Tnpsc Current Affairs in Tamil – 10th & 11th December 2023
1. UNESCOஆல் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள, ‘கர்பா’ சார்ந்த மாநிலம் எது?
அ. குஜராத் 🗹
ஆ. ஒடிசா
இ. மேற்கு வங்காளம்
ஈ. ஆந்திர பிரதேசம்
- குஜராத் மாநிலத்தின் பாரம்பரிய நடன வடிவமான, ‘கர்பா’ UNESCOஇன் தொட்டுணர முடியா கலாச்சார பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. கடைசியாக கொல்கத்தாவின் துர்கா பூஜை இம்மதிப்புமிக்க பட்டியலில் சேர்க்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, UNESCO பட்டியலில் இடம்பிடித்த இந்தியாவின் 15ஆவது கலாச்சார சாரமாக இப் பிரபலமான நடன வடிவம் உள்ளது.
2. ஈராண்டுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ள முதல் இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு நிகழ்ச்சி நடத்தப்படும் நகரம் எது?
அ. சென்னை
ஆ. புது தில்லி 🗹
இ. மைசூரு
ஈ. வாரணாசி
- தில்லி செங்கோட்டையில் ஈராண்டுகளுக்கு ஒருமுறை நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிகழ்ச்சியான முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு-2023ஐ பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை பிரதமர் திறந்து வைத்தார். நினைவு அஞ்சல் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
3. ‘ஹரித்சாகர்’ வழிகாட்டுதல்களை வெளியிட்ட மத்திய அமைச்சகம் எது?
அ. துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் 🗹
ஆ. ஜல் சக்தி அமைச்சகம்
இ. எரிசக்தி அமைச்சகம்
ஈ. பாதுகாப்பு அமைச்சகம்
- துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் அனைத்து முக்கிய துறைமுகங்களிலும் கரிமத்தின் தீவிரத்தை குறைப்பதற்காக, ‘ஹரித்சாகர்’ என்ற பசுமை துறைமுக வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இந்த வழிகாட்டுதல்களின்கீழ், கப்பல் முதல் கரை வரைக்கும் மின்சாரம் வழங்குதல், துறைமுக உபகரணங்களின் மின்மயமாக்கல், துறைமுகப் பொருட்களில் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா / மெத்தனால் போன்ற மாற்று எரிபொருட்களின் பயன்பாடு மற்றும் பசுமை ஹைட்ரஜன் / பசுமை அம்மோனியா எரிபொருள் நிரப்புதல் போன்ற பல்வேறு பசுமைத் தலையீடுகள் மேற்கொள்ளப்படும்.
4. ‘The Global Climate 2011-2020: A Decade of Acceleration’ என்ற தலைப்பிலான ஓர் அறிக்கையை வெளியிட்ட நிறுவனம் எது?
அ. UNEP
ஆ. WMO 🗹
இ. WEF
ஈ. IMF
- 2011-2020 வரையிலான பத்தாண்டில் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளது. தீவிர வானிலை மற்றும் காலநிலை இழப்புகளால் பொருளாதார இழப்புகள் அதிகரித்து வருகின்றன. உலக வானிலை அமைப்பின் (WMO), “The Global Climate 2011-2020: A Decade of Acceleration” என்ற அறிக்கையின்படி, தீவிர நிகழ்வுகளால் குறைந்த எண்ணிக்கையிலான இறப்புகளைக் கொண்ட பத்தாண்டுகாலம் இதுவாகும்.
5. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற ஜூட் பெல்லிங்ஹாம் சார்ந்த விளையாட்டு எது?
அ. கிரிக்கெட்
ஆ. கால்பந்து 🗹
இ. டென்னிஸ்
ஈ. சதுரங்கம்
- ‘கோல்டன் பாய்’ விருதை வென்ற முதல் ரியல் மாட்ரிட் வீரர் என்ற வரலாற்றை இங்கிலாந்து அணியின் நடுகள வீரரான ஜூட் பெல்லிங்ஹாம் படைத்தார். ஜூட் பெல்லிங்ஹாம் பலோன் டி’ஓர் விருதுகளில் கோபா கோப்பையை வென்றார். ‘கோல்டன் பாய்’ விருதானது ஐரோப்பாவின் முன்னணி 5 லீக்குகளில் ஏதாவது ஒன்றில் விளையாடும் 21 வயதிற்குட்பட்ட சிறந்த வீரருக்கு வழங்கப்படுகிறது.
