TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 1st & 2nd January 2024

1. மனித வரலாற்றிலேயே முதன்முறையாக பூமியின் மேலோட்டை ஊடுருவி கவசத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள சீனாவின் அதிநவீன பெருங்கடல் துளையிடும் கப்பலின் பெயர் என்ன?

அ. Mengxiang

ஆ. Tianqi

இ. Shuijing

ஈ. Yueliang

  • மனித வரலாற்றிலேயே முதன்முறையாக பூமியின் மேலோட்டை ஊடுருவி கவசத்தை அடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘மெங்சியாங்’ என்ற புதிய பெருங்கடல் துளையிடும் கப்பலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், கடல் தளத்திற்கு அடியில் 7,000 மீட்டருக்கு மேல் உள்ள மோகோரோவிக்சிக் தொடர்ச்சியின்மையினைத் தாண்டிய அறிவியல் ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளுக்கு வழிகோலப்படும். சீனாவின் ‘மெங்சியாங்’ கப்பல், தீவிர சூழ்நிலைமைகளைத் தாங்கும் திறன்கொண்டதாகும்.

2. மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படையின் (CISF) தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட முதல் பெண் யார்?

அ. சுப்ரா சிங்

ஆ. நினா சிங்

இ. பினிதா தாக்கூர்

ஈ. ரோலி சிங்

  • மூத்த இகாப அதிகாரி நினா சிங், நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த உட்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்காகப் பணியாற்றும் 1.65 இலட்சம் பேர்கொண்ட வலிமையான மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படைக்கு (CISF) முதன்முறையாக ஒரு பெண் அதிகாரியாக தலைமை இயக்குநர் பொறுப்பை ஏற்றிருக்கிறார். 1989ஆம் ஆண்டின் இராஜஸ்தான் பிரிவு அதிகாரியான இவர் பல்வேறு காவல்பணிகளில் பணியாற்றியுள்ளார்.

3. அண்மையில் அறிவிக்கப்பட்ட இந்திய கடற்படை அதிகாரிகளின் தோள்கச்சையில் அணியும் சின்னங்களுக்கு ஈர்ப்பாக அமைந்தவர் யார்?

அ. மகாராணா பிரதாப்

ஆ. சிவாஜி

இ. மகாராஜா ரஞ்சித் சிங்

ஈ. சந்திரகுப்த மௌரியா

  • 2023ஆம் ஆண்டின் கடற்படை நாளன்று வெளியிடப்பட்ட மூத்த தலைமைத்துவத்திற்கான இந்திய கடற்படையின் புதிய தோள்பட்டை தரவரிசை சின்னங்கள் கடற்படைக்கொடி மற்றும் புகழ்பெற்ற மராட்டிய ஆட்சியாளர் ‘சத்ரபதி’ சிவாஜி மகாராஜாவின் வடிவமைப்பு கூறுகளைக் கொண்டுள்ளன. தங்க பொத்தான் மற்றும் எண்கோண வடிவம் போன்ற அம்சங்கள் முறையே உள்நாட்டுமயமாக்கல் முயற்சிகள் மற்றும் நீண்டகால உத்திசார் பார்வையை பிரதிபலிக்கும் விதத்தில் உள்ளன. சிவாஜி தனது சிறப்பு தீர்ப்பாணைகளில் பயன்படுத்திய வாள், தொலைநோக்கி மற்றும் ‘இராஜமுத்திரை’ போன்ற சின்னங்களை கலைநயத்துடன் ஒருங்கிணைத்து, இந்தியாவின் வளமான கடல்சார் பாரம்பரியத்தை காட்டும் விதமாக இவை உருவாக்கப்பட்டுள்ளன.

4. மத்திய இளையோர் நலத்துறை மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால், மகாராஷ்டிராவில் உள்ள எந்த நகரம், 2024 – தேசிய இளையோர் விழா நடத்தும் இடமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது?

அ. நாக்பூர்

ஆ. மும்பை

இ நாசிக்

ஈ. புனே

  • மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக் நகரம், இந்திய அரசின் இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் 2024 – தேசிய இளையோர் விழாவை நடத்தும் இடமாக தேர்வுசெய்யப்பட்டுள்ளது. ஓர் அண்மைய அறிவிப்பின்படி, பிரதமர் நரேந்திர மோடி இந்த விழாவைத் தொடங்கிவைக்கவுள்ளார். ஜன.12ஆம் தேதி நாசிக்கில் நடைபெறும் இவ்விழாவில், இந்தியா முழுவதிலும் இருந்து சுமார் 7,500 இளைஞர்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜன.12ஆம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதாமக இந்த இளையோர் விழா நடத்தப்படுகிறது.

5. சர்வதேச ஒரு நாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற டேவிட் வார்னர் சார்ந்த நாடு எது?

அ. ஆஸ்திரேலியா

ஆ. நியூசிலாந்து

இ. இங்கிலாந்து

ஈ. தென்னாப்பிரிக்கா

  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர், தனது குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதற்காக சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்றார். அவர் தனது 112ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுவார். 161 போட்டிகளில் 45.30 சராசரியில் 22 சதங்கள் மற்றும் 6,932 ரன்களை அடித்த வார்னர் ஒரு வெற்றிகரமான ODI வரலாற்றைக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த ICC கிரிக்கெட் உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் அவர் முக்கிய அங்கம் வகித்தார்.

6. அண்மையில், ‘WESAT’ எனப்படும் நானோ செயற்கைக்கோளை அறிமுகப்படுத்தி செய்திகளில் இடம்பிடித்த லால் பகதூர் சாஸ்திரி பெண்களுக்கான தொழில்நுட்ப நிறுவனம் (LBSITW) அமைந்துள்ள நகரம் எது?

அ. பெங்களூரு

ஆ. புனே

இ. திருவனந்தபுரம்

ஈ. மங்களூரு

  • 2024 ஜனவரி.01 அன்று, திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி பெண்களுக்கான தொழில்நுட்ப நிறுவனத்தின் மாணவிகளால் WESAT (Women Engineered SATellite) எனப்படும் நானோ செயற்கைக்கோள் ஏவப்பட்டது. இந்தச் செயற்கைக்கோள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (ISRO) PSLV-C58 / XpoSat திட்டத்துடன் இணைந்து ஏவப்பட்டது. WESAT என்பது 1.4 கிகி எடையுள்ள செயற்கைக்கோள் ஆகும். இது முழுக்க முழுக்க மகளிரால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும். WESATஇன் நோக்கம் புற-ஊதா கதிர்வீச்சு மற்றும் அதன் தாக்கத்தை ஆய்வு செய்வதாகும். ISROஇன் தொழில்நுட்ப உதவியுடன் உதவிப்பேராசிரியரும் முதன்மை ஆய்வாளருமான லிசி ஆபிரகாம் தலைமையில் இந்தச் செயற்கைக்கோள் திட்டம் செயல்படுத்தப்பட்டது.

7. மேற்கு வங்காள மாநிலத்தின் மாநிலப் பாடலாக அறிவிக்கப்பட்ட, “பங்களார் மாட்டி பங்களா ஜல்” பாடலை இயற்றியவர் யார்?

அ. இரவீந்திரநாத் தாகூர்

ஆ. நஸ்ருல் இஸ்லாம்

இ. நவகோபால் மித்ரா

ஈ. சரோஜினி நாயுடு

  • மேற்கு வங்காள மாநில அரசு இரவீந்திரநாத் தாகூரின், “பங்களார் மாட்டி பங்களா ஜல்” பாடலை மாநிலப் பாடலாக அறிவித்துள்ளது. இந்தப்பாடல் தோராயமாக 1 நிமிடம் 59 வினாடிகளில் பாடப்படுகிறது. மேற்கு வங்காள மாநிலத்தின் அனைத்து மாநில அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்திலும் அரசுப்பாடலை உரிய மரியாதையுடன் இசைக்க வேண்டும் என்றும், நிகழ்ச்சிகளின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்றும் அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

8. பூமியில் காணப்படும் வழக்கமான பகல்-இரவு சுழற்சியுடன் ஒப்பிடுகையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் அனுபவிக்கும் பகல் நேரம் மட்டும் எவ்வளவு?

அ. 12 மணி நேரம்

ஆ. 45 நிமிடங்கள்

இ. 1 மணி நேரம்

ஈ. 3 மணி நேரம்

  • சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் ஒவ்வொரு சுற்றுப்பாதையிலும் 45 நிமிடங்கள் பகல் மற்றும் 45 நிமிட இருளை அனுபவிக்கின்றனர். இது பூமியில் உள்ள வழக்கமான 12-மணி நேர பகல்-இரவு சுழற்சியில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாகும். இவ்வாறு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள குழுவினர் தொடர்ச்சியாக 16 புத்தாண்டுகளைக் கண்டனர்.

9. 2024 ஜனவரி.01, முதல் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) நிர்ணயித்த UPI பரிவர்த்தனைகளுக்கான தினசரி கட்டண வரம்பு எவ்வளவு?

அ. ரூ. 10,000

ஆ. ரூ. 50,000

இ. ரூ. 1 இலட்சம்

ஈ. ரூ. 5 இலட்சம்

  • 2024 ஜனவரி.01 முதல் UPI பரிவர்த்தனைகளுக்கான தினசரி கட்டண வரம்பை அதிகபட்சமாக `1 இலட்சமாக நிர்ணயித்து NPCI அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குமுன்னர், 2023 டிசம்பர்.8 அன்று மருத்துவமனைகள் மற்றும் கல்விநிறுவனங்களுக்கான UPI பரிவர்த்தனைகளின் வரம்பை இந்திய ரிசர்வ் வங்கி `5 இலட்சமாக உயர்த்தியது. UPI பரிவர்த்தனைகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான நடவடிக்கைகளாக இவை பார்க்கப்படுகின்றன.

10. அண்மையில் அரியணையை துறப்பதாக அறிவித்த 2ஆம் மார்கிரேத், கீழ்க்காணும் எந்த நாட்டின் அரசியாவார்?

அ. சுவீடன்

ஆ. நார்வே

இ. டென்மார்க்

ஈ. நெதர்லாந்து

  • 52 ஆண்டுகால அரசாட்சிக்குப் பிறகு அரியணையை துறப்பதாக அண்மையில் அறிவித்த அரசி 2ஆம் மார்கிரேத், டென்மார்க்கின் அரசியாவார். இம்முடிவானது அவர் அரியணை ஏறியதன் ஆண்டு விழாவில் புத்தாண்டு உரையின் போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அப்போது அவர் தனது மகனான பட்டத்து இளவரசர் ஃபிரடெரிக்கிற்கு அரச பொறுப்புகளை வழங்குவதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.

11. அண்மையில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட மா மணிகேஸ்வரி பல்கலைக்கழகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. உத்தர பிரதேசம்

ஆ. மேற்கு வங்காளம்

இ. ஒடிஸா

ஈ. கர்நாடகா

  • அண்மையில் பெயர்மாற்றம் செய்யப்பட்ட மா மணிகேஸ்வரி பல்கலைக்கழகம் இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் அமைந்துள்ளது. இதற்குமுன்பு களஹாண்டி பல்கலைக்கழகம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்தப் பல்கலைக்கழகம் களஹாண்டி மாவட்டத்தின் முதன்மை தெய்வமான மா மணிகேஸ்வரியின் பெயரால் மாற்றியபெயரிடப்பட்டுள்ளது. 2020 செப்.01 முதல் செயல்பட்டு வரும் இப்பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றத்தை அம்மாநில முதலமைச்சர் நவீன் பட்நாயக் நவம்பர்.01 அன்று களஹாண்டி மாவட்டத்தின் நிறுவன நாளின்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

12. ISROஆல் அண்மையில் ஏவப்பட்ட, XPoSat (X-ரே போலரிமீட்டர் செயற்கைக்கோள்), கீழ்காணும் எவற்றை முதன்மையாக ஆய்வுசெய்யும்?

அ. புறக்கோள்கள்

ஆ. நியூட்ரான் விண்மீன்கள் மற்றும் கருந்துளைகள்

இ. தொலைதூர விண்மீன்கள் மற்றும் சூரிய குடும்பம்

ஈ. சிறுகோள்கள்

  • XPoSat (X-ரே போலாரிமீட்டர் சாட்டிலைட்) என்ற செயற்கைக்கோளை ISRO ஏவியுள்ளது. மொத்தம் 469 கிகி எடைகொண்ட இந்தச் செயற்கைக்கோள், பூமியிலிருந்து சுமார் 650 கிமீ தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வுப் பணிகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்காக POLIX (Polarimeter Instrument in X-rays) மற்றும் XSPECT (X-ray Spectroscopy and Timing) ஆகிய இரண்டு சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் பரவும் ஊடுகதிர்களின் துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடும். அதேபோன்று, நியூட்ரான் நட்சத்திரங்களில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் உள்ளிட்ட அம்சங்களை ஆய்வுசெய்யும்.

13. அண்மைச் செய்திகளின் இடம்பெற்ற இந்தியாவின் மிகநீளமான கடல் பாலம், கீழ்காணும் எந்த இரு இடங்களை இணைக்கின்றது?

அ. பாந்த்ரா மற்றும் வோர்லி

ஆ. செவ்ரி மற்றும் சிர்லே

இ. தானே மற்றும் விரார்

ஈ. வல்லார்பாதம் மற்றும் கொச்சி

  • இந்தியாவின் மிகநீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் ஜனவரி.12ஆம் தேதி திறக்கப்பட உள்ளது. 22 கிமீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் தெற்கு மும்பையில் உள்ள செவ்ரியை நவி மும்பையின் தொலைதூர புறநகரில் அமைந்துள்ள சிர்லேவை தானே கடற்கழியின் வழியே கடந்து சென்று இணைக்கிறது. தொடக்கத்தில் 4.5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்ட இத்திட்டம், COVID-19 கொள்ளைத்தொற்றால் எட்டுமாதகாலம் தாமதமாக நிறைவேறியுள்ளது. மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க் ஆனது மும்பை மற்றும் நவி மும்பை இடையேயான பயண நேரத்தை கணிசமாகக் குறைக்கும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. 16ஆவது நிதி ஆணையத் தலைவராக டாக்டர். அரவிந்த் பனகாரியா நியமனம்.

16ஆவது நிதி ஆணையத்தை இந்திய அரசு அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் தலைவராக டாக்டர் அரவிந்த் பனகாரியா நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆணையம் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், வறட்சிபோன்ற பேரிடர் மேலாண்மைக்கான நிதி ஒதுக்கீடுகளை மறுஆய்வு செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள Dr அரவிந்த் பனகாரியா இந்திய-அமெரிக்க பொருளாதார நிபுணர். இவர் மத்திய அரசின் NITI ஆயோக் துணைத்தலைவராக 2015 முதல் 2017ஆம் ஆண்டு வரை பணியாற்றியவர்.

இந்திய அரசியல் சாசனத்தின் 280 (1) பிரிவில் கூறப்பட்டபடி மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே வருவாயை பகிர்ந்தளிக்க பரிந்துரை அளிப்பது தொடர்பாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்திய அரசு நிதி ஆணையத்தை அமைக்கிறது. கடைசியாக அமைக்கப்பட்ட 15ஆவது நிதி ஆணையத்தின் அறிக்கையின்கீழ் தற்போது மத்திய, மாநில அரசுகளுக்கிடையே வரிப்பகிர்வு மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், நடப்பு 15ஆவது ஆணையத்தின் காலம் வரும் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இதையொட்டி, 16ஆவது நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. டாக்டா் அரவிந்த் பனகாரியா தலைமையிலான குழு மத்திய, மாநில அரசுகள் துறைகளை நேரில் சந்தித்து ஆய்வுகளை மேற்கொண்டு தனது அறிக்கையை வரும் 2025 அக்.31-ஆம் தேதிக்குள் அளிக்கவும் இந்த ஆணையத்திற்கான விதிமுறை குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

16ஆவது நிதி ஆணையம் பரிந்துரைகளை வழங்கவேண்டிய குறிப்பிடத்தக்க அம்சங்கள் வருமாறு:

அரசியல் சாசனத்தில் (அத்தியாயம்-1, பகுதி 12இன்கீழ்) பிரிக்கப்பட வேண்டிய வரிகளின் நிகர வருவாயை மத்திய அரசுக்கும், மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்க நிதி ஆணையம் பரிந்துரை அளிக்க வேண்டும்.

குறிப்பாக 16ஆவது நிதி ஆணையம், பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட நிதி தொடர்பாக, பேரிடர் மேலாண்மைக்காக மத்திய, மாநில அரசுகள் நிதியளிப்பதற்கான தற்போதைய ஏற்பாடுகளை மறுஆய்வுசெய்து, அவற்றில் பொருத்தமான பரிந்துரைகள் வழங்கப்படவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 16ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகள் 2026-27 முதல் 2030-31 நிதியாண்டிற்கானது.

கடந்த 15ஆவது நிதி ஆணையத்தின் தலைவராக NK சிங் இருந்தார். அவரது தலைமையிலான ஆணையம் மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 41 சதவீதம் வழங்க பரிந்துரைத்தது. கூடுதலாக புதிதாக அமைக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களுக்கு ஒரு சதவீதம் தனியாக ஒதுக்கப்பட்டது.

2. தன்னம்பிக்கை நிறைந்த இந்தியா: 2023இல் இந்தியாவின் சாதனைகள்

மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டம் இயற்றப்பட்டது. உலக அளவில் 5ஆவது மிகப்பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுத்தது. இந்தியாவின் தலைமையில் ஜி-20 உச்சி மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. சந்திரயான்-3 திட்டம் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. ‘நாட்டு நாட்டு’ பாடல், ‘தி எலிஃபன்ட் விஸ்பெரர்ஸ்’ ஆவணப்படத்துக்கு ஆஸ்கார் விருதுகள் கிடைக்கப்பெற்றன.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் 107 பதக்கங்களும், ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் 111 பதக்கங்களும் வென்றனர். 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான T20 உலகக்கோப்பையில் மகளிர் கிரிக்கெட் அணியின் வெற்றி உத்வேகமளிக்கும் வகையில் இருந்தது.

புத்தாக்கக் குறியீட்டில் முன்னேற்றம்: ‘உலக புத்தாக்கக் குறியீடு’ தரவரிசையில் கடந்த 2015ஆம் ஆண்டில் 81ஆவது இடத்தில் இருந்த இந்தியா, இப்போது 40ஆவது இடத்தை எட்டியிருக்கிறது. இந்தியாவின் முயற்சியால், சர்வதேச சிறுதானிய ஆண்டாக 2023ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

3. ’XPoSat’ செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது PSLV C58.

விண்வெளி ஆய்வுசெயற்கைக்கோளுடன் PSLV C58 ஏவுகலம் ஆந்திர பிரதேச மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. விண்வெளியிலுள்ள கருந்துளை, நியூட்ரான் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆய்வுசெய்வதற்காக ISRO சார்பில் XPoSat (X-ரே போலாரிமீட்டர்) என்னும் அதிநவீன செயற்கைக்கோளை ISRO வடிவமைத்துள்ளது.

அந்தச் செயற்கைக்கோள் மொத்தம் 469 கிகி எடைகொண்டது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம்கொண்ட XPoSat, பூமியில் இருந்து சுமார் 650 கிமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்பட்டு ஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளது. இதற்காக ‘XSPECT’ (எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோகிராபி), ‘POLIX’ (எக்ஸ்ரே போலாரிமீட்டர்) ஆகிய 2 சாதனங்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் வியாபித்துள்ள ஊடுகதிர்களின் துருவ அளவு மற்றும் கோணத்தை அளவிடுதல், நியூட்ரான் நட்சத்திரத்தில் இருந்து வெளிப்படும் கதிரியக்கம், கருந்துளை வாயுக்களின் திரள் (நெபுலா) உள்பட பல்வேறு அம்சங்களை ஆராயும்.

ஏற்கெனவே விண்வெளியில் நட்சத்திரங்களின் செயல்பாட்டை ஆராய்வதற்காக ISRO அனுப்பிய ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோளின் தொடர்ச்சியாக இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

4. எண்ம சாதனங்களின் பாதுகாப்புக்கு, ‘சைபர் ஸ்வச்சதா கேந்திரா’

‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பின் ஒருபகுதியாக பொதுமக்களுடைய எண்ம (digital) சாதனங்களின் இணைய பாதுகாப்புக்கு, ‘சைபர் ஸ்வச்சதா கேந்திரா’ என்ற வலைதளத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்த வலைதளத்தை மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின்கீழ் இந்திய கணினி அவசரநிலை உதவிக்குழு (CERT-in) அமைப்பு நிர்வகிக்கிறது. இணையத்தில் மனித செயல்பாடுகளைப் பின்பற்றி, அதேபோன்று தானியங்கி பணிகளை கணினி உள்ளிட்ட எண்ம சாதனங்களில் மேற்கொள்வதற்கு நிரல்கள் வடிவமைக்கப்பட்ட மென்பொருள் அமைப்பு ‘bot-இயலி’ எனப்படுகிறது. இணையவெளியில் ‘இயலி’ அபாயத்தைக் கண்டறிந்து தடுக்கும்வகையில், அதற்கெதிரான பாதுகாப்பு அமைப்புகளை பயனர்களுக்கு அறிவித்து, பாதுகாப்பான இந்திய சைபர் தளத்தை உருவாக்க இந்த வலைதளம் உறுதிப்பூண்டுள்ளது.

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நேர்மையான இந்த இலவச இயலி-நீக்க கருவிகளை பதிவிறக்கம்செய்து, நமது கணினி/கைப்பேசிகளை அவ்வப்போது பரிசோதித்து, அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin