TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 16th December 2023

1. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, ‘வாகயாமா சோரியு’ என்றால் என்ன?

அ. ஒரு சிறுகோள்

ஆ. ஒரு புதைபடிமம்

இ. ஒரு கலைப்படைப்பு

ஈ. ஒரு பாரம்பரியம்

  • ஜப்பானின் வகாயாமா மாகாணத்தில் கண்டறியப்பட்ட வேட்டையாடும் மொசாசரஸ் புதைபடிவத்திற்கு, ‘வாகயாமா சோரியு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு நீல டிராகன் எனப் பொருள். ஏறக்குறைய 72 மில்லியன் ஆண்டுகள் பழமையான இப்புதைபடிவத்தை ஆராய்ச்சியாளர் அகிஹிரோ மிசாகி கடந்த 2006ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இந்தப் புதைபடிவம் குறித்து அண்மையில் ஜர்னல் ஆஃப் சிஸ்டமேடிக் பேலியோண்டாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் விவரிக்கப்பட்டது.

2. SPECS திட்டத்தை நிர்வகிக்கிற அமைச்சகம் எது?

அ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஆ. வேளாண் அமைச்சகம்

இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. வணிக அமைச்சகம்

  • `10,000 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்ட Scheme for Promotion of Manufacturing of Electronic Components and Semiconductors (SPECS) திட்டத்தைத் தொடங்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது, இந்தியாவை உலகளாவிய மின்னணு மையமாக நிலைநிறுத்துவதற்கான பணிக்கு ஏற்ப மின்னணு பாகங்கள் மற்றும் குறைக்கடத்திகள் உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3. அதன் கடன் வரம்பை மத்திய அரசு கட்டுப்படுத்தியதை அடுத்து அண்மையில் உச்சநீதிமன்றத்தை அணுகிய மாநில அரசு எது?

அ. தமிழ்நாடு

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. கேரளா

ஈ. தெலுங்கானா

  • அரசியலமைப்பின்கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள மாநிலத்தின் நிதி தன்னுரிமைக்கு இடையூறாக இருப்பதாகக் கூறி, தனது நிகர கடன் வரம்பைக் கட்டுப்படுத்தும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து கேரள அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. மத்திய அரசின் திட்டங்களுடன் கடன் உச்சவரம்பை இணைப்பது மற்றும் மாநிலத்துக்குத் தரவேண்டிய நிதியை நிறுத்திவைப்பது போன்றவை அதன் பொருளாதாரம் மற்றும் மக்கள்நலனை கடுமையாகப் பாதிக்கிறது என்று கேரள மாநிலம் கூறியுள்ளது.

4. அண்மையில், ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆனந்த் திருமணச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்தச் சட்டம் கீழ்காணும் எதற்குச் சட்டரீதியான அங்கீகாரத்தை அளிக்கிறது?

அ. சாதி ரீதியான கலப்புத் திருமணம்

ஆ. மத ரீதியான கலப்புத் திருமணம்

இ சீக்கிய திருமணம் மற்றும் திருமணச் சடங்குகள்

ஈ. இந்து திருமணம் மற்றும் சடங்குகள்

  • சீக்கியர்களின் திருமணச் சடங்குகளுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரமும் பதிவு ஏற்பாடுகளையும் வழங்கும் ஆனந்த் திருமணச் சட்டம் ஜம்மு & காஷ்மீரில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இம்முக்கியச்சட்டத்தின்கீழ் ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆனந்த் திருமணப்பதிவுக்கு தனி விதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், சீக்கிய சமூகத்தின் நீண்டகால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

5. இராமர் கோவில் ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளையின் பொருளாளர் யார்?

அ. மஹந்த் நிருத்யகோபால் தாஸ்

ஆ. கோவிந்த் தேவகிரி

இ. சம்பத் ராய்

ஈ. நிருபேந்திர மிஸ்ரா

  • கோவிந்த் தேவகிரி என்பவர் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த அறக்கட்டளையின் பொருளாளராக உள்ளார். இந்தத் தீர்த்த அறக்கட்டளையானது உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் இராமர் கோவில் வளாகத்தில் திறப்புவிழாவிற்கு முன்னதாக நடைபெறும் ஏற்பாடுகளை மேற்பார்வையிடுகிறது. இராமாயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த, ‘ஜடாயு’ போன்ற பாத்திரங்களின் சிலைகளை நிறுவுவதும் இதில் அடங்கும்.

