Tnpsc Current Affairs in Tamil – 16th & 17th March 2024
1. அண்மையில், எந்த மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக நயாப் சைனி பதவியேற்றார்?
அ. பஞ்சாப்
ஆ. உத்தரகாண்ட்
இ. ஹரியானா
ஈ. இராஜஸ்தான்
- பாரதிய ஜனதா கட்சியின் தலைவரான நயாப் சைனி, ஹரியானா மாநிலத்தின் 11ஆவது முதலமைச்சராக 2024 மார்ச்.12 அன்று பதவியேற்றார். ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவின் தலைமையில் சண்டிகரில் பதவியேற்பு விழா நடைபெற்றது. ஹரியானா மாநிலத்தின் முதல் பாஜக முதளமைச்சரான மனோகர் லால் கட்டாருக்குப் பிறகு நயாப் சைனி முதலமைச்சர் பதவிக்கு வந்துள்ளார். முன்னதாக, துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதா கட்சி ஹரியானாவில் பாஜக அரசாங்கத்துடனான தனது கூட்டணியை முறித்துக்கொண்டதை அடுத்து, மனோகர் லால் கட்டார் தனது அமைச்சரவையைக் கலைத்தார்.
2. அண்மையில், NTPC, CIL, NLC இந்தியா மற்றும் SJVN ஆகியவற்றுடன் 28.5 GW சூரிய மின்னுற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள மாநில அரசு எது?
அ. ஒடிஸா
ஆ. குஜராத்
இ. இராஜஸ்தான்
ஈ. பீகார்
- இராஜஸ்தான் மாநில அரசு NTPC, CIL, NLC இந்தியா மற்றும் SJVN ஆகியவற்றுடன் 28.5 GW சூரியவொளி ஆற்றல் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது. சாப்ரா அனல்மின் நிலையத்தில் உள்ள சூப்பர் கிரிட்டிகல் அலகுகளை ஆராய்வதற்காக இராஜஸ்தான் இராஜ்ய வித்யுத் உத்பதன் நிகாமுடன் NTPC கூட்டிணைகிறது. 4,100 மெகாவாட் (MW) மின் திட்டங்களுக்காக RVUNLஉடன் CIL கூட்டிணைகிறது. NLCIL, இராஜஸ்தானுடன் 125 மெகாவாட் பழுப்பு நிலக்கரி மின்னுற்பத்தி நிலையம் மற்றும் 1,000 மெகாவாட் சூரியவொளி மின்னுற்பத்தி ஆலை அமைக்க உடன்பட்டுள்ளது. SJVNஇன் துணை நிறுவனமான SGEL 500 மெகாவாட் சூரியவொளி ஆற்றல் பயன்பாட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
3. அண்மையில், இந்தியப் பிரதமரால் கோச்ராப் ஆசிரமம் திறந்து வைக்கப்பட்ட மாநிலம் எது?
அ. இராஜஸ்தான்
ஆ. பஞ்சாப்
இ. குஜராத்
ஈ. மத்திய பிரதேசம்
- சபர்மதி ஆசிரமத்திற்கு வருகைதந்த பிரதமர் நரேந்திர மோதி, கோச்ராப் ஆசிரமத்தை திறந்துவைத்து, காந்தி ஆசிரம நினைவிடத்தின் பெருந்திட்டத்தை தொடக்கி வைத்தார். ‘மகாத்மா’ காந்தியின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்திய பிரதமர், ‘ஹிருதய் குஞ்ச்’ என்று அழைக்கப்படும் ‘மகாத்மா’ காந்தியடிகள் மற்றும் கஸ்தூரிபாய் காந்தி இல்லத்தையும் பார்வையிட்டார். மேலும் கண்காட்சியை பார்வையிட்டு மரக்கன்று நட்டார். 1915ஆம் ஆண்டில் தென்னாப்ரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு வந்தபின்னர் ‘மகாத்மா’ காந்தியடிகளால் நிறுவப்பட்ட முதல் ஆசிரமம் இதுவாகும்.
4. அண்மையில், மத்திய அறிவியல் & தொழில்நுட்ப அமைச்சரால் எந்த இடத்தில், ‘தேசிய விரைவுப் பயிர்பெருக்க வசதி’ திறந்து வைக்கப்பட்டது?
அ. ஆடுதுறை, தமிழ்நாடு
ஆ. மொஹாலி, பஞ்சாப்
இ. வாரணாசி, உத்தரப் பிரதேசம்
ஈ. கோழிக்கோடு, கேரளா
- பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள தேசிய வேளாண்-உணவு உயிரித்தொழில்நுட்ப நிறுவனத்தில் (NABI) நாட்டின் முதல் வகையான, “விரைவுப் பயிர்பெருக்க நடைமுறையை” மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் தொடக்கிவைத்து உயிரிதொழினுட்ப துரித விதைகளை அறிமுகஞ்செய்தார். 2010இல் நிறுவப்பட்ட NABI என்பது இந்தியாவின் முதல் வேளாண்-உணவு உயிரித்தொழினுட்ப நிறுவனம் ஆகும். இது வேளாண் உணவுத்துறையில் மாற்றங்களை ஊக்குவிப்பதற்காக செயல்பட்டு வருகிறது.
- ‘அடல் ஜெய் அனுசந்தன் உயிரித்தொழில்நுட்ப திட்டம் – UNaTI’ மற்றும் பல்வேறு பிராந்தியங்களுக்கான உயிரித் தொழில்நுட்ப கிசான் மையம் போன்ற முன்னெடுப்புகளுக்கு NABI தீவிரமாகப் பங்களித்துள்ளது.
5. இந்தியாவில் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 அமல்படுத்தப்பட்ட தேதி எது?
அ. 10 மார்ச் 2024
ஆ. 11 மார்ச் 2024
இ. 12 மார்ச் 2024
ஈ. 13 மார்ச் 2024
- 2024 மார்ச்.11ஆம் தேதி அன்று, மத்திய உள்துறை அமைச்சகம் குடியுரிமை திருத்தச் சட்டம், 2019ஐ நாடு முழுவதும் அமல்படுத்தியது. குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்காக ஓர் அதிகாரமளிக்கப்பட்ட குழு மற்றும் மாவட்ட அளவிலான குழுவைவும் அரசாங்கம் நிறுவியுள்ளது. 2019 டிசம்பர்.11 அன்று இயற்றப்பட்ட சட்டம், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானிலிருந்து சட்டவிரோதமாக குடியேறிய ஆறு மதச்சமூகங்களைச் சேர்ந்தவர்கள், 2014 டிசம்பர்.31 அன்று அல்லது அதற்குமுன் மதத்துன்புறுத்தல் காரணமாக இந்தியாவில் தஞ்சம் புகுந்திருந்தால், அவர்கள் இந்தியக் குடியுரிமைபெற இந்தச் சட்டம் அனுமதிக்கிறது.
6. சமீபத்தில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ‘சிறந்த விமான நிலையம்’ என அறிவிக்கப்பட்ட விமான நிலையம் எது?
அ. சென்னை பன்னாட்டு விமான நிலையம்
ஆ. இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம்
இ. சௌத்ரி சரண் சிங் பன்னாட்டு விமான நிலையம்
ஈ. கெம்பேகௌடா பன்னாட்டு விமான நிலையம்
- இந்தியாவின் தில்லியில் உள்ள இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம் தொடர்ந்து ஆறு ஆண்டுகளாக ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில், ‘சிறந்த விமான நிலையம்’ என்ற பெயரைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. நிகழ்நேர ஆய்வுகளைப் பயன்படுத்தி பயணிகளின் திருப்தியை அளவிடும் விமான நிலைய சேவை தர விருதுகளால் இந்த விருதானது வழங்கப்படுகிறது.
7. அண்மையில், பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. விஜய் சாம்ப்லா
ஆ. கிஷோர் மக்வானா
இ. சுபாஷ் ராம்நாத் பார்தி
ஈ. அஞ்சு பாலா
- குடியரசுத்தலைவரால் நியமிக்கப்பட்ட கிஷோர் மக்வானா, தேசிய பட்டியல் சமூகத்தினருக்கான ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்றார். அதேநாளில் லவ் குஷ் குமாரும் அந்த ஆணையத்தின் உறுப்பினராக சேர்ந்தார்.
- பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையம் (National Commission for Scheduled Castes) என்பது பட்டியல் சாதி சமூக மக்களைப் பொருளாதாரச் சுரண்டல்களிலிருந்து பாதுகாக்கவும், அவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுக்கவும், அத்தகைய வன்முறைகள்குறித்து சுயேச்சையாக விசாரித்து உரிய நடவடிக்கைகளுக்கு ஆலோசனைகளை வழங்கவும், சமூக, கல்வி, பொருளாதாரம் மற்றும் கலாச்சார, பண்பாடு மற்றும் குடியுரிமைகளைப் பாதுகாக்கவும் மற்றும் மேம்படுத்தவும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட ஆணையம் ஆகும்.
8. She Research Network in India (SheRNI) என்ற முன்னெடுப்பை அறிமுகப்படுத்திய அமைப்பு எது?
அ. UGC
ஆ. UNESCO
இ. UNICEF
ஈ. WHO
- UGCஇன் INFLIBNET மையம், அறிவியலில் பாலின வேறுபாட்டை எதிர்த்துப் போராடுவதற்காக, ‘She Research Network in India’ (SheRNI)ஐ அறிமுகப்படுத்தியது. ‘SheRNI’ அறிவியல் துறையில் பெண்களுக்கு அதிகாரம் அளித்து, எதிர்கால சந்ததியினரை ஊக்குவிக்கிறது. இது அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் தொழிலில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிரியைகளுக்கான தேசிய அளவிலான நிபுணத்துவ தளத்தை நிறுவுதல், ஒத்துழைப்பை ஊக்குவித்தல் மற்றும் கல்வித்துறையில் நெட்வொர்க்கிங் வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகியவை SheRNIஇன் நோக்கங்களில் அடங்கும்.
9. இந்தியாவின் விரைவான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட IP/MPLS (Multiprotocol Label Switching) திசைவி (router) அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நகரம் எது?
அ. சென்னை
ஆ. புது தில்லி
இ. பெங்களூரு
ஈ. லக்னோ
- மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் விரைவான மற்றும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட IP/MPLS திசைவியை பெங்களூருவில் அறிமுகப்படுத்தினார். இது 2.4 tdps திறன்கொண்டது. தொலைத்தொடர்புத் துறை, CDOT மற்றும் Nivetti ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டிணைவில் உருவான இத்திசைவி இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தையும் நாட்டின் கண்டுபிடிப்புத் திறனையும் எடுத்தியம்புகிறது.
10. வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரி நிறுவப்பட்ட இடம் எது?
அ. இமாச்சல பிரதேசம்
ஆ. ஜம்மு-காஷ்மீர்
இ. ஹரியானா
ஈ. உத்தரகாண்ட்
- வட இந்தியாவின் முதல் அரசு ஹோமியோபதி கல்லூரியானது ஜம்மு-காஷ்மீரில் உள்ள கதுவா மாவட்டத்தில் உள்ள ஜஸ்ரோட்டா பகுதியில் நிறுவப்பட்டு வருகிறது. சுமார் `80 கோடி செலவில் இந்தக் கல்லூரி அமைக்கப்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் மருத்துவமனை வளாகம், நிர்வாகத்தொகுதி, ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கான விடுதிகள் இருக்கும். இந்தத் திட்டம் பாரம்பரிய இந்திய மருத்துவத்தை அலோபதியுடன் ஒருங்கிணைத்து, செலவு குறைந்த சுகாதாரத்தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
11. அண்மையில், மத்திய பிரதேச மாநிலத்தின் லோக்ஆயுக்தாவாக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. கமலேஷ் குமார் இதவ்டியா
ஆ. சத்யேந்திர குமார் சிங்
இ. அருணா குப்தா
ஈ. பூபேந்திர குமார் நிகாம்
- மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய லோக்ஆயுக்தாவாக நீதிபதி சத்யேந்திர குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். லோக் ஆயுக்தா என்பது பொதுமக்களிடமிருந்து வரும் ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைக் கையாளும் மாநில அளவிலான ஓர் ஆணையமாகும். லோக்ஆயுக்தாவின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகளாகும். மாநில ஆளுநர் லோக் ஆயுக்தாவை முதலமைச்சரின் பரிந்துரைமூலம் நியமனம் செய்கிறார்.
12. இந்தியாவின் முதல், ‘FutureLABS’ மையம் திறக்கப்பட்ட இடம் எது?
அ. C-DAC ஹைதராபாத்
ஆ. C-DAC கொல்கத்தா
இ. C-DAC திருவனந்தபுரம்
ஈ. C-DAC பெங்களூரு
- குறைகடத்தி சில்லு மற்றும் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தி ஆகியவற்றில் கவனஞ்செலுத்தும் இந்தியாவின் முதல் FutureLABS மையத்தை திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள அதிநவீன கணினி மேம்பாட்டு மையத்தில் (C-DAC) மத்திய அமைச்சர் இராஜீவ் சந்திரசேகர் திறந்து வைத்தார். இது சில்லு வடிவமைப்பு, உற்பத்தி மற்றும் ஆராய்ச்சியை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இதன்சமயம், மைக்ரோகிரிட் தொழில்நுட்பத்திற்காக டாடா பவர் உடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் மின்சார எஞ்சின் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக ரெயில்வே அமைச்சகத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. மேலும், C-DAC (T) மற்றும் VNIT நாக்பூர் உருவாக்கிய மின்சார வாகன கம்பியில்லா மின்னேற்ற தொழில்நுட்பம் பெல்ரைஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெடுக்கு மாற்றப்பட்டது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 3 அரசு மருத்துவமனைகளில் மரபணு மருத்துவ ஒப்புயர்வு மையங்கள் தொடக்கம்.
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, மதுரை இராஜாஜி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மரபணு மருத்துவத் துறைகள் ஒப்புயர்வு மையங்களாக தரமுயர்த்தப்பட்டன. அங்கு மரபணுசார் அரியவகை நோய்களுக்கான பரிசோதனைகள் & புற்றுநோய்களுக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்படும்.
நடப்பு 17 ஆவது மக்களவையின் பதவிக்காலம் வரும் 2024 ஜூன்.16ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
2. மக்களவைத் தேர்தல்: 96.8 கோடி வாக்காளர்கள்; நாடு முழுவதும் 10.5 இலட்சம் வாக்குச்சாவடிகள்.
நாட்டில் 49.72 கோடி ஆண் வாக்காளர்கள், 47.1 கோடி பெண் வாக்காளர்கள் என மொத்தம் 96.8 கோடி பேர் வாக்களிக்கத் தகுதியுடையவர்களாக உள்ளனர். நாடு முழுவதும் 88.4 இலட்சம் மாற்றுத்திறனாளிகள் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்துள்ளனர்.
40 சதவீத இயலாமை உடைய மாற்றுதிறனாளி வாக்காளர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க முடியும். இதுபோல, 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களாக பதிவுசெய்துள்ள 85 இலட்சம் பேரும் வீட்டிலிருந்தபடியே வாக்களிக்க முடியும். இந்த வாய்ப்பைத் தெரிவுசெய்பவர்களுக்கு, அவர்களின் வீட்டுக்கே 12டி படிவம் அனுப்பிவைக்கப்பட்டு வாக்களிக்க வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
3. சுகாதாரத்துறையில் சிறப்பான செயல்பாடு: 614 விருதுகளுடன் தமிழ்நாடு முதலிடம்.
தேசிய தர உறுதி நிர்ணயத் திட்ட விருது கடந்த 2012ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதை தமிழ்நாடு 614 முறை பெற்றுள்ளது. குறிப்பாக, கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 545 முறை பெற்றது. இதேபோல, மகப்பேறு அறை, கர்ப்பிணிகளுக்கான அறுவைச் சிகிச்சை அரங்கம் தரம் உயர்த்தும் திட்ட சான்று தமிழ்நாட்டுக்கு 84 முறை கிடைத்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 55 சான்றிதழ்கள் கிடைத்தன. இதன்மூலம், மருத்துவத் துறை செயல்பாட்டில் நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
4. சென்னையில் 2025 ஜூனில் 2ஆவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதலமைச்சர் அறிவிப்பு.
2025ஆம் ஆண்டு ஜூனில் சென்னையில் இரண்டாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் உலகத்தமிழ்ச்செம்மொழி மாநாடு, கோயம்புத்தூரில் கடந்த 2010ஆம் ஆண்டு ஜூன்.23 முதல் ஜூன்.27 வரை நடைபெற்றது.