6. பிரிட்டிஷ் பிராட்காஸ்டிங் கார்ப்பரேஷனின் (பிபிசி) புதிய தலைவர் யார்?
அ. சமீர் ஷா 🗹
ஆ. லீனா நாயர்
இ. சாந்தனு நாராயண்
ஈ. அரவிந்த் கிருஷ்ணா
- பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டு நிறுவனத்தின் (பிபிசி) அடுத்த தலைவராக பிரிட்டிஷ்-இந்தியரான சமீர் ஷாவை ஐக்கிய இராஜ்ஜிய (UK) அரசாங்கம் தேர்ந்தெடுத்துள்ளது. இந்தியாவில் பிறந்த ஊடக நிர்வாகியான சமீர் ஷாவுக்கு தொலைக்காட்சி தயாரிப்பு மற்றும் இதழியல் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். 71 வயதான அவர், தொலைக்காட்சி மற்றும் பாரம்பரியத்திற்கான சேவைகளுக்காக 2019ஆம் ஆண்டில் இரண்டாம் எலிசபெத் மகாராணியிடம் இருந்து CBE (Commander of the Most Excellent Order of the British Empire) விருதினைப் பெற்றுள்ளார்.
7. டைம் இதழின், 2023ஆம் ஆண்டிற்கான, ‘ஆண்டின் சிறந்த தடகள வீரர்’ யார்?
அ. நீரஜ் சோப்ரா
ஆ. லியோனல் மெஸ்ஸி 🗹
இ. சிமோன் பைல்ஸ்
ஈ. டைகர்வுட்ஸ்
- டைம்ஸ் இதழின் 2023ஆம் ஆண்டிற்கான, ‘சிறந்த தடகள வீரராக’ லியோனல் மெஸ்ஸி அறிவிக்கப்பட்டுள்ளார். லியோனல் மெஸ்ஸி 2023ஆம் ஆண்டுக்கான பலோன் டி’ஓர் விருதை எட்டாவது முறையாக வென்று சாதனை படைத்தார். 2022 உலகக்கோப்பையில் அர்ஜென்டினாவின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக விளங்கியவர் லியோனல் மெஸ்ஸி. அதன் இறுதிப்போட்டியில் பிரான்ஸை தோற்கடித்து பட்டத்தை வெல்ல அவர் பெரும்பங்கு வகித்தார். அதில் அவர் போட்டியின் சிறந்த வீரராகத் தேர்வுசெய்யப்பட்டார்.
8. ரூபாய் (`) ஏற்றுமதி கடனுக்கான வட்டி சமன்படுத்தும் திட்டத்தைத் தொடங்கிய மத்திய அமைச்சகம் எது?
அ. வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் 🗹
ஆ. MSME அமைச்சகம்
இ. வெளியுறவு விவகாரங்கள் அமைச்சகம்
ஈ. எஃகு அமைச்சகம்
- பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2024 ஜூன்.30ஆம் தேதி வரை வட்டி சமன்படுத்தும் திட்டத்தைத் தொடர கூடுதலாக `2500 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது அடையாளம் காணப்பட்ட துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் மற்றும் அனைத்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்துறை உற்பத்தியாளர்கள் ஏற்றுமதிக்கு முந்தைய மற்றும் பிந்தைய ரூபாய் (`) ஏற்றுமதிக் கடனை போட்டி விகிதங்களில் பெறவுதவும்.
- இத்திட்டத்தை 30.06.2024 வரை தொடர்வதற்கான நிதி இடைவெளியைக் குறைப்பதற்காக, இத்திட்டத்தின்கீழ் தற்போதுள்ள `9538 கோடியைவிட கூடுதலாக `2500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத்திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு சுமார் `2500 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
9. கீழ்காணும் எந்த மாநிலத்தின் முதலமைச்சராக அனுமுலா ரேவந்த் பதவியேற்றார்?
அ. ஜார்கண்ட்
ஆ. குஜராத்
இ. ஒடிசா
ஈ. தெலங்கானா 🗹
- இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச்சார்ந்த அனுமுலா ரேவந்த் ரெட்டி தென்னிந்திய மாநிலமான தெலுங்கானாவின் முதலமைச்சராக பதவியேற்றார். இந்தியாவின் மிகப்பழைமையான கட்சியைச் சார்ந்த ஒருவர் இந்தியாவின் இளம் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றது இதுவே முதல்முறை. அம் மாநிலத்தின் துணை முதலமைச்சராக பாட்டி விக்ரமார்க்க மல்லு பதவியேற்றார். தெலுங்கானா மாநிலம் ஆந்திர பிரதேச மாநிலத்திலிருந்து கடந்த 2014ஆம் ஆண்டு பிரித்து புதிய மாநிலமாக உருவாக்கப்பட்டது.
10. புகழ்பெற்ற, ‘கேசவானந்த பாரதி தீர்ப்பு’ வழங்கப்பட்ட ஆண்டு எது?
அ. 1973 🗹
ஆ. 1976
இ. 1992
ஈ. 1998
- அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பு தொடர்பான, கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு தமிழ், தெலுங்கு உட்பட பத்து இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றும் வகையில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 1972இல் சட்டத் திருத்தம் செய்யப்பட்டது. இதை எதிர்த்து, கேரளாவைச் சேர்ந்த கேசவானந்த பாரதி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை, 13 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து, 7:6 என்ற விகிதத்தில், அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் இல்லை எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. கடந்த, 1973ஆம் ஆண்டு ஏப்ரல்.24ஆம் தேதி இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
11. அண்மைச் செய்திகளில் இடம்பெற்ற மெஃபெனாமிக் அமில மாத்திரை என்பது எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
அ. நுண்ணுயிர்க்கொல்லி
ஆ. வலி நிவாரணி 🗹
இ. கிருமி நாசினி
ஈ. நோயெதிர் திறனொடுக்கி
- பொதுவாக வலிநிவாரணியாக பயன்படுத்தப்படும் மெஃபெனாமிக் அமில மாத்திரைகள் குறித்த எச்சரிக்கையை இந்திய மருந்துக் குழுமம் வெளியிட்டது. முடக்கு வாதம், கீல்வாதம், சூதகவலி, லேசானது முதல் மிதமான வலி, வீக்கம், காய்ச்சல் மற்றும் பல் வலி ஆகியவற்றின் சிகிச்சையில் மெஃப்டால் என்ற மெஃபெனாமிக் அமில வலி நிவாரணி மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.
செய்தித்தாள் நடப்பு நிகழ்வுகள்
1. உலகில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப விதிகளை வகுத்தது ஐரோப்பிய ஒன்றியம்.
உலகிலேயே முதல்முறையாக AI தொழில்நுட்பத்துக்கான விரிவான விதிகளை வகுத்த முதல் கண்டம் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும். AI தொழில்நுட்பத்துக்கான விரிவான விதிகள் குறித்த முதல் வரைவை ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு கடந்த 2021இலேயே வெளியிட்டது. தற்போது ஆக்கமுறை AI தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துவரும் நிலையில் புதிதாக வகுக்கப்பட்டுள்ள விதிகள் உலகிற்கே முன்னோடியாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. குன்னூரில் முப்படையின் முன்னாள் தலைமைத்தளபதி பிபின் ராவத் நினைவுத்தூண் திறப்பு.
குன்னூர் அருகே ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படையின் முன்னாள் தலைமைத்தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி மதுலிகா ராவத் உள்ளிட்ட 14 பேரின் நினைவாக நஞ்சப்பசத்திரம் பகுதியில் நினைவுத்தூண் (ஸ்மிருத்திகா) நிறுவப்பட்டு திறந்துவைக்கப்பட்டது. இதனை ஊட்டியின் வெலிங்டனில் உள்ள மதராஸ் படைப்பிரிவு மையம் கட்டியுள்ளது.