TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 14th May 2024

1. ஆயுத மோதலின்போது பண்பாட்டு ரீதியிலான சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அவையின் 70ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய அமைப்பு எது?

அ. UNESCO

ஆ. WTO

இ. FAO

ஈ. UNICEF

  • ஆயுத மோதலின்போது பண்பாட்டு ரீதியிலான சொத்துக்களைப் பாதுகாப்பதற்கான அவையின் 70ஆவது ஆண்டு விழாவாவை UNESCO கொண்டாடியது. அமைதிக்காலம் மற்றும் மோதலின்போது பண்பாட்டு ரீதியிலான அசையும் மற்றும் அசையா சொத்துக்களைப் பாதுகாப்பதற்கெனவே அர்ப்பணிக்கப்பட்ட முதல் உலகளாவிய சட்டக்கட்டமைப்பு இதுவாகும். இந்தியா உட்பட 135 உறுப்புநாடுகளைக் கொண்ட இது, அவை மற்றும் அதன் நெறிமுறைகள் (1954, 1999), UNESCOஇன்கீழ் இயங்குகின்றது.

2. அண்மையில், ஐநா காடுகள் அமைப்பின் (UNFF) 19ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?

அ. பாரிஸ்

ஆ. நியூயார்க்

இ. கலிபோர்னியா

ஈ. லண்டன்

  • உலகளாவிய காடுகள் மேலாண்மை, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை வளர்ப்பதை நோக்கமாகக்கொண்ட ஐநா காடுகள் அமைப்பின் 19ஆவது அமர்வு அண்மையில் நியூயார்க்கில் கூடியது. ECOSOCஇன்கீழ், கடந்த 2000 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இது, அனைத்து ஐநா உறுப்பு நாடுகளையும் சிறப்பு நிறுவனங்களையும் உள்ளடக்கியது ஆகும். இதில் இந்தியா ஒரு நிறுவன உறுப்பினராக உள்ளது. நியூயார்க்கில் இயங்கி வரும் இது, ECOSOC ஊடாக பொதுச்சபைக்கு தகவலறிக்கையைச் சமரப்பிக்கிறது. காடுசார் பிரச்சினைகளுக்கு அர்ப்பணிப்பை வலுப்படுத்துவதும் அவற்றின் நிலையான வளர்ச்சியை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும்.

3. ‘கவாசாகி நோய்’ என்றால் என்ன?

அ. ஓர் அரிதான இருதய நோய்

ஆ. கண்ணில் ஏற்படும் கோளாறு

இ. பூஞ்சையால் ஏற்படும் நோய்

ஈ. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்

  • கோயம்புத்தூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் (CMCH) கவாசாகி நோயால் பாதிக்கப்பட்ட இரண்டு பெண் சிறார்களுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளிக்கப்பட்டது. ஓர் அரிதான இருதய நோயான, ‘கவாசாகி நோய்’, முதன்மையாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளைப் பாதிக்கிறது. இது அதீத காய்ச்சல் மற்றும் வீக்கமடைந்த குருதி நாளங்களுக்கு வழிவகுக்கிறது. கரோனரி தமனிகளை குறிவைத்து தாக்கும் இது, குழந்தைகளில் இருதய நோய்க்கு குறிப்பிடத்தக்க காரணமாக அமைகிறது. காய்ச்சல், சொறி, வீங்கிய கைகள் மற்றும் கால்கள் மற்றும் வீக்கமடைந்த சளி சவ்வுகள் ஆகியவை இந்நோய்க்கான அறிகுறிகளாகும். இந்நோய்க்கான காரணம் சரியாக அறியப்படவில்லை, குளிர்காலத்தின் பிற்பகுதியிலும் வசந்த காலத்தின் தொடக்கத்திலும் இதன் பாதிப்புகள் உச்சத்தை அடைகின்றன.

4. ‘ஹெர்ம்ஸ்-900’ என்றால் என்ன?

அ. ஆளில்லா வான்வழி அமைப்பு

ஆ. அணுவாற்றல்கொண்ட நீர்மூழ்கிக்கப்பல்

இ. ஆக்கிரமிப்புக் களை

ஈ. பழங்கால நினைவுச்சின்னம்

  • இந்திய இராணுவம் மற்றும் கடற்படையினர், கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்துவதற்காக, ‘ஹெர்ம்ஸ்-900’ டிரோன்கள் அல்லது திருஷ்டி-10ஐப் பெறவுள்ளனர். ஒரு Medium Altitude Long Endurance (MALE) ஆளில்லா வான் வழி அமைப்பான, ‘ஹெர்ம்ஸ்-900’, 350 கிகி எடைவரை சுமந்து திரியும் திறன்கொண்டதாகும். இது நுண்ணறிவு, கண்காணிப்பு, இலக்கு கையகப்படுத்தல் மற்றும் கடல்சார் ரோந்துப்பணிகளுக்கு உதவுகிறது.

5. அனைத்து பனிப்பாறைகளையும் இழந்த முதல் நாடு எது?

அ. ரஷ்யா

ஆ. வெனிசுலா

இ. நார்வே

ஈ. சுவீடன்

  • அதன், ‘ஹம்போல்ட்’ என்ற பனிப்பாறை கடைசியாக மறைந்ததை அடுத்து அனைத்து பனிப்பாறைகளையும் இழந்த முதல் நாடாக வெனிசுலா ஆனது. பன்னாட்டு தாழ்வெப்பமண்டல தட்பவெப்பநிலை முன்னெடுப்பு, வெனிசுலாவில் உள்ள பனிப்பாறைகள், வகைப்படுத்த முடியாத அளவுக்கு சிறியதாக உள்ளது என அறிவித்துள்ளது. தற்போது அது ‘பனிக்களம்’ என்று அழைக்கப்படுகிறது.

6. ‘டிஜிலாக்கர்’ என்பது கீழ்க்காணும் எந்த அமைச்சகத்தின் முதன்மையான முன்னெடுப்பாகும்?

அ. வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

ஆ. தகவல் தொடர்பு அமைச்சகம்

இ. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

ஈ. உள்நாட்டு வான் போக்குவரத்து அமைச்சகம்

  • கடந்த 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட, ‘டிஜிலாக்கர்’, அரசாங்க ஆவணங்களுக்கான பாதுகாப்பான தளமாக செயல்படுகிறது. மாணாக்கர் மதிப்பெண்கள் மற்றும் சரிபார்க்கப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை இதில் அணுகலாம். இது 2048 பிட் RSA SSL குறியாக்கம் (encryption) மற்றும் பல-காரணி (multi-factor) அங்கீகாரம் உள்ளிட்ட கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட தளமாக விளங்குகிறது.
  • பயனர்கள் தங்களது அத்தியாவசிய ஆவணங்களை காகிதமில்லா முறையான டிஜிட்டல் முறையில் இதில் சேமிக்க முடியும். ‘டிஜிலாக்கர்’மூலம் வழங்கப்பட்ட ஆவணங்கள், அசல் சான்றுகளுக்கு இணையாக மதிக்கப்படுபவை. இது கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் மற்றும் அடையாள சரிபார்ப்பின் போதும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

7. அண்மையில், ‘சக்தி’ என்ற கூட்டு இராணுவப்பயிற்சியின் 7ஆவது பதிப்பை நடத்திய நாடுகள் எவை?

அ. இந்தியா & மாலத்தீவுகள்

ஆ. இந்தியா & ரஷ்யா

இ. இந்தியா & ஐக்கிய அரபு அமீரகம்

ஈ. இந்தியா & பிரான்ஸ்

  • ‘சக்தி’ என்ற இந்தியா-பிரான்ஸ் இடையயான கூட்டு ராணுவப்பயிற்சியின் 7ஆவது பதிப்பு, மேகாலயா மாநிலத்தின் உம்ரோயில் தொடங்கியது. இந்தப் பயிற்சியை 2024 மே.13-26 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டுப் பயிற்சியின் தொடக்க விழாவில் இந்தியாவுக்கான பிரான்ஸ் தூதர் தியரி மாத்தூ மற்றும் 51 துணைப் பகுதியின் பொது அதிகாரி மேஜர் ஜெனரல் பிரசன்னா சுதாகர் ஜோஷி ஆகியோர் கலந்து கொண்டனர். ‘சக்தி’ பயிற்சி என்பது இந்தியாவிலும் பிரான்சிலும் மாறிமாறி ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் பயிற்சி நிகழ்வாகும். கடைசி பதிப்பு 2021 நவம்பரில் பிரான்சில் நடத்தப்பட்டது.
  • கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தந்திரோபாயங்கள், தொழில்நுட்பங்கள் மற்றும் நடைமுறைகளில் இருதரப்பினரும் தங்களது சிறந்த நடைமுறைகளை பகிர்ந்துகொள்ள ‘சக்தி’ பயிற்சி உதவும். இருநாடுகளின் ஆயுதப் படை வீரர்களுக்கு இடையே பரஸ்பர இயக்கம், நல்லிணக்கம் மற்றும் தோழமையை மேம்படுத்த இந்தக் கூட்டுப் பயிற்சி உதவும். இது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அளவை மேம்படுத்துவதோடு, இரு நட்புநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வளர்க்கும்.

8. 2024 – சர்வதேச செவிலியர் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?

அ. Our Nurses, Our Future, The Economic Power of Care

ஆ. Closing the Gap

இ. Nurses: A Voice to Lead

ஈ. Nurses: A Force for Change

  • உலக செவிலியர் நாள் உலகம் முழுவதும் மே.12ஆம் தேதியன்று கொண்டாடப்பட்டு வருகின்றது. செவிலியர்கள், சமூகத்திற்கு ஆற்றும் பங்களிப்பை சிறப்பாக நினைவுகூர இந்நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. 1974 ஜனவரியில், நவீன செவிலியர் முறையை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளான மே.12ஐ சிறப்பாக நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது. “Our Nurses, Our Future, The Economic Power of Care” என்பது நடப்பு 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். உலகப்பொருளாதாரத்தில் செவிலியர்களின் தாக்கம் குறித்து இது எடுத்துக்காட்டுகிறது.

9. அண்மையில், முப்பரிமாண (3D) அச்சிடல் உதவியுடன் தயாரிக்கப்பட்ட திரவ ஏவூர்திப்பொறியை வெற்றிகரமாக சோதித்த விண்வெளி அமைப்பு எது?

அ. ISRO

ஆ. NASA

இ. JAXA

ஈ. CNSA

  • இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பானது (ISRO) முப்பரிமாண அச்சிடல் தொழில்நுட்பத்தின்மூலம் தயாரிக்கப்பட்ட திரவ ஏவூர்திப்பொறியை வெற்றிகரமாக சோதித்தது. இதற்காக PSLVஇன் நான்காம் கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட PS4 எஞ்சினை ISRO பயன்படுத்தியது. முப்பரிமாண (3D) அச்சிடல் தொழில்நுட்பமானது கணிப்பொறி உருவாக்கிய வடிவமைப்புகளிலிருந்து அடுக்கடுக்காக பொருட்களை உருவாக்குகிறது. இது ஊவாக்கக் கூறுகளை 14இலிருந்து ஒன்றாக குறைக்கிறது, 97% மூலப்பொருட்களை சேமிக்கிறது மற்றும் உற்பத்தி நேரத்தை 60% குறைக்கிறது.

10. பவள நிறமாற்றம் காரணமாக அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஆண்ட்ரோட், கில்டன் மற்றும் கல்பேனி தீவுகள் இந்தியாவின் எந்தப் பகுதியில் அமைந்துள்ளன?

அ. தமிழ்நாடு

ஆ. இலட்சத்தீவுகள் கடல்

இ. அந்தமான் கடல்

ஈ. கேரளா

  • கடந்த 2023 அக்டோபரில் இருந்து நிகழ்ந்து வரும் கடல் வெப்ப அலைகள் காரணமாக இலட்சத்தீவுகள் கடலில் கடுமையான பவள நிறமாற்றம் ஏற்பட்டு வருவதை ICAR-மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்தது. வெதுவெதுப்பான நீரால் பாதிக்கப்பட்ட பவளப்பாறைகள், காம்பிலி உயிரினங்கள் அவற்றின் உணவு ஆதாரமான பாசிகளை இழந்துள்ளன. இலட்சத்தீவின் தீவுகள், பெரும்பாலும் பவளத்தீவுகள், பவளத்திலிருந்து பெறப்பட்ட மண் ஆகியவற்றையே நம்பியுள்ளன. பித்ரா, கில்தான், அமினி, ஆன்ட்ரோட், கல்பேனி மற்றும் கவராட்டி போன்ற முக்கிய தீவுகளை இந்த பவள நிறமாற்றம் பாதித்துள்ளது.

11. இடாஷிஷா நோங்ராங் என்பவர் கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) நியமிக்கப்பட்டுள்ளார்?

அ. நாகாலாந்து

ஆ. சிக்கிம்

இ. மேகாலயா

ஈ. அஸ்ஸாம்

  • மேகாலய மாநிலத்தின் முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குநராக (DGP) மூத்த இகாப அதிகாரி இடாஷிஷா நோங்ராங் நியமிக்கப்பட்டுள்ளார். காசி இனத்தவரான இடாஷிஷா நோங்ராங், 1992ஆம் ஆண்டு இந்திய காவல் பணி (IPS) உறுப்பினராவார். மே.19 அன்று ஓய்வுபெறும் லஜ்ஜா இராம் பிஷ்னோயைத் தொடர்ந்து இடாஷிஷா நோங்ராங் பதவியேற்பார். இதற்கு முன்பு 2021இல் காவல்துறை தலைமை இயக்குநராகப் பணியாற்றியுள்ள அவர், தற்போது மேகாலயா மாநில பாதுகாப்புப் படையை வழிநடத்துகிறார்.

12. அண்மையில், 30ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பையை வென்ற நாடு எது?

அ. ஜப்பான்

ஆ. இந்தியா

இ. சீனா

ஈ. மலேசியா

  • பெனால்டி ஷூட் ஔட்டில் பாகிஸ்தானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி ஜப்பான் தனது முதல் சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி கோப்பையை வென்றது. 2024 மே.11 அன்று மலேசியாவின் ஈப்போவில் உள்ள அஸ்லான் ஷா அரங்கத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டி, 2-2 என முடிவடைந்தது. இந்த வெற்றியின்மூலம் ஜப்பான் தனது முதல் பட்டத்தை வென்றது. 10ஆவது முறையாக இறுதியாட்டத்தில் விளையாடும் பாகிஸ்தான், இதற்குமுன் மூன்று முறை கோப்பையை வென்றுள்ளது. 30ஆவது சுல்தான் அஸ்லான் ஷா கோப்பைக்கான போட்டியில் ஜப்பான் முதலிடத்தையும், பாகிஸ்தான் மற்றும் மலேசியா அடுத்தடுத்த இடங்களையும் பிடித்தன.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. சபஹார் துறைமுகத்தை பத்து ஆண்டுகள் செயல்படுத்த ஒப்பந்தம்: ஈரானுடன் இந்தியா கையொப்பம்.

ஈரான் நாட்டில் உள்ள சபஹார் துறைமுகத்தின் செயல்பாட்டு பணிகளை பத்து ஆண்டுகள் மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் இந்தியா-ஈரான் இடையே கையொப்பமானது. முதன்முறையாக வெளிநாட்டில் உள்ள துறைமுகத்தின் நிர்வாகத்தை இந்தியா மேற்கொள்ளவுள்ளது.

சர்வதேச வடக்கு-தெற்கு வழித்தடம் வழியாக மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியா – ஈரான் – ஆப்கானிஸ்தான் இடையே வணிகம் மேற்கொள்ள இந்த ஒப்பந்தம் உதவுகிறது. பாகிஸ்தானின் வர்த்தக வழித்தடத்தை புறக்கணித்து இந்தியா மேற்கொண்ட திட்டமாக இது கருதப்படுகிறது.

2. தமிழ்நாட்டின் ஷியாம்நிகில் 85ஆவது கிராண்ட்மாஸ்டர்.

இந்தியாவின் 85ஆவது செஸ் கிராண்ட்மாஸ்டராக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பி ஷியாம்நிகில் (31) உருவெடுத்துள்ளார். அண்மையில் நிறைவடைந்த துபை போலீஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின்மூலம், கிராண்ட்மாஸ்டர் ஆவதற்கான 3ஆவது மற்றும் இறுதித்தகுதியை பூர்த்தி செய்த அவர், கிராண்ட்மாஸ்டர் ஆகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!