TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 18th and 19th June 2024

1. அண்மையில், எந்த நாட்டு அறிவியலாளர்கள், CHASE தொலைநோக்கிமூலம் சூரிய வளிமண்டல சுழற்சியின் புதிய வடிவத்தைக் கண்டுபிடித்தனர்?

அ. ஜப்பான்

ஆ. இந்தியா

இ. சீனா

ஈ. பிரான்ஸ்

  • CHASE தொலைநோக்கியைப் பயன்படுத்தும் சீன அறிவியலாளர்கள் சூரியனின் வளிமண்டல சுழற்சியில் ஒரு புதிய வடிவத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இது இந்த நிகழ்வின் முதல் துல்லியமான 3D படத்தை வழங்குகிறது. இயற்கை வானியல் இதழில் வெளியிடப்பட்ட இந்த நிகழ்வு, சூரியனின் காந்த செயல்பாடு மற்றும் வளிமண்டல நடத்தை பற்றிய புரிதலை மேம்படுத்துகிறது. ஒரு செயற்கைக்கோள் திட்டமான CHASE, சூரிய இயக்கவியல் பற்றிய அறிவை ஆழப்படுத்துவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

2. டிஜிட்டல் ஹெல்த் இன்சென்டிவ் திட்டமானது கீழ்க்காணும் எந்த முன்னெடுப்பின்கீழ் தொடங்கப்பட்டது?

அ. இந்திரதனுஷ் திட்டம்

ஆ. யுனிவர்சல் ஹெல்த் கேர்

இ. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் மிஷன்

ஈ. பிரதமர் ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா

  • நோயாளிகளின் உடல்நலப்பதிவுகளை எண்மமயமாக்கி, ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் ஹெல்த் அக்கவுண்ட் (ABHA ID) உடன் இணைப்பதற்கான டிஜிட்டல் ஹெல்த் இன்சென்டிவ் திட்டத்தை (டிஹெச்ஐஎஸ்) மத்திய அரசு 2025 ஜூன். 30 வரை நீட்டித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டலின்கீழ், 2023 ஜனவரி.1 அன்று தொடங்கப்பட்டது. DHIS திட்டம் இந்தியாவில் டிஜிட்டல் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ABHA உடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் ஹெல்த் ரெக்கார்டுகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஊக்கத்தொகைகளுடன், சுகாதார வசதிகள் மற்றும் டிஜிட்டல் தீர்வு நிறுவனங்கள் ஆகியவை தகுதியில் அடங்கும்.

3. ‘பிளானட் நைன்’ என்றால் என்ன?

அ. நமது சூரிய குடும்பத்தின் வெளிப்புறத்தில் உள்ள ஓர் அனுமான கோள்

ஆ. நெப்டியூனின் ஒரு நிலவு

இ. குய்ப்பர் பட்டையில் உள்ள வால் விண்மீன்கள்

ஈ. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சனியின் ஒரு நிலவு

  • வானியலாளர்கள் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலமாக வெளிப்புற சூரிய குடும்பத்தில் ஒரு கற்பனையான ஒன்பதாவது கோளான பிளானட் நைனைத் தேடிவருகின்றனர். தொலைதூர டிரான்ஸ்-நெப்டியூனியன் பொருட்களின் சுற்றுப் பாதையில் உள்ள முரண்பாடுகளை விளக்க முன்மொழியப்பட்ட பிளானட் நைன், சூரியனிலிருந்து 400 முதல் 800 வானியல் அலகுகள் வரையிலான அதிக நீள்வட்ட சுற்றுப்பாதையுடன் பூமியின் நிறையில் 5-10 மடங்கு இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதை விரைவில் கண்டுபிடிப்போம் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

4. ‘SDG 7’இன் முதன்மை நோக்கம் என்ன?

அ. அணுவாற்றல் வளர்ச்சியை ஊக்குவித்தல்

ஆ. பைங்குடில் வாயு வெளியேற்றத்தை 50% குறைப்பது

இ. அனைவருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான & நவீன எரிசக்திக்கான அணுகலை உறுதிசெய்தல்

ஈ. உலகளவில் புதைபடிவ எரிபொருள் உற்பத்தியை அதிகரித்தல்

  • “SDG 7: எரிசக்தி முன்னேற்ற அறிக்கை – 2024” ஆனது 2030ஆம் ஆண்டளவில் SDG 7ஐ சந்திக்கும் பாதையில் உலகம் இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது. முதன் முதலில் 2018இல் வெளியிடப்பட்ட இந்த ஆண்டு அறிக்கை SDG 7 முன்னேற்றத்திற்கான முக்கிய குறிப்பு ஆகும். அனைவருக்கும் மலிவான, நம்பகமான, நிலையான மற்றும் நவீன எரிசக்திக்கான அணுகலை உறுதிசெய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த அறிக்கை IEA, IRENA, UNSD, உலக வங்கி மற்றும் WHO ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டதாகும்.

5. எந்தத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, வானியலாளர்கள், ‘SN 2023adsy’ என்ற புதிய சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்துள்ளனர்?

அ. ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி

. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி

இ. ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கி

ஈ. சந்திரா X-கதிர் ஆய்வகம்

  • ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி, வானியலாளர்கள் ‘SN 2023adsy’ என்றவொரு புதிய சூப்பர்நோவாவைக் கண்டுபிடித்துள்ளனர். ஒரு சூப்பர்நோவா என்பது ஒரு பெருவிண்மீனின் பேரழிவின் காரணமாக நிகழும் ஒரு வெடிப்பு ஆகும்; ஒரு விண்மீன் அண்டையிலிருந்து பொருளைக் குவிக்கும்போது வகை-I நிகழ்வும் ஒரு விண்மீன் அதன் ஈர்ப்பு விசையின்கீழ் சரிந்தால் வகை-II நிகழ்வும் நிகழ்கிறது. சூப்பர்நோவாக்கள், விண்வெளியில் மிகப்பெரிய வெடிப்புகள், விண்மீன் திரள்களை மிஞ்சும் அளவுக்குக் கனமான தனிமங்களை உருவாக்குகின்றன. மேலும் பால்வீதி அளவுள்ள விண்மீன்களில் இது 50 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கின்றன.

6. ‘Filoboletus manipularis’ என்றால் என்ன?

அ. சிலந்தி

ஆ. மீன்

இ. காளான்

ஈ. ஆக்கிரமிப்பு களை

  • காசர்கோடு காடுகளில், ‘Filoboletus manipularis’ என்ற ஓர் அரிய உயிரி-ஒளி காளான் இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். லூசிஃபெரின் மற்றும் லூசிஃபெரேஸ் சம்பந்தப்பட்ட இரசாயன எதிர்வினை காரணமாக இந்தக் காளான்கள் இரவில் பிரகாசமான பச்சை நிறத்தில் ஒளிரும். அவை வெப்பமண்டல, ஈரப்பதமான சூழலில் அழுகும் கரிமப்பொருட்களுடன் செழித்து வளரும். இந்த உயிரி-ஒளி பூச்சிகளைக் கவர்ந்து, வித்துப் பரவலுக்கு உதவுகிறது.

7. அண்மையில், 46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்திய நாடு எது?

அ. இந்தியா

ஆ. இந்தோனேசியா

இ. பூட்டான்

ஈ. சீனா

  • இந்தியா, கொச்சியில் 46ஆவது அண்டார்டிக் ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது மற்றும் அதன் மைத்ரி ஆராய்ச்சி தளமான மைத்ரி-IIக்கு வழித்தோன்றலையும் அறிவித்தது. சவூதி அரேபியா அண்டார்டிக் ஒப்பந்த உறுப்பினர்களில் இணைந்தது. அண்டார்டிகாவின் நிர்வாகத்தில் புவிசார் அரசியல் செல்வாக்கு செலுத்தக்கூடாது என்றும், இந்த ஒப்பந்தம் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் பிரத்யேக சங்கமாக இருக்கக்கூடாது என்றும் இந்தியா உள்ளடக்கிய நிர்வாகத்தை வலியுறுத்தியது.

8. நேரடி நெல் விதைப்பு அல்லது ‘தார்-வட்டார்’ நுட்பத்தை தீவிரமாக ஊக்குவித்து வருகிற மாநில அரசு எது?

அ. ஹரியானா

ஆ. உத்தர பிரதேசம்

இ. பஞ்சாப்

ஈ. மேற்கு வங்காளம்

  • பஞ்சாப் மாநில அரசாங்கம் நேரடி நெல் விதைப்பு (அல்லது ‘தார்-வட்டார்’) நுட்பத்தை ஊக்குவித்து வருகிறது; இது கனமான / நடுத்தர-கனமான-அழுத்தமான மண்ணுக்கு சிறந்த நீர்தக்கவைப்பு காரணமாக மிகவும் பொருத்தமான முறையாக உள்ளது. அடிக்கடி நீர்ப்பாசனம் தேவைப்படும் இலகுவான மண், DSRஇன் நீர்சேமிப்பு நன்மைகளை மறுக்கிறது. பஞ்சாபின் மஜா மற்றும் தோபா பகுதிகளில் நேரடி நெல் விதைப்புக்கு ஏற்ற மண் வகைகள் உள்ளன; அதே சமயம் மால்வாவில் லேசான அமைப்புள்ள மண் உட்பட மண் அமைப்புகளின் கலவை உள்ளது.

9. ‘கிருஷி சாகி ஒருங்கிணைப்பு திட்டம்’ குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட அமைச்சகங்கள் எவை?

அ. உழவு & உழவர்கள் நல அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஆ. உள்துறை அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம்

இ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம்

ஈ. பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ஊரக வளர்ச்சி அமைச்சகம்

  • பிரதமர் நரேந்திர மோதி 2024 ஜூன்.18 அன்று வாரணாசியில் 30,000-க்கும் மேற்பட்ட சுயஉதவி குழுக்களுக்கு ‘கிருஷி சகிகள்’ எனச் சான்றிதழ்களை வழங்கினார். வேளாண்மையில் பெண்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து, உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகமும் ஊரக வளர்ச்சி அமைச்சகமும் இணைந்து கடந்த 2023 ஆகஸ்டில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்மூலம், ‘கிருஷி சகி’ சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டது. இது கிராமப்புற பெண்களின் திறன்களை மேம்படுத்துதல் மற்றும் வேளாண் நடைமுறைகளில் அதிகாரமளித்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

10. ‘நான் முதல்வன்’ திட்டத்தின்கீழ், 200000 மாணவர்களுக்கு IT திறன் பயிற்சியளிப்பதற்காக தமிழ்நாட்டுடன் கூட்டிணைந்துள்ள நிறுவனம் எது?

அ. கூகுள்

ஆ. மைக்ரோசாப்ட்

இ. மெட்டா

ஈ. ஆரக்கிள்

  • 200,000+ மாணவர்களுக்கு கிளவுட் கம்ப்யூட்டிங், AI, டேட்டா சயின்ஸ், எம்எல் மற்றும் பிளாக்செயின் போன்ற மேம்பட்ட தகவல் தொழில்நுட்பத் திறன்களில் பயிற்சியளிக்கும் நோக்கத்தில், ‘நான் முதல்வன்’ திட்டத்திற்காக ஆரக்கிள் தமிழ்நாடு அரசுடன் கூட்டு சேர்ந்துள்ளது. டிஜிட்டல் மற்றும் வளாக அடிப்படையிலான கற்றல், அதிநவீன தொழில்நுட்பங்களில் சான்றிதழ்களை வழங்குவதன்மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்பை மேம்படுத்தற்கான ஆரக்கிளின் உறுதிப்பாட்டை இந்த முயற்சி அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இளைஞர்களிடையே தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வளர்ப்பதில் ஆரக்கிளின் பங்கை வலியுறுத்தி, எதிர்கால வேலைச்சந்தைக்குத் தேவையான திறன்களுடன் மாணவர்களை உருவாக்குவதை இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.

11. அண்மையில், மதிப்புமிக்க, ‘நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்தவர் யார்?

அ. வினோத் கணத்ரா

ஆ. ரவி கெய்க்வாட்

இ. அமித் தத்தா

ஈ. அஷ்வின் குமார்

  • இந்தியாவைச் சேர்ந்த பிரபல குழந்தைகள் திரைப்படத் தயாரிப்பாளரான வினோத் கணத்ரா, திரைத்துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக தென்னாப்பிரிக்காவின் மதிப்புமிக்க, ‘நெல்சன் மண்டேலா வாழ்நாள் சாதனையாளர் விருது’ பெற்றுள்ளார். 7ஆவது நெல்சன் மண்டேலா குழந்தைகள் திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட இந்த விருதைப் பெறும் முதல் இந்தியர் ஆவார். 40 ஆண்டுகளுக்கும் மேலான வினோத் கணத்ராவின் தொழில்முறை வாழ்வில், அவர் ஏராளமான ஆவணப்படங்கள் மற்றும் இளைஞர் நிகழ்ச்சிகளை எடுத்துள்ளார். ‘லிவ் உல்மன் அமைதி பரிசு’ மற்றும் ‘தாதாசாஹேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது’ உள்ளிட்ட முப்பத்தாறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை அவர் வென்றுள்ளார்.

12. 2024 – உலக அரிவாள் செல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Hope Through Progress: Advancing Sickle Cell Care Globally

ஆ. Celebrating Progress

இ. Shine the Light on Sickle Cell

ஈ. Increase public awareness and understanding of sickle cell disease

  • மரபணு இரத்தக்கோளாறான அரிவாள் செல் நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஜூன்.19ஆம் தேதி உலக அரிவாள் செல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. 2008 ஐநா தீர்மானத்தின்மூலம் நிறுவப்பட்ட இது, முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்புபற்றி பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு தெரிவிக்கும் நோக்கம் கொண்டது. 2024 இன் கருப்பொருள், “Hope Through Progress: Advancing Sickle Cell Care Globally” ஆகும். இது உலகெங்கிலுமுள்ள நோயாளிகளுக்குப் பராமரிப்பை மேம்படுத்துதல் மற்றும் நிவாரணம் வழங்குவதை வலியுறுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. அமெரிக்காவில் விமானப்படை கூட்டுப்பயிற்சி.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் நடைபெற்ற, ‘செங்கொடி’ இராணுவ கூட்டுப்பயிற்சியில் F16 மற்றும் F15 போன்ற அதிநவீன போர்விமானங்களுடன் இந்திய வான்படையின் ரபேல் போர்விமானமும் முதல்முறையாக ஈடுபட்டது. சிங்கப்பூர், பிரிட்டன், நெதர்லாந்து, ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகளின் விமானப்படையினரும் இந்த கூட்டுப்பயிற்சியில் பங்கேற்றனர். இப்பயிற்சியின்மூலம் சர்வதேச நட்புநாடுகளுடன் இணைந்து இயங்குந்தன்மை பற்றிய நுண்ணறிவு மற்றும் பன்னாட்டுச்சூழலில் பணிகள் பற்றிய கூட்டுப்புரிதல் ஆகிய அனுபவங்கள் இந்திய விமானப்படைக்கு கிடைத்தன.

2. பொற்பனைக்கோட்டையில் 2ஆம் கட்ட அகழாய்வு தொடக்கம்.

புதுக்கோட்டையில் சங்ககால அரசர்களின் கோட்டையாக இருக்கலாம் எனக்கருதப்படும் பொற்பனைக்கோட்டையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை சார்பில் இரண்டாம் கட்டமாக அகழாய்வுப் பணிகள் தொடங்கியுள்ளன. புதுக் கோட்டை நகரத்திலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது பொற்பனைக்கோட்டை என்ற பகுதி.

3. ‘பள்ளிகளின் பெயர்களில் சாதி அடையாளம் இருக்கக்கூடாது’: ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு குழு அறிக்கையில் பரிந்துரை.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஆண்டு அரசுப்பள்ளி மாணவனை, சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பள்ளிகளில் சாதி மோதல்கள் மற்றும் வன்முறைகளை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆய்வுசெய்து அறிக்கை சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசு சார்பில் ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒருநபர் விசாரணைக்குகுழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவின் தனது அறிக்கையை முதலமைச்சரிடம் சமர்ப்பித்தார்.

அதில், அரசுப்பள்ளிகளின் பெயர்களில் ஆதிதிராவிடர் நலத்துறை உள்பட எந்தச் சாதிய அடையாளங்களும் இருக்க கூடாது எனப்பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தனியார் பள்ளிகளில் உள்ள சாதி பெயர்களை நீக்கவேண்டும் எனவும், சாதி அடையாளங்கள் இருக்கக்கூடாது என்ற உறுதிமொழி பெற்ற பிறகே புதிய பள்ளி தொடங்க அனுமதி அளிக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

4. ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டம்: அடுத்த மாதம் தொடங்க அரசு முடிவு.

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தை அடுத்த மாதம் தொடங்க, தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. ஊரகப் பகுதிகளில் 5 ஆயிரத்துக்கும் குறைவாக குடிசைகள் உள்ள 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வீடுகட்டும் ஆணைகளை வழங்க தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது. நடப்பு நிதியாண்டில் ஒரு வீட்டுக்கு `3.10 லட்சம் என்ற அளவில், ஒரு லட்சம் வீடுகள் கட்ட `3,100 கோடி ஒதுக்கி ஏற்கெனவே ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

5. நான்கு இடங்களில் புதிதாக அகழாய்வுப்பணிகள்.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் பத்தாம் கட்டமாக ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இங்கு 2014ஆம் ஆண்டிலிருந்து அகழாய்வுகள் நடைபெற்று வருகின்றன.

தொல்லியல் தளமான கொந்தகையில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் இப்போது தொடங்கியுள்ளன. முதுமக்கள் தாழிகள், மட்கலன்கள் என பல்வேறு தொல்பொருள்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டையில் நடப்பாண்டு இரண்டாம் கட்ட அகழாய்வுப்பணி நடைபெறவுள்ளது.

இதேபோன்று, திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டி, புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் இரண்டாம் கட்ட அகழாய்வுப்பணி தொடங்கப்பட்டுள்ளது.

முதல் கட்ட அகழாய்வுகள்:

தென்காசி மாவட்டம் திருமலாபுரம், கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னானூர், திருப்பூர் மாவட்டம் கொங்கல்நகரம், கடலூர் மாவட்டம் மருங்கூர் ஆகிய நான்கு புதிய இடங்கள் உள்பட ஏற்கெனவே அகழாய்வு நடந்து வரும் நான்கு இடங்கள் என மொத்தம் 8 இடங்களில் நடப்பாண்டில் அகழாய்வுப்பணிகளை முதலமைச்சர் தொடக்கிவைத்தார்.

மேலும், தருமபுரி மாவட்டம் பெரும்பாலை என்னும் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் அறிக்கை மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள 138 கல்வெட்டுகளில் விளக்கவுரைகள் அடங்கிய, தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள் தொகுதி ஆகிய இரண்டு நூல்களையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

6. GSAT-N2 திட்டம்மூலம் இந்தியாவில் அதிவேக இணைய சேவை: ISRO தகவல்.

விண்ணில் விரைவில் செலுத்தப்படவுள்ள இந்தியாவின் GSAT-N2 தகவல் தொடர்பு செயற்கைக்கோள்மூலம் விநாடிக்கு 48 GB வேகத்தில் இணைய சேவையை வழங்கமுடியும் என ISRO தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வுமையத்தின் (ISRO)கீழ் செயல்படும் நியூஸ்பேஸ் இந்தியா நிறுவனம் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு அனுப்பும் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவின் ஸ்பேஸ் X நிறுவனத்துடன் நியூ ஸ்பேஸ் இந்தியா நிறுவனம் புதிய ஒப்பந்தம் மேற்கொண்டது. அதன்படி, இந்தியாவின் GSAT-N2 (முந்தைய பெயர் GSAT-20) என்ற அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அமெரிக்காவின் ஸ்பேஸ் X நிறுவனத்தின் பால்கான் 9 என்ற ஏவுகலம்மூலம் ஏவுவதற்கு இருதரப்புக்கும் இடையே கையொப்பமானது. இந்தச் செயற்கைக்கோளின் ஆயுள்காலம் 14 ஆண்டுகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஏவுகலம் ஏன்?:

இந்தியாவில் ISROமூலம் வடிவமைக்கப்பட்ட SSLV, PSLV, GSLV, LVM-3 ஆகிய ஏவுகலங்கள்மூலம் செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. விண்கலன்கள் அல்லது செயற்கைக்கோள்களின் எடையைப் பொருத்து அதற்கான ஏவுகலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவ்வகையில் அதிகபட்சமாக 4,000 கிகி வரையிலான எடைகொண்ட கலன்களை நவீன LVM-3 ஏவுகலம்மூலம் தாங்கிச்செல்லமுடியும். ஆனால், தகவல்-தொடர்பு மற்றும் புவிக்கண்காணிப்புக்காக தற்போது வடிவமைக்கப்பட்டுள்ள GSAT-N2 செயற்கைக்கோள் 4,700 கிலோவுக்கும் கூடுதலான எடைகொண்டது. அதன் காரணமாகவே எலான் மஸ்கின் அமெரிக்க நிறுவனத்துடன் அதற்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

7. கலைச்செம்மல் விருது.

நுண்கலைத்துறையில் சாதனைகளைப் படைத்துவரும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் விருதுதான் கலைச்செம்மல் விருது. நுண்கலைத்துறையில் அரும்பெரும் சாதனைகள், சேவைகளைப்பாராட்டும் வகையில், ஆண்டுக்கு ஆறு கலைஞர்களுக்கு, ‘கலைச்செம்மல் விருது’ வழங்கப்படுகிறது.

8. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ தனி இணையதளம்.

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவுவதற்காக தனி இணையதள (https://www.pocso portal.tn.gov.in) முகப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தெரிவிக்கப்படும் விவரங்கள் யாருக்கும் தெரியாத வகையில், இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!