TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 17th January 2024

1. எந்தத் தமிழ்த்திங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது?

அ. மார்கழி

ஆ. தை

இ. மாசி

ஈ. பங்குனி

  • பொங்கல் பண்டிகையானது தமிழ்த்திங்களான தைத்திங்களின் முதல்நாளன்று கொண்டாடப்படுகிறது. ஜனவரி மாதத்தின் நடுப்பகுதியில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை அறுவடை பருவத்தின் செழிப்பைக் குறிக்கிறது. அபரிமிதமான பயிர் விளைச்சலுக்கு இயற்கைக்கு நன்றிதெரிவித்து, பல்வேறு சடங்குகள் மற்றும் விழாக்களுடன் தமிழர்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

2. அறிவியல் & தொழில்நுட்பத்துறையில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய இளம் அறிவியலாளர்களை அங்கீகரித்து ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகின்ற விருது எது?

அ. சாந்தி ஸ்வரூப் பட்நாகர் (VY-SSB) விருது

ஆ. விஞ்ஞான் குழு விருது

இ. இந்திய அறிவியல் விருது

ஈ. C V இராமன் பிறந்தநாள் நூற்றாண்டு விருது

  • 2024ஆம் ஆண்டுக்கான ராஷ்ட்ரிய விஞ்ஞான் புரஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைகளுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் ஜன.14 முதல் பிப்.28 வரை திறந்திருக்கும். இந்திய அரசாங்கத்தால் நிறுவப்பட்ட இந்த மதிப்புமிக்க விருதுகள் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை போற்றுகின்றன. தேசிய அளவிலான இவ்விருது ஆராய்ச்சியாளர்கள், தொழினுட்ப வல்லுநர்களின் சாதனைகளைக் கொண்டாடுகிறது. கூடுதலாக, அறிவியல் & தொழில்நுட்பத்தில் சிறப்பான பங்களிப்பை ஆற்றிய இளம் அறிவியலாளர் -களை அங்கீகரித்து ஊக்குவிக்கும் வகையில் சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதுகள் வழங்கப்படுகின்றன.

3. 2023-24 பயிராண்டில் உலகின் மிகப்பெரிய பருப்பு (மைசூரு பருப்பு) உற்பத்தியாளராக மாறவுள்ள நாடு எது?

அ. இந்தியா

ஆ. மியான்மர்

இ. பூடான்

ஈ. நேபாளம்

  • 2023-24ஆம் ஆண்டில், அதிகப்படியான சாகுபடியின் காரணமாக இந்தியா உலகின் முன்னணி பருப்பு (மைசூர் பருப்பு) உற்பத்தியாளராக மாறவுள்ளது. தோலை நீக்கியபிறகு உட்கொள்ளப்படுகிற இப்பருப்புவகை கடினமானதும் உறைபனியைத் தாங்கக்கூடியதும் குளிர் காலநிலையில் செழித்து வளரும் தன்மையுடையதும் ஆகும். இதற்கு உகந்த வளர்ச்சி வெப்பநிலையாக 18-30°C உள்ளது. மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகியவை இவ்வகை பருப்புப் பயிரிடும் முக்கிய இந்திய மாநிலங்கள் ஆகும். இந்தியா, கனடா, துருக்கி ஆகிய நாடுகளில் இது அதிகளவில் உற்பத்தியாகின்றது. இந்தியாதான் இதன் தாயகம் எனக்கருதப்பட்டபோதிலும், தற்போது உலகில் இது அதிகமாக விளைவிக்கப்படுவது கனடா நாட்டிலாகும்.

4. அண்மையில், 150 ஒருநாள் T20 போட்டிகளை விளையாடிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனவர் யார்?

அ. ரோஹித் சர்மா

ஆ. விராட் கோலி

இ. K L இராகுல்

ஈ. கேசவ் மகாராஜ்

  • ஹோல்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 2ஆவது T20 போட்டியில் பங்கேற்றதை அடுத்து இந்திய அணியின் தலைவர் ரோஹித் சர்மா, 150 T20 சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற முதல் வீரர் என்ற வரலாறு படைத்தார். 2022ஆம் ஆண்டு ICC ஆடவர் T20 உலகக்கோப்பைக்குப்பிறகு T20I அணிக்குத் திரும்பிய ரோஹித் ஷர்மா மொகாலியில் நடந்த முதல் ஒருநாள் T20 போட்டியில் இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற காரணமாய் இருந்தார்.

5. அண்மையில் வெளியிடப்பட்ட, “Gandhi: A Life in Three Campaigns” என்ற நூலின் ஆசிரியர் யார்?

அ. K N பணிக்கர்

ஆ. கமலேஷ் படேல்

இ. விஜய குமார்

ஈ. M J அக்பர்

  • பிரதமர் அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கத்தின் நிர்வாகக் குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தொகுத்து வழங்கிய ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வில், புகழ்பெற்ற எழுத்தாளர் M J அக்பர், இணை ஆசிரியர் K நட்வர் சிங்குடன் இணைந்து, “Gandhi: A Life in Three Campaigns” என்ற நூலை வெளியிட்டனர். இந்த நூல், ‘மகாத்மா’ காந்தியின் முக்கிய மக்கள் பங்கேற்பு இயக்கங்களான ஒத்துழையாமை இயக்கம் (1920), உப்புச்சத்தியாகிரகம் (1930) மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம் (1942) ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

6. இந்திய இராணுவத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட, பாதுகாப்பான இராணுவத்திற்கான மொபைல் சூழலமைப்பின் பெயரென்ன?

அ. சம்பவ்

ஆ. புராஜெக்ட் ஷீல்டு

இ. பாதுகாப்பான இராணுவ மொபைல் தளம்

ஈ. மொபைல் பாதுகாப்பு முன்முயற்சி

  • SAMBHAV (Secure Army Mobile BHarat Version) என்பது இந்திய இராணுவத்தால் உருவாக்கப்பட்ட ஒரு முனை முதல் மறுமுனைவரை என்ற தொழில்நுட்ப அடிப்படையிலான பாதுகாப்பான மொபைல் சூழலமைப்பு ஆகும். 5G தொழில்நுட்பத்தில் இயங்கும் இது, பாதுகாப்பான தகவல் தொடர்பு மற்றும் உடனடி இணைப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இராணுவம் சம்பந்தப்பட்ட இணையவெளி நடவடிக்கைகள் ஆதரவு பிரிவானது செயல்பாடு மற்றும் உத்திசார் நிலைகளில் இதனை மேம்படுத்துகிறது. SAMBHAVஆனது ஒட்டுக்கேட்கக்கூடிய பாதிப்பை முற்றிலும் ஒழித்து முனை-முதல்-முனை (end-to-end) பாதுகாப்பை வழங்குகிறது.

7. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆனைமலை புலிகள் காப்பகம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. கர்நாடகா

ஈ. மேகாலயா

  • ஆனைமலை புலிகள் காப்பகத்தின் மையப்பகுதியான உலாந்தி மலைத்தொடரில் உள்ள ஊடுறுவு இனங்களை வனத்துறை தீவிரமாக அழித்து வருகிறது. இந்நிதியாண்டில் உலாந்தியின் தொண்ணூறு ஹெக்டேர் வனப்பரப்பில் அழிக்கப்பட்ட ஊடுறுவு தாவர இனங்களுக்குப் பதிலாக பூர்வீக மரக்கன்றுகள் நடப்பட்டன.
  • பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஆனைமலையின் தமிழ்நாட்டுப் பகுதியிலிருந்து பிரித்து உருவாக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகமானது பரம்பிக்குளம் புலிகள் காப்பகம், சின்னாறு வனவிலங்கு சரணாலயம் மற்றும் எரவிகுளம் தேசியப்பூங்கா ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. அமராவதி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை மற்றும் மனம்போலி ஆகியவை இந்தக் காப்புக்காட்டின் குறிப்பிடத்தக்க எல்லைகளாக விளங்குகின்றன.

