Tnpsc Current Affairs in Tamil – 11th & 12th May 2024
1. உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் போக்குவரத்துப் பூங்கா திறக்கப்பட்ட இடம் எது?
அ. பிரயாக்ராஜ்
ஆ. அயோத்தி
இ. சஹரன்பூர்
ஈ. வாரணாசி
- உத்தர பிரதேச மாநிலத்தின் முதல் போக்குவரத்துப் பூங்காவானது பிரயாக்ராஜ் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் வளர்ச்சி ஆணையத்தால் திறக்கப்பட்டது. `90 இலட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இது ஒரு திரையரங்கு, எண்ணிம விளையாட்டுக்கள், சிறார்களுக்கான ஊஞ்சல் மற்றும் சிறார்கள் மற்றும் பெரியவர்களுக்கு மின்சார வாகனங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பொழுதுபோக்கு நடவடிக்கைகளை வழங்கும் அதே சமயத்தில் போக்குவரத்து விதிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து கல்வி கற்பிப்பதை இந்தப் பூங்கா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2. அண்மையில், இந்திய இராணுவத்தின் கார்கா படைகளும் இந்திய வான்படையும் இணைந்து கீழ்க்காணும் எந்த மாநிலத்தில், ‘ககன் சக்தி-II’ என்ற கூட்டுப் பயிற்சியை நடத்தின?
அ. ஹரியானா
ஆ. பஞ்சாப்
இ. குஜராத்
ஈ. இராஜஸ்தான்
- இந்திய இராணுவத்தின் கார்கா படைகள், பஞ்சாபில் மேற்குப் படைப்பிரிவுடனும் இந்திய விமானப்படையுடனும் இணைந்து, ‘ககன் ஸ்ட்ரைக்-II’ என்ற 3 நாள் கூட்டுப் பயிற்சியை நடத்தியது. அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் மற்றும் ஆளில்லா விமானங்கள்போன்றவற்றைப் பயன்படுத்தி, தாக்குதல் ஹெலிகாப்டர்களின் பங்கை சரிபார்ப்பதில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்தியது. இது நெறிமுறைகளைச் செம்மைப்படுத்துவது மற்றும் தரைவழி தாக்குதல்களுக்கான ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.
3. அண்மையில், இந்தியா மற்றும் பூட்டான் இடையே 5ஆவது சுங்கக்குழு கூட்டம் நடைபெற்ற இடம் எது?
அ. லடாக்
ஆ. புது தில்லி
இ. ஜெய்ப்பூர்
ஈ. போபால்
- இந்தியாவிற்கும் பூடானுக்கும் இடையிலான 5ஆவது சுங்கக்குழுவின் கூட்டம் மே.06-07இல் லடாக்கின் லேயில் கூடியது. புதிய நிலவழி சுங்க நிலையங்கள், வணிக வழிகள், உள்கட்டமைப்பு, டிஜிட்டல் மயமாக்கல், கடத்தல் தடுப்பு, மற்றும் ஒருங்கிணைந்த எல்லைதாண்டிய மேலாண்மை போன்ற இருதரப்பு விஷயங்களை மையமாகக் கொண்ட விவாதங்கள், இருநாட்டு அதிகாரிகளால் கூட்டாக நடத்தப்பட்டன. பணிமனைகள் மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்கள் மூலம் திறன்மேம்பாடு மற்றும் எல்லைதாண்டிய வர்த்தக முன்முயற்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவை பூடான் போற்றியதோடு, தற்போதைய ஒத்துழைப்புக்கு நன்றியும் தெரிவித்தது.
4. வைடல் பரிசோதனையுடன் தொடர்புடைய நோய் எது?
அ. காசநோய்
ஆ. மலேரியா
இ. டெங்கு
ஈ. டைபாய்டு
- சால்மோனெல்லா டைஃபியால் ஏற்படும் டைபாய்டு காய்ச்சலைக் கண்டறிவதில் முதன்மையான பரிசோதனையாக உள்ள வைடல் பரிசோதனையின் துல்லியமின்மை காரணமாக இந்த நோய்க்கு எதிரான இந்தியாவின் போராட்டம் சிக்கலில் உள்ளது. டைபாய்டு அறிகுறிகளுடன் கூடிய பிற நோய்களையும் கண்டறியும் துல்லியமான பரிசோதனை முறைக்குத் தேவை ஏற்பட்டுள்ளது. 1800-களின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட இந்த நோயறி பரிசோதனை முறை நம்பகத்தன்மையைக் கொண்டிருக்கவில்லை என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தெரிவித்துள்ளது.
5. அண்மையில், உழவு & உழவர்கள் நல அமைச்சகமானது கீழ்க்காணும் எந்த இடத்தில் கிருஷி ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை தொடக்கியது?
அ. புது தில்லி
ஆ. ஹைதராபாத்
இ. சென்னை
ஈ. லக்னோ
- உழவு மற்றும் உழவர்கள் நல அமைச்சகம் புது தில்லியில் உள்ள கிருஷி பவனில் கிருஷி ICCCஐத் தொடக்கியது. இந்த முன்னெடுப்பு AI, தொலையுணரி மற்றும் GIS போன்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வேளாண் சார்ந்த முடிவுகளை எடுக்கும். இது எண்ம முறையிலான பயிர் கணக்கெடுப்பு மற்றும் வேளாண் புள்ளிவிவரங்களுக்கான ஒருங்கிணைந்த வலைதளம்போன்ற மூலங்களிலிருந்து புவிசார் தரவுகளை ஒருங்கிணைக்கிறது. கிருஷி ICCC ஆனது பண்ணை துறையை திறம்பட கண்காணிக்கவும், உற்பத்தித்திறன் மற்றும் சந்தை நுண்ணறிவை மேம்படுத்துவதையும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
6. அண்மையில், ‘Amplifying the Global Value of Earth Observation’ என்ற தலைப்பிலான அறிக்கையை வெளியிட்ட அமைப்பு எது?
அ. பன்னாட்டு செலாவணி நிதியம்
ஆ. உலக வங்கி
இ. உலக பொருளாதார மன்றம்
ஈ. உலக வானிலை அமைப்பு
- 2023-2030 வரையிலான உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) $3.8 டிரில்லியன் பங்களிப்பை மதிப்பிட்டு, புவி கூர்நோக்கு (EO) தொழில்நுட்பங்களின் பொருளாதாரத் திறனை உயர்த்தி, ‘Amplifying the Global Value of Earth Observation’ என்ற தலைப்பில் உலக பொருளாதார மன்றத்தின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
- EO ஆனது இயற்கையாய் இருக்கவேண்டிய சூழலின் தரவுகளை உள்ளடக்கி, அதுகுறித்த நுண்ணறிவுகளை அளிக்கிறது. இதுபோன்ற துல்லியமான நுட்பங்களால் விவசாயம் பயன்பெறுகிறது. ஆற்றல் துறைகள், முன்னறிவிப்பு மற்றும் செயல்பாட்டு மேலாண்மைக்கு EO-ஐப் பயன்படுத்துகின்றன. கனிம ஆய்வுகள் குறித்த நுண்ணறிவுகளை சுரங்கப் பணிகள் துறை பெறுகிறது. EO காலநிலை முயற்சிகளுக்கும் உதவுகிறது.
7. 2024 – உலகாலவிய மின்சார திறனாய்வு அறிக்கையின்படி, இந்தியா எந்நாட்டைப் பின்னுக்குத்தள்ளி 3ஆவது மிகப்பெரிய சூரிய ஆற்றல் உற்பத்தியாளராக உருவாகியுள்ளது?
அ. ஜப்பான்
ஆ. சீனா
இ. பாகிஸ்தான்
ஈ. பிரான்ஸ்
- 2023ஆம் ஆண்டில், இந்தியா, ஜப்பானை விஞ்சி உலகின் மூன்றாவது மிகப்பெரிய சூரிய மின்னாற்றல் உற்பத்தி செய்யும் நாடாக மாறியது என்று எம்பர் அறிக்கை கூறுகிறது. உலக மின்சாரத்தில் சூரிய ஆற்றல் 5.5%ஆக உள்ளது; அதில் 5.8%ஐ இந்தியா உற்பத்தி செய்கிறது. சூரிய மின்னாற்றலின் உலகளாவிய உற்பத்தி 2015இல் இருந்து ஆறு மடங்குக்கு மேல் விரிவடைந்துள்ளது.
- 2030ஆம் ஆண்டளவில், தட்பவெப்பநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கு முக்கியமான உலகளாவிய மின் ஆற்றல் தேவைக்கு சூரிய மின்னாற்றல் 22% பங்களிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்தியா 2030-க்குள் 50% புதைபடிவமற்ற எரிபொருள் பயன்பாட்டுக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
8. அண்மையில் இந்திய நீர்நிலைகளில், இரண்டு புதிய வகை முரல் மீன்களை கண்டறிந்த நிறுவனம் எது?
அ. மத்திய கடல்சார் ஆராய்ச்சி நிறுவனம்
ஆ. மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம்
இ. மத்திய கடல்சார் உயிரியல் ஆராய்ச்சி நிறுவனம்
ஈ. மத்திய கடல்சார் சூழலியல் ஆராய்ச்சி நிறுவனம்
- மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் (CMFRI) ஆராய்ச்சியாளர்கள் இந்திய கடற்பகுதியில் இரண்டு புதிய முரல் மீன் இனங்களை கண்டறிந்துள்ளனர். பொதுவாக மித மற்றும் வெப்பமண்டல பகுதிகளில் காணப்படுகின்ற இந்தக் கடல்வாழ் உயிரினங்கள், வெண்ணிற உடலமைப்பைக் கொண்டுள்ளன. மாமிச உண்ணிகளான அவை, சிறிய மீன்கள், ஓட்டுடலிகள் மற்றும் தலைக்காலிகளை வேட்டையாடி உண்கின்றன.
9. ‘ஐயத்திற்குரிய வாக்காளர்’ அல்லது ‘D-வாக்காளர்’ என்ற சொல் கீழ்க்காணும் எந்த மாநிலத்தில் முதன்மையாகப் பயன்படுத்தப்பட்டது?
அ. மணிப்பூர்
ஆ. அஸ்ஸாம்
இ. மிசோரம்
ஈ. நாகாலாந்து
- சமீபத்திய மக்களவைத் தேர்தலின்போது, அசாமில், ‘D-வாக்காளர்கள்’ ஒரு முக்கியமான பிரச்சினையாக நிலவியது. அஸ்ஸாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை உருவாக்கும்போது தன்னுடைய குடியுரிமை நிலை கேள்விக்குரியான நிலையில் வைத்திருந்தவர், ‘ஐயத்திற்குரிய வாக்காளர்’ அல்லது ‘D-வாக்காளர்’ என அழைக்கப்படுகிறார். சட்டப்பூர்வ தெளிவின்மை இப்பதத்தைச் சூழ்ந்துள்ளது. D-வாக்காளர்கள் தங்கள் குடியுரிமை நிலை தீர்மானிக்கப்படும் வரை வாக்களிக்கவோ அல்லது பதவிக்கு நிற்கவோ தகுதியற்றவர்கள்.
10. இராணுவ கமாண்டர்களின் ஆறாவது மாநாடு நடைபெற்ற இடம் எது?
அ. இந்தூர்
ஆ. வாரணாசி
இ. புனே
ஈ. ஜெய்சால்மர்
- இராணுவ கமாண்டர்களின் ஆறாவது மாநாடு புனேயில் உள்ள இராணுவ தொழில்நுட்ப நிறுவனத்தில் 2024 மே. 07 அன்று நடைபெற்றது. ஆயுதப்படை பயிற்சி நிறுவனங்கள், போர் கல்லூரிகளின் தளபதிகள், ஆயுதப்படைகளின் பிற உயரதிகாரிகள் இதில் கலந்துகொண்டனர். இந்திய ஆயுதப்படைகளில் எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்க எதிர்கால பாதுகாப்பு உத்திகளுக்கான வழிமுறையை வகுப்பது குறித்து விவாதித்தனர். தங்களுடைய நுண்ணறிவுகள், நிறுவனங்களில் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றைப் பகிர்ந்துகொண்டனர். எதிர்காலத்திற்குத் தயாராகவுள்ள படைகளை உருவாக்குவதற்கான திட்டமிடல் குறித்து விவாதித்தனர்.
11. அண்மையில், ‘வடிவமைப்பு மற்றும் தொழில்முனைவு குறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை’ அறிமுகப்படுத்திய அமைச்சகம் எது?
அ. கல்வி அமைச்சகம்
ஆ. நிதி அமைச்சகம்
இ. பாதுகாப்பு அமைச்சகம்
ஈ. உள்துறை அமைச்சகம்
- கல்வி அமைச்சகத்தின் உயர்கல்வித் துறையின் செயலாளரான சஞ்சய் மூர்த்தி, “வடிவமைப்பு மற்றும் தொழில் முனைவுகுறித்த திறன் மேம்பாட்டுத் திட்டத்தை’ தொடக்கி வைத்தார். இத்திட்டம், தொழிற்துறை-கல்வி ஒத்துழைப்பு மூலம், மாணாக்கரிடையே சிக்கலுக்குத் தீர்வுகாணும் திறன் & தொழில்முனைவோர் மனநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைப்பு, உற்பத்தி மையம், மாளவியா ஆசிரியர் பயிற்சி நிறுவனம்மூலம் 30 உயர்கல்வி நிறுவனங்கள் இத்திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
12. ஆசிய ஓபன் பிக்கிள்பால் சாம்பியன்ஷிப்-2024இல், இந்தியா, எத்தனை பதக்கங்களை வென்றது?
அ. 6
ஆ. 5
இ. 4
ஈ. 2
- வியட்நாமில் நடைபெற்ற ஆசிய ஓபன் பிக்கிள்பால் சாம்பியன்ஷிப்பில் இந்தியா மூன்று தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப்பதக்கங்களை வென்றது. சச்சின் பக்வா மற்றும் பிரியங்கா சாப்ரா ஆகியோர் 35+ இடைநிலை கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றனர். மகளிர் இரட்டையர் பிரிவில் இஷா லக்கானி மற்றும் பெய் சுவான் காவ் ஜோடியும், ஆடவர் இரட்டையர் பிரிவில் அனிகேத் படேல் மற்றும் ரோகித் பாட்டீல் ஜோடியும் தங்கமும் வென்றனர்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. வெள்ள மேலாண்மை: தமிழ்நாட்டு அதிகாரிகள் ஜப்பான் பயணம்.
சென்னையில் வெள்ள மேலாண்மை குறித்த பெருந்திட்டத்தை உருவாக்க, தமிழ்நாட்டு அதிகாரிகள் 4 பேர் ஜப்பான் நாட்டின் டோக்கியோவுக்குச் செல்லவுள்ளனர். சென்னையில் உள்ள நகரமயமாக்கப்பட்ட ஆற்றுப்படுகைகளில் விரிவான வெள்ளக்கட்டுப்பாட்டு பெருந்திட்டத்தைத் தயார்செய்வதுகுறித்து அறிந்துகொள்வதற்காக அவர்கள் நான்கு பேரும் டோக்கியோ செல்கின்றனர்.
2. மே.14 வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் வானில் தெரியும்!
சென்னை உள்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மே.14ஆம் தேதி வரை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை பூமியில் இருந்தபடியே வெறும் கண்களால் பாரக்க முடியும் என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (NASA) தெரிவித்துள்ளது. சூரிய ஒளி படும்போது இந்த விண்வெளி மையம் ஒளிர்வதாகவும் அதனால் மாலை / அதிகாலை நேரங்களில் தென்படுவதாகவும் NASA குறிப்பிடுகிறது. விண்வெளி ஆய்வுக்காக உருவாக்கப்பட்ட இந்த விண்வெளி மையம் 2031இல் ஓய்வு பெற்றுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
3. பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து: ஐநாஇல் தீர்மானம் நிறைவேற்றம்.
பாலஸ்தீனத்தை ஐநாஇன் முழு உறுப்பு நாடாக்க வழிவகுக்கும் தீர்மானம் ஐநா பொதுச்சபையில் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட பொதுச்சபையில் அந்தத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், தீர்மானத்துக்கு ஆதரவாக 143 நாடுகள் வாக்களித்தன. 25 நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன. இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட ஒன்பது நாடுகள் தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன. மிகப் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் தீர்மானத்தை ஆதரித்ததால் அது பொதுச்சபையில் நிறைவேற்றப்பட்டது.
பாலஸ்தீனத்தை முழு ஐநா உறுப்பினராக்கும் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்தது. பாலத்தீன மக்களின் பிரதநிதியாக PLO அமைப்பை கடந்த 1974ஆம் ஆண்டு இந்தியா அங்கீகரித்து. அத்தகைய அங்கீகாரத்தை வழங்கிய முதல் அரபு அல்லாத நாடு இந்தியாவாகும். அதேபோல், 1988இலும், 1996இலும் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்த முதல் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். அந்தக் கொள்கையின் தொடர்ச்சியாகவே, இத்தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததாகக் கூறப்படுகிறது.
4. 2024 மே.12 (மே மாதத்தில் வரும் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) – உலக அன்னையர் நாள்.
கருப்பொருள்: Celebrating Motherhood: A Timeless Bond.
மே.12 – உலக செவிலியர் நாள்.
கருப்பொருள்: Our Nurses. Our Future. The economic power of care.