TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 13th & 14th January 2024

1. புனித யாத்திரை தலங்களில் தூய்மையை மேம்படுத்துவாதற்காக பிரதமர் நரேந்திர மோடியால் அண்மையில் தொடக்கி வைக்கப்பட்ட முன்னெடுப்பு எது?

அ. தூய்மையான யாத்திரை திட்டம்

ஆ. ஸ்வச் மந்திர் இயக்கம்

இ. ஸ்வச் பாரத் முன்னெடுப்பு

ஈ. புனித தல தூய்மைத் திட்டம்

  • பிரதமர் நரேந்திர மோடி ஜன.22 அன்று அயோத்தியில் நடைபெறவுள்ள இராமர் திருக்கோவில் குடமுழுக்கை முன்னிட்டு, ‘ஸ்வச் மந்திர் – தூய்மையான திருக்கோவில்’ என்ற இயக்கத்தைத் தொடங்கினார். அயோத்தியை இந்தியாவின் தூய்மையான நகரமாக மாற்றுவதற்கான நாடுதழுவிய முன்னெடுப்புக்கும் அவர் அழைப்பு விடுத்தார். இந்த இயக்கமானது ஜன.14 முதல் 22 வரை யாத்திரை தலங்களை தூய்மைப்படுத்த குடிமக்களை ஊக்குவிக்கிறது.

2. அண்மையில், ‘Modi: Energising A Green Future’ என்ற தலைப்பிலான நூலை வெளியிட்ட அச்சகம் எது?

அ. பென்டகன் பிரஸ்

ஆ. பென்குயின் ரேண்டம் ஹவுஸ்

இ. அக்மி அச்சகம்

ஈ. ஹார்பர் காலின்ஸ் வெளியீட்டாளர்கள்

  • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் பூபேந்தர் யாதவ், “Modi: Energising A Green Future” என்ற நூலை வெளியிட்டார். டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் இணைந்து பென்டகன் பிரஸ் வெளியிட்ட இந்நூல், நிலையான எதிர்காலத்திற்கான பிரதமர் நரேந்திரமோடியின் பார்வையை ஆராய்கிறது. R K பச்நந்தா மற்றும் பிபேக் தேப்ராய் போன்ற குறிப்பிடத்தக்க நபர்களால் திருத்தப்பட்ட இது இந்தியாவின் சுற்றுச் சூழல் கொள்கைகள் பற்றிய விரிவான பகுப்பாய்வை வழங்குகிறது.

3. உயர்கல்வி நிறுவனங்களில் மனித விழுமியங்களையும் தொழிற்முறை நெறிமுறைகளையும் புகுத்துவதற்காக இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வழங்கிய வழிகாட்டுதலின் பெயரென்ன?

அ. UTSAH

ஆ. NEP SAARTHI

இ. முல்ய பிரவா 2.0

ஈ. திக்ஷா

  • இந்தியாவில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழு, ‘முல்யா பிரவா – 2.0’ வழிகாட்டுதல்கள்மூலம் உயர்கல்வியில் மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளை மேம்படுத்துகிறது. மனித விழுமியங்கள் & தொழிற்முறை நெறிமுறைகளை ஊக்குவிக்கும் நோக்கில், வெளிப்படைத்தன்மை, ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புணர்வை வலியுறுத்தும் வகையில், மதிப்பு அடிப்படையிலான நிறுவனங்களை உருவாக்குகிறது.
  • வழிகாட்டுதல்கள் அடிப்படைக் கடமைகள் மற்றும் அரசியலமைப்பு விழுமியங்களுக்கு ஆழ்ந்த மரியாதை அளிக்க வலியுறுத்துகின்றன. மேலும் வெளிப்படைத்தன்மை, நேர்மை & உயர்ந்த நெறிமுறை தரங்களுக்கு முன்னுரிமை அளிக்க நிறுவனங்களை அது வலியுறுத்துகிறது. முல்யா பிரவா – 2.0 என்பது 2019ஆம் ஆண்டு வழிகாட்டுதலின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பாகும்; இது அரசியலமைப்பு மதிப்புகளை மேம்படுத்துவதில் கவனஞ்செலுத்துகிறது.

4. அண்மையில் ரெயில்வே வாரியத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. அருணா நாயர் (IRPS)

ஆ. அருண்குமார் (இ கா ப)

இ. பிரீத்தி சிங் (இ கா ப)

ஈ. ஸ்வாதி சர்மா (இ ஆ ப)

  • 1987ஆம் ஆண்டுத் தொகுதியைச் சார்ந்த இந்திய ரெயில்வே பணியாளர் சேவை (IRPS) அதிகாரி அருணா நாயர், ரெயில்வே வாரிய செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். அவர் ஜன.6 அன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றார். குறிப்பாக, அமைச்சரவையின் நியமனக்குழு, IRMS நிலை-16இல் அவரைச் செயலாளராக நியமித்துள்ளது. இந்த நிலையில், IRMSஆல் தேர்வுசெய்யப்பட்ட முதல் IRPS அதிகாரி இவராவார்.

5. தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்தியாவின் தூய்மையான நகரமாக முதலிடம் பெற்ற நகரம் எது?

அ. திருச்சிராப்பள்ளி

ஆ. இந்தூர்

இ. சேலம்

ஈ. மும்பை

  • இந்தூர் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்தியாவின் தூய்மையான நகரமாக முதலிடம் பிடித்துள்ளது. 2024 ஜன.11 அன்று குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட தூய்மை கணக்கெடுப்பு – 2023இன் முடிவுகளின் ஒரு பகுதியாக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஆண்டு, சூரத் நகரமும் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உலகின் மிகப்பெரிய நகர்ப்புற தூய்மைக் கணக்கெடுப்பான ஸ்வச் சர்வேக்ஷன், நகர்ப்புறத் தூய்மை மற்றும் சுகாதாரத்தில் நகரங்களின் தொடர்ச்சியான மற்றும் பயனுள்ள முயற்சிகளை அங்கீகரிக்கிறது.

6. இந்தியாவின் முதல், ‘பன்னாட்டு இரவுவான் பூங்கா’ என அறிவிக்கப்பட்ட காப்பகம் எது?

அ. இராந்தம்பூர் தேசிய பூங்கா

ஆ. காசிரங்கா தேசிய பூங்கா

இ. பெஞ்ச் புலிகள் காப்பகம்

ஈ. ஜிம் கார்பெட் தேசிய பூங்கா

  • மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பெஞ்ச் புலிகள் சரணாலயம் இந்தியாவின் முதல், ‘பன்னாட்டு இரவுவான் பூங்கா’ என்ற தகுதியை சர்வதேச டார்க்-ஸ்கை அசோசியேஷன் வழங்கியது. இந்தக் குறிப்பிடத்தக்க தகுதி, பெஞ்ச் புலிகள் காப்பகத்தை வானவியலை ஊக்குவிக்கும் மற்றும் இயற்கையான இரவு வானத்தைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட உலகளாவிய இயக்கத்தின் முன்னணியில் வைக்கிறது. இரவுவானுக்கேற்ற ஒளியமைப்புக் கொள்கைக -ளைச் செயல்படுத்துதல், கல்விச் செயல்பாடுகளை நடத்துதல் மற்றும் இரவு வானின் தரத்தை தீவிரமாகக் கண்கா -ணித்தல் போன்றவற்றில் மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த அங்கீகாரம் தரப்பட்டுள்ளது.

7. 2024 – உலக அயலகத்தமிழர் நாள் கொண்டாட்டங்களை நடத்திய நகரம் எது?

அ. சென்னை

ஆ. மதுரை

இ. சேலம்

ஈ. கன்னியாகுமரி

  • இளையோர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னையில் 2024 ஜன.11 அன்று உலக அயலகத்தமிழர் நாள் விழாவைத் தொடக்கிவைத்தார். இருநாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில், சுமார் 58 நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் ஒன்றுகூடி, உலகளாவிய தமிழர் கலாச்சாரம் மற்றும் தமிழ்ச்சமூகத்தின் ஒற்றுமையைப் போற்றினர். மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் மற்றும் பலர் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.

8. சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களை ஒழுங்கமைப்பதற்காக அண்மையில் கூட்டிணைந்துள்ள இரண்டு நிறுவனங்கள் எவை?

அ. நிதி அமைச்சகம் மற்றும் ஐசிஐசிஐ வங்கி

ஆ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் HDFC வங்கி

இ. ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் பாரத வங்கி

ஈ. வணிக அமைச்சகம் மற்றும் ஆக்சிஸ் வங்கி

  • ஊரக வளர்ச்சி அமைச்சகம் மற்றும் பாரத வங்கி (SBI) ஆகியவை கிராமப்புற சுயஉதவிக் குழுக்களுக்கு நிறுவன நிதியுதவியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. பாரத வங்கி (SBI), ‘ஸ்வயம் சித்தா’ என்ற தயாரிப்பை அறிமுகம் செய்தது; இது சுய உதவிக்குழுக்களின் பெண் தொழில்முனைவோர்களுக்காக வடிவமைக்கப்பட்டு, `5 இலட்சம் வரை கடன் வழங்குகிறது.

9. 2024 – ஜாக்ரெப் ஓபன் ஆடவர் ஒற்றையர் 57 கிலோ பிரிவில் தங்கப்பதக்கம் வென்றவர் யார்?

அ. அமன் ஷெராவத்

ஆ. ரவி குமார் தஹியா

இ. உதே சந்த்

ஈ. தீபக் புனியா

  • 2024 ஜாக்ரெப் ஓபன் ஆடவர் ஒற்றையர் 57 கிலோ பிரிவில் அமன் ஷெராவத் 10-0 என்ற கணக்கில் சீனாவின் ஜூ வான்ஹாவோவை வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றார். தற்போது உலக அளவில் 13ஆம் இடத்திலுள்ள ஷெராவத், இறுதிப்போட்டியில் ஒரு நிமிடம் எட்டு வினாடிகளில் வெற்றிபெற்றார்.

10. அண்மையில், பாரிஸ் ஒலிம்பிக்கிற்கான இந்தியாவின் 16ஆவது ஒதுக்கீட்டைப் பெற்றவர் யார்?

அ. ரிதம் சங்வான்

ஆ. ஜியின் யாங்

இ. மனினி கௌஷிக்

ஈ. யேஜி கிம்

  • இந்தோனேசியாவின் ஜாகர்த்தாவில் நடைபெற்ற 2024 – ஆசிய துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப்பில் மகளிர்க்கான 25 மீட்டர் பிஸ்டல் போட்டியில் ரிதம் சங்வான் வெண்கலப்பதக்கத்தை வென்றார். இதன்மூலம் இந்தியாவிற்கான 2024 – பாரிஸ் ஒலிம்பிக் ஒதுக்கீட்டை அவர் பெற்றார். இதுவரை பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவில் இருந்து 16 பேர் தகுதிபெற்றுள்ளனர். இதற்கு முன்னர் அதிகபட்சமாக 2020ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவிலிருந்து 15 பேர் பங்கேற்றிருந்தனர்.

11. 9ஆவது ஆசிய குளிர்கால விளையாட்டுப் போட்டியின் அதிகாரப்பூர்வ முழக்கவரி (slogan) என்ன?

அ. Winter Wonderland

ஆ. Unity in Diversity

இ. Dream of Winter, Love among Asia

ஈ. Play in Winter

  • 2025ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்ட ஒன்பதாவது ஆசிய குளிர்கால விளையாட்டுப்போட்டிகளுக்கான முக்கிய சின்னங்கள் சீனாவின் ஹெய்லாங்ஜியாங்கில் வெளியிடப்பட்டன. அதன் அதிகாரப்பூர்வ முழக்கவரி, “Dream of Winter, Love among Asia” என்பதாகும். இது ஆசிய நாடுகளில் குளிர்கால விளையாட்டுகளுக்கான ஆர்வத்தை பிரதிபலிக்கிறது. சின்னங்களாக ‘பின்பின்’ மற்றும் ‘நினி’ என்ற சைபீரிய புலிப்பறழ்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. “பிரேக்த்ரூ” என்று பெயரிடப்பட்ட சின்னம், சீனத்தின் கலாச்சாரம் மற்றும் ஒலிம்பிக் சின்னங்களை ஆக்கப்பூர்வமாக ஒன்றிணைக்கிறது.

12. ‘அடல் சேது’ என்றும் அழைக்கப்படும் எந்த உட்கட்டமைப்பு திட்டத்தை, மும்பையில், பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்?

அ. மும்பை மெட்ரோ லைன் – 3

ஆ. பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு

இ. மும்பை கடற்கரைச் சாலை திட்டம்

ஈ. மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (MTHL)

  • மகாராஷ்டிர மாநிலம் நவி மும்பையில் அடல் பிகாரி வாஜ்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் பாலத்தைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். மொத்தம் `17,840 கோடி செலவில், ‘அடல் சேது’ கட்டப்பட்டுள்ளது. கடலுக்கு மேல் சுமார் 16.5 கிமீ நீளமும், நிலத்தில் சுமார் 5.5 கிமீ நீளமுங்கொண்ட 21.8 கிமீ நீளமுள்ள ஆறுவழிப்பாலமாகும். இது இந்தியாவின் மிக நீளமான பாலமும் இந்தியாவின் மிகநீளமான கடல் பாலமுமாகும். இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையம் இடையே விரைவான இணைப்பை வழங்கும். மேலும் மும்பையில் இருந்து புனே, கோவா மற்றும் தென்னிந்தியாவிற்கான பயண நேரத்தையும் குறைக்கும். இது மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான இணைப்பை மேம்படுத்தும்.

13. கொங்கன் ரெயில்வே கழக வலையமைப்பின்கீழ் அமைந்துள்ள உடுப்பி ரெயில் நிலையம், அண்மையில் அரசாங்கத்தின் எந்த மறுவடிவமைப்பு திட்டத்தில் சேர்க்கப்பட்டது?

அ. அமிர்த பாரத் நிலையத் திட்டம் (ABSS)

ஆ. உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை திட்டம் (PLI)

இ. இந்தியாவிற்கான தேசிய இரயில் திட்டம் (NRP) – 2030

ஈ. விகல்ப் திட்டம்

  • கொங்கன் ரெயில்வே கழகத்தின் ஒரு பகுதியான உடுப்பி நிலையம், மறுமேம்பாட்டிற்காக அமிர்த பாரத் நிலைய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. 2023 பிப்ரவரியில் இந்திய ரெயில்வே அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டம், இந்தியா முழுவதும் 1,309 நிலையங்களை மறுமேம்பாடு செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டம் நிலையத்தை நவீனமயமாக்குதல், பயணிகளின் வசதிகளை மேம்படுத்தல், போக்குவரவு சுழற்சியை மேம்படுத்தல், மற்றும் ஒருங்கிணைப்பை எளிதாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. நாட்டின் மிகப்பெரிய கடல் பாலம்!

மகாராஷ்டிரத்தில் அடல் பிகாரி வாஜ்பாய் சேவாரி – நவா ஷேவா அடல் சேது எனப் பெயரிடப்பட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய கடல் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இது இந்தியாவில் கட்டப்பட்ட மிகநீளமான கடல் பாலமாகும். கடந்த 2016 டிசம்பரில் பிரதமர் மோடியால் பாலத்தின் அடிக்கல் நாட்டப்பட்டது. கடல்பாலம் மொத்தம் `17,840 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்தப் பாலத்தின் மொத்த நீளம் 22 கிமீ இதில் கடலுக்கு நடுவே 16.5 கிமீ தொலைவிற்கு பாலம் அமைந்துள்ளது. இப்பாலம் மும்பையிலிருந்து புனே, கோவா மற்றும் தென் இந்தியாவிற்கான பயண நேரத்தை குறைக்கும்.

2. செல்போனில் ‘*401#’-க்கு தொடர்புகொள்ள வேண்டாம்: மத்திய தகவல்தொடர்புத்துறை எச்சரிக்கை.

செல்போனுக்கு வரும் அழைப்புகளை அடையாளம் தெரியாத மற்றொரு நபருக்குத் திரும்பிவிடும் வகையில் வரும் மோசடி அழைப்புகள்குறித்து மக்கள் எச்சிரிக்கையாக இருக்குமாறு மத்திய தகவல்தொடர்புத்துறை தெரிவித்துள்ளது. ‘*401#’ என்ற எண்ணை டயல் செய்யுமாறு கூறி வாடிக்கையாளருக்கு வரும் அழைப்புகள், அடையாளம் தெரியாத கைப்பேசி எண்ணுக்குத் திருப்பி அனுப்பப்படுகிறது. இதைப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் மோசடி சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

3. இந்தியாவின் மாசடைந்த நகரம் மேகாலயத்தின் பைர்னிஹாட்: ஆய்வறிக்கையில் தகவல்.

மோசமான காற்றுமாசு நிலவிய நகரங்களின் பட்டியலில் மேகாலயத்தின் பைர்னிஹாட் முதலிடத்தில் உள்ளதாக எரிசக்தி-தூய்மை காற்றுக்கான ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, பிகாரின் பெகுசராய், உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டா ஆகிய நகரங்கள் உள்ளன. தில்லி, இந்தப் பட்டியலில் 8ஆவது இடத்தில் உள்ளது.

காற்றில் PM 2.5 மற்றும் PM 10 மாசுத்துகளின் அளவை 2024ஆம் ஆண்டுக்குள் 20-30 சதவீதமாகக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு தேசிய தூய்மையான காற்று திட்டம், கடந்த 2019இல் தொடங்கப்பட்டது. கடந்த 2011-2015 வரை, நிர்ணயிக்கப்பட்ட காற்றின் தரநிலைகளை எட்டாத 131 நகரங்களில் இந்தத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாசுத்துகள் அளவை 2026ஆம் ஆண்டுக்குள் 40%ஆகக் குறைக்க புதிய இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.

4. இந்திய-ஜப்பான் வீரர்கள் நடுக்கடலில் கூட்டுப்பயிற்சி.

இந்தியா-ஜப்பான் இடையே கடந்த 2000ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் அடிப்படையில் இருநாட்டின் கடலோரக் காவல்படையினர் உயர்மட்ட சந்திப்பு, வருடாந்திர கூட்டுப்பயிற்சிகள், பயிற்சிப் பரிமாற்றங்கள் மற்றும் குறுகியகால பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள், தொடர்புகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கான நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னை துறை முகத்துக்கு ஜப்பான் கடலோரக் காவல்படையின் ‘யாகிமா’ கப்பல் வந்தடைந்தது.

5. தமிழ்நாடு அரசின் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு.

தமிழ்நாடு அரசு சார்பில் பெரியார், அம்பேத்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குப் பணியாற்றிய ஏழு பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சமூக நீதிக்காகப் பாடுபடுபவர்களைச் சிறப்பு செய்யும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் தந்தை பெரியார் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருதுக்கு சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப. வீரபாண்டியன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்டு வருபவர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டுதோறும் Dr அம்பேத்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில், 2023ஆம் ஆண்டுக்கான டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான பெ. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக `5 இலட்சத்துடன், தங்கமும், தகுதியுரையும் வழங்கப்படும்.

திருக்குறளின் பெருமையை உலகறியச் செய்துவரும் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு, 2024ஆம் ஆண்டுக்கான ஐயன் திருவள்ளுவர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ‘பேரறிஞர்’ அண்ணாதுரையின் முதன்மைத் தொண்டர் எனப் பாராட்டப்பட்டவரும், இளம் வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு வருபவருமான பத்தமடை பரமசிவத்துக்கு, 2023ஆம் ஆண்டுக்கான ‘பேரறிஞர்’ அண்ணா விருதும், தேசிய தமிழ்க்கவிஞர் பேராயம் உருவாக்கிய முன்னாள் சமஉ உ. பலராமனுக்கு, பெருந்தலைவர் காமராசர் விருதும் வழங்கப்படவுள்ளது.

சிறப்பான கவிதைகள், திரைப்படப் பாடல்களைப் படைத்த பழனிபாரதிக்கு மகாகவி பாரதியார் விருதும், தனித்தமிழ் வேட்கை அகலாமல் பணியாற்றி வரும் எழுச்சிக்கவிஞர் ம. முத்தரசுக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருதும், வரலாற்று நூல்களை எழுதியவரும், சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வுசெய்தவருமான ஜெயசீல ஸ்டீபனுக்கு தமிழ்த்தென்றல் திரு. வி. க. விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் தமிழ் இலக்கணத்தை எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக அளித்திட்ட முனைவர் இரா. கருணாநிதிக்கு, முத்தமிழ்க்காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் விருது வழங்கப்படவுள்ளது. விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக `2 இலட்சம், 1 சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் அளிக்கப்படும்.

6. அயலகத் தமிழர்களுக்கான, ‘எனது கிராமம்’ திட்டம்: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.

அயலகத் தமிழர்களுக்கான ‘எனது கிராமம்’ முன்னோடித் திட்டத்தை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார்.

எனது கிராமம் திட்டம்:

வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களின் நலன்களைக் காப்பதோடு மட்டுமல்லாது, அவர்களின் வேரான சொந்த ஊர்களின் வளர்ச்சியில் அவர்களே கவனம் செலுத்தும் திட்டந்தான் ‘எனது கிராமம்’ என்ற திட்டம். அயலகத் தமிழர்கள் தான் பிறந்துவளர்ந்த சொந்த ஊரில் உட்கட்டமைப்புகளை மேம்படுத்திடவும், ஊர்மக்களின் கல்வி, மருத்துவம்போன்ற அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்திடவும் இத்திட்டம் நோக்கம் கொண்டுள்ளது. இதில் பள்ளி, மருத்துவமனை, நூலகம்போன்ற கட்டிடங்களைக் கட்டித்தரவும், சீரமைத்திடவும் அயலகத்தமிழர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும்.

7. மனித-வனவிலங்கு மோதல்: நிவாரணம் `10 இலட்சமாக உயர்வு.

மனித-வனவிலங்கு மோதல்களில் ஏற்படும் மனித உயிரிழப்பு மற்றும் நிரந்தர இயலாமைக்கான நிவாரணத் தொகையை `5 இலட்சத்திலிருந்து `10 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

8. இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த 35 நாடுகள் ஒப்புதல்!

இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக்கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் இராம் மேக்வால் தெரிவித்தார்.

9. கோயம்புத்தூரில் `19.50 கோடியில் நவீன வன உயிரின மறுவாழ்வு மையம்.

கோயம்புத்தூர் வனக்கோட்ட சிறுமுகையில் உள்ள மோடூர் – பெத்திக்குட்டை காப்புக்காட்டில் `19.50 கோடியில், 53 ஹெக்டேர் பரப்பளவில் வன உயிரிங்களுக்கான முதல் அதிநவீன மீட்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையம் அமைக்கப்படவுள்ளது. இந்த மீட்புமையம் காயமடைந்த, கைவிடப்பட்ட, நோய்வாய்ப்பட்ட வன உயிரினங்களை மீட்பது, அறிவியல்ரீதியான முறையில் தனிமைப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மறுவாழ்வு செய்வதுக்கான நெறிமுறைகளைத் தரப்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும்.

மேலும் மனித-வனவிலங்கு மோதல் சிக்கலைத் தீர்ப்பதற்கான ஆலோசனை, வழிகாட்டுதலுக்கான முக்கியத்துவம் வாய்ந்த மையமாகவும் இது செயல்படும்.

10. தூய்மை நகரம்: 37ஆவது இடத்துக்கு சென்னை முன்னேற்றம்.

மத்திய அரசின் தூய்மையான நகரங்களுக்கான பட்டியலில் சென்னை 44ஆவது இடத்தில் இருந்து 37ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. 1 லட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகைகொண்ட நகர உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு மதிப்பீடு வழங்கப்பட்டது. இதில் சென்னை 199ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.

இந்தத் தரவரிசையை 10 இலட்சத்துக்கு அதிகமான மக்கள்தொகைகொண்ட நகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை 37ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மதிப்பெண்ணில் 37.5% (2866.14) பெற்றது. ஆனால் இந்த ஆண்டு மொத்த மதிப்பெண்ணில் 45.4% (4,313.79) பெற்று முன்னேற்றம் அடைந்துள்ளது. இது தேசிய சராசரி மதிப்பெண்ணைவிட அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!

Jeetbuzz

Jeetwin