Tnpsc Current Affairs in Tamil – 12th December 2023
1. பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத்தை வழங்கும் நோக்கில், ‘மகா இலட்சுமி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துகிற மாநிலம் எது?
அ. தெலங்கானா 🗹
ஆ. ஒடிசா
இ. மேற்கு வங்காளம்
ஈ. ஆந்திர பிரதேசம்
- TSRTC பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணத்தை வழங்கும் நோக்கில், ‘மகா இலட்சுமி’ என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை தெலங்கானா மாநில அரசு வெளியிட்டுள்ளது. ‘மகா இலட்சுமி’ திட்டம், தெலுங்கானா மாநிலத்தின் எல்லைகளுக்குள் அரசு நடத்தும் விரைவுப்பேருந்துகளில் (பல்லே வெலுகு) அனைத்து வயதுப்பெண்களுக்கும் திருநங்கைகளுக்கும் இலவசப்பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. எந்த மாநிலம்/யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக லால்துஹோமா பதவியேற்றார்?
அ. சத்தீஸ்கர்
ஆ. மிசோரம் 🗹
இ. தெலுங்கானா
ஈ. மத்திய பிரதேசம்
- சோரம் மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்துஹோமா மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். மிசோரம் ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி லால்துஹோமாவுக்கு பதவிப்பிரமாணமும், இரகசியக்காப்புப்பிரமாணமும் செய்துவைத்தார். முன்னாள் இந்திய காவல்பணி அதிகாரியான (IPS) லால்துஹோமாவின் சோரம் மக்கள் இயக்கம் (ZPM) மாநிலத்தின் 40 சட்டமன்றத் தொகுதிகளில் 27 தொகுதிகளை வென்றது.
3. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மருத்துவம் மற்றும் கல்விக்கான UPI கட்டண வரம்புகளை `1 இலட்சத்திலிருந்து எவ்வளவாக உயர்த்தியுள்ளது?
அ. ரூ.2 இலட்சம்
ஆ. ரூ.3 இலட்சம்
இ. ரூ.5 இலட்சம் 🗹
ஈ. ரூ.10 இலட்சம்
- இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மருத்துவம் மற்றும் கல்விக்கான UPI கட்டண வரம்புகளை `1 இலட்சத்திலிருந்து `5 இலட்சமாக உயர்த்தியுள்ளது. இ-ஆணைகளுக்கான பரிவர்த்தனை வரம்பு `15 ஆயிரத்திலிருந்து `1 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பரஸ்பர நிதிகள், காப்பீட்டுத்தொகை மற்றும் கடனட்டைகளுக்குத் திரும்பத் திரும்பப் பணம் செலுத்த இது நுகர்வோருக்கு உதவும்.
4. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஷெரிங் தாஷியுடன் தொடர்புடையது எது?
அ. கலைஞர்
ஆ. நூலாசிரியர் 🗹
இ. விளையாட்டு வீரர்
ஈ. அரசியல்வாதி
- புகழ்பெற்ற பூட்டானிய எழுத்தாளரான ஷெரிங் தாஷிக்கு சாகித்திய அகாதெமியின், ‘பிரேம்சந்த் பெல்லோஷிப்’ வழங்கப்பட்டது. ஷெரிங் தாஷி, படைப்பாற்றல் அல்லாத புனைகதை துறையில் தனது படைப்புகளுக்குப் பெயர்பெற்ற எழுத்தாளராவார். அவர் பூட்டானைப்பற்றி ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். ‘தி போதிசத்வா கிங்’, ‘போல்ட் பூட்டான் பெக்கன்ஸ்’, ‘சிம்பல்ஸ் ஆஃப் பூட்டான்’ ஆகிய நூல்களில் இணையாசிரியராகவும் உள்ளார். மேலும் ‘மிஸ்டரீஸ் ஆஃப் தி ரேவன் கிரௌன்’, ‘லெகசி ஆஃப் கோங்சிம் உக்யென் டோரி’ மற்றும் ‘மித் அண்ட் மெமரி – பூட்டானின் சொல்லப்படாத கதைகள்’ போன்ற படைப்புகள் அவர்தம் சொந்த படைப்புகளாம்.
5. UNICEFஇன் ஜெனரேஷன் அன்லிமிடெட் ஆனது கீழ்காணும் எந்த நாட்டுடன் இணைந்து COP28இல், “கிரீன் ரைசிங்” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது?
அ. இத்தாலி
ஆ. இந்தியா 🗹
இ. ஐக்கிய அரபு அமீரகம்
ஈ. ஆஸ்திரேலியா
- UNICEF’இன் ஜெனரேஷன் அன்லிமிடெட் ஆனது இந்தியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்துடன் இணைந்து துபாயில் நடந்த COP28இல், “Green Rising – பசுமை எழுச்சி” என்ற முன்னெடுப்பைத் தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள இலட்சக்கணக்கான இளைஞர்களை அணிதிரட்டி காலநிலை மாற்றத்தின் கடுமையான தாக்கங்களுக்குத் தீர்வுகாண்பதற்கான பசுமை முன்னெடுப்புகளில் அவர்கள் தீவிரமாக பங்கேற்பதை ஊக்குவிப்பதே இதன் முதன்மையான குறிக்கோளாகும்.
- இந்தியாவில், ‘YuWaah’ என்ற இயக்கம்மூலம், ‘மிஷன் லைஃப்’ இயக்கத்தை அடிப்படையாகக்கொண்ட, தாக்கத்தை ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்துவதில் இது கவனம் செலுத்தும்.
6. ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் (AIIB) தலைமையகம் எங்குள்ளது?
அ. நியூயார்க்
ஆ. பெய்ஜிங் 🗹
இ. ஜெனீவா
ஈ. பாரிஸ்
- ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி (AIIB) மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) ஆகியவை ஆசியாவின் நிலையான உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வளர்ச்சி சவால்களை எதிர்கொள்வதில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ், AIIB மற்றும் UNDP ஆகியவை இணைந்து முதலீடு செய்யவும், வளரும் நாடுகளில் பலதரப்பு நிதி மற்றும் தனியார் நிதியுதவியைப் பயன்படுத்தவும் திட்டமிட்டுள்ளன.
7. சர்வதேச சிவில் வான் போக்குவரத்து நாள் கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
அ. 7 ஜனவரி
ஆ. 7 மார்ச்
இ. 7 செப்டம்பர்
ஈ. 7 டிசம்பர் 🗹
- சர்வதேச சிவில் வான்போக்குவரத்து நாளானது ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர்.07 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. நாடுகளின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கு சர்வதேச சிவில் வான் போக்குவரத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை உருவாக்குவது இந்த நாளின் நோக்கமாகும்.
- ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும், சர்வதேச சிவில் வான் போக்குவரத்துக்குழுமம் சர்வதேச சிவில் வான்போக்குவரவு தினத்திற்கான ஒரு சிறப்புக் கருப்பொருளை நிறுவுகிறது. 2019 முதல் 2023ஆம் ஆண்டுவரைக்கும், “Advancing Innovation for Global Aviation Development” என்று அக்குழுமம் முடிவுசெய்துள்ளது.
8. ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்’ கடைப்பிடிக்கப்படுகிற தேதி எது?
அ. 7 ஜனவரி
ஆ. 7 மார்ச்
இ. 7 செப்டம்பர்
ஈ. 7 நவம்பர் 🗹
- புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதல், தடுத்தல் மற்றும் அதற்கு சிகிச்சையளித்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2014 முதல் ஒவ்வோர் ஆண்டும் நவம்பர்.07ஆம் தேதி இந்தியாவில், ‘தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு நாள்’ அனுசரிக்கப்படுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலகளவில் நிகழும் இறப்புக்கு (6இல் 1) புற்றுநோய் இரண்டாவது முக்கிய காரணமாக உள்ளது.
9. டைம் இதழால், ‘2023ஆம் ஆண்டின் சிறந்த நபர்’ என்று அறிவிக்கப்பட்டவர் யார்?
அ. வோலோடிமிர் ஜெலென்ஸ்கி
ஆ. டெய்லர் ஸ்விஃப்ட் 🗹
இ. சிமோன் பைல்ஸ்
ஈ. ஜி ஜின்பிங்
- டைம் இதழ் டெய்லர் ஸ்விஃப்ட்டை ஆண்டின் சிறந்த நபராக அறிவித்துள்ளது. கிங் சார்லஸ் III மற்றும் பார்பி உட்பட எட்டு இறுதிப்போட்டியாளர்களை அவர் விஞ்சியுள்ளார். கடந்த 12 மாதங்களில் உலகில் அதிக செல்வாக்கு செலுத்திய தனிநபர், குழு அல்லது கருத்துருவுக்கு டைம் இதழ் இப்பட்டத்தை வழங்குகிறது. கடந்த ஆண்டு, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தபோது, அந்த இதழ் உக்ரைனின் அதிபரான வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு இதனை வழங்கியது.
10. IQAirஇன்படி, 2023 டிசம்பர் மாத நிலவரப்படி, எந்த நகரத்தின் காற்றின் தரம் உலகிலேயே மிகவும் மோசமாக இருந்தது?
அ. புது தில்லி
ஆ. லாகூர் 🗹
இ. டாக்கா
ஈ. டோக்கியோ
- IQAirஇன் கூற்றுப்படி, லாகூர் காற்றின் தரம் உலகிலேயே மிக மோசமானதாகும். அங்கு காற்றின் தரக்குறியீடு (AQI) 400இல் அதாவது அபாயகர நிலையில் உள்ளது. பாகிஸ்தானின் இரண்டாவது பெரிய நகரமான லாகூர், தொடர்ந்து புகை மூட்டத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் இலட்சக்கணக்கான மக்களின் நலம் மற்றும் வாழ்வாதாரம் பாதிப்படையும் நிலையில் உள்ளது. AQI ஆனது ஐவகை மாசுபாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது; அவை: துளிமட்ட ஓசோன், துகள்கள், கார்பன் மோனாக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு. கடந்த மாதம், லாகூரைத் தொடர்ந்து தில்லி 302 என்ற நிலையிலும் கராச்சி 204 என்ற நிலையிலும் இருந்தது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. சட்டப்பிரிவு 370 நீக்கம் செல்லும்: உச்சநீதிமன்றம்.
ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது செல்லும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி D Y சந்திரசூட் தீர்ப்பு வழங்கியுள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவு ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கி வந்தது. அந்தச் சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்த மத்திய அரசு, ஜம்மு-காஷ்மீரை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி DY சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன்பாக 16 நாள்கள் நடைபெற்றது.
2. ‘மகாகவி’ பாரதியார்…
1906-07ஆம் ஆண்டில் பிரிட்டனிலிருந்து லெவிலிங்ஸ்டன் என்னும் ஆங்கிலேயர் இந்தியாவுக்கு வந்தார். அவர், திலகர், கோகலே உள்ளிட்டோரைச் சந்தித்த பின்னர், பாரதியையும் அவரது பாடல்களையும் அறிந்து கொள்கிறார். அதன்பின்னர், 1908ஆம் ஆண்டு இந்தியாவைப் பற்றி அவர் எழுதிய நூலில் பாரதியைப்பற்றிக் குறிப்பிடும்போது, ‘தி பொயட் ஆஃப் மெட்ராஸ்’ என எழுதினார். அதைத்தொடர்ந்து, 1916ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் ஹெச் டகிள்ஸ் என்பவர் உலகப் புகழ்பெற்ற கவிஞர்களைப் பற்றி எழுதிய புத்தகத்தில் இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திரநாத் தாகூர், சரோஜினி நாயுடு, அரவிந்தர், சுப்பிரமணிய பாரதி ஆகிய நான்குபேரைப் பற்றி கட்டுரை எழுதியுள்ளார்.
பாரதி மறைவுக்குப் பிறகு 1921ஆம் ஆண்டு மதுரகவி பாஸ்கரதாஸ் எழுதிய கவிதை நூலில் ரவீந்திரநாத் தாகூர், ‘மகாகவி’ பாரதியைப் பற்றி எழுதியுள்ளார். அதுமட்டுமன்றி, சேதுபதி மன்னர் தொடங்கிய மதுரை தமிழ்ச்சங்கம், தமிழ்ப்பல்கலைக்கழகமாக விரிவாக்கம் செய்யப்பட வேண்டுமென 1906ஆம் ஆண்டுகளில் விரும்பியவர் பாரதி.