6. இந்தியாவின் முதல் பூவாத் தாவரங்களுக்கானத் தோட்டம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. சிக்கிம்

ஆ. ஹிமாச்சல பிரதேசம்

இ. உத்தரகாண்ட்

ஈ. மேற்கு வங்காளம்

  • உத்தரகாண்ட் வனத்துறையின் ஆராய்ச்சிப்பிரிவு இந்தியாவின் முதல் பூவாத் தாவரங்களுக்கானத் தோட்டத்தை நிறுவியுள்ளது. இந்தத் தோட்டத்தில் பல்வேறு அழிந்துவரும் ஊசியிலை இனங்கள் பாதுகாக்கப்படும். உத்தரகாசி மாவட்டத்தில் 8,000 அடி உயரத்தில் உள்ள இராடி மேட்டில் ஒரு ஹெக்டேர் பரப்பளவில் இந்தத் தோட்டம் உள்ளது. 2024 மார்ச் மாதம் முதல் இந்தத் தோட்டம் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்படும்.

7. PM-DevINE திட்டம் என்பது எங்குள்ள உட்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரத்தியேகமாக இலக்காகக்கொண்ட அரசாங்கத்தின் ஒரு புதிய முன்னெடுப்பாகும்?

அ. 150 மிகவும் பின்தங்கிய மாவட்டங்கள்

ஆ. மிகவும் பின்தங்கிய பழங்குடியினர் பகுதிகள்

இ. வடகிழக்கு இந்தியா

ஈ. கடலோரப் பகுதிகள்

  • `6,600 கோடி மதிப்பிலான PM-DevINE (Prime Minister’s Development Initiative for North-East Region – வடகிழக்குப் பிராந்தியத்திற்கான பிரதம மந்திரியின் மேம்பாட்டு முன்னெடுப்பு) திட்டம் என்பது 2022-2023 முதல் 2025-2026 வரையிலான 4 ஆண்டுகாலத்திற்கு, வடகிழக்கிந்தியாவில் உள்ள உட்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரத்யேகமாக இலக்காகக் கொண்டு செயல்படும் இந்திய அரசாங்கத்தின் ஒரு புதிய முன்னெடுப்பாகும்.

8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற, “ஹஃப்தா-14” செயல்திட்டம் சார்ந்த நாடு எது?

அ. மாலத்தீவுகள்

ஆ. ஆப்கானிஸ்தான்

இ. ஈரான்

ஈ. இலங்கை

  • அதன் இறையாண்மையை மேற்கோள்காட்டி, இந்தியாவுடனான நீரியல் ஆய்வு ஒப்பந்தத்தை புதுப்பிக்கப்போவது இல்லை என மாலத்தீவு அறிவித்துள்ளது. கடந்த 2019இல் கையெழுத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம், பவளப்பாறைகள், கழிமுகங்கள் மற்றும் கடற்கரையோரங்கள் உள்ளிட்ட மாலத்தீவின் பிராந்திய நீர்நிலைகளை ஆய்வுசெய்ய இந்திய நாட்டை அனுமதித்தது. மாலத்தீவின் இறையாண்மைக்கு இடரை விளைவிக்கும் இருதரப்பு ஒப்பந்தங்களை ரத்து செய்வதை நோக்கமாகக் கொண்ட, “ஹஃப்தா-14” செயல்திதிட்டத்தின் ஒருபகுதியாக ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டாம் என்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.

9. 2023ஆம் ஆண்டுக்கான அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு பெற்ற இரண்டு பேருள் ஒருவரான அமைதி ஆர்வலர் அலி அபு ஔவாத் சார்ந்த நாடு எது?

அ. கத்தார்

ஆ. பாலஸ்தீனம்

இ. வங்காளதேசம்

ஈ. இந்தியா

  • புகழ்மிகு மரபார்ந்த பியானோ கலைஞரும் நடத்துநருமான டேனியல் பாரன்போயிம் மற்றும் பாலஸ்தீனிய அமைதி ஆர்வலர் அலி அபு அவாத் ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான பரிசு வழங்கப்பட்டது. இந்த விருது இஸ்ரேல் இளையோர் மற்றும் மக்களை ஒன்றிணைப்பதில் அவர்களின் சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கிறது. அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான இந்திரா காந்தி பரிசு என்பது சர்வதேச அமைதி, ஆயுதக்குறைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் மதிப்புமிக்க ஒரு பரிசாகும்.

10. அணுவாற்றல் துறை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த IDRS ஆய்வகங்களின் அறிவியலாளர்கள் இணைந்து கீழ்காணும் எந்த நோய்க்கான சிகிச்சைக்காக அக்டோசைட் மாத்திரைகளை உருவாக்கவுள்ளனர்?

அ. HIV

ஆ. COVID-19

இ. புற்றுநோய்

ஈ. நீரிழிவு நோய்

  • அணுவாற்றல் துறை மற்றும் பெங்களூருவைச் சேர்ந்த IDRS ஆய்வகங்களின் அறிவியலாளர்கள் இணைந்து இடுப்புப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காக அக்டோசைட் மாத்திரைகளை உருவாக்கவுள்ளனர். இந்த மாத்திரைகள் புற்றுநோய் கதிரியக்க சிகிச்சைக்கு துணைபுரிவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன; அவை மீளுருவாக்கம் செய்யும் ஊட்டச்சத்து மருந்து, இம்யூனோமோடூலேட்டர் மற்றும் ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகின்றன.
  • இந்த ஒத்துழைப்பில் பாபா அணு ஆராய்ச்சி மையம், டாடா நினைவு மருத்துவமனை மற்றும் IDRS ஆய்வகங்களுடன் இணைந்து புற்றுநோய்க்கான பயிற்சி ஆராய்ச்சி & கல்விக்கான மேம்பட்ட மையம் ஆகியவற்றின் நிபுணர்களும் உள்ளனர். இந்தக் கூட்டு முயற்சியின் முதன்மை நோக்கம் கதிரியக்க சிகிச்சையின் பக்கவிளைவுகளைக் குறைப்பதாகும். அக்டோசைட், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் (FSSAI) ஒப்புதல் பெற்றுள்ளது. இந்த வளர்ச்சி இடுப்புப் புற்றுநோய் பராமரிப்பில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும்.

11. ஆன்டிம் பங்கல் சார்ந்த விளையாட்டு எது?

அ. பூப்பந்து

ஆ. கிரிக்கெட்

இ. மல்யுத்தம்

ஈ. தடகளம்

  • யுனைடெட் வேர்ல்ட் மல்யுத்த அமைப்பால் இந்திய மல்யுத்த வீராங்கனை ஆன்டிம் பங்கால், பெண்களிடையே ஆண்டின் சிறந்த வீராங்கனையாகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். 53 கிலோ பிரிவில் போட்டியிடும், 19 வயதான அவர், ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றதன்மூலம் தனது வெற்றியைத்தொடங்கினார். பெண்களுக்கான 53 கிகி பிரிவில் இந்தியா சார்பாக 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் அவர் பங்கேற்கவுள்ளார்.

12. அண்மையில், எந்த மத்திய கிழக்கு நாடு, இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு நுழைவு இசைவுக்கானத் தேவைகளை இரத்துசெய்ய முடிவுசெய்துள்ளது?

அ. ஈரான்

ஆ. ஈராக்

இ. சிரியா

ஈ. லெபனான்

  • சுற்றுலாவை மேம்படுத்தவும், அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கான விசா தேவைகளை இரத்துசெய்ய ஈரான் முடிவுசெய்துள்ளது. இதற்குமுன் மலேசியா, இலங்கை மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகள் இந்தியர்களுக்கு இதே சலுகையை வழங்கியிருந்தது. இந்தியா, ரஷ்யா, ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஜப்பான், பிரேசில், மெக்ஸிக்கோ முதலிய நாடுகள் ஈரானின் இந்த முடிவில் அங்கீகரிக்கப்பட்ட 33 நாடுகளில் அடங்கும். துருக்கி, அஜர்பைஜான், ஓமன், சீனா, ஆர்மீனியா, லெபனான் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு ஈரான் முன்பு விசா தள்ளுபடி திட்டங்களை செயல்படுத்தியிருந்தது.

13. 2023 – ASEAN-இந்தியா தினை திருவிழா நடைபெற்ற நகரம் எது?

அ. சிங்கப்பூர்

ஆ. புது தில்லி

இ. ஜகார்த்தா

ஈ. கோலாலம்பூர்

  • ASEAN-இந்தியா தினை திருவிழாவானது இந்தியாவின் விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்துடன் இணைந்து ஆசியானின் இந்திய தூதரகத்தால் நடத்தப்பட்டது. சர்வதேச தினை ஆண்டு என அறிவிக்கப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கேற்ப ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள இத்திருவிழா, தினை மற்றும் தினைசார்ந்த பொருட்களுக்கான விழிப்புணர்வை அதிகரிப்பதற்கும் சந்தையை பெருக்குவதற்கும் நோக்கமாகக் கொண்டு டிசம்பர்.14ஆம் தேதி புது தில்லியில் தொடங்கப்பட்டது. இதில் இந்தியா மற்றும் கம்போடியா, இந்தோனேஷியா, மலேசியா போன்ற ASEAN நாடுகளின் பங்கேற்பு இருந்தது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. மகளிருக்கான மத்திய அரசின் திட்டங்கள்…

பெண் குழந்தைகளை காப்போம் திட்டம்: பெண் குழந்தைகளின் நலனைப் பாதுகாக்கவும் அவர்களின் கல்வியை உறுதிபடுத்தவும் கடந்த 2015இல், ‘பெண் குழந்தைகளை காப்போம் – பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம்’ தொடங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த சேவைகள் மையம்: சமூகம், குடும்பத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எவ்வித பாகுபாடின்றி பாதுகாப்பளிக்கவும் ஆதரவளிக்கும் நோக்கிலும், ‘ஒருங்கிணைந்த சேவைகள் மையம்’ (One Stop Centre) தொடங்க -ப்பட்டது. இத்திட்டத்தின்கீழ் 733 மையங்களுக்கு அரசு ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது 703 மையங்கள் செயல்பாட்டில் உள்ளன. இம்மையங்கள் தனியார் மற்றும் பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தல், பாலியல் வன்கொடுமை, குடும்ப வன்முறை, கடத்தல், திராவக வீச்சு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மருத்துவ உதவி, சட்ட உதவி, ஆலோசனை உதவி, தங்குமிட வசதி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம்: கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் உடல் நலத்தை மேம்படுத்த மத்திய அரசால் தொடங்கப்பட்ட நிதியுதவி திட்டமே ‘பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டமாகும்’. இத்திட்டத்தின்கீழ் தகுதியான பெண்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.

பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம்: பெண்களின் சுகாதார நலனை மேம்படுத்துவதற்காக, ‘பிரதமரின் மக்கள் மருந்தக மையங்கள்’ தொடங்கப்பட்டன. இந்த மையங்களில் மிகக்குறைந்த விலையிலான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அவ்வகையில் 10,000 மருந்தகங்கள் மூலம் `1இல் சானிட்டரி நாப்கின்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் இம்மையங்களில் சானிட்டரி நாப்கின் வாங்கும் கிராமப்புற பெண்களின் எண்ணிக்கை 11-12 சதவீதத்திலிருந்து 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதன்மூலம் இம்மையங்களில் விற்பனை செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களின் எண்ணிக்கை தேசிய அளவில் மொத்தமாக (நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம்) 30 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்ந்துள்ளது.

ஆயுஷ்மான் பாரத் திட்டம்: ஏழை எளிய மக்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட ‘பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் ஜன் ஆரோக்கிய’ திட்டத்தின்கீழ் நவம்பர்.30ஆம் தேதி வரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 கோடி பேரில் 3.5 கோடி பேர் பெண்களாவர்.

எழுந்துநில் இந்தியா திட்டம்: பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்காக தொடங்கப்பட்ட, ‘எழுந்துநில் இந்தியா’ திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக `10 லட்சம் முதல் `1 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 80 சதவீத பயனாளர்களாக பெண்களே உள்ளனர்.

பிரதமர் வீட்டுவசதித்திட்டம்: பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் பதியப்பட்ட வீடுகளில் எழுபது சதவீத வீடுகள், பெண்களின் பெயரிலேயே பதிவாகியுள்ளது. பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு தொடங்கப் -பட்ட, ‘செல்வமகள் சேமிப்புத் திட்டத்தின்கீழ்’ 3 கோடி பெண் குழந்தைகளின் வாழ்வு வளமையாக்கப்பட்டுள்ளது.

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு: நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதன்மூலம் பல ஆண்டுகளாக நிராகரிக்கப்பட்டு வந்த பெண்களுக்கான உரிமையை நிலைநிறுத்தப்பட்டு உள்ளது. மேலும் பிரதமரின் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் பத்துக் கோடி பெண்களின் நலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பத்துக்கோடி வீடுகளுக்கு குழாய்மூலம் குடிநீர் இணைப்பு வழங்கும் முன்னெடுப்பின்கீழ் தற்போது வரை 50 சதவீத வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin