Tnpsc Current Affairs in Tamil – 15th March 2024
1. உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் உற்பத்தியாளராக உருவெடுத்துள்ள நாடு எது?
அ. இந்தியா
ஆ. அமெரிக்கா
இ. ஜெர்மனி
ஈ. வியட்நாம்
- 2024ஆம் ஆண்டில், இந்தியா, உலகின் இரண்டாவது மிகப்பெரிய மொபைல் போன் தயாரிப்பாளராக மாறியுள்ளது. 2014இல் 78% இறக்குமதியைச் சார்ந்திருந்த இந்தியா தற்போது 97% மொபைல் போன் தயாரிப்பில் தன்னிறைவு அடைந்துள்ளது. விற்பனை செய்யப்பட்ட மொத்த மொபைல் போன்களில் வெறும் 3% மட்டுமே தற்போது இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
2. அண்மையில், தேசிய பால் பண்ணை மற்றும் வேளாண் கண்காட்சி தொடங்கப்பட்டுள்ள இடம் எது?
அ. ஒடிசா
ஆ. குஜராத்
இ. ஜார்கண்ட்
ஈ. பீகார்
- ஜார்கண்ட் மாநிலம் சாய்பாசாவில் தேசிய பால் ஆராய்ச்சி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த மூன்று நாள் தேசிய பால் பண்ணை மற்றும் வேளாண் கண்காட்சியை மத்திய அமைச்சர் அர்ஜுன் முண்டா தொடக்கிவைத்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் இதுபோன்று நடைபெறும் முதல் நிகழ்வான இது, பழங்குடியினப் பகுதிகளில் கால்நடைகள் மற்றும் வேளாண் மேம்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. கால்நடை வளர்ப்பாளர்கள், விவசாயிகள், தொழில்முனைவோர், மாணவர்கள் & அரசு அதிகாரிகள் உட்பட 6,000 பங்கேற்பாளர்கள் இதில் பங்கேற்றனர்.
3. அண்மையில் 2024 – உலக அழகி பட்டத்தை வென்ற கிறிஸ்டினா பிஸ்கோவா சார்ந்த நாடு எது?
அ. போலந்து
ஆ. செக் குடியரசு
இ. ஜமைக்கா
ஈ. மெக்சிகோ
- செக் குடியரசின் கிறிஸ்டினா பிஸ்கோவா, போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்காவைத் தொடர்ந்து மும்பையில் நடந்த ஜியோ வேர்ல்ட் சினிமாவில் 2024ஆம் ஆண்டுக்கான ‘உலக அழகி’ என்ற பட்டத்தை வென்றார். இந்தப் பட்டத்துடன் கூடவே சிறந்த ஆடை வடிவமைப்பாளர் – ஐரோப்பாவுக்கான விருதையும் கிறிஸ்டினா பிஸ்கோவா பெற்றார். குறிப்பிடத்தக்க போட்டியாளர்களில் இந்தியாவின் சினி ஷெட்டி மற்றும் டிரினிடாட் மற்றும் டொபாகோவின் ஆச்சே ஆபிரகாம்ஸ் ஆகியோர் அடங்குவர். லெபனானைச் சேர்ந்த யாஸ்மினா ஜெய்டவுன் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
4. இந்திய பாராலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார்?
அ. லலித் தாக்கூர்
ஆ. சுனில் பிரதான்
இ. R சந்திரசேகர்
ஈ. தேவேந்திர ஜஜாரியா
- ஈட்டியெறிதலில் இருமுறை பாராலிம்பிக் தங்கப்பதக்கம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, தீபா மாலிக்கிற்குப்பிறகு இந்திய பாராலிம்பிக் குழுமத்தின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இனி அக்குழுமத்தை வழிநடத்துகிறார். 2004 ஏதென்ஸ் மற்றும் 2016 ரியோ பாராலிம்பிக்ஸில் F46 மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தங்கப்பதக்கம் வென்றது தேவேந்திர ஜஜாரியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
5. அண்மையில், எந்தத் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் புதிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டண வசூல்முறையை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது?
அ. Radio-Frequency Identification
ஆ. Global Navigation Satellite System
இ. Near Field Communication
ஈ. Barcode Scanning
- உலகளாவிய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பைப் (Global Navigation Satellite System) பயன்படுத்தி புதிய நெடுஞ்சாலை சுங்கக்கட்டண வசூல்முறையை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. பயன்படுத்தும் தூரத்திற்கு மட்டுமே சுங்கக்கட்டணம் செலுத்துவது இதன் சிறப்பம்சமாகும். இந்த அமைப்பு வாகனங்களுக்குள் உள்ள ஆன்-போர்டு யூனிட்டை (OBU) உள்ளடக்கியது, துல்லியமான இருப்பிட கண்காணிப்புக்கு GAGANஐப் பயன்படுத்துகிறது.
6. அண்மையில், கீழ்காணும் எந்த நிறுவனத்துடனான வர்த்தகம் மற்றும் பொருளியல் கூட்டு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது?
அ. ஐரோப்பிய கட்டற்ற வர்த்தக சங்கம் (EFTA)
ஆ. பெட்ரோலியம் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு (OPEC)
இ. ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC)
ஈ. பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (SAARC)
- இந்தியாவும் ஐரோப்பிய கட்டற்ற வர்த்தக சங்கமும் (EFTA) வர்த்தகம் மற்றும் பொருளியல் கூட்டு ஒப்பந்தத்தில் (TEPA) கையெழுத்திட்டுள்ளன. 1960இல் நிறுவப்பட்ட EFTA, அதன் நான்கு உறுப்பு நாடுகளுக்கு வர்த்தகம் மற்றும் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது. சுவிச்சர்லாந்து, ஐஸ்லாந்து, நார்வே மற்றும் லிச்சென்ஸ்டைன் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய TEPA ஆனது ஒரு பெரிய ஐரோப்பிய பொருளாதார அமைப்புடன் இந்தியா மேற்கொண்ட முதல் ஒப்பந்தத்தைக் குறிக்கிறது. 15 ஆண்டுகளில் $100 பில்லியன் டாலர் முதலீடு மற்றும் 1 மில்லியன் வேலை வாய்ப்புகள், ‘மேக் இன் இந்தியாவை’ ஊக்குவிப்பது மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு விரிவான ஐரோப்பிய மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான அணுகலை வழங்குவது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.
7. அண்மையில், பாகிஸ்தானின் 14ஆவது அதிபராகப் பதவியேற்றவர் யார்?
அ. அமீர் முகம்
ஆ. முசாதிக் மாலிக்
இ. மாமூது கான் அச்சக்சாய்
ஈ. ஆசிப் அலி சர்தாரி
- பாகிஸ்தானின் 14ஆவது அதிபரான ஆசிப் அலி சர்தாரி 2024 மார்ச் 10 அன்று பதவியேற்றார். இவருக்கு முன் டாக்டர் ஆரிஃப் அல்வி பாகிஸ்தானின் அதிபராக இருந்தார். மூத்த அரசியல்வாதியான ஆசிப் அலி சர்தாரி, பாகிஸ்தான் மக்கள் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைவராகவும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத்தலைவராகவும் இருந்துள்ளார். இரண்டு முறை அதிபர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பாகிஸ்தானியர் இவர்தான்.
8. அண்மையில், அனைத்து பெண்கள் கடல்சார் கண்காணிப்பு இயக்கத்தை நடத்திய மாநிலம்/UT எது?
அ. தமிழ்நாடு
ஆ. அந்தமான் & நிக்கோபார்
இ. இலட்சத்தீவுகள்
ஈ. கர்நாடகா
- அந்தமான் மற்றும் நிக்கோபார் படையணியானது INAS 318இன் 40ஆவது ஆண்டு நிறைவையும் உலக பெண்கள் நாளையும் கொண்டாடும் விதமாக வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்து பெண்கள் கொண்ட கடல்சார் கண்காணிப்பு இயக்கத்தை நடத்தியது. லெப்டினன்ட் கமாண்டர் சுபாங்கி ஸ்வரூப், லெப்டினன்ட் கமாண்டர் திவ்யா ஷர்மா மற்றும் லெப்டினன்ட் வைஷாலி மிஸ்ரா ஆகியோர் அடங்கிய குழுவினர், கடற்படை வான்படைப் பிரிவில் பெண்களின் முதன்மை பங்கை வெளிப்படுத்தினர். பாலின சமத்துவத்தை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்வு நடந்தேறியது.
9. அண்மையில், கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும் திட்டம் தொடங்கப்பட்ட இடம் எது?
