Tnpsc Current Affairs in Tamil – 12th April 2024
1. அண்மையில், ‘சாகர் கவாச்’ பயிற்சி நடைபெற்ற இடம் எது?
அ. இலட்சத்தீவுகள்
ஆ. கோவா
இ. சென்னை
ஈ. புதுச்சேரி
- 2 நாள் கடலோரப் பாதுகாப்புப் பயிற்சியான, ‘சாகர் கவாச்’, அண்மையில் இலட்சத்தீவுகளில் நடைபெற்றது. இந்தப் பயிற்சியில் இந்தியக் கடற்படை, இந்தியக் கடலோரக் காவல்படை, கடல்சார் காவல்படை, மீன்வளம் மற்றும் சுங்கத் துறை உள்ளிட்ட கடல்சார் பாதுகாப்பு முகமைகள் ஈடுபட்டன.
2. ஐஐடி சென்னையின் ஓர் அண்மைய ஆய்வின்படி, கீழ்காணும் எந்தெந்த நீர்நிலைகளில் PFAS விரவியுள்ளது?
அ. பக்கிங்காம் கால்வாய், அடையாறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி
ஆ. காவேரியாறு, அமராவதி ஆறு மற்றும் பவானி ஆறு
இ. பாலாறு, தென்பெண்ணையாறு மற்றும் கெடிலம் ஆறு
ஈ. தாமிரபரணி ஆறு, கடனாநதி ஆறு மற்றும் பச்சையாறு
- ஐஐடி சென்னையின் ஆய்வானது, பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு மற்றும் செம்பரம்பாக்கம் ஏரி ஆகியவற்றில் PFAS (Forever Chemicals) விரவியிருப்பதை வெளிப்படுத்துகிறது. PFAS ஆனது அடி-ஒட்டாத சமையற்பாண்டங்கள், உணவுப்பொட்டலம் கட்ட பயன்படும் பொருள்கள் மற்றும் தொழிற்துறை பொருட்களில் பொதுவாகக் காணப்படும் ஒரு பொருளாகும்; இது சுற்றுச்சூழலில் சிதைவடையாமல் நெடுநாட்கள் தங்கியிருக்கும் இயல்புடையது.
- கல்லீரல் பாதிப்பு, மிகக்குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, கருவுறுதல் பிரச்சினைகள், நோயெதிர்ப்பு அமைப்பு விளைவுகள் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட சாத்தியமான பாதகமான சுகாதார விளைவுகள் இதனால் ஏற்படுகிறது.
3. சபகருக்குப்பிறகு, கீழ்காணும் எந்த அயல்நாட்டு துறைமுகத்தில் செயல்படும் உரிமையை இந்தியா பெற்றுள்ளது?
அ. சிட்வே துறைமுகம்
ஆ. கொழும்பு துறைமுகம்
இ. யங்கோன் துறைமுகம்
ஈ. பங்கான் துறைமுகம்
- ஈரான் நாட்டில் உள்ள சபகர் துறைமுகத்தைத் தொடர்ந்து, மியான்மரில் உள்ள சிட்வே என்ற தனது இரண்டாவது அயல்நாட்டு துறைமுகத்தை நிர்வகிப்பதற்கு, இந்தியா மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் ஒப்புதலைப் பெற்றது. மியான்மரின் ராக்கைன் மாநிலத்தில் கலடன் ஆற்றின் முகத்துவாரத்தில் அமைந்துள்ள சிட்வே, இந்தியாவின் மானிய உதவியின் கீழ் ஆதரிக்கப்படும் கலடன் பன்-மாதிரி போக்குவரவு திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்டதாகும். இந்த உத்திசார் நடவடிக்கை இந்தியாவின் வடகிழக்கு வர்த்தக வாய்ப்புகளை பெருக்க உதவுவதோடு, இந்தியா மற்றும் மியான்மர் இடையே மேம்பட்ட வர்த்தகத்தையும் ஊக்குவிக்கிறது.
4. கங்கௌர் திருவிழா கொண்டாடப்படுகிற மாநிலம் எது?
அ. உத்தரபிரதேசம்
ஆ. குஜராத்
இ. இராஜஸ்தான்
ஈ. ஒடிஸா
- இராஜஸ்தான் மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு குறிப்பிடத்தக்க திருவிழாவான கங்கௌர், சிவன் (கன்) மற்றும் உமையம்மை (கௌரி) இணைந்ததைக் கொண்டாடுகிறது; திருமணவிழாவின் மகிழ்ச்சி இவ்விழாவில் காணப்படும். சைத்ராவில் (மார்ச்-ஏப்ரல்) கொண்டாடப்படுகிற இவ்விழா, வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இல்லற மகிழ்ச்சிக்காக அல்லது தங்கள் கணவரின் நல்வாழ்வுக்காக ஆசீர்வாதம் கோரி பெண்கள் கன் மற்றும் கௌரியின் களிமண்ணாலான சிலைகளை வழிபடுகின்றனர். திருமணமாகாத கன்னியர் தகுந்த வாழ்க்கைத் துணைக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.
5. ‘TSAT-1A’ என்பது என்ன வகையான செயற்கைக்கோளாகும்?
அ. புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்
ஆ. தட்பவெப்பநிலை கண்காணிப்பு செயற்கைக்கோள்
இ. தகவல் தொடர்பு செயற்கைக்கோள்
ஈ. வழிசெலுத்தல் செயற்கைக்கோள்
- டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிட் (TASL) SpaceXஇன் ஃபால்கன்-9 ஏவுகலம்மூலம், ‘TSAT-1A’ என்ற ஆப்டிகல் சப்-மீட்டர் தெளிவுத்திறன்கொண்ட புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. Satellogic Incஉடன் இணைந்து உருவாக்கப்பட்ட இச்செயற்கைக்கோள், இராணுவ தரத்திலான படமாக்கலை வழங்குகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தப்படும் இது, தயார்நிலையையும், உத்திசார் அடிப்படையில் முடிவுகள் எடுப்பதையும் மேம்படுத்துகிறது.
6. அண்மையில், சீனியர் தேசிய மகளிர் ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டவர் யார்?
அ. PR ஸ்ரீஜேஷ்
ஆ. அமித் ரோஹிதாஸ்
இ. ஹரேந்திர சிங்
ஈ. ஹர்மன்பிரீத் சிங்
- முன்னாள் இந்திய ஹாக்கி வீரரும், ‘துரோணாச்சார்யா’ விருது பெற்றவருமான ஹரேந்திர சிங், 2028 – லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் வரை சீனியர் தேசிய மகளிர் அணியின் பயிற்சியாளராக ஹாக்கி இந்தியாவால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு அணி தகுதி பெறத்தவறியதால் பதவி விலகிய ஹாலந்தின் ஜன்னெக் ஸ்கோப்மேனுக்குப் பதிலாக ஹரேந்திர சிங் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக நியமனம் தொடர்பான முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
7. அண்மையில், ஐநா முன்னெடுப்பின்கீழ் நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, வங்கதேசம் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுக்கு இந்தியா என்ன வகையான உதவிகளை வழங்குகிறது?
அ. வானிலை முன்னறிவிப்பு அமைப்பு
ஆ. அறிவியல் ஆராய்ச்சி வசதி
இ. கல்வி உள்கட்டமைப்பு
ஈ. சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள்
- 2027ஆம் ஆண்டிற்குள் உலகளவில் அபாயகரமான வானிலை, நீர் அல்லது தட்பவெப்பநிலை நிகழ்வுகளுக்கு உயிர்காக்கும் முன்னறிவிப்பு அமைப்புகளை நிறுவுவதை நோக்கமாகக்கொண்டு, ஐநா சபையின், ‘அனைவருக்கும் முன்னெச்சரிக்கைகள்’ என்ற முயற்சிக்கு இந்தியா பங்களிக்கிறது.
- நேபாளம், மாலத்தீவுகள், இலங்கை, வங்கதேசம், மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளுடன் இணைந்து, இந்தியா, முன்கூட்டிய வானிலை எச்சரிக்கை அமைப்புகளை அமைப்பதில் ஈடுபட்டுள்ளது. இம்முன்முயற்சிகள், புயல் மற்றும் வெள்ளம் போன்ற இயற்கைப்பேரிடர்களின் போது சரியான நேரத்தில் எச்சரிக்கைகள் மற்றும் முன்னறிவிப்புகளை வழங்கி பேரிடர் தயார்நிலை மற்றும் மீட்புத் திறன்களை மேம்படுத்துகின்றன.
8. அங்காரா A5 என்ற விண்வெளி ஏவுகணையை உருவாக்கிய நாடு எது?
அ. ரஷ்யா
ஆ. உக்ரைன்
இ. ஜப்பான்
ஈ. சீனா
- ரஷ்யாவின் அங்காரா A5 என்ற விண்வெளி ஏவுகணையானது வோஸ்டோக்னி காஸ்மோட்ரோமிலிருந்து ஏவப்பட உள்ளது. முந்நிலைகொண்ட இந்த ஏவுகணை, 24.5 டன் தாங்கு சுமையை தாழ்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்துவதை நோக்கமாகக்கொண்டுள்ளது. இந்த ஏவுகணை அதன் முந்தைய வடிவமான புரோட்டான் M-க்கு மாற்றாக இருக்கும்.
9. அண்மையில், 2024 – ஜான் எல் ‘ஜாக்’ ஸ்விகர்ட் ஜூனியர் விருதைப்பெற்ற விண்வெளி ஆய்வுத்திட்டம் எது?
அ. சந்திரயான்-3 திட்டம்
ஆ. சந்திரயான்-2 திட்டம்
இ. செவ்வாய் சுற்றுகலன் திட்டம்
ஈ. ககன்யான் திட்டம்
- ISROஇன் சந்திரயான்-3 பணிக்குழுவானது அமெரிக்காவைச் சேர்ந்த விண்வெளி அறக்கட்டளையின் விண்வெளி ஆய்வுக்கான 2024-ஜான் எல், ‘ஜாக்’ ஸ்விகர்ட் ஜூனியர் விருதைப் பெற்றது. விண்வெளி கருத்தரங்கத்தின்போது வழங்கப்பட்ட இம்மதிப்புமிக்க விருது, விண்வெளி ஆய்வுக்கான சிறந்த பங்களிப்பை அங்கீகரிக்கிறது. ஹூஸ்டனில் உள்ள இந்திய தூதரகம் இவ்விருதை ஏற்றுக்கொண்டது, சந்திரயான்-3 திட்டத்தின் தொழில்நுட்ப திறமையை சிறப்பிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
10. அண்மையில், களிமண் களத்தில் நடந்த மாஸ்டர்ஸ் 1000 போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்தியர் யார்?
அ. சாகர் காஷ்யப்
ஆ. சுமித் நாகல்
இ. நிதின் கீர்த்தனே
ஈ. ரமேஷ் கிருஷ்ணன்
- இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான சுமித் நாகல், ரோலக்ஸ் மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி, முதன்மை சுற்றுக்கு முன்னேறிய மூன்றாவது இந்தியர் ஆனார். 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு ATP மாஸ்டர்ஸ் 1000 போட்டியை களிமண் களத்தில் விளையாடிய முதல் இந்தியராக சுமித் நாகல் வரலாறு படைத்தார். அவர் இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை வீழ்த்தி வெற்றிபெற்றார்.
11. 2024 – உலக ஹோமியோபதி நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Homeoparivar: One Health, One Family
ஆ. Homeopathy: People’s Choice for Wellness
இ. Homeopathy – Roadmap for Integrative Medicine
ஈ. Homoeopathy in public health
- ஹோமியோபதியின் நிறுவனர் Dr சாமுவேல் ஹானிமனின் பிறந்தநாளான ஏப்ரல்.10ஆம் தேதி அவரது நினைவாக ஆண்டுதோறும் உலக ஹோமியோபதி நாள் கொண்டாடப்படுகிறது. “Homeoparivar: One Health, One Family” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். இது முழுமையான நலத்தை வலியுறுத்தும் விதமாக உள்ளது. ஹோமியோபதி என்னும் மருத்துவ முறையானது 19ஆம் நூற்றாண்டில் சாமுவேல் ஹானிமேனால் முக்கியத்துவம் பெற்றது. உலகளவில் ஹோமியோபதி முறையை மேம்படுத்துவதை இந்த நாள் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
12. அண்மையில் காலஞ்சென்ற பீட்டர் ஹிக்ஸ் என்பவர் தனது எந்த ஆய்வுக்காக நோபல் பரிசு பெற்றார்?
அ. குவாண்டம் இயக்கவியல்
ஆ. கதிரியக்கத்தின் கண்டுபிடிப்பு
இ. ரேடியம் மற்றும் பொலோனியம் தனிமங்களின் கண்டுபிடிப்பு
ஈ. கடவுள் துகளைக் கண்டுபிடித்ததற்காக
- ‘ஹிக்ஸ்-போஸான் துகள்’ அல்லது ‘கடவுள் துகள்’ கண்டுபிடிப்பதில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ் (94), அண்மையில் காலமானார். கடந்த 2013இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வென்ற அவரது பணி பேரண்டத்தின் பிந்தைய பெருவெடிப்பு உருவாக்கத்தை தெளிவுபடுத்தியது. எடின்பர்க் பல்கலையில் நீண்டகாலப் பேராசிரியராக பணிபுரிந்த ஹிக்ஸ், உலகளாவிய ஒருங்கிணைப்பில் போசான்களின் பங்கைப் புரிந்துகொள்வதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்ட 174 தொழில்நுட்பப் படிப்புகள் – சென்னை ஐஐடி தகவல்.
நிரலாக்கம், தரவு அமைப்புகள்போன்ற அதிகளவில் எதிர்பார்க்கப்படும் படிப்புகள் உள்பட 174 தொழில்நுட்பப் படிப்புகளுக்கான பாடங்களை சென்னை IIT NPTEL தமிழில் மொழிபெயர்த்துள்ளது.
2. தாய்லாந்தில் தமிழர்கள் நினைவாக நடுகல்.
தாய்லாந்து நாட்டின் காஞ்சனபுரியில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நடுகல்லை திறந்து வைக்கும் விழாவில் பங்கேற்க தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நடுகல் எதற்கு? கடந்த 1939 முதல் 1945 வரை 2ஆம் உலகப்போர் நடந்தது. அப்போது, தாய்லாந்து நாட்டினைப் பர்மாவுடன் இணைக்கும் ரெயில் பாதையின் கட்டுமானப்பணிகளில் தமிழர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இப்பணியின் போது வேலைச்சுமை, போதிய உணவு கிடைக்காமை, நோய் முதலிய காரணங்களால் சுமார் 70,000 தமிழர்கள் இறந்தனர். அவர்களில் நினைவாக தமிழர் மரபுப்படி நடுகல் அமைக்கப்பட்டுள்ளது.
3. சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தமிழ்நாடு முதலிடம்.
உற்பத்திப்பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆயத்த நிலைகள்குறித்து நடுவணரசின் NITI ஆயோக் நிறுவனம் ஆய்வுசெய்துள்ளது. அந்த ஆய்வின் அடிப்படையில், தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. கர்ப்பிணிகள் சுகாதாரக் குறியீடுகளிலும் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. கர்ப்பிணிகள் பராமரிப்புடன் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவ -தில் தமிழ்நாடு 3.31 புள்ளிகளைப்பெற்று இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் தொழில் வளர்ச்சி முதலான பிரிவுகளில் மாநிலங்களை முன்னேற்றுவதில் சிறப்புப்பொருளாதார மண்டலங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதில், தமிழ்நாட்டில் அதிக அளவாக ஐம்பது சிறப்புப் பொருளாதார மண்டலங்களை ஏற்படுத்தி இந்தியாவிலேயே முதலிடத்தில் உள்ளது.