Tnpsc Current Affairs in Tamil – 13th May 2024
1. சமீபத்தில், பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் சட்டத்தை ஏற்றுக்கொண்ட அமைப்பு எது?
அ. ஐரோப்பிய ஒன்றியம் (EU)
ஆ. ஐக்கிய நாடுகள் சபை (UN)
இ. ஆப்பிரிக்க ஒன்றியம் (AU)
ஈ. ASEAN
- பெண்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் சட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுக் கொண்டுள்ளது. பெண்ணுறுப்பைச்சிதைப்பது, கட்டாய மணம்புரிதல், இணையவழி துன்புறுத்தல் போன்றவற்றைக் குற்றமாக்குவதற்கு இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது. இருப்பினும், வன்புணர்வுக்கான பொதுவான வரையறை இச்சட்டத்தில் இல்லை. ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கடந்த 2022ஆம் ஆண்டில் இச்சட்டத்தை முன்மொழிந்தது.
2. அண்மையில், 2024-க்கான நவீன உணவுப்பழக்கத்திற்கு ஏற்றவாறு இந்தியர்களுக்கான மேம்படுத்தப்பட்ட உணவுமுறை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள அமைப்பு எது?
அ. அறிவியல் மற்றும் தொழிற்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR)
ஆ. இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI)
இ. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR)
ஈ. உணவு மற்றும் உழவு அமைப்பு (FAO)
- ஐதராபாத்தில் அமைந்துள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான நவீன உணவுப்பழக்கத்திற்கு ஏற்றவாறு இந்திய நாட்டு மக்களுக்கான மேம்படுத்தப்பட்ட உணவு வழிகாட்டல்களை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) வெளியிட்டுள்ளது. உடல் செயல்பாடு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் உப்பு மற்றும் அதீத கொழுப்பு / சர்க்கரைகொண்ட உணவுகளை குறைத்துக்கொள்ளுதல் ஆகியவற்றை இந்த வழிகாட்டுதல்கள் வலியுறுத்துகிறது. உடல் பருமனை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது.
3. ஹிண்டன் ஆறானது கீழ்க்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?
அ. கோதாவரி
ஆ. காவேரி
இ. கிருஷ்ணா
ஈ. யமுனை
- தேசிய பசுமை தீர்ப்பாயமானது உத்தரபிரதேச மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு (UPPCB) ஹிண்டன் ஆறு மாசுபாடு மற்றும் மாசுபடுத்தும் நகராட்சி அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த கூடுதல் அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. யமுனையின் துணையாறான ஹிண்டன் ஆறு, சஹரன்பூரிலிருந்து நொய்டா வரை 400 கிமீ தொலைவுக்குப்பாய்கிறது. நகர்ப்புற, உழவு மற்றும் தொழிற்சாலைக் கழிவுகள் கங்கைப் படுகையில் உள்ள இவ்வாறை மிகவும் மாசுபட்ட பகுதியாக மாற்றியுள்ளன. 2015ஆம் ஆண்டில், குளிப்பதற்கு தகுதியற்றது எனக்குறிப்பிட்டு மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இதை, ‘இறந்த ஆறு’ என அறிவித்தது.
4. சமீபத்தில், ‘HD 3386’ என்ற புதிய உயர் விளைச்சல்தரும் கோதுமை இரகத்தை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
அ. இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ. தேசிய சர்க்கரை ஆராய்ச்சி நிறுவனம்
இ. TATA அடிப்படை ஆராயச்சி நிறுவனம்
ஈ. மத்திய அறிவியல் தொழில்துறை அமைப்பு
- இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) அண்மையில் அதிக மகசூல்தரும் புதிய கோதுமை இரகமான HD 3386ஐ அறிமுகப்படுத்தியது. இவ்வகை கோதுமை இலைத்துரு மற்றும் மஞ்சள் நோய்களை எதிர்க்கும் தன்மை உடையதாகும். பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் உள்ளிட்ட இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் இந்நோய்கள் பொதுவாகக் காணப்படுகிறது. IARI என்பது இந்தியாவில் காணப்படும் கோதுமை மற்றும் அரிசி வகைகளில் பலவற்றை உருவாக்கிய முன்னணி நிறுவனமாகும். நாட்டின் ‘பசுமைப்புரட்சி’க்குக் காரணமாக இருந்ததும் இந்நிறுவனம்தான்.
5. ‘FliRT’ என்றால் என்ன?
அ. அணுவாற்றல் திறனுடைய நீர்மூழ்கிக்கப்பல்
ஆ. தீங்கிழைக்கும் மென்பொருள்
இ. நீருக்கடியில் ஆராய்ச்சி நிலையம்
ஈ. COVID–19இன் புதிய திரிபு
- COVID-19இன் புதிய திரிபான, ‘FliRT’, அமெரிக்காவில் ஆதிக்கம் செலுத்தும் திரிபாக உருவெடுத்துள்ளது. ஓமிக்ரான் JN.1 தலைமுறையைச் சேர்ந்த இது, KP 1.1 மற்றும் KP.2 ஆகிய இரண்டு பிறழ்வுகளைக் கொண்டுள்ளது. வேகமாக பரவும் தன்மை கொண்ட, ‘FLiRT’, தொண்டைப்புண், இருமல், சோர்வு, மூக்கடைப்பு, தலைவலி, தசை வலி, காய்ச்சல் மற்றும் இரைப்பை பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது. அதன் விரைவான பரவலைத் தடுக்க தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் பொருத்தமான பொது சுகாதார நடவடிக்கைகள் அவசியம்.
6. அண்மையில், எந்த நாட்டின் தூதர், நாகாலாந்தில் கோகிமா அமைதி நினைவகத்தை திறந்து வைத்தார்?
அ. ஜப்பான்
ஆ. சீனா
இ. பூடான்
ஈ. நேபாளம்
- நாகாலாந்து மாநிலத்தில், ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகியும் அம்மாநில முதல்வர் நெய்பியு ரியோவும் இணைந்து கோகிமா அமைதி நினைவகத்தை திறந்து வைத்து, சுற்றுச்சூழல் பூங்காவிற்கான அடிக்கல்லையும் நாட்டினர். ஜப்பான்-நாகாலாந்து கூட்டுறவைக்குறிக்கும் வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள இது, இரண்டாம் உலகப்போரின்போது நிகழ்ந்த கோகிமா போரை நினைவுகூருகிறது.
7. ‘தூர் அழுகல் நோயை’ உண்டாக்கும் காரணி எது?
அ. பாக்டீரியா
ஆ. பூஞ்சை
இ. வைரஸ்
ஈ. புரோட்டோசோவா
- மத்திய பூச்சிக்கொல்லி வாரியம் மற்றும் பதிவுக்குழுவால் (CIBRC) அங்கீகரிக்கப்பட்ட பாசுமதி அரிசியில், ‘தூர் அழுகல்’ நோயைச் சமாளிப்பதற்காக பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகம் டிரைக்கோடெர்மா ஆஸ்பெரெல்லத்தை அறிமுகம் செய்துள்ளது. Fusarium verticillioides என்ற பூஞ்சையால் ஏற்படும் இந்நோய், நாற்றுகள் மற்றும் நடவுசெய்த பயிர்களை பாதிக்கிறது. தாவரங்களில் இதன் அறிகுறிகளுள் மஞ்சள் நிறமடைதல், நீள்தல் மற்றும் இறுதியில் இறப்பு போன்றவையாகும். டிரைக்கோடெர்மா ஹார்சியானம் மற்றும் ஸ்பிரிண்ட் 75 WS போன்றவை நச்சுத்தன்மையின் காரணமாக மண்ணுக்கும் நுகர்வோருக்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன. ஸ்பிரிண்ட் 75 WSஇன் ஓர் அங்கமான கார்பென்டாசிம், அதிக எச்சங்கள் கொண்டிப்பதால் பஞ்சாபில் தடைசெய்யப்பட்டுள்ளது.
8. அண்மையில், ஐநா பயங்கரவாத எதிர்ப்பு அறக்கட்டளை நிதியத்துக்கு இந்தியா எவ்வளவு நிதி அளித்தது?
அ. $200,000
ஆ. $300,000
இ. $400,000
ஈ. $500,000
- ஐநா பயங்கரவாத எதிர்ப்பு அறக்கட்டளை நிதியத்திற்கு இந்தியா $500,000 டாலர்கள் பங்களிப்பு செய்துள்ளது. இது உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. 2017இல் நிறுவப்பட்ட ஐநா அவையின் பயங்கரவாத எதிர்ப்பு அலுவலகம் (UNOCT), உலகளவில் பயங்கரவாத எதிர்ப்பு முன்னெடுப்புகளை ஒருங்கிணைக்கிறது. தலைமையாக விளங்கும் இது, 38 நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துகிறது.
9. ‘55 Cancri e’ என்றால் என்ன?
அ. ஆக்கிரமிப்பு களை
ஆ. மீ புவி
இ. பண்டைய நீர்ப்பாசன நுட்பம்
ஈ. நீர்மூழ்கிக்கப்பல்
- நமது சூரிய குடும்பத்திற்கு அருகில், ‘55 Cancri e’ என்ற மீ puvi ஒன்றை அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். CO2 மற்றும் மோனாக்சைடு நிறைந்த தடிமனான வளிமண்டலத்துடன் கூடிய இது பூமியைவிட இருமடங்கு பெரியதாக உள்ளது. அதன் விண்மீனான கோப்பர்நிக்கஸை மிகநெருங்கிய தூரத்தில் சுற்றிவரும் இது, ஒவ்வொரு 18 மணி நேரத்திற்கும் ஒருமுறை அதன் சுற்றுப்பாதையை முழுவதுமாக கடந்து முடிக்கிறது. 41 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள இது, இரவும் பகலும் என மாறிமாறி எதிர்கொள்கிறது.
10. அரளி (Nerium Oleander) என்பது _____?
அ. பசுமைமாறா குத்துச்செடி
ஆ. சிறுகோள்
இ. கருந்துளை
ஈ. கடற்படைக்கப்பல்
- அரளிப்பூவைச் சாப்பிட்டு ஒரு பெண் மற்றும் இரண்டு கால்நடைகள் இறந்ததையடுத்து, திருவிதாங்கூர் தேவசம் வாரியம் பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப்பட்டு வரும் அப்பூவை நீக்க முடிவுசெய்தது. மலையாளத்தில், ‘அரளி’ என்று அழைக்கப்படும், ‘Nerium Oleander’ ஒரு பசுமைமாறா குத்துச்செடியாகும். 18-20 அடி வரை வளரும் இது நச்சுத் தன்மை கொண்டிருந்தபோதிலும் வழிபாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
- பழங்காலத்தவர்களான மெசபடோமியர்கள், ரோமானியர்கள் மற்றும் அரேபியர்கள் அரளியை அதன் மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்து வந்தனர். கார்டியாக் கிளைகோசைடுகளின் காரணமாக அதிலுள்ள நச்சுத்தன்மை, இறப்பு உள்ளிட்ட கடுமையான அறிகுறிகளை ஏற்படுத்தும்.
11. கடெட் பாதுகாப்பு அமைப்புகள் நிறுவனமானது கீழ்க்காணும் எந்த நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதலாவது தற்கொலைப் பாங்கான போர் முறையில் இயங்கும் டிரோனை உருவாக்கியுள்ளது?
அ. DRDO
ஆ. ISRO
இ. BHEL
ஈ. HAL
- இந்தியாவின் முதல் தற்கொலைப்பாங்கான போர்முறையில் இயங்கும் டிரோனை DRDOஉடன் இணைந்து கடெட் பாதுகாப்பு அமைப்புகள் உருவாக்கியுள்ளது. இது ஒரு Loitering Aerial Munition (LAM) அல்லது தற்கொலை டிரோன் ஆகும். இது இலக்குகளை நோக்கி வானில் பறந்துகொண்டிருக்கும்போதே, இலக்குகளை தடுத்து நிறுத்தும் திறன் கொண்டது. பாலைவனங்கள் மற்றும் உயரமான பகுதிகள்போன்ற பல்வேறு நிலப்பரப்புகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ள இது, 12 மநே பறப்பு நேரம் மற்றும் 150-300 கிமீ பறக்கும் வரம்பினைக் கொண்டுள்ளது.
12. ‘தேசிய தொழில்நுட்ப நாள்’ கொண்டாடப்படுகிற தேதி எது?
அ. 10 மே
ஆ. 11 மே
இ. 12 மே
ஈ. 13 மே
- தொழில்நுட்பத்தில் அதன் முன்னேற்றத்தை நினைவுகூரும் வகையில் மே.11 அன்று இந்தியா தேசிய தொழில்நுட்ப நாளைக் கொண்டாடுகிறது. இது அணுவாற்றல் துறையில் இந்தியா கால்பதித்தது, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதன் முதல் விமானத்தை பறப்புச் சோதனை செய்தது மற்றும் திரிசூல் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது ஆகியவற்றை நினைவுகூருகிறது. “From Schools to Startups: Igniting Young Minds to Innovate” என்பது 2024இல் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. நாட்டின் வனப் பாதுகாப்பு கடந்த 15 ஆண்டுகளில் முன்னேற்றம்.
வனப்பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தில் கடந்த 15 ஆண்டுகளில் கணிசமான முன்னேற்றங்களை செய்துள்ளதாகவும் இதனால், வனப்பரப்பில் நிலையான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் ஐநா வன அமைப்பில் இந்தியா தெரிவித்துள்ளது. உலக அளவில், 2010-2020 காலகட்டத்தில் சராசரி வருடாந்திர வனப்பரப்பு அதிகரிப்பில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் மே.06 முதல் 10ஆம் தேதிவரை நடைபெற்ற வன அமைப்பின் 19ஆவது அமர்வில் இந்தியா பங்கேற்றது.
மேலும், அமர்வில் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
புலிகள் திட்டத்தின் ஐம்பது ஆண்டுகளையும், யானை திட்டத்தின் முப்பது ஆண்டுகளையும் குறிக்கும் அண்மைய கொண்டாட்டங்கள், இனங்கள் மற்றும் வாழ்விடப் பாதுகாப்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. கூட்டு முயற்சிகள்மூலம் உலகெங்கிலும் உள்ள ஏழு பெரிய பூனை இனங்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய முயற்சியாக சர்வதேச கூட்டணியை இந்தியா உருவாக்கியது.
தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் தனியார் துறையினரின் தன்னார்வ சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கு வெகுமதி அளிக்கும் சந்தை அடிப்படையிலான பொறிமுறையாக, ‘கிரீன் கிரெடிட் புரோகிராம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, வனத்தீ மேலாண்மை மற்றும் வனச்சான்றிதழில் கவனம் செலுத்தி, 40 நாடுகள் மற்றும் 20 சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட இந்தியா தலைமையிலான முன்னெடுப்பு டேராடூனில் கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற்றது. இவ்வாறு இந்தியா தெரிவித்தது.