TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 14th December 2023

1. இந்தியாவில் காற்றுமாசு நெருக்கடியை எதிர்த்துப் போராடுதற்காக ஒரு விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி

ஆ. உலக வங்கி 🗹

இ. உலக சுகாதார நிறுவனம்

ஈ. உலக வர்த்தக அமைப்பு

  • இந்தியாவின் அதிகரித்து வரும் காற்றுமாசு நெருக்கடிக்கு விடையிறுக்கும் வகையில், சுற்றுப்புறத் துகள்மப் பொருட்கள் (PM) 2.5 என்ற அளவிலான மாசுபாட்டின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் உலக வங்கி ஒரு விரிவான திட்டத்தைத் தொடங்கியுள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, இந்த முன்னெடுப்பில் காற்றோட்டப்பகுதி மேலாண்மை கருவிகளை அறிமுகப்படுத்துதல், மாநில அளவிலான காற்றின்தர செயல்திட்டங்களை உருவாக்குதல் மற்றும் 7 உள்ளடக்கிய இந்தோ-கங்கை சமவெளிகளுக்கான (IGP) முதல் விரிவான பிராந்திய காற்றோட்டப்பகுதி செயல்திட்டத்தை உருவாக்குதல் ஆகியவை அடங்கும்.

2. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அரசியலமைப்பின் 370ஆவது பிரிவுடன் தொடர்புடையது எது?

அ. ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து 🗹

ஆ. ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து

இ. சரக்குகள் மற்றும் சேவைகள் வரி

ஈ. பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இட ஒதுக்கீடு

  • அரசியலமைப்பின் 370ஆவது பிரிவைத் திருத்துவதற்கான மத்திய அரசின் 2019ஆம் ஆண்டின் செயல்பாட்டிற்கு உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இந்திய அரசியலமைப்பின் 370ஆவது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அரசியலமைப்பு அந்தஸ்தை வழங்கியது. மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அம்மாநிலத்திற்குச் சட்டம் இயற்றும் நாடாளுமன்றத்தின் அதிகாரத்தை இந்த விதி கணிசமாகக் கட்டுப்படுத்தியது. 370ஆவது பிரிவை இரத்து செய்த அரசியலமைப்பு உத்தரவு செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் கருதியது. பிடிபி தலைவர் மெகபூபா முப்தி தலைமையிலான கூட்டணி அரசுக்கான ஆதரவை பாஜக திரும்பப்பெற்றுக்கொண்டதை அடுத்து, 2018ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி கொண்டுவரப்பட்டது.

3. கீழ்காணும் எந்த மாநிலத்தின் புதிய முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் பதவியேற்றார்?

அ. மத்திய பிரதேசம்

ஆ. இராஜஸ்தான்

இ. சத்தீஸ்கர் 🗹

ஈ. மிசோரம்

  • பாரதிய ஜனதா கட்சியின் பழங்குடியினரின் முக்கிய முகமான விஷ்ணு தியோ சாய் சத்தீஸ்கர் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராகப் பதவியேற்றார். 15 ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநில அரசை நடத்தி வந்த அதன் முன்னாள் முதல் அமைச்சர் இராமன் சிங், மாநில சட்டமன்றத்தின் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

4. அண்மையில் தனது சொந்த வனம் மற்றும் மரச் சான்றளிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ள ஆசிய நாடு எது?

அ. இலங்கை

ஆ. இந்தியா 🗹

இ வங்காளதேசம்

ஈ. ஜப்பான்

  • இந்தியாவின் மத்திய சுற்றுச்சூழல், வனங்கள் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் இந்திய வனம் மற்றும் மரச் சான்றளிப்புத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் தேசிய வனச்சான்றளிப்புத் திட்டம், நாட்டில் நிலையான வன மேலாண்மை மற்றும் வேளாண் காடுகளை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். இத்திட்டத்தில் வன மேலாண்மை சான்றளிப்பு மற்றும் வன மேலாண்மைக்கு வெளியேயுள்ள மரம் ஆகியவை அடங்கும். இந்திய வனம் மற்றும் மரச் சான்றளிப்புத் திட்டமானது, இந்திய வன மற்றும் மரச் சான்றளிப்பு குழுமத்தால் மேற்பார்வையிடப்படும்.

