TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 1st 2nd & 3rd May 2024

1. அண்மையில், புவிசார் குறியீடுகொண்ட தயாரிப்புகளின் தாக்க மதிப்பீடு குறித்த ஆய்வுக்கு அனுமதியளித்துள்ள அமைப்பு எது?

அ. SIDBI

ஆ. FSSAI

இ. NABARD

ஈ. ISRO

  • தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி (NABARD) சமீபத்தில் சிம்பயோசிஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்திற்கு புவிசார் குறியீடுகொண்ட தயாரிப்புகளின் தாக்க மதிப்பீடு குறித்த ஆய்வுக்கு அனுமதியளித்துள்ளது. புவிசார் குறியீடு (GI) என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் காலம் காலமாக தயாரிக்கப்பட்டு வரும் தயாரிப்புகளுக்கு வழங்கப்பட்டும் ஓர் அடையாள குறியீடாகும். சட்டங்கள்மூலம் அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாப்பது பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதல் போன்றவற்றில் பலன்களைப்பெற உதவும்.

2. ‘K2-18B’ என்றால் என்ன?

அ. புறக்கோள்

ஆ. கருந்துளை

இ. சிறுகோள்

ஈ. நீர்மூழ்கிக்கப்பல்

  • NASAஇன் ஜேம்ஸ் வெப் விண்வெளித் தொலைநோக்கியின் ஆரம்பநிலை தரவுகள், புறக்கோள் ‘K2-18b’இல் டைமெதில் சல்பைட் வாயுவின் 50%க்கும் அதிகமான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறுகிறது. இருப்பினும், ஓர் உறுதியான முடிவுக்கு வருவதற்கு முன் கூடுதல் பகுப்பாய்வு தேவைப்படுகிறது. டைமெதில் சல்பைட் என்பது பூமியிலுள்ள உயிரினங்களால் மட்டுமே முதன்மையாக கடல் சூழலில் உள்ள தாவர மிதவை நுண்ணுயிரிகளால் உற்பத்தி செய்யப்படும் ஒரு வாயுவாகும். K2-18b இன் வளிமண்டலத்தில் டைமெதில் சல்பைட் இருப்பது ஒரு வியக்கத்தக்க கண்டுபிடிப்பாக இருக்கலாம்; ஏனெனில் இந்தக் கோள் கடலால் மூடப்பட்டதாகவும் பூமியைவிட 2.6 மடங்கு பெரியதாகவும் நம்பப்படுகிறது. 2015இல் கண்டுபிடிக்கப்பட்ட K2-18b என்பது M வகை விண்மீனைச் சுற்றி வரும் ஒரு மீபுவி புறக் கோளாகும்.

3. அண்மையில், பொது நிறுவனங்கள் துறையால், ‘நவரத்னா’ தகுதி வழங்கப்பட்ட அமைப்பு எது?

அ. BHEL

ஆ. HAL

இ. HMTL

ஈ. IREDA

  • பொது நிறுவனங்கள் துறையானது இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை நிறுவனத்திற்கு (IREDA) ‘நவரத்னா’ தகுதியை வழங்கியுள்ளது. மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின்கீழ் 1987இல் நிறுவப்பட்ட IREDA என்பது ஒரு வங்கி அல்லாத நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் ‘சிறந்த’ புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வது மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட செயல்திறன் குறிகாட்டிகளில் 60 அல்லது அதற்கு மேற்பட்ட கூட்டு மதிப்பெண்களைப் பெறுவதன் அடிப்படையில் ‘நவரத்னா’ தகுதி வழங்கப்படுகிறது.

4. தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக்குழுவின் (NCAER) கூற்றுப்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் என்னவாக இருக்கும்?

அ. 6%

ஆ. 7%

இ. 8%

ஈ. 8.5%

  • உலகளாவிய வளர்ச்சி, வர்த்தக முடுக்கம் மற்றும் நம்பிக்கைக்குரிய பருவமழை ஆகியவற்றை மேற்கோள் காட்டி, இந்த நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7% வளர்ச்சியை மீறும் என்று தேசிய செயல்முறைப் பொருளியல் ஆய்வுக்குழு கணித்துள்ளது. 2024-25ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சிக்கணிப்பை 6.5%இல் இருந்து 6.8%ஆக IMF உயர்த்தியுள்ளது. 2023-24இல் 7.6% வளர்ச்சி எட்டப்பட்டதாக அரசாங்க தரவு வெளிப்படுத்துகிறது.

