Tnpsc Current Affairs in Tamil – 14th March 2024
1. தட்பவெப்பநிலை மாற்ற நெருக்கடியை எடுத்துரைத்ததற்காக, 2024ஆம் ஆண்டுக்கான, ‘எராஸ்மஸ் பரிசு’ பெற்ற இந்திய எழுத்தாளர் யார்?
அ. கிரண் தேசாய்
ஆ. அரவிந்த் அடிகா
இ. அருந்ததி ராய்
ஈ. அமிதவ் கோஷ்
- இந்திய எழுத்தாளர் அமிதவ் கோஷ் (67), நெதர்லாந்தின் பிரீமியம் எராஸ்மியானம் அறக்கட்டளையால் வழங்கப்படும் 2024ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க, ‘எராஸ்மஸ்’ பரிசினைப் பெற்றுள்ளார். உலகளாவிய தட்பவெப்பநிலை மாற்ற நெருக்கடியை இலக்கியம்மூலம் எடுத்துரைத்தமைக்காக அங்கீகரிக்கப்பட்ட அமிதவ் கோஷ், 150,000 யூரோக்கள் மதிப்புடைய இப்பரிசை நவம்பரில் நேரில் சென்று பெறுவார். 1958இல் நிறுவப்பட்ட இந்த விருது, தட்பவெப்பநிலை நெருக்கடியின் கலாச்சார பரிமாணங்களை வலியுறுத்தி விதிவிலக்கான பங்களிப்புகளை செய்யும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களை கௌரவிக்கின்றது.
2. அண்மையில், ‘ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்’ பிரச்சார நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்ட இடம் எது?
அ. அஜ்மீர்
ஆ. ஜெய்சால்மர்
இ. பிகானேர்
ஈ. ஜெய்ப்பூர்
- ‘ஹமாரா சம்விதான், ஹமாரா சம்மான்’ பிரச்சார நிகழ்வு, இராஜஸ்தானின் பிகானேரில் மார்ச்.9 அன்று, இந்தியாவின் 75ஆவது குடியரசு ஆண்டைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை நீதிபதி DY சந்திரசூட் மற்றும் மத்திய அமைச்சர் அர்ஜுன் இராம் மேக்வால் ஆகியோர் சட்ட வல்லுநர்கள், காவல்துறை அதிகாரிகள், சட்டக்கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர். தேசிய ஒற்றுமையை வளர்க்கும் அரசியலமைப்பின் கொள்கைகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது இந்த நிகழ்வு.
3. நமஸ்தே திட்டத்துடன் தொடர்புடைய தொழிலாளர் குழு எது?
அ. தூய்மைப் பணியாளர்கள்
ஆ. உழவர்கள்
இ. மருத்துவப் பணியாளர்கள்
ஈ. கட்டுமானத் தொழிலாளர்கள்
- மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் தலைமையிலான நமஸ்தே திட்டம், அபாயகரமான கழிவுநீர் மற்றும் மலம் மக்கல் தொட்டியை கைமுறையாக சுத்தம் செய்வதில் ஈடுபடும் நிலையை முற்றாக ஒழிப்பதை நோக்கமாகக் கொண்டதாகும். NSKFDCஆல் 3 ஆண்டுகளுக்கு (2023-24 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை) `349.73 கோடி பட்ஜெட்டில் செயல்படுத்தப்பட்ட இத் திட்டம் டிஜிட்டல் விவரக்குறிப்பு உருவாக்கல், PPE கருவிகள், பாதுகாப்புப்பயிற்சி மற்றும் சுகாதாரக் காப்பீடு உட்பட கழிவுநீர் மற்றும் மலம் மக்கல் தொட்டியை தூய்மைப்படுத்தும் தொழிலாளர்களுக்கான உரிமைகளை வழங்குகிறது.
4. சேலா சுரங்கப்பாதை அமைந்துள்ள மாநிலம் எது?
அ. அஸ்ஸாம்
ஆ. அருணாச்சல பிரதேசம்
இ. மகாராஷ்டிரா
ஈ. குஜராத்
- அருணாச்சல பிரதேச மாநிலத்தில் 13,000 அடி உயரத்தில் உலகின் மிகநீளமான இருவழிச்சாலை சுரங்கப் பாதையான சேலா சுரங்கப்பாதையை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார். வர்தாக் திட்டத்தின்கீழ் எல்லைப்புறச் சாலைகள் அமைப்பாளா (BRO) கட்டப்பட்ட இதன் கட்டுமானம், 2019 ஏப்ரல்.01 அன்று தொடங்கியது. இது இரண்டு சுரங்கங்கள் மற்றும் 8.6 கிமீ நீளச்சாலைகளைக் கொண்டுள்ளது. சீனாவின் எல்லையில் உள்ள தவாங்கிற்கு அனைத்து வானிலை நிலைகளிலும் தங்குதடையின்றி செல்லுவதற்கு இந்தச் சுரங்கச் சாலை உதவும்.
5. கிளிக்காய்ச்சல் என்பது பின்வரும் எதனால் ஏற்படுகிறது?
அ. வைரஸ்
ஆ. பாக்டீரியா
இ. பூஞ்சை
ஈ. புரோட்டோசோவா
- ஐரோப்பா முழுவதும் பரவிவரும் கிளிக்காய்ச்சல் அல்லது ‘psittacosis’ காரணமாக அண்மையில் ஐந்து பேர் உயிர் இழந்துள்ளனர். ‘Chlamydophila psittaci’ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிற இக்காய்ச்சல் முதன்மையாக பறவைகளை பாதிக்கிறது; அசுத்தமான துகள்கள்மூலம் மனிதர்களிடம் பரவுகிறது. பறவைகளுக்கு அருகில் இருப்பவர்களை பொதுவாக தாக்கும் இதன் அறிகுறிகளில் காய்ச்சல், தலைவலி, தசை வலி மற்றும் நிமோனியா ஆகியவை அடங்கும். டாக்ஸிசைக்ளின் போன்ற நுண்ணுயிர் எதிர்ப்பிகள்மூலம் இதை குணப்படுத்த முடியும்.
6. ‘Right to Repair’ வலைத்தளத்துடன் தொடர்புடைய அமைச்சகம் எது?
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம்
ஆ. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இ. நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- ஓர் அண்மைய கூட்டத்தில் நுகர்வோர் விவகார அமைச்சகத்தால், இந்தியாவின், ‘பழுதுபார்ப்பதற்கான உரிமை’ வலைத்தளம் தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. 2022 – தேசிய நுகர்வோர் உரிமைகள் நாளன்று தொடங்கப்பட்ட இந்த வலைத்தளம், ஆட்டோமொபைல், மின்னணுப் பொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பழுதுபார்க்கும் தகவல்களை வழங்குவதன்மூலம் மின்னணுக்கழிவை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது OEMகள் அல்லது மூன்றாம் தரப்பு பழுதுபார்ப்பவர்களால் மலிவு விலையில் பழுதுபார்ப்புகளை எளிதாக்குகிறது; மேலும் சுழற்சிப்பொருளாதாரத்தை இது மேம்படுத்துகிறது.
7. 2024 – ‘நீர்வள இயக்கம்: மழைநீர் சேகரிப்பு’ என்ற பிரச்சாரத்துக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Valuing Water
ஆ. Jal Shakti se Vikas
இ. Nari Shakti se Jal Shakti
ஈ. Source Sustainability for Drinking Water
- மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், 2024 – ‘நீர்வள இயக்கம்: மழைநீர் சேகரிப்பு’ என்ற பிரச்சாரத்தின் ஐந்தாவது பதிப்பை 2024 மார்ச்.09 அன்று புது தில்லியில் உள்ள மாநாட்டு மையத்தில் தொடக்கி வைத்தார். “மகளிர் சக்தியின்மூலம் குடிநீர் சக்தி” என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்தப்பிரச்சாரம், நீர் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் பெண்களின் ஒருங்கிணைந்த பங்கை வலியுறுத்துகிறது.
- தேசிய நீர் இயக்கம், நீர்வளம், ஆறுகள் மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறையின்கீழ் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையுடன் இணைந்து இந்த இயக்கம் நடைபெற்று வருகிறது. ‘ஜல் சக்தி அபியான் 2019-2023 வரை – நிலையான நீர் எதிர்காலத்திற்கான பயணம்’ மற்றும் ‘ஜல் ஜீவன் மிஷனின் முப்பட்டகத்தின்மூலம் பெண்கள் சக்தியின் 101 கண்ணோட்டம்’ என்ற இரு புத்தகங்களையும் மத்திய அமைச்சர் மெய்நிகர் முறையில் வெளியிட்டார்.
8. மாதாரி வந்தனா யோஜனா தொடங்கப்பட்ட மாநிலம் எது?
அ. தமிழ்நாடு
ஆ. சத்தீஸ்கர்
இ. கேரளா
ஈ. மகாராஷ்டிரா
- சத்தீஸ்கரில் பெண்களுக்கு அதிகாரமளித்தலுக்கு பெரும் ஊக்கமளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோதி மாதாரி வந்தனா திட்டத்தைத் தொடக்கிவைத்தார். சத்தீஸ்கர் மாநிலத்தில் திருமணமானப் பெண்களுக்கு மாதந்தோறும் `1000 நிதியுதவி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மகளிருக்குப் பொருளாதார மேம்பாடு அளித்தல், நிதிப் பாதுகாப்பு அளித்தல், பாலின சமத்துவத்தை மேம்படுத்துதல் மற்றும் குடும்பத்தில் பெண்களின் பங்கினை வலுப்படுத்துதல் ஆகியவை இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
- 2024 ஜன.01, நிலவரப்படி 21 வயதுக்கு மேற்பட்ட மாநிலத்தின் தகுதியான மணமான அனைத்து பெண்களுக்கும் இத்திட்டம் பலன்களை வழங்கும். கைம்பெண்கள், மணமுறிவுற்ற மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களும் இந்தத் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள். இதன்மூலம் சுமார் 70 இலட்சம் பெண்கள் பயனடைவார்கள்.
9. 2024 – கட்லாஸ் எக்ஸ்பிரஸ் என்ற கடற்படைப் பயிற்சி நடைபெற்ற இடம் எது?
அ. மொரீஷியஸ்
ஆ. மடகாஸ்கர்
இ. இந்தியா
ஈ. சீஷெல்ஸ்
- முதல் பயிற்சிப்படையின் முதன்மை கப்பலான INS திர், அண்மையில் சீஷெல்ஸில் நடைபெறும் கட்லாஸ் எக்ஸ்பிரஸ் – 24 என்ற கடற்படைப் பயிற்சியில் பங்கேற்பதற்காக சென்றது. 2024 பிப்.26 முதல் மார்ச்.08 வரை நடைபெற்ற இந்தப் பயிற்சியானது, கிழக்கு ஆப்பிரிக்கக் கடலோரப் பகுதிகளிலும் மேற்கு இந்தியப் பெருங்கடலிலும் தீங்கான நடவடிக்கைகளை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
- US AFRICOMஆல் நிதியுதவி அளிக்கப்பட்டு, US கடற்படைப் படைகள் ஐரோப்பா-ஆப்பிரிக்கா/US ஆறாவது கடற்படை தலைமையில் நடத்தப்படும் இது கடல்சார் பாதுகாப்பு, ஒத்துழைப்பு மற்றும் பங்கேற்கும் நாடுகளிடையே இயங்கும் தன்மையை மேம்படுத்துகிறது. இந்தியக் கடற்படையானது, 2019 முதல் பயிற்சியின் ஒருபகுதியாக, கடல்சார் தடை நடவடிக்கைகளில் 16 நட்புநாடுகளுடன் தீவிரமாக பங்கேற்று வருகிறது.
10. அண்மையில், எந்த இடத்தில் மத்திய அமைச்சர் நாராயண் ரானேவால் MSME-தொழில்நுட்ப மையம் திறந்து வைக்கப்பட்டது?
அ. தமிழ்நாடு
ஆ. மகாராஷ்டிரா
இ. இராஜஸ்தான்
ஈ. குஜராத்
- மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க்கில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை மையத்திற்கு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்துறை அமைச்சர் நாராயண் ரானே அடிக்கல் நாட்டினார். சிந்துதுர்க் ஆத்யோகிக் பெருவிழா, சுயவேலைவாய்ப்பு மாநாடு ஆகியவற்றையும் அமைச்சர் தொடக்கி வைத்தார்.
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்பத்தை எளிதில் அணுகும் வகையில், நாடு முழுவதும் 20 புதிய தொழில்நுட்ப மையங்களும், 100 விரிவாக்க மையங்களும் மத்திய அரசால் அமைக்கப்படும். சிந்துதுர்க்கில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் தொழில்நுட்ப மையம் `182 கோடி திட்ட மதிப்பீட்டில், பொது பொறியியல், உணவு பதப்படுத்துதல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தும். அருகிலுள்ள பகுதிகளில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும்.
11. அண்மையில், தங்களின் இரண்டாவது பிரெஞ்ச் ஓபன் ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன் பட்டத்தை வென்ற வீரர்கள் யார்?
அ. லக்ஷ்யா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த்
ஆ. சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி
இ. ஆண்டர்ஸ் ஆண்டன்சன் மற்றும் விக்டர் ஆக்செல்சன்
ஈ. வெங் ஹாங்யாங் மற்றும் லு குவாங்சு
- 2024 மார்ச்.10 அன்று சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி தங்களின் இரண்டாவது பிரெஞ்சு ஓபன் ஆடவர் இரட்டையர் பாட்மிண்டன் பட்டத்தை வென்றனர். சீன தைபேயின் லீ ஜே-ஹூய் மற்றும் யாங் போ-ஹ்சுவான் ஜோடியை நேர்செட்களில் (21-11, 21-17) ஆடவர் இரட்டையர் அணி தோற்கடித்தது. சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோர் இதற்குமுன்பு 2022இல் பட்டத்தை வென்றிருந்தனர்.
12. சப்ரூம் நிலத் துறைமுகம் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. திரிபுரா
ஆ. மணிப்பூர்
இ. நாகாலாந்து
ஈ. மிசோரம்
- இந்திய-வங்காளதேச எல்லையில் திரிபுராவில் சப்ரூம் நிலத் துறைமுகத்தைப் பிரதமர் திறந்து வைத்தார். ஃபெனி ஆற்றின்மீது மைத்ரீ பாலம் வழியாக வங்காளதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டுள்ள இது, இருநாடுகளுக்கு இடையே பயணிகள் மற்றும் சரக்குப்போக்குவரவு இயக்கத்தை மேம்படுத்துகிறது.
- புதிதாக திறக்கப்பட்டுள்ள சப்ரூம் நிலத்துறைமுகம் போன்றவை பன்னாட்டு எல்லைக் கோடுகளில் அமைக்கப்பட்ட பகுதிகளாகும். தற்போது அமைக்கப்பட்டுள்ள சப்ரூம் நிலத்துறைமுகம், இந்தியாவில் அமையப்பெற்ற 11ஆவது நிலத் துறைமுகம் ஆகும். இது சுங்க அனுமதி மற்றும் பன்னாட்டு எல்லைகள் வழியாக சரக்குகள் மற்றும் பயணிகளின் போக்குவரத்தை எளிதாக்குகிறது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. மார்ச்.14: உலக ஆறுகள் பாதுகாப்பு நாள்.
2005ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அவை, ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் நான்காவது ஞாயிற்றுக்கிழமையை ‘உலக ஆறுகள் நாள்’ என்று அறிவித்தது. ஆறுகளின் அடிப்படை முக்கியத்துவத்தையும், காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வையும் பரப்புவதற்காக, ஆறுகளுக்கான ‘உலக ஆறுகள் பாதுகாப்பு நாள்’ ஒவ்வோர் ஆண்டும் மார்ச்.14 அன்று அனுசரிக்கப்படுகிறது. நடப்பாண்டு (2024) “அனைவருக்கும் தண்ணீர்” என்ற கருப்பொருளில் இந்த நாள் கவனம் செலுத்துகிறது.
2. முன்னாள் இராணுவ வீரர்களுக்கு வீட்டுவரித் தொகையை திரும்ப அளிக்க ஆணை.
நாட்டின் எல்லைகளில் பல்வேறு கடின சூழல்களிலும் சேவையாற்றிய முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக பலவித முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. அவற்றின் வரிசையில், வரும் நிதியாண்டிலிருந்து முன்னாள் படைவீரர்களின் குடியிருப்புகளுக்கான வீட்டுவரித் தொகையை மீளப்பெறும் திட்டத்தை மாநில அரசு செயல்படுத்தும்.
3. உத்தரகண்ட் பொது சிவில் சட்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல்.
உத்தரகண்ட் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டமசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார். இதையடுத்து, இந்த மசோதா சட்டமாகியுள்ளது. நாட்டின் சுதந்திரத்துக்குப் பிறகு பொது சிவில் சட்டத்தை ஏற்ற முதல் மாநிலம் என்ற சிறப்பை உத்தரகண்ட் பெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டப்பிரிவு 201இன்கீழ் மேற்கண்ட மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
உத்தரகண்ட் மாநில பொது சிவில் சட்டத்தில் பழங்குடி சமூகத்தினருக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளதோடு, மறுமணம், மணமுறிவு குறித்த பொது விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ விரும்புவோர் அரசிடம் பதிவுசெய்துகொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
4. இந்திய கடற்படையின் இரண்டு புதிய கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு.
இந்திய கடற்பகுதியில் நீர்மூழ்கிக்கப்பல்களை எதிர்கொள்ளவும், குறைந்த தீவிரம்கொண்ட கடல்சார் செயல்பாட்டை அதிகரிக்கவும் கடற்படையில் இரண்டு புதிய கப்பல்கள் இணைக்கப்பட்டன. கார்டன் ரீச் கப்பல் கட்டுநர்கள் மற்றும் பொறியாளர்கள் நிறுவனம் கட்டமைத்த இந்தக் கப்பல்களுக்கு, ‘INS அக்ரே’ மற்றும் ‘INS அக்சய்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
5. மொத்தம் 22,217 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகம்: உச்சநீதிமன்றத்தில் SBI தகவல்.
2019 ஏப்.1ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி.15ஆம் தேதி வரை மொத்தம் 22,217 தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 22,030 பத்திரங்கள் பணமாக மாற்றப்பட்டுள்ளன என்று உச்சநீதிமன்றத்தில் பாரத வங்கி (SBI) தகவல் தெரிவித்தது.
அரசியல் கட்சிகள் தேர்தல் நன்கொடைகள் பெறுவதில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் நடவடிக்கை என்ற பெயரில் மத்திய அரசு கடந்த 2018ஆம் ஆண்டு அறிமுகம்செய்த தேர்தல் நன்கொடை பத்திர நடைமுறை, தகவலறியும் உரிமைச்சட்டம் மற்றும் அரசமைப்புச் சட்டப்பிரிவு 19 (1)-இன்கீழ் பேச்சுரிமை மற்றும் கருத்துரிமையை மீறும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்ட உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த நடைமுறையை இரத்துசெய்து கடந்த பிப்.15ஆம் தேதி தீர்ப்பளித்தது.