5. “VINBAX-23” என்பது இந்தியாவுக்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெறும் இராணுவப் பயிற்சியாகும்?

அ. மலேசியா

ஆ. வியட்நாம் 🗹

இ. இலங்கை

ஈ. ஈரான்

  • இந்தியா மற்றும் வியட்நாம் இராணுவங்களுக்கு இடையிலான, “VINBAX-23” என்ற இராணுவப் பயிற்சியானது இந்த ஆண்டு ஹனோய் நகரில் நடைபெறவுள்ளது. இது இந்தியாவிலும் வியட்நாமிலும் மாறிமாறி நடத்தப்படும் வருடாந்திர பயிற்சி நிகழ்வாகும். இப்பயிற்சியின் நோக்கம், இருநாட்டு ராணுவங்களுக்கு இடையிலான கூட்டுறவை வளர்ப்பதும் இருநாட்டுப் படைகளுக்கு இடையே இயங்கும் தன்மையை மேம்படுத்துவதும் ஆகும். இந்தப் பயிற்சி 2018ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு அதன் முதல் பதிப்பு மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் நடத்தப்பட்டது. கடைசி பதிப்பு 2022இல் சண்டிமந்திர் இராணுவ நிலையத்தில் நடத்தப்பட்டது.

6. ‘பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்தைச்’ செயல்படுத்துகிற மத்திய அமைச்சகம் எது?

அ. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் 🗹

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்

இ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்

ஈ. நிதி அமைச்சகம்

  • மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகத்தால் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி விஸ்வகர்மா திட்டத்திற்கு இரண்டரை மாதங்களில் 21 இலட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளன. இத்திட்டம், கைவினைஞர்கள் திறன்-மேம்படுத்தல் பயிற்சியை ஆதரித்து வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் கர்நாடகா (6.28 இலட்சம்), மேற்கு வங்காளம் (4.04 இலட்சம்), அசாம் (1.83 இலட்சம்), உத்தர பிரதேசம் (1.53 இலட்சம்), ஆந்திர பிரதேசம் (1.21 இலட்சம்) ஆகிய மாநிலங்களிலிருந்து வந்துள்ளன.

7. இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளை பாதியாகக் குறைப்பதற்கு முன்பு நிர்ணயிக்கப்படிருந்த இலக்கு ஆண்டான 2024இலிருந்து தற்போது எந்த ஆண்டுக்கு இந்திய அரசாங்கம் மாற்றிவைத்துள்ளது?

அ. 2025

ஆ. 2026

இ. 2028

ஈ. 2030 🗹

  • இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளை பாதியாகக் குறைப்பதற்காக முன்பு நிர்ணயிக்கப்படிருந்த இலக்கு ஆண்டான 2024இலிருந்து தற்போது 2030க்கு இந்திய அரசாங்கம் அதனை மாற்றிவைத்துள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, ‘SaveLIFE’ என்ற அறக்கட்டளையால் மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மற்றும் உலக வங்கி ஆகியவற்றுடன் இணைந்து தயாரித்த “இந்தியாவில் சாலைப் பாதுகாப்பு நன்நடைமுறைகள்” என்ற அறிக்கையை வெளியிட்டார். 2022ஆம் ஆண்டில் நாட்டில் விபத்துக்கள் 12% அதிகரித்துள்ளன, இதன் விளைவாக நாட்டில் ஒரு மணிநேரத்திற்கு 53 விபத்துக்கள் மற்றும் 19 விபத்து மரணங்கள் ஏற்படுகின்றன.

8. Climate finance for agrifood systems in sharp downward trend” என்ற அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?

அ. UNICEF

ஆ. உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு 🗹

இ. உலக வங்கி

ஈ. FSSAI

  • ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) “Climate Finance for Agrifood Systems in Sharp Downward Trend” என்ற அறிக்கையை வெளியிட்டது. இந்தப் புதிய பகுப்பாய்வில், வேளாண் உணவு முறைகளுக்குச் செல்லும் காலநிலை நிதியின் அளவு மிகவும் குறைவாக உள்ளது மற்றும் உலகளாவிய காலநிலை நிதிகளுடன் ஒப்பிடும் போது அது தொடர்ந்து குறைந்துகொண்டே வருகிறது. COP28இன் முதல் வாரத்தில் வெளியிடப்பட்ட மற்றொரு FAO அறிக்கை, உலகளவில் காலநிலையால் அதிகம் பாதிக்கப்பட்ட துறை விவசாயம் என்று கூறியது.

9. ‘மாக் பிகு’ என்பது கீழ்காணும் எந்த மாநிலத்தில் கொண்டாடப்படும் அறுவடைத் திருவிழாவாகும்?

அ. பஞ்சாப்

ஆ. குஜராத்

இ. அஸ்ஸாம் 🗹

ஈ. மேகாலயா

  • அஸ்ஸாம் மாநில அமைச்சரவை பாரம்பரிய எருமை மற்றும் காளைச் சண்டைகளை நடத்துவதற்கான விரிவான நடைமுறைக்கு கொள்கையளவில் ஒப்புதல் அளித்துள்ளது. மோ-ஜுஜ் திருவிழா பல நூற்றாண்டுகள் பழமையான அஸ்ஸாமிய கலாச்சார பாரம்பரியத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும். கடந்த 2014இல் உச்சநீதிமன்றம் அனைத்து விலங்கினங்கள் ஈடுபடுத்தப்படும் சண்டைகளைத் தடைசெய்து ஓர் உத்தரவைப் பிறப்பித்தது. இதன்மூலம் விலங்கு இனங்களுக்கு தேவையற்ற வலி மற்றும் துன்பத்தை ஏற்படுத்துவதைத் தடுக்க இந்திய விலங்குகள் நல வாரியம் மற்றும் அரசாங்கத்திற்கு ஆணையிட்டது.

10. எந்த ஐநா உடன்படிக்கை, ‘பான் ஒப்பந்தம்’ என்று அழைக்கப்படுகிறது?

அ. புலம்பெயர்ந்த இனங்கள்பற்றிய ஒப்பந்தம் 🗹

ஆ. காலநிலை மாற்றம் குறித்த ஒப்பந்தம்

இ. அழிந்துவரும் விலங்குகள்பற்றிய ஒப்பந்தம்

ஈ. கார்பன் உமிழ்வுபற்றிய ஒப்பந்தம்

  • ‘பான் ஒப்பந்தம்’ என்றும் அழைக்கப்படும் புலம்பெயர்ந்த உயிரினங்களுக்கான ஒப்பந்தம், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் ஒப்பந்தமாகும். காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிரிழப்பு ஆகியவை பல புலம்பெயர்ந்த இனங்களின் எண்ணிக்கையில் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. அது அவற்றின் வாழ்விடங்கள், உணவு கிடைக்கும் தன்மை மற்றும் இனப்பெருக்க சுழற்சிகளை பாதிக்கின்றன. ஐநா பல்லுயிர் ஒப்பந்தமான புலம்பெயர்ந்த வனவிலங்குகளின் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு புதிய அறிக்கையின்படி, இது மனிதர்களுக்குக் கிடைக்கும் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புச் சேவைகளை நேரடியாகப் பாதிக்கிறது.

11. மிகப்பழைமையான கருந்துளையைக் (2023ஆம் ஆண்டு வரை) கண்டறிந்துள்ள விண்வெளி நிறுவனம் எது?

அ. நாசா 🗹

ஆ. இஸ்ரோ

இ. ஜாக்ஸா

ஈ. ரோஸ்கோஸ்மாஸ்

  • வானியலாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே மிகப்பழைமையான கருந்துளையைக் கண்டறிந்துள்ளனர். இது சூரியனைவிட மில்லியன் மடங்கு நிறைகொண்டதாகும். இக்கருந்துளை பிரபஞ்சத்தின் உருவாக்கத்திற்கு 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையதாக கணிக்கப்பட்டுள்ளது. ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) மேற்கொண்ட ஆய்வுகள், பெருவெடிப்புக்கு 440 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு இது உருவாக்கியிருக்கலாம் என்பதை வெளிப்படுத்துகிறது. GN-z11 விண்மீன் மண்டலத்தின் கூர்நோக்குத்தின் அடிப்படையில், அவை ஒன்று பெரியதாக பிறந்திருக்கலாம் அல்லது ஆரம்பத்திலேயே மிகவேகமாக ஊதி பெருத்திருக்கலாம்.

12. இந்தியாவில் தொழிற்துறை வழித்தடங்களின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் நோக்கோடு $250 மில்லியன் டாலர்கள் மதிப்பிலானக் கடனுக்கு கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ள வங்கி எது?

அ. ஆசிய வளர்ச்சி வங்கி 🗹

ஆ. ஆசிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டு வங்கி

இ. உலக வங்கி

ஈ. உலக பொருளாதார மன்றம்

  • ஆசிய வளர்ச்சி வங்கியானது இந்தியாவில் தொழிற்துறை வழித்தடங்களின் வளர்ச்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் நோக்கோடு $250 மில்லியன் டாலர் மதிப்பிலானக் கடனுக்கு கொள்கை அடிப்படையிலான ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தித் துறையின் போட்டித்தன்மையை மேம்படுத்துதல், தேசிய விநியோகச் சங்கிலிகளை வலுப்படுத்துதல் மற்றும் பிராந்திய மற்றும் உலகளாவிய மதிப்புச்சங்கிலிகளுடன் தொடர்புகளை வளர்ப்பதை இந்த முன்னெடுப்பு தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

13. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற நர்கீஸ் முகமதியுடன் தொடர்புடைய விருது எது?

அ. கிராமி விருது

ஆ. ஆஸ்கார் விருது

இ. அமைதிக்கான நோபல் பரிசு 🗹

ஈ. புக்கர் பரிசு

  • சிறையில் உள்ள ஈரானிய ஆர்வலர் நர்கீஸ் முகமதியின் குழந்தைகள் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை அவர் சார்பாக ஏற்றுக்கொண்டனர். தனது சொந்த நாடான ஈரானில் பெண்ணுரிமைகளுக்காகப் புகழ்பெற்ற வழக்கறிஞரான அவர், தற்போது தலைநகரம் தெஹ்ரானில் உள்ள ஈவின் சிறையில், எட்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து வருகிறார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைப்பு: பருவநிலை மாநாட்டில் 200 நாடுகள் ஒப்பந்தம்.

புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும் என்று துபாய் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் சுமார் 200 நாடுகள் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தை மேற்கொண்டன.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் ஐநாஇன் 28ஆவது பருவநிலை பாதுகாப்பு மாநாடு கடந்த 2 வாரங்களாக நடைபெற்று வந்தது. இதன் முடிவில் எரிசக்திக்காக நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க வலியுறுத்தும் சர்வதேச ஒப்பந்தம் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின்படி புவி வெப்பமயமாதலை 1.5°C-க்குள் கட்டுப்படுத்தும் வகையில் பைங்குடில் வாயு வெளியேற் -றத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இதற்காக புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பது உள்பட எட்டு அம்ச திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எரிசக்திக்காக நிலக்கரியைப் பெருமளவில் பயன்படுத்தும் நாடுகளான இந்தியா, சீனாவுக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்தியா வலியுறுத்தல்: பருவநிலை மாற்றம் தொடர்பான பாரீஸ் ஒப்பந்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

2. தமிழ்நாட்டில் 8 மக்கள் நலத்திட்டங்களுக்கு மத்திய அரசு `75,000 கோடி ஒதுக்கீடு.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரை 92.22 இலட்சம் குடும்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இதேபோல் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு 7,79,851 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

தீனதயாள் அந்தியோதயா திட்டம், தேசிய ஊரக வாழ்வாதார திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 39 இலட்சத்து 69 ஆயிரம் குடும்பங்கள்மூலம் 334,000 மகளிர் சுயவுதவிக்குழுக்கள் (SHG) அமைக்கப்பட்டுள்ளன. தேசிய சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் 20,05,691 பேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 2022-23 நிதியாண்டில் 19 இலட்சத்து 51 ஆயிரத்து 42 பயனாளிகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் இரண்டாவது பிரிவின்மூலம் தமிழ்நாட்டில் 2021-22 நிதியாண்டிலிருந்து 2023-24 நிதியாண்டின் முதல் பாதி வரை 14,0146 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டுக்கு எட்டு நலத்திட்டங்கள்மூலம் மட்டும் கடந்த நிதியாண்டில் `75,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!