5. நிதிப்புலனாய்வுப் பிரிவு என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின்கீழ் வரும் ஒரு சிறப்பு நிறுவனமாகும்?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. மின்சார அமைச்சகம்

இ. நிதி அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • மத்திய நிதியமைச்சகத்தின்கீழ் 2004ஆம் ஆண்டு நிறுவப்பட்ட நிதிப் புலனாய்வுப் பிரிவு (FIU), பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் மூலதனச்சந்தைகள், காப்பீடு, இணையவழி செலுத்துதல் நுழைவாயில்கள் மற்றும் கிரிப்டோகரன்சி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு எச்சரிக்கை குறிகாட்டிகளை அண்மையில் வெளியிட்டது. இது பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை எதிர்த்து சந்தேகத்திற்குரிய நிதிப் பரிவர்த்தனைகளை பகுப்பாய்வு செய்கிறது. வங்கிகள், பங்குத்தரகர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள்போன்றவை பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் பட்டியலிடும் நிறுவனங்களாக FIU-INDஉடன் பதிவு செய்யவேண்டும்.

6. அண்மையில், இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டு அறிக்கை (ISSAR), 2023ஐ வெளியிட்ட அமைப்பு எது?

அ. DRDO

ஆ. ISRO

இ. CSIR

ஈ. ICAR

  • ISRO ஆனது இந்திய விண்வெளி சூழ்நிலை மதிப்பீட்டறிக்கையை (ISSAR) வெளியிட்டுள்ளது; இது விண்வெளிப் பொருள்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டுள்ளதை எடுத்துக்காட்டுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு முதல் செயல்பட்டுவரும் ISRO System for Safe and Sustainable Space Operations Management (IS4OM) ஆனது ISROஇன் விண்வெளிப் பொருள்களின் பாதுகாப்பை உறுதிசெய்கிறது. உலகளவில், 3143 பொருள்கள் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளன. இந்தியா 2023ஆம் ஆண்டு வரை 127 செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது. அதில் சந்திரயான் -3 மற்றும் ஆதித்யா L1 உட்பட 7 ISRO திட்டங்களும் அடங்கும்.

7. அண்மையில், ‘வீடுசார்ந்த பணவீக்க எதிர்பார்ப்பு குறித்த ஆய்வு’ மற்றும் ‘நுகர்வோர் நம்பிக்கை குறித்த ஆய்வு’ ஆகியவற்றை வெளியிட்ட அமைப்பு எது?

அ. இந்திய ரிசர்வ் வங்கி

ஆ. இந்தியப் பொருளியல் வர்த்தக அமைப்பு

இ. நிதி அமைச்சகம்

ஈ. பொருளியல் வளர்ச்சி நிறுவனம்

  • இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தனது இருதிங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் பணவியல் கொள்கை முடிவுகளைத் தெரிவிப்பதற்காக, ‘வீடுசார்ந்த பணவீக்க எதிர்பார்ப்பு குறித்த ஆய்வு’ மற்றும் ‘நுகர்வோர் நம்பிக்கை குறித்த ஆய்வு’ ஆகியவற்றைத் வெளியிட்டுள்ளது. முதலாவதாக 19 நகரங்களில் இருந்து விலையின் போக்குகள் மீதான அகநிலை மதிப்பீடுகள் (பணவீக்க எதிர்பார்ப்புகள் குறித்த தரமான மற்றும் அளவு தரவுகள்) சேகரிக்கப்பட்டன. அடுத்ததாக பொருளாதார நிலைமைகள், வேலைவாய்ப்பு, விலைகள், வருமானம் மற்றும் செலவுகள் ஆகியவற்றில் தரமான பதில்கள் பெறப்பட்டன. இந்த ஆய்வுகள் RBIஇன் கொள்கை உருவாக்கத்திற்கான முக்கியமான நுண்ணறிவுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

8. முக்கியமான கனிமங்கள் பற்றிய அறிவுப் பகிரலுக்காக சக்தி நிலையான எரிசக்தி அறக்கட்டளையுடன் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட மத்திய அமைச்சகம் எது?

