Tnpsc Current Affairs in Tamil – 1st April 2024
1. அண்மையில், முதலாவது அணுவாற்றல் உச்சிமாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. புது தில்லி
ஆ. பிரஸ்ஸல்ஸ்
இ. மாஸ்கோ
ஈ. பெய்ஜிங்
- மார்ச்.21 அன்று பிரஸ்ஸல்ஸில் அணுவாற்றல் உச்சிமாநாட்டிற்காக 34 நாடுகளின் தலைவர்கள் ஒன்றுகூடினர். பன்னாட்டு அணுசக்தி நிறுவனம் (IAEA) மற்றும் பெல்ஜியம் ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உச்சிமாநாடு, நிகர-சுழிய உமிழ்வு மற்றும் நீடித்த வளர்ச்சியை அடைவதில் அணுசக்தியை மேம்படுத்துவதற்கான உத்திகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. தொழில்நுட்ப குழுக்கள் அணுசக்தியின் திறனை அதிகப்படுத்துவதில் தங்களது ஆய்வினை மேற்கொண்டுள்ளன.
2. அண்மையில், தேசிய புலனாய்வு முகமையின் (NIA) இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. குல்தீப் சிங்
ஆ. காளிராஜ் மகேஷ் குமார்
இ. R S கிருஷ்ணா
ஈ. சதானந்த் வசந்த் ததே
- மத்திய அரசு அண்மையில் முக்கிய நிறுவனங்களுக்கு புதிய தலைமை இயக்குநர்களை நியமித்து அறிவித்தது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த 1990ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இகாப அதிகாரியான சதானந்த் வசந்த் ததே, தேசிய புலனாய்வு முகமையின் (NIA) தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இராஜீவ் குமார் சர்மா, காவலர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. இந்தியாவின் பாதுகாக்கப்பட்ட பாசுமதி இரகங்களை பயிரிட்டதற்காக, எந்த நாட்டின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் கோரியுள்ளது?
அ. ஆப்கானிஸ்தான்
ஆ. பாகிஸ்தான்
இ. மியான்மர்
ஈ. வங்காளதேசம்
- 2024 மார்ச்சில், இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் அதன் மேம்படுத்தப்பட்ட பாசுமதி அரிசி இரகங்களை அங்கீகாரம் இல்லாமல் பயிரிட்டதற்காக பாகிஸ்தான்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியது. இந்தியாவின் $5.5 பில்லியன் டாலர் ஏற்றுமதி சந்தைக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில், பாகிஸ்தான், ‘சட்ட விரோதமாக’ இந்த இரகங்களை பயிரிட்டு வருவதாக IARI கவலை தெரிவித்துள்ளது. பூசா-1121 மற்றும் 1509 போன்ற பாசுமதி இரகங்கள் பாகிஸ்தானில் புதிய பெயர்களில் வளர்க்கப்படுவதாக IARI கண்டறிந்துள்ளது.
4. லெபனானின் பெய்ரூட்டில் நடந்த WTT ஃபீடர் பெய்ரூட் – II 2024 போட்டியில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை வென்றவர் யார்?
அ. ஸ்ரீஜா அகுலா
ஆ. சாரா டி நட்டே
இ. சூ ஹியோ
ஈ. ஐஹிகா முகர்ஜி
- உலகளவில் 47ஆம் இடத்தில் உள்ள ஸ்ரீஜா அகுலா, லெபனானில் நடந்த WTT Feeder Beirut II, 2024இல் பெண்கள் ஒற்றையர் பட்டத்தை, லக்சம்பேர்க்கின் சாரா D நட்டேவை வீழ்த்தி வென்றார். 25 வயதான அவர், 6-11, 12-10, 11-5, 11-9 என்ற கணக்கில் இவ்வெற்றியை உறுதிசெய்தார். முன்னதாக அவர் போட்டியில் முதலிடத்தில் இருந்த தென் கொரியாவின் சு ஹியோ வோனை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இது அவரது 2ஆவது WTT ஒற்றையர் பட்டமாகும்.
5. Solar and Heliospheric Observatory (SOHO) என்பது கீழ்காணும் எந்த இரண்டு விண்வெளி நிறுவனங்களுக்கு இடையேயான பன்னாட்டு ஒத்துழைப்புத் திட்டமாகும்?
