Tnpsc Current Affairs in Tamil – 13th December 2023
1. ‘மேரா காவ்ன், மேரி தரோகர்’ என்ற திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
அ. கலாச்சார அமைச்சகம் 🗹
ஆ. உள்துறை அமைச்சகம்
இ. பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
ஈ. சுரங்க அமைச்சகம்
- ‘மேரா காவ்ன், மேரி தரோகர்’ திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்களையும் வரைபடமாக்கி ஆவணப்படுத்த இந்திய அரசு முடிவுசெய்துள்ளது. இந்தத் தேசிய கலாச்சார வரைபடமாக்கல் பணியானது கலாச்சார அமைச்சகத்தின்கீழ் உள்ள இந்திரா காந்தி தேசிய கலை மையத்துடன் ஒருங்கிணைந்து நடத்தப்படுகிறது. இத்திட்டம் பற்றிய இணைய தளமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்திய கிராமங்களின் வாழ்க்கை, வரலாறு மற்றும் நெறிமுறைகள் பற்றிய விரிவான தகவல்களைத் தொகுத்து, மெய்நிகர் மற்றும் நிகழ்நேர பார்வையாளர்களுக்குக் கிடைக்கச்செய்வதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
2. கூவம் மற்றும் அடையாறு ஆகிய ஆறுகள் பாயும் மாநிலம் எது?
அ. தமிழ்நாடு 🗹
ஆ. கேரளா
இ. ஆந்திரப் பிரதேசம்
ஈ. கர்நாடகா
- கடந்த 1971ஆம் ஆண்டு முதல் மிக்ஜம் புயலைப் போன்ற ஐந்து வானிலைச் சீற்றங்கள் வங்காள விரிகுடா வழியாக சென்னையைத் தாக்கியுள்ளன. 1976, 1982, 1984, 1996 மற்றும் 2005 ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட வானிலைச் சீற்றங்கள் கடுமையான மழையைக் கொண்டு வந்ததால், கூவம் மற்றும் அடையாறு ஆகிய இரண்டு ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடி முழு சென்னை நகரத்தையும் மூழ்கடித்தது.
3. இந்திய ரிசர்வ் வங்கியின் 2023 டிசம்பர் மாத பணவியல் கொள்கைக் குழுக் கூட்டத்தின்படி, 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான இந்தியாவின் GDP வளர்ச்சிக் கணிப்பு யாது?
அ. 7% 🗹
ஆ. 10%
இ. 5%
ஈ. 12%
- இந்திய ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக முக்கிய வட்டி விகிதங்களை 6.5 சதவீதமாக மாற்றமல் வைத்திருக்க முடிவுசெய்தது. அது ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் தனது ‘withdrawal accomadation’ கொள்கை நிலைப்பாட்டை தக்கவைத்துக்கொண்டது. இந்தக்குழு 2023-24ஆம் நிதி ஆண்டிற்கான அதன் GDP வளர்ச்சிக் கணிப்பினை 7%ஆக உயர்த்தி, அதன் சராசரி பணவீக்க முன்னறிவிப்பை 5.4%இல் தக்கவைத்துக்கொண்டுள்ளது.
4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பிரசாந்த் அகர்வாலுடன் தொடர்புடையது எது?
அ. கலைஞர்
ஆ. சமூக சேவகர் 🗹
இ. விளையாட்டு வீரர்
ஈ. அரசியல்வாதி
- நாராயண் சேவா சன்ஸ்தானின் தலைவர் பிரசாந்த் அகர்வாலுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான அதிகாரமளிப்புத் துறை ஏற்பாடுசெய்த விழாவில், குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, ‘சிறந்த ஆளுமை – மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல்’ என்ற மதிப்புமிக்க தேசிய விருதை வழங்கினார். பிரசாந்த் அகர்வால் உறைவிடப்பள்ளிகள் மற்றும் தொழில்சார் மறுவாழ்வு மையங்களை நிறுவுதல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி சாதனங்களை வழங்குதல்போன்ற முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறார். இராஜஸ்தான் மாநில அரசாங்கம், கடந்த 2017 ஆம் ஆண்டில், ‘சிறந்த சமூக சேவகர்’ விருதை அவருக்கு வழங்கியது.
5. ‘ஹனுக்கா’ விழாவுடன் தொடர்புடைய சமயம் எது?
அ. இந்து மதம்
ஆ. யூத மதம் 🗹
இ. சமணம்
ஈ. சீக்கிய மதம்
- ‘ஹனுக்கா’ என்பது யூத மதத்தில், “தீபங்களின் திருவிழா” என அழைக்கப்படுகிறது. எட்டு நாட்கள் நடைபெறும் இத் திருநாள், பொ ஆ மு இரண்டாம் நூற்றாண்டில் எருசலேமில் நடந்த மக்கேபியப் புரட்சியின்போது, யூதர்களின் புனிதக்கோவில் மீண்டும் வழிபாட்டுக்கென அர்சிக்கப்பட்டதை நினைவுகூர இது கொண்டாடப்படுகிறது. இந்தத் திருநாள் கொண்டாட்டத்தில் எட்டுக்கிளைகளை உடைய மெனோரா எனப்படும் மெழுகுவர்த்தித் தாங்கியில் மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் ஒரு மெழுகுவர்த்தி கூடுதலாக ஏற்றப்பட்டு எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்படுகின்றன.
6. 2023இல் சீனாவின் பட்டை மற்றும் பாதை திட்டத்திலிருந்து விலகிய ஐரோப்பிய நாடு எது?
அ. ஜெர்மனி
ஆ. நெதர்லாந்து
இ. இத்தாலி 🗹
ஈ. ஸ்பெயின்
- G7 நாடுகளின் கூட்டமைப்பிலிருந்து சீனாவின் பட்டை மற்றும் பாதை திட்டத்தில் இணைந்திருந்த ஒரே நாடான இத்தாலி அண்மையில் அந்தத் திட்டத்திலிருந்து விலகியுள்ளது. பட்டை மற்றும் பாதை திட்டம் ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் பண்டைய பட்டுப்பாதை வர்த்தக வழிகளை மீண்டும் உருவாக்குவதற்காக சாலைகள், பாலங்கள் மற்றும் துறைமுகங்கள் போன்ற உட்கட்டமைப்புகளில் பேரளவில் முதலீடுகளை மேற்கொள்வதை நோக்கம் எனக் கொண்டுள்ளது.
7. 2023 டிசம்பரில், கீழ்க்காணும் எந்த நாட்டுடனான 50 ஆண்டுகால அரசியல் ரீதியான உறவுகளை இந்தியா கொண்டாடியது?
அ. கொரிய குடியரசு 🗹
ஆ. சீனா
இ. தென்னாப்பிரிக்கா
ஈ. ஆஸ்திரேலியா
- இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான அரசியல் ரீதியான உறவுகள் தொடங்கி ஐம்பது ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு கொரிய குடியரசின் அதிபர் யூன் சுக் இயோலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
- கடந்த 1973ஆம் ஆண்டில், வட மற்றும் தென் கொரியாவை முறையாக அங்கீகரித்து இந்தியா அரசியல் ரீதியான உறவுகளை தொடங்கியது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவுக்கும் கொரிய குடியரசுக்கும் இடையேயான வாணிப அளவு $27.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போது, ஹூண்டாய் மோட்டார், POSCO, LG எலக்ட்ரானிக்ஸ் மற்றும் சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட முக்கிய தென் கொரிய கூட்டு நிறுவனங்கள் இந்திய சந்தையில் இயங்கி வருகின்றன.
8. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பன்னி புல்வெளிகள் அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
அ. இராஜஸ்தான்
ஆ. மகாராஷ்டிரா
இ. குஜராத் 🗹
ஈ. பஞ்சாப்
- குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள பன்னி புல்வெளிகளில் சிறுத்தைகளின் இனப்பெருக்க மையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய CAMPAஇன்கீழ் உள்ள தேசிய இழப்பீட்டு காடு வளர்ப்பு நிதிய மேலாண்மை ஆணையத்திற்கு குஜராத் மாநில அரசு ஒரு முன்மொழிவை அனுப்பியது. 1921ஆம் ஆண்டு வரை சௌராஷ்டிரா மற்றும் தாகோத் ஆகிய பகுதிகளில் சிறுத்தைகளை வேட்டையாடியதற்கான பதிவுகள் உள்ளதாக வனவிலங்கு நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் 1940களின் தொடக்கம் வரை குஜராத் மாநிலத்தில் சிறுத்தைகள் இருந்ததற்கான பல்வேறு குறிப்பிதழ்கள் உள்ளன. சிறுத்தைகளை அங்கு கொண்டு வருவதற்குமுன், குஜராத் அரசு இனப்பெருக்க மையங்களை அமைத்து, அப்பகுதியில் சிறுத்தைகள் வேட்டையாடுவதற்கேற்ற சூழலை அமைக்கும்.
9. தனிப்பட்ட மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை (UDID) திட்டத்துடன் தொடர்புடைய மத்திய அமைச்சகம் எது?
அ. சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் 🗹
ஆ. உள்துறை அமைச்சகம்
இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஈ. பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்
- மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் ஒரு கோடி தனிப்பட்ட மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையை (UDID) வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது, உள்நாட்டில் உருவாக்கப்பட்ட IQ மதிப்பீட்டு சோதனைக் கருவியை மத்திய அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். 2017இல் தொடங்கப்பட்ட, இந்திய அரசாங்கத்தின், ‘UDID’ என்ற திட்டம், நாட்டில் உள்ள மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட அடையாள அட்டையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது; மேலும் நலன்புரி திட்டமிடலுக்கான விரிவான தரவுத்தளத்தையும் அது உருவாக்கும்.
10. 2023ஆம் ஆண்டில் முதன்முதலாக கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் நகரம் எது?
அ. புது தில்லி 🗹
ஆ. மும்பை
இ. புவனேசுவரம்
ஈ. சென்னை
- கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டிகள்-2023ஐ மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் புதுதில்லியில் தொடங்கிவைத்தார். புதுதில்லியில் மூன்று இடங்களில் டிச.10 முதல் 17 வரை நடைபெறும் இந்த விளையாட்டுப் போட்டிகளில் 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் விளையாட்டு வாரியத்தின் சேவை நிறுவனங்களைச் சேர்ந்த 1400க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கின்றனர்.
- தடகளம், துப்பாக்கி சுடுதல், வில்வித்தை, கால்பந்து, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், பளுதூக்குதல் ஆகிய ஏழு பாரா விளையாட்டுப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்தியாவின் முன்னணி சர்வதேச பாரா நட்சத்திரங்களான ஷீத்தல் தேவி, பவினா படேல், அசோக், பிரமோத் பகத் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற அஷ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா கிராஸ்டோ ஆகியோருடன் தொடர்புடைய விளையாட்டு எது?
அ. டென்னிஸ்
ஆ. டேபிள் டென்னிஸ்
இ. பூப்பந்து 🗹
ஈ. கைப்பந்து
- இந்த ஆண்டு ஜனவரியில் கைகோர்த்த இந்திய பூப்பந்து வீராங்கனைகள் அஷ்வினி பொன்னப்பாவும் தனிஷா கிராஸ்டோவும், கௌகாத்தி மாஸ்டர்ஸில் மூன்றாவது பெண்கள் இரட்டையர் பட்டத்தைப் பெற்றனர். 34 வயதான அஷ்வினி பொன்னப்பாவும் 20 வயதான தனிஷா கிராஸ்டோவும் கௌகாத்தி மாஸ்டர்ஸ் BWF சூப்பர் 100 சர்வதேச பூப்பந்துப் போட்டியின்மூலம் மூன்றாவது மகளிர் இரட்டையர் பட்டத்தையும் இரண்டாவது சூப்பர் 100 பட்டத்தையும் உறுதிசெய்தனர்.
12. இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகள் (IFTAS) என்பது எதன் துணை நிறுவனமாகும்?
அ. இந்திய ரிசர்வ் வங்கி 🗹
ஆ. நிதி அமைச்சகம்
இ. DPIIT
ஈ. FSSAI
- நிதித்துறைக்கென அர்ப்பணிக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பாக எங்கிருந்தும் அணுகும் வசதியை அமைக்கவுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்தது. இந்த வசதியை நிறுவுதல் மற்றும் அதன் தொடக்ககால செயல்பாடுகள் RBIஇன் துணை நிறுவனமான இந்திய நிதி தொழில்நுட்பம் மற்றும் அதுசார்ந்த சேவைகளால் மேற்கொள்ளப்படும். பின்னர், அது ஒரு தன்னாட்சிமிக்க நிறுவனமாக மாறும். ரிசர்வ் வங்கி, இந்த வசதி, செயல்திறனை மேம்படுத்தும் ஒரு தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பின் தன்மையில் இருக்கும் என்றும் இது தரவு இறையாண்மையைச் சார்ந்திருக்காது என்றும் கூறியுள்ளது.
13. நடந்து கொண்டிருக்கும் COP28 பருவநிலை உச்சிமாநாட்டில், எந்த ஆண்டுக்குள் உலகின் பசுமை ஆற்றல் திறனை 11,000 கிகாவாட்டாக 3 மடங்காக உயர்த்துவதற்கான உறுதிமொழியில் 118 நாடுகள் கையெழுத்திட்டன?
அ. 2025
ஆ. 2030 🗹
இ. 2040
ஈ. 2045
- நடந்து கொண்டுள்ள COP28 காலநிலை உச்சிமாநாட்டில், 118 நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உறுதிமொழியில் கையெழுத்திட்டுள்ளன. இது 2030ஆம் ஆண்டளவில் உலகின் பசுமை ஆற்றல் திறனை 11,000 GWஆக மூன்று மடங்காக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ‘Global Renewables and Energy Efficiency Pledge’இன்படி, நாடுகள், “2030 வரை ஒவ்வோர் ஆண்டும் 2% முதல் 4% வரையிலான உலகளாவிய சராசரி வருடாந்திர ஆற்றல் திறன்மேம்பாட்டு விகிதத்தை இரட்டிப்பாக்க வேண்டும்”. இவ்வுறுதிமொழி சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை மற்றும் அதிகாரப்பூர்வ COP28 நாட்காட்டியின் ஒருபகுதியாகவும் இல்லை.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. 5ஜி நெட்வொர்க் சேவை: சென்னை ஐஐடி-தேஜஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
சென்னை ஐஐடி இந்தியாவின் ஊரகப்பகுதியில் குறைந்த செலவில் 5ஜி நெட்வொர்க் சேவை தொடர்பை சிறந்த முறையில் அளிப்பதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டது. ஊரகப்பகுதி தகவல் தொழில்நுட்பத் தொடர்புக்கு 5ஜி அடிப்படை நிலையத்தை குறைந்த செலவில் உருவாக்குவது இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த நிலையில், சென்னை ஐஐடி கண்டறிந்த 5ஜி நெட்வொர்க் தொழில்நுட்பத்தை தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனம் பயன்படுத்திக் கொள்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
BSNL நிறுவனத்துடன் இணைந்து தேஜஸ் நிறுவனம் செயல்படவுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக உள்நாட்டு நிறுவனம் நெட்வொர்க்கை மேம்படுத்துவது இதுதான் முதல்முறை. 5ஜி நெட்வொர்க் அதிவேகமாக கிடைப்பதற்காக ‘மைமோ’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. மாநில AIDS கட்டுப்பாட்டு சங்கத்துக்கு தேசிய விருது.
தமிழ்நாடு மாநில AIDS கட்டுப்பாட்டு சங்கத்துக்கு, ‘சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருதை’ மத்திய அரசு வழங்கியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மாநில AIDS கட்டுப்பாடு சங்கம் கடந்த 1994ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
3. இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர்: நாடாளுமன்றத்தில் அரசு தகவல்.
இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மக்கள்தொகை–மருத்துவர்கள் விகிதம் உள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. நாட்டில் மொத்தம் 36.14 செவிலியர்கள் உள்ளனர். செவிலியர்-மக்கள்தொகை விகிதம் 1:476 ஆக உள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் தகவல்படி, 2022 ஜூன் மாத நிலவரப்படி 13,08,009 ஆங்கிலமுறை மருத்துவர்கள் மாநில மருத்துவ கவுன்சில் மற்றும் தேசிய மருத்துவ குழுமத்தில் பதிவுசெய்துள்ளனர். 5.65 இலட்சம் ஆயுஷ் மருத்துவர்கள் உள்ளனர். அவ்வகையில், நாட்டில் மருத்துவர்கள்-மக்கள்தொகை விகிதம் 1: 834ஆக உள்ளது.