8. 2024 – சர்வதேச AYUSH மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்ற இடம் எது?

அ. புது தில்லி, இந்தியா

ஆ. துபாய், ஐக்கிய அரபு அமீரகம்

இ. மும்பை, இந்தியா

ஈ. லண்டன், இங்கிலாந்து

  • துபையில் நடந்த இரண்டாவது சர்வதேச ஆயுஷ் மாநாடு, ஆயுஷை தொற்றாத நாட்பட்ட நோய்களைத் தடுப்பதற்கும் மற்றும் நிர்வகிப்பதற்குமான நம்பகமான மற்றும் மலிவான சுகாதாரப் பாதுகாப்பு அணுகுமுறையாகக் காட்டுகிறது. உலகம் முழுவதிலுமிருந்து 1500 வல்லுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றனர். இம்மாநாட்டில் 50க்கும் மேற்பட்ட விவாதங்கள் நடந்தன மற்றும் முந்நூறு ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. தொற்றாத நாட்பட்ட நோய்களைக் கையாள்வதில் பாரம்பரிய மருத்துவத்தின் செயல்திறனை முன்னிலைப்படுத்துவதை இந்த மாநாடு நோக்கமாகக் கொண்டிருந்தது.

9. அண்மையில், 40 ஆண்டு சேவைக்குப்பிறகு பணியிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்ட மூன்று இந்திய கடற்படை கப்பல்கள் எவை?

அ. INS சீத்தா, குல்தார் மற்றும் கும்பீர்

ஆ. INS இராஜ்புத், சாத்புரா மற்றும் காந்தேரி

இ. INS விக்ராந்த், சயாத்ரி மற்றும் அரிஹந்த்

ஈ. INS ஷிவாலிக், கரஞ்ச் மற்றும் வேலா

  • இந்திய கடற்படை கப்பல்களான சீத்தா, குல்தார் மற்றும் கும்பீர் ஆகியவை நாட்டுக்கு 40 ஆண்டுகால சேவையை வழங்கிய பின்னர் 2024 ஜன.12 அன்று பணியிலிருந்து விடுவிக்கப்பட்டன. போர்ட்பிளேரில் நடைபெற்ற பாரம்பரிய விழாவில் அவை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டன. போலந்தின் கிடியா கப்பல் கட்டுந்தளத்தில் சீட்டா, குல்தார் மற்றும் கும்பீர் ஆகியவை போல்னோக்னி பிரிவு தரையிறங்கும் கப்பல்களாகக் கட்டப்பட்டன. இவை முறையே 1984, 1985 மற்றும் 1986ஆம் ஆண்டுகளில் பணியில் இணைக்கப்பட்டன.
  • இந்தக் கப்பல்கள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளாக கடற்படை சேவையில் இருந்தன; மேலும் 12,300 நாள்களுக்கும் மேலாக கடலில் இருக்கும்போது சுமார் 17 இலட்சம் கடல்மைல்களைக் கடந்தன. இராணுவ வீரர்களைக் கரையில் தரையிறக்க 1300க்கும் மேற்பட்ட கடற்கரை நடவடிக்கைகளை இக்கப்பல்கள் மேற்கொண்டுள்ளன. 1990 மேயில் இந்தியா மற்றும் இலங்கை எல்லையில் ஆயுதங்கள், வெடிமருந்துகள் கடத்தல் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட இந்திய கடற்படை & இந்திய கடலோர காவல்படையுடனான கூட்டு நடவடிக்கை மற்றும் இலங்கையில் 1997 சூறாவளி மற்றும் 2004 இந்திய பெருங்கடல் சுனாமிக்குப்பிறகு நிவாரண நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கின.

10. அண்மையில், தைவான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?

