TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 16th & 17th May 2024

1. 2024 – உலக ஹைட்ரஜன் உச்சிமாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்ற இடம் எது?

அ. லண்டன், இங்கிலாந்து

ஆ. மாஸ்கோ, ரஷ்யா

இ. பாரிஸ், பிரான்ஸ்

ஈ. ரோட்டர்டாம், நெதர்லாந்து

  • 2024 மே.13-15 வரை நெதர்லாந்தின் ரோட்டர்டாமில் நடைபெறும் 2024 – உலக ஹைட்ரஜன் உச்சிமாநாட்டில் முதன்முறையாக இந்தியா தனது சொந்த அரங்கை அமைத்துள்ளது. இந்திய அரசின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்தியாவின் அரங்கை அவ்வமைச்சகத்தின் செயலாளர் பூபிந்தர் S பல்லா திறந்துவைத்தார். உலக ஹைட்ரஜன் உச்சிமாநாடு உலகளாவிய பசுமை ஹைட்ரஜன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஒரு மதிப்புமிக்க நிகழ்வாகும். இந்த மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 15,000 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பசுமை ஹைட்ரஜன் துறையில் நாடு அடைந்துள்ள முன்னேற்றத்தை உலகிற்கு எடுத்துக்காட்ட இந்த மாநாட்டின் இந்திய அரங்கம் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.

2. ஆசியா மற்றும் பசிபிக் உலகக் குழுவின் (MOWCAP) 10ஆவது கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. பெய்ஜிங், சீனா

ஆ. உலன்பாதர், மங்கோலியா

இ. ஜகார்த்தா, இந்தோனேசியா

ஈ. புது தில்லி, இந்தியா

  • ராம்சரித்மனாஸ், பஞ்சதந்திரம் மற்றும் சஹ்ருதயலோக-லோசனம் ஆகியவை UNESCOஇன் உலக ஆசியா-பசிபிக் பிராந்திய பதிவேட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. நாட்டின் வளமான இலக்கிய பாரம்பரியம் & கலாச்சார பாரம்பரியத்தை இது உறுதிப்படுத்துகிறது.
  • ‘சஹ்ருதயலோக – லோசனா’, ‘பஞ்சதந்திரம்’ மற்றும் ‘ராம்சரித்மனாஸ்’ ஆகியவை முறையே ஆச்சார்யா ஆனந்த வர்தன், பண்டிட் விஷ்ணு சர்மா மற்றும் கோஸ்வாமி துளசிதாஸ் ஆகியோரால் எழுதப்பட்டன. ஆசியா மற்றும் பசிபிக் உலகக்குழுவின் 10ஆவது கூட்டத்தின்போது இந்திராகாந்தி தேசிய கலை மையம் இந்தப் படைப்புகளை UNESCO பதிவேட்டில் இடம்பெறச்செய்வதில் முக்கிய பங்கு வகித்தது. உலன்பாதரில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், உறுப்பு நாடுகளின் 38 பிரதிநிதிகள் 40 பார்வையாளர்கள் மற்றும் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

3. அண்மையில், 2024 – பாரிஸ் ஒலிம்பிக்கிற்குத் தகுதிபெற்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் யார்?

அ. பீம் சிங்

ஆ. அமன் செராவத்

இ. தினகர்ராவ் ஷிண்டே

ஈ. உதே சந்த்

  • 2024-பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான ஒதுக்கீட்டைப் பெற்ற முதல் இந்திய மல்யுத்த வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை அமன் செராவத் படைத்தார். இஸ்தான்புல்லில் நடந்த உலக மல்யுத்த ஒலிம்பிக் தகுதிச்சுற்றில், ஆடவருக்கான 57 கிகி ப்ரீஸ்டைல் பிரிவில் அரையிறுதியில் கொரியாவின் சோங்சோங் ஹானை 12-2 என்ற கணக்கில் வீழ்த்தி அவர் இந்த ஒதுக்கீட்டைப் பெற்றார். இது, மல்யுத்தத்தில் 2024 – ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் ஆறாவது ஒதுக்கீட்டைக் குறிக்கிறது; முந்தைய ஐந்து ஒதுக்கீடுகளையும் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் பெற்றனர்.

4. அண்மையில் இந்தியாவின் 85ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டரான P ஷ்யாம்நிகில் சார்ந்த மாநிலம் எது?

அ. தமிழ்நாடு

ஆ. கேரளா

இ. மணிப்பூர்

ஈ. இராஜஸ்தான்

  • தமிழ்நாட்டைச்சேர்ந்த P ஷியாம்நிகில் (31) இந்தியாவின் 85ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆனார். எட்டு வயதில் தனது செஸ் வாழ்வைத் தொடங்கிய அவர், 2024 துபாய் போலீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் தனது மூன்றாவது GM நெறிமுறைகளைப் பெற்றார். R வைஷாலி, இந்தியாவின் 84ஆவது கிராண்ட் மாஸ்டராவார். இப்போட்டிக்குமுன், ஷியாம்நிகிலுக்கு ஒரு வெற்றி மற்றும் 8 டிரா தேவைப்பட்டது. 2012இல் 2500 ELO புள்ளிகள் மற்றும் இரண்டு GM நெறிமுறைகளைப் பெற்றிருந்தபோதிலும், அவர் துபாயில் அடைந்த மூன்றாவது GM நெறிமுறைக்காக 12 ஆண்டுகள் காத்திருந்தார்.

5. நீலகிரி மாவட்டத்தின் முதன்மை சாலைகளைச் சுற்றி, தமிழ்நாட்டின் மாநில நெடுஞ்சாலைத் துறையின்மூலம் மேற்கொள்ளப்படும் திட்டத்தின் பெயர் என்ன?

அ. நீலகிரி நெடுஞ்சாலை சீரமைப்பு திட்டம்

ஆ. மண்ணில் ஆணியடித்தல் மற்றும் நீர்விதைப்பு திட்டம்

இ. மண் பாதுகாப்பு பண்ணையம்

ஈ. மண் மற்றும் நீர் பாதுகாப்பு சங்கம்

  • நீலகிரி மாவட்டத்தின் முதன்மை சாலைகளைச் சுற்றி, தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறையின்மூலம், ‘மண்ணில் ஆணியடித்தல் மற்றும் நீர்விதைப்பு (Soil Nailing & Hydroseeding) முறையைப் பயன்படுத்தி சரிவுகள் உறுதிப்படுத்தல்’ திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இது எஃகு தசைநாண்கள்மூலம் மண்ணை வலுவூட்டுதல் போன்ற புவிசார் தொழில்நுட்ப பொறியியல் நுட்பங்களைப் பயன்படுத்துகிறது. இம்முறையில் துளையிடுதல் மற்றும் மென்சாந்து பூசுதல் மற்றும் மண்ணில் ஆணியடித்தல் ஆகியவை அடங்கும். இது சரிவுகளை உறுதிப்படுத்துதல் மற்றும் மண்ணரிப்பை கட்டுப்படுத்துகின்றன.

6. அண்மையில், 2024 – உலக வனவிலங்கு குற்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் (UNODC)

ஆ. உலக சுகாதார நிறுவனம்

இ. உலக வங்கி

ஈ. ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்

  • போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐநா அலுவலகத்தின் 2024 – உலக வனவிலங்கு குற்ற அறிக்கை, 2015-2021 வரை காண்டாமிருகங்கள் மற்றும் தேவதாருக்கள் அதிகமாக கடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. 1997இல் நிறுவப்பட்ட UNODC, உலகம் முழுவதும் போதைப்பொருள் துஷ்பிரயோகம், கடத்தல் மற்றும் குற்றங்களை எதிர்த்துப்போராடுகிறது. இது பன்னாட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, குற்றத்தடுப்புகளை ஊக்குவிக்கிறது மற்றும் நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் நீதி சீர்திருத்தத்திற்கும் உதவுகிறது.

7. அண்மையில், நாடு முழுவதுமுள்ள சமூகப் பாதுகாப்பு திட்டங்களில் உள்ள இடைவெளிகளைக் கண்டறிந்து குறைப்பதற்காக PM கதி சக்தி தளத்துடன் இணைந்துள்ள அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

ஈ. வேளாண் அமைச்சகம்

  • தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சமூகப் பாதுகாப்பு உள்ளடக்கத்தை அதிகரிப்பதற்காக, பிரதமர் கதி சக்தி வலைதளத்தில் இணைந்துள்ளது. 2021இல் தொடங்கப்பட்ட பிரதமர் கதி சக்தி திட்டம், 16 அமைச்சகங்களை ஒருங்கிணைத்து பன்முக இணைப்புக்கான தேசிய பெருந் திட்டமாக உள்ளது. ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் இணைப்புத்திட்டங்களை செயல்படுத்துதல், போக்குவரவு முறைகளுக்கு இடையே மக்கள் மற்றும் பொருட்களின் இயக்கத்தை மேம்படுத்துதல் ஆகியவை அதன் குறிக்கோள்களாகும். இது விரிவான தன்மை, முன்னுரிமை, மேம்படுத்தல், ஒத்திசைவு, பகுப்பாய்வு மற்றும் இயங்குநிலை ஆகிய ஆறு கூறுகளில் கவனம் செலுத்துகிறது

8. நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியுடன் தொடர்புடைய விண்வெளி நிறுவனம் எது?

அ. ISRO

ஆ. JAXA

இ. NASA

ஈ. CNSA

  • NASAஇன் தலைமையிலான நான்ஸி கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கி, நமது சூரிய மண்டலத்தின் வெளிப்புறத்திலிருந்து கூர்நோக்கக்கூடிய பேரண்டத்தின் விளிம்பு வரையிலும் ஆய்வுகளை மேற்கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது. அதன் கூர்நோக்கமானது இருண்ட ஆற்றல், இருண்ட பொருள், புறக்கோள்கள் மற்றும் பல்வேறு அகச்சிவப்பு வானியற்பியல் மற்றும் கோள் அறிவியல் பகுதிகளை உள்ளடக்கியது. அதன் முக்கிய கருவிகளில் வைட் ஃபீல்ட் மற்றும் கரோனாகிராஃப் இன்ஸ்ட்ரூமென்ட் ஆகியவை அடங்கும். இது புறக்கோள் ஆய்வுகளுக்கு மைக்ரோலென்சிங்கைப் பயன்படுத்துகிறது.

9. அண்மையில், திறமையான தாங்குசுமை போக்குவரத்திற்காக நிலவில் முதல் ரெயில் நிலையத்தை அமைக்கும் திட்டத்தை அறிவித்த விண்வெளி அமைப்பு எது?

அ. ISRO

ஆ. JAXA

இ. NASA

ஈ. CNSA

  • நிலவில் திறமையான தாங்குசுமை போக்குவரத்தை ஏற்படுத்தும் நோக்கில், முதல் நிலவு ரயில் அமைப்பான FLOAT (Flexible Levitation on a Track)ஐ NASA அறிவித்துள்ளது. NASAஇன் Moon to Mars முன்னெடுப்பின் ஒருபகுதியான FLOAT, காந்த விசையைப் பயன்படுத்தி மிதக்கும் மூன்று கட்ட ரெயில் தடத்தில் இயங்கும்.
  • கிராபைட்டில் அமைக்கப்பட்ட தடத்தில் காந்த விசையினால் மிதந்தபடி இந்த ரெயில்கள் இயங்கும். FLOAT ரோபோக்களுக்கு அசையும் பாகங்கள் இருக்காது என்றும் ரெயில் பாதையின்மீது மிதப்பதால் உராய்வு இருக்காது என்றும் NASA கூறியுள்ளது. தூசிநிறைந்த கடினமான சந்திர மண்டலத்தில் FLOAT ரோபோக்கள் தன்னிச்சையாக இயங்கும். இதில் பயன்படுத்தப்படும் ரெயில் தடங்களை சுருட்டி வேறிடத்தில் சென்று புதிதாக அமைக்கவியலும்.

10. மனிகா பத்ராவுடன் தொடர்புடைய விளையாட்டு எது?

அ. டேபிள் டென்னிஸ்

ஆ. பூப்பந்து

இ. கால்பந்து

ஈ. சதுரங்கம்

  • இந்தியாவின் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனையான மனிகா பத்ரா, பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் உலகின் முதல் 25 இடங்களுக்குள் அதாவது 24மிடத்தைப் பிடித்ததன்மூலம் வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்தார். ஒற்றையர் டேபிள் டென்னிஸில் இந்தியர் ஒருவர் பெற்ற உயர்ந்த தரவரிசைக்கான G சத்தியனின் சாதனையை இதன்மூலம் அவர் சமன்செய்தார். சவுதி ஸ்மாஷ் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டதை அடுத்து 15 இடங்கள் முன்னேறி காலிறுதிக்கு முன்னேறினார். 2018 – காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மனிகா பத்ரா, உலக அரங்கில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

11. நாட்டின் மிகப்பெரிய திறன் வளர்ப்புத் திட்டமான 2024 – இந்தியா ஸ்கில்ஸ் போட்டி தொடங்கப்பட்ட இடம் எது?

அ. ஹைதராபாத்

ஆ. கொல்கத்தா

இ. புது தில்லி

ஈ. சென்னை

  • இந்தியாவின் மிகப்பெரிய திறன் வளர்ப்புப் போட்டியான, ‘IndiaSkills-2024’, 2024 மே.15 அன்று புது தில்லியில் துவாரகாவில் உள்ள யசோபூமியில் தொடங்கியது. MSDEஇன்கீழ் NSDCஆல் ஒழுங்கமைக்கப்பட்ட இந்தப்போட்டியில் பங்கேற்பாளர்கள் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் முதல் அதிநவீன தொழில்நுட்பங்கள் வரை 61 திறன்களில் தேசிய மேடையில் தங்களது மாறுபட்ட திறன்கள் மற்றும் திறமைகளை வெளிப்படுத்துவார்கள். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வானது, மாநில அரசுகள், தொழிற்துறை, SSC-கள், SSDM-கள், பெருநிறுவல்கள் மற்றும் கூட்டாளர் நிறுவனங்களின் பரந்த ஆதரவைப் பெறுகிறது. தேசிய மற்றும் பன்னாட்டளவில் இளைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த இது ஒரு முக்கியமான தளத்தை வழங்குகிறது.

12. சமீபத்தில், கீழ்காணும் எந்நாட்டுக்கு $1 மில்லியன் டாலர் மதிப்பிலான மனிதாபிமான உதவியை வழங்குவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது?

அ. ருவாண்டா

ஆ. சோமாலியா

இ. கென்யா

ஈ. உகாண்டா

  • 267 உயிரிழப்புக்கும் 380,000-க்கும் அதிகமான மக்களின் புலம் பெயர்வுக்கும் காரணமான பெருவெள்ளத்தின் தாக்கங்களைத் தணிப்பதற்காக கென்யாவிற்கு மனிதாபிமான அடிப்படையிலான ஒரு பேருதவியாக $1 மில்லியன் டாலர்களை வழங்கவுள்ளதாக இந்தியா உறுதியளித்துள்ளது. இந்த உதவியில் இந்திய வான்படை விமானம்மூலம் அனுப்பப்பட்ட கூடாரங்கள், போர்வைகள் மற்றும் சுகாதாரப் பொருள்கள்போன்ற 22 டன் பொருட்கள் அடங்கும். கூடுதலாக, உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் அறுவைசிகிச்சை உபகரணங்கள் உட்பட 18 டன் மருத்துவ உதவியும் இதில் அடங்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கென்யர்களின் அவசர சுகாதார தேவைகளை நிவர்த்தி செய்வதை இந்த உதவி நோக்கமாகக் கொண்டுள்ளது.

13. இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?

அ. பாதுகாப்பு அமைச்சகம்

ஆ. மின்சார அமைச்சகம்

இ. உள்துறை அமைச்சகம்

ஈ. நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம்

  • இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையமானது (I4C), மைக்ரோசாப்டின் உதவியுடன், அச்சுறுத்தி மற்றும் மிரட்டி பணம் பறிப்பதுபோன்ற இணையவெளிக் குற்றங்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்கைப் (Skype) முகவரிகளைத் தடை செய்துள்ளது. சட்ட அமலாக்க முகவர்களிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்தும் வகையில், நாடு முழுவதும் நடைபெறும் இணையவெளிக் குற்றங்களுக்குத் தீர்வுகாண்பதற்காக உள்துறை அமைச்சகத்தின் கீழ் I4C செயல்படுகிறது. புது தில்லியில் உள்ள இது இணையவெளி அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதையும் குடிமக்களைப் பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

14. அண்மையில் எந்த இரு நாடுகளுக்கு இடையே, ‘தர்காஷ்’ பயிற்சி என்ற கூட்டு பயங்கரவாத எதிர்ப்புப் பயிற்சி நடைபெற்றது?

அ. இந்தியா & ஆஸ்திரேலியா

ஆ. இந்தியா & அமெரிக்கா

இ. இந்தியா & எகிப்து

ஈ. நேபாளம் மற்றும் சீனா

  • இந்தியாவின் தேசிய பாதுகாப்பு படை மற்றும் அமெரிக்காவின் SOF ஆகியவற்றை உள்ளடக்கிய இந்திய-அமெரிக்க கூட்டு நகர்ப்புற பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சியான ‘தர்காஷ்’இன் 7ஆம் பதிப்பான கொல்கத்தாவில் முடிவடைகிறது. இதன் முந்தைய ஆண்டு பயிற்சி, கடந்த 2023 ஜனவரியில் சென்னையில் நடைபெற்றது. படைகளுக்கிடையே உறவுகள் மற்றும் இயங்குதன்மையை உருவாக்குவதில் இது கவனம் செலுத்துகிறது. பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதை இது தனது நோக்கமாகக் கொண்டுள்ளது. நகர்ப்புற நடவடிக்கைகளுக்கான உத்திகள் மற்றும் நடைமுறைகளைப் பகிர்ந்துகொள்வது மற்றும் பணயக்கைதிகளை மீட்பது ஆகியவை இதன் பயிற்சிகளுள் அடங்கும்.

15. இந்திய தேயிலை வாரியம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தின் தேயிலைத் தோட்டங்களில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்தியின் சதவீதம் எவ்வளவு குறையும்?

அ. 25%

ஆ. 50%

இ. 75%

ஈ. 20%

  • அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தேயிலை உற்பத்தி 50% குறையும் என இந்திய தேயிலை வாரியத்தின் தரவுகள் கூறுகின்றன. தேயிலை சட்டம், 1953இன்கீழ், 1954இல் நிறுவப்பட்ட இந்திய தேயிலை வாரியம் (TBI), தனது தலைமையகத்தை கொல்கத்தாவில் கொண்டு, மத்திய வர்த்தக அமைச்சகத்தின்கீழ் இயங்கி வருகிறது. இது லண்டன், துபாய் மற்றும் மாஸ்கோவில் அயல்நாட்டு அலுவலகங்களைக் கொண்டுள்ளது. தலைவர் உட்பட 31 உறுப்பினர்களைக் கொண்ட இது, ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஒருமுறை மறுசீரமைக்கப்படுகிறது. அஸ்ஸாம், மேற்கு வங்காளம், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திர பிரதேசம், திரிபுரா மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் முதன்மையாக தேயிலை பயிரிடப்படுகிறது.

16. அண்மையில், இந்திய வான்படை (IAF), ‘பீஷ்மா கியூப்’ என்ற உள்நாட்டு நடமாடும் மருத்துவமனையை வான் குடை மூலம் கீழ்காணும் எவ்விடத்தில் தரையிறக்கி சோதனை செய்தது?

அ. ஆக்ரா

ஆ. தஞ்சாவூர்

இ. வாரணாசி

ஈ. கோழிக்கோடு

  • இந்திய வான்படையானது, ‘பீஷ்மா கியூப்’ என்ற உள்நாட்டு நடமாடும் மருத்துவமனையை வான்குடைமூலம் ஆக்ராவில் தரையிறக்கி சோதனை செய்தது. ‘பீஷ்மா கியூப்’ என்பது கையடக்கமான, நீர்ப்புகாத மற்றும் இலகுரக கனசதுரமாகும்; இது வான்குடை மற்றும் தரைவழிப் போக்குவரத்தின் உதவியுடன் மிக அவசரமான சூழல்களில் பயன்படுத்தப்படுகிறது. இந்தக் கனதுரங்கள் புல்லட் காயங்கள், கடுமையான தீக்காயங்கள், தலையில் காயங்கள் மற்றும் முதுகெலும்பு முறிவுகள்போன்ற காயங்களுக்குச் சிகிச்சையளிக்க விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

17. அண்மையில், பைன் இலைகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான உயிரி-ஆற்றல் திட்டங்களைத் தொடங்கிய மாநிலம் எது?

அ. இமாச்சல பிரதேசம்

ஆ. உத்தரகாண்ட்

இ. ஒடிஸா

ஈ. குஜராத்

  • உத்தரகாண்ட் மாநில புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (UREDA) உத்தரகாண்ட் மாநிலத்தில் 16.36% வனப்பகுதியை உள்ளடக்கிய பைன் மரக்காடுகளைப் பயன்படுத்தி மின்னுற்பத்தி செய்வதற்கான உயிரி-ஆற்றல் திட்டங்களைத் தொடங்கியது. தொழில்நுட்ப வரம்புகள் காரணமாக இத்திட்டங்கள் தோல்வியடைந்தன. சிர் பைன் காடுகள் ஆண்டுக்கு 15 இலட்சம் டன் இலைகளை உற்பத்தி செய்கின்றன. அதில் 40% பயன்படுத்தப்பட்டால் மின் தேவையைப் பூர்த்திசெய்து வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும்.

18. அண்மையில், டேவிட் சல்வாக்னினியை அதன் முதல் தலைமை AI அதிகாரியாக நியமித்த அமைப்பு எது?

அ. WMO

ஆ. ISRO

இ. NASA

ஈ. FAO

  • NASAஇன் முன்னாள் தலைமை தரவதிகாரியான டேவிட் சல்வாக்னினி, புதிய தலைமை செயற்கை நுண்ணறிவு (AI) அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். NASA, AI கருவிகளைப் பயன்படுத்தி திட்டங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது, தரவுகளைப் பகுப்பாய்வு செய்கிறது மற்றும் விண்கலம் மற்றும் ஊர்திகளுக்கான தன்னாட்சிமிக்க அமைப்புகளை உருவாக்குகிறது. NASA நிர்வாகி பில் நெல்சனின் கூற்றுப்படி, AI தொழில்நுட்பம் நீண்டகாலமாக பாதுகாப்பாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது மற்றும் கண்டுபிடிப்புகளை துரிதப்படுத்துகிறது.

19. ‘International Book of Honour’ஆல் இந்தியாவின் மிகவுயரமான சுரங்கப்பாதையாக சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட சேலா சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் எது?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. இமாச்சல பிரதேசம்

இ. அஸ்ஸாம்

ஈ. சிக்கிம்

  • இங்கிலாந்தின் இன்டர்நேஷனல் புக் ஆஃப் ஹானரால் அங்கீகரிக்கப்பட்ட சேலா சுரங்கப்பாதை நாட்டிலேயே மிக உயரமானதாக விளங்குவதை இந்தியாவின் எல்லைச் சாலைகள் அமைப்பு (BRO) கொண்டாடுகிறது. தேஜ்பூர்-தவாங் சாலையில் 13,000 அடி உயரத்தில் அமைந்துள்ள 2.598 கிமீ நீளமுள்ள இந்தச்சுரங்கப்பாதை, அருணாச்சல பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு ஆண்டு முழுவதும் சாலை இணைப்பை வழங்குகிறது. மார்ச்.9 அன்று பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்பட்ட இது, உலகின் மிகநீளமான இருவழிச் சுரங்கப்பாதையாகும்.

20. அண்மையில், வடக்கு சிக்கிமில், ‘ஆபரேஷன் சத்பவனா’வைத் தொடங்கிய ஆயுதப்படை எது?

அ. இந்திய இராணுவம்

ஆ. இந்திய கடற்படை

இ. சசஸ்திர சீமா பால்

ஈ. இந்திய வான்படை

  • ‘ஆபரேஷன் சத்பவனா’வின்கீழ், இந்திய இராணுவத்தின் திரிசக்தி படைகள் வட சிக்கிமின் நாகா மற்றும் ரங்ராங் கிராமங்களில் உள்ள சமூகங்களுக்கு உதவியது. பேரிடர் தந்த பனிப்பாறை ஏரி உடைந்து ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு, ஒற்றுமையைக் குறிக்கும் வகையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன. ஒரு மருத்துவ முகாமிற்கு 150+ நோயாளிகள் என மருத்துவச் சேவைகள் வழங்கப்பட்டன. மேலும், கல்விச் சேவைகள், ‘அக்னிவீர்’ திட்டத்தின்கீழ் உள்ளூர் இளைஞர்கள்மூலம் வழங்கப்பட்டது. இந்த முன்னெடுப்புகள் சமூக மேம்பாடு, நல்லிணக்கத்தை வளர்ப்பது மற்றும் நாட்டின் எல்லைப்புற மக்களுடன் பிணைப்பை வலுசெய்தல் ஆகியவற்றில் இராணுவத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

21. அண்மையில், ‘பிக்ஸல் ப்ளே’ என்ற இந்தியாவின் முதல் மெய்நிகர் கடனட்டையை அறிமுகப்படுத்தியுள்ள வங்கி எது?

அ. பரோடா வங்கி

ஆ. இந்தியன் வங்கி

இ. HDFC வங்கி

ஈ. ஆக்சிஸ் வங்கி

  • HDFC வங்கியானது விசாவுடன் இணைந்து இந்தியாவின் முதல் மெய்நிகர் கடனட்டையான, ‘பிக்சல் ப்ளே’வை அறிமுகப்படுத்துகிறது. பிக்ஸல் ப்ளே மற்றும் பிக்ஸல் கோ ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கும் இது, ‘PayZapp’ செயலியின்மூலம் பயனர்களுக்கு ஏற்றவாறு கடனட்டையைத் தனிப்பயனாக்குகிறது. நெறிப்படுத்தப்பட்ட டிஜிட்டல் மேலாண்மை, அட்டைக்கான கட்டுப்பாடுகள், வெகுமதிகள் மற்றும் EMI தகவல் பலகை ஆகியவற்றைக்கொண்ட HDFC வங்கி, பயனர்களின் வங்கி அனுபவங்களை மறுவரையறை செய்கிறது.

22. அண்மையில், அதன் AI மேலாண்மை அமைப்புக்காக ISO சான்றிதழைப்பெற்ற உலகின் முதல் நிறுவனம் எது?

அ. இன்ஃபோசிஸ்

ஆ. கூகுள்

இ. மைக்ரோசாப்ட்

ஈ. மெட்டா

  • இன்ஃபோசிஸ் நிறுவனம் அதன் AI மேலாண்மை அமைப்புகளுக்கு ISO 42001:2023 சான்றிதழைப் பெற்றுள்ளது. TUV இந்தியா, TÜV Nord குழுமத்தின்கீழ் வழங்கப்படும் இந்தச் சான்றிதழ், பொறுப்பான AI நடைமுறைகளைப் பின்பற்றுவதற்காக அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு (AI) மேலாண்மை அமைப்பு (AIMS) கட்டமைப்பானது ஒழுங்குமுறை இணக்கத்தை உறுதி செய்து, AI முயற்சிகளில் பொறுப்புக்கூறல் மற்றும் செயல்திறனை மேம்படுத்துகிறது.

23. சேறும் சகதியுமான ஆற்றுநீரைச் சுத்திகரிப்பதற்கு சுற்றுச்சூழலுக்குகந்த தீர்வைக் கண்டுபிடித்துள்ள நிறுவனம் எது?

அ. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், போபால்

ஆ. இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனம், விசாகப்பட்டினம்

இ. இந்திய அறிவியல் கழகம், பெங்களூரு

ஈ. இந்திய தொழில்நுட்ப நிறுவனம், கான்பூர்

  • ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய பெட்ரோலியம் மற்றும் எரிசக்தி நிறுவனம் (IIPE), மற்ற ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து, சேறும் சகதியுமான ஆற்றுநீரைச் சுத்திகரிக்கும் சூழலுக்ககந்த தீர்வை அண்மையில் கண்டுபிடித்தது. இத்தீர்வு, “Surface Modification Technique of Membrane” என்று அழைக்கப்படுகிறது.

24. ஆண்டுதோறும் சர்வதேச ஒளி நாள் கொண்டாடப்படுகிற தேதி எது?

அ. மே.15

ஆ. மே.16

இ. மே.17

ஈ. மே.18

  • ஐநாஇன் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (UNESCO) நிறுவப்பட்ட சர்வதேச ஒளி நாள், சமூகத்திலும் தொழில்நுட்பத்திலும் ஒளியின் தாக்கத்தை கொண்டாடுகிறது. தியோடர் மைமனின் 1960ஆம் ஆண்டு லேசர் ஒளி நவீனத்தை நினைவுகூரும் வகையில், மே.16 அன்று சர்வதேச ஒளி நாள் கொண்டாடப்படுகிறது.
  • நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருள், “Light in Our Lives” என்பதாகும். கடந்த 2015ஆம் ஆண்டு ஐநாஆல் சர்வதேச ஒளி ஆண்டாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, 2018ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் UNESCO இந்நாளைக் கொண்டாடி வருகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. பல்வேறு சிறப்பான திட்டங்களால் முதன்மை மாநிலமாகத் திகழும் தமிழ்நாடு: தமிழ்நாடு அரசு.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடர்ந்து பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருவதால், தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது எனத் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஞானபீடம், சாகித்திய அகாதெமி போன்ற தேசிய விருதுகள், மாநில இலக்கிய விருதுகள், புகழ்பெற்ற உலகளாவிய அமைப்புகளின் விருதுகளைப் பெற்றவர்களுக்கு வீடுகள் வழங்கும் ‘கனவு இல்லம்’ திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைக் களப்பணியாளர்கள் இல்லங்களுக்கேச் சென்று வழங்கும், ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. கல்லூரியில் படித்துப் பட்டம்பெற்றும் வேலைக்கேற்ற திறனில்லாதவர்களாகக் காணப்படும் இளையோர்க்குத் திறன் பயிற்சிகள் வழங்கி பணிவாய்ப்பு பெற வழிவகுக்கும், ‘நான் முதல்வன்’ திட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டை நீக்குவதற்கு வழிவகை செய்யும், ‘ஊட்டச்சத்தை உறுதிசெய்’ திட்டம் ஆகியவை நிறைவேற்றப்படுகின்றன.

கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் `1,000 வழங்கும் ‘புதுமைப்பெண்’ திட்டம், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய அரசுத் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாள்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கும் ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ போன்றவை நிறைவேற்றப்படுகின்றன.

தொழில் முதலீட்டில் 35% தொகையை அரசு மானியமாகவும், 65% மூலதன தொகைக்குரிய வங்கிக்கடன் வட்டியில் 6% வட்டி மானியமாகவும் அளித்து ஆதிதிராவிட சமுதாய இளைஞர்களையும், மகளிரையும் தொழில் முதலாளிகளாக உயர்த்தும், ‘அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’, ஆண்டுக்கு `200 கோடி வீதம் 5 ஆண்டுகளில் `1,000 கோடி செலவில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித்தரும் அயோத்தி தாச பண்டிதர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டமும் நிறைவேற்றப்படுகின்றன.

2. இனக்கலவரம்: மணிப்பூரில் 67,000 பேர் இடப்பெயர்வு.

தெற்காசியாவில் உள்நாட்டு வன்முறையால் கடந்த ஆண்டு மொத்தம் 69,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இதில், மணிப்பூரில் மட்டும் 67,000 பேர் அடங்குவர் என்று சர்வதேச உள்நாட்டு இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மேயிலிருந்து மோதல் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது. அம்மாநில மக்கள்தொகையில் மைதேயி சமூகத்தினர் பெரும்பான்மையாகவும் (53%), குகி மற்றும் நாகா பழங்குடியினர் சுமார் 40 சதவீதமும் உள்ளனர்.

3. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி S V கங்காபுர்வாலா மே.23இல் பணி ஓய்வு.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சை விஜய்குமார் கங்காபுர்வாலா மே.23ஆம் தேதியன்று பணி ஓய்வு பெறுகிறார். ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள சட்டம் குறித்த இவரது தீர்ப்பு முக்கியமானது.

4. CAA: 14 பேருக்கு இந்திய குடியுரிமை முதல் முறையாக அளிப்பு.

குடியுரிமை திருத்தச்சட்டத்தின் (Citizenship Amendment Act) கீழ் முதல் முறையாக பதினான்கு பேருக்கு இந்திய குடியுரிமைக்கான சான்றிதழ் 15-06-2024 அன்று வழங்கப்பட்டது. வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அண்டை நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இந்து, சீக்கிய, சமண, பெளத்த, பார்சிய மற்றும் கிறித்தவ சகோதர சகோதரிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச்சட்டம் கூறுவது என்ன?

அண்டை நாடுகளான வங்காளதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 டிச.31ஆம் தேதிக்கு முன்னதாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இசுலாமியர் அல்லாத பிற சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பெளத்த, பார்சிகள், கிறித்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை திருத்தச்சட்டம் வகை செய்கிறது. இந்தச் சட்டமசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பரில் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது.

இந்நிலையில், இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு, ‘குடியுரிமை திருத்த விதிகள்-2024’ என்ற தலைப்பில் அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக கடந்த மார்ச் 11ஆம் தேதி அறிவிக்கை செய்தது. அதன்படி, இந்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!