள் நலமன்றம் -எதிர்- இந்திய ஒன்றியம் (1996) தொடர்பான வழக்கில், இந்திய உச்சநீதிமன்றம் நம் நாட்டில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக அதிமுக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தியாவில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க, “இயற்கையை மாசுபடுத்துபவர் செலுத்தும் (விலை) கொள்கை”, “முன்னெச்சரிக்கை (தடுப்பு) கொள்கை” ஆகிய இரு கொள்கைகளை அத்தீர்ப்பு அறிமுகப்படுத்தியது.
புதுதில்லி, தேசிய பசுமை தீர்ப்பாயமும், இக்கொள்கைகளைப் பயன்படுத்தி சுற்றுச்சூழலை மாசுபடுத்துபவரே, அதை சுத்தப்படுத்துவதற்கான விலையையும் செலுத்தவேண்டும் எனத் தெரிவித்து வருகிறது.
விநாயகர் சிலைகளில் பாரிசு சாந்தால் செய்யப்பட்டு வேதி வண்ணக்கலவை பூசப்படுகிறது. இந்தப் பாரிசு சாந்தில் ஜிப்சம், சல்பர், பாசுபரஸ், மெக்னீசியம் போன்ற வேதியல் கலவைகள் உள்ளன. இவை தண்ணீரில் கரைய பல மாதங்கள் ஆகும். மேலும், வேதி வண்ணக் கலவையில் மெர்குரி, லீட், காட்மியம், கார்பன் போன்ற உலோகங்கள் உள்ளன. இவை நீரில் அமிலத்தன்மையை அதிகரிப்பதுடன், நீரில் உலோகங்களின் அளவையும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அனுமதியில்லா பகுதிகளில் சிலைகளைக் கரைத்தால் அபராதம் விதிக்கலாம் எனவும் விநாயகர் சிலைகளைக் கரைக்க அனுமதி கேட்போரிடம் முன்கூட்டியே கட்டணம் வசூலிக்க ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்தக் கட்டணத்தைத் தீர்ப்பாயக் குழு தீர்மானிக்கும் எனவும் சிலைகளைக் கரைக்க வசூலிக்கப்படும் தொகையை நீர்நிலைகளைப் பராமரிக்க செலவிடலாம் எனவும் தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான சுற்றுச்சூழலைப் பெறுவது எப்படி ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமையோ, அதுபோலவே இயற்கையை மாசுபடாமல் காத்து, சுற்றுச்சூழலை பேணிக்காப்பதும் ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.
இலவச, கட்டாயக் கல்வி உரிமை சட்டம் (ஆர்டிஇ) 2009-இன்படி பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவைச் சேர்ந்தவர்களின் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்.
2. 25 கோடி பேர் வறுமையிலிருந்து மீட்பு.
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் 25 கோடி பேரை மத்திய அரசு வறுமையிலிருந்து மீட்டுள்ளது என்று நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரெளதி முர்மு பெருமிதத்துடன் தெரிவித்தார்.
உள்நாட்டுப் பாதுகாப்பு: ஜம்மு- காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டது.
வறுமையிலிருந்து மீட்பு: கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மத்திய அரசு மீட்டுள்ளது என NITI ஆயோக் தெரிவித்துள்ளது.
பாதுகாப்புத் தளவாட உற்பத்தி: நாட்டில் பாதுகாப்புத் தளவாட உற்பத்தி `1 இலட்சம் கோடியைக் கடந்துள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’, ‘தற்சார்பு இந்தியா’ ஆகியவை இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் மிகப்பெரும் பங்கு வகிக்கின்றன.
கட்டுப்பாட்டில் பணவீக்கம்: கடந்த பத்து ஆண்டுகளில் பணவீக்கம் 5 சதவீதத்துக்குள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.
பொருளாதார வளர்ச்சி: நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி இரண்டு காலாண்டில் 7.5 சதவீதமாக நீடித்து வருகிறது. இந்தியா, முதல் ஐந்து பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது. நாட்டின் ஏற்றுமதி 450 பில்லியன் டாலரிலிருந்து 775 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா: இம்மசோதா, மக்களவை, சட்டசபைகளில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்கும்.
வருமானவரி தாக்கல்செய்வோர் அதிகரிப்பு: வருமானவரி கணக்கு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை சுமார் 3.25 கோடியிலிருந்து சுமார் 8.25 கோடியாக அதிகரித்துள்ளது.
2ஆவது கைப்பேசி உற்பத்தி: உலகின் 2ஆவது பெரிய கைப்பேசி உற்பத்தி நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
எண்ம பரிவர்த்தனை: உலகின் மொத்த எண்ம பரிவர்த்தனைகளில் 46 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகின்றன.
புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது கூட்டுக் கூட்டத்தில் உரையாற்ற வருகைதந்த குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு இணையாக தமிழ்நாட்டின் செங்கோலுக்கு மரியாதை அளிக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வந்து இறங்கியபோது மக்களவையின் இணை இயக்குநர் அந்தஸ்தில் இருக்கும் மார்ஷெல் இராஜீவ் சர்மா ‘செங்கோல்’ ஏந்தியவாறு முன்னே சென்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆதீனங்களால் முதல் பிரதமரான நேருவிடம் இந்தச் ‘செங்கோல்’ வழங்கப்பட்டது.
நடப்பாண்டு இந்தியப் பொருளாதாரம் 8 சதவீதமாக வளர்ச்சி அடையும் என்று உலகப் பொருளாதார மன்றம் (WTO) எதிர்பார்க்கிறது.
3. கேலோ இந்தியா: தமிழ்நாடு 2ஆம் இடம்.
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு 2ஆமிடம்பிடித்தது. மகாராஷ்டிரம் முதலிடமும், ஹரியானா 3ஆம் இடமும் பிடித்தன. கடந்த முறை சாம்பியனான மகாராஷ்டிரமே, இந்த முறையும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது.
6ஆவது கேலோ இந்தியா போட்டிகள், கடந்த ஜனவரி.19ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 5,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்ற இந்தப் போட்டி, சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி ஆகிய நகரங்களில் நடைபெற்றது. போட்டியின் முடிவில் தமிழ்நாடு 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என மொத்தம் 98 பதக்கங்களை வென்று பட்டியலில் 2ஆம் இடத்தைப் பிடித்தது.
4. ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியல் வெளியீடு.
உலகில் ஊழல்மிகுந்த நாடுகள் கொண்ட பட்டியலில், 2022இல் 40 மதிப்பெண்களுடன் 85ஆவது இடத்திலிருந்த இந்தியா, 2023ஆம் ஆண்டு 39 மதிப்பெண்களுடன் 93ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
உலகில் ஊழல்மிகுந்த, குறைந்த நாடுகளின் தரவுகள் பட்டியலை அரசுசாரா அமைப்பான டிரான்ஸ்பரன்சி இன்டர் நேஷனல் என்ற அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் வெளியிட்டு வருகிறது. உலகின் 180 நாடுகளில் இந்த அமைப்பு ஆய்வுகொண்ட தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டிற்கான பட்டியலை வெளியிட்டுள்ளது.
இந்தத் தரவுகளின் அடிப்படையில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெறும் நாடுகள், ‘ஊழலற்ற நாடு’ என்ற வகையில் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பெறுகிறது. சுழிய மதிப்பெண் பெறும் நாடுகள், ‘ஊழல்கள் மிகுந்த’ நாடுகளாக குறிப்பிடப்படுகிறது.
100க்கு 90 மதிப்பெண் பெற்ற டென்மார்க் உலகின் மிகக்குறைந்த ஊழல்கொண்ட நாடாக தொடர்ந்து ஆறாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதையடுத்து 87 மதிப்பெண்களுடன் பின்லாந்தும், 85 மதிப்பெண்களுடன் நியூசிலாந்தும் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. உலகின் மிக ஊழல்நிறைந்த நாடுகள் பட்டியலில், வெறும் 11 மதிப்பெண்களுடன் சோமாலியா கடைசி இடத்தில் உள்ளது.
தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் மதிய உணவுத் திட்டத்தின்கீழ், குழந்தைகள் மையங்களில் 2 முதல் 6 வயது வரையுள்ள சுமார் 11.50 இலட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகிறார்கள்.
5. ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: பிப்.7இல் திருச்சிராப்பள்ளியில் திட்டம் தொடக்கம்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் அளிக்கும் திட்டம் (கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்) திருச்சிராப்பள்ளியில் வரும் 7ஆம் தேதி தொடங்கப்படவுள்ளதாக விளையாட்டுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
6. இல்லம் தேடி கல்வித் திட்டம்.
தமிழ்நாட்டில் COVID-19 காலகட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையான மாணவர்களிடையே ஏற்பட்ட கற்றல் இடைவெளியை சரிசெய்ய பள்ளிக்கல்வித்துறை, ‘இல்லம் தேடி கல்வி’ என்ற திட்டத்தைக் கொண்டுவந்தது. தற்போது, இந்தத் திட்டத்துக்கு `100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.