Tnpsc Current Affairs in Tamil – 18th March 2024
1. அண்மையில், இந்தியக் குடியரசுத்தலைவர் முர்முவுக்கு சிவில் சட்டத்தின் கௌரவ முனைவர் பட்டத்தை அளித்த பல்கலைக்கழகம் எது?
அ. சிகாகோ பல்கலைக்கழகம்
ஆ. மொரீஷியஸ் பல்கலைக்கழகம்
இ. மெல்போர்ன் பல்கலைக்கழகம்
ஈ. பென்சில்வேனியா பல்கலைக்கழகம்
- மொரீஷியஸ் பல்கலைக்கழகம் இந்தியக்குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிவில் சட்டத்திற்கான கௌரவ முனைவர் பட்டத்தை வழங்கியுள்ளது. இந்தியத்திருநாட்டை நாளைய அறிவுசார் பொருளாதாரத்திற்கு இட்டுச்செல்ல இளைஞர்களுக்கு கல்வி மற்றும் அதிகாரமளிப்பதை இந்திய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருகிறது என்று குடியரசுத்தலைவர் கூறினார். இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு திட்டத்தின்கீழ் ஒவ்வோர் ஆண்டும் 400 மொரீஷியஸ் மாணவர்கள் இந்தியாவில் பயிற்சி பெறுவதையும், சுமார் 60 மொரீஷியஸ் மாணவர்கள் இந்தியாவில் உயர்கல்வியைத் தொடர உதவித்தொகை பெறுவதையும் அவர் குறிப்பிட்டார்.
2. அண்மையில் வெளியிடப்பட்ட CEEWஇன் அறிக்கையின்படி, பின்வரும் எந்த மாநிலங்கள் நீர் மேலாண்மையில் முன்னணியில் உள்ளன?
அ. தமிழ்நாடு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா
ஆ. மத்திய பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட்
இ. ஹரியானா, கர்நாடகா மற்றும் பஞ்சாப்
ஈ. உத்தர பிரதேசம், குஜராத் மற்றும் இராஜஸ்தான்
- ஆற்றல், சுற்றுச்சூழல் & நீருக்கான கவுன்சிலால் (CEEW) வெளியிடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட நீரின் மேலாண்மை பற்றிய அறிக்கையின்படி, ஹரியானா, கர்நாடகா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் நாட்டிலேயே முன்னணியில் உள்ளன. நிலத்தடி நீர்மட்டம் குறையும்போது நகர்ப்புற நீரின் தேவையும் அதிகரிக்கிறது என இந்த அறிக்கை தெரிவித்துள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேம்படுத்தப்பட்ட நன்னீராக்கல் முறையும் மறுபயன்பாட்டு உட்கட்டமைப்பும் தேவைப்படுகிறது. போதிய நிதியில்லாத காரணத்தால் 90% நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இவ்வாறான உட்கட்டமைப்புகளை நிறுவ இயலாமல் உள்ளன. பயன்படுத்தப்பட்ட 72,000 மில்லியன் லிட்டர் நீரில் 28% மட்டுமே சுத்திகரிக்கப்படுகிறது என இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3. அண்மையில், இந்தியப் பிரதமரால் கீழ்காணும் எந்த இடத்தில் பெட்ரோநெட் LNGஇன் பெட்ரோ கெமிக்கல்ஸ் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது?
அ. நரிமணம், நாகப்பட்டினம்
ஆ. புனே, மகாராஷ்டிரா
இ. தஹேஜ், குஜராத்
ஈ. வாரணாசி, உத்தர பிரதேசம்
- பிரதமர் நரேந்திர மோதி குஜராத் மாநிலம் தஹேஜில் பெட்ரோநெட் திரவ இயற்கை எரிவாயுவின் பெட்ரோ ரசாயன வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார். `20,600 கோடி மதிப்பிலான இது நாட்டில் ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் பாலிப்ரொப்பிலீனுக்கான தேவையை அதிகரிக்க உதவும். இது ஈத்தேன் மற்றும் புரோபேன் கையாளும் வசதிகளை உள்ளடக்கியதாக உள்ளது. மேலும், குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் 50 பாரதிய மக்கள் மருந்தக மையங்களை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
4. SIPRI அறிக்கையின்படி, 2019-2023 வரை உலகின் முன்னணி ஆயுத இறக்குமதியாளராக உள்ள நாடு எது?
அ. ரஷ்யா
ஆ. உக்ரைன்
இ. இஸ்ரேல்
ஈ. இந்தியா
- ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் (SIPRI) அறிக்கையின்படி, 2014-2018 முதல் 2019-2023 வரை 4.7% வளர்ச்சியுடன் இந்தியா உலகளாவிய ஆயுத இறக்குமதியில் முன்னணியில் உள்ளது. ரஷ்யா, இந்தியாவிற்கான முதன்மை ஆயுத விநியோகஸ்தராக உள்ளது; ஆனால் ரஷ்யாவின் பங்கு 1960-64க்குப் பிறகு முதன்முறையாக 50%க்கும் கீழே சரிந்துள்ளது. இந்தியா தனது ஆயுத இறக்குமதியில் 36% ரஷ்யாவில் இருந்து பெறுகிறது. ஐரோப்பாவின் 55 சதவீத ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
- ஜப்பானின் ஆயுத இறக்குமதி 155%உம் தென்கொரியாவின் இறக்குமதி 6.5%உம் அதிகரித்துள்ளது. சீனாவின் ஆயுத இறக்குமதி 44% குறைந்துள்ளது.
5. அண்மையில் எந்த நாட்டுடனான கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை (JETCO) நிறுவுவதற்கான நெறிமுறையில் இந்தியா கையெழுத்திட்டது?
அ. கியூபா
ஆ. டொமினிகன் குடியரசு
இ. ஜமைக்கா
ஈ. அங்கோலா
- இந்தியா மற்றும் டொமினிகன் குடியரசு இடையே கூட்டுப் பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவை (Joint Economic and Trade Committee – JETCO) நிறுவுவதற்கான நெறிமுறை, சாண்டோ டொமிங்கோவில் உள்ள டொமினிகன் குடியரசின் வெளியுறவு அமைச்சக அலுவலகத்தில் கையெழுத்தானது. டொமினிகன் குடியரசின் வெளியுறவு அமைச்சர் இராபர்டோ அல்வாரெஸ் மற்றும் டொமினிகன் குடியரசுக்கான இந்தியத்தூதர் இராமு அபகானி ஆகியோர் வர்த்தகத் துறையின் சார்பில் இந்த நெறிமுறையில் கையெழுத்திட்டனர்.
- இருநாடுகளுக்கும் இடையே சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்தற்கான தளத்தை இந்நெறிமுறை வழங்கும். டொமினிகன் குடியரசிலிருந்து இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்து வருகிறது. அந்த நாட்டுக்கு மருந்துகள், கடல் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், 2 மற்றும் 3 சக்கர வாகனங்கள் போன்றவற்றை இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
6. அண்மையில், உணவுப் பாதுகாப்புத் துறையில் இந்தியா எந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்தது?
அ. பூடான்
ஆ. நேபாளம்
இ. மியான்மர்
ஈ. இலங்கை
- பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கும் (FSSAI) பூடான் உணவு மற்றும் மருந்து ஆணையத்துக்கும் இடையே உணவுப் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- இந்த ஒப்பந்தத்தின்மூலம், இரு நாடுகளுக்கும் இடையே இத்துறையில் எளிதில் வர்த்தகம் நடைபெற வழிவகுக்கும். பூடான் உணவு & மருந்து ஆணையம், இந்தியாவுக்கு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும்போது, இந்திய உணவுப் பாதுகாப்பு & தரநிர்ணய ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை உறுதிசெய்து அதற்கான சான்றிதழை வழங்கும். இது எளிதாக வர்த்தகம் நடைபெறுவதை ஊக்குவிப்பதுடன், இருதரப்பிலும் செலவுகளைக் குறைக்கும்.
7. பெரும்பாக்கம் ஈரநிலம் அமைந்துள்ள மாவட்டம் எது?
அ. சென்னை
ஆ. செங்கல்பட்டு
இ. காஞ்சிபுரம்
ஈ. திருவள்ளூர்
- கோணமூக்கு உள்ளான்களுக்காக பெயர்பெற்ற பெரும்பாக்கம் ஈரநிலம் தற்போது வறட்சியை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக ஆண்டுதோறும் அங்கு வலசைவரும் கோணமூக்கு உள்ளான்கள் பாதிக்கக்கூடும். பெரிதாக கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் நீரில் நடந்து திரியும் கரையோரப் பறவைகளான கோணமூக்கு உள்ளான்கள் (Recurvirostra avosetta) மிதமான ஐரோப்பா, மத்திய ஆசியா மற்றும் ரஷ்ய தூர கிழக்கு நாடுகளில் இனப்பெருக்கம் செய்பாவையாகும். அவை ஆப்பிரிக்கா அல்லது தெற்காசியாவில் குளிர்காலத்தை கழிக்கும் வலசை பறவைகளாகும்.
- அவை ஆழமற்ற நீர், ஈரநிலங்கள், கடலோர தடாகங்கள் மற்றும் பிற ஈரநிலங்களில் தட்டையான, திறந்த பகுதிகளில் கூடுகட்டுகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பெரும்பாக்கம் ஈரநிலப்பகுதி என்பது சென்னையின் ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
8. வஜ்ரா சென்டினல் அமைப்புடன் தொடர்புடையது எது?
அ. டிரோன் எதிர்ப்பு அமைப்பு
ஆ. பண்டைய நீர்ப்பாசன நுட்பம்
இ. புதிய திடக்கழிவு மேலாண்மை நுட்பம்
ஈ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
- வஜ்ரா சென்டினல் அமைப்பு என்பது ஒரு டிரோன் எதிர்ப்பு தொழில்நுட்பமாகும். இது டிரோன்களைக் கண்டறியவும், கண்காணிக்கவும் மற்றும் செயலற்றதாக ஆக்குவதற்கும் பயன்படுத்தப்படும். இந்த அமைப்பு ஆளில்லா வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்புடன் தொடர்புடையதாகும். பிக் பேங் பூம் சொல்யூஷன்ஸ் (BBBS) மூலம் உருவாக்கப்பட்ட வஜ்ரா சென்டினல் அமைப்பானது தற்போது இந்திய இராணுவம் மற்றும் வான்படையுடனான ஒப்பந்தத்தை ஈர்த்துள்ளது. டிரோன்களை அடையாளம் காணவும் கண்காணிக்கவும் இந்த அமைப்பு செயலற்ற ரேடியோ அலைவரிசை உணரிகளைப் பயன்படுத்துகிறது. பாதுகாப்பு அமைச்சகம் அண்மையில் iDEX (இந்திய பாதுகாப்பு கண்காட்சி) முன்னெடுப்பின்கீழ், வஜ்ரா சென்டினல் அமைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
9. 2019-22ஆம் ஆண்டிற்கான, ’இந்தியாவின் மீன்வளம், கால்நடைத்துறைகளில் AMR கண்காணிப்பு’ குறித்த முதல் தேசிய அறிக்கையை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
அ. WHO
ஆ. FAO
இ. UNESCO
ஈ. UNEP
- இந்தியாவின் மீன்வளம் மற்றும் கால்நடைத்துறைகளில் (2019-22) AMR கண்காணிப்பு குறித்த FAOஇன் முதல் தேசிய அறிக்கையானது, உணவு விலங்கு உற்பத்தியில் நுண்ணுயிர்க்கொல்லி எதிர்ப்பியை (AMR) இயக்குவதில் நோய்க்கிருமி கட்டுப்படுத்தியின் பயன்பாட்டின் முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.
- குளோராம்பெனிகால்போன்ற குறைவாகப் பயன்படுத்தப்படும் நோய்க்கிருமி கட்டுப்படுத்திகளுக்கு குறைந்த எதிர்ப்பு நிலைகள் காணப்படுகின்றன; ஆனால் மேக்ரோலைடுகள் மற்றும் குயினோலோன்களுக்கு குறிப்பிடத்தக்க எதிர்ப்பு நிலை உள்ளது. மீன்வளர்ப்பு மற்றும் கால்நடை உற்பத்தியில் நுண்ணறிவுமிக்க நோய்க்கிருமி கட்டுப்படுத்திகளின் பயன்பாட்டின் அவசியத்தை இந்த அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
10. 2024 – உலக ஆறுகள் பாதுகாப்பு நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. The Importance of Rivers for Biodiversity
ஆ. Rights to Rivers
இ. Water for All
ஈ. Accelerating Change
- ஆண்டுதோறும் மார்ச்.14 அன்று உலக ஆறுகள் பாதுகாப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Water for All” என்பதாகும். சுத்தமான தண்ணீருக்கான உலகளாவிய அணுகலை இந்தக் கருப்பொருள் சிறப்பிக்கிறது. 1997ஆம் ஆண்டு பிரேசிலில் உள்ள குரிடிபாவில், அணைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் முதல் சர்வதேச கூட்டம் நடைபெற்றது. அப்போது 20 நாடுகளைச்சேர்ந்த நிபுணர்கள் மார்ச் 14ஆம் தேதியை, “உலக ஆறுகள் பாதுகாப்பு நாள்” என்று அறிவித்தனர். சுற்றுச்சூழல் உணர்வுள்ள நீர்நிலைகள் மற்றும் ஆறுகளின் சீரழிவை எதிர்த்துப் போராடுவதே இந்த நாளின் நோக்கமாகும்.
11. 2024 – மின்சார வாகன ஊக்குவிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
அ. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம்
ஆ. கனரக தொழிற்துறை அமைச்சகம்
இ. மின்சார அமைச்சகம்
ஈ. புவி அறிவியல் அமைச்சகம்
- இந்தியாவில் மின்சார வாகனங்களை மக்கள் வாங்குவதை ஊக்குவிப்பதற்காக, இந்திய அரசாங்கத்தின் கனரக தொழிற்துறை அமைச்சகம், 2024 மார்ச்சில், Electric Mobility Promotion Scheme-2024 (EMPS 2024) ஐ அறிவித்தது. மொத்தம் `500 கோடி மதிப்பிலான இந்தத் திட்டம் 2024 ஏப்ரல் முதல் 2024 ஜூலை வரை நடப்பில் இருக்கும். இத் திட்டம் இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வாங்க உதவும். இத்திட்டத்தில் இருசக்கர வாகனங்களுக்கு `10,000/-உம், சிறிய மூன்று சக்கர வாகனங்களுக்கு `25,000/-உம் மானியம் வழங்கப்படும். 2024 மார்ச்.31 வரை விற்கப்படும் மின்சாரத்தில் இயங்கும் இரு, மூன்று மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இந்த மானியங்கள் தகுதியானவை.
12. அண்மையில், இந்தியா-இத்தாலி இராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 12ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. புது தில்லி
ஆ. சென்னை
இ. சண்டிகர்
ஈ. பெங்களூரு
- இந்தியா-இத்தாலி இராணுவ ஒத்துழைப்புக் குழுவின் 12ஆவது கூட்டம் 2024 மார்ச் 12-13 அன்று புது தில்லியில் நடைபெற்றது. இரண்டு நாள் கூட்டத்தில் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான புதிய முயற்சிகள் மற்றும் இருநாட்டு இராணுவத்துக்கும் இடையேயான பரிமாற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. முன்மொழியப்பட்ட புதிய முன்னெடுப்புகள் / முயற்சிகள் குறித்து இருதரப்பினரும் அப்போது திருப்தி தெரிவித்தனர்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. பாரா வில்வித்தை வீராங்கனை ஷீத்தல் தேவிக்கு மற்றொரு கௌரவம்.
சிறந்த பாரா வில்வித்தை வீராங்கனையும், ‘அர்ஜுனா’ விருதாளருமான ஷீத்தல் தேவியை மாற்றுத்திறனாளிகள் பிரிவில், ‘தேசிய அடையாளமாக’ இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.