Tnpsc Current Affairs in Tamil – 19th April 2024
1. சமீபத்தில், கடும் பொருளாதார சிக்கலில் சிக்கியுள்ள இந்திய மாநிலங்களில் முதலிடத்தில் உள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. குஜராத்
இ. கேரளா
ஈ. தெலுங்கானா
- மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் வேலைவாய்ப்பு பன்முகத்தன்மையால் அளவிடப்படும் பொருளாதார சிக்கலில் இந்திய மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. மொத்த மதிப்புக் கூட்டல் மற்றும் தொழிலாளர் படை ஆகியவற்றில் தமிழ்நாடு வேளாண் துறையின் பங்களிப்பு தேசிய சராசரியைவிட குறைவாக உள்ளது. இதற்கீடாக தொழில், சேவைகள் மற்றும் கட்டுமானத்தில் அதிக பங்களிப்பு செய்யப்படுகிறது. இச்சமச்சீர் பொருளாதாரம், தேசிய சராசரியுடன் ஒப்பிடும்போது, வேளாண்மையின்மீது குறைந்த சார்புநிலையை பிரதிபலிக்கிறது. இது தமிழ்நாட்டை ஒரு வலுவான பொருளாதார அமைப்பாக நிலைநிறுத்துகிறது.
2. ‘புரோபா-3’ திட்டத்துடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?
அ. CNSA
ஆ. ISRO
இ. JAXA
ஈ. ESA
- ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) புரோபா-3 திட்டமானது இந்தியாவின் முனையச் செயற்கைக்கோள் ஏவூர்தி (PSLV) மூலம் 2024 செப்டம்பரில் ஏவப்படவுள்ளது. இத்திட்டத்தில் விண்வெளியில் 144 மீ இடைவெளியில் சூரியனுடன் ஒத்திசைந்த இரண்டு செயற்கைக்கோள்கள் ஒன்றாக நிலைநிறுத்தப்படும். இச்செயற்கைக்கோள்கள் ஒன்றுக்கொன்று சூரிய வட்டுகளைத் தடுத்து, சூரியனின் மங்கலான கரோனாவைப் பார்க்க ஆராய்ச்சியாளர்களை அனுமதிக்கும். சூரியனின் மங்கலான கரோனாவை ஆராயும் உலகின் முதல் துல்லியமான திட்டம் இதுவாகும்.
3. அயல்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் நாட்டின் இறையாண்மைமிக்க பசுமைப் பத்திரங்களில் முதலீடுகளைச் செய்ய ஒப்புதல் அளித்துள்ள நிறுவனம் எது?
அ. RBI
ஆ. SIDBI
இ. நிதி அமைச்சகம்
ஈ. NABARD
- இந்திய ரிசர்வ் வங்கியானது சுற்றுச்சூழல் திட்டங்களுக்கு நிதியளிப்பதை நோக்கமாகக் கொண்டு, வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களை இறையாண்மைமிக்க பசுமைப் பத்திரங்களில் முதலீடுசெய்ய அனுமதித்துள்ளது. தட்ப வெப்பநிலை முன்னெடுப்புகளை ஆதரிப்பதற்காக அரசால் வழங்கப்படும் கடன்பத்திரங்களே இறையாண்மைமிக்க பசுமைப் பத்திரங்களாகும். மத்திய பட்ஜெட் 2022-23 இவ்வகை பசுமைப் பத்திரங்களை அறிமுகப்படுத்தியது.
4. அண்மையில், உலக எழுத்தாளர்கள் அமைப்பால் (WOW) உலக இலக்கியப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டவர் யார்?
அ. மஹாஸ்வேத தேவி
ஆ. மம்தா ஜி சாகர்
இ. அனிதா தேசாய்
ஈ. மஞ்சித் சிங்
- கன்னடக்கவிஞர் மம்தா ஜி சாகர் தனது இலக்கியப் பங்களிப்புகளுக்காக 2024 ஏப்ரலில் உலக எழுத்தாளர்கள் அமைப்பால் (WOW) வழங்கப்பட்ட உலக இலக்கியப் பரிசைப் பெற்றார். நைஜீரியாவின் அபுஜாவில், கடந்த 1981ஆம் ஆண்டில் சினுவா அச்செபேவால் நிறுவப்பட்ட நைஜீரிய எழுத்தாளர்களின் சங்க எழுத்தாளர்கள் நடத்தப்பட்ட உலக எழுத்தாளர்கள் அமைப்பின் விழாவின்போது இந்த விருது வழங்கப்பட்டது.
5. நொய்யல் ஆறு என்பது எந்த ஆற்றின் துணையாறாகும்?
அ. காவேரியாறு
ஆ. வைகையாறு
இ. தாமிரபரணி ஆறு
ஈ. பாலாறு
- தமிழ்நாட்டின் நொய்யல் ஆறு வெள்ளியங்கிரி மலையிலிருந்து உருவாகி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் பாய்ந்து காவிரியாற்றில் கலக்கிறது. நெகிழி மற்றும் கழிவுநீர் மாசால் இவ்வாறு பாதிக்கப்படுள்ளது. சாளுக்கிய மற்றும் சோழர் காலத்திய வரலாற்று நினைவுச்சின்னங்கள் அதன் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும், மத்திய அரசின் தேசிய ஆறுகள் மறுசீரமைப்பு நிதியத்தின் உதவியுடன், இந்த ஆறுக்கான மறுசீரமைப்பு முன்னெடுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.
6. 2024 – உலக பாரம்பரிய நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Discover and Experience Diversity
ஆ. Heritage Changes
இ. Complex Pasts: Diverse Futures
ஈ. Heritage and Climate
- உலகளவில் கலாச்சார தளங்களை மதிக்கும் நோக்கோடு ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல்.18 அன்று உலக பாரம்பரிய நாள் கொண்டாடப்படுகிறது. UNESCOஆல் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியத்தை பறைசாற்றும் நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான இந்நாள், குறிப்பிடத்தக்க கலாசார முக்கியத்துவம் வாய்ந்த தளங்களைக் கொண்டாடுகிறது. 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “பன்முகத்தன்மையைக் கண்டறிந்து அனுபவியுங்கள் – Discover and Experience Diversity” என்பதாகும். இது பல்வேறு கலாசாரங்கள், மரபுகள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புரிந்துகொள்வதை வலியுறுத்துகிறது.
7. அண்மையில், நாட்டின் முதல் ஒலியியல் தன்மை மற்றும் மதிப்பீட்டிற்கான அதிநவீன நீர்மூழ்கித்தளம் (SPACE) திறக்கப்பட்ட மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. மகாராஷ்டிரா
ஈ. ஒடிஸா
- கேரளத்தின் இடுக்கியில் உள்ள குளமாவு நீரடி ஒலி ஆராய்ச்சி அமைப்பில் அதிநவீன நீர்மூழ்கித்தளம் (SPACE) அமைக்கப்பட்டுள்ளது. DRDOஇன் கடற்படை இயற்பியல் மற்றும் கடலியல் ஆய்வகத்தால் அமைக்கப்பட்ட SPACE, கப்பல்கள், நீர்மூழ்கிக்கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்தியக் கடற்படையின் சோனார் அமைப்புகளுக்கு முதன்மையான சோதனை மற்றும் மதிப்பீட்டு மையமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது, தண்ணீரின் மேற்பரப்பில் மிதக்கும் ஒரு தளம், விஞ்ச் அமைப்புகளைப் பயன்படுத்தி 100 மீட்டர் வரை எந்த ஆழத்திற்கும் இறக்கக்கூடிய நீர்மூழ்கித்தளம் என இரண்டு தனித்துவமான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும். இதன்மூலம் செயல்பாடுகள் முடிந்ததும், நீர்மூழ்கித்தளத்தை மேலே தூக்கி மிதக்கும் தளத்துடன் இணைக்கலாம்.
8. அண்மையில், பின்வரும் எந்த மாநிலத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் குழுவால் ஒரு தனித்துவமான இரும்புக் காலத்திய பெருங்கற்காலத்து தளம் கண்டுபிடிக்கப்பட்டது?
அ. தமிழ்நாடு
ஆ. தெலுங்கானா
இ. திரிபுரா
ஈ. மத்திய பிரதேசம்
- தெலுங்கானா மாநிலம், முலுகு மாவட்டத்தில், எஸ் எஸ் தட்வாய் மண்டலத்தில் உள்ள பந்தலா கிராமத்திற்கு அருகில் உள்ள ஊரகுட்டா என்ற இடத்தில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஒரு தனித்துவமான இரும்புக்காலத்திய பெருங்கற்காலத்து தளத்தைக் கண்டுபிடித்தனர். பொ ஆ மு 1200 முதல் பொ ஆ மு 600 வரையிலும் இரும்புக்காலம் நிலவியது. அப்போது மனிதர்களால் இரும்பாலான கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இந்தக் காலகட்டம் விவசாயத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைக் கண்டது; குறிப்பாக இரும்புக்கலப்பைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, விவசாயத் திறனை மேம்படுத்தியது.
9. அண்மையில், விண்வெளித் துறைக்கான புதிய அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
அ. உள்துறை அமைச்சகம்
ஆ. பாதுகாப்பு அமைச்சகம்
இ. நிதி அமைச்சகம்
ஈ. மின்சார அமைச்சகம்
- விண்வெளித்துறைக்கான புதிய அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிமுறைகளை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்நிய செலாவணி மேலாண்மை (கடனல்லா கருவிகள்) (3ஆவது திருத்தம்) விதிகள், 2024 அந்நிய செலாவணி மேலாண்மை (கடனல்லா கருவிகள்) விதிகள், 2019ஐ மாற்றியமைக்கிறது. இந்த விதிகள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டம் (FEMA), 1999இன்கீழ் செயல்படுகின்றன. திருத்தப்பட்ட அந்நிய நேரடி முதலீட்டு கொள்கை ஆனது, செயற்கைக்கோள் நிறுவுதல் மற்றும் செயல்பாட்டிற்கான முந்தைய ஒப்புதல் வழிமுறையை மாற்றியமைத்து, இந்திய விண்வெளிக் கொள்கை, 2023இன்மூலம் 100% FDIஐ அனுமதிக்கிறது.
10. அண்மையில் உலக மக்கள்தொகை நிலை – 2024 என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. உலக வங்கி
ஆ. ஐநா மக்கள்தொகை நிதியம் (UNFPA)
இ. ஐநா சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் (UNICEF)
ஈ. ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP)
- ஐநா மக்கள்தொகை நிதியம் (UNFPA) 2024 ஏப்ரலில் 2024-உலக மக்கள்தொகை அறிக்கையை வெளியிட்டது. 144.17 கோடி மக்கள்தொகையுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது; இந்த எண்ணிக்கை அடுத்த 77 ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 68% மக்கள் 15-64 வயதுடையவர்களாவர். மொத்த கருவுறுதல் விகிதம் 2.0 ஆக உள்ளது. பிறக்கும்போது எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் முறையே 71 மற்றும் 74 ஆண்டுகளாக உள்ளது. சிறார் திருமண விகிதங்கள் 23%ஆக உள்ளது.
- மாற்றுத்திறனாளி பெண்கள் பாலின அடிப்படையிலான வன்முறையை 10 மடங்கு அதிகமாக எதிர்கொள்கின்றனர். 30 வருட SRH முன்னேற்றம் இருந்தபோதிலும், விளிம்புநிலை சமூகங்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகின்றன.
11. அண்மையில், உலக எதிர்கால ஆற்றல் உச்சிமாநாடு – 2024 நடத்தப்பட்ட இடம் எது?
அ. அபுதாபி
ஆ. லண்டன்
இ. பாரிஸ்
ஈ. புது தில்லி
- 16ஆவது உலக எதிர்கால ஆற்றல் உச்சிமாநாடானது 2024 ஏப்.16-18 வரை ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் உள்ள ADNEC மையத்தில் நடைபெற்றது. இம்மாநாடு உலகளாவிய ஆற்றல் மாற்றம், சுத்தமான எரிசக்தி முதலீடு மற்றும் நிலையான எதிர்காலம் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. இம்மாநாட்டில் பெண் தொழில்முனைவோர் குழு டிகார்பனைசேஷன் கண்டுபிடிப்புகளை முன்னெடுத்தது. மஸ்தரின் தாய் நிறுவனமான முபதாலா, அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் (ADNOC) மற்றும் உடைமை நிறுவனமான ADQஉடன் இணைந்து, எரிபொருளின் பசுமை மற்றும் நீல வகைகளை உருவாக்குவதற்கான ஹைட்ரஜன் கூட்டணியை உருவாக்க ஒப்புக்கொண்டது.
12. சமீபத்தில், நாட்டின் முதல் நடமாடும் மருத்துவ சாதனங்களின் அளவுத்திருத்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ள ஐஐடி நிறுவனம் எது?
அ. ஐஐடி கான்பூர்
ஆ. ஐஐடி மெட்ராஸ்
இ. ஐஐடி பாம்பே
ஈ. ஐஐடி ரூர்க்கி
- சுகாதார அணுகலை மேம்படுத்துவதற்காக நாட்டின் முதல் நடமாடும் மருத்துவ சாதன அளவுத்திருத்த வசதியை மெட்ராஸ் ஐஐடி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. அனைவருக்கும் IIT-M என்ற திட்டத்தின கீழ் உருவாக்கப்பட்ட இது, துல்லியமான நோயறிதல் மற்றும் சிகிச்சைகளைப் பரிந்துரைக்கும் மருத்துவ கருவிகளில் மிகத்துல்லியமான முறையில் அளவுத்திருத்தம் மேற்கொள்ளும். இம்முன்னெடுப்பு ஐநா SDG-3 உடன் ஒத்திசைந்து போகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இந்த ஆண்டின் சிறந்த நிழற்படம்…
காஸா துயரத்தைப் பிரதிபலிக்கும் நிழற்படம், ‘வேல்ர்ட் பிரஸ்’ நிழற்பட அறக்கட்டளையால் இந்த ஆண்டுக்கான சிறந்த நிழற்படமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்படத்தை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன நிழற்படக்கலைஞர் முகமது சலீம் கடந்த அக்டோபர்.17இல் எடுத்துள்ளார். அந்தப்படத்தில், காஸாவின் கான் யூனிஸ் நகரில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தாயுடன் உயிரிழந்த குழந்தையின் உடலை அவரது உறவினர் சோகத்துடன் ஏந்தியிருக்கும் காட்சி இடம் பெற்றுள்ளது. அப்படம், காஸா போரின் பாதிப்பை ஆணித்தரமாக வெளிப்படுத்துவதாக விருதுக்கான தேர்வுக்குழு தெரிவித்துள்ளது.