Tnpsc Current Affairs in Tamil – 10th & 11th February 2024
1. ஆண்டுதோறும் உலக நீடித்த வளர்ச்சி உச்சிமாநாட்டை நடத்துகிற நிறுவனம் எது?
அ. ஆற்றல் மற்றும் வள நிறுவனம்
ஆ. உலக வங்கி
இ. சுற்றுச்சூழல் மதிப்பீட்டு நிறுவனம்
ஈ. சுற்றுச்சூழல் கல்வி மையம்
- ஆற்றல் மற்றும் வள நிறுவனம் (TERI) நடத்திய 23ஆவது உலக நீடித்தக் வளர்ச்சி உச்சிமாநாட்டை புது தில்லியில் துணைக் குடியரசுத் தலைவர் தொடக்கிவைத்தார். முதன்முறையாக கடந்த 2001இல் நடத்தப்பட்ட இந்த வருடாந்திர உச்சிமாநாடு, நீடித்த நிலையான வளர்ச்சிக்கான உலகளாவிய அர்ப்பணிப்பை வளர்ப்பதில் கவனஞ்செலுத்துகிறது. “Leadership for the Sustainable Development and Climate Justice” என்ற கருப்பொருளை மையமாகக்கொண்டு நடத்தப்பட்ட இந்த 2024ஆம் ஆண்டுக்கான மாநாடு, நீண்டகால தீர்வுகளின் தேடலில் கவனஞ்செலுத்துகிறது.
2. அண்மையில், திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்த நகரம் எது?
அ. லக்னோ
ஆ. இந்தூர்
இ. தில்லி
ஈ. ஜெய்ப்பூர்
- தில்லி அரசு திருநங்கைகளுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நடவடிக்கையானது தில்லியில் உள்ள அரசுப்பேருந்துகளில் திருநங்கைகளுக்கு கட்டணமில்லா பயணத்தை வழங்குவதை நோக்கம் எனக் கொண்டுள்ளது.
3. 2024ஆம் ஆண்டுக்கான இந்திய எரிசக்தி வாரத்தை, இந்தியப்பிரதமர், கீழ்காணும் எந்த மாநிலத்திலிருந்து தொடக்கிவைத்தார்?
அ. குஜராத்
ஆ. இராஜஸ்தான்
இ. மத்திய பிரதேசம்
ஈ. கோவா
- இந்தியப்பிரதமர் நரேந்திர மோதி, கோவாவில் 2024–இந்திய எரிசக்தி வாரத்தை தொடக்கிவைத்தார். இது எரிசக்தி துறையில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை மேற்கொள்ளும் இந்தியாவின் அர்ப்பணிப்பை சிறப்பித்துக்காட்டுகிறது. உலக ஆற்றல் முன்னணியினரிடையே உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, உலக எரிசக்தியின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியாவின் பங்கை வலியுறுத்தி, முன்னெப்போதும் இல்லாத அளவிலான முதலீட்டை இந்தியா மேற்கொண்டுள்ளதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
4. எந்த ஆற்றின் கரையில், 390 ஆண்டுகள் பழமையான தீபஸ்தம்பம் (விளக்குத்தூண்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது?
அ. கிருஷ்ணா ஆறு
ஆ. நொய்யல் ஆறு
இ. காவேரி ஆறு
ஈ. கோதாவரி ஆறு
- தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டத்தில் கிருஷ்ணா ஆற்றின் கரையில் 390 ஆண்டுகள் பழமையான தீபஸ்தம்பம் (விளக்குத்தூண்) கண்டுபிடிக்கப்பட்டது. இருபதடி உயரங்கொண்ட இந்தத்தூண், காசி விஸ்வநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டதும் 1635ஆம் ஆண்டுக்கு முற்பட்டதும் ஆகும். தக்காணப் பகுதியில் பொதுவாக இதுபோன்று காணப்படாத இது, கோவாபோன்ற மேற்குக்கடற்கரை இடங்களில் உள்ள கோவில்களில் பரவலாக காணப்படுகிறது. இது ஓர் ஆற்றங்கரை கலங்கரை விளக்கமாகவும் செயல்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
5. ஏழாவது, ‘இந்தியப் பெருங்கடல் மாநாடு’ நடைபெற்ற நாடு எது?
அ. நியூசிலாந்து
ஆ. ரஷ்யா
இ. இந்தியா
ஈ. ஆஸ்திரேலியா
- ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் நடைபெற்ற 7ஆவது இந்தியப் பெருங்கடல் மாநாடு, இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளுக்கான முக்கிய ஆலோசனை மன்றமாக செயல்படுகிறது. மத்திய வெளியுறவு அமைச்சகம் மற்றும் இந்திய அறக்கட்டளை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாட்டுக்கானக் கருப்பொருள், “Towards a Stable and Sustainable Indian Ocean” என்பதாகும். 22-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் 400 தலைவர்கள், Security and Growth for All in the Region (SAGAR) குறித்து விவாதிப்பார்கள்.
6. அண்மையில், மிகு குளிர் அணுக்களின் ஆய்வைக் கணிசமாக மேம்படுத்தும் புதிய பட-திருத்த வழிமுறையை வடிவமைத்துள்ள நிறுவனம் எது?
அ. வாழ்க்கை அறிவியல் நிறுவனம்
ஆ. இராமன் ஆராய்ச்சி நிறுவனம்
இ. உயிரி தொழில்நுட்ப நிறுவனம்
ஈ. தேசிய வைராலஜி நிறுவனம்
- பெங்களூருவில் உள்ள இராமன் ஆராய்ச்சி நிறுவனத்தின் (RRI) இந்திய அறிவியலாளர்கள், மிகு குளிர் (ultra cold) அணுக்களின் ஆய்வுகளை மேம்படுத்தும் வகையில், ஒரு புதுமையான பட-திருத்த வழிமுறையை (image-correction algorithm) உருவாக்கியுள்ளனர். 1948இல் நோபல் பரிசு பெற்ற சர் சி வி இராமன் அவர்களால் நிறுவப்பட்ட RRI என்பது அடிப்படை அறிவியலில் கவனம் செலுத்தும் ஒரு தன்னாட்சி மிகுந்த ஆராய்ச்சி நிறுவனமாகும். 1972இல் மறுசீரமைக்கப்பட்ட இது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையிடமிருந்து நிதியுதவியைப் பெறுகிறது.
7. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் அமைந்துள்ள மாநிலம் எது?
அ. மகாராஷ்டிரா
ஆ. குஜராத்
இ. ஆந்திர பிரதேசம்
ஈ. இராஜஸ்தான்
- சுற்றுலா அமைச்சகமானது சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகளை அதன் சுதேச தர்ஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் சேர்த்துள்ளது. மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த UNESCO உலக பாரம்பரிய தலத்தில் 29 அஜந்தா மற்றும் 34 எல்லோரா குகைகள் இடம்பெற்றுள்ளன. இவை பொ ஆ மு (BCE) 2ஆம் நூற்றாண்டு முதல் பொ ஆ (CE) 11ஆம் நூற்றாண்டு வரையிலான பண்டைய குகைகளைக் கொண்டுள்ளது.
8. 2024 – தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருள் என்ன?
அ. Women in Science
ஆ. Future of STI: Impact on Education Skills and Work
இ. Integrated Approach in S&T for Sustainable Future
ஈ. Indigenous Technologies for Viksit Bharat
- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துவதை வலியுறுத்தி, 2024ஆம் ஆண்டுக்கான தேசிய அறிவியல் நாளுக்கானக் கருப்பொருளை, “Indigenous Technologies for Viksit Bharat” என அறிவித்தார். ஆண்டுதோறும் பிப்ரவரி.28 அன்று கொண்டாடப்படும் தேசிய அறிவியல் நாள், சர் சி வி இராமன், 1930இல், ‘இராமன் விளைவைக்’ கண்டுபிடித்ததை நினைவுகூரும் வகையில் கடைப்பிடிக்கப்ப -டுகிறது. இந்த ஆண்டுக்கானக் கருப்பொருள், இந்தியாவின் நலவாழ்வு மற்றும் உலகளாவிய மனிதகுலத்திற்கான ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புகளை ஊக்குவிக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
9. அண்மையில் தொடங்கப்பட்ட, ‘சாரதி’ இணையதளத்துடன் தொடர்புடையது எது?
அ. பயிர்க்காப்பீடு தொடர்பான குறைகளைத் தீர்வு வழங்கும் ஹெல்ப்லைன்
ஆ. விவசாயப் பயிர்களை ஏற்றுமதி செய்யும் வசதி
இ. நிலப்பதிவு
ஈ. புதிய விவசாய தொழில்நுட்பங்கள் பற்றிய தகவல்களை விவசாயிகளுக்கு வழங்குதல்
- இந்திய விவசாயிகளுக்கு PMFBY உள்ளிட்ட பல்வேறு காப்பீட்டுத் தயாரிப்புகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட, ‘சாரதி’ இணையதளத்தை மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா வெளியிட்டார். பிரதமர் பசல் பீமா திட்டத்தில் எழும் குறைகளுக்குத் தீர்வு காண்பதற்காக கிருஷி ரக்ஷக் இணையதளம் மற்றும் இலவச தீர்வு தரும் எண் 14447 ஆகியவையும் தொடங்கப்பட்டுள்ளன.
10. கோக்போரோக் மொழியானது கீழ்க்காணும் எந்த மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மாநில மொழிகளுள் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது?
அ. மிசோரம்
ஆ. மணிப்பூர்
இ. அஸ்ஸாம்
ஈ. திரிபுரா
- திரிபுரா இடைநிலைக் கல்வி வாரியமானது திரிபுராவில் நடத்தப்படும் கோக்போரோக் தேர்வுக்கு ரோமானிய மற்றும் பெங்காலி வரிவடிவங்களை அனுமதிக்கிறது. திரிபுராவினர் உட்பட போரோக் மக்களின் தாய்மொழியான கோக்போரோக், திபெத்தோ-பர்மிய மொழியினர் மற்றும் திரிபுராவின் பெரும்பாலான பழங்குடி சமூகங்களிடையே பேசப்படும் ஒரு மொழியாகும். திரிபுரா, பிற வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் உத்தரகாண்டில் போரோக் சமூகங்கள் காணப்படுகின்றன. கோக்போரோக், திரிபுராவில் அதிகாரப்பூர்வ மாநில மொழி அந்தஸ்தைப் பெற்ற மொழியாகும்.
11. தச்சிகம் தேசிய பூங்கா அமைந்துள்ள மாநிலம் / யூனியன் பிரதேசம் எது?
அ. தமிழ்நாடு
ஆ ஜம்மு & காஷ்மீர்
இ. கேரளா
ஈ. ஆந்திர பிரதேசம்
கடுமையான பனிப்பொழிவு காரணமாக, தச்சிகம் தேசிய பூங்காவின் மறுவாழ்வு மையத்தில் உள்ள இமயமலை கருப்புக் கரடிகள் தங்களது உறக்கநிலைக்கான சிறப்பு உணவைப் பெறுகின்றன. ஜம்மு & காஷ்மீரின் ஜபர்வான் மலைகளில் அமைந்துள்ள தச்சிகம் தேசிய பூங்கா, தால் ஏரியின் நீர்ப்பிடிப்பு மண்டலத்தின் பாதியை ஆக்கிரமித்து அமைந்துள்ளது. இது காஷ்மீர் கலைமான் மற்றும் ஆசிய கருப்புக் கரடிகளைக் கொண்டுள்ளது.
12. மீயொலி வேகத்தில் செல்லும் சிர்கான் எறிகணையை ஏவிய நாடு எது?
அ. ரஷ்யா
ஆ. இஸ்ரேல்
இ. உக்ரைன்
ஈ. சீனா
- ரஷ்யப்படைகள் சமீபத்தில் 3M22 சிர்கான் எறிகணையை கிவ்வை குறிவைத்து ஏவின. 3M22 சிர்கான் என்பது ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ஸ்க்ராம்ஜெட் அடிப்படையில் இயங்கும் மீயொலி வேக எறிகணையாகும். ஒன்பது மேக் வரை வேகமும் 1000 கிமீட்டர் தூரம் வரை செல்லும் திறனும் கொண்டதும் ஆகும் இந்த எறிகணை. இதன் முதல் கட்டத்தில் திட எரிபொருளும் இரண்டாம் கட்டத்தில் ஸ்க்ராம்ஜெட் மோட்டாருங்கொண்ட 2 நிலை வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. இதுவரை 53 பாரத ரத்னா விருதாளர்கள்.
நடப்பு 2024ஆம் ஆண்டில் ஐவருக்கு ‘இந்திய மாமணி’ (பாரத இரத்னா) விருது வழங்கப்பட்டிருப்பதன்மூலம் பாரத ரத்னா விருதாளர்களின் எண்ணிக்கை 53ஆக உயர்ந்துள்ளது. பிகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், பாஜக முதுபெரும் தலைவர் L K அத்வானி, முன்னாள் பிரதமர்கள் சரண் சிங், பி வி நரசிம்ம இராவ், வேளாண் அறிவியலாளர் எம். எஸ். சுவாமிநாதன் ஆகிய 5 பேருக்கு நிகழாண்டில் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகவுயரிய விருதான பாரத ரத்னா ஓராண்டில் 5 பேருக்கு அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கடந்த 1954ஆம் ஆண்டில் இந்திய அரசால் நிறுவப்பட்ட, ‘பாரத ரத்னா’ விருது, மக்கள் மேம்பாட்டுக்காக எந்தத் துறையிலும் அளப்பரிய சேவை அல்லது திறன்மிக்க செயல்பாட்டை நல்குவோரை அங்கீகரிப்பதாகும். இதற்கான பரிந்துரைகள் பிரதமரால் குடியரசுத்தலைவருக்கு வழங்கப்படுகின்றன.
முதல் விருது: கடந்த 1954ஆம் ஆண்டில் முதன்முறையாக, ‘பாரத ரத்னா’ விருது மூதறிஞர் இராஜாஜி, சர்வபள்ளி இராதாகிருஷ்ணன், சி. வி. இராமன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.
இந்தியக்குடியரசுத்தலைவர் கையொப்பமிடப்பட்ட சான்றிதழ், பதக்கம் ஆகியவை மட்டுமே உள்ளடக்கியது, ‘பாரத ரத்னா’ விருது என்பது குறிப்பிடத்தக்கது.
2. இந்தியாவின் மொத்த வாக்காளர்கள் 96.88 கோடி பேர்.
மக்களவைத் தேர்தலில் தற்போது வரை 96.88 கோடி மக்கள் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளனர் என்று இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.