அ. சுரங்க அமைச்சகம்

ஆ. நிதி அமைச்சகம்

இ. புவி அறிவியல் அமைச்சகம்

ஈ. விவசாய அமைச்சகம்

  • ‘முக்கிய கனிமங்கள் தொடர்பான உச்சிமாநாடு’ புது தில்லியில் நடைபெற்றது. முதன்மையான கனிமவளம் மற்றும் அது தொடர்பான செயல்பாடுகளில் புதுமையை ஊக்குவிப்பதற்காக இந்த இரு நாள் உச்சிமாநாடு நடத்தப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டின் ஒருபகுதியாக, மத்திய சுரங்க அமைச்சகம் மற்றும் சக்தி நிலையான எரிசக்தி அறக்கட்டளை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், சுரங்க அமைச்சகம், சக்தி எரிசக்தி அறக்கட்டளை, எரிசக்தி, சுற்றுச்சூழல் & நீர் கவுன்சில் ஆகியவற்றுக்கு இடையே கூட்டுச்செயல்பாட்டுக்கு வழி வகுக்கிறது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, தேசிய பாதுகாப்பு மற்றும் குறைந்த கார்பன் எரிசக்தி ஆகியவை தொடர்பாக ஆய்வு மற்றும் அறிவுப்பகிர்வுக்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகைசெய்கிறது.

9. அண்மையில், பாரிஸ் விளையாட்டுகளுக்கு முன்னதாக Target Olympic Podium Scheme (TOPS)இன் முதன்மை குழுவில் மீண்டும் சேர்க்கப்பட்டவர் யார்?

அ. பூஜா கண்ணா

ஆ. தீபிகா குமாரி

இ. ககன்தீப் கவுர்

ஈ. முஸ்கன் கிரார்

  • உலகின் முன்னாள் நெ:1 வில்வித்தை வீராங்கனையான தீபிகா குமாரி, பாரிஸ் விளையாட்டுகளுக்கான Target Olympic Podium Scheme (TOPS)இன் முதன்மை குழுவில் மீண்டும் சேர்க்கப்பட்டார். கடந்த 2014ஆம் ஆண்டில் மத்திய இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட TOPS, இந்தியாவின் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. தேசிய விளையாட்டு மேம்பாட்டு நிதியம் (NSDF) மற்றும் கேலோ இந்தியா திட்டத்தால் நிதியளிக்கப்படும் இது, TOPS எலைட் தடகள அடையாளக்குழுமூலம் உயர்நிலை விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு, மிஷன் ஒலிம்பிக் செல் (MOC) மூலம் பயிற்சி அளிக்கிறது.

10. SMART (Supersonic Missile Assisted Release of Torpedo) அமைப்பை உருவாக்கிய அமைப்பு எது?

அ. ISRO

ஆ. DRDO

இ. CSIR

ஈ. NDMA

  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) 2024 மே.01 அன்று ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் APJ அப்துல்கலாம் தீவிலிருந்து SMART (Supersonic Missile Assisted Release of Torpedo) அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்தது. சமச்சீர் பிரிப்பு மற்றும் வேகக்கட்டுப்பாடுபோன்ற மேம்பட்ட வழிமுறைகள் சோதனையின்போது சரிபார்க்கப்பட்டது. பாதுகாப்பு அமைச்சர் இராஜ்நாத் சிங் மற்றும் DRDO தலைவர் டாக்டர் சமீர் V காமத் ஆகியோர் SMART குழுவை பாராட்டினர். SMART என்பது இந்திய கடற்படையின் நீர்மூழ்கி எதிர்ப்பு திறன்களை மேம்படுத்தும் அடுத்த தலைமுறை இலகுரக டார்பிடோ விநியோக அமைப்பாகும்.

11. 2024 – பன்னாட்டு தொழிலாளர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Ensuring safety and health at work in a changing climate

ஆ. All labor that uplifts humanity has dignity and importance

இ. Universal Social Protection to End Child Labor

ஈ. Resilient Recovery

  • ஒவ்வோர் ஆண்டும் மே.01 அன்று பன்னாட்டு தொழிலாளர் நாள் கொண்டாடப்படுகிறது. தொழிலாளர் இயக்கத்தின் பங்களிப்புகளை கௌரவிக்கும் வகையில் இந்தியா உட்பட உலகம் முழுவதும் இந்நாள் கொண்டாடப்படுகிறது. எட்டு மணிநேர வேலைநாள் கோரி கடந்த 1886ஆம் ஆண்டில் நடைபெற்ற சிகாகோ தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் உதித்த இந்நாளுக்கானத் தொடக்கம், ஹேமார்க்கெட் சம்பவத்திற்குப் பிறகு அதிமுக்கியத்துவம் பெற்றது. 1889இல், 20 நாடுகளின் தலைவர்கள் அதை பன்னாட்டு தொழிலாளர் நாளாக நிறுவினர். “Ensuring safety and health at work in a changing climate” என்பது 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.

12. இந்தியாவில் மிதவை சூரிய மின்னாற்றல் உற்பத்தி தொழில்நுட்பத்தை செயல்படுத்துவதற்காக, அண்மையில், நார்வே நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்திய நிறுவனம் எது?

அ. NTPC லிட்

ஆ. NHPC லிட்

இ. SJVN

ஈ. NEEPCO

  • இந்தியாவின் முதன்மையான நீர்மின்னாற்றல் உற்பத்தி நிறுவனமான NHPC லிட், மிதவை சூரிய மின்னாற்றல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற நார்வே தொழில்நுட்ப நிறுவனமான ஓஷன் சன் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஓஷன் சன் நிறுவனத்தின் புதுமையான ஹைட்ரோ-எலாஸ்டிக் சவ்வுகளைப் பயன்படுத்தி மின்னாற்றல் உற்பத்தி செய்வதை இந்த ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது. நிலையான வளர்ச்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத்திற்கான NHPCஇன் அர்ப்பணிப்பு இதன்மூலம் வலுப்படுத்தப்படுகிறது.

13. ‘Peucetia chhaparajnirvin’ என்றால் என்ன?

அ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட பசும்பூனைச்சிலந்திகள்

ஆ. பாரம்பரிய நீர்ப்பாசன நுட்பம்

இ. ஆக்கிரமிப்பு களை

ஈ. நீர்மூழ்கிக்கப்பல்

  • தர்யாபூர் சிலந்திப்பேரின ஆராய்ச்சியாளர்கள், ‘Peucetia chhaparajnirvin’ என்றவொரு புதிய பசும்பூனைச்சிலந்தி இனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இராஜஸ்தானில் உள்ள தால் சாப்பர் வனவிலங்கு சரணாலயத்தில் காணப்படும் இது, அவ்விடத்தின் பெயராலாயே அழைக்கப்படுகிறது. பொதுவாக ‘Vachellia nilotica – கருவேலாமாரம்’ இலைகளில் வசிக்கும் இவ்வுயிரினத்தின் பசுமைநிறம், பதுங்கியிருந்து இரையைப் பிடிக்க உதவுகிறது.

14. 2025 BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பை, இந்தியா, கீழ்க்காணும் எந்த நகரத்தில் நடத்தவுள்ளது?

அ. சென்னை

ஆ. கௌகாத்தி

இ. பெங்களூரு

ஈ. காங்டாக்

  • உலக பூப்பந்து கூட்டமைப்பு அறிவித்தபடி, அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள தேசிய சிறப்பு மையத்தில் 2025 – BWF உலக ஜூனியர் சாம்பியன்ஷிப்பை இந்தியா நடத்தும். 2008ஆம் ஆண்டு புனேயில் இந்நிகழ்வை நடத்திய பிறகு தற்போது மீண்டும் இந்தியா இந்நிகழ்வை நடத்தவுள்ளது. 2025 பதிப்பிற்கான குறிப்பிட்ட தேதிகள் பின்னர் வெளியிடப்படும்.

15. அண்மையில், 2025-30ஆம் ஆண்டு வரை எந்நாட்டின் குடிமைப்பணியாளர்களுக்கு பயிற்சியளிக்க இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது?

அ. மியான்மர்

ஆ. வங்காளதேசம்

இ. பூடான்

ஈ. நேபாளம்

  • 2025-2030 வரை 1500 வங்காளதேச குடிமைப் பணி அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பதற்காக வங்காளதேச அரசுடனான ஓர் ஒப்பந்தத்தை இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. DARPG இந்தியா மற்றும் வங்காளதேச பொது நிர்வாக அமைச்சகம் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம், வங்காளதேச அரசு ஊழியர்களுக்கான இடைத்தொழில் திறனை வளர்ப்பதற்கு உதவும். DARPGஇன் செயலாளர் V ஸ்ரீனிவாஸ் தலைமையில் (2024 ஏப். 28-30) 3 நாள் பயணத்தின்போது, கள நிர்வாகத் திட்டங்களில் கவனஞ்செலுத்தி ஒப்பந்தம் இறுதிசெய்யப்பட்டது.

16. பட்டாசித்ரா ஓவியங்களுடன் தொடர்புடைய மாநிலங்கள் எவை?

அ. பீகார் & ஜார்கண்ட்

ஆ. ஒடிசா & மேற்கு வங்காளம்

இ. மத்திய பிரதேசம் & இராஜஸ்தான்

ஈ. கர்நாடகா & கேரளா

  • மேற்கு வங்க மாநிலத்தின் சுவர்ண சித்ரகர் அவர் வசிக்கும் கிராமத்தின் பதுவாக்கள் (சுருள் ஓவியர்கள்) மத்தியில் ஒரு மரியாதைக்குரிய நபராவார். ஒடிஸாவின் மற்றொரு பட்டாசித்ரா கலைஞரான பாக்யஸ்ரீ சாகுவை பிரதமர் அண்மையில் தனது மனதில் குரல் நிகழ்ச்சியில் பாராட்டினார். பட்டாசித்ரா ஓவியம் என்பது ஒரு பாரம்பரிய துணி அடிப்படையிலான சுருளோவியமாகும். ஒடிஸா மற்றும் மேற்கு வங்கத்தில் 12ஆம் நூற்றாண்டில் இந்த ஓவியக் கலை உருவானது. பதுவாக்களின் அன்றாட வாழ்க்கை முறை, பாடல்களை இது சித்தரிக்கிறது.

17. சமீபத்தில், விவசாய வயல்களுக்கு டிஜிட்டல் முறையில் நீர் விநியோக முறையை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. குஜராத்

ஆ. இராஜஸ்தான்

இ. மகாராஷ்டிரா

ஈ. கேரளா

  • ராஜஸ்தான் மாநிலம் விவசாயத்திற்காக டிஜிட்டல் முறையிலான நீர் விநியோக முறையை அறிமுகம் செய்துள்ளது. கால்வாய் வழி நீர் விநியோகத்திற்காக, ‘பாரபந்தி’ என்ற நிலையான முறையைப் பயன்படுத்துகிறது. NIC ஜெய்ப்பூர் உருவாக்கிய இப்புதிய, ‘பாரபந்தி’ அமைப்பு, திட்டமிடப்பட்ட நீர்ப்பாசன விநியோகத்தை தொலைவிலிருந்து அணுக அனுமதிக்கிறது. விவசாயிகள் தங்கள் வயல்களுக்கு நீர் பாய்வதைக் கண்காணிக்கலாம், கைமுறை பிழைகளைக் குறைக்கலாம். இந்தக் கண்டுபிடிப்பு ராஜஸ்தானில் நீர் பயன்பாட்டை மேம்படுத்துவதையும் விவசாய செயல்திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

18. அண்மையில், ஐம்பது ஆண்டுகளை நிறைவு செய்திருக்கும் நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டத்தைத் தொடங்கிய அமைப்பு எது?

அ. WHO

ஆ. WMO

இ. ILO

ஈ. UNICEF

  • கடந்த 1974ஆம் ஆண்டில் WHOஆல் தொடங்கப்பட்ட நோய்த்தடுப்புக்கான விரிவாக்கப்பட்ட திட்டம் (EPI) அதன் 50ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. 1985இல் இந்தியாவில் UIP என பெயர்மாற்றம் செய்யப்பட இந்தத் திட்டம் தற்போது 13 உலகளாவிய பரிந்துரைக்கப்பட்ட நோய்களுக்கும் 17 சூழல்சார்ந்த நோய்களுக்கும் தடுப்பூசிகளை வழங்குகிறது. உலகளாவிய DPT செலுத்துதல் 70-களில் 5%ஆக இருந்து 2022இல் 84%ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் பெரியம்மை முற்றாக ஒழிக்கப்பட்டது; போலியோ ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் உள்ளது. இந்தியாவில் இதன் செயல் வரம்பு ஆண்டுதோறும் வளர்ந்து, 2019-21இல் 76%ஆக உள்ளது.

19. அண்மையில், ‘ZiG’ என்ற புதிய நாணயத்தை அறிமுகப்படுத்திய நாடு எது?

அ. ருவாண்டா

ஆ. ஜிம்பாப்வே

இ. சோமாலியா

ஈ. போட்ஸ்வானா

  • ஜிம்பாப்வே அதன் பொருளாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், ‘ZiG’ நாணயத்தை அறிமுகப்படுத்துகிறது. தங்க இருப்புக்களால் ஆதரிக்கப்படும் ‘ZiG’, தேய்மானமடைந்த ஜிம்பாப்வே டாலருக்கு மாற்றாக உள்ளது. தொடக்கத்தில் மின்னணு முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் இப்போது புழக்கத்தில் உள்ளன. நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான முயற்சிகள் இருந்தபோதிலும், சில அரசாங்கத் துறைகள் இப்புதிய நாணயத்தை ஏற்க மறுப்பதால், ஐயம் நீடிக்கிறது. இந்த நடவடிக்கை ஜிம்பாப்வேயின் நீடித்து வரும் பொருளாதார சவால்களை எதிர்கொள்ள நடந்து வரும் போராட்டங்களைப் பிரதிபலிக்கிறது.

20. காங்கேசன்துறை துறைமுகம் அமைந்துள்ள நாடு எது?

அ. இலங்கை

ஆ. மியான்மர்

இ. மலேசியா

ஈ. இந்தியா

  • முழுக்க முழுக்க இந்தியாவின் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தை புனரமைப்பதற்கு இலங்கையின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள இந்தத் துறைமுகம், இந்தியாவின் புதுச்சேரியில் உள்ள காரைக்கால் துறைமுகத்திலிருந்து 104 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பிராந்தியத்தில் இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இந்த முடிவு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதற்குக் கூடுதலாக, நேரடி பயணிகள் கப்பல் சேவையானது தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தை காங்கேசன்துறையுடன் இணைக்கிறது.

21. 46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (ATCM 46) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் குழுவின் 26ஆவது கூட்டத்தை (CEP 26) நடத்துகிற நாடு எது?

அ. அர்ஜென்டினா

ஆ. இந்தியா

இ. நார்வே

ஈ. சிலி

  • மே 20-30 வரை, கேரள மாநிலத்தின் கொச்சியில், 46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் (ATCM 46) மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்குழுவின் (CEP 26) 26ஆவது கூட்டத்தை இந்தியா நடத்தவுள்ளது. மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் துருவ மற்றும் பெருங்கடல் ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தால் (NCPOR) நடத்தப்படும் இந்தச் சந்திப்புகள், அண்டார்டிகாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அறிவியல் ஒத்துழைப்பு பற்றிய உலகளாவிய விவாதங்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியா, கடந்த 1983ஆம் ஆண்டு முதல் இரண்டு ஆராய்ச்சி நிலையங்களை அண்டார்டிகாவில் இயக்கிவருகிறது; மேலும் 2022இல் அண்டார்டிக் சட்டத்தையும் இந்தியா இயற்றியது.

22. அண்மையில், கீழ்க்காணும் எந்த நகரத்தில் ISHAN (Indian Single Sky Harmonized Air Traffic Management) திட்டம் தொடங்கப்பட்டது?

அ. இந்தூர், மத்திய பிரதேசம்

ஆ. நாக்பூர், மகாராஷ்டிரா

இ. வாரணாசி, உத்தர பிரதேசம்

ஈ. ஜெய்ப்பூர், இராஜஸ்தான்

  • மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ISHAN (Indian Single Sky Harmonized Air Traffic Management) திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது. இந்தியாவின் 4 விமானத் தகவல் மண்டலங்களை (FIR) நாக்பூரிலிருந்து மேற்பார்வையிடும் ஒரே அமைப்பாக ஒருங்கிணைப்பதன்மூலம் விமானப் போக்குவரத்து நிர்வாகத்தை (ATM) நெறிப்படுத்துவதை இந்தத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் வான்வெளி தற்போது 4 FIR-களாகவும், கௌகாத்தியில் ஒரு துணை FIR-ஆகவும் பிரிக்கப்பட்டுள்ளது. FIR-கள் தில்லி, மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை வழியாக இந்தியாவால் கட்டுப்படுத்தப்படுகின்றன, கௌகாத்தியில் துணை FIR உள்ளது. இந்தியா தனது FIR-களை 12 அண்டை நாடுகளுடன் பகிர்ந்து கொள்கிறது.

23. அண்மையில், அரசுகளுக்கிடையேயான எந்த அமைப்பு, முக்கியமான ஆற்றல் மாற்றம் தாதுக்கள் மீது குறிப்பாக கவனஞ்செலுத்தும் ஒரு குழுவை உருவாக்கியுள்ளது?

அ. ஐக்கிய நாடுகள்

ஆ. உலக சுகாதார நிறுவனம்

இ. உலக வங்கி

ஈ. உலக வர்த்தக அமைப்பு

  • முதன்மையாக ஆப்பிரிக்காபோன்ற வளர்ச்சியடையாத நாடுகளில் இருந்து பெறப்படும் முக்கியமான ஆற்றல் மாற்ற தாதுக்களுக்கு தீர்வுகாண குழுவொன்றை ஐநா உருவாக்கியுள்ளது. இந்த முன்முயற்சியானது வள தேசியவாதம் மற்றும் இந்தக் கனிமங்களுக்கான அதீத தேவையால் ஏற்படும் சுற்றுப்புறச்சூழல் சேதத்தை கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் காலநிலை ஒப்பந்தங்களுடன் ஒத்திசைந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல்கட்கு மாறுவதற்கான உலகளாவிய கொள்கைகளை நிறுவுவதே இக்குழுவின் குறிக்கோளாகும். இது சமூகங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சமமான நன்மைகளை வலியுறுத்துகிறது.

24. அண்மையில், இந்திய இராணுவமும் புனித் பாலன் குழுவும் இணைந்து இந்தியாவின் முதல் அரசியலமைப்பு பூங்காவை கீழ்க்காணும் எந்த நகரத்தில் திறக்கவுள்ளன?

அ. அகமதாபாத்

ஆ. புனே

இ. ஜெய்ப்பூர்

ஈ. வாரணாசி

  • இந்திய ராணுவமும் புனித் பாலன் குழுவும் இந்தியாவின் முதல் அரசியலமைப்பு பூங்காவை திறந்து வைப்பதற்காக கூட்டிணைந்துள்ளன. Lt.Gen அஜய் குமார் சிங் இந்த விழாவிற்கு தலைமைதாங்கினார். 2047-க்குள் இந்தியாவின் முன்னேற்றத்தில் குடிமக்களின் அரசியலமைப்பு கடமைகளின் பங்கு குறித்து அவர் வலியுறுத்திப்பேசினார். அவர் இந்திய அரசியலமைப்பின் உலகளாவிய முக்கியத்துவத்தை அப்போது எடுத்துரைத்தார். அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது மற்றும் அடிப்படை கடமைகளை கடைப்பிடிப்பது போன்றவைகளை அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்த உரிமைகள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்துகொள்வது இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானதாகும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 94ஆவது ஆண்டு நினைவுநாளையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

உப்புக்கு வரி விதித்த ஆங்கிலேயர்களுக்கு எதிராக வேதாரண்யத்தில் உப்புச்சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப். 30ஆம் தேதி இராஜாஜி தலைமையில் நடைபெற்றது. சர்தார் வேதரத்னம் போன்றோர் போராட்டம் வெற்றிபெற பெரும் பங்காற்றினர். இந்தச்சம்பவத்தை நினைவுகூரும் வகையில், வேதாரண்யத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப். 30ஆம் நாள் உப்பு அள்ளி, சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது.

2. இந்திய கடற்படையின் புதிய தலைமைத் தளபதி பொறுப்பேற்பு.

இந்திய கடற்படையின் 26ஆவது தலைமைத்தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி பொறுப்பேற்றார். இந்திய கடற் படையின் தலைமைத் தளபதியாக இருந்த R ஹரிகுமார் நாற்பது ஆண்டுகால பணிக்குப் பிறகு ஓய்வுபெற்றார். இதையடுத்து, புதிய தலைமைத் தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமிக்கப்பட்டார்.

3. வெளிநாட்டு உயிரினங்களைப் பதிவுசெய்ய புதிய இணையதளம்: வனத்துறை தகவல்.

வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972இன்படி, வெளிநாட்டு உயிரினங்களை வீடுகளில் வளர்ப்பது குறித்தும் அவற்றின் பிறப்பு, இறப்பு பதிவு மற்றும் வேறு நபர்களுக்கு மாற்றம் செய்தல் தொடர்பாக பதிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக கடந்த 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் வெளியிட்ட நடைமுறை இனி செல்லாது.

அதற்குப் பதிலாக உயிருள்ள விலங்கினங்கள் (அறிக்கையிடல் மற்றும் பதிவு செய்தல்) விதிகள்-2024இன்படி , தமிழ்நாட்டில் வெளிநாட்டு உயிரினங்களை வீடுகளில் வளர்ப்போர், வேறு நபர்களுக்கு விற்பனை செய்வோர் அது குறித்த தகவல்களை புதிதாக தொடங்கப்பட்டுள்ள, ‘பரிவேஷ் 2.0’ என்ற இணையதளத்தில் இனி பதிவு செய்ய வேண்டும். வன உயிரின (பாதுகாப்பு) சட்டம், 1972 அட்டவணை-4இல் வகைப்படுத்தப்பட்டுள்ள உயிரினங்களுக்கு இந்த விதி பொருந்தும். இவ்விதி ஏப்.28-ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ளது.

4. கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘அரிதான’ பக்கவிளைவு: இலண்டன் நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் ஒப்புதல்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட கரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியால் ‘மிக அரிதான’ பக்கவிளைவாக ரத்தம் உறைதல் ஏற்படலாம் என்று லண்டன் உயர்நீதிமன்றத்தில் அதன் தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியாவில் சீரம் நிறுவனம் இந்தத் தடுப்பூசியை தயாரித்து விற்பனை செய்தது.

5. `2,000 நோட்டுகள் 98% திரும்பியுள்ளன: ரிசர்வ் வங்கி.

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.76% `2,000 நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டுவிட்டதாக ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்தது. பொதுமக்களிடம் தற்போது `7,961 கோடி மதிப்பிலான `2,000 நோட்டுகள் உள்ளதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. கடந்த ஆண்டு மே.19ஆம் தேதி `2,000 நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறுவதாக RBI அறிவித்தது.

6. ‘நம்ம யாத்ரி’ கால் டாக்ஸி செயலி அறிமுகம்.

சென்னைபோன்ற பெருநகரங்களில் பரபரப்பாக இயங்கும் வாடகை வாகனங்களுக்கென (கால் டாக்ஸி) பல்வேறு பிரத்யேக செயலிகள் உள்ளன. இந்த செயலிகளில் முறைப்படுத்தப்படாத கட்டண முறையால் வாகன ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களிடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வுகாணும் வகையில், ‘நம்ம யாத்ரி’ என்னும் புதிய கால் டாக்ஸி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது சென்னையில் அண்ணா பல்கலை. மாணவர்களால் உருவாக்கப்பட்டதாகும்.

7. என் கல்லூரி கனவு.

பட்டியலின (SC) மற்றும் பழங்குடியின (ST) மாணாக்கரின் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை அதிகப்படுத்தவும், இடைநிற்றல் எண்ணிக்கையைக் குறைக்கவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், ‘என் கல்லூரி கனவு’ என்ற உயர்கல்வி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!