Tnpsc Current Affairs in Tamil – 18th April 2024
1. பாரத மின்னணு நிறுவனமானது (BEL) அண்மையில் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைப்புக்காக கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
அ. ஐஐடி மண்டி
ஆ. ஐஐடி மெட்ராஸ்
இ. ஐஐடி கான்பூர்
ஈ. ஐஐடி பம்பாய்
- பாரத் மின்னணு நிறுவமானது ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத்தில் கூட்டிணைந்து பணியாற்றுவதற்காக இமாசல பிரதேச மாநிலத்தில் உள்ள மண்டியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் குறைக்கடத்திகள், குவாண்டம் தொழினுட்பங்கள் மற்றும் டிரோன்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இது BEL மற்றும் IIT-மண்டிக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதையும், BEL அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் தீர்வுகளின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. டைகர் ஹில் என்பது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள எந்த வனவிலங்கு சரணாலயத்தின் ஒருபகுதியாகும்?
அ. செஞ்சல் வனவிலங்கு சரணாலயம்
ஆ. சஜ்நேகாலி வனவிலங்கு சரணாலயம்
இ. ஜோர் போக்ரி வனவிலங்கு சரணாலயம்
ஈ. ராம்நாபகன் வனவிலங்கு சரணாலயம்
- கொல்கத்தாவில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கிழக்கு மண்டல அமர்வு, டைகர் ஹில்லின் சுற்றுச்சூழல் சீரழிவு குறித்து டார்ஜிலிங் மாவட்ட நிர்வாகம், நடுவண் அரசு மற்றும் மாநில அரசின் முக்கிய துறைகளுக்கு அறிவிப்பானை அனுப்பியுள்ளது. மனுதாரர் சுபாஸ் தத்தாவின் புகார்கள், தனித்துவம் மிக்க டைகர் ஹில்லிற்கு தீங்கு விளைவிக்கும் செயல்களை மேற்கோள் காட்டி, மனு அளித்ததன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செஞ்சல் வனவிலங்கு சரணாலயத்தின் ஒருபகுதியான டைகர் ஹில், கஞ்சஞ்சங்கா மலையின் மீதிலிருந்து சூரிய உதயக் காட்சிகளைக் காண்பதற்கு ஏற்ற இடமாகும். கடந்த 1915ஆம் ஆண்டி இது நிறுவப்பட்டது.
3. ஒவ்வோர் ஆண்டும், ‘உலக இரத்தம் உறையா நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. ஏப்ரல்.16
ஆ. ஏப்ரல்.17
இ. ஏப்ரல்.18
ஈ. ஏப்ரல்.19
- உலக இரத்தம் உறையா நாள், ஆண்டுதோறும் ஏப்ரல்.17 அன்று அனுசரிக்கப்படுகிறது. இது ஹீமோபிலியா மற்றும் இரத்தப்போக்கு கோளாறுகள்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மரபணு குறைபாடு அல்லது தன்னுடல் தாக்குநோய் காரணமாக இரத்தத்தை உறையச் செய்யும் குருதிநீர்மக் காரணிகளின் செயல்பாடு குன்றுவதால், இந் நோய் உண்டாகிறது. உடலில், உள் மற்றும் வெளிக்காயங்கள் ஏற்படும் போது இரத்தம் உறையாமல் தொடர்ந்து குருதிப்பெருக்கு ஏற்படுவதால் உயிர் அபாயம் உள்ள நோய்களில் இதுவும் ஒன்று. 2024ஆம் ஆண்டில் வரும் இந்த நாளுக்கானக் கருப்பொருள், “Equitable access for all: recognizing all bleeding disorders” என்பதாகும்.
4. புளூ ஆர்ஜின் NS-25 திட்டத்தின்கீழ் சுற்றுலாப் பயணியாக விண்வெளிக்குச் செல்லும் முதல் இந்தியர் யார்?
அ. கோபி தோட்டக்குரா
ஆ. சந்தோஷ் குளங்கரா
இ. ராஜீவ் அகர்வால்
ஈ. சஞ்சய் சின்ஹா
- ஜெப் பெசோஸால் நிறுவப்பட்ட புளூ ஆர்ஜினின் NS-25 திட்டத்தின்கீழ் சுற்றுலாப் பயணியாக விண்வெளிக்குச் செல்லவுள்ள முதல் இந்தியராக கோபி தோட்டகுரா வரலாறு படைக்கவுள்ளார். இந்த விண்வெளிப் பயணம் துணை சுற்றுப்பாதை மற்றும் சுற்றுப்பாதை பயணங்கள் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. துணை சுற்றுப்பாதைக்குச் செல்லும் கலங்களான NS-25போன்றவை பூமிக்குத் திரும்புதற்குமுன் கார்மன் கோட்டை (~100 கிமீ) தாண்டிச்செல்கின்றன.
5. அண்மையில், ஏவுகல எஞ்சின்களுக்கான கார்பன்-கார்பன் (C-C) முனையை (nozzle) உருவாக்கிய அமைப்பு எது?
அ. ISRO
ஆ. DRDO
இ. BHEL
ஈ. HAL
- விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உருவாக்கிய இலகுரக கார்பன்-கார்பன் முனையை வெளியிட்டு, ஏவுகல எஞ்சின் தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க மேம்பாட்டை ISRO அறிவித்தது. உந்தல் நிலைகள், குறிப்பிட்ட உந்துதல் மற்றும் உந்துதல்-எடை விகிதங்கள்போன்ற முக்கியமான அளவுருக்களை மேம்படுத்துவதன்மூலம் தாங்குசுமை திறனை அதிகரிக்க இம்மேம்பாடு உறுதியளிக்கிறது. கார்பன்-கார்பன் கலவைகள்போன்ற மேம்பட்ட பொருட்களை பயன்படுத்தியதன்மூலம், விதிவிலக்கான பண்புகளுடன் இந்த முனையை வடிவமைக்கப்பட்டுள்ளது.
6. IMFஇன்படி, 2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பு என்ன?
அ. 5.1%
ஆ. 6.8%
இ. 7.1%
ஈ. 4.5%
- IMF ஆணாது 2024-25 நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சிக்கணிப்பை அதன் முந்தைய முன்கணிப்பிலிருந்து 30 அடிப்படைப் புள்ளிகள் அதிகரித்து 6.8%ஆக உயர்த்தியுள்ளது. வலுவான உள்நாட்டு தேவை மற்றும் அதிகரித்துவரும் உழைக்கும் வயது மக்கள்தொகை காரணமாக இந்தியாவின் வளர்ச்சி வலுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில், 2024-25 நிதியாண்டு மற்றும் 2025-26 நிதி ஆண்டுக்கு 3.2% வளர்ச்சி தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே காலகட்டத்தில் சீனாவின் வளர்ச்சிக்கணிப்பு 4.6%ஐ விஞ்சி, உலகின் மிகவேகமாக வளரும் பொருளாதாரம் என்ற நிலையை இந்தியா தக்கவைத்துள்ளது.
7. எந்த ஆண்டுக்குள் குப்பைகள் இல்லாத விண்வெளி என்ற நிலையை அடைய ISRO முடிவுசெய்துள்ளது?
அ. 2025
ஆ. 2027
இ. 2030
ஈ. 2035
- ISRO தலைவர் S சோமநாத், 42ஆவது IADC ஆண்டு கூட்டத்தில், 2030ஆம் ஆண்டுக்குள் குப்பைகள் இல்லாத விண்வெளியை அடைவதற்கான இந்தியாவின் இலட்சியத்தை அறிவித்தார். விண்வெளித்துறையின் செயலரான S சோமநாத், விண்வெளி நிலைத்தன்மைக்கான குப்பைகளில்லா பணிகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். இந்த முன்முயற்சியானது தூய்மையான விண்வெளி சூழலை அடைவதற்கான விவாதங்களையும் செயல்களையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. ‘கையா-BH3 (Gaia-BH3)’ என்றால் என்ன?
அ. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
ஆ. அணுவாற்றல் திறனுடைய நீர்மூழ்கிக்கப்பல்
இ. ஆக்கிரமிப்பு களை
ஈ. மிகப்பெரிய விண்மீன்சார் கருந்துளை
- பால்வீதியில் அறியப்பட்ட மிகப்பெரிய விண்மீன்சார் கருந்துளையான, ‘Gaia-BH3’ஐ வானியலாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர். கையா திட்டத்தின் தரவுமூலம் கண்டுபிடிக்கப்பட்ட இது அதன் துணை விண்மீனில் அசாதாரண ‘தள்ளாடலை’ ஏற்படுத்துகிறது. ஆய்வகங்களால் உறுதிப்படுத்தப்பட்ட இது, நமது சூரியனைவிட 33 மடங்கு நிறை கொண்டதாக உள்ளது. இது அக்விலாவில் 1,926 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது. அருகிலுள்ள மற்றொரு கருந்துளையான கையா-BH1, கிட்டத்தட்ட 10 சூரிய நிறைகளைக் கொண்டுள்ளது. தனுசு A* தான் பால்வெளியின் மிகப்பெரிய கருந்துளையாக இருந்து வருகிறது.
9. அண்மையில், கீழ்காணும் எவ்விடத்தில், ‘Emerging Technologies and Challenges for Exoskeleton’ என்ற முதல் சர்வதேச பயிலரங்கை DRDO ஏற்பாடு செய்தது?
அ. பெங்களூரு
ஆ. சென்னை
இ. ஹைதராபாத்
ஈ. பம்பாய்
- DRDO ஏற்பாடு செய்துள்ள, ‘Emerging Technologies and Challenges for Exoskeleton’ என்ற தலைப்பிலான சர்வதேச பயிலரங்கை பெங்களூரு நடத்துகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையின் செயலாளரான டாக்டர் சமீர் வி காமத்தால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த நிகழ்வு, இராணுவ மற்றும் சிவிலியன் மண்டலங்களில் புறச்சட்டக தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. Lt Gen JP மேத்யூ அதன் வரலாறு, சவால்கள் மற்றும் இரட்டைப் பயன்பாட்டுத் திறன்குறித்துப்பேசினார்.
10. அண்மையில், ஒருங்கிணைந்த கடல்சார் படைகள் (CMF) தலைமையிலான நடவடிக்கையின் ஒருபகுதியாக அரபிக்கடலில் 940 கிகி போதைப்பொருட்களை கைப்பற்றிய இந்திய கடற்படைக் கப்பல் எது?
அ. INS காவேரி
ஆ. INS சக்தி
இ. INS தல்வார்
ஈ. INS வீர்
- இந்திய கடற்படைக் கப்பலான INS தல்வார், ஒருங்கிணைந்த கடல்சார் படைகள் நடவடிக்கையின்கீழ் அரபிக்கடலில் 940 கிகி போதைப்பொருளை தடுத்து கைப்பற்றியது. பக்ரைனைத் தலைமையிடமாகக் கொண்ட ஒருங்கிணைந்த கடல்சார் படைகள், 3.2 மில்லியன் ச.மைல் கடற்பரப்பில், கப்பல் வழித்தடங்களைப் பாதுகாக்கிறது. இது பயங்கர வாதம், கடற்கொள்ளையைத் தடுப்பதோடு பிராந்திய ஒத்துழைப்பை வளர்க்கிறது; மேலும் கடல்சார் பாதுகாப்பையும் இது உறுதி செய்கிறது.
11. தமிழ்நாட்டின் எந்த மாவட்டத்தில் வீராணம் ஏரி அமைந்துள்ளது?
அ. சென்னை
ஆ. செங்கல்பட்டு
இ. கடலூர்
ஈ. திருநெல்வேலி
- சென்னையின் குடிநீர் விநியோகத்திற்கு முதன்மை ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி, 2024 ஏப்ரலில் சுழிய மில்லியன் கன அடியை எட்டியதாக சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, 687.40 மில்லியன் கன அடியாக அதன் கொள்ளளவு இருந்த. அதன் மொத்த கொள்ளளவு 1,465 மில்லியன் கன அடியாகும். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள இது மனிதனால் உருவாக்கப்பட்ட உலகின் மிக நீளமான (14 கிமீ) ஏரிகளில் ஒன்றாகும்.
- இந்த ஏரி பொ ஆ 907-955-க்கு இடைப்பட்ட காலத்தில் சோழ யுவராஜன் இராஜாதித்த சோழனால் கட்டப்பட்டது ஆகும். இது அவரது தந்தை வீரநாராயணனின் பெயரால் அழைக்கப்படுகிறது. கொள்ளிடம் ஆற்றின் நீர் தேங்கும் இடமான இது கல்கியின், “பொன்னியின் செல்வன்” நூலிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
12. KAVACH அமைப்பை உருவாக்கிய அமைப்பு எது?
அ. பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா
ஆ. ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பு
இ. தேசிய நீர்மின்னுற்பத்திக் கழகம்
ஈ. NTPC லிட்
- KAVACH மோதல் தவிர்ப்பு முறையை அமல்படுத்தியதற்காக ரெயில்வேக்கு உச்சநீதிமன்றம் அண்மையில் பாராட்டு தெரிவித்தது. இந்திய தொழிற்துறையுடன் இணைந்து ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தரநிலை அமைப்பால் (RDSO) உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட, ‘கவாச்’ என்பது SIL-4 தரநிலைகளை பூர்த்தி செய்யும் அதிநவீன ATP அமைப்பு ஆகும். உயர் அதிர்வெண் ரேடியோ தகவல்தொடர்புகளைப் பயன்படுத்தி, ரெயிலின் போக்குவரவு இயக்கத்தைத் தொடர்ந்து தெரிவிப்பதன்மூலம் இது மோதல்களைத் தடுக்கிறது. இது மிகவும் செலவு குறைந்த மோதல் தவிர்ப்பு அமைப்பு ஆகும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. வாக்குப்பதிவை எளிதாக்கும் தேர்தல் ஆணையத்தின் செயலிகள்.
வாக்காளர் பட்டியலில் பெயர்: வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை உறுதிசெய்ய ‘Voter Helpline’ என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம். இதில் எளிதாக பெயரையும் வாக்குச்சாவடி முகவரி, வாக்காளர் பட்டியல் வரிசை எண் ஆகியவற்றை தெரிந்துகொள்ளமுடியும்.
சக்ஷம் செயலி: மாற்றுத்திறனாளிகள் தங்களுக்குத் தேவைப்படும் அடிப்படை வசதிகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க சக்ஷம் (SAKSHAM-ECI) செயலி பயன்பாட்டில் உள்ளது. இந்தச் செயலி மூலமாக, வாக்குச் சாவடியில் மாற்றுத் திறனாளிகளுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள், சக்கர நாற்காலி, இல்லத்திலிருந்து வாக்குச்சாவடிக்குச் செல்ல வாகன வசதிபோன்ற கோரிக்கைகளை அந்தச் செயலி வழியாகத் தெரிவிக்கலாம். அதை மாவட்டத் தேர்தல் அதிகாரி அலுவலகம் பரிசீலித்து மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவைப்படும் வசதிகளை வழங்கும்.
புகார்களைத் தெரிவிக்க: தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க, ‘1950’ என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இந்த எண்ணுக்கு முன்பாக நீங்கள் எந்த மாவட்டத்தில் இருந்து தொடர்பு கொள்கிறீர்களோ அந்த மாவட்டத்துக்கான STD எண்ணைப் பதிவிட்டு, 1950-ஐ அழைக்க வேண்டும். தேர்தல் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்துக்கு அந்த அழைப்பு செல்லும். அதில் பெறப்படும் புகார்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.