Tnpsc Current Affairs in Tamil – 15th April 2024
1. உலகளாவிய கல்லீரல் அழற்சி அறிக்கை – 2024இன்படி, 2022ஆம் ஆண்டில் உலக அளவில் கல்லீரல் அழற்சி B & C வகை நோயினால் பாதிக்கப்பட்டோரில் எத்தனை சதவீதத்தினர் இந்தியாவில் உள்ளனர்?
அ. 10.5%
ஆ. 11.6%
இ. 12.1%
ஈ. 9.5%
- உலக சுகாதார அமைப்பின்படி, 2022ஆம் ஆண்டில் உலக அளவில் கல்லீரல் அழற்சி B & C வகை நோயினால் பாதிக்கப்பட்டோரில் இந்தியா 11.6%த்தினரைக் கொண்டுள்ளது. 35.3 மில்லியனுக்கும் அதிகமானோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 29.8 மில்லியன் பேர் கல்லீரல் அழற்சி வகை – Bஆலும் 5.5 மில்லியன் பேர் கல்லீரல் அழற்சி வகை – Cஆலும் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவும் சீனாவும் சேர்ந்து உலகளாவிய பாதிப்புகளில் 27.5%த்தைக் கொண்டுள்ளன.
2. அண்மையில், ‘விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (START)’ திட்டத்திற்கான மைய முகமையாக ISROஆல் நியமிக்கப்பட்ட அமைப்பு எது?
அ. குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் (GUJCOST)
ஆ. MP கவுன்சில் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (MPCST)
இ. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில், லக்னோ
ஈ. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், புது தில்லி
- GUJCOST ஆனது விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வு பயிற்சி (Space Science and Technology Awareness Training – START) திட்டத்திற்கான ISROஇன் முதன்மை முகமையாக நியமிக்கப்பட்டுள்ளது. இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதுகலை மற்றும் இறுதியாண்டு இளங்கலை பட்டதாரிகளை நோக்கமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள START திட்டமானது வானியல், வானியற்பியல், ஹீலியோபிசிக்ஸ், ஞாயிறு-புவி தொடர்பு மற்றும் கருவியியல்போன்ற பல்வேறு விண்வெளி அறிவியல் களங்களை உள்ளடக்கிய ஓர் அறிமுக இணையவழி பயிற்சியை வழங்குகிறது. இந்திய கல்வித்துறை மற்றும் ISRO மையங்களின் நிபுணர்களால் நடத்தப்படும் இது மாணவர்களிடையே விண்வெளிசார் அறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
3. குவாக்கரெல்லி சைமண்ட்ஸின் 2024 – உலக பல்கலைக்கழக தரவரிசையில் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் 45ஆவது இடத்தைப் பெற்றுள்ள நிறுவனம் எது?
அ. ஐஐடி பம்பாய்
ஆ. ஐஐடி கான்பூர்
இ. ஐஐடி மெட்ராஸ்
ஈ. ஐஐடி ரூர்க்கி
- 2024 – QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் 79.1/100 மதிப்பெண்களைப்பெற்று ஐஐடி பம்பாய் நிறுவனம் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் 45ஆவது இடத்திற்கு உயர்ந்துள்ளது. QS ஆனது பல்கலைக்கழகங்களை 55 துறைகளில் தரவரிசைப்படுத்துகிறது. இங்கிலாந்தைச் சார்ந்த QS நிறுவனத்தால் வெளியிடப்பட்ட முடிவுகள் கனிமங்கள் மற்றும் சுரங்கம் (25ஆவது), தரவு அறிவியல் மற்றும் AI (30ஆவது), கட்டமைப்பு பொறியியல் (42ஆவது) மற்றும் பிற துறைகளில் ஐஐடி பாம்பேயின் வலிமையை எடுத்துக்காட்டுகின்றது. பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பிரிவில் 2023இல் இருந்ததைவிட இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
4. அண்மையில், இலட்சத்தீவுகளில் கிளையைத் திறந்த முதல் தனியார் வங்கி எது?
அ. ஆக்சிஸ் வங்கி
ஆ. HDFC வங்கி
இ. YES வங்கி
ஈ. ICICI வங்கி
- இந்தியாவின் யூனியன் பிரதேசமான இலட்சத்தீவுகளில், குறிப்பாக கவராட்டி தீவில் கிளையை நிறுவிய முதல் தனியார் வங்கி என்ற பெருமையை HDFC வங்கி பெற்றுள்ளது. இதற்கு முன்பு இப்பகுதியில் அரசு வங்கிகள் மட்டுமே இயங்கிவந்தன. இந்த நடவடிக்கையானது வங்கி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும், தனிப்பட்ட மற்றும் டிஜிட்டல் வங்கிச் சேவையை மையமாகக்கொண்டு தனிப்பயனாக்கப்பட்ட எண்ம சேவைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
5. ஆசிய வளர்ச்சி வங்கியின் அறிக்கையின்படி, 2024-25இல் இந்தியப் பொருளாதாரத்தின் எதிர்பார்க்கப்படும் வளர்ச்சி வீதம் என்ன?
அ. 8.1 %
ஆ. 7.8 %
இ. 7.0 %
ஈ. 6.9 %
- ஆசிய வளர்ச்சி வங்கியின் (ADB) 2024 – ஏப்ரல் கண்ணோட்ட அறிக்கையின்படி, 2024-25 நிதியாண்டுக்கான இந்தியாவின் GDP வளர்ச்சிக்கணிப்பு 6.7%லிருந்து 7%ஆகத் திருத்தி அறிவிக்கப்பட்டுள்ளது. ADB, 2023-24இல் இந்தியாவின் GDP வளர்ச்சி 7.6%ஆக இருந்தது என்றும், 2025-26இல் அது 7.2%ஆக இருக்கும் என்றும் கணித்து அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியும் 2024-25 நிதியாண்டில் 7% வளர்ச்சி இருக்கும் எனக் கணித்துள்ளது. உலகளாவிய பொருளாதார சவால்கள் இருந்தபோதிலும், உள்நாட்டு தேவை, அரசாங்க கொள்கைகள், முதலீடுகள் மற்றும் மின்னணுப் பொருள்கள் மற்றும் சேவைகளில் ஏற்றுமதி ஆதாயங்களால் 2025 நிதியாண்டில் இந்தியா முதன்மை பொருளாதாரங்களை வழிநடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
6. அண்மையில், அமெரிக்க அதிபரின், ‘தங்க தன்னார்வ சேவை’ விருதினைப் பெற்ற முதல் இந்திய துறவி யார்?
அ. ஆச்சார்யா லோகேஷ் முனி
ஆ. இராகவேசுவர பாரதி
இ. விஜயேந்திர சரசுவதி
ஈ. பாரதி தீர்த்தா
- சமணர் ஆச்சார்யா லோகேஷ் முனி என்பவர் 2024ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபரின், ‘தங்க தன்னார்வ சேவை’ விருதைப்பெறும் முதல் இந்திய துறவி ஆனார். அவர் அகிம்சை விசுவபாரதி மற்றும் உலக அமைதி மையத்தின் நிறுவனராவார்; மனிதகுலம் மற்றும் பொதுநலனுக்கான அவரது பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். இவ் விருதை பெறுவது பெருமைக்குரியது என்றும், இது இந்திய கலாசாரம், ஆன்மிக விழுமியங்கள் மற்றும் மகாவீரரின் சமணக்கொள்கைகளை போற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
7. உலக இணையவெளிக் குற்றங்கள் குறியீடு – 2024இன்படி, உலக அளவில் இணையவெளிக் குற்றங்களில் இந்தியா அடைந்துள்ள தரநிலை என்ன?
அ. 8ஆவது
ஆ. 9ஆவது
இ. 10ஆவது
ஈ. 11ஆவது
- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் UNSW கான்பெர்ரா தலைமையிலான சர்வதேச குழு, ‘உலக இணைய வெளிக் குற்றங்கள் குறியீட்டை’ வெளியிட்டுள்ளது. 92 நிபுணர்களின் ஆய்வின்மூலம் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், இது இணையவெளிக் குற்றங்களின் பரவலின் அடிப்படையில் தோராயமாக நூறு நாடுகளை தரவரிசைப்படுத்துகிறது. இந்தத் தரவரிசையில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து உக்ரைன், சீனா, அமெரிக்கா, நைஜீரியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகள் உள்ளன. இந்தியாவின் மதிப்பெண் 6.13ஆக பதிவாகி 15 நாடுகளின் பட்டியலில் 10ஆவது இடத்தைப் பிடித்தது.
8. ‘சொறி ஒட்டுண்ணி நோய் (mange disease)’ என்றால் என்ன?
அ. பூச்சித்தொல்லையால் விலங்குகளில் ஏற்படும் தோல் நோய்
ஆ. பாதிக்கப்பட்ட விலங்கு கடிப்பதால் ஏற்படும் வைரஸ் தொற்று
இ. முதன்மையாக கால்நடைகளைப் பாதிக்கும் தொற்றுநோய்
ஈ. தாவரங்களின் வாழிடத்தைப் பாதிக்கும் பூஞ்சை நோய்
- முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஆசிய காட்டு நாய்களிடியே சொறி ஒட்டுண்ணி நோய் பரவுவதை வனத் துறையினர் கண்காணித்து வருகின்றனர். ஒட்டுண்ணிகளால் ஏற்படும் சொறி ஒட்டுண்ணி நோய், வீக்கம், அரிப்பு, தோல் தடித்தல் மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது. Sarcoptes scabiei பூச்சிகளால் ஏற்படும் இந்த நோய், மனிதர்களையும் தாக்குகிறது. அனைத்து வீட்டு விலங்குகளையும் சொறி ஒட்டுண்ணி நோய் தாக்கலாம். நேரடி தொடர்பு மற்றும் தூய்மையற்ற பொருள்கள்மூலம் இந்த நோய் பரவுகிறது. இந்த நோய் சிகிச்சையளிக்கக்கூடியதாக உள்ளது.
9. அண்மையில், இந்திய கடற்படைக் கப்பல்களுக்கான முதல் எஃகு வெட்டு விழா நடைபெற்ற இடம் எது?
அ. சென்னை, தமிழ்நாடு
ஆ. விசாகப்பட்டினம், ஆந்திர பிரதேசம்
இ. விழிஞ்சம், கேரளா
ஈ. கொல்கத்தா, மேற்கு வங்கம்
- ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் ஷிப்யார்ட் லிட் (HSL) நிறுவனத்தில் இந்திய கடற்படைக்கான கப்பல்களுக்கு எஃகு வெட்டுதல் நிகழ்வுக்கு பாதுகாப்புத்துறைச்செயலர் கிரிதர் அரமனே தலைமை வகித்தார். கடற்படைக்கான ஐந்து கப்பல்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் HSL நிறுவனத்துடன், கடற்படை 2023 ஆகஸ்ட்டில் கையெழுத்திட்டது. 40,000 டன்களுக்கும் அதிகமான எடைத்திறன்களைக்கொண்ட இந்தக் கப்பல்கள் எரிபொருள், நீர், வெடிபொருட்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்சென்று கடலில் நீண்டகாலம் செயல்படும் தன்மைகொண்டவையாகும். இக்கப்பல்கள் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். முற்றிலும் உள்நாட்டு வடிவமைப்பில் உள்நாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்தே பெரும்பாலான உபகரணங்களை வாங்கி இந்தக்கப்பல்கள் வடிவமைக்கப்படுகின்றன.
10. 2024 – ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்ற இடம் எது?
அ. பிஷ்கெக், கிர்கிஸ்தான்
ஆ. பெய்ஜிங், சீனா
இ. புது தில்லி, இந்தியா
ஈ. துஷான்பே, தஜிகிஸ்தான்
- 2024 – ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் கிர்கிஸ்தானின் பிஷ்கெக்கில் நடந்தது. அங்கு இந்தியாவின் உதித் ஆடவர் ஃப்ரீஸ்டைல் 57 கிகி பிரிவிலும் அபிமன்யு 70 கிகி பிரிவிலும் வெள்ளி வென்றனர். அபிமன்யுவும் விக்கியும் அந்தந்தப் பிரிவுகளில் வெண்கலங்களையும் வென்றனர்.
- ஈரான், கிர்கிஸ்தான் மற்றும் வட கொரிய போட்டியாளர்களைத் தோற்கடித்த போதிலும், ஜப்பானின் கென்டோ யுமியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் உதித்தால் வெள்ளியே வெல்ல முடிந்தது. கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா தங்கம் வெல்லாமல் போட்டியை நிறைவு செய்வது இது முதல் முறையாகும்.
11. அண்மையில், 2024 – நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலக கழிவு மேலாண்மைத்திறனை விஞ்சும் நாள் அறிக்கையை வெளியிட்ட இலாப நோக்கற்ற அமைப்பு எது?
அ. எர்த் ஆக்ஷன்
ஆ. அமெரிக்க தேசிய செஞ்சிலுவை சங்கம்
இ. யுனைடெட் வே
ஈ. INSO
- எர்த் ஆக்ஷன் அமைப்பானது 2024 – நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலக கழிவு மேலாண்மைத்திறனை விஞ்சும் நாள் (Plastic Overshoot Day) அறிக்கையை வெளியிட்டது. இந்த அறிக்கை உலகளாவிய நெகிழிக் கழிவுகள் நிர்வகிக்கக்கூடிய அளவைத்தாண்டி சுற்றுச்சூழலுக்கு தீங்குவிளைவிக்கும் அளவுக்கு உயர்வதைக் குறிக்கிறது. நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலக கழிவு மேலாண்மைத்திறனை விஞ்சும் நாளானது செப்டம்பர்.05 அன்று கடைப்பிடிக்கவும் இந்தியாவில் ஏப்ரல்.23 அன்று கடைப்பிடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
- இந்த அறிக்கையின்படி, 2021 முதல் 7.11% நெகிழிக்கழிவுகள் அதிகரித்துள்ளன; 60% நெகிழிக் கழிவுகளுக்கு 12 நாடுகளே பொறுப்பாகும். குறைந்த நெகிழிக்கழிவுகளை உருவாக்கும் & மாசுபடுத்தும் நாடாக வகைப்படுத்தப்பட்ட இந்தியா, முறையற்ற அகற்றல் மற்றும் சேர்க்கை பயன்பாடுபோன்ற சவால்களை எதிர்கொள்கிறது.
12. 2024 – நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலக கழிவு மேலாண்மைத்திறனை விஞ்சும் நாள் அறிக்கையின்படி, உலகளவில் தனிநபர் நெகிழிக்கழிவு உற்பத்தி விகிதங்களில் மிகக்குறைந்த நாடுகளுள் ஒன்றாக உள்ள நாடு எது?
அ. இந்தியா
ஆ. இலங்கை
இ. மியான்மர்
ஈ. பிலிப்பைன்ஸ்
- சுவிச்சர்லாந்தின் EA எர்த் ஆக்ஷனின் அண்மைய அறிக்கை, உலகின் 60% வீணான நெகிழிக்கழிவுகளுக்கு பங்களிக்கும் முதல் பன்னிரண்டு நாடுகளில் இந்தியாவும் ஒன்று என தெரிவித்துள்ளது. 2024 ஏப்ரல்.12 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, தவறான முறையில் நிர்வகிக்கப்படும் கழிவுக்குறியீட்டில் எரித்திரியாவை மிகமோசமானதாக முன்னிலைப்படுத்தியுள்ளது. பெர்முடா கடைசி இடத்தில் உள்ளது.
- இந்தியாவின் தனிநபர் நெகிழிக்கழிவு உற்பத்தியானது உலகிலேயே மிகக்குறைந்த அளவாக ஆண்டுக்கு எட்டுக் கிலோவாக உள்ளது; ஆனால் 2024ஆம் ஆண்டில் அதன் தவறான மேலாண்மைக்கழிவு 7.4 மில்லியன் டன்களாக ‘மிக அதிகமானதாக’ உள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்.
வங்கக்கடல் பகுதிகளில் மீன்களின் இனப்பெருக்கத்துக்காக ஆண்டுதோறும் ஏப்.15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாள்களுக்கு கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்குக் கடற்கரைப்பகுதிகளில் விசைப்படகுகள் மூலம் ஆழ்கடலுக்குச்சென்று மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு வருகிறது.
இந்தத் தடைக்காலம் முதலில் 45 நாள்களாக இருந்து வந்த நிலையில் 2017ஆம் ஆண்டு முதல் 61 நாள்களாக அதிகரிக்கப்பட்டது. இத்தடைக்காலத்தின்போது, மீனவர்கள் தங்கள் விசைப்படகுகள், வலைகளை பழுதுபார்க்கும் பணியில் ஈடுபடுவர். இவர்களுக்கு அரசு சார்பில் `6,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது.