Tnpsc Current Affairs in Tamil – 10th November 2023
1. உலக சுகாதார அமைப்பின் 2023-உலகளாவிய காசநோய் அறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் உலகில் அதிக எண்ணிக்கையிலான காசநோயாளிகள் உள்ள நாடு எது?
அ. சீனா
ஆ. இந்தியா 🗹
இ. இந்தோனேசியா
ஈ. எத்தியோப்பியா
- 2022ஆம் ஆண்டில் உலகிலேயே இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான காசநோயாளிகள் உள்ளனர். இது மொத்தத்தில் 27 சதவீதமாகும். இத்தகவல் உலக சுகாதார அமைப்பின் (WHO) 2023 – உலகளாவிய காசநோய் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிக்கையின்படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் 2.8 மில்லியன் (28.2 இலட்சம்) பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளானர்; இதன் காரணமாக நிகழ்ந்த இறப்புகளின் விகிதம் 12 சதவீதமாக உள்ளது. 192 நாடுகளின் தரவுகளைக் கொண்டுள்ள இந்த அறிக்கை, கடந்த 2022ஆம் ஆண்டில் 7.5 மில்லியன் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறிந்துள்ளது.
2. “உணவு மற்றும் உழவின் நிலை” என்பது கீழ்காணும் எந்நிறுவனத்தால் வெளியிடப்படும் ஓர் அறிக்கையாகும்?
அ. உலக வங்கி
ஆ. ADB
இ. FAO 🗹
ஈ. IMF
- உணவு மற்றும் உழவு அமைப்பானது (FAO) அதன் முதன்மை அறிக்கையான, “உணவு மற்றும் உழவின் நிலை – State of Food and Agriculture (SOFA)” என்ற அறிக்கையை வெளியிட்டது. தற்போதைய வேளாண் உணவு முறைகள் ஊட்டச்சத்தை அளித்து பொருளாதாரத்தை நிலைநிறுத்தினாலும், அவை நலம் மற்றும் சுற்றுச்சூழலில் பெரும் மறைமுக செலவுகளை ஏற்படுத்துகின்றன; அது ஆண்டுக்கு குறைந்தது $10 டிரில்லியன்களுக்குச் சமமாக உள்ளது. 154 நாடுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கையின் 2023 பதிப்பின்படி, இந்த எண்ணிக்கை உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 10 சதவீதமாகும்.
3. உற்பத்தி இடைவெளி அறிக்கையை வெளியிடும் நிறுவனம் எது?
அ. UNEP 🗹
ஆ. IMF
இ. FAO
ஈ. AIIB
- COP28 காலநிலை மாநாட்டை முன்னிட்டு ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) உற்பத்தி இடைவெளி அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தும் முக்கியமான இலக்கு உட்பட, 2015ஆம் ஆண்டு பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள காலநிலை இலக்குகளுக்குள் இருக்க வேண்டிய அளவைவிட, அடுத்த ஏழு ஆண்டுகளில் உலகளாவிய புதைபடிவ எரிபொருள் உற்பத்தி இருமடங்கு அதிகமாக இருக்கும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
4. தேசிய கூட்டுறவு கரிம நிறுவனத்தால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட பிராண்டின் பெயர் என்ன?
அ. நமோ ஆர்கானிக்ஸ்
ஆ. பாரத் ஆர்கானிக்ஸ் 🗹
இ. இந்தியா ஃப்ரெஷ்
ஈ. சுதேசி ஆர்கானிக்ஸ்
- புதிதாக தொடங்கப்பட்ட தேசிய கூட்டுறவு கரிம நிறுவனத்தின் ‘பாரத் ஆர்கானிக்ஸ்’ பிராண்டை மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா தொடக்கிவைத்தார். இது 2023 டிசம்பருக்குள் சந்தையில் இருபது தயாரிப்புகளை கொண்டுவரும். தேசிய கூட்டுறவு கரிம நிறுவனமானது எந்தவொரு பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையில் ஈட்டப்படும் லாபத்தில் 50 சதவீதத்தை நேரடியாக உழவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தும். மீதம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பங்களிக்கப்படும்.
5. உலக உள்ளூர் உற்பத்தி மன்றம் என்பது கீழ்காணும் எந்த நிறுவனத்தின் முன்னெடுப்பாகும்?
அ. WEF
ஆ. UNDP
இ. உலக வங்கி
ஈ. WHO 🗹
- இரண்டாவது உலக உள்ளூர் உற்பத்தி மன்றத்தின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்தியக்குழு நெதர்லாந்திற்கு சென்றுள்ளது. உலக உள்ளூர் உற்பத்தி மன்றம் என்பது மருந்துகள் மற்றும் பிற சுகாதார தொழில்நுட்பங்களுக்கான அணுகலை அதிகரிக்கும் நோக்கோடு உலக சுகாதார அமைப்பின் முயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு தளமாகும். இந்தியாவும் நெதர்லாந்தும் மருத்துவ தயாரிப்புகளை ஒழுங்குபடுத்துதல் மற்றும் மருத்துவப் பொருட்களின் தரத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றில் கூட்டிணைவதற்கான ஓர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
6. உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் ஆய்வின்படி, 2022ஆம் ஆண்டில் காப்புரிமை தாக்கல் செய்வதில் முதலிடத்தில் உள்ள நாடு எது?
அ. சீனா
ஆ. இந்தியா 🗹
இ. ஆஸ்திரேலியா
ஈ. அமெரிக்கா
- உலக அறிவுசார் சொத்து அமைப்பால் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, இந்தியாவிலிருந்து காப்புரிமை கோரி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை கடந்த 2022ஆம் ஆண்டைவிட 31.6% அதிகரித்துள்ளது. கடந்த 2022இல் 55,718 காப்புரிமை விண்ணப்பங்களுடன் சுவிட்சர்லாந்து (6.1 சதவீதம்) முதலிடத்திலும், சீனா (3.1), ஆஸ்திரியா (2.5%) மற்றும் இங்கிலாந்து (2.5%) ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.
7. எரிசக்தி பாதுகாப்பு கட்டிடக் குறியீட்டுடன் தொடர்புடைய நாடு எது?
அ. சீனா
ஆ. ஜப்பான்
இ. இந்தியா 🗹
ஈ. இங்கிலாந்து
- பாரிசைச் சேர்ந்த பன்னாட்டு எரிசக்தி முகமையானது அதன் உலக எரிசக்தி கண்ணோட்டம்-2023 அறிக்கையில், 2017ஆம் ஆண்டைய இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு கட்டிடக் குறியீடு (ECBC), குறிப்பாக வணிக கட்டிடங்களை நோக்கமாகக்கொண்ட அக்குறியீடு, கட்டிட உட்கட்டமைப்பு பின்தங்கியுள்ள பிற வளரும் பொருளாதாரங்களிலிருந்து வேறுபடுவதாக கூறியுள்ளது. ECBC ஆனது 2007ஆம் ஆண்டில், மின்துறை அமைச்சகத்தின் ஒருபகுதியான BEEA மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது; 2017ஆம் ஆண்டில் அது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது, இந்தியாவில் உள்ள 23 மாநிலங்கள் ECBCஉடன் இணங்குவதற்கான விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளன.
8. புதைபடிவ எரிபொருட்கள் எரிக்கப்படும்போது ஏற்படும் உமிழ்வுகளுக்குப் பெயர் என்ன?
அ. உண்மையான உமிழ்வுகள்
ஆ. தணிக்கப்படாத உமிழ்வுகள் 🗹
இ. அசல் உமிழ்வுகள்
ஈ. வடிகட்டப்படாத உமிழ்வுகள்
- நவம்பர் மாதத்தின் பிற்பகுதியில் துபாயில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள COP28 காலநிலை உச்சிமாநாட்டிற்கு உலக நாடுகள் கூடும்போது, புதைபடிவ எரிபொருட்களிலிருந்து முற்றாக மாறுவதை விரைவுபடுத்துவதற்கான அவர்களின் நோக்கம், “தணிக்கப்படாத” என்ற சொல்லை மையமாகக்கொண்ட விவாதங்களில் இருக்கும். புதைபடிவ எரிபொரு -ட்கள் எரிக்கப்படும்போது “தணிக்கப்படாத” உமிழ்வுகள் ஏற்படுகின்றன. அவை வளிமண்டலத்தில் அப்படியே சென்று சேர்க்கின்றன; அது புவி வெப்பமடைதலில் பெரும் பங்களிக்கிறது.
9. WHO-ILOஇன் அறிக்கையின்படி, மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயால் நிகழும் 3இல் 1 இறப்பானது கீழ்காணும் எந்தக் காரணியால் ஏற்படுகிறது?
அ. கைபேசிகளைப் பயன்படுத்துதல்
ஆ. நேரடி சூரியவொளியில் பணிபுரிதல் 🗹
இ. புகைபிடித்தல்
ஈ. மது அருந்துதல்
- உலக சுகாதார அமைப்பு & பன்னாட்டு தொழிலாளர் அமைப்பு ஆகியவற்றின் கூட்டு மதிப்பீடுகளின்படி, மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயால் நிகழும் 3இல் 1 இறப்பானது நேரடி சூரிய வெளிச்சத்தின் கீழ் வேலை செய்வதால் ஏற்படுகிறது. இந்தக் கடுமையான பணியிட இடரையும், அதனால் ஏற்படும் தொழிலாளர்களின் உயிரிழப்பையும் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த மதிப்பீடுகளின்படி, 2019இல் மட்டும், 183 நாடுகளில் கிட்டத்தட்ட 19,000 பேர் நேரடி சூரிய வெளிச்சத்தில் வேலைசெய்ததால் மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயால் இறந்துள்ளனர். அதில் பெரும்பான்மையானவர்கள் (65%) ஆண்களாவர்.
10. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற பூசா-44 என்பது கீழ்காணும் எந்தப் பயிர் வகையைச் சேர்ந்ததாகும்?
அ. பருத்தி
ஆ. கோதுமை
இ. அரிசி 🗹
ஈ. கரும்பு
- பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநில அரசுகள் பயிர்க்கழிவுகளை எரிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் பெரும்பாலும் பயிரிடப்படும் ஒரு குறிப்பிட்ட வகை நெல், தேசியத் தலைநகர் பிராந்தியத்தில் ஏற்படும் காற்றுமாசுப் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக அமைவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. பூசா-44 ரகம் அடுத்த ஆண்டு முதல் தடை செய்யப்படும் என்று பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் சிங் மான் முன்னரே தெரிவித்திருந்தார்.
11. மத்திய மற்றும் கிழக்கு வெப்பமண்டல பசிபிக் பெருங்கடலில் கடல்மேற்பரப்பு வெப்பமடைவதைக் குறிக்கும் சொல் எது?
அ. எல் நினொ 🗹
ஆ. லா நினா
இ. கண்ட மாதிரி
ஈ. பருவமழை மாதிரி
- உலக வானிலை அமைப்பானது (WMO) தற்போதைய எல் நினோ வானிலை முறை குறைந்தபட்சம் 2024 ஏப்ரல் வரை நீடிக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த நீட்டிக்கப்பட்ட கால அளவு ஓர் ஆண்டில் வெப்பநிலை அதிகரிப்பதற்கு பங்களிக்கிறது. WMOஇன் கூற்றுப்படி, இயற்கையாக நிகழும் இந்த நிகழ்வு வடக்கு அரைக்கோளத்தின் குளிர்காலம் முழுவதும் நீடிப்பதற்கான 90% வாய்ப்பு உள்ளது.
12. வானியலாளர்கள், கீழ்காணும் எந்த வான்பொருளில் அணு ஆக்ஸிஜனின் தனித்துவமான அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளனர்?
அ. திங்கள்
ஆ. வெள்ளி 🗹
இ. செவ்வாய்
ஈ. புதன்
- வானியலாளர்கள், வெள்ளிக்கோளின் வளிமண்டலத்தை முழுமையாக ஆய்வுசெய்ததைத் தொடர்ந்து, அதன் தீங்கு விளைக்கும் மேகப்பரப்புக்கு மேலே அமைந்துள்ள கோளின் அடிப்படை விண்மீன் பகுதிக்குள் அணு ஆக்ஸிஜனின் தனித்துவமான அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளனர். இந்த ஆக்ஸிஜனின் கண்டுபிடிப்பு வெள்ளிக் கோளின் வளிமண்டலத்தில் உள்ள சிக்கலான இயக்கவியல் மற்றும் சுழற்சிமுறைகள் பற்றிய நுண்ணறிவுகளை வழங்கும்.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. தன்தேராஸ் பண்டிகை.
ஆயுர்வேதத்தின் முழுமுதற்கடவுளான தன்வந்திரி பகவானை வழிபடுவது தன்தேராஸ் பண்டிகையாகும். தீபாவளி திருநாளை முன்னிட்டு, தன்தேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்பண்டிகை நாளானது, மத்திய ஆயுஷ் அமைச்சகத்தால் தேசிய ஆயுர்வேத நாளாக கடந்த 2016இல் அறிவிக்கப்பட்டு, ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
2. சிறு சேமிப்பு திட்டங்களின் விதிகளில் தளர்வு: மத்திய அரசு.
மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டத்தில் இணைய விருப்பும் தனிநபர், ஓய்வூதிய பலன்களைப் பெற்ற நாளில் இருந்து கணக்கு தொடங்க வழங்கப்பட்ட ஒருமாதகால அவகாசம் 3 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அத்தகைய கணக்கில், வைப்புத்தொகை முதிர்வு தேதி அல்லது நீட்டிக்கப்பட்ட முதிர்வு தேதியில் திட்டத்துக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள விகிதத்தில் வட்டிசெலுத்தப்படும்.
தேசிய சேமிப்பு கால வைப்பு திட்டம் மற்றும் பொது வருங்கால வைப்புநிதி கணக்குகளை முதிர்வு காலத்துக்கு முன்கூட்டியே முடித்துக்கொள்வது தொடர்பாக சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஐந்தாண்டு காலத்துக்கு வைப்பு வைக்கப்பட்ட தொகையானது, கணக்கு தொடங்கிய நாளிலிருந்து 4 ஆண்டுகள் கழித்து முன்கூட்டியே திரும்பப்பெறப்பட்டால், அஞ்சலக சேமிப்பு கணக்குக்கு பொருந்தும் விகிதத்தில் வட்டி வழங்கப்படும்.
சிறுசேமிப்பு திட்டங்கள் என்பது மத்திய நிதியமைச்சின்கீழ் பொருளாதார விவகாரங்கள் துறையால் நிர்வகிக்கப்படும் முதலீட்டு வழிகள் ஆகும். தொடர்வைப்பு, பொது வருங்கால வைப்பு நிதி, செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண்கள் நல சேமிப்புத்திட்டம், விவசாயி வளர்ச்சி ஆவணம், தேசிய சேமிப்பு சான்றிதழ் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் உட்பட 9 சிறு சேமிப்பு திட்டங்களை அஞ்சலக, வங்கி சேவைகள்மூலம் மத்திய அரசு வழங்கி வருகிறது.
3. 50 பாரத் கௌரவ் ரெயில்கள்மூலம் `34 கோடி வருவாய்: தெற்கு ரெயில்வே
இந்தியாவின் கலாசார, பாரம்பரியமிக்க சுற்றுலா, புனித தலங்களை இணைக்கும் வகையில், ‘பாரத் கௌரவ் ரயில்’ எனும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 2021 நவ.23ஆம் தேதி இந்த சிறப்பு ரயில் திட்டத்தை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தியது. தெற்கு ரயில்வேயில் இதன் முதல்சேவை கோவை முதல் சாய்நகர் சீரடிக்கு கடந்த ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி இயக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 415 நாள்களில் 50 பாரத் கௌரவ் சிறப்பு ரயில்கள் தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்பட்டுள்ளன.
நிகழாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 50ஆம் பாரத் கௌரவ் ரயில் கொச்சுவேலியிலிருந்து பிரயாக்ராஜ், வாரணாசிக்கு ‘கங்கா ஸ்னானயாத்ரா’ என்னும் பெயரில் இயக்கப்பட்டது. தற்போது தெற்கு ரயில்வேயுடன் நான்கு நிறுவனங்கள் இணைந்து இந்த ரயில் சேவையை இயக்கிவருகின்றன. அதிகபட்சமாக கோவையைச் சேர்ந்த ‘எம் அன்ட் சி’ நிறுவனம் 12 பாரத் கௌரவ் ரயில்களை இயக்கியுள்ளது.
4. டைபாய்டு…
சால்மோனெல்லா டைபி எனப்படும் பாக்டீரியா கிருமி உடலில் பரவும்போது டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது. தரமற்ற குடிநீர், சுகாதாரமற்ற உணவுமூலம் இந்நோய் பரவுகிறது. குடல் பகுதியில் பாதிப்பை இந்த வகை பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் என்றாலும் நாளடைவில், அதன் தீவிரத்தைப் பொருத்து கல்லீரல், இரைப்பை, பித்தப்பை, சிறுநீரகம், நுரையீரலில் கடுமையான சேதத்தை அந்நோய் ஏற்படுத்தும்.
அறிகுறிகள்…
உடல் சோர்வு, கடுமையான காய்ச்சல், பசியின்மை, தலைவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம், தொண்டை வலி, உடலில் தடிப்புகள், வயிற்று உபாதைகள்.
காரணங்கள்….
சுகாதாரமற்ற உணவு, பாதுகாப்பற்ற குடிநீர், சுகாதாரமற்ற வாழ்க்கைச் சூழல், கைகளை சுத்தமாக பராமரிக்காமை பாதிக்கப்பட்டவர்களின் கழிவுகளைத்தொடுதல்.
பரிசோதனைகள்….
சால்மோனெல்லா டைபிக்கு எதிரான எதிர்ப்பாற்றல் பரிசோதனை, காய்ச்சல் பரிசோதனைகள், ரத்தம், மலம் மற்றும் சிறுநீர் மாதிரி பரிசோதனை, எலும்பு மஜ்ஜை சோதனை, ரத்தத்தில் கிருமி வளர்ச்சி பரிசோதனை, குடிநீர் தரத்தை உறுதி செய்யும் பரிசோதனை.
5. உலக தடுப்பூசி தினம்: நவம்பர்.10
தமிழ்நாட்டில் தேசிய தடுப்பூசி அட்டவணையின்கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளைவாதம், கக்குவான் இருமல், ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்புளூயன்ஸா தொற்று, நிமோனியா, வயிற்றுப்போக்கு, தட்டம்மை மற்றும் ரூபெல்லா நோய், ஜப்பானிய மூளைக்காய்ச்சல், வைட்டமின்-ஏ குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்காக தடுப்பூசிகள் வழங்கப்ப -டுகின்றன. இத்திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் 9.40 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
IMPORTANT LINKS
TNPSC Current Affairs
Tnpsc Current Affairs 2023 in Tamil & English Monthly Pdf files Download Quiz Online Test
Winmeen: Install the Winmeen App – Daily Free & Premium Tnpsc Study Materials & Online Test
https://play.google.com/store/apps/details?id=co.robin.jbzwb
Winmeen: Winmeen Tnpsc Test Series – Samacheer lesson Wise Test + Previous Year Model Test for Tnpsc Group 1,2, 4 & VAO
https://wp.me/p7JanY-ag8