அ. போபால்
ஆ. புது தில்லி
இ. சண்டிகர்
ஈ. லக்னோ
- கேலோ இந்தியா வளர்ந்து வரும் திறமைகளை அடையாளம் காணும், ‘கீர்த்தி’ திட்டத்தை மத்திய இளையோர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் சண்டிகரில் தொடக்கி வைத்தார். ஒன்பது முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளிக்குழந்தைகளை இலக்காகக்கொண்ட இந்த நாடு தழுவிய திட்டம் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் திறமையாளர்களைக் கண்டறிவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- ‘கீர்த்தி’ என்னும் இந்தத் திட்டம் நாடு முழுவதும் ஐம்பது மையங்களில் தொடங்கப்பட்டது. அறிவிக்கப்பட்ட திறன் மதிப்பீட்டு மையங்கள்மூலம் திறமையாளர்களை அடையாளம்காண ஆண்டு முழுவதும் நாடு முழுவதும் 20 லட்சம் மதிப்பீடுகள் நடத்துவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
10. திவ்யாஸ்திரம் திட்டத்துடன் தொடர்புடைய ஏவுகணை எது?
அ. திரிசூலம்
ஆ. அக்னி-5
இ. பிருத்வி
ஈ. ஆகாஷ்
- DRDOஇன், ‘இந்தியாவில் தயாரிப்போம்’ முன்னெடுப்பின் ஒருபகுதியாக, 2024 மார்ச்.11 அன்று அக்னி-5 அணுசக்தி ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. உள்நாட்டிலேயே DRDOஆல் ‘திவ்யாஸ்திரம்’ திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட, ‘அக்னி-5’ ஏவுகணை ஒரேநேரத்தில் பல்வேறு இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன் படைத்தது. இந்த ஏவுகணை குறிப்பிட்ட இலக்கைத்தாக்கிவிட்டு மீண்டும் திரும்பக்கூடிய வகையிலான, ‘MIRV’ என்கிற நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
11. புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித்திட்டத்தைத் தொடங்கிய அமைச்சகம் எது?
அ. இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம்
ஆ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
இ. சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம்
ஈ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
- மத்திய இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகம் புதுப்பிக்கப்பட்ட மருந்துத் தொழில்நுட்ப மேம்பாட்டு உதவித் திட்டத்தை (RPTUAS) அறிமுகப்படுத்தியது. இந்த முயற்சியானது, திருத்தப்பட்ட அட்டவணை M மற்றும் WHO-GMP சான்றிதழ்களை அடைவதற்காக மருந்து நிறுவனங்களுக்குத் தர அடிப்படையிலான மானியங்களை வழங்குகிறது. இந்தத்திட்டம் மருந்துத்துறையின் தரத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், திருத்தப்பட்ட அட்டவணை-M மற்றும் WHO-GMP வழிகாட்டுதல்களை மருந்து நிறுவனங்கள் பின்பற்றுவதை ஊக்குவிக்கிறது. இதன்மூலம் நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துப்பொருட்களின் தரம் மற்றும் பாதுகாப்பு மேம்படுத்தப்படும்.
12. “கார்மோசைன், டார்ட்ராசைன் மற்றும் ரோடமைன்” என்றால் என்ன?
அ. தொற்றுநோய்கள்
ஆ. தொழிற்துறை மாசுபடுத்திகள்
இ. உணவு நிறமூட்டிகள்
ஈ. மருத்துவத் தாவரங்கள்
- உடல்நலங்கருதி, ‘கோபி மஞ்சூரியன்’ மற்றும் ‘பஞ்சுமிட்டாய்களில்’ செயற்கை நிறமூட்டிகள் பயன்படுத்த கர்நாடக மாநில அரசு தடைவிதித்துள்ளது. சேகரிக்கப்பட்ட 171 கோபி மஞ்சூரியன் மாதிரிகளில், 107இல் டார்ட்ராசைன் மற்றும் செயற்கை மஞ்சள்நிறம் போன்ற பாதுகாப்பற்ற வண்ணங்கள் இருந்தன. சேகரிக்கப்பட்ட 25 பஞ்சுமிட்டாய் மாதிரிகளில் 15இல் பாதுகாப்பற்ற செயற்கை நிறமூட்டிளுடன், புற்றுநோயை உண்டாக்கும் ரோடமைன்-B என்ற வேதியும் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. மக்களவை, பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: குடியரசுத்தலைவரிடம் ராம்நாத் கோவிந்த் குழு அறிக்கை.
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டம் குறித்து ஆராய அமைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக்குழு தனது அறிக்கையை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. “ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது, நாட்டின் மக்களாட்சி அடிப்படையை வலுப்படுத்துவதோடு, வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கத்துக்குத் தூண்டுகோலாக அமையும்” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயர்நிலைக்குழுவின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகள் வருமாறு:
“ஒரே நாடு, ஒரே தேர்தல்” திட்டத்தின்கீழ், மக்களவை, மாநிலப்பேரவைகளுக்கு முதற்கட்டமாகவும், அடுத்த நூறு நாள்களுக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தலை நடத்தலாம்.
அரசமைப்புச்சட்டத்தின் 325ஆவது பிரிவில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். ஒரே நேர தேர்தல்களின் சுழற்சியை உறுதிசெய்ய சட்டபூர்வ வழிமுறையை ஏற்படுத்த வேண்டும்.
மாநில சட்டப்பேரவைக்கு புதிதாக தேர்தல் நடத்தப்பட்டால், புதிய பேரவையின் பதவிக்காலம் மக்களவையின் பதவிக் காலம் வரை தொடரும். இந்த வழிமுறையை அமல்படுத்த அரசமைப்புச்சட்டத்தின் 83ஆவது பிரிவு (நாடாளு மன்றத்தின் பதவிக்காலம்), 172ஆவது பிரிவில் (பேரவைகளின் பதவிக்காலம்) திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இத்திருத்தங்களுக்கு பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயா்நிலைக் குழு மொத்தம் 18 அரசமைப்புச் சட்டத் திருத்தங்களை பரிந்துரைத்துள்ள நிலையில், அதில் பல திருத்தங்களுக்கு சட்டப்பேரவைகளின் ஒப்புதல் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஐநா மனித வளர்ச்சிக் குறியீடு: இந்தியா 134ஆவது இடத்துக்கு முன்னேற்றம்.
கடந்த 2022ஆம் ஆண்டுக்கான 193 நாடுகளை உள்ளடக்கிய மனித வளர்ச்சிக்குறியீடு (HDI) தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 134ஆவது இடம் கிடைத்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியலில் 135ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. மக்களின் நீண்டநாள் ஆரோக்கிய வாழ்வு, கல்விபெறும் நிலை, வாழ்க்கைத்தரம் ஆகிய 3 முக்கிய காரணிகளின் அடிப்படையில் கணக்கீடு செய்து, நாடுகளின் மனித வளர்ச்சிக் குறியீடு தரவரிசை பட்டியலை ஐநா மனித வளர்ச்சி திட்டம் வெளியிட்டு வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டுக்கான குறியீடு தரவரிசை பட்டியலில் 0.644 புள்ளிகள் பெற்றுள்ளது.
பாலின சமத்துவமின்மை குறியீடு (GII):
193 நாடுகளை உள்ளடக்கிய பாலின சமத்துவமின்மை குறியீடு தரவரிசை பட்டியலில் 0.437 புள்ளிகளுடன் இந்தியாவுக்கு 108ஆவது இடம் கிடைத்துள்ளது. அதற்கு முந்தைய 2021ஆம் ஆண்டில், 0.49 புள்ளிகளுடன் 122ஆவது இடத்தில் இந்தியா இருந்தது. இனப்பெருக்க ஆரோக்கியம், அதிகாரமளித்தல் மற்றும் தொழிலாளர் சந்தை ஆகிய மூன்று முக்கிய காரணிகளின் அடிப்படையில் பாலின ஏற்றத்தாழ்வுகளை பாலின சமத்துவமின்மை குறியீடு (GII) அளவிடுகிறது.
மக்களின் சராசரி ஆயுட்காலம் 67.2 முதல் 67.7 ஆண்டுகள் வரை உயர்ந்துள்ளது. தேசிய வருமானத்தில் தனிநபர் மதிப்பு 6,542 டாலரிலிருந்து 6,951 டாலராக அதிகரித்துள்ளது. சமீபத்திய மனித வளர்ச்சிக் குறியீட்டில் 0.644 புள்ளிகளுடன் நடுத்தர மனித வளர்ச்சிப் பிரிவுக்கு இந்தியா முன்னேறியுள்ளது.
3. 42ஆவது முறையாக ரஞ்சி கோப்பை சாம்பியன் பட்டம் வென்றது மும்பை!
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரஞ்சி கோப்பையில் 42ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றி மும்பை அணி சாதனை புரிந்துள்ளது. முஷீர் கான் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.