Tnpsc Current Affairs in Tamil – 16th January 2024
1. IUCNஇன் சிவப்புப்பட்டியலில் மதிப்பிட்டபடி, ‘இமயமலை ஓநாயின்’ தற்போதைய பாதுகாப்பு நிலை என்ன?
அ. அருகிவிட்ட இனம்
ஆ. அழிவாய்ப்பு நிலையிலுள்ள இனம்
இ. தீவாய்ப்பு கவலைகுறைந்த இனம்
ஈ. மிகவும் அருகிவிட்ட இனம்
- IUCNஇன் சிவப்புப்பட்டியலில் முதன்முறையாக மதிப்பிடப்பட்ட இமயமலை ஓநாய் (Canis lupus chanco) தற்போது ‘அழிவாய்பு நிலையிலுள்ள இனம்’ என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இமயமலையில் 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் வளரும், இந்த மரபணு ரீதியாக வேறுபட்ட திபெத்திய ஓநாய்கள், உயிர்வளிப் பற்றாக்குறை நிலைக்கு தங்களை தகவமைத்துக்கொண்டு வாழ்கின்றன. அவற்றின் வாழ்விடமானது சீனாவின் திபெத்திய பீடபூமி மற்றும் வட இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.
2. அண்மையில், உலக சுகாதார அமைப்பால் மலேரியா இல்லா நாடு என்று சான்றளிக்கப்பட்ட நாடு எது?
அ. கபோ வெர்டே
ஆ. நைஜீரியா
இ. தான்சானியா
ஈ. கென்யா
- ஆப்பிரிக்காவின் மேற்குக்கடற்கரையில் உள்ள தீவுக்கூட்ட நாடான கபோ வெர்டே, உலக சுகாதார அமைப்பால் (WHO) மலேரியா இல்லா நாடு எனச் சான்றளிக்கப்பட்டுள்ளது. பத்துப்பெருந்தீவுகள் மற்றும் ஐந்து சிறுதீவுகளை உள்ளடக்கிய இந்த எரிமலை தீவுக்கூட்டம், மிதமான காலநிலையையும் பல்வேறு விதமான நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது. இங்குள்ள மக்கள் போர்த்துகீசியம் மற்றும் கேப் வெர்டியன் கிரியோல் மொழி பேசுகிறார்கள். இதன் தலைநகரமாக பிரையா என்ற நகரம் உள்ளது.
3. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. கர்நாடகா
ஈ. ஆந்திர பிரதேசம்
- தேசிய உயிரியல் அறிவியல் மையத்தின்ஆராய்ச்சியாளர்கள், இந்தியாவின் மேற்குத்தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கப்பகுதியில் அமைந்துள்ள கர்நாடக மாநிலத்தின் பிரம்மகிரி வனவிலங்கு சரணாலயத்தில், ‘Cigaritis conjuncta’ என்ற புதிய பட்டாம்பூச்சி இனத்தை அண்மையில் கண்டறிந்தனர். இந்த வண்ணத்துப்பூச்சி, `1 நாணயத்தின் அளவே உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைகளின் நடுத்தர உயரமான பசுமைமாறாக் காடுகளை பூர்வீகமாகக் கொண்டவை இவை. இந்தப் பட்டாம்பூச்சியின் கண்டுபிடிப்பு தளங்கள் 900 மீ (இருப்பு அருவி) மற்றும் 1,300 மீ (தேன் பள்ளத்தாக்கு) உயரத்தில் அமைந்துள்ளன.
4. H-IIA ஏவுகலம்மூலம் ஏவப்பட்ட ஜப்பானின், ‘ஆப்டிகல்-8’ என்ற செயற்கைக்கோளின் நோக்கம் என்ன?
அ. தேசிய பாதுகாப்புக்காக உளவுத்தகவல்களைச் சேகரித்தல்
ஆ. விண்வெளி ஆய்வு
இ. வானிலை முன்கணிப்பு
ஈ. செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகள்
- மிட்சுபிஷி கனரக தொழிற்சாலைகள் நிறுவனமானது ஜப்பானின் தகவல் சேகரிப்பு செயற்கைக்கோளான, ‘ஆப்டிகல் -8’ஐ ஏந்திய 48ஆவது H-IIA ஏவுகலத்தை ஏவி சாதனை படைத்துள்ளது. இது H-IIAஇன் நம்பகத்தன்மையை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. ஜப்பான் விண்வெளி ஆய்வுமுகமையின் (JAXA) உருவாக்கத்தின்கீழ் கடந்த 2001இல் தொடங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை 97.92% என்ற வெற்றி வீதத்தை இந்த ஏவுகலம் கொண்டுள்ளது. ஜப்பான் இன்னும் இரண்டு ஏவுதலுக்குப் பிறகு H-IIAஐ ஓய்வுபெற வைத்துவிட்டு அதன் அடுத்த தலைமுறை மேம்பட்ட ஏவு கலமாக H3ஐ உருவாக்கவுள்ளது.
5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அட்பாடி வளங்காப்புக்காடுகள் என்பது கீழ்காணும் எந்த மாநிலத்தின் புதிய வளங்காப்புக்காடுகள் ஆகும்?
அ. இராஜஸ்தான்
ஆ. பீகார்
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. மகாராஷ்டிரா
- மகாராஷ்டிர மாநில அரசாங்கம் சங்லியில் மைனி காப்புக்காட்டையும் மால்தோக் பறவைகள் சரணாலயத்தையும் இணைத்து ‘அட்பாடி வளங்காப்புக்காடுகளை’ நிறுவியுள்ளது. இது ஓநாய்கள், மான்கள், நரிகள் மற்றும் புனுகுப் பூனைகள்போன்ற பாலூட்டிகளுக்கான வனவிலங்கு வழித்தடத்தையும் வாழ்விடங்களையும் பாதுகாக்கிறது. இந்தக் காப்பகத்தில் பாதி பசுமையான, சதுப்பான மற்றும் வறண்ட இலையுதிர் காடுகள், 36 மர வகைகள், 116 மூலிகைகள், 15 புதர்கள், 14 கொடிகள் மற்றும் ஓர் ஒட்டுண்ணி தாவரம் உள்ளது.
6. ஈர்ப்பு விசை அணையான கிருஷ்ண இராஜ சாகர் அணை அமைந்துள்ள மாநிலம் எது?
அ. கர்நாடகா
ஆ. கேரளா
இ. ஒடிசா
ஈ. மகாராஷ்டிரா
- கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கிருஷ்ண இராஜ சாகர் KRS) அணைக்கு 20 கிமீ சுற்றளவில் அனைத்து சுரங்க மற்றும் குவாரி நடவடிக்கைகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் அண்மையில் தடைவிதித்தது. இது காவிரியாற்றின் துணையாறுகளான ஹேமாவதி மற்றும் இலட்சுமண தீர்த்தம் சங்கமிக்கும் இடத்திற்கு கீழே அமைந்துள்ளது. புவியீர்ப்பு விசை அணையான KRS அணை, மகாராஜா நான்காம் கிருஷ்ண இராஜ வாடியாரின் நினைவாக கட்டப்பட்டது. இதனை கட்டியவர் பொறியாளர் சர் M விசுவேசுவரையா ஆவார். கர்நாடக நீதிமன்றத்தின் தீர்ப்பு KRS அணையையும் அதன் சுற்றுப்புறத்தையும் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
7. பாரத் நிலை (BS) உமிழ்வு தரநிலைகளை அமைப்பது எது?
அ. NITI ஆயோக்
ஆ. தேசிய பசுமை தீர்ப்பாயம்
இ. இந்திய மாசுக்கட்டுப்பாட்டு சங்கம்
ஈ. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்
- அண்மையில் இந்திய அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய ஆணை, கனரக டீசல் வாகனங்களை (குறிப்பாக சரக்குந்துகள் & இழுவை வண்டிகள்) படிப்படியாக ஒழித்து, அவற்றை பாரத் நிலை-VI-க்கு (BS-VI) இணக்கமான வாகனங்களாக மாற்றுவதற்கான தேசிய கொள்கையை வகுக்கவேண்டியதன் கட்டாயத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. BS உமிழ்வு தரநிலைகள், கடந்த 2000ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டன. சுற்றுச் சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்தத் தரநிலைகளை நிறுவி, அவற்றை செயல்படுத்தும் காலக்கெடுவை நிர்ணயிக்கிறது.
8. புதிய தலைமுறை ஆகாஷ் (AKASH-NG) ஏவுகணை சார்ந்த வகை என்ன?
அ. தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்குவது
ஆ. தரையிலிருந்து தரை இலக்கைத் தாக்குவது
இ. வானிலிருந்து வான் இலக்கைத் தாக்குவது
ஈ. வானிலிருந்து தரை இலக்கைத் தாக்குவது
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) ஒடிஸாவின் சந்திப்பூரில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்திலிருந்து புதிய தலைமுறை ஆகாஷ் (AKASH-NG) ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்தது. மிகக்குறைந்த உயரத்தில் அதிவேக ஆளில்லா விமான இலக்கைக் குறிவைத்து இந்தச்சோதனை நடத்தப்பட்டது. இச்சோதனையின்போது, ஆயுதமுறைமூலம் இலக்கை வெற்றிகரமாக இடைமறித்து அழிக்கப்பட்டது. உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ரேடியோ அதிர்வெண் தேடி, ஏவி, பல்-பணி ரேடார் மற்றும் கட்டளை, கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு அமைப்புடன் ஏவுகணையை உள்ளடக்கிய முழு ஆயுதமுறையின் செயல்பாட்டை இது உறுதிப்படுத்தியது.
9. அண்மையில், மும்பையில் நடைபெற்ற 2024 – பருவநிலை மாநாட்டுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Decoding the Green Transition for India
ஆ. Renewable Energy Solutions for a Sustainable Future
இ. Adapting the Climate Change
ஈ. Climate Justice and Social Equity
- “இந்தியாவுக்கான பசுமை மாற்றத்தைக் கண்டறிதல்” என்ற தலைப்பில் 2024 – பருவநிலை மாநாடு, ஜனவரி.12 அன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நடைபெற்றது. மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில், நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப திறன்களைத் திரட்டுவதில் தனியார் துறை, பருவநிலை தொழில்நுட்ப துளிர் நிறுவல்கள் மற்றும் நிறுவன முதலீட்டாளர்களின் முக்கியப்பங்கு குறித்து கவனஞ்செலுத்தப்பட்டது.
- அரசின் முயற்சிகளை மேம்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் சமூகங்களை ஈடுபடுத்துவது மற்றும் புதுமையான பருவநிலை சேவைகள் மற்றும் தொழில்நுட்பங்களை உருவாக்குவது இதன் நோக்கமாகும். சுற்றுச்சூழல் துறை செயலாளர் லீனா நந்தன், G20 ஷெர்பா அமிதாப் காந்த், IFSCA தலைவர் K ராஜாராமன், அமெரிக்க தூதரக ஜெனரல் மைக் ஹாங்கி, கோத்ரேஜ் அக்ரோவெட் தலைவர் மற்றும் கோத்ரெஜ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் நாதிர் கோத்ரெஜ் ஆகியோர் இதன் தொடக்க அமர்வில் கலந்துகொண்டனர்.
10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற புங்கணூர் பசு சார்ந்த மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. கேரளா
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. மிசோரம்
- பிரதமர் சமீபத்தில் தனது புது தில்லி இல்லத்தில் புங்கணூர் பசுக்களுக்கு உணவளித்தார். ஆந்திர பிரதேசத்தின் புங்கணூர் கிராமத்தைச் சேர்ந்த புங்கணூர் மாடுகள், 70-90 செமீ உயரமும், 200 கிலோவுக்கும் குறைவான எடையுங்கொண்ட உலகின் மிகச்சிறிய கால்நடை இனங்களில் ஒன்றாகும். வறட்சியைத் தாங்கும் திறனுக்காக அறியப்பட்ட அவை, குறைந்த தரம்வாய்ந்த தீவனத்திற்கு ஏற்றவாறு, 8% கொழுப்பு உள்ளடக்கம், ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலை உற்பத்திசெய்கின்றன. இந்தச் சுற்றுச்சூழலுக்குகந்த பசுக்கள், திருப்பதி திருமலை கோவில் உட்பட ஆந்திர பிரதேசத்தின் கோவில்களில் காணப்படும் கலாச்சார நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கின்றன.
11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ASTRA ஏவுகணை சார்ந்த வகை என்ன?
அ. தரையிலிருந்து வான் இலக்கைத் தாக்குவது
ஆ. தரையிலிருந்து தரை இலக்கைத் தாக்குவது
இ. வானிலிருந்து வான் இலக்கைத் தாக்குவது
ஈ. வானிலிருந்து தரை இலக்கைத் தாக்குவது
- இந்திய வான்படைக்கு வழங்குவதற்காக முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, ‘அஸ்திரா’ ஏவுகணையை மத்திய பாதுகாப்பு இணையமைச்சர் அஜய் பட் கொடியசைத்து தொடக்கிவைத்தார். இந்த நிகழ்ச்சி தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்றது.
- வானிலிருந்து ஏவப்பட்டு காட்சி எல்லையைத்தாண்டி மற்றொரு வானிலக்கைத் தாக்கும் ஏவுகணையான, ‘ASTRA’ -ஐ DRDO மற்றும் பாரத் டைனமிக்ஸ் இணைந்து உள்நாட்டிலேயே தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை இந்திய வான்படைக்கு வழங்கப்படுகிறது. இது 100 கிமீ-க்கும் அதிக தொலைவிலுள்ள இலக்கைத்தாக்கும் திறனுடையது.
12. இந்திய இராணுவ நாள் அனுசரிக்கப்படுகிற தேதி எது?
அ. 16 ஜனவரி
ஆ. 14 ஜனவரி
இ. 12 ஜனவரி
ஈ. 15 ஜனவரி
- இந்திய இராணுவ நாளானது ஆண்டுதோறும் ஜனவரி.15 அன்று கொண்டாடப்படுகிறது. இந்திய இராணுவத்துக்கு இந்திய இராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் K M கரியப்பா பதவியேற்ற 1949 ஜன.15ஆம் தேதி ஒவ்வோர் ஆண்டும் இந்திய இராணுவ நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 2024ஆம் ஆண்டு 76ஆவது இராணுவ நாள், “நாட்டின் சேவையில் – In Service of the Nation” என்ற கருப்பொருளில், லக்னோவில் உள்ள இராணுவ மத்திய கட்டளை மையத்தால் கொண்டாடப்பட்டது. இந்திய இராணுவத்தின் முழக்கவரி, “Service Before Self” ஆகும்.
13. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற Sinomicrurus gorei சார்ந்த இனம் எது?
அ. பாம்பு
ஆ. மீன்
இ. தவளை
ஈ. பறவை
- மிசோரம் பல்கலைக்கழகத்தின் விலங்கியல் ஆய்வாளர்கள், புதிய பவழப்பாம்பு இனத்தை கண்டறிந்து, அதற்கு Dr கோரின் பெயரால் Sinomicrurus gorei என்று பெயரிட்டுள்ளனர். உள்நாட்டில் ‘ருல்தினா’ என்று அழைக்கப்படும் இது பாரம்பரிய மிசோ அம்பர் அட்டிகையான, ‘தினாவை’ ஒத்திருக்கிறது. வடகிழக்கிந்தியாவில் Sinomicrurus macclellandi என்ற மற்றொரு Sinomicrurus இனமும் உள்ளது. முன்னர் ஒரே இனமாகக் கருதப்பட்ட இவை, அண்மைய ஆய்வு முடிவுகளில் வேறு எனக் கண்டறியப்பட்டது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகோய்க்கு விருது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி இரஞ்சன் கோகோய்க்கு அஸ்ஸாம் மாநிலத்தின் உயரிய விருதான ‘பைபவ் விருது’ வழங்கப்படவுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஹிமாந்த பிசுவாஸ் சர்மா அறிவித்துள்ளார். பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறும் விழாவில், அஸ்ஸாம் மாநில ஆளுநர் அவ்விருதை வழங்கவுள்ளார்.