Tnpsc Current Affairs in Tamil – 16th April 2024
1. உலகின் மிகப்பெரிய கலப்பு முறை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா நிறுவப்படவுள்ள மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. குஜராத்
இ. இராஜஸ்தான்
ஈ. ஒடிசா
- அதானி குழுமத்தின் ஓர் அங்கமான அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம், குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள கௌடாவில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்காவை நிர்மாணித்து வருகிறது. இது 538 சகிமீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இதன் மொத்த உற்பத்தித்திறன் 30 GWஆக திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது `1.5 இலட்சம் கோடி முதலீட்டில், 2 GW மின்னுற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2025 மார்ச்சுக்குள் 6 GWஆக அது விரிவாக்கப்படும். இது 81 பில்லியன் அலகுகளை உற்பத்தி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது.
2. பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் $375 மில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடு எது?
அ. பிலிப்பைன்ஸ்
ஆ. வியட்நாம்
இ. எகிப்து
ஈ. மலேசியா
- எத்தியோப்பியா, மொசாம்பிக், ஐவரி கோஸ்ட், பிலிப்பைன்ஸ், ஆர்மீனியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளுடன் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளை இந்தியா வலுப்படுத்தவுள்ளது. இந்த முன்முயற்சி அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு இடையே உலகளாவிய கூட்டாண்மைகளை விரிவுபடுத்துவதற்கான இந்திய நாட்டின் குறிக்கோளுடன் ஒத்துப்போகிறது. தென்சீனக்கடலில் சீனதேசத்தின் உறுதிப்பாட்டை எதிர்கொள்வதற்காக பிலிப்பைன்ஸுடனான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதை இந்தியா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அண்மைய ஒப்பந்தங்களில் பிரமோஸ் ஏவுகணைகளுக்கான $375 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தமும் அடங்கும்.
3. 2024 – மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Encouraging Scientific Curiosity
ஆ. Way for Space
இ. Conservation of Outer Space
ஈ. Beginning of the Space Era for Mankind
- மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச நாள் ஆண்டுதோறும் ஏப்.12 அன்று கொண்டாடப்படுகிறது. கடந்த 1961ஆம் ஆண்டில் விண்வெளிக்குப் பயணம் மேற்கொண்ட முதல் மனிதரான யூரி ககாரின் நினைவாக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. அமைதியான விண்வெளி ஆய்வுக்கு வாதிடும் நோக்கில் கடந்த 2011இல் ஐநா அவை இந்த நாளை அறிவித்தது. 2024ஆம் ஆண்டில் வரும் மனித விண்வெளிப் பயணத்திற்கான சர்வதேச நாளுக்கானக் கருப்பொருள், “Encouraging Scientific Curiosity” என்பதாகும்.
4. அண்மையில், பிரித்தானியாவால் இந்தியாவுக்கான முதல் பெண் உயராணையராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. லில்லி குணசேகர்
ஆ. லிண்டி கேமரூன்
இ. அலிசியா ஹெர்பர்ட்
ஈ. கில் அட்கின்சன்
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணாக்கரும், இங்கிலாந்தின் தேசிய இணையவெளிப் பாதுகாப்பு மையத்தின் முன்னாள் தலைமைச் செயல்அதிகாரியுமான லிண்டி கேமரூன், இந்தியாவுக்கான முதல் பெண் உயர் ஆணையராக பிரித்தானியாவால் நியமிக்கப்படுள்ளார். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நியமனம், இங்கிலாந்து-இந்தியா இடையேயான 70 ஆண்டு உறவுகளை எடுத்துக்காட்டுகிறது.
5. எந்த இருநாடுகளுக்கு இடையே, ‘டஸ்ட்லிக்’ என்ற கூட்டு இராணுவப் பயிற்சி நடத்தப்பட்டது?
அ. இந்தியா மற்றும் உஸ்பெகிஸ்தான்
ஆ. இந்தியா மற்றும் ரஷ்யா
இ. இந்தியா மற்றும் தஜிகிஸ்தான்
ஈ. உஸ்பெகிஸ்தான் மற்றும் கஜகஸ்தான்
- இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையேயான 5ஆவது கூட்டு இராணுவப்பயிற்சியான டஸ்ட்லிக்கில் பங்கேற்பதற்காக இந்திய இராணுவ அணியினர் புறப்பட்டுச்சென்றனர். இப்பயிற்சியானது 2024 ஏப்ரல்.28 வரை உஸ்பெகிஸ்தான் குடியரசின் டெர்மெஸில் நடத்தப்படவுள்ளது. ‘டஸ்ட்லிக்’ பயிற்சி, இந்தியாவிலும் மற்றும் உஸ்பெகிஸ்தானிலும் மாறி மாறி நடத்தப்படும் வருடாந்தர நிகழ்வாகும். முந்தைய பயிற்சி கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரியில் பித்தோராகரில் (இந்தியா) நடத்தப்பட்டது.
- ராணுவ ஒத்துழைப்பை வளர்ப்பது, மலைப்பாங்கான மற்றும் அரை நகர்ப்புற நிலப்பரப்பில் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒருங்கிணைந்த திறன்களை மேம்படுத்துவது, ‘டஸ்ட்லிக்’ பயிற்சியின் நோக்கமாகும். உயர் அளவிலான உடற்தகுதி, கூட்டுத்திட்டமிடல், கூட்டாக உத்திகள் வகுத்தல், சிறப்பு ஆயுத திறன்களின் அடிப்படைகள் ஆகியவற்றிலும் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தும்.
6. அண்மையில், ‘Queqiao-2’ என்ற தகவல் தொடர்பு செயற்கைக்கோளை ஏவிய நாடு எது?
அ. உருசியா
ஆ. ஜப்பான்
இ. இந்தியா
ஈ. சீனா
- சீனாவின் தேசிய விண்வெளி முகமையானது, ‘Queqiao-2’ என்ற செயற்கைக்கோளை வெற்றிகரமாக ஏவியதாக அறிவித்துள்ளது. Queqiao-2 அல்லது Magpie Bridge 2 என்ற பெயருடைய இச்செயற்கைக்கோள் 1,200 கிலோ எடையுடையதாகவும் 4.2-மீட்டர் பரவளைய ஆண்டெனாவ உடையதாகவும் உள்ளது. இது 2030ஆம் ஆண்டு வரை புவிக்கும் நிலவில் நடத்தப்படும் ஆய்வுகளுக்கும் இடையிலான தகவல்தொடர்புகளை மிகவும் எளிதாக்கும்.
7. கௌதா புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பூங்கா அமைந்துள்ள மாநிலம் எது?
அ. குஜராத்
ஆ. இராஜஸ்தான்
இ. மகாராஷ்டிரா
ஈ. ஒடிஸா
- அதானி கிரீன் எனர்ஜி நிறுவனமானது குஜராத் மாநிலத்தின் கௌடா பகுதியில் உலகின் மிகப்பெரிய புதுப்பிக்கத் தக்க எரிசக்தி பூங்காவை நிறுவியுள்ளது. 538 சகிமீ பரப்பளவில், 45 GW திறன்கொண்ட இப்பூங்கா, முதன்மையாக சூரிய ஆற்றலில் இயங்குகிறது. குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள கௌடா, அதீத சூரியக்கதிர்வீச்சு மற்றும் காற்றின் வேகத்தைக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இது, எல்லைப்பாதுகாப்புப் படையினரால் மேற்பார்வையில் உள்ளது. தற்போது, `1.5 இலட்சம் கோடி முதலீட்டில் 30 MW தூய மின்சாரத்தை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
8. PACE செயற்கைக்கோளை ஏவிய விண்வெளி நிறுவனம் எது?
அ. NASA
ஆ. ISRO
இ. JAXA
ஈ. CNSA
- சூரிய-ஒத்திசைவு சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட NASAஇன் PACE செயற்கைக்கோள் தற்போது உயர்தர புவி கண்காணிப்புத் தரவுகளை பொதுவில் பகிர்ந்துகொள்ள முடிவு செய்துள்ளது. ஓஷன் கலர் இன்ஸ்ட்ரூமென்ட் (OCI) உடன் பொருத்தப்பட்டிருக்கும் துருவமானிகளான SPEXone மற்றும் HARP2 போன்றவற்றுடன் இது தூசு, மேகம் மற்றும் கடல்சார் ஆராய்ச்சியை மேம்படுத்துகிறது. OCIஇன் பரந்த நிறமாலை வரம்பானது அலைதாவரங்களை இனங்காண உதவுகிறது. இந்தத் தரவு கடல்வாழ் உயிரினங்கள், காற்றுத்துகள்கள், மீன்வள ஆரோக்கியம், பாசிப் பூக்கள், மாசுபாடு மற்றும் வளிமண்டலத்திலும் பெருங்கடல்களிலும் ஏற்படும் காலநிலை மாற்ற தாக்கங்கள் பற்றிய ஆய்வுகளை எளிதாக்குகிறது மற்றும் அறிவியல் புரிதலை மேம்படுத்துகிறது.
9. நீரிலிருந்து நுண் நெகிழித்துகள்களை அகற்றுவதற்காக அண்மையில் ஒரு நிலையான நீரேறிய களியை (hydro gel) உருவாக்கிய அமைப்பு எது?
அ. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
ஆ. இந்திய அறிவியல் கழகம்
இ. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில்
ஈ. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்
- இந்திய அறிவியல் கழகமானது நீரிலிருந்து நுண் நெகிழிகளை அகற்றுவதற்காக ஒரு புதிய நீரேறிய களியை உருவாக்கியுள்ளது. இந்த நீரேறிய களியானது ஒரு தனித்துவமான பாலிமர் வலையமைப்புடன் புறவூதா ஒளியைப் பயன்படுத்தி நுண்நெகிழித்துகள்களை பிணைத்து சிதைக்கிறது. இது 3 பாலிமர் அடுக்குகளை உள்ளடக்கியுள்ளது. அவை: சிட்டோசன், பாலிவினைல் ஆல்கஹால் மற்றும் பாலிஅனைலின் ஆகும்.
- செப்புக்கு மாற்றான பாலிஆக்சோமெட்டலேட் நானோக்ளஸ்டர்களுடன் இணைந்து இவை வினையூக்கிகளாக செயல்படுகிறது. பொதுவாக 5மிமீ-க்கும் குறைவான விட்டம் கொண்டவை நுண்நெகிழித்துகள்களாக, முதனிலை மற்றும் இரண்டாம் நிலை என வகைப்படுத்தப்படுகின்றன.
10. அண்மையில், அழற்சி எதிர்ப்புமருந்தான, ‘Nimesulide’ஐ பயன்படுத்துவதுகுறித்து மருந்து பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்ட நிறுவனம் எது?
அ. ICMR
ஆ. இந்திய மருந்தக ஆணையம்
இ. இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம்
ஈ. தகவல்தொடர்பு மற்றும் அறிவாற்றல் நரம்பியல் நிறுவனம்
- இந்திய மருந்தக ஆணையமானது ‘நிம்சுலைடு’ என்ற அழற்சி எதிர்ப்புமருந்தைப் பற்றிய பாதுகாப்பு எச்சரிக்கையை வெளியிட்டது. சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி நிறுவனமான இந்திய மருந்தக ஆணையம் மருந்துகுறித்த தரநிலைகளை தொடர்ந்து புதுப்பித்து வருகிறது. இது மருந்து அடையாளம், தூய்மை மற்றும் மனித மற்றும் விலங்குகளின் நலத்திற்கான தரநிலைகளை நிறுவுகிறது.
11. அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்னெடுப்பின் (SBTi) முதன்மை நோக்கம் என்ன?
அ. புவி வெப்பமடைதலை தொழிற்துறைக்கு முந்தைய நிலையைவிட 2°C-க்குக் குறைவாகக் கட்டுப்படுத்துதல்
ஆ. வட இந்தியாவில் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல்
இ. கடல் வளங்களின் நிலையான ஆய்வை ஊக்குவித்தல்
ஈ. பெருநிறுவன சமூகப்பொறுப்பை ஊக்குவித்தல்
- கடந்த 2015ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் முன்னெடுப்பு (Science Based Targets Initiative – SBTi), பாரிஸ் உடன்படிக்கைக்கு இணங்க பைங்குடில்இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைக்க அறிவியல் அடிப்படையிலான இலக்குகளை நிறுவுவதில் நிறுவனங்களை ஆதரிக்கிறது. இது (SBTi) இலக்குகளை தன்னிச்சையாக சரிபார்ப்பதோடு அண்மைய காலநிலை அறிவியலுடன் அதன் சீரமைவை உறுதிசெய்கிறது. இது 2030ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கும் 2050ஆம் ஆண்டளவில் நிகர-சுழிய உமிழ்வை அடைவதற்கும் அவசியமான, குறைந்த கால மற்றும் நீண்டகால இலக்குகளை வேறுபடுத்துகிறது.
12. குளோபல் பாரஸ்ட் வாட்ச் கண்காணிப்புத் திட்டத்தின் அண்மைய தரவுகளின்படி, 2000ஆம் ஆண்டிலிருந்து இந்தியா எவ்வளவு பரப்பில் அமைந்த மரங்களை இழந்துள்ளது?
அ. 3.13 மில்லியன் ஹெக்டேர்
ஆ. 1.23 மில்லியன் ஹெக்டேர்
இ. 3.25 மில்லியன் ஹெக்டேர்
ஈ. 2.33 மில்லியன் ஹெக்டேர்
- குளோபல் ஃபாரஸ்ட் வாட்ச் கண்காணிப்புத் திட்டத்தின் படி, 2000ஆம் ஆண்டு முதல், இந்தியா 2.33 மில்லியன் ஹெக்டேர் பரப்பில் அமைந்த மரங்களை இழந்துள்ளது. உலக வளக்கழகத்தின் முன்னெடுப்பான குளோபல் பாரஸ்ட் வாட்ச், உலகளவில் உள்ள காடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் நோக்கத்திதற்காக செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்துகிறது. இது முதன்மையாக காடுகளின் பரப்பு, இழப்பு மற்றும் ஆதாயத்தை மதிப்பிடுகிறது.