TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 19th January 2024

1. பினாகா என்ற பல்குழல் ஏவுகணை செலுத்திய உருவாக்கிய நாடு எது?

அ. சீனா

ஆ. இஸ்ரேல்

இ. ரஷ்யா

ஈ. இந்தியா

  • இந்தியாவின் ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் (ARDE) வடிவமைக்கப்பட்ட, ‘பினாகா’ என்ற பல் குழல் ஏவுகணை செலுத்தியைக் கொள்முதல் செய்வதில் இரண்டு தென்னமெரிக்க நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன. கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பினாகா பல் குழல் ஏவுகணை செலுத்தி, பாகிஸ்தான் இராணுவ நிலைகளை திறம்பட நடுநிலையாக்கியது. இது 60-75 கிமீ தூரம் வரையுள்ள பல்வேறு இலக்குகளுக்கு எதிராக திறம்பட செயல்படும். ஒவ்வொன்றும் ஆறு ஏவுகணைகளைக் கொண்ட இரண்டு தொகுதிகளும் 700 x 500 சதுர மீட்டர் பரப்பளவை வெறும் 48 வினாடிகளில் கடந்துசெல்லும்.

2. 2023 – இந்திய சர்வதேச அறிவியல் விழாவுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Science and Technology Public Outreach in Amrit Kaal

ஆ. Global Science for Global Wellbeing

இ. Marching Towards Amrit Kaal with Science and Technology, and Innovation

ஈ. Integrated Approach in Science and Technology for a sustainable future

  • 2023-இந்திய சர்வதேச அறிவியல் விழாவின் 9ஆவது பதிப்பு 2024 ஜனவரி.17-20 வரை நடைபெறவுள்ளது. தேசிய புத்தாக்க அறக்கட்டளையின் ஒருங்கிணைப்புடன் இந்திய அரசாங்கத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் இது நடத்தப்படுகிறது. IISF-2023 ஆனது பரிதாபாத்தில் அமைந்துள்ள உயிரி தொழில்நுட்பத்துக்கான பிராந்திய மையமாக விளங்கும் DBT பெயர்ச்சிநல அறிவியல் & தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் நடத்தப்படும். 22 நாடுகள் பங்கேற்கும் இந்த நிகழ்வு, “அமிர்தகால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மக்கள்தொடர்பு” என்ற கருப் பொருளை மையமாகக் கொண்டுள்ளது.

3. அண்மையில், அழிந்துவரும் எந்தப் பழங்குடியினருக்கு, ‘PM-JANMAN’ திட்டத்தின்கீழ் அடிப்படை வசதிகளை விரிவுபடுத்தும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது?

அ. சௌராஸ் பழங்குடியினர்

ஆ. கோலாம் பழங்குடியினர்

இ. கோரகா பழங்குடியினர்

ஈ. பிர்ஹோர் பழங்குடியினர்

  • அழிந்துவரும் கோலாம் பழங்குடியினருக்கு ஜன்ஜாதி ஆதிவாசி நியாயமகா அபியான்மூலம் அடிப்படை வசதிகளான சுகாதாரம் மற்றும் கல்வியில் கவனஞ்செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மையாக வாழும் கோலாம் பழங்குடியினர், பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுவாக உள்ளனர். வரலாற்று ரீதியாக, அவர்கள் கோண்ட் பழங்குடியினருக்கு மதகுருக்களாக பணியாற்றிவர்கள். அவர்களின் முதன்மைத்தொழில் விவசாயமாகும். எழுதுவதற்கு தேவநாகரி எழுத்து வடிவையும் பேசுவதற்கு கோலாமி மற்றும் பிற மொழிகளையும் பயன்படுத்துகின்றனர்.

4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘e-SAKSHI’ செயலியுடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?

அ. புள்ளியியல் & திட்ட அமலாக்க அமைச்சகம்

ஆ. வணிகம் & தொழிற்துறை அமைச்சகம்

இ. மின்துறை அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம்

  • நாடாளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத் திட்டத்துக்கான (MPLADS) ‘e-SAKSHI’ செயலியை, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தச் செயலி, MPLAD திட்டத்தின் நிதிப்பாய்வு செயல்முறையை மாற்றுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் மேம்பாட்டுத் திட்டங்களை நிர்வகிக்க, வசதி மற்றும் அணுகல்தன்மையை வழங்குதல், நிகழ்நேர விண்ணப்ப கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆகியவற்றை இந்தச் செயலி வழங்குகிறது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) மற்றும் அதிகாரிகளுக்கு இடையேயான தகவல் தொடர்புகளையும் இது ஒழுங்குபடுத்துகிறது.

5. பக்கே பாகா இருவாச்சி திருவிழா கொண்டாடப்படுகிற இந்திய மாநிலம் எது?

அ. அஸ்ஸாம்

ஆ. சிக்கிம்

இ. அருணாச்சல பிரதேசம்

ஈ. நாகாலாந்து

  • பக்கே பாகா இருவாச்சி திருவிழாவின் 9ஆவது பதிப்பு ஜன.18-20, 2024 வரை, அருணாச்சல பிரதேச மாநிலத்தின் செய்ஜோசாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தத் திருவிழா, பக்கே புலிகள் சரணாலயத்தில் உள்ள இருவாச்சிகளுக்கான நியிஷி பழங்குடியினக்குழுவினரின் பாதுகாப்பு முயற்சிகளை கொண்டாடுகிறது. “Domutoh Domutoh, Paga hum Domutoh” என்ற கருப்பொருளின் கீழ் இதன் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன. இந்தக் கருப்பொருள் இருவாச்சிப் பறவைகளைப் பாதுகாப்பதை வலியுறுத்துகிறது.

6. அண்மையில், விஸ்வநாதன் ஆனந்தை விஞ்சி இந்தியாவின் No:1 செஸ் வீரராக மாறிய செஸ் வீரர் யார்?

அ. R பிரக்ஞானந்தா

ஆ. டிங் லிரன்

இ. குகேஷ் D

ஈ. விதித் குஜராத்தி

  • 2024 ஜன.17 அன்று, கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா ஐந்து முறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை விஞ்சி, இந்தியாவின் முதல் தரவரிசை செஸ் வீரரானார். TATA ஸ்டீல் மாஸ்டர்ஸ் போட்டியின் 4ஆவது சுற்றில் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் டிங் லிரனை தோற்கடித்த 18 வயதான செஸ் வீரர் ஆர் பிரக்ஞானந்தா இந்தச் சாதனையைப் படைத்தார்.

7. இந்தியாவின் எப்பகுதியில், ‘மிலன் – 2024’ என்ற கடற்படைப் பயிற்சியின் 12ஆவது பதிப்பு நடைபெறவுள்ளது?

அ. விசாகப்பட்டினம்

ஆ. மும்பை

இ. கொல்கத்தா

ஈ. சென்னை

  • பல்வேறு நாடுகள் பங்குபெறும் கடற்படை பயிற்சியான மிலனின் 12ஆவது பதிப்பு விசாகப்பட்டினத்தில் பிப்.19-27, வரை நடைபெறவுள்ளது. இந்திய கடற்படையால் நடத்தப்படும் இந்தப் பயிற்சியில் 50க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் கிட்டத்தட்ட இருபது கப்பல்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்பயிற்சியானது துறைமுகம் மற்றும் கடல் என இரு கட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும். கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்துவதில் இது கவனஞ்செலுத்தும். MILAN என்பது 1995ஆம் ஆண்டு முதல் கடல்சார் ஒத்துழைப்பின்கீழ் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வாகும். MILANஇன் முந்தைய பதிப்பு, 2022இல் விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது.

8. 2024ஆம் ஆண்டுக்கான குளோபல் ஃபயர்பவர் அறிக்கையின்படி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவத்தில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. முதலாவது

ஆ. இரண்டாவது

இ. மூன்றாவது

ஈ. நான்காவது

  • 2024-குளோபல் ஃபயர்பவர் ஆண்டறிக்கையின்படி, உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவங்களில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் முறையே முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்துள்ளன. GFP தரவரிசை உலகளாவிய இராணுவ வலிமைபற்றிய விரிவான முன்னோக்கை வழங்க பல்வேறு காரணிகளைக் கருத்தில்கொள்கிறது. 2024இல், GFP மதிப்பாய்வு 145 உலக வல்லரசுகளைக் கருத்தில் கொண்டது. GFPஇன்படி, இந்தியாவின் பவர் இன்டெக்ஸ் (PwrIndx) மதிப்பெண் 0.1023ஆக உள்ளது. சிறிய PwrIndx மதிப்பு மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தைக் குறிக்கிறது.

9. அஸ்ஸாமின் உயரிய குடிமக்கள் விருதான, ‘அஸ்ஸாம் வைபவுக்கு’ அண்மையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. இரஞ்சன் கோகோய்

ஆ. நரேந்திர மோதி

இ. இரத்தன் டாடா

ஈ. அமித் ஷா

  • இந்திய உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி (CJI) இரஞ்சன் கோகோய், சட்டம் மற்றும் நீதித்துறையில் ஆற்றிய பங்களிப்பிற்காக, அஸ்ஸாம் மாநிலத்தின் உயரிய குடிமக்கள் விருதான, ‘அஸ்ஸாம் வைபவ்’ விருதைப் பெறுவார் என்று அஸ்ஸாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். இந்தியாவின் 46ஆவது தலைமை நீதிபதியும், மாநிலங்களவை நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் கோகோய், வடகிழக்கிந்தியாவில் இருந்து தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் முதல் நபராவார். இரஞ்சன் கோகோய் உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 22 நபர்களை இந்த மதிப்புமிக்க விருதுக்கு அஸ்ஸாம் அரசு தேர்வுசெய்துள்ளது.

10. அரசியலமைப்பின் எந்தப் பிரிவு, இந்தியாவின் எந்தப் பகுதியிலும் வசிக்கவும் குடியேறவும் உரிமையளிக்கிறது?

அ. பிரிவு 19 (1) (e)

ஆ. பிரிவு 19 (1) (a)

இ. பிரிவு 19 (1) (c)

ஈ. பிரிவு 19 (1) (f)

  • அரசியலமைப்பின் 19 (1) (e) பிரிவின்கீழ் வெளிநாட்டினர் இந்தியாவில் வசிக்க உரிமை கோரமுடியாது என தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஐயத்திற்குரிய வங்காளதேச நாட்டவரான அசல் சக்மாவுக்கான ஆட்கொணர்வு மனு சம்பந்தப்பட்ட விசாரணையில் இது வலியுறுத்தப்பட்டது. வெளிநாட்டவரை வெளியேற்ற அரசாங்கத்திற்கு உள்ள முழு அதிகாரம் குறித்த உச்சநீதிமன்றத்தின் கருத்தை நீதிமன்றம் அப்போது மேற்கோள் காட்டியது. பிரிவு 19 (1) (e) இந்தியர்களுக்கு இந்தியாவிற்குள் எங்கும் வசிக்கும் உரிமையை வழங்குகிறது.

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற குனோ தேசியப்பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. உத்தரபிரதேசம்

ஈ. கேரளா

  • அண்மையில் மத்திய பிரதேச மாநிலம் ஷியோபூர் மாவட்டத்திலுள்ள குனோ தேசியப்பூங்காவில், ‘சௌர்யா’ என்ற சிறுத்தை இறந்து கிடந்தது. ‘சௌர்யா’ நமீபியாவைச் சேர்ந்த ஏழு வயது சிறுத்தையாகும். சௌரியாவின் இறப்புடன், ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட இருபது சிறுத்தைகளில் பதிமூன்றே எஞ்சியுள்ளன. 2023 மார்ச் முதல், இந்தியாவில் பிறந்த ஏழு வளர்ந்த சிறுத்தைகளும் மூன்று குட்டிகளும் பூங்காவில் இறந்துள்ளன. பலத்த மழை, அதீத வெப்பம் மற்றும் ஈரப்பதம் ஆகியவை இறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

12. 2024 – உலக பொருளாதார மன்றத்திற்கானக் கருப்பொருள் என்ன?

அ. Rebuilding Trust

ஆ. Cooperation in a Fragmented World

இ. Working Together

ஈ. The Great Reset

  • மத்திய அமைச்சர்கள் ஸ்மிருதி இரானியும் ஹர்தீப் சிங் பூரியும் 2024 ஜனவரி.16 அன்று டாவோஸில் உள்ள உலக பொருளாதார மன்றத்தில், மகளிர் தலைமைத்துவ ஓய்வறையைத் திறந்துவைத்தனர். அரசாங்கத் திட்டங்களை மேற்கோள் காட்டி, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை ஸ்மிருதி இரானி வலியுறுத்தினார். பெண்கள் தலைமையிலான வளர்ச்சி மாதிரிக்கு இந்தியா மாறிவருவதை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி குறிப்பிட்டார். 54ஆவது உலக பொருளாதார மன்றமானது உலகளாவிய மோதல்கள், காலநிலை மாற்றம் மற்றும் ஆழ்மாறாட்டம் (deep-fake) ஆகியவற்றுக்கு தீர்வுகாணும் நோக்கில், ‘Rebuilding Trust’இல் கவனம் செலுத்துகிறது.

13. அண்மையில், மஹ்தாரி வந்தனா யோஜனாவை அறிமுகப்படுத்திய மாநிலம் எது?

அ. சத்தீஸ்கர்

ஆ. மத்திய பிரதேசம்

இ. உத்தர பிரதேசம்

ஈ. பீகார்

  • சத்தீஸ்கர் மாநிலம் அண்மையில் மஹ்தாரி வந்தனா திட்டம் – 2024ஐ அறிமுகப்படுத்தியது. மத்திய பிரதேசத்தின் வெற்றிகரமான, ‘ஆர்த்திக் சர்க்காரி லட்லி பஹ்னா’ என்ற திட்டத்தை இந்தத் திட்டம் பின்பற்றுகிறது. இந்த மாநில முன்னெடுப்பானது பெண்களுக்கு மாதந்தோறும் `1,000 நிதியுதவி வழங்குவதையும், தன்னம்பிக்கை மற்றும் திறன் மேம்பாட்டை வளர்த்தெடுப்பதையும் தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. இது பெண்களுக்கு செலவினங்களை நிர்வகித்தல், சிறுதொழில்களை தொடங்குதல் மற்றும் அவர்களின் நிதிநிலைகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் உதவுகிறது. பயனாளிகளின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடிப்பணப்பரிமாற்றம்மூலம் தொகை வரவு வைக்கப்படும்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க 247 குழுக்கள்.

தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களின் விற்பனையைத்தடுக்க 247 குழுக்கள்மூலம் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள்நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. புகையிலை, போதைப்பாக்குகள், பான் மசாலாக்கள் உள்பட 391 வகை புகையிலை சார்ந்த பொருள்களுக்கு தமிழ்நாட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்புவரை விதிகளுக்கு புறம்பாக புகையிலை பொருள்களை விற்பனைசெய்யும் கடைகளுக்கு முதல்முறை `5,000, இரண்டாவது முறை `10,000 அபராதம் விதிக்கப்பட்டது. மூன்றாவது முறை விதிகளை மீறும்போது `25,000 அபராதம் மற்றும் கடைக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது முதல்முறையிலேயே கடைகளுக்கு சீல் வைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

2. நீண்டகாலம் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்.

இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக அதிக ஆண்டுகள் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பதவிவகித்தவர் (07 ஆண்டு 179 நாள்கள்) 16ஆவது தலைமை நீதிபதியான யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட் ஆவார். தற்போது உச்ச நீதிமன்றத்தின் 50ஆவது தலைமை நீதிபதியாக அவரது மகன் தனஞ்செய் யஷ்வந்த் சந்திரசூட் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

3. தமிழ்நாட்டில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்தது.

தமிழ்நாட்டில் பச்சிளக்குழந்தைகள் இறப்பு விகிதம் 8.2ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாட்டின் மக்கள்நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பொருத்தவரை 2020ஆம் ஆண்டு நிலவரப்படி குழந்தைகள் இறப்பு விகிதம் ஆயிரத்துக்கு 13 குழந்தைகள் என்ற நிலையில் இருந்தது. தற்போது, சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் ஆயிரம் குழந்தைகளுக்கு 8.2 என்ற அளவிலேயே இறப்பு விகிதம் உள்ளது.

4. நெதர்லாந்து, டொமினிகன் குடியரசு, ஈக்வடார் நாடுகளுடன் மருத்துவத்துறை ஒத்துழைப்பு.

டொமினிகன் குடியரசு, நெதர்லாந்து, ஈக்வடார் ஆகிய நாடுகளின் மருத்துவ ஒழுங்காற்று ஆணையங்கள் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மத்திய மருத்து தரக்கட்டுப்பாடு மையம் இடையே கையொப்பமான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இந்தியா-கென்யா ஒப்பந்தத்துக்கு ஒப்புதல்:

எண்ம தீர்வுகளின் பகிர்வுக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கும் கென்யா அரசுக்கும் இடையே கடந்த டிசம்பரில் கையொப்பமான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. எண்ம மாற்றத்துக்கான முன்னெடுப்புகளை அமல்படுத்துவதில் ஒத்துழைப்பு, எண்ம தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகளை மேம்படுத்துவதை இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

அனல் மின் நிலைய திட்டங்களில் பங்கு முதலீட்டுக்கு ஒப்புதல்: சவுத் ஈஸ்டர்ன் கோல் ஃபீல்ட்ஸ் மற்றும் மகாநதி கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனத்தால் மத்திய பிரதேசம் மற்றும் ஒடிஸாவில் அமைக்கப்படவுள்ள 2,260 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அனல்மின் நிலையங்களின் மூலதனச்செலவுக்காக `5,607 கோடி மதிப்பிலான பங்கு முதலீட்டு முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

5. பாரதிய விண்வெளி ஆய்வுநிலையம்: அடுத்த ஆண்டில் சோதனைகள் தொடக்கம்.

பாரதிய விண்வெளி ஆய்வுநிலையத்துக்கான சோதனைகள் அடுத்தாண்டில் தொடங்கும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது. வரும் 2035ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வுநிலையத்தை அமைப்பது, 2040ஆம் ஆண்டுக்குள் நிலவுக்கு இந்திய விண்வெளி வீரரை அனுப்புவது ஆகிய இஸ்ரோவின் இலட்சிய இலக்குகள் குறித்தும் ISRO தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin