TnpscTnpsc Current Affairs

Tnpsc Current Affairs in Tamil – 11th and 12th June 2024

1. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பின் (ILO) பன்னாட்டு தொழிலாளர் மாநாட்டின் (ILC) 112ஆவது அமர்வு நடைபெற்ற இடம் எது?

அ. ஜெனீவா, சுவிட்சர்லாந்து

ஆ. லண்டன், இங்கிலாந்து

இ. புது தில்லி, இந்தியா

ஈ. பாரிஸ், பிரான்ஸ்

  • ஜெனீவாவில் நடைபெற்ற பன்னாட்டு தொழிலாளர் மாநாட்டின் 112ஆவது அமர்வில் செயலாளர் சுமிதா தௌரா தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். சுமிதா தௌரா இந்தியத் திருநாட்டின் தொழிலாளர் சீர்திருத்தங்கள், முறைசாரா தொழிலாளர்களுக்கான சமூகப்பாதுகாப்பு மற்றும் பெண் தொழிலாளர் பங்கேற்புபற்றி விவாதித்தார். ILO தலைவர்களுடனான அவரது சந்திப்புகள் உலகளாவிய திறன் கட்டமைப்பு, சமூகப்பாதுகாப்பு, புதிய பணிவாய்ப்புகள் மற்றும் திறமையான தொழிலாளர்கள் இடம்பெயர்வு ஆகியவற்றில் கவனம் செலுத்தியது. பிரதமர் உஜ்வாலா யோஜனா மற்றும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் தாக்கம்போன்ற முன்முயற்சிகளை எடுத்துரைத்து, பாதுகாப்புத்துறையின் முக்கியத்துவத்தை இந்தியத் தூதுக்குழு வலியுறுத்தியது.

2. அண்மையில், ‘வித்யுத் ரக்ஷக்’ என்ற ஒருங்கிணைந்த மின்னியற்றி கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ள ஆயுதப்படை எது?

அ. இந்திய விமானப்படை

ஆ. இந்திய கடற்படை

இ. இந்திய ராணுவம்

ஈ. தேசிய பாதுகாப்புப் படை

  • ராணுவ வடிவமைப்பு பணியகத்தால் உருவாக்கப்பட்ட மின்னியற்றி கண்காணிப்பு, பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பான, ‘வித்யுத் ரக்ஷக்’ஐ இந்திய ராணுவம் அறிமுகப்படுத்தியுள்ளது. IoT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இது செயல்பாடுகளை தானியங்குபடுத்துகிறது, தவறுகளை முன்னறிவிக்கிறது, மேலும் அனைத்து மின்னியற்றி வகைகளுடனும் பணிசெய்கிறது; இதன்மூலம் மானுட ஆற்றல் சேமிப்பதை அது தனது நோக்கமாகக்கொண்டுள்ளது. ‘தொழில்நுட்பத்தை உள்வாங்கிக்கொள்ளுதல் ஆண்டின்’ ஒருபகுதியாக, இது இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. 2023 – ஏரோ இந்தியா நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட, ‘வித்யுத் ரக்ஷக்’, இப்போது இராணுவத்தால் பயன்பாட்டில் உள்ளது.

3. கட்டபிரபா ஆறானது கீழ்க்காணும் எந்த ஆற்றின் துணையாறாகும்?

அ. கிருஷ்ணா

ஆ. கோதாவரி

இ. காவேரி

ஈ. நர்மதா

  • கர்நாடகத்தில் பாயும் கிருஷ்ணா ஆற்றின் துணையாறான கட்டபிரபா ஆற்றில் டிராக்டர் கவிழ்ந்ததில் 9 பேர் அப்பகுதி மக்களால் மீட்கப்பட்டனர். மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகும் இந்த ஆறு, கிழக்கே 283 கிமீட்டர்கள் பாய்ந்து கிருஷ்ணா ஆற்றில் கலக்கிறது. பெல்காம் மாவட்டத்தில் 53 மீ கீழேவீழ்ந்து கோகாக் அருவியை உருவாக்குகிறது. ஹிரண்யகேஷி மற்றும் மார்கண்டேய ஆறுகள் உள்ளிட்ட துணையாறுகளுடன், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா முழுவதும் 8,829 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த ஆற்றுப்படுகை பரவியுள்ளது.

4. பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் முதன்மை நோக்கம் என்ன?

அ. உழவர்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குதல்

ஆ. நிலம் வைத்துள்ள உழவர் குடும்பங்களின் நிதித்தேவைகளை பூர்த்தி செய்தல்

இ. உழவர்களுக்கு மருத்துவக் காப்பீடு வழங்குதல்

ஈ. உழவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குதல்

  • பிரதமர் கிசான் நிதி திட்டத்தின் 17ஆவது தவணையை பிரதமர் விடுவித்தார். வேளாண்மை மற்றும் உழவர்கள்நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த மத்தியத் துறைத் திட்டம், நிலம் வைத்திருக்கும் உழவர்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ஆண்டுக்கு `6,000 வருமான ஆதரவை வழங்குகிறது; ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு முறை `2,000 என மூன்று தவணைகளில் இந்த வருமான ஆதரவு வழங்கப்படுகிறது. பயனாளிகளில் உயர்-பொருளாதார நிலையில் உள்ளவர்களைத்தவிர்த்து, தகுதியுள்ள நிலம் வைத்துள்ள அனைத்து உழவர் குடும்பங்களும் இதன் கீழ் பயனடைவர்.

5. ‘சைலிட்டால்’ என்றால் என்ன?

அ. சிறுகோள்

. செயற்கை இனிப்பூட்டி

இ. மலேரியாவுக்கானத் தடுப்பூசி

ஈ. ஆக்கிரமிப்புக்களை

  • செயற்கை இனிப்பூட்டியான, ‘சைலிட்டால்’ உடல்நலக்கேடுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஓர் அண்மைய ஆய்வு சுட்டிக்காட்டுகிறது; இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம்போன்ற இருதய பாதிப்புகளின் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஒரு சர்க்கரை ஆல்கஹாலான சைலிட்டால், சர்க்கரை இல்லாத சூயிங்கம், நீரிழிவு நோய்க்கு ஏற்ற உணவுகள் மற்றும் வாய்வழி பராமரிப்புப்பொருட்களில் இனிப்புப்பொருளாக பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இது சர்க்கரை மற்றும் ஆல்கஹால் மூலக்கூறுகளின் பண்புகளை ஒருங்கிணைத்து, தாவரப் பொருட்களிலிருந்து இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ பெறப்படுகிறது.

6. அண்மையில், 2024 – பிரெஞ்ச் ஓபன் மகளிர் பட்டத்தை வென்ற இகா ஸ்வியாடெக் சார்ந்த நாடு எது?

அ. அயர்லாந்து

ஆ. போலந்து

இ. சீனா

ஈ. இந்தியா

  • 23 வயதான இகா ஸ்வியாடெக், ஜாஸ்மின் பௌலினியை தோற்கடித்து தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரெஞ்ச் ஓபன் மகளிர் பட்டத்தை வென்றார். ஜஸ்டின் ஹெனினுக்குப் பிறகு (2005-2007) இந்தச் சாதனையை நிகழ்த்திய முதல் பெண்மணி என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். போலந்து நாட்டைச்சேர்ந்த இகா ஸ்வியாடெக், மகளிர் டென்னிஸ் சங்கத்தின்படி பெண்கள் ஒற்றையர் பிரிவில் தற்போது உலகதத்தரவரிசையில் நெ:01இல் உள்ளார்.

7. 2024 – பன்னாட்டு யோகா நாளுக்கானத் தயாரிப்புகளைத் தொடங்கியுள்ள அமைச்சகங்கள் எவை?

அ. உழவு அமைச்சகம் & ஆயுஷ் அமைச்சகம்

ஆ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் & ஆயுஷ் அமைச்சகம்

இ. தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் & பாதுகாப்பு அமைச்சகம்

ஈ. உள்துறை அமைச்சகம் மற்றும் ஆயுஷ் அமைச்சகம்

  • 2024 ஜூன்.21 அன்று நடக்கவுள்ள வருடாந்திர பன்னாட்டு யோகா நாளுக்கானத் தயாரிப்புகள்குறித்து தில்லியில் தகவல் ஒலிபரப்பு அமைச்சக செயலாளர் சஞ்சை ஜாஜூ, ஆயுஷ் அமைச்சக செயலாளர் வைத்திய இராஜேஷ் கோட்டேச்சா ஆகியோர் ஆய்வுசெய்தனர். யோகா பயிற்சியின் பயன்கள்பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் ஊடகப்பிரிவுகள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளன.
  • பத்திரிகை தகவல் அலுவலகம், பிரசார் பாரதி, புதிய ஊடகப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் முக்கிய நிகழ்வுகளுக்கு திட்டமிட்டு வருகின்றன. பன்னாட்டு யோகா நாளன்று காலைநேர செயல்பாடுகளை நேரலையில் ஒலிபரப்பவுள்ள தூர்தர்ஷன் யோகா குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும். அனைத்து ஊடகத்தளங்களிலும் பகிர்வதற்காக ‘யோகா கீத’த்தை ஆயுஷ் அமைச்சகம் தயார்செய்துள்ளது.

8. பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் பன்மருந்து எதிர்ப்பாற்றல்கொண்ட நோய்க்கிருமிகளை ஆய்வுசெய்ய NASAஉடன் கூட்டிணைந்துள்ள IIT எது?

அ. ஐஐடி பம்பாய்

ஆ. ஐஐடி கான்பூர்

இ. ஐஐடி ஆமதாபாத்

ஈ. ஐஐடி மெட்ராஸ்

  • ஐஐடி மெட்ராஸ் மற்றும் NASAஇன் JPL ஆராய்ச்சியாளர்கள் பன்னாட்டு விண்வெளி நிலையத்தில் (ISS) பன்மருந்து எதிர்ப்பாற்றல்கொண்ட நோய்க்கிருமிகளை ஆராய்ந்து வருகின்றனர். இது விண்வெளி வீரர்களின் நலத்திற்கும் புவிக்கும் சாத்தியமான நன்மைகளைக் கொண்டுள்ளது. ISS பரப்புகளில் உள்ள பொதுவான நோய்க்கிருமியான ‘Enterobacter bugandensis’ஐ மையமாகக் கொண்ட இந்த ஆய்வு, நோய்க்கிருமிகளின் மரபணு, செயல்பாடு மற்றும் வளர்சிதை மாற்ற மேம்பாடுகளை ஆராய்கிறது. இந்தக் கண்டுபிடிப்புகள் விண்வெளியிலும் புவியிலும் மருந்து-எதிர்ப்பாற்றல்கொண்ட நோய்த்தொற்றுகளை எதிர்த்துப்போராடுவதற்கான உத்திகளை வகுக்க உதவும்.

9. அண்மையில், UFCஇல் வெற்றிபெற்ற முதல் இந்திய கலப்பு தற்காப்புக்கலை வீராங்கனை என வரலாற்றுச் சாதனை படைத்தவர் யார்?

அ. பூஜா தோமர்

ஆ. ரஜனி தியோரி

இ. ரோஷிபினா தேவி

ஈ. நெய்மன் வாங்சு

  • உத்தர பிரதேச மாநிலம் புதானாவை சேர்ந்த பூஜா தோமர், UFCஇல் வெற்றிபெற்ற முதல் இந்திய கலப்பு தற்காப்புக் கலை வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தார். UFC-க்கு முன், அவர் 5 தேசிய வுஷு பட்டங்களைப்பெற்றார். ரயன்னே தாஸ் சாண்டோசுக்கு எதிரான அவரது இவ்வெற்றி, 30-27, 27-30, மற்றும் 29-28 என்ற புள்ளிகளுடன் கிடைக்கப் பெற்றது.

10. அண்மையில், எந்த மாநிலத்தின் முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்?

அ. தமிழ்நாடு

ஆ. தெலுங்கானா

இ. ஆந்திர பிரதேசம்

ஈ. கர்நாடகா

  • தெலுங்கு தேசம் ட்சியின் (TDP) தேசியத்தலைவர் N சந்திரபாபு நாயுடு, எஞ்சியிருக்கும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக ஜூன்.12 அன்று பதவியேற்றார். அம்மாநில ஆளுநர் S அப்துல் நசீர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 40 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் நான்காவது முறையாக அவர் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்; ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு முறையும், தற்போது, பிரிக்கப்பட்ட ஆந்திர பிரதேசத்தில் இரண்டு முறையும் முதலமைச்சராக பணியாற்றியுள்ளார்.

11. அண்மையில் விமான விபத்தில் காலமான சௌலோஸ் கிளாஸ் சிலிமா, கீழ்க்காணும் எந்த நாட்டின் துணை அதிபராக இருந்தார்?

அ. ருவாண்டா

ஆ. மொரிஷியஸ்

இ. மலாவி

ஈ. தான்சானியா

  • மலாவியின் துணை அதிபராக இருந்த சௌலோஸ் கிளாஸ் சிலிமா மற்றும் 9 பேர் விமான விபத்தில் உயிரிழந்தனர். லிலாங்வேயிலிருந்து புறப்பட்ட அவ்விமானம் போய்ச்சேரவேண்டிய இடமான சூசூவை மோசமான கட்புலனாகு தன்மை மற்றும் தொடர்பிழப்பு ஆகியவற்றின் காரணமாக சென்றடைய முடியாமல் விபத்துக்குள்ளானது. சிகங்காவா வனப்பகுதியில் நிகழ்ந்த அக்கோரவிபத்தில் எவரும் உயிர்பிழைக்கவில்லை என்பதை அந்நாட்டு அதிபர் லாசரஸ் சக்வேரா உறுதிப்படுத்தினார்.

12. காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாநிலம் எது?

அ. மத்திய பிரதேசம்

ஆ. உத்தர பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

  • காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயத்தை புதிய சிறுத்தைகளின் வாழ்விடமாக மாற்ற மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது. கென்யா மற்றும் தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த குழுக்கள் அத்தளத்தை மதிப்பீடு செய்தன; மேலும் வேட்டையாடும் விலங்குகள் மற்ற புலிகலள் காப்பகங்களில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்டன. 2022இல் குனோ தேசியப்பூங்காவில் 8 நமீபிய சிறுத்தைகள் விடப்பட்டன; அதைத்தொடர்ந்து 2023இல் தென்னாப்பிரிக்காவிலிருந்து மேலும் 12 சிறுத்தைகள் விடப்பட்டன.

13. அண்மையில், ‘2024 – ஜப்பான் இந்தியா கடல்சார் பயிற்சி (JIMEX-24)’ தொடங்கப்பட்ட இடம் எது?

அ. குஜராத், இந்தியா

ஆ. யோகோசுகா, ஜப்பான்

இ. டோக்கியோ, ஜப்பான்

ஈ. சென்னை, இந்தியா

  • 8ஆவது ஜப்பான்-இந்தியா கடல்சார் பயிற்சியான, ‘JIMEX-24’ ஜப்பானின் யோகோசுகாவில் தொடங்கியது. ஜப்பான் கடல்சார் தற்காப்புப்படையால் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சியில், இந்திய கடற்படையின் INS ஷிவாலிக் மற்றும் ஜப்பான் கடல்சார் தற்காப்புப்படையின் JS யுகிரி ஆகியவை பங்கேற்றன. இப்பயிற்சியில் துறைமுகம் மற்றும் கடல் கட்டங்கள் அடங்கும். கடற்படை தொடர்பு மற்றும் போர் திறன்களை மையமாகக்கொண்ட இது, ஜப்பானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தும் மற்றும் இயங்குதன்மையை மேம்படுத்தும்.

14. அண்மையில், ஐநா பொதுச்சபையால், ‘சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டு’ என அறிவிக்கப்பட்ட ஆண்டு எது?

அ. 2024

ஆ. 2025

இ. 2026

ஈ. 2027

  • ஐநா பொதுச்சபையானது 2025ஆம் ஆண்டை, ‘சர்வதேச குவாண்டம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆண்டாக’ அறிவித்துள்ளது. 2024 ஜூன்.07 அன்று எடுக்கப்பட்ட இம்முடிவு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது, இளையோரின் ஈடுபாட்டை ஊக்குவிப்பது & குவாண்டம் அறிவியல் பயன்பாடுகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஆண்டு (2025) வெர்னர் ஹைசன்பெர்க்கின் அடிப்படை குவாண்டம் மெக்கானிக்ஸ் தாளின் நூற்றாண்டைக்குறிக்கிறது. கூடுதலாக, 2025ஆம் ஆண்டு கூட்டுறவு, அமைதி மற்றும் நம்பிக்கை மற்றும் பனிப் பாறை பாதுகாப்புக்காகவும் அறிவிக்கப்பட்டது; அதே நேரத்தில் 2024ஆம் ஆண்டு ஒட்டகங்களைக்கொண்டாடுகிறது.

15. அண்மையில், எந்த மாநிலத்தின் முதலமைச்சராக மோகன் சரண் மாஜி பதவியேற்றார்?

அ. ஒடிசா

ஆ. இமாச்சல பிரதேசம்

இ. மகாராஷ்டிரா

ஈ. கர்நாடகா

  • பாரதிய னதா ட்சியின் (BJP) மோகன் சரண் மாஜி ஒடிசாவின் முதலமைச்சராக 2024 ஜூன்.12 அன்று ஆளுநர் ரகுபர் தாஸ் பதவிப்பிரமாணம் செய்து வைக்க பதவியேற்றுக் கொண்டார். இந்தப் பதவியை வகிக்கும் முதல் பாஜக தலைவரும் மூன்றாவது பழங்குடியினரும் இவராவார். இரண்டு துணை முதலமைச்சர்களாக, கனக் வர்தன் சிங் தியோ மற்றும் பிரவதி பரிதா ஆகியோரும் பதவியேற்றனர். பிரதமர் நரேந்திர மோதி, அமித் ஷா, ஜே பி நட்டா மற்றும் ஒன்பது பாஜக மாநில முதலமைச்சர்கள் அவ்விழாவில் பங்கேற்றனர்.

16. ‘குழந்தைத் தொழிலாளர்களுக்கு எதிரான உலக நாள்’ அனுசரிக்கப்படுகிற தேதி எது?

அ. ஜூன்.11

ஆ. ஜூன்.12

இ. ஜூன்.13

ஈ. ஜூன்.14

  • குழந்தைத்தொழிலாளர் முறையை ஒழிப்பதில் கவனம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன்.12ஆம் தேதி உலக குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பால் 2002 இல் நிறுவப்பட்ட இந்த நாள், குழந்தைகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய முயற்சிகளை எடுத்துக்காட்டுகிறது. “Let’s act on our commitments: End Child Labour” என்பது நடப்பு 2024ஆம் ஆண்டில் வரும் இந்நாளுக்கானக் கருப்பொருளாகும். பன்னாட்டு தொழிலாளரமைப்பின், “மோசமான குழந்தைத்தொழிலாளர் முறைகள்” மாநாட்டின் 25ஆவது ஆண்டு நிறைவை இது குறிக்கிறது. பன்னாட்டு தொழிலாளரமைப்பின் தலைமையகம் சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் அமைந்துள்ளது.

17. அண்மையில், BRICS நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்ற இடம் எது?

அ. புனித பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா

ஆ. குவாங்சோ, சீனா

இ. நிஸ்னி நோவ்கோரோட், ரஷ்யா

ஈ. பெங்களூரு, இந்தியா

  • புதிய உறுப்பினர்களான எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடனான முதல் BRICS அமைச்சர்கள் அளவிலான கூட்டம், 2024 ஜூன்.10-11 அன்று ரஷ்யாவின் நிஸ்னி நோவ்கோரோடில் நடந்தது. BRICSஇன் தற்போதைய தலைமைப்பொறுப்பிலுள்ள ரஷ்யா, 2024 அக்டோபரில் 16ஆவது BRICS உச்சிமாநாட்டை நடத்துவதற்கு முன்னோட்டமாக இந்தக் கூட்டத்தை நடத்தியது. 2023 ஆகஸ்டில் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற 15ஆவது BRICS உச்சிமாநாட்டின்போது, புதிய உறுப்பு நாடுகளுக்கு கூட்டமைப்பில் சேர அழைப்பு விடுக்கப்பட்டது.

18. உலக புலம்பெயர்வு அறிக்கை மற்றும் புலம்பெயர்வு நல ஆண்டறிக்கையை வெளியிடுகிற அமைப்பு எது?

அ. புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு (IOM)

ஆ. பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு (ILO)

இ. உலக வங்கி

ஈ. UNICEF

  • யேமன் கடற்கரையில் படகு கவிழ்ந்ததில் குறைந்தது 49 புலம்பெயர்ந்தோர் இறந்தனர் என்றும் 140 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் ஐநா புலம்பெயர் நிறுவனம் ஜூன்.11 அன்று தெரிவித்துள்ளது. 1951ஆம் ஆண்டு நிறுவப்பட்டது மற்றும் ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டதுமான புலம்பெயர்வுக்கான பன்னாட்டு அமைப்பு, உலகின் பல்வேறு அரசாங்கங்களுக்கும் புலம்பெயர்ந்தோருக்கும் உதவுகிறது. 175 உறுப்புநாடுகளுடன், இது புலம்பெயர்வு நலம், அவசரகால நடவடிக்கைகள், புலம்பெயர்வு மேம்பாடு ஆகியவற்றில் கவனஞ்செலுத்துகிறது.

19. அண்மையில், “Raising Ambition, Accelerating Action: Towards Enhanced NDCs for Forests” என்ற தலைப்பில் ஓர் அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. ஐநா வளர்ச்சித் திட்டம் (UNDP)

ஆ. ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (UNEP)

இ. சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO)

ஈ. உலக வானிலை அமைப்பு (WMO)

  • ஐநா சுற்றுச் சூழல் திட்டத்தின், “Raising Ambition, Accelerating Action: Towards Enhanced NDCs for Forests” UNEP என்ற அறிக்கை தற்போதைய, தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளில் வனப்பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க இடைவெளிகளை எடுத்துக்காட்டுகிறது. 2019-2023 வரை, வெப்பமண்டல காடழிப்புச் செயல்பாடானது முதல் 20 நாடுகளில் ஆண்டுதோறும் 5.6 பில்லியன் டன்கள் CO2 வெளியாகக் காரணமானது. உழவு மற்றும் பலவீனமான நிலப்பயன்பாட்டுக் கொள்கைகள் காடழிப்புக்கான முதன்மை தூண்டுகோல்களாக உள்ளன.

20. 2024 – உலகளாவிய பாலின இடைவெளிக்குறியீட்டில் இந்தியாவின் தரநிலை என்ன?

அ. 123

ஆ. 132

இ. 111

ஈ. 129

  • உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளிக்குறியீட்டில் இந்தியா 129ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டது; ஐஸ்லாந்து முதலிடத்தைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. தெற்காசியாவில், வங்கதேசம், நேபாளம், இலங்கை மற்றும் பூட்டானைப் பின்தள்ளி இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. உலக அளவில் பாகிஸ்தான் கடைசி இடத்தில் உள்ளது.
  • பொருளாதார ரீதியாக, இந்தியா, வங்காளதேசம், சூடான், ஈரான், பாகிஸ்தான் மற்றும் மொராக்கோ ஆகியவற்றுடன் குறைந்த பாலின சமத்துவத்தை வெளிப்படுத்துகிறது. உலகளவில் 68.5 சதவீத இடைவெளியுடன், தற்போதைய வேகத்தில் முழு பாலின சமத்துவத்தை அடைய 134 ஆண்டுகள் ஆகும் என்று WEF மதிப்பிடுகிறது.

21. அண்மையில், எந்த வடகிழக்கு மாநிலத்தின் முதலமைச்சராக பேமா கந்து பதவியேற்றார்?

அ. அருணாச்சல பிரதேசம்

ஆ. அஸ்ஸாம்

இ. மணிப்பூர்

ஈ. மிசோரம்

  • இட்டாநகரில் உள்ள DK மாநில மாநாட்டு மையத்தில் 2024 ஜூன்.13 அன்று பேமா கந்து தொடர்ந்து மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேச மாநில முதலமைச்சராகப் பதவியேற்றார். பா. ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கை அடுத்த 5 ஆண்டுகளுக்கு அருணாச்சல பிரதேசத்தின் புதிய அரசாங்கத்திற்கு வழிகாட்டும் என்று அவர் அறிவித்தார்.

22. 2025இல் ஆடவர் ஜூனியர் ஹாக்கி உலகக்கோப்பையை நடத்தவுள்ள நாடு எது?

அ. ஜெர்மனி

ஆ. பிரான்ஸ்

இ. இந்தியா

ஈ. மலேசியா

  • பன்னாட்டு ஹாக்கி சம்மேளனம் (FIH) 2025 டிசம்பரில் 24 அணிகள் பங்கேற்கும் முதல் FIH ஹாக்கி ஆடவர் ஜூனியர் உலகக்கோப்பையை நடத்த இந்தியாவைத் தேர்ந்தெடுத்துள்ளது. இந்த முடிவு ஹாக்கியில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் பன்முகத்தன்மையை மேம்படுத்துவதற்கும் FIHஇன் உத்தியுடன் ஒத்துப்போகிறது.
  • FIH தலைவர் தயப் இக்ரம் மற்றும் ஹாக்கி இந்தியாவின் தலைவர் Dr திலிப் டிர்கி ஆகியோர் நிகழ்வின் முக்கியத்துவத்தையும், உலகளாவிய ஹாக்கி திறமைகளை வளர்ப்பதில் இந்தியாவின் அர்ப்பணிப்பையும் வலியுறுத்தினர். இதற்கு முன்பு மூன்று முறை போட்டிகளை நடத்தியுள்ள இந்தியா, இரண்டு முறை வென்றுள்ளது.

23. அண்மையில், ‘உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள்’ என்ற அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?

அ. உலக வங்கி

ஆ. UNEP

இ. UNDP

ஈ. ILO

  • உலக வங்கியின் 2024 ஜூன் – உலகளாவிய பொருளாதார வாய்ப்புகள் அறிக்கை, 2024-25க்கான இந்தியாவின் GDP வளர்ச்சிக்கணிப்பை ஜனவரியிலிருந்த 6.4%இல் இருந்து 6.6%ஆகத் திருத்தியுள்ளது. 2024-25இல் இந்தியா விரைவாக வளரும் மிகப்பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2025-26ஆம் ஆண்டின் முன்கணிப்பு 6.5%இல் இருந்து 6.7%ஆக அதிகரித்துள்ளது. இந்தியப் பொருளாதாரம் 2023-24இல் NSOஇன்படி 8.2% வளர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி அதன் 2024-25 கணிப்பை 7.2%ஆக உயர்த்தியது.

24. அண்மையில், இராணுவத்தின் அடுத்த தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட்டவர் யார்?

அ. முகேஷ் சாதா

ஆ. உபேந்திர திவேதி

இ. தீரேந்திர சிங்

ஈ. மஞ்சித் குமார்

  • Lt.Gen உபேந்திர திவேதி, ஜெனரல் மனோஜ் சி பாண்டேவுக்குப்பிறகு, ராணுவத்தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 1964 ஜூலை.01இல் பிறந்த அவர், 1984இல் காலாட்படையில் (ஜம்மு & காஷ்மீர் ரைபிள்ஸ்) சேர்ந்தார். ஏறக்குறைய 40 ஆண்டுகால சேவையுடன், காலாட்படையின் தலைமை இயக்குநர் மற்றும் GOC-in-C வட கட்டளைபோன்ற பதவிகளை வகித்துள்ளார்.

செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்

1. லோக் ஆயுக்தா தலைவராக மு இராஜாராம் நியமனம்.

தமிழ்நாடு லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவராக மு. இராஜாராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை மனிதவள மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ளது. லோக் ஆயுக்தா அமைப்பின் தலைவர் மற்றும் நீதித்துறைசாரா இரு உறுப்பினர்களை நியமனஞ்செய்வதற்கான தேர்வுக்குழு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்டது.

2. 2030ஆம் ஆண்டுக்குள் காற்றாலைமூலம் 500 கிகாவாட் (GW) மின்னுற்பத்தி செய்ய இலக்கு.

இந்தியாவில் 2030-க்குள் காற்றாலைமூலம் 500 GW மின்னுற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்படுள்ளதாக தேசிய காற்றாலைகள் நிறுவன முன்னாள் பொது இயக்குநர் தெரிவித்தார்.

3. பழங்கள், காய்களின் தரம் அதிகரிக்க மெத்தைலோ பாக்டீரியாவை பயன்படுத்தலாம்: வேளாண்துறை தகவல்.

மெத்தைலோ பாக்டீரியாவை பயன்படுத்துவதன்மூலம் பழங்கள், காய்கள் மற்றும் விதைகளின் தரம் அதிகரிக்கும் என தமிழ்நாடு வேளாண் துறை தெரிவித்துள்ளது. மெத்தைலோ பாக்டீரியாவை பயண்படுத்துவதன்மூலம் விதை முளைப்புத்திறன் மற்றும் நாற்றுக்களின் வளர்ச்சி அதிகரிக்கும். பூக்கும் காலம் மற்றும் காய்களின் அறுவடைக்காலம் குறையும். பழங்கள், காய்கள், விதைகளின் நிறம், தரம் அதிரிக்கும். அதேபோல், பயிர்களின் விளைச்சல் 10 சதவீதம் அதிகரிப்பதுடன், வறட்சியைத் தாங்கும் திறனைப் பயிர்களுக்கு அளிக்கிறது.

4. 40 வயதுக்கு மேற்பட்டோர் ஓட்டுநர் உரிமம் பெற / புதுப்பிக்க புது நிபந்தனை!

மத்திய மோட்டார் வாகன விதி எண்: 5இன்படி 40 வயதுக்கும் மேற்பட்டோர் பதிவுபெற்ற மருத்துவரிடம் மருத்துவச் சான்று பெற்ற பின்னரே புதிய ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கோ அல்லது பழைய ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கவோ இயலும்.

5. மாரியப்பன் தங்கவேலுவுக்கு `75 லட்சம் ஊக்கத்தொகை!!

பாரா தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலுவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் பாராட்டி, `75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார். மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பானில் கடந்த மாதம் நடைபெற்றது. இதில், ஆண்களுக்கான உயரந்தாண்டல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!