Tnpsc Current Affairs in Tamil – 16th February 2024
1. ‘Cuscuta dodder’ என்றால் என்ன?
அ. ஆக்கிரமிப்பு களை
ஆ. மீன்
இ. தீ நுண்மம்
ஈ. சிலந்தி
- வட அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட ஓர் ஆக்கிரமிப்பு களையான ‘Cuscuta dodder – அம்மையார் கூந்தல்’, தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்ட காடுகளையும், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தையும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகிறது. உள்ளூர் சூழலியல் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகளின் வாழ்விடங்களை இது மிகுந்து ஆக்கிரமித்து வருகிறது. இந்த ஒட்டுண்ணி கொடிக்கு வேர்கள் இல்லை. இது இதன் ஓம்பியிலிருந்து உணவையும் நீரையும், கனியுப்பையும் எடுத்துக்கொள்கின்றது. இது ஒரு முழு ஒட்டுண்ணித் தாவரமாகும்.
2. அண்மையில், 2024 – உலக அரசுகள் உச்சிமாநாட்டில், AI அடிப்படையில் இயங்கும் அரசு சேவைகளுக்கான 9ஆவது ‘GovTech’ பரிசை வென்ற நாடு எது?
அ. ஐக்கிய அரபு அமீரகம்
ஆ. இந்தியா
இ. கத்தார்
ஈ. துருக்கி
- துபாயில் நடைபெற்ற 2024 – உலக அரசுகள் உச்சிமாநாட்டில், அரசு சேவைகளை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவை (AI) புதுமையான முறையில் பயன்படுத்தியதற்காக இந்தியா 9ஆவது ‘GovTech’ பரிசை வென்றது. இந்த விருது இந்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகளுக்கான அமைச்சகத்தின், ‘iRASTE’ என்ற திட்டத்துக்காக வழங்கப்பட்டுள்ளது. அமீரக சிறந்த அரசாங்க சேவைகள் திட்டமானது வருடாந்திர ‘GovTech’ பரிசு மற்றும் ‘M-Gov விருது’ ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
3. காஜி நேமுவை (சிட்ரஸ் எலுமிச்சை) அதன் மாநிலப்பழமாக அறிவித்துள்ள மாநில அரசு எது?
அ. நாகாலாந்து
ஆ. மணிப்பூர்
இ. அஸ்ஸாம்
ஈ. சிக்கிம்
- அஸ்ஸாம் மாநில அரசு, காஜி நேமு (சிட்ரஸ் எலுமிச்சை) என்ற எலுமிச்சை வகையை அதிகாரப்பூர்வமான, ‘மாநிலப் பழமாக’ அறிவித்துள்ளது. மாநில விவசாய அமைச்சர் அதுல் போரா இந்த முடிவை அறிவித்தார். இந்தப்பழம் அஸ்ஸாம் மாநிலம் மற்றும் அதன் மக்களின் கலாச்சார, பாரம்பரிய மற்றும் ஊட்டச்சத்து முக்கியத்துவத்தை குறிக்கின்றது.
4. Automated Permanent Academic Account Registry (APAAR) உடன் தொடர்புடையது எது?
அ. பிரகதி உதவித்தொகை
ஆ. ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை
இ. ஒரே பாரதம் ஒப்பிலா பாரதம்
ஈ. சமர சிக்ஷா
- 2020 – தேசிய கல்விக்கொள்கை மற்றும் தேசிய கிரெடிட் மற்றும் தகுதிகள் கட்டமைப்பிற்கு ஏற்ப கல்வி அமைச்சகம் 25 கோடி APAAR அடையாள அட்டைகளை உருவாக்கியுள்ளது. ‘ஒரே நாடு, ஒரே மாணவர் அடையாள அட்டை’ என்ற முன்னெடுப்பானது, ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட 12 இலக்கம் கொண்ட அடையாள அட்டையை ஒதுக்கி, கல்விப்பதிவுகளை ஒழுங்குபடுத்துகிறது. இந்த அமைப்பு மோசடி மற்றும் நகல்களை குறைப்பதோடு கல்வி நிறுவனங்களுக்கு நம்பகத்தை வழங்குகிறது.
5. அண்மையில் காலமான உஷா கிரண் கானுடன் தொடர்புடைய துறை எது?
அ. விளையாட்டு
ஆ. அரசியல்
இ. இலக்கியம்
ஈ. மருந்து
- புகழ்பெற்ற எழுத்தாளர் உஷா கிரண் கான் (78), அண்மையில் காலமானார். 2015இல், ‘பத்மஸ்ரீ’ விருதுபெற்ற உஷா கிரண் கான், சாகித்திய அகாதெமி விருது, மகாதேவி வர்மா விருது, தினகர் தேசிய விருது மற்றும் பாரத்-பாரதி போன்ற பல்வேறு இலக்கிய விருதுகளைப் பெற்றுள்ளார்.
6. அண்மையில் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி மேற்கூரை சூரியசக்தி மின்மயமாக்கல் திட்டத்தின்கீழ் மாதத்திற்கு எத்தனை அலகு இலவச மின்சாரம் வழங்கப்படும்?
அ. 300
ஆ. 200
இ. 400
ஈ. 500
- 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 அலகு இலவச மின்சாரம் வழங்கும் `75,000 கோடி மதிப்பிலான திட்டமான பிரதம மந்திரி மேற்கூரை சூரியசக்தி மின்மயமாக்கல் திட்டத்தை இந்தியப் பிரதமர் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு மானியங்கள்மூலமா மேற்கூரையில் சூரிய அமைப்புகளை நிறுவ ஊக்குவிக்கிறது. வருடாந்திர சேமிப்பு, மின்சார வாகனம் மின்னேற்றம், தொழில்முனைவு மற்றும் சூரியசக்தி தொடர்பான துறைகளில் வேலைவாய்ப்புகள் ஆகிய நன்மைகள் இதில் அடங்கும்.
7. ஹோரி ஹப்பாவுடன் தொடர்புடைய மாநிலம் எது?
அ. இராஜஸ்தான்
ஆ. கேரளா
இ. மணிப்பூர்
ஈ. கர்நாடகா
- கர்நாடக மாநிலத்தில் காளைகளை அடக்கும் விளையாட்டான ஹோரி ஹப்பாவின்போது ஏற்பட்ட உயிரிழப்புகள் விலங்குகள் மற்றும் மனிதர்களின் பாதுகாப்புகுறித்த கவலையை எழுப்பியுள்ளது. தமிழ்நாட்டின் ஏறுதழுவுதல், கடலோர கர்நாடக மாநிலத்தின் கம்பாலா, ஆந்திர பிரதேசத்தின் சேவல் சண்டை, அஸ்ஸாமின் கொண்டைக்குருவி சண்டை மற்றும் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் மாட்டு வண்டிப் பந்தயங்கள் போன்ற நிகழ்வுகள் இதனுடன் தொடர்புடையவையாக உள்ளன.
8. போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா திருக்கோவிலானது ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) எந்த நகரத்தில் திறக்கப்பட்டுள்ளது?
அ. அபுதாபி
ஆ. துபாய்
இ. அஜ்மான்
ஈ. கல்பா
- பிப்.14 அன்று, அபுதாபியில் கட்டப்பட்டுள்ள போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா திருக் கோவிலை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார். வேதங்களில் வேரூன்றிய ஒரு சமூக-ஆன்மீக இந்துமத நம்பிக்கையான போச்சசன்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தாவானது முறையாக பொ ஆ 1907 இல் நிறுவப்பட்டது. இது நடைமுறை ஆன்மீகத்தை ஊக்குவித்து ஆன்மீக, தார்மீக மற்றும் சமூகம்சார் சவால்களை எதிர்கொள்கிறது. இதனை பின்தொடர்பவர்கள் 5 வாழ்நாள் உறுதிமொழிகளை கடைப்பிடிக்கின்றனர். மேலும் இந்த அமைப்பு உலகளாவிய மனிதாபிமான நடவடிக்கைகள், கல்வி, பெண்கள் மேம்பாடு ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது. ஐநா பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் NGO அந்தஸ்தையும் இது பெற்றுள்ளது.
9. சமீபத்தில், புது தில்லியில் உள்ள AIIMSஉம் லிவர்பூல் பல்கலைக்கழகமும் எதன் ஆராய்ச்சிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன?
அ. புற்றுநோய்
ஆ. எய்ட்ஸ்
இ. நீரிழிவு நோய்
ஈ. காசநோய்
- அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (AIIMS), புது தில்லி மற்றும் லிவர்பூல் பல்கலைக்கழகம் ஆகியவை AIIMS Liverpool Collaborative Centre for Translational Research in Head & Neck Cancer (ALHNS) என்ற ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒத்துழைப்பு மருத்துவக் கண்டுபிடிப்பு மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சர் Dr மன்சுக் மாண்டவியா முன்னிலையில் கையொப்பமான இந்த ஒப்பந்தம், அனைத்து குடிமக்களுக்கும் மலிவான மருத்துவச் சேவையும் வழங்க எண்ணும் நாட்டின் இலக்குடன் ஒத்துப்போகிறது.
10. பின்வரும் எந்த நகரத்தில் உலகின் முதல் வான்வழி வாடகையுந்துச் சேவை வரவுள்ளது?
அ. புது தில்லி
ஆ. துபாய்
இ. லண்டன்
ஈ. அபுதாபி
- துபாயில் நடந்த 2024 – உலக அரசுகள் உச்சிமாநாட்டில் உலகின் முதல் வான்வழி வாடகையுந்துச் சேவைக்கான திட்டங்களை வெளியிட்டு துபாய் வரலாறு படைத்தது. நான்கு பயணிகள் மற்றும் ஒரு விமானிக்கு இடமளிக்கும் வகையில், ‘Joby Aviation S4’ஐப் பயன்படுத்தி நகரம் முழுவதும் மின்சாரத்தில் இயங்கும் வான்வழி வாடகையுந்துச் சேவையை அந்நகரம் தொடங்கவுள்ளது. 2026இல் தொடங்கப்படும் இந்த முன்னெடுப்பானது நிலையான மற்றும் அணுகக்கூடிய நகர்ப்புற போக்குவரத்துக்கான துபாய் நகரத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
11. தேசிய பொதுமை ஆவணப் பதிவு அமைப்பைத் தொடங்கிய அமைச்சகம் எது?
அ. உள்துறை அமைச்சகம்
ஆ ஊரக வளர்ச்சி அமைச்சகம்
இ. கார்ப்பரேட் விவகார அமைச்சகம்
ஈ. சுற்றுலா அமைச்சகம்
- தேசிய பொதுமை ஆவணப் பதிவு அமைப்பு (NGDRS) மற்றும் தனித்துவமான நிலத்கதொகுப்பு அடையாள எண் (ULPIN) ஆகியவை நிலவளத்துறைச்செயலரால் அஸ்ஸாம் மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட NGDRS என்பது நாடு முழுவதும் உள்ள பதிவுத் துறைகளுக்கான ஒரு பொதுவான பயன்பாடாகும். புனே தேசிய தகவலியல் மையத்தால் உருவாக்கப்பட்ட இது, இணையவழியில் நிலம் வாங்கல், சொத்து மதிப்பீடு மற்றும் ஆவணங்களைச் சமர்ப்பித்தல் ஆகியவற்றிற்கான பயனர் நட்பு இடைமுகத்தை வழங்குகிறது. மேலும் துணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு பலமுறை வருகைதரவேண்டிய அவசியத்தையும் இது வெகுவாகக் குறைக்கிறது.
12. புபோனிக் பிளேக் என்பது பின்வருவனவற்றில் எதனால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்?
அ. பாக்டீரியா
ஆ. வைரஸ்
இ. பூஞ்சை
ஈ. புழுக்கள்
- பொதுவாக சிறிய பாலூட்டிகளில் காணப்படுகிற புபோனிக் பிளேக் நோயானது ‘Yersinia pestis’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. ‘கருப்புச்சாவு’ எனப் பொதுவாக அழைக்கப்படுகிற இது, இடைக்காலத்தில் இலட்சக்கணக்கானோரின் இறப்புக்குக் காரணமாக அமைந்தது. குளிர்க்காய்ச்சல், வயிறு, கை, கால் வலி, நிணநீர் கணுக்கள் வீங்குதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். தெள்ளுப்பூச்சிமூலம் பரவும் இது, 30-60% இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. சிப்ரோபிளோக்சசின் / டாக்ஸிசைக்ளின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள்மூலம் இதற்குச் சிகிச்சையளிக்க முடியும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தேர்தல் பத்திர முறை இரத்து: உச்சநீதிமன்றம்.
தேர்தல் நிதி பத்திர திட்டத்தை இரத்துசெய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர் அல்லது நிறுவனங்கள், ரொக்கமாக அல்லது காசோலையாக நன்கொடை கொடுப்பதற்குப் பதிலாக, தேர்தல் நிதி பத்திரம்மூலம் நன்கொடை அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டில் அமல்படுத்தியது. அந்தத் திட்டத்தின்மூலம், குறிப்பிட்ட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை கொடுக்க விரும்புவோர், பாரத வங்கியில் `1 முதல் ஒரு கோடி வரை பணத்தை செலுத்தி, தேர்தல் நிதி பத்திரத்தைப் பெற்று, அதை சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு கொடுக்கலாம். ஒரு நிறுவனம் எத்தனை தேர்தல் பத்திரங்கள் வேண்டுமானாலும் பெறலாம். அந்தப் பத்திரத்தில் எந்தக் கட்சியின் பெயரும் இடம்பெறாது. அந்தப் பத்திரத்தைக் கொடுப்பவரின் பெயரும் இடம்பெறாது.
தகவலில் வெளிப்படைத்தன்மை இல்லாத தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மீறும் வகையில் உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு எதிராக உள்ளதாகவும் அரசியல் சாசன பிரிவு 19 (1) மீறியுள்ளதாகவும் அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி ஒய் சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு இத்தீர்ப்பை வழங்கியது. 5 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர்.
2. இராமர் திருக்கோவில் நினைவு நாணயம்: நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இந்திய அரசுக்குச்சொந்தமான, ‘இந்திய பணம் அச்சிடும் கழகத்தின்’ 19ஆவது தொடக்க விழாவையொட்டி மூன்று நினைவு நாணயங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். இந்த நாணயங்கள், அயோத்தி இராமர் திருக்கோவில், இந்தியாவின் அழிந்துவரும் விலங்கான பெரிய ஒற்றைக்கொம்பு காண்டாமிருகம் மற்றும் ‘புத்தரின் ஞானம்’ ஆகியவற்றைக் கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்டவை ஆகும்.