அ. ம யிங்-ஜெவு

ஆ. வில்லியம் லாய்

இ. சாய் இங்-வென்

ஈ. கெயு-ஹாய்

  • லை சிங்-தே என்றும் அழைக்கப்படும் வில்லியம் லாய், சாய் இங்-வெனுக்குப் பிறகு தைவானின் அதிபராக ஆனார். தைவானை இணைத்துக்கொள்ளும் சீனாவின் திட்டங்களை எதிர்க்கும் முன்னாள் அதிபர் சாய் இங்-வெனின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகளை வில்லியம் லாயும் தொடருவுதாக உறுதியளித்துள்ளார்.
  • சாய் இங்-வென், கடந்த 2016ஆம் ஆண்டு முதல் சீனக் குடியரசின் (தைவான்) அதிபராக இருந்து வருகிறார். தைவான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி, திருமணமாகாத முதல் அதிபர் மற்றும் ஹக்கா மற்றும் பழங்குடியின வம்சாவளியைச் சேர்ந்த முதல் அதிபராக அவர் இருந்தார்.

11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘ஜென்டூ பென்குயினின்’ தற்போதைய IUCN நிலை என்ன?

அ. அருகிவிட்ட இனம்

ஆ அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்

இ. தீவாய்ப்பு கவலைகுறைந்த இனம்

ஈ. மிகவும் அருகிவிட்ட இனம்

  • 45 முதல் 65° தெற்கு அட்சரேகைக்கு இடைப்பட்ட தெற்கு அரைக்கோளத்தில் சிலி அண்டார்டிகாவில் ஓர் அரிய உயிரினமாக வெண் ஜென்டூ பென்குயின்கள் காணப்படுகின்றன. பொதுவாக கடற்கரையோரங்களில் காணப்படும் ஜென்டூ பென்குயின்கள் கண்களைச் சுற்றி இரண்டு தனித்துவமான வெள்ளை வடிவுடன்கூடிய தனித்துவமான அடையாளங்களைக் கொண்டுள்ளன. பெரும்பாலும் பாக்லாந்து தீவுகளில் வசிக்கும் இப்பென்குயின்கள் IUCNஇன் சிவப்புப்பட்டியலில், “தீவாய்ப்பு கவலைகுறைந்த இனம்” என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

12. 2030ஆம் ஆண்டிற்குள், விபத்துவழி இறப்பைக் குறைப்பதற்கு, இந்திய அரசு நிர்ணயித்துள்ள இலக்கு சதவீதம் எவ்வளவு?

அ. 50%

ஆ. 40%

இ. 60%

ஈ. 30%

  • விபத்து மரணங்களை 2030ஆம் ஆண்டிற்குள் 50 சதவீத அளவுக்குக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப்போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். தில்லியில் நடைபெற்ற சாலைப்பாதுகாப்பு குறித்த தேசிய மாநாட்டில் இதனை அவர் அறிவித்தார். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 53 சாலை விபத்துகள், 19 உயிரிழப்புகள் ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

13. சமீப செய்திகளில் இடம்பெற்ற, பார்ஸி (பாரசீகம்) என்பது கீழ்காணும் எந்த நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும்?

அ. ஈரான்

ஆ. ஈராக்

இ. ஆப்கானிஸ்தான்

ஈ. தென்னாப்பிரிக்கா

  • புதிய கல்விக்கொள்கையின்கீழ் இந்தியாவின் ஒன்பது செம்மொழிகளில் ஒன்றாக பார்ஸி (பாரசீகம்) மொழி தற்போது வகைப்படுத்தப்பட்டுள்ளது என இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் தெரிவித்தார். ஈரானின் முதன்மை மொழியான பார்ஸி அதன் அதிகாரப்பூர்வ மொழியுமாகும். கூடுதலாக, அதன் திரிபுகளான டாரி மற்றும் தஜிக் ஆகியவை முறையே ஆப்கானிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தானில் அதிகாரப்பூர்வ அந்தஸ்து பெற்ற மொழிகளாக உள்ளன. இந்தியாவில் தற்போது 6 செம்மொழிகள் உள்ளன; அவை தமிழ், சமற்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் ஒடியா.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புத்தாக்க நிறுவனங்களுக்கு உகந்த சூழல்: மிகச்சிறந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு.

புத்தாக்க நிறுவனங்களுக்கு, (வளர்ந்துவரும் தொழில்முனைவோருக்கு) உகந்த சூழலை உருவாக்கித் தருவதில் மிகச்சிறந்து விளங்கும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு உள்பட ஐந்து மாநிலங்கள் இடம்பிடித்துள்ளன. மத்திய தொழில் நிறுவனங்கள் மற்றும் உள்நாட்டு வர்த்தக ஊக்குவிப்புக்கான (DPIIT) துறை 2022ஆம் ஆண்டுக்கான இந்தத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

மொத்தம் 25 காரணிகள் ஆய்வுசெய்யப்பட்டு, அதனடிப்படையில் மிகச்சிறந்த மாநிலங்கள், சிறந்த மாநிலங்கள், முதன்மை மாநிலங்கள், ஆர்வம் காட்டும் மாநிலங்கள், முன்னேற்றம் கண்டு வரும் மாநிலங்கள் என 5 பிரிவுகளில் மாநிலங்கள் தரவரிசைப்படுத்தப்பட்டு ஒவ்வோர் ஆண்டும் வெளியிடப்படுகிறது. 33 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் இதில் பங்கேற்றுள்ளன. மிகச்சிறந்த மாநிலங்கள் பட்டியலில் குஜராத் தொடர்ந்து நான்காவது முறையாகவும், கர்நாடகம் இரண்டாவது முறையாகவும் இடம்பிடித்துள்ளன.

மிகச்சிறந்த மாநிலங்கள்:

1 குஜராத்
2 கர்நாடகா
3 தமிழ்நாடு
4 கேரளா
5 இமாச்சல பிரதேசம்

2. 2023ஆம் ஆண்டுக்கான FIFA விருதுகள்.

உலக கால்பந்து சம்மேளனமான FIFAஇன் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரராக அர்ஜென்டினா வீரர் லயோனல் மெஸ்ஸி தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 3ஆவது முறையாக அவர் இந்த விருதை பெறுகிறார். ஸ்பெயினின் கால்பந்து வீராங்கனை ஐடானா பான்மாட்டி, 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீராங்கனை விருதை வென்றார்.

3. அயோத்தியில் முழங்கவிருக்கும் பாரம்பரிய இசை வாத்தியங்கள்.

தமிழ்நாட்டின் நாகஸ்வரம்-மிருதங்கம், கர்நாடகத்தின் வீணை, ஆந்திர பிரதேசத்தின் கடம், உத்தர பிரதேசத்தின் டோலக், சத்தீஸ்கரின் தம்பூரா என அயோத்தி இராமர் திருக்கோவில் மூலவர் சிலை பிராணப் பிரதிஷ்டை விழாவில் இந்திய பாரம்பரிய இசை வாத்தியங்கள் முழங்கவிருக்கின்றன.

4. இந்தியாவின் No:1 செஸ் வீரரானார் பிரக்ஞானந்தா.

இந்தியாவின் No:1 செஸ் வீரராக விஸ்வநாதன் ஆனந்தை பின்னுக்குத்தள்ளி பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார். FIDEஇன் மதிப்பீட்டு புள்ளிகள்படி பிரக்ஞானந்தா ஐந்துமுறை உலக சாம்பியனான விஸ்வநாதன் ஆனந்தை முந்தி சாதனை படைத்தார். லைவ் ரேட்டிங் புள்ளிப்பட்டியலில் விஸ்வநாதன் ஆனந்த் 2748 புள்ளிகள் பெற்ற நிலையில் பிரக்ஞானந்தா 2748.3 புள்ளிகள் பெற்று சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin