Tnpsc Current Affairs in Tamil – 19th February 2024
1. 16ஆவது உலக சமூக மன்றக் கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. பூடான்
ஆ. புது தில்லி
இ. காத்மாண்டு
ஈ. வங்காளதேசம்
- நடப்பு 2024ஆம் ஆண்டில் 16ஆவது உலக சமூக மன்றத்தின் மாநாடு காத்மாண்டுவில் தொடங்கியது. இந்த மாநாடு உள்நாட்டு சமூக அமைப்புகள், சமூக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் நவதாராளவாத உலகமயமாக்கலை எதிர்க்கும் தனிநபர்களிடையே பரிமாற்றத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஐந்து நாள் நிகழ்வாகும். இந்த மாநாட்டின் கருப்பொருள், “Another World is Possible” என்பதாகும்.
2. ‘ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வங்கி’ என்ற விருதை வென்றுள்ள வங்கி எது?
அ. பாரத ஸ்டேட் வங்கி
ஆ. சௌத் இந்தியன் வங்கி
இ. HDFC
ஈ. பிராந்திய கிராமப்புற வங்கிகள்
- 19ஆவது IBA வருடாந்திர வங்கி தொழில்நுட்ப மாநாட்டில் சௌத் இந்தியன் வங்கி, ‘ஆண்டின் சிறந்த தொழில்நுட்ப வங்கியாக’ கௌரவிக்கப்பட்டது. மூன்று முதலிடம், ஓர் இரண்டாமிடம் மற்றும் இரண்டு சிறப்பு விருதுகள் உட்பட 6 விருதுகளை அவ்வங்கி பெற்றது. இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) துணை ஆளுநர் T ரபி சங்கர், இந்திய வங்கிகள் சங்கம் (IBA) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் சௌத் இந்தியன் வங்கியின் MD & CEO PR சேஷாத்ரி விருதினை பெற்றுக் கொண்டார்.
3. மத்திய கிழக்கில், ‘Dream of the Desert’ என்ற ரெயிலை அறிமுகப்படுத்தவுள்ள நாடு எது?
அ. சவூதி அரேபியா
ஆ. ஈராக்
இ. ஈரான்
ஈ. ஓமன்
- சவூதி அரேபியா, “பாலையின் கனா – Dream of the Desert” என்ற ரெயில் சேவையை 2025இன் பிற்பகுதியில் தொடங்கவுள்ளது. 800 மைல் நீளங்கொண்ட இப்பயணம் சவூதி அரேபியாவின் தலைநகரான ரியாத்தில் தொடங்கி, ஜோர்டானின் எல்லையை நோக்கி வடமேற்கே பயணிக்கும். இந்த ரெயில், நீளமான அழகிய பாலைவனங்கள் மற்றும் UNESCO உலக பாரம்பரிய தொல்பொருள் தளங்கள் வழியாகச் செல்லும்.
4. ஒலி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும், ‘டிரோன்-எதிர்ப்பு அமைப்பை’ உருவாக்கியுள்ள நிறுவனம் எது?
அ. ஐஐடி ரூர்க்கி
ஆ. ஐஐடி பம்பாய்
இ. ஐஐடி ஜம்மு
ஈ. ஐஐடி கான்பூர்
- ஐஐடி-ஜம்முவின் பேராசிரியர் கரண் நத்வானி, ஒலி தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இயங்கும் ஒரு புதுமையான டிரோன்-எதிர்ப்பு அமைப்பை உருவாக்கியுள்ளார். இதன் விலை சுமார் `4 இலட்சம். இந்தச் செலவுகுறைந்த தீர்வு, வழமையான டிரோன்-எதிர்ப்பு தொழில்நுட்பங்களை விஞ்சி 300 மீ வரம்பிற்குள் டிரோன்கள், விமானங்கள் மற்றும் பறவைகளைக் கண்டறிகிறது. `25,000 முதல் `40,000 வரையிலான உற்பத்திச் செலவுகளுடன், பல்வேறு சூழல்களில் பன்முகத்தன்மை மற்றும் செயல்திறனை இது காண்பிக்கும்.
5. வனப்பரப்பை அதிகரிப்பதற்காக, ‘வன மித்ரா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்திய மாநில அரசு எது?
அ. ஹரியானா
ஆ. இராஜஸ்தான்
இ. குஜராத்
ஈ. ஒடிசா
- ஹரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், வனமிலா பகுதிகளில் சமூகப் பங்களிப்புடனான காடு வளர்ப்பை மேற்கொள்வதற்காக, ‘வன மித்ரா’ என்ற திட்டத்தை தொடக்கியுள்ளார். மாநிலத்தின் வனப்பரப்பை விரிவுபடுத்துதல், புதிதாக நடப்பட்ட மரங்களின் உயிர்வாழ்வு விகிதங்களை அதிகரித்தல் மற்றும் மரபுவன மண்டலங்களுக்கு அப்பால் மரம் நடுவதை ஊக்குவித்தல் ஆகியவற்றில் உள்ளூர் சமூகங்களை ஈடுபடுத்துவதை இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்துகிறது மற்றும் ஹரியானா முழுவதும் நிலையான காடு வளர்ப்பு முயற்சிகளை வளர்ப்பதில் சமூக ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
6. தொண்டை அடைப்பான் நோயை உண்டாக்கும் காரணி எது?
அ. பாக்டீரியா
ஆ. வைரஸ்
இ. பூஞ்சை
ஈ. புரோட்டோசோவா
- அண்மையில தொண்டை அடைப்பான் நோயை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல்களை உலக சுகாதார நிறுவனம் (WHO) வெளியிட்டது. தொண்டை அடைப்பான் என்பது ‘Corynebacterium diphtheriae’ஆல் மூக்கு & தொண்டையில் ஏற்படும் தொற்று பாக்டீரியா தொற்று ஆகும். சுவாச நீர்த்துளிகள் அல்லது பாதிக்கப்பட்ட புண்களைத் தொடுவதன் மூலம் இது பரவுகிறது. மருந்துகளால் சிகிச்சையளிக்க முடியும் என்றாலும், இதன் அடுத்தடுத்த நிகழ்வுகள் இதயம், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலத்தைச் சேதப்படுத்தும். தொண்டைப்புண், சுரப்பிகள் வீக்கம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவை இதன் அறிகுறிகளாகும்.
7. இளம் அறிவியலாளர் திட்டத்துடன் (YUVIKA) தொடர்புடையது எது?
அ. பாதுகாப்பு அமைச்சகம்
ஆ. ஐஐடி கான்பூர்
இ. ISRO
ஈ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்
- விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அறிவியலில் அடிப்படை அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு பள்ளி மாணாக்கருக்காக, ‘இளம் அறிவியலாளர் திட்டத்தை’ (YUVIKA) ISRO ஏற்பாடு செய்து வருகிறது. விழிப்புணர்வை உருவாக்கவும், STEM ஆர்வத்தை ஊக்குவிக்கவும், இரண்டு வாரம் நீளும் கலந்துரையாடல்களை இந்தத் திட்டம் வழங்குகிறது. 8ஆம் வகுப்பு முடித்து தற்போது 9ஆம் வகுப்பு படிக்கும் தகுதியுள்ள மாணவ / மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திலிருந்து 3 பேர் தெரிவுசெய்யப்படுகிறார்கள்.
8. UPI-NPI இணைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட வங்கிகள் எவை?
அ. இந்திய ரிசர்வ் வங்கி & நேபாள ராஸ்ட்ரா வங்கி
ஆ. இந்திய ரிசர்வ் வங்கி & நேபாள முதலீட்டு மெகா வங்கி
இ. பாரத வங்கி & நேபால் ராஸ்ட்ரா வங்கி
ஈ. பாரத வங்கி & நபில் வங்கி
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் நேபாள ராஸ்ட்ரா வங்கி ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த கொடுப்பனவு இடைமுகத்தையும் (UPI) நேபாளத்தின் தேசிய கொடுப்பனவு இடைமுகத்தையும் (NPI) ஒருங்கிணைப்பதற்காக கூட்டிணைந்துள்ளன. இது தடையற்ற எல்லைதாண்டிய பரிவர்த்தனைகளுக்கான உட்கட்டமைப்பை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. முறைப்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தமானது, UPI மற்றும் NPIஐ இணைக்கும் ஓர் ஒருங்கிணைந்த முயற்சியைக் குறிக்கிறது.
9. சிக்கிமின் INSPIRES திட்டத்திற்கு ஆதரவாக உள்ள பன்னாட்டு நிறுவனம் எது?
அ. சர்வதேச நாணய நிதியம்
ஆ. உலக வங்கி
இ. உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி
ஈ. ஆசிய வளர்ச்சி வங்கி
- சிக்கிம் மாநில முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், ‘சிக்கிம் INSPIRES’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். $100 மில்லியன் ஒதுக்கீட்டில், பொருளாதார வளர்ச்சி மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்க 9 அரசாங்கத் துறைகளை ஈடுபடுத்தும் திட்டமானது 5 ஆண்டு காலக்கெடுவைக்கொண்டுள்ளது. இம்முயற்சியானது அனைத்து துறைகளிலும் ஒத்துழைப்பு மற்றும் திறனை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறது. பெண்கள் மற்றும் இளையோருக்கான வேலைவாய்ப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
10. IRCTCஇன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. சஞ்சய் குமார் ஜெயின்
ஆ. நீரஜ் சர்மா
இ. KK மிஸ்ரா
ஈ. அஜித் குமார்
- இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலாக் கழகத்தின் (IRCTC) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக (CMD) சஞ்சய் குமார் ஜெயின் நியமிக்கப்பட்டுள்ளார். சஞ்சய் குமார் ஜெயின் 1990ஆம் ஆண்டுத் தொகுதியைச் சேர்ந்த IRTS அதிகாரி மற்றும் தகுதியான பட்டய கணக்காளர் ஆவார். 2026 டிச.31 அன்று அவர் பணி ஓய்வுபெறும்வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை சஞ்சய் குமார் ஜெயின் நியமனத்திற்கு இரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
11. எந்த நாட்டின் உடனடி கொடுப்பனவு தளமான AANI, இந்தியாவின் UPIஉடன் இணைக்கப்பட்டுள்ளது?
அ. கத்தார்
ஆ. நேபாளம்
இ. ஐக்கிய அரபு அமீரகம்
ஈ. மியான்மர்
- இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் (UAE) தங்களின் உடனடி கொடுப்பனவு தளங்களான UPI (இந்தியா) மற்றும் AANI (UAE) ஆகியவற்றை இணைப்பதாக அறிவித்தன. இந்த ஒப்பந்தம் இருநாடுகளுக்கும் இடையே தடையற்ற எல்லைதாண்டிய பரிவர்த்தனைகளை அனுமதிக்கும். AANI என்பது உடனடி கொடுப்பானவு தளமாகும்; இது பயனர்களை பத்து வினாடிகளுக்குள் பணத்தை பரிமாற்றிக்கொள்ள அனுமதிக்கிறது. IMECஇல் BIT மற்றும் IGA உட்பட 2024 பிப்ரவரியில் இருநாடுகளுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட பல ஒப்பந்தங்களின் ஒருபகுதியாக இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
12. BSE EXPO-2024ஐ நடத்திய அமைப்பு எது?
அ. பிராட்காஸ்ட் எஞ்சினியரிங் சொசைட்டி
ஆ. SEBI
இ. பொருளாதார விவகார அமைச்சகம்
ஈ. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
- பிராட்காஸ்ட் எஞ்சினியரிங் சொசைட்டி (இந்தியா) BSE EXPO-2024ஐ நடத்தியது; இது புது தில்லியில் நடைபெற்ற 28ஆவது சர்வதேச மாநாடு மற்றும் ஒளிபரப்பு மற்றும் பல்லூடக தொழில்நுட்பம் பற்றிய கண்காட்சியாகும். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் மற்றும் இணையமைச்சர் டாக்டர் L முருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்துகொண்டனர்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை – முத்திரைச் சின்னம் வெளியீடு.
தமிழ்நாடு அரசின் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை, “தடைகளைத்தாண்டி” என்னும் தலைப்பில் வெளியிடப்படுவதைக் குறிக்கும் விதமாக நிதிநிலை அறிக்கையின் முத்திரைச் சின்னம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
2. 2024 – 2025 தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை: புதிய அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்.
நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற திருக்குறள்:
காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம்.
(பொருட்பால்: குறள் எண்: 386. இயல்: அரசியல். அதிகாரம்: இறைமாட்சி)
(காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும்.)
`360 கோடியில் தமிழ்ப்புதல்வன் திட்டம்: அரசுப்பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு மாதம் `1,000.
`3,500 கோடியில் கலைஞரின் கனவு இல்லம்: குடிசையில்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்காக, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம் அறிமுகம். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு `3,500 கோடி நிதி ஒதுக்கீடு. 2030ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும். ஒரு கான்கிரீட் வீட்டுக்கு `3.50 இலட்சம் ஒதுக்கப்படும்.
விருதுநகர் மற்றும் சேலத்தில் `2,483 கோடியில் ஜவுளிப்பூங்காக்கள்.
`1,550 கோடியில் அடையாற்றைச் சீரமைக்கும் திட்டம்.
திண்டுக்கல், நாமக்கல், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் `1,289 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டங்கள்.
கோயம்புத்தூரில் `1,100 கோடியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா.
பழங்குடியினத்தவரை மேம்படுத்த `1,000 கோடி செலவில், ‘தொல்குடி’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.
`960 கோடியில் நடுநிலை-தொடக்கப்பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள்.
சென்னை மத்திய ரெயில் நிலையத்துக்கு எதிரே `688 கோடியில் நகர்ப்புற சதுக்கம்.
ஊராட்சி ஒன்றிய ஏரிகள், குளங்கள் `500 கோடியில் சீரமைப்பு.
பூந்தமல்லியில் `500 கோடியில் அதிநவீனத் திரைப்பட நகரம்.
ஊரகப்பகுதிகளில் `365 கோடியில் 2,000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்.
கைத்தறி மற்றும் கைவினைப் பொருள்களை காட்சிப்படுத்த `227 கோடியில் புதிய ஒருங்கிணைந்த வளாகம்.
`111 கோடியில் 10 புதிய அரசு பயிற்சி நிறுவனங்கள்.
சென்னையில் `25 கோடியில் புற உலகச் சிந்தனையற்ற மதியிறுக்கம் (ஆட்டிசம்) உடையோருக்கான உயர்திறன் மையம்.
கீழடியில் `17 கோடியில் திறந்தவெளி தொல்லியல் அருங்காட்சியகம்.
5 இலட்சம் ஏழைக்குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை வழங்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம். NITI ஆயோகின் அறிக்கைப்படி வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் 2.2% மக்களை கண்டறிந்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற அரசு முடிவு. மிகவும் வறிய நிலையில் உள்ள 5 இலட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையிலிருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
கோயம்புத்தூரில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி பெயரில் மாபெரும் நூலகம் – அறிவியல் மையம்.
தூத்துக்குடியில் புதிய விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்திப்பூங்கா. குலசேகரப்பட்டிணத்தில் விண்வெளிப் பூங்கா அமைக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொடர்பான சாதக பாதகங்களை ஆராய நுண்ணறிவு இயக்கம்.
சுய உதவிக்குழுக்களுக்கு `35,000 கோடி வங்கிக்கடன்.
வானிலை முன்னறிவிப்பை வலுப்படுத்த இராமாநதபுரம் மற்றும் ஏற்காடு ஆகிய 2 இடங்களில் இரண்டு C-BAND டோப்ளர் ரேடார்கள் (Doppler Radar) `56 கோடி மதிப்பில் அமைக்கப்படும்.
சமூக பாதுகாப்புத் துறை, ‘குழந்தைகள் நலன் துறை’ எனப் பெயர்மாற்றம் செய்யப்படுகிறது.
கோயம்புத்தூரில், ‘பூஞ்சோலை’ என்ற பெயரில் ஒரு மாதிரி கூர்நோக்கு இல்லம் அமைக்கப்படும்.
சென்னையை அடுத்த முட்டுக்காடு பகுதியில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த முக்கிய சாலை கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒரு சட்டபூர்வ அமைப்பு உருவாக்க திட்டம் தீட்டப்படும்.
மெரினா, கடலூர் வெள்ளிக் கடற்கரை உள்ளிட்ட 8 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். தமிழ்நாட்டின் கடற்கரைகளை மேம்படுத்த, ‘நீலக்கொடி கடற்கரைச் சான்றிதழ்’ திட்டம் அறிமுகம்.
அயோத்திதாசர் பண்டிதர் குடியிருப்புகள் திட்டத்துக்கு `230 கோடி நிதி ஒதுக்கீடு.
தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும். இந்த நியோ டைடல் பூங்காக்கள்மூலம் 13,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
கடலோர வளங்களை மீட்டெடுக்க நெய்தல் மீட்சி இயக்கம் உருவாக்கப்படும்.
அலையாத்தி காடுகள், பவளப்பாறைகள், எண்ணூர் கழிமுகத்தை மேம்படுத்த `1,675 கோடி நிதி ஒதுக்கீடு.
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம், கோயம்பேடு – ஆவடி இடையே மெட்ரோ ரெயில் விரிவாக்கம். சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகளுக்காக `12,000 கோடி ஒதுக்கீடு.
நான்கு நகரங்களில் ஒலிம்பிக் அகாடமிகள் நிறுவப்படும்.
தமிழ்நாட்டில் முதன்முறையாக உலக புத்தொழில் மாநாடு நடத்தப்படும்.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை சேலம், திருச்சியில் பொது இடங்களில் இலவச Wi-Fi வசதி அமைக்கப்படும்.
மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு 6 இடங்களில் பாரா தடகள விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும். இராமநாதபுரத்தில் கடல்சார் நீர் விளையாட்டு மையம் அமைக்கப்படும்.
மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கு தயாராகும் 1,000 நபர்களுக்கு ஆறு மாத உண்டு உறைவிட பயிற்சி அளிக்கப்படும்.
கோயம்புத்தூரில் `1,100 கோடி செலவில் புதிய IT பூங்கா. 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் இது அதிகரிக்கப்படும்.
‘புதுமைப்பெண்’ திட்டத்துக்காக `370 கோடி நிதி ஒதுக்கீடு. அரசுப்பள்ளியில் பயின்று கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் `1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம் இந்த ஆண்டுமுதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
சிலப்பதிகாரம், மணிமேகலை நூல்களை 25 இந்திய மற்றும் உலக மொழிகளில் பொழிபெயர்க்க `2 கோடி ஒதுக்கீடு.
தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க `5 கோடி ஒதுக்கீடு.
`65 இலட்சம் செலவில் அழகன்குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
கீழடி (சிவகங்கை), வெம்பக்கோட்டை (விருதுநகர்), பொற்பனைக்கோட்டை (புதுக்கோட்டை) உள்ளிட்ட எட்டு இடங்களில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொள்ளப்படும். முசிறி (திருச்சிராப்பள்ளி), தொண்டி (இராமநாதபுரம்) ஆகிய இடங்களிலும் அகழ்வாய்வுப் பணிகள் நடத்தப்படும்.
கீழடியில் திறந்தவெளி அரங்கு `17 கோடி செலவில் அமைக்கப்படும்.
சிந்து சமவெளி நூற்றாண்டு கருத்தரங்கு சென்னையில் நடத்தப்படும்.
——————
2024-25ஆம் நிதியாண்டில் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு:
மொத்த வருவாய் வரவு: `2,99,010 கோடி.
மொத்த வருவாய் செலவினங்கள்: `3,48,289 கோடி.
வருவாய்ப்பற்றாக்குறை: `49,279 கோடி.
2023-24-ஆம் நிதியாண்டில் வருவாய்ப் பற்றாக்குறை (திருத்த மதிப்பீடு): `44,907 கோடி.
மூலதனச் செலவினம்: 2023-24: `42,532 கோடி.
2024-25 திட்ட மதிப்பீடு: `47,681 கோடி.
நிதிப்பற்றாக்குறை: `94,060 கோடியாக உயரும்.
——————
2024-25ஆம் நிதியாண்டில் மாநிலத்தின் வருவாய் வரவுகள் மீதான எதிர்பார்ப்பு:
மாநிலத்தின் சொந்த வரி வருவாய்: `1,95,173 கோடி.
முத்திரைத் தாள்- பதிவுக் கட்டணம்: `23,370 கோடி.
ஆயத்தீர்வை: `12,247 கோடி.
வாகன வரிகள் – `11,560 கோடி.
வணிகவரிகள்: `1,43,381 கோடி.
இதர பிரிவுகள்: `4,615 கோடி.
மொத்தம் – `1,95,173 கோடி.
மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய்: `30,728 கோடி.
மத்திய அரசிடமிருந்து உதவி மானியங்கள்: `23,354 கோடி.
மத்திய வரிகளில் பங்கு: `49,755 கோடி.
3. தமிழ்நாடு முதலிடம்!
ஏற்றுமதி தயார்நிலைக்குறியீட்டில் நாட்டிலேயே முதலிடம்.
மின்னணுப் பொருள்கள், மோட்டார் வாகனங்கள் உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முதலிடம்.
புத்தொழில் சூழல் அமைவுக்கான முன்னணி மாநிலம்.
தொழிற்சாலைகளில் பங்கேற்கும் மகளிரின் பங்கு நாட்டிலேயே முதன்மை.
உயர்கல்விச் சேர்க்கையில் நாட்டில் முதலிடம்.
தேசிய தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 146 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்று நாட்டிலேயே முதலிடம்.
4. தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்ற ‘மாபெரும் தமிழ்க்கனவு’ என்னும் 7 சிறப்பம்சங்கள்.
சமூக நீதி, கடைக்கோடி மனிதருக்கும் நல்வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமைவழிப் பயணம் மற்றும் தாய்த்தமிழும் தமிழர் பண்பாடும் ஆகிய ஏழு இலக்குகளை நிறைவேற்ற நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் வகுக்குப்பட்டுள்ளன.