அ. JAXA மற்றும் ISRO
ஆ. CNSA மற்றும் ROSCOSMOS
இ ESA மற்றும் NASA
ஈ. CNSA மற்றும் ISRO
- அண்மையில் Solar and Heliospheric Observatory (SOHO)இன் தரவைப் பயன்படுத்தி 5,000ஆவது வால்மீனை ஒரு அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளார். ESA மற்றும் NASA இடையேயான கூட்டுப்பணியான SOHO, 1995இல் முதல் லாக்ராஞ்சியன் புள்ளியில் இருந்து சூரியனை ஆய்வுசெய்ய தொடங்கியது. 12 அறிவியல் கருவிகள் பொருத்தப்பட்ட இது சூரியனின் வளிமண்டலம், சூரியப்பரப்பு அலைப்பகுப்பாய்வு மற்றும் சூரியவளி ஆகியவற்றைத் தொடர்ந்து கண்காணிக்கிறது. 1998இல் அதன் பணி நிறைவடைந்த போதிலும், SOHO தொடர்ந்து, சூரியனின் இயக்கவியல் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கிவருகிறது. இதன்மூலம் ஏராளமான வால்மீன்கள் கண்டறியப்பட்டுள்ளன.
6. MGNREGA, 2005 திட்டத்தின்கீழ், திறம்குறைந்த தொழிலாளர்களுக்கு 2024-2025ஆம் நிதியாண்டுக்கான புதிய ஊதிய விகிதங்களை அறிவித்த அமைச்சகம் எது?
அ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஆ. வேளாண் அமைச்சகம்
இ. மின்சார அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- MGNREGA, 2005 திட்டத்தின்கீழ், திறம்குறைந்த தொழிலாளர்களுக்கு 2024-2025ஆம் நிதியாண்டுக்கான புதிய ஊதிய விகிதங்களை ஊரக வளர்ச்சி அமைச்சகம் அறிவித்துள்ளது. MGNREGA திட்டமானது வயதுவந்த கிராமப்புற குடும்ப உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் ஊதியத்துடன்கூடிய 100 நாட்கள் வேலைவாய்ப்பை உறுதிசெய்கிறது. MGNREGAஇன் பிரிவு-6 விதிகளின்படி, CPI-AL மாற்றங்களின் அடிப்படையில் ஆண்டுதோறும் மாநில வாரியான ஊதிய விகிதங்களை ஊரக வளர்ச்சி அமைச்சகம் சரிசெய்கிறது. இது கிராமப்புற தொழிலாளர்களுக்கு நியாயமான இழப்பீட்டை உறுதிசெய்து, பணவீக்க விகிதங்களுக்கு ஏற்ப அவர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவுகிறது.
7. பிராண்ட் பைனான்ஸ் – 2024 அறிக்கையின்படி, உலகின் வலிமையான காப்பீட்டு நிறுவனம் எது?
அ. ஓரியண்டல் ஜெனரல் இன்சூரன்ஸ்
ஆ. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC)
இ. HDFC ஆயுள் காப்பீடு
ஈ. மேக்ஸ் ஆயுள் காப்பீடு
- ‘2024-பிராண்ட் பைனான்ஸ் இன்சூரன்ஸ் 100’ அறிக்கையின்படி, `816 பில்லியன் மதிப்பிலான காப்பீடுகளுடன் உலகின் வலிமையான காப்பீட்டு நிறுவனமாக இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (LIC) மாறியுள்ளது. கேத்தே ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அதற்கடுத்த நிலையில் உள்ளது. இதற்கிடையில், பிங் ஆன், சீன காப்பீட்டு நிறுவனம் மற்றும் சிபிஐசி போன்ற சீனக் காப்பீட்டாளர்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன. நிறுவன மதிப்புகளின் அடிப்படையில் `2799 பில்லியன் மதிப்புடன் பிங் ஆன் நிறுவனம் முன்னணியில் உள்ளது.
8. 2024 – உணவுக்கழிவுக் குறியீட்டறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. UNEP
ஆ. UNDP
இ. WHO
ஈ. ILO
- ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) 2024இல் அதன் 3ஆவது உணவுக்கழிவுக் குறியீட்டறிக்கையை வெளியிட்டது. கடந்த 2022இல் 1.05 பில்லியன் மெட்ரிக் டன் (19%) உணவு வீணடிக்கப்பட்டதாக இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. உலகளவில் 783 மில்லியன் மக்கள் பட்டினியால் அவதியுறும் வேளையில் இந்தச்சதவீதம் முற்றிலும் கவலைக்கு உரியதாக உள்ளதாக UNEP தெரிவித்துள்ளது. நீடித்த வளர்ச்சி இலக்கு (SDG) 12.3ஐ அடைய உணவுக்கழிவுகளை கையாளவேண்டியதன் அவசியத்தை UNEP வலியுறுத்துகிறது. 60% உணவு வீணாக்கலுக்கு குடும்பங்களே அதிகம் பங்களித்துள்ளன. தனிநபர் ஓராண்டில் விரயம் செய்யும் உணவின் அளவு 79 கிகி என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. அண்மையில், எந்தெந்த இடங்களில் புதிய அணுக்கடிகாரங்களை இந்திய அரசு நிறுவவுள்ளது?
அ. சென்னை, மதுரை, கோயம்புத்தூர்
ஆ. கோழிக்கோடு, கண்ணனூர் மற்றும் வயநாடு
இ. பெங்களூரு, போபால் மற்றும் லக்னோ
ஈ. புவனேசுவரம், ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத்
- அமெரிக்க அடிப்படையிலான வழங்கிகளை நம்பியிருப்பதை எதிர்த்து, அனைத்து சாதனங்களும் இந்திய தரநிலை நேரத்துடன் ஒத்திசைக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக, இந்திய அரசு நாடு முழுவதும் அணுக்கடிகாரங்களைப் பயன்படுத்தவுள்ளது. நான்கு நாடுகளால் உருவாக்கப்பட்டு, 1955இல் அணுக்கடிகாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. புது தில்லியின் CSIR-NPL ஏழு அணுக்கடிகாரங்களைப் பராமரிக்கும் இந்தியாவின் நேரக்கண்காணிப்பாளராகும். பரிதாபாத் மற்றும் ஆமதாபாத்தைத் தொடர்ந்து புவனேசுவரம், ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் தற்போது புதிய அணுக்கடிகாரங்கள் நிறுவப்படவுள்ளன.
10. அண்மையில், சீனாவின் ஷாங்ராவோவில் உள்ள உலக பில்லியர்ட்ஸ் அருங்காட்சியகத்தின் வாழ்த்தரங்கில் இணையப்பெற்றவர் யார்?
அ. கீத் சிறீராம் சேத்தி
ஆ. ருடால்ஃப் வால்டர் வாண்டரோன்
இ. ஏர்ல் ஸ்ட்ரிக்லேண்ட்
ஈ. பங்கஜ் அத்வானி
- 2024 மார்ச்சில், இந்திய பில்லியர்ட்ஸ் வீரரான பங்கஜ் அத்வானி, சீனாவின் ஷாங்ராவோவில் அமைந்துள்ள உலக பில்லியர்ட்ஸ் அருங்காட்சியகத்தின் வாழ்த்தரங்கில் இணைக்கப்பட்டார். சீனாவில் 26ஆம் IBSF பட்டத்தை வென்ற பிறகு பங்கஜ் அத்வானி அவ்வாழ்த்தரங்கில் இணைக்கப்பட்டார். 13,500 சமீ பரப்பளவைக் கொண்டுள்ள இந்த அருங்காட்சியகம், ஸ்னூக்கரின் வரலாறு, உபகரணங்கள், நிகழ்வுகள், கலாச்சார மரபுகள் மற்றும் மக்கள் பற்றிய கண்ணோட்டத்தை வழங்குகிறது.
11. அண்மையில், எந்த ஆற்றில், ‘டான்டலம்’ என்ற அரிய உலோகம் கண்டுபிடிக்கப்பட்டது?
அ. கோமதி
ஆ. சட்லெஜ்
இ. காவேரி
ஈ. கோதாவரி
- மின்னணு துறையில் முக்கியமான ஓர் அரிய உலோகமாகப் பார்க்கப்படும் டான்டலத்தின் தடயங்கள், சட்லெஜ் ஆற்றில், பஞ்சாபின் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்து ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டன. திறன்பேசிகள் மற்றும் மடிக்கணினிகள்போன்ற சாதனங்களில் மின்தேக்கி மற்றும் மின்தடையங்களாக டான்டலம் பயன்படுத்தப் -படுகிறது. சட்லஜ் ஆற்றங்கரைக்கு அடியில் பயன்படுத்தப்படாத கனிம வளங்களின் இருப்பை இந்தக் கண்டுபிடிப்பு குறிக்கிறது. டான்டலத்தின் தனித்துவமான பண்புகள் அதை மதிப்புமிக்கதாக ஆக்குகின்றன.
12. அண்மையில், கொரோனா வைரஸ்களுக்கான, ‘CoViNet’ என்ற புதிய வலையமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. WHO
இ. WTO
ஈ. UNICEF
- உலக சுகாதார அமைப்பு (WHO) ‘CoViNet’ஐ அறிமுகப்படுத்தியது. இது மனிதர்கள், விலங்கு மற்றும் சுற்றுச்சூழலில் கொரோனா வைரஸ் கண்காணிப்பில் நிபுணத்துவம் வாய்ந்த ஆய்வகங்களின் உலகளாவிய வலையமைப்பைக் கொண்டுள்ளது. புதிய திரிபுகள், இடர் மதிப்பீட்டை மேம்படுத்துதல் மற்றும் WHO கொள்கைகளைத் தெரிவிப்பது உள்ளிட்ட வளர்ந்துவரும் கொரோனா வைரஸ்களைக் கண்டறிந்து கண்காணிப்பதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘CoViNet’ கண்காணிப்பு திறன்களை விரிவுபடுத்தும், குறிப்பாக குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் நாடுகளில், MERS-CoV மற்றும் பிற குறிப்பிடத்தக்க கொரோனா வைரஸ்களைக் கண்காணிக்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. வாக்காளர் பட்டியலில் பெயர் விவரம் அறிய பிரத்யேக செயலி.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, உங்களது வேட்பாளர் மீதுள்ள வழக்கு விவரங்கள் ஆகியன குறித்து அறிய தனித்தனியான செயலிகளை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.
Voter Helpline என்ற பிரத்யேக செயலி மூலமாக வாக்காளர் பட்டியல் பெயர்களை உறுதி செய்யலாம். இதேபோன்று, தேர்தல் நடத்தை விதிகள் மீறப்பட்டால் அதுகுறித்த புகார்களைத் தெரிவிக்க, ‘cVIGIL’ எனப்படும் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது. வாக்காளர்கள், தங்களது தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களையும் அறிந்திடலாம். இதற்கென, ‘சுவிதா’ என்ற பெயரில் பிரத்யேக செயலி பயன்பாட்டில் உள்ளது.
தமிழ்நாட்டில் தொற்றுநோய் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக ஒருங்கிணைந்த சுகாதார இணையதளம், ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்ட இணையதளங்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. இதில், நோய்ப்பரவல்குறித்து பொதுமக்களே நேரடியாக தெரிவிக்கும் வகையிலான வசதி உள்ளது.
2. தமிழ்நாட்டில் 15 ஆண்டுகளில் 11,002 உறுப்புமாற்று சிகிச்சைகள்.
தமிழ்நாட்டில் கடந்த 15 ஆண்டுகளில் 11,002 உறுப்புமாற்று சிகிச்சைகள் நடைபெற்றுள்ளதாக மாநில உறுப்புமாற்று ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் 935 உறுப்புமாற்று சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் அதிகபட்சமாக சிறுநீரகமும், அதற்கு அடுத்தபடியாக விழிவெண்படலம், கல்லீரல் ஆகியவை உறுப்புமாற்று சிகிச்சைக்காக தானமாகப் பெறப்பட்டுள்ளன.
உறுப்புமாற்று அறுவை சிகிச்சை ஆணையம் என்ற முன்னோடி அமைப்பு நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் முதன் முதலில் தொடங்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. அதன்காரணமாக உறுப்புமாற்று அறுவை சிகிச்சையில் நாட்டின் தலைநகராகவே தமிழ்நாடு விளங்